Sunday, May 1, 2016

சோக்கி தானி -சென்னையில் ராஜஸ்தான்... படங்கள் & வீடியோவுடன்

சோக்கி தானி - இந்த ஹிந்தி வார்த்தைக்கு அர்த்தம் - அழகான கிராமம்.

ஸ்ரீபெரும்புதூர் குவீன்ஸ்லேந்து அருகே அமைக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் கிராமம் தான் சோக்கி தானி. அண்மையில் இங்கு நாங்கள் சென்று வந்த போது கிடைத்த அனுபவம் இங்கு உங்களுக்காக :

நுழைவாயில் 

சோக்கி தானி துவக்கி சில வருடங்கள் ஆகிறது. அண்மையில் நல்ல பிரபலம் ஆகி வருகிறது. சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும்  சாலையில் குவீன்ஸ்லேந்து தாண்டி இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். பின் லெப்ட் எடுத்து சற்று கிராமம் போல் இருக்கும் சாலைகளில் பயணித்தால் சோக்கி தானி வந்தடையலாம்



ராஜஸ்தான் கிராமம் - அவர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் - உடைகள் - ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் இவற்றுடன் ஒரு மாலையை செலவிடுவது ... அவ்வளவு தான் விஷயம் !

நுழையும் போதே பீ பீ - டும் டும் அடித்து வரவேற்கிறார்கள். அழகிய புல்வெளி அங்குள்ள ரசிக்கத்தக்க பொம்மைகள் மனதை கவர்கின்றன. பில் போடும் இடத்தில் - ஒருவர் டிக்கெட் வாங்க மற்றவர்கள் காத்திருக்க வேண்டுமே என அந்த நேரத்தையும் இனிதாக்க - அவ்விடத்தை ராஜஸ்தான் பாத்திரங்கள் -தலைப்பாகை என அசத்தியிருக்கிறார்கள். வரும் அனைவரும் இந்த இடத்தில் அமர்ந்து படம் எடுக்காமல் செல்வதில்லை




நுழையும் இடம் துவங்கி இந்த ஹால் வரை உள்ள வீடியோ காணுங்கள்.



டிக்கெட் ஒருவருக்கு ரூ. 600. 9 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ. 400. 10 அல்லது 11 வயது குழந்தையோ என சந்தேகம் வந்தால் - குழந்தையின் வயதுக்கான சான்று கேட்கிறார்கள். இல்லையேல் முழு டிக்கெட் தான்.

இந்த 600 ரூபாய்க்கு அனைத்து விளையாட்டுகளும் இலவசம். மேலும் இரவு உணவும் இந்த விலையில் அடங்கும்,

டிக்கெட் வாங்கும்போதே நீங்கள் எந்த நேரம் சாப்பிட விரும்புகிறீர்கள் என கேட்டு நமது டிக்கெட்டில் குறித்து விடுகிறார்கள். மாலை 7.30, 8.15 ஆகிய நேரங்களில் உள்ள இரவு உணவு - முதலில் நிறைந்து விடுகிறது. சினிமா தியேட்டர் போல இரவு உணவு நேரங்களை எழதி - "Full " என்று போட்டு  வைக்கின்றனர்.6.30 முதல் சாப்பாடு துவங்கி விடுகிறது எனினும் அவ்வளவு சீக்கிரம் சாப்பிட இயலாது - மேலும் நாம் உள்ளே வந்தே கொஞ்ச நேரம் தான் ஆகியிருக்கும்

இந்த் 600 ரூபாய் தவிர நாம் செலவு சென்று செய்ய வேண்டியது - நாமாக விரும்பி செய்யும் சில விஷயங்கள் தான். உதாரணமாக கூல் ட்ரிங்க்ஸ், ஐஸ் க்ரீம் போன்றவை ....இது தவிர படகு சவாரி, ஒட்டக பயணம், மாட்டு வண்டி சவாரி அனைத்தும் இலவசமே

உள்ளே நுழைந்ததுமே கயிற்று கட்டில்  நம்மை வரவேற்கிறது; இங்கு முழுவதுமே பல இடங்களில் கயிற்று கட்டில்  உண்டு. பலரும் அதில் ரொம்ப ஹாயாக படுத்த வண்ணம் ரிலாக்ஸ் செய்வதை காண முடிந்தது



ஒரு சின்ன குடிசை போல அமைப்பு- அதில் ஒரு பழைய கார் நிறுத்தபட்டுள்ளது... வித்யாசமாக உள்ளது.

நுழைந்த உடனே படகு சவாரி - சின்ன குளம் போன்ற இடத்தில் நடக்கிறது. கொடுமை என்னவென்றால் - ஒரே ஒரு படகு மட்டுமே; அதில் 4- 5 பேர் மட்டுமே செல்ல முடியும்.



பயணம்  2-3 நிமிடம் மட்டுமே. ஒரே படகு என்பதால் ஏராளமான மக்கள் காத்திருந்து செல்கிறார்கள். குறைந்தது அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது ; சற்று தாமதாமாக சென்றால் இதனை தவிர்த்து விடுதல் நலம்.



அருகிலேயே பொய்க்கால் குதிரை டான்ஸ். யார் வேண்டுமானாலும் பொய்க்கால் குதிரை உடையுடன் டான்ஸ் ஆடலாம். நம்ம டான்ஸ் பாருங்கள்






ராஜஸ்தான் பிங்க் சிட்டி என்பதால் இங்குள்ள சுவர்கள் கூட பிங்க் நிறத்தில் உள்ளன.

அதனை தாண்டி சற்று தூரம் சென்றால் - அவர்களது பாரம்பரிய இசையை இருவர் இசைக்க - மக்கள் பொறுமையாய்  அமர்ந்து கேட்ட வண்ணம் உள்ளனர்.



இன்னும் சற்று தூரம் சென்றால் - அனைத்து விளையாட்டுகளும் நடக்கும் முக்கிய இடத்துக்கு வந்து விடுகிறோம். ஒரு பக்கம் குதிரை சவாரி- மாட்டு வண்டி சவாரி- இன்னொரு பக்கம் ஒட்டகம் மேல் அமர்ந்த படி வித்தியாச பயணம். அனைத்தும் அருகருகே நடக்கின்றன. இதில் ஒட்டக சவாரிக்கு தான் காத்திருக்கும் நேரம் சற்று அதிகம். இப்படத்தில் மக்கள் காத்திருப்பதையும், ஒட்டகம் வந்து நின்று அதன் மேல் மக்கள் ஏறுவதையும் காணுங்கள்



தவற விடக்கூடாதது ஒட்டக சவாரி. ஒட்டகம் மேல் அமர்ந்து போவது மிக வித்யாச அனுபவம் தருகிறது. யானை மேல் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறேன். ஒட்டகம் இதுவே முதல் முறை. மிக உயரத்தில் இருக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, ஒட்டகத்தின் எலும்பு நம்மை குத்துகிறது. அத்துடன் ஒட்டகம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாம் மேலும் கீழுமாய் ஏறி, ஏறி இறங்குவோம். இது தான் செம ஜாலியாய் உள்ளது . காத்திருக்கும்போது ஒட்ட்டகத்தை காண சற்று கஷ்டமாக தான் உள்ளது. 2 ஒட்டகங்கள்... இத்தனை  பேரை மாறி மாறி ஏற்றி கொண்டு விடாமல் சவாரி செல்கிறது

மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியில் ஒரே நேரத்தில் 5 பேர் ஏறலாம் என்பதால் அதிக காத்திருப்பு இல்லை.

மாஜிக் ஷோ என ஒன்று நடத்துகிறார்கள். மிக சுமார் தான்



2-3 இடங்களில் ராஜஸ்தான் இசை போல இசைத்து கொண்டு - அவர்கள் உடை அணிந்த பெண்மணிகள் நடனம் ஆடுகிறார்கள். நாமும் சென்று ஆடலாம். அனேகமாய் பெண்கள் தான் இவர்களுடன் சென்று இணைந்து ஆடுகிறார்கள்



கிளி ஜோசியம் ஒரு புறம் நடக்கிறது... ஹிந்தியில் மட்டுமே ஜோசியம் சொல்வதால் நமக்கு மாலும் நஹி ஹை.



அனைத்து விளையாட்டுகள் நடக்கும் இந்த இடத்தில் அற்புதமான ஏலக்காய் டீ இலவசமாய் தருகிறார்கள். சூப்பர் டேஸ்ட்.  நான் மட்டுமல்ல, ஹவுஸ் பாசும் - 2 முறை விரும்பி குடித்தார். சுண்டல் போன்ற ஸ்நாக்ஸ் கூட இந்த இடத்தில் இலவசமாக தொடர்ந்து தந்த வண்ணம்  உள்ளனர்.

நம்மை ரிலாக்ஸ் செய்ய ஹெட் மசாஜ் - அதுவும் இலவமாக செய்கிறார்கள்.



2 நிமிடம் போல தான் செய்கிறார் (தலையில் சிறிது கூட முடி இல்லாத இன்னொரு நபர் ஹிந்தியில் பேசியதால் பேச்சு சுவாரஸ்யத்தில் அவருக்கு 10 நிமிடத்துக்கு மேல் மகிழ்ச்சியாய் மசாஜ் செய்தார்.... )

பொம்மலாட்டம், நெருப்புடன் செய்யும்  சாகசங்கள், அந்தரத்தில் கயிற்றின் மேல் நடக்கும் சிறுவன், நமக்கு ராஜஸ்தான் உடை அணிந்து  புகைப்படம் எடுப்பது என ஏராள விஷயங்கள் உள்ளன. நேரம் தான் போத மாட்டேன் என்கிறது.



மாலை 4 மணிக்கு திறந்து இரவு 9.30 க்கு மூடுகிறார்கள். நாம் 4- 4.30 செல்வது போல் பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் அனைத்தையும் காண முடியும்.

மெகந்தி போடுகிறார்கள் .......
கயிற்றின் மேல் நடக்கும் சிறுவன் 

இறுதியாய் உணவகம். ஏற்கனவே நமக்கு சொல்லப்பட்ட உணவு நேரத்தின் போது நாம் அவ்விடத்துக்கு வரவேண்டும் (எல்லாம் பக்கம் - பக்கம் தான். ; 10- 15 நிமிடம் தாமதமாகலாம். பிரச்சனை இல்லை) நாம் புக் செய்த டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்து இங்கு காட்ட வேண்டும்.

நான்கைந்து சாப்பிடும் அறைகள்  அமைத்துள்ளனர்.அவை மட்டும் ஏ. சி போருதப்பட்டவை. அறைக்கு வெளியே காத்திருக்க மறுபடியும் கயிற்று கட்டில்கள் !

Photo


சிறுவர்கள் மற்றும் பெரியோர் சைக்கிள்கள் வாடகைக்கு கிடைக்கிறது. அரை மணி நேரம் எடுத்து கொண்டு அந்த ஏரியாவை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் ( சிறுவர்களுக்கு 20 ரூபாயும், பெரியோருக்கு 50 ரூபாயும் வாங்குகிறார்கள்.. ); போலவே சைக்கிள் ரிக்ஷாவும் ஓட்டி பார்க்கலாம்



தரையில் மெத்தை போட்டு சாப்பாடு பரிமாறுகிறார்கள். முதலில் தரும் இனிப்புகள் அருமை. பின் சப்பாத்தி பூரி போன்றவை .. அதற்கு 5-6 சைட் டிஷ்கள். ஒவ்வொன்றையும் வைக்கும் போது அதன் பெயரை சொல்லியபடியே பரிமாறினாலும் நமக்கு தான் அந்த பெயர்கள் புரிய மாட்டேன் என்கிறது

உணவில் முதலில் சொன்னபடி இனிப்பு மற்றும் பூரி போன்றவை தான் ஓகே. சாத வகைகள் ரொம்ப சுமார். அநேகமாய் 20 வகை உணவுகள் பரிமாறுகிறார்கள். நாம் கொஞ்சம் சாப்பிட்டு பார்த்து பிடித்ததை மட்டும் உண்ணலாம். மற்றதை விட்டு விடலாம்





இதே இடத்தில் சோக்கி தானியின் உரிமையாளர்களில் ஒருவரை சந்தித்து சற்று பேசிக்கொண்டிருந்தேன்.

இதே கான்செப்ட் டில்லி, மும்பை உள்ளிட்ட 15 இடங்களில் உள்ளதாம். சென்னையில் இது துவங்கி  15 மாதம் ஆகிறது என்றும் வார நாட்களில் 150- 200 பேர் வருவதாகவும் வார இறுதியில் குறைந்தது 1000 பேர் வருவதாகவும் கூறினார். இது முழுக்க முழுக்க ரிலாக்ஸ் செய்து கொள்கிற இடமென்றும்,  இங்கும் வந்து விட்டு அவசர, அவசரமாக பார்க்க கூடாது - நிதானமாய் ஒவ்வொன்றாய் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.



மக்கள் கூட்டம் 8- 8.30 க்கு மேல் வெகுவாக குறைந்து விடுகிறது. 9.30 வரை இருக்கலமேன்றாலும் 9 மணிக்கு மேல் அங்கிருப்போர் மிக குறைவே.

சென்னையில் குவீன்ஸ் லேண்ட், போன்ற பிக்னிக் ஸ்பாட்டுகளுடன் இந்த சோக்கி தானியும் புது வரவு. அவசியம் ஒரு முறை விசிட் செய்யுங்கள்.. ஒரு வித்தியாச அனுபவத்துக்காக !

9 comments:

  1. கண்டிப்பாக இந்த முறை விடுமுறையில் பார்க்கவேண்டும். அறிமுகத்திற்க்கு நன்றி!

    ReplyDelete
  2. sir i m fan of ur blog for 3years super super super...

    ReplyDelete
  3. இதன் பெயர் [ch]சௌக்கி [dh]தானி. ஜெய்ப்பூரில் இருக்கும் சௌக்கி தானி மிகவும் பிரபலம். நானும் சென்றதுண்டு. அங்கே தங்கும் வசதிகளும் உண்டு. இங்கே இருக்கிறதா....

    ReplyDelete
  4. சொக்கி தானி குறித்து அழகான படங்களுடன் இவ்வளவு விரிவான பதிவு அருமை. ஒரு முறை செல்லவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டது. ஒரு சந்தேகம். இதே போன்று தமிழ் கலாச்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு நாம் கொண்டு சென்றால் என்ன?

    வெங்கடாசலம் திருப்பூர்.

    ReplyDelete
  5. I visited Chok thani in jaipur(2006) when I was working in New Delhi. I think it looks like same methods, Architecture, entertainments and food as in jaipur.

    ReplyDelete
  6. We thought of visiting this place. But we had some reservations regarding the fun and all, but your photos displayed here really gives the immense beauty and fun. Super sir.........

    ReplyDelete
  7. புது வகையான ஒரு பிக்னிக் ஸ்பாட்! படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  8. மிக அருமையான பதிவு. பல பதிவுகளை எதிர்பார்கிறேன். மத்திய வர்க்கம் செல்லும் அருமையான வழிகாட்டி.

    ReplyDelete
  9. //ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள் போன்றவை அடுத்த பகுதியில் வெளியாகும் !//
    waiting for the post...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...