Sunday, March 6, 2016

கெளதம் மேனனின் ஹீரோயின்கள் ..

மிழ்த் திரை உலகம் கதா நாயகிகளை எப்படி பிரதி பலிக்கிறது?

ஹீரோவின் வீரத்தை வியந்து அவரைக் காதலிக்கிறவர். பல நேரங்களில் விஷயம் புரியாமல் உளறி கொட்டும் லைட்டான லூசு பாத்திரம்..பாடல் காட்சிகளுக்கும், அதற்கான லீட் சீன்களிலும் அவசியம் இருப்பவர்..

இது தான் வழக்கமான விஜய் - அஜீத் போன்ற மாஸ் ஹீரோ பட ஹீரோயின்களுக்கான இலக்கணம்.

ஆனால் இதை விடுத்து - கெளதம் மேனன் தனது பல படங்களிலும் ஹீரோயின்களுக்கு அற்புதமான பாத்திரங்களை தந்திருப்பார்.. அவற்றில் சில மட்டும் இங்கு..

ஜெஸ்சி (விண்ணை தாண்டி வருவாயா )

ஜெஸ்சி என்ற பெயரை எங்கே, எப்போது யார் சொன்னாலும், விண்ணை தாண்டி வருவாயா படத்து த்ரிஷா நினைவுக்கு வருவது ஒன்றே போதும் - இந்த பாத்திரம் பல வருடமாய் நம் மனதில் நிறைந்து போனதை உணர்த்த !

தன்னை விட வயது மூத்த ஜெஸ்சியை  சிம்பு காதலிக்கிறார்.. முதலில் அவரை ஒதுக்கி தள்ளும் (அல்லது அப்படி நடிக்கும்) ஜெஸ்சிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.. சர்ச்சில் பல பேர் முன்னிலையில் இத்திருமணத்தில் விருப்பம் உண்டா என்ற கேள்விக்கு " விருப்பம் இல்லை" என சொல்லி திருமணத்தை நிறுத்துகிறார்..



இதன் பின் தான் சிம்புவிடம் " ஆமாம் .. எனக்கு உன்னை பிடிச்சிருந்தது; ஆனால் இது நடக்குமான்னு பயம்; அதான் உன்னை விட்டு தள்ளியே நின்றேன்" என தன்னை வெளிபடுத்துகிறார்..

படத்தின் முடிவில் - ஜெஸ்சி வேறு யாரையோ மணக்க - சிம்புவும் ஜெஸ்ஸியும்  - சிம்பு இயக்கிய திரைப்படத்தின் ப்ரிவியூவில் சந்தித்து பேசுவதுடன் படம் நிறைகிறது..

தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயின் என்றாலே எல்லா விதத்திலும் சிறந்தவர் என காட்ட நிரம்ப போராடுகையில் - ஜெஸ்சி - சாதாரண பெண்ணிற்கு இருக்கும் தயக்கம்- குழப்பம் போன்ற நெகடிவ் உணர்வுகளை அட்டகாசமாக பதிவு செய்கிறார்..

இப்படி அழகு + குழப்பம் இரண்டும் கலந்த கலவையாய் இருந்ததால் தான் ஜெஸ்சி நமது மனதுக்கு நெருக்கமான ஒரு நிஜ பெண்ணாய் ஆகி போனார் !



குறிப்பிட பட வேண்டிய மற்றொரு விஷயம்: கெளதம் மேனனின் ரசனை: அவரது ஹீரோயின்களின் உடை மற்றும் ஹேர் ஸ்டைல் இரண்டுமே - அவ்வளவு இயல்பாகவும் ரசிக்கும் படியும் இருக்கும்; இப்படத்தில் த்ரிஷா உடை - இன்னும் மறக்க முடியாது.. காட்டன் புடவை, முக்கால் கை சுடிதார் இரண்டிலுமே மிக கண்ணியமாக தோன்றுவார் த்ரிஷா.

பச்சைக்கிளி முத்துச்சரம்

இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சரத் மனைவியாக ஆண்ட்ரியா (அவருக்கு இது அறிமுக படம்) - சரத் காதலியாக ஜோதிகா

ஆண்ட்ரியா பாத்திரத்தில் - depth & detailing அதிகம் இருக்காது. சாதாரண ஹவுஸ் வைப்; .

ஜோதிகா பாத்திரம் தான் ரியல் சர்ப்ரைஸ்... வாழ்க்கையில் நிரம்ப கஷ்டபடுபவராக; கணவரால் துன்பப் படுவதாக, உதவ செல்லும் சரத்தை மெல்லிதாய் காதலிப்பவராக காட்டி செல்வார்கள். ஆண்களுக்கு வழக்கமாய் இருக்கும் சபலத்துடன் சரத் அவரை அணுகுவார்..

ஆனால் படத்தின் இறுதியில் தான் ஜோதிகா ஒரு பணம் பறிக்கும் கும்பல் என்பதும், கணவர் அவரை கஷ்டபடுத்தியதாக காட்டியதும் பொய்; உண்மையில் அந்த இருவரும் தான் கூட்டு களவாணி என்பதும் தெரிய வரும்..

இது தெரிய வரும் காட்சியே அட்டகாசமாய் இருக்கும். இதன் பின் காட்டப்படும் ஜோதிகா பாத்திரம் - 10 நிமிடமே ஆயினும் அசத்தலாய் இருக்கும்.



படம் - வேறொரு ஆங்கில படத்தின் தழுவல் என கேள்வி..

இன்றும் ஜோதிகா பாத்திரத்தின் ஷாக் + சர்ப்ரைஸ் தான் இப்படத்தின் ஹைலைட் ஆக நினைக்கிறேன்.

நீதானே என் பொன் வசந்தம் 

ஜெஸ்ஸிக்கு இணையான அற்புத பாத்திரம் - இப்படத்தில் வரும் நித்யா .

பள்ளிப்பருவம் தொடங்கி அடுத்த 10 வருடத்தை காட்டும் கதை.. பணக்கார பெண் நித்யா - மிடில் கிளாஸ் வருணை (ஜீவா)  காதலிக்கிறார்.. கல்லூரி முடியும் தருணம் இருவருக்கும் பெரும் சண்டை ......,அப்போது பிரிந்து இறுதியில் எப்படி இணைந்தனர் என்று செல்லும் கதை..



மிகுந்த ஈகோ நிரம்பிய பாத்திரம் சமந்தாவிற்கு. வெளி மாநிலம் சென்று MBA படிக்கிறேன் எனும் ஜீவாவிடம் நானும் அங்கு வந்து படிக்கிறேன்- எனக்கு போர் அடிக்குமே என்கிறார்..

ஜீவா " என் குடும்ப நிலைமைக்கு நான் செட்டில் ஆகணும்; டைவர்ஷன் வேண்டாம் " என்பார்.. இந்த காட்சியை மொட்டை மாடியில் அட்டகாசமாக படமாக்கியிருப்பார் இயக்குனர். பக்கத்துக்கு மாடியிலிருந்து பார்க்கும் விதமாக காமிரா அலை பாயும்..



ஜீவா - படித்து முடித்து விட்டு வந்து சமந்தாவிடம் கெஞ்சும் போது கண்டு கொள்ளாத தெனாவெட்டு.. பின் ஜீவாவுக்கு கல்யாணம் என தெரிந்ததும்  - பதறுவது.. அவரிடம் சென்று பேசுவது என பெண்ணின் உணர்வுகளை இயற்கையாக தந்த விதத்தில் - இன்னொரு ஜீவனுள்ள பெண் பாத்திரம்.. கெளதம் மேனனிடமிருந்து..

சமந்தாவின் காரியரில் நிச்சயம் ஒரு மறக்க முடியாத பாத்திரம் மற்றும் நடிப்பு !

காக்க காக்க - மாயா 

ரொம்ப சின்ன பாத்திரம் தான் ஜோதிகாவிற்கு. ஆனால் இன்றைக்கும் காக்க காக்க என்ற ஆக்ஷன் படம் பற்றி நினைக்கும் போது மாயா- அன்பு செல்வன் (சூர்யா - ஜோதிகா) ரொமான்சும் நினைவிற்கு நிச்சயம் வருகிறது..



படத்தின் சில டயலாக்குகள்.....இவையே சொல்லிவிடும் அந்த பெண் பாத்திரத்தை.. ஒரு பெண்ணை சித்தரிப்பதில் கெளதம் மேனன் எப்படி என்பதை..

மாயா: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்.. இப்போ மாதிரியே எப்பவும் உங்க மேல பைத்தியமா இருக்கணும்.. இந்தக் கண்கள் என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்.. மூணு குழந்தைகள் பெத்துக்கணும்.. ஒவ்வொருத்தரும் உங்களை மாதிரியே..

அன்பு செல்வன்: ஏன்? Why me??

மாயா: It's a girl thing..!! சொன்னா உங்களுக்குப் புரியாது..
**********
மாயா: எனக்கு என்ன வயசு தெரியுமா??

அன்பு செல்வன்: 24

மாயா: ஏன் கேட்டேன்-னு கேட்க மாட்டீங்களா??

அன்பு செல்வன்: ஏன் கேட்டே??

மாயா: 24 வருஷமா இந்த முத்தத்துக்காகக் காத்திருந்தேன்.. இனிமே ஒரு second கூடக் காத்திருக்க முடியாது..!!

- இந்த இரண்டாவது டயலாக்கில் மாயா - தன் வயதை 24 என்று சொல்வதே கூட ஆச்சரியம் தான் ! ஹீரோயின்கள் பல நேரம் ரொம்ப சின்ன வயது என்பது தான் வழக்கம். 24 வயது என மெச்சூர்ட் ஹீரோயின் + அவர் காதலை காட்டுவது கெளதம் மேனன் இன்னும் பல படங்களில் செய்வார். சொல்ல போனால் இத்தகைய மெச்சூர்ட் காதலை காட்டுவது தான் அவருக்கு பிடிக்குமோ எனும் அளவுக்கு பல படங்களிலும் இருக்கும்...

காக்க காக்க படத்தில் ஜோதிகா வருவது மொத்தம் 20 நிமிடம் கூட இருக்காது. ஆனாலும் மனதில் நிற்கும் பாத்திர படைப்பு..

************
எல்லா படங்களிலும் ஹீரோயின் பாத்திரத்துக்கு கெளதம் மேனன் இவ்வளவு மெனக்கேடுவதில்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். மின்னலே ஹீரோயின் - வழக்கமான சினிமா காதலி;

வாரணம் ஆயிரம் படம் முழுக்க முழுக்க தந்தை பாத்திரத்துக்காக எழுதப்பட்ட ஒரு கதை ; இக்கதை தனது தந்தை இறந்த பின் கெளதம் எழுதினார் என்பதோடு " இதன் 70 % - எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்" என்றார்... இப்படத்தில் சமீரா ரெட்டி - வழக்கமான சினிமா காதலி; சிம்ரன் அம்மாவாக - கொஞ்சம் வித்யாசம் காட்டினாலும், திவ்யா பாத்திரம் - தான் வழக்கமான கெளதம் மேனன் டச் - சற்றேனும் கொண்டிருந்தது. காதலில் தோற்று, போதைக்கு அடிமையாகி மீளும் சூரியாவை காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் திவ்யா..

என்னை அறிந்தால் - த்ரிஷா பாத்திரம் சற்றே நன்று என்றால், அனுஷ்கா பாத்திரம் துளி கூட மனதில் நிற்காத ஒன்று.

************
இறுதியாக:

இதுவரை அவரது பெண் பாத்திரங்களில் ஜெஸ்சி மற்றும் நித்யா (நீதானே என் பொன்வசந்தம்) அருமை என்றாலும், ஒரே பாத்திரம் சொல்ல வேண்டுமெனில் - அது நித்யா தான். பாத்திரத்தில் இருந்த தெளிவு, அதை மிக அட்டகாசமாக உள்வாங்கி வெளிப்படுத்திய சமந்தா இவையே காரணம்...

ஒருவேளை கெளதம் மேனன் இந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தால் ஒரு வேண்டுகோள்.. எல்லா படங்களிலும் நல்ல பெண் பாத்திரங்களை படையுங்கள்.. பெண்களை இப்படி நிறை, குறை இரண்டும் கலந்த கலவையாய், இயல்பாய் - திரையில் படைக்கும் படைப்பாளிகள் அருகி வருகிறார்கள் !!

2 comments: