Tuesday, October 16, 2012

சாதாரண மனிதர் – பெங்களூர் ஆட்டோகாரர் பேட்டி

மீபத்தில் பெங்களூர் சென்றபோது இந்த ஆட்டோகாரரை சந்தித்தேன்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாங்கள் போக வேண்டிய இடம் ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். கார் காரர்கள் 250 ரூபாய் சொன்னார்கள். எங்கள் நண்பர் அந்த இடத்துக்கு நூறு ரூபாய் தான் ஆகும் என்று ஏற்கனவே சொல்லி இருந்ததால் ஆட்டோக்களை கேட்டோம். ஓரிருவர் 150 ரூபாய் கேட்க, கடைசியாய் இந்த ஆட்டோ காரர் நூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு வந்தார். பெங்களூரில் ஆட்டோகாரர்கள் தமிழில் பேசுவதில் ஆச்சரியம் இல்லை. எனவே அவர் தமிழில் பேசுவதை நாங்கள் பெரிதாய் எடுத்துக்கலை. ஆனால் சிறிது நேரத்தில் அவர் தானாகவே நானும் ஒரு தமிழ் ஆள் தான் என்று கூறி விட்டு தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் நம் நிருபர் மனதும் விழித்து கொள்ள, பேட்டி துவங்கியது

என் பெயர் ராஜேந்திரன் 52 வயாசாகுது. ஒரு பெண் கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன். பையன் பைக் மெக்கானிக்கா இருக்கான். நான் தமிழன் தான். எங்க அப்பா இங்கே வந்து 70 வருஷம் ஆச்சு. நான் பொறந்ததே பெங்களூரில் தான். ஸ்கூல் வரைக்கும் தான் படிச்சேன். சின்ன சின்ன வேலை செஞ்சு பாத்துட்டு இருபது வருஷமா ஆட்டோ ஓட்டுறேன்.

படம்.. இணையத்திலிருந்து

நிறைய வேற்று மொழி சினிமா போஸ்டர்கள் இருப்பதை பார்த்து விட்டு அது பற்றி கேட்க, ” எனக்கு சினிமா பத்தி எதுவும் தெரியாதுங்க. நான் சினிமா பார்த்தே 15 வருஷம் ஆச்சு. எப்பவாது டிவி யில் வீட்டுலே பார்த்தா ரொம்ப கொஞ்சமா பார்ப்பேன். அதுக்கும் எங்கே நேரம்? வீட்டுக்கு போய் சேரவே ரொம்ப லேட் ஆகிடும். ஒரு நாளும் ரெஸ்ட் எடுப்பதில்லை. உடம்பு சரியில்லாம போனா தான் ஆட்டோ ஓடாம நிக்கும்.

பெங்களூரில் இப்போது மழை குறைந்து விட்டதா என்று கேட்டதும் , ” ஆமா, மரம் குறைஞ்சு போச்சுல்ல. அதான் மழை குறைஞ்சிடுச்சு. ஆனா மழை நீர் சேகரிப்பு இப்போ கட்டாயம் ஆக்கிட்டு வர்றாங்க. ஒரு கிரவுண்டுக்கு மேலே இருக்க தனி வீடு அப்புறம் பெரிய அபார்ட்மென்ட்டுங்க (Flats) இதுக்கெல்லாம் மழை நீர் சேகரிப்பு இருந்தா தான் அப்ரூவல் தர்றாங்க. மழை நீர் சேகரிப்பு பத்தி எல்லாம் யோசிக்க வேண்டிய தேவையே இல்லை ஒரு காலத்தில். இப்போ யோசிக்கிற மாதிரி நிலைமை வந்துடுச்சு

சென்னை போன்ற இடங்களை விட இங்கு ஆட்டோ கட்டணம் குறைவாக உள்ளது பற்றி கேட்க, ” நீங்க நூறு ரூபாய்க்கு வர முடியுமான்னு கேட்டீங்க. நான் வராட்டி இன்னொரு ஆள் அதே பணத்துக்கு வந்திடுவார். போட்டி இங்கே அதிகம். நிக்காம ஓடிகிட்டே இருப்போம், மக்களும் நிறைய ஆட்டோ யூஸ் பண்றாங்க. அதான் ஓரளவு கம்மி ரேட்டுக்கு வண்டி கிடைக்குது. இங்கேயும் அதிகம் கேட்குற ஆளும் இருக்காங்க. ஆளுக்கு தக்க மாதிரி வாங்கிடுவாங்க; இங்கே மினிமம் பார்த்தீங்கன்னா இருபது ரூபா. உங்க ஊரில் மினிமமே நாற்பது ரூபா இருக்கும்னு நினைக்கிறேன் ”

ஆட்டோக்கள் நிறத்தில் சற்று வேறுபடுவது ஏன் என கேட்டபோது , ” பச்சை மற்றும் மஞ்சள் நிறமுள்ள ஆட்டோக்கள் புதிய ஆட்டோ; கருப்பும் பச்சையும் சேர்ந்த கலரில் உள்ளது பழைய ஆட்டோ. இங்கு ஓடுவது பெரும்பாலும் கேஸ் ஆட்டோக்கள் தான். ”

ஆட்டோவில் ஆட்டோ காரரின் போட்டோ உள்ள ஐ. டி கார்ட் பிரேம் செய்து ஒட்டப்பட்டுள்ளது. அவரது பெயர், பிளட் குரூப் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இது.

டிரைவர் அடையாள அட்டை; வேறொரு ஆட்டோவில் எடுத்த படம் 

“டிரைவருக்கான லைசன்ஸ், வண்டி லைசன்ஸ் எல்லா தகவலுக்கும் சேர்த்து இந்த ஒரு ஐ. டி கார்ட்டை காட்டினால் போதும். எப்பவாவது போலிஸ் செக் பண்ணனும்னா வண்டிக்குள் இந்த கார்டை மட்டும் பாப்பாங்க; வண்டியில் வர்ற பயணிகள் யாரும் ஏதாவது தவற விட்டால் கூட, இதில் எங்களின் டீடைல்ஸ் பார்த்து வைத்திருந்தால் அதை வைத்து எங்களை ரீச் பண்ணிட முடியும்; அதுக்கு தான் இந்த ஏற்பாடு ” என்றார்.

“இங்கே இருப்போருக்கு பொதுவா கன்னடம், ஹிந்தி, தமிழ் மூணு மொழியும் தெரியும் இல்லே? ”

“ எனக்கு எத்தனை மொழி தெரியும்னு நினைக்குறீங்க? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ் – ஆறு மொழி எனக்கு தெரியும். இதில் மலையாளம், இங்கிலீஷ் இரண்டும் வண்டியில் வர்றவங்க பேசுறதை புரிஞ்சிக்கிற அளவில் ரேட்டு, இடம் இது பேசினா புரிஞ்சிக்குற அளவு மட்டும் தெரியும். மத்த நாலு மொழியும் ரொம்ப நல்லா தெரியும்; இங்கே இருக்க எல்லா ஆட்டோ காரருக்கும் நாலு மொழியாவது நல்லா தெரியும்” என்றார். (தனக்கு தெரிந்த மொழிகள் என்று சொல்லும்போது தன்னை அறியாமல் தமிழை முதலில் சொன்னதை ரசித்து வியந்து கொண்டிருந்தேன்).

பெங்களூரின் டிராபிக் பற்றி கேட்க, ” ரொம்ப நாளா இந்த ஊரில் டிரையினே கிடையாது இல்லியா? மக்கள் ரோட்டை மட்டுமே நம்பி பயணம் செஞ்சாகணும். அதனால் கார், ஆட்டோ, பைக்குன்னு ரோடில் வண்டிங்க ரொம்ப அதிகம். டிரையின் இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது. இப்போ தான் மெட்ரோ வந்திருக்கு. அதனால் கொஞ்சம் கொஞ்சமா சரியாகும்” என்றார்.

” மெட்ரோ வந்தா உங்கள் வியாபாரம் பாதிக்காதா ?”

” அதெல்லாம் பாதிக்காது சார். நமக்கு வர்ற ஆளுங்க வந்துகிட்டு தான் இருப்பாங்க” என்றார்.

பெங்களூரில் மேடும் பள்ளமும் ஆக சாலைகள் ஏறி இறங்கி இருப்பது பார்த்து ‘மழைக்காலத்தில் எப்படிதான் ஓட்டுவீர்களோ?’ என்று நான் ஆரம்பிக்க மழை பற்றியப் பேச்சு வளர்ந்தது. அப்போது ஒரு தொழில் ரகசியத்தைப் போட்டு உடைத்தார். மழை வலுக்கும் போது கார் வைத்திருப்போர் சாலையில் ஒதுங்கி நிற்க ஆட்டோக்கள் மட்டும் விரைந்து சென்றவாறே இருக்குமாம். எப்படி எனக் கேட்ட போது ” ஆட்டோ கண்ணாடியில் ஒரு பாக்கெட்(சாஷே) ஷாம்பூவைத் தேச்சுத் தடவி விட்டிருவோம். தண்ணி நிக்காம வழுக்கிட்டு ஓடிடும். கண்ணாடி தெளிவா இருக்கும்.” என்று சிரித்தார்.

” வண்டிகள் சொந்தமா வச்சிருப்பாங்களா? அல்லது ஓனர் வேற, ஓட்டுற ஆள் வேறா இருக்குமா?”

” சில பேர் சொந்த வண்டி வச்சிருப்பாங்க. ஆனா பெரும்பாலும் வண்டி ஓனர் ஒருத்தர்; ஓட்டுறது இன்னொருத்தரா தான் இருக்கும். ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வரை ஓனருக்கு வாடகை தருவார்கள். அதுக்கு மேல் இருப்பது தான் ஆட்டோ ஓட்டுறவங்களுக்கு !”

“ஆட்டோ ஒட்டுவோரில் கன்னடியர்கள் தானே அதிகம் இருப்பார்கள் தமிழராக உங்களால் எப்படி சமாளிக்க முடியுது?”

” நான் அவங்களை பாத்து பயப்பட மாட்டேன். எதுவா இருந்தாலும் இறங்கி பாத்துடுவேன். அதனால நம்ம கிட்ட வச்சிக்க மாட்டாங்க.

தமிழங்க அவங்களுக்கு ( கன்னடியர்) தேவை சார். எதுக்கு தெரியுமா? காசுக்கு தான். தமிழ் ஆளை ஆட்டோவில் ஏத்த மாட்டேன்னு சொல்லுவானா? தமிழ் ஆளுக்கு பொருள் விக்க மாட்டேன்னு சொல்லுவானா? என்னிக்கும் சொல்ல மாட்டான். ஏன்னா அவங்க தர்ற காசு வேணும். என்ன ஒண்ணு. காவிரியில் தண்ணி தரணும்னு நீங்க தமிழ் நாட்டில் கேட்டா இங்கே அவங்களுக்கு கோபம் வந்திடும். அடுத்து கம்பெனிகளில் பெரிய பெரிய பொறுப்பில் தமிழ் ஆளுங்க தான் இருக்காங்கன்னு ரொம்ப நாளா அவங்களுக்கு கோபம். சின்ன வேலை பார்க்க நாங்க. பெரிய வேலைக்கு தமிழ் ஆளா அப்படின்னு கடுப்பு இருக்கு. ”

இதற்குள் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட, இருள் விலகியும் விலகாத அந்த அதிகாலை நேரத்தில் நியாயமான ரேட்டுக்கு சவாரி வந்ததோடு, நம்மிடம் மனம் விட்டு பேசியமைக்கு அவரிடம் நன்றி சொல்லிவிட்டு விடை பெற்றோம்.

****
அதீதம் அக்டோபர் 1 , 2012  இதழில் வெளியான கட்டுரை 

33 comments:

  1. தேவையான பதிவு.

    ReplyDelete
  2. நல்ல தெளிவான சிந்தனையுடன் இருக்கார்.

    பேட்டி அருமை!

    ReplyDelete
  3. சென்னை ஆட்டோக்காரர்களை விட பெங்களூர் ஆட்டோக்காரர்கள் சிறப்பானவர்கள் என்பதை நான் அனுபவத்தில் அறிந்தேன். இவரது பேட்டி அதை உறுதி செய்கிறது.

    ReplyDelete
  4. நல்ல பதிவு மோகன், நன்றி, நானும் இங்கு ஜெட்டஹ்வில் டாக்ஸியில் போகும்போது இங்கு எழுபது சதவீதம் டாக்ஸி ஓட்டுபவர்கள் பாகிஸ்தானிகள் பத்து நிமிட ஓட்டத்தில் அவர்களின் கதைகளை சொல்லிவிடுவார்கள் , இது தினமும் கிடைக்கும் அனுபவம் , நான் என் மனைவியிடம் சொல்லி வியப்பதுண்டு அது எப்படி நம்பலை பார்த்து கரெக்டா கதை சொல்ல ஆரம்பிருகிரங்க என்று.
    பாகிஸ்தானி டிரைவர்கள் எல்லாம் பாகிஸ்தான் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் எல்லார்க்கும் கூட்டு குடும்பம் இருக்கும் இவர்களுக்கு சம்பளம் வெறும் சவுதி ரியல் எண்ணுரு மட்டும் சம்பளம் , தினமும் நூற்றி இருபது ரியல் வாடகையாக கொடுக்க வேண்டி இருக்கும் , பெட்ரோல் இவர்கள் செலவு , தினமும் பதினாறில் இருந்து பதினெட்டு மணி நேரம் உழைத்தல் மட்டும் வாடகை போக எதாவது பாக்கி கிடைக்கும் ,அதனால் இவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை விடுமுறைக்கு போவார்கள். போக்குவரத்து போலிசின் பொழுதுபோக்கு இவர்கள்தான் , இன்னும் நிறைய இருக்கிறது.

    ReplyDelete
  5. பெங்களூரில் பொது போக்குவரத்து சென்னையை விட சுமார்தான். சென்னை ஓரளவுக்கு எல்லா இடங்களுக்கும் பேருந்தில் செல்ல முடியும். நான் பார்த்தவரை பெங்களூரில் பேருந்து சேவை எல்லா இடங்களுக்கும் இருப்பது போல் தெரியவில்லை. அதனால் பொதுவாக ஆட்டோக்களையே நம்ப வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக சவாரிகள் கிடைக்கும் என்பதால் அவர்களும் சரியாக ஒத்துழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    மேலும் சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான ஆட்டோ சொந்தக்காரர்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு(!!) இருப்பதால் ஓட்டுனர்களிடம் இருந்து வாடகை பெறுவது மட்டுமே குறிக்கோளாக மாறிவிட்டதால், அவர்கள் மீது வரும் புகார்களை சரியாக விசாரிப்பதில்லை என்றுத் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. அழகான எழுத்து நடையில் அருமையாக எழுதி இருக்குறீர்கள்.

    பெங்களுரை பற்றி நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் சகோ

    ReplyDelete
  7. தமிழ்நாட்டை தவிர எங்கு போனாலும் ஆட்டோவில் போவது சீப்தான். நான் ஆட்டோகார்களை ஃப்ரெண்ட் பிடித்து விடுவேன்.எந்த ஊருக்கு போனாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரே ஆட்டோவை தான் முடிந்த அளவு கூப்பிட்டு கொள்வேன். கேரளாவில் கொச்சினில் ஒரு முறை ஒரு ஆட்டோக்காரர் அவர் வீட்டிற்கே எங்களை அழைத்து கொண்டு சென்று அவர் குடும்பத்தாருடன் அறிமுக படுத்தி வைத்தார்.

    ReplyDelete
  8. மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்...

    நன்றி...

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. தில்லியிலும் மினிமம் ரேட் 20 தான். தமிழ்நாட்டில் தான் அதிகம்....

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு மோகன். தமிழகத்தினை தவிர வேறு எல்லா இடங்களிலும் ஆட்டோக்களில் போவதில் பிரச்சனை இல்லை! அதுவும் சென்னையில் மிகவும் கஷ்டம்....

    இங்கே தில்லியில் 19 ரூபாய் மினிமம். அதற்கடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய் ஐம்பது பைசா...

    பெங்களூரிலும் ஆட்டோவில் நிறைய பயணம் செய்திருக்கிறேன். பிரச்சனை வந்ததில்லை!

    ReplyDelete
  11. என் சார்பில் ஒரு பூங்கொத்து கொடுத்திருங்க!

    ReplyDelete
  12. பேட்டி சுவாரசியமா இருந்தது.

    ReplyDelete
  13. எனது பேச்சுத்தமிழை வைத்து நான் தமிழ்நாட்டுக்காரர் இல்லைன்னு தெரிந்து கேளம்பாக்கத்தில் மூனு கிலோமீற்றருக்கு 150ரூபாய் கறந்தார் அந்த "நல்ல மனசுக்காரர்" அதன் பின்னர் தமிழ்நாட்டு நண்பனை துணைக்கு அழைத்துக்கொண்டே ஆட்டோ சவாரி செய்வேன். :-)

    நீங்கள் 7கிலோமீற்றருக்கு 100 ரூபாய் கொடுத்துள்ளது எனக்கு ஆச்சரியம்தான்..!

    ReplyDelete
  14. சுவாரஸ்யம். தொழில் ரகசியம் ஆச்சர்யம். தொழிலில் ஈடுபாட்டுடனும் நேர்மையாகவும் இருப்பவர்கள் ஜெயிப்பதில் ஆச்சர்யமில்லை என்று தோன்றியது.

    ReplyDelete
  15. மிகவும் சுவாரசியமான பேட்டி. பெங்களூர் டிராபிக்,மற்றும் மீதி விஷயங்களை பற்றி அந்த ஓட்டுநர் மிக அழகாக சொல்லி இருக்கிறார். கடைசி பத்தியில் அவர் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.

    பெங்களூரில் இரவு 9.30 லிருந்து காலை 6 மணிவரை ஆட்டோவுக்கு ஒன்றரை (1 and 1/2 charge ) சார்ஜ் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  16. நன்றி ஜோதிஜி

    ReplyDelete
  17. ஆம் டீச்சர் நன்றி

    ReplyDelete
  18. வாங்க பாலகணேஷ் ; நம்ம வெங்கட் சொல்லிருக்க மாதிரி சென்னை கார ஆட்டோ டிரைவர்கள் அளவு வேறு எந்த ஊரிலும் மோசம் இல்லை என்றே தோணுது

    ReplyDelete
  19. விரிவான பகிர்வுக்கு நன்றி அஜீம்பாஷா. உங்கள் அனுபவங்களை நிச்ச்சயம் நீங்கள் எழுதலாம்

    ReplyDelete
  20. சீனி: அருமையான பின்னூட்டம் நன்றி

    ReplyDelete
  21. அபு நிஹான்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  22. அமுதா: உங்கள் சுவாரஸ்ய அனுபவம் சொன்னதுக்கு நன்றி; கேரளாவில் எனக்கும் நல்ல ஆட்டோ நண்பர்கள் கிடைத்தனர்

    ReplyDelete
  23. ஆம் தனபாலன் நன்றி

    ReplyDelete

  24. ஆம் ரோஷினி அம்மா நன்றி

    ReplyDelete
  25. உண்மை தான் வெங்கட் நன்றி

    ReplyDelete
  26. அட வாங்க அருணா நலமா நன்றி

    ReplyDelete
  27. நன்றி முரளி சார்

    ReplyDelete
  28. காட்டான்: பெங்களூரில் இது தான் ரேட் !

    ReplyDelete
  29. ஸ்ரீராம்: சரியா சொன்னீங்க நன்றி

    ReplyDelete
  30. ராம்வி// பெங்களூரில் இரவு 9.30 லிருந்து காலை 6 மணிவரை ஆட்டோவுக்கு ஒன்றரை (1 and 1/2 charge ) சார்ஜ் கொடுக்க வேண்டும்.//

    அப்படியா? நன்றி

    ReplyDelete
  31. \\தமிழங்க அவங்களுக்கு ( கன்னடியர்) தேவை சார். எதுக்கு தெரியுமா? காசுக்கு தான். தமிழ் ஆளை ஆட்டோவில் ஏத்த மாட்டேன்னு சொல்லுவானா?\\ this is true If you have money you can achieve anything in Bangalore. Even Niththi matter also, they joined with that lady, just for money.

    \\இங்கே இருக்க எல்லா ஆட்டோ காரருக்கும் நாலு மொழியாவது நல்லா தெரியும்” என்றார்.\\ Every kid in Bangalore would know at least 4 languages, they pick this up from their neighborhood.

    ReplyDelete
  32. தமிழ் ஆட்டோகாரனுங்க வந்து இப்போ பெங்களூரையும் நாசம் பணிட்டானுங்க. முன்னவேல்லாம் மீட்டருக்கு வந்துகிட்டு இருந்தவங்க இப்போ ரெட்டு பேச ஆரம்பிச்சிட்டாங்கப்ரீ பிட் இல்லாத ரயில் நிலையங்களில் ஒருத்தனும் மீட்டர் போடுவதில்லை நியாயமான ரேட்டுக்கு வருவதும் இல்லை.

    ReplyDelete
  33. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...