Thursday, June 18, 2015

சிரபுஞ்சி... மரத்தின் வேர்களால் பாலம்.. ஒரு ட்ரெக்கிங் அனுபவம்


சிரபுஞ்சி.. இந்த பெயரை கேட்டதும் மிக அதிக மழை பெய்யும் ஊர் என்பது தான் நம் நினைவுக்கு வரும். இதே சிரபுஞ்சியில் அமைந்த உலக புகழ் பெற்ற ஒரு இடம் தான் டபிள் டெக்கர் பாலம்..



3000 படிக்கட்டுகள் முதலில் இறங்க வேண்டும்.. திரும்பும் போது ஏற வேண்டும்.. ட்ரெக்கிங் இப்படி வித்தியாச முறையில் அமைந்துள்ளது


இரவு முழுதும் மழை கொட்டி தீர்க்க (சார் சிரபுஞ்சி சார் !!),  மறு நாள் டபிள் டெக்கர் செல்வோமா என்பதே யோசனையாக இருந்தது. காலை மழை நின்று விட, ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம்... உடன் துணைக்கு ஒரு கைட்  (Guide )

குறிப்பிட்ட இடத்துக்கு சென்று நடக்க துவங்கும் முன் மீண்டும் மழை... அங்கிருந்த கடையில் பொறுமையாக காத்திருந்து மழை நின்ற பின் கிளம்பினோம்....



மழை பெய்து முடிந்தால் மிக வழுக்கும் என்பர்.. ஓரளவு உண்மை தான். ஆனால் எச்சரிக்கையாக சென்றதால் அதிக பிரச்சனை இல்லை.

நடுவில் பாதி வழியில் மீண்டும் ஒரு மழை அடிக்க, மழை கோட் அணிந்த படி நடக்க துவங்கி விட்டோம் .. காட்டை மழையில் காண்பது ஒரு பரவச அனுபவம்..அப்போது அது வேறு முகம் கொண்டிருக்கிறது

வழியில் மிக பெரும் சுமை தூக்கிய படி செல்வோரை காண முடிந்தது. ரொம்ப கஷ்டமான வேலை சாமி !!



போலவே அக்கிராமத்தில் இருந்து ஏராள குழந்தைகள் தினம் இப்படி 3000 படிகள் ஏறி, இறங்கி - பள்ளி சென்று படிக்கிறார்கள் !!

வழியில் இரு அட்டகாசமான தொங்கு பாலங்கள் உள்ளன. இவற்றில் நடப்பதே ஒரு த்ரில்லிங் அனுபவமாக இருந்தது



டபிள் டெக்கர் பாலம் செல்லும்போது பெரும்பாலும் படிகளில் இறங்குவோம்.. கடைசி சில பகுதி மட்டுமே ஏறுவோம்... எனவே அதிக சிரமம் இன்றி நடந்து முடித்தோம்..



டபிள் டெக்கர் பாலம் மரத்தின் வேர்களால் ஆனது. இரண்டு அடுக்ககளில் கீழும் மேலுமாய் இருக்கும் இதன் அமைப்பு மட்டுமல்ல, அருகில் இருக்கும் அற்புத இயற்கை நீச்சல் குளமும் அற்புதம்.... (அதிக தண்ணீர் இல்லா விடில் இங்கு குளிக்கலாம் )



இவ்விடத்தின் அருகே ஒரு வீட்டில் உணவளிக்கிறார்கள் (காசுக்கு தான் நைனா !!) - அங்கு தான் மதிய உணவை முடித்தோம்



திரும்பும் போது பாதி வழி வரை அதிக சிரமம் இல்லை; ஆனால் கடைசி பகுதியில் 2000 படிக்கட்டுகள் செங்குத்தாக ஏறவேண்டும்.. இது மிக சோதிக்கும் இடம்.. மனைவி மிக சிரமப்பட்டார். 100 படிக்கட்டுகள் மட்டுமே ஏறுவது.. பின் ஓய்வு.. கூடவே சத்தமாக மொபைலில் இளையராஜா பாடல்கள் என சிரமத்தோடே இறுதி பகுதியை முடித்தோம்...



இந்த டபிள் டெக்கர் பாலமும், ட்ரெக்கிங் பற்றியும் BBC ஒரு அரை மணி நேர ஆவன படம் வெளியிட்டுள்ளனர். அதன் பின் தான் இவ்விடம் மிக புகழ் பெற்றதாக சொல்கிறார்கள்.



வயாதானவர்கள், நடக்க முடியாத சிறு குழந்தைகள் உள்ளோர் தவிர ஏனைய மக்கள் அவசியம் இந்த மறக்க முடியாத பயணத்தை அவசியம் மேற் கொள்ளலாம் !

No comments:

Post a Comment