Thursday, December 3, 2015

வெள்ளம்: மோசமான நிலையில் சைதாப்பேட்டை, கே கே நகர், அசோக் நகர்

முகநூலில் தனபால் பத்மநாபன் என்பவர் எழுதிய தகவல் :

https://m.facebook.com/pdhanapal/posts/10153384901189958

சைதாப்பேட்டை காவேரி நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரின் குடும்பம் இரண்டு வயது குழந்தையுடன் இரண்டு மாடிகளும் மூழ்கிய ஒரு கட்டிடத்தில் உயிரைப் பணயம் வைத்து உதவிக்காக 8 மணி நேரமாக காத்திருக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரமாக போனிலும் அவர்களைக் தொடர்புகொள்ள இயலவில்லை. இன்னொரு நண்பரின் குடும்பம் அசோக் பில்லர் அருகே தரைத் தளத்தில் இருக்கிறது. பகல் 11 மணி அளவில் அவருடன் பேசினேன். இன்று மதியத்திற்குப் பிறகு அவரை எந்த முறையிலும் தொடர்புகொள்ள இயலவில்லை. அபார்ட்மெண்ட்டில் வசிப்பதால் மேல் தளம் ஏதாவது ஒன்றில் பாதுகாப்பாக இருப்பார்கள். வாட்ஸ்அப் மற்றும் சமூக வலை தளங்களில் பகிரப்படும் அனைத்து எண்களுக்கும் அழைத்து ஓய்ந்தாயிற்று. எந்த எண்களும் வேலை செய்யவில்லை. ஒரே ஒரு எண் தாம்பரத்தில் வேலை செய்தது. அவர்களும் இன்னொரு எண்ணைக் கொடுத்து ஒதுங்கிவிட்டார்கள். அந்த எண்ணும் வேலை செய்யவில்லை. தெரிந்த அதிகாரிகளிடம் நண்பர்களிடமெல்லாம் பேசிப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை.
குற்ற உணர்ச்சி மேலிட நானும் இன்னொரு நண்பரும் லக்‌ஷ்மண் ஸ்ருதி சிக்னல் வரை சென்றோம். அதுவரைதான் அனுமதி. அங்கே தடுப்புக்காவல் பணியில் இருந்தவர்களிடம் பேசி மறுபடியும் 200 மீட்டர் செல்ல முடிந்தது. அதைத் தாண்டி எங்கும் வெள்ளக்காடாக இருந்தது. அசோக் பில்லரில் ஆள் அளவிற்கு வெள்ளம் வேகமாக செல்வதால் படகு மூலமாக மீட்புப் பணிகளும் சாத்தியமில்லை என்றார்கள். மீட்பு உதவிகள் செய்யும் யாரும் அங்கு இல்லை. வெள்ள நீர் நாங்கள் நின்ற இடத்தில் ஏற ஆரம்பித்ததால் அங்கிருந்து திரும்பிவிட்டோம். லக்‌ஷ்மண் ஸ்ருதி சிக்னலில் இருந்து நான் வசிக்கும், அலுவலகம் இருக்கும் கே.கே.நகரைப் பார்த்தேன். முழுமையான வெள்ளக் காடாக காட்சி அளித்தது. நேற்றே நான் வடபழனியில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்போது கே.கே.நகரில் ஆள் அளவு தண்ணீர் இருப்பதாகத் சொன்னார்கள். சிக்னலில் நின்றிருந்த மக்கள் அச்சத்துடன் கே.கே.நகரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் வீட்டிற்குத் திரும்பிவிட்டோம். எதுவும் நடக்கவில்லை. இயலாமையும் ஆற்றாமையும் சூழ சும்மா இருப்பதைத் தவிர ஒரு வழியும் இல்லை. பதற்றத்துடனும் பயத்துடனும் போனில் பேசிக்கொண்டிருந்த நண்பரின் குரல் மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
வெளியூர் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசாங்கத்திற்கு மறுபடி மறுபடி ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வையுங்கள். யாராவது பேசும் அவசர உதவி எண் ஒன்றைத் தாருங்கள் என்று கேளுங்கள். அவர்கள் எங்களுக்கு எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்று சொல்லட்டும். தெளிவான ஒரு செய்தி எங்களுக்குத் தெரிந்தால் போதும். உதவும் எண்ணம் கொண்ட மனித நேயம் மிக்க மக்கள் எங்களைச் சுற்றி இருக்கிறார்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்குக்கும். செம்பரம்பாக்கம் ஏரியில் நீரைத் திறக்கும் முன் எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கலாம். நாங்கள் கரையோரத்தில் வசிக்கவில்லை. நேற்று கொட்டித் தீர்த்த மழையில்கூட நாங்கள் தப்பியிருந்தோம். உங்களை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் தைரியம் எங்களுக்கு இல்லை என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் திராணியற்ற முட்டாள்களாக இருந்தாலும் எங்கள் மீது எவ்வளவு அலட்சியம் கொண்டாலும் நாங்கள் பேசாமல்தான் இருக்கப்போகிறோம். இழி பிறவிகள் ஆகிப் போனதற்கு கூனிக் குறுகி நிற்கிறோம். உங்கள் தலைவரின் ஆணைப்படி எங்களைக் கொன்றுவிடுங்கள். உங்கள் மனசாட்சி ஃபார்ச்சுனர் கார்களில் கம்பீரமாகச் செல்லட்டும்.
*********
தொடர்புடைய பதிவு: 

வெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் ? 

3 comments:

  1. சென்னை மக்களின் நிலை பரிதாபத்துக்குரியது! மீண்டுவர பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  2. எங்கள் கேகே நகர் வீட்டிலும் பொருட்களைப் பிரிக்கக் கூட இல்லாமல் பிரித்த சிலவற்றையும் அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறோம் மோகன் சகோ. வெள்ளத்தில் நான் வாங்கிய புத்தகங்களும் எனது புத்தகங்களுமே அழிந்து போயிருக்குமே என்ற வருத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  3. பரிதாபகரமான நிலை...
    மீண்டு வர பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...