Monday, July 4, 2016

வானவில்- இறைவி- ஒரு நாள் கூத்து-படிப்பு பற்றிய நீயா நானா

பார்த்த படம்: இறைவி 

நிரம்ப தாமதமாக தான் இறைவி பார்க்க முடிந்தது;

கார்த்திக் சுப்புராஜின் முதல் 2 படங்களும் ( பிஸ்ஸா, ஜிகிர்தண்டா) எனக்கு மிக பிடித்தமானவை.

முக்கால் வாசி வரை குறிப்பிட்ட திசையில் பயணித்து - கடைசி அரை மணி நேரம் திடீர் டர்ன் அடித்து வேறு பக்கம் பாய்ந்து செல்லும் (நான் மிகவும் ரசித்த) அதே பாணியை தான் இங்கும் கடை பிடித்துள்ளார்..ஆனால் விளைவுகள் தான் வேறுபட்டு விட்டது

ஒரு குடும்ப (!!??) கதைக்கு இந்த யூ டர்ன் பாணி ஒத்து வரவில்லை; மேலும் பெண்களை போற்றுகிறோம் என சொல்லிவிட்டு - 95% ஆண்கள் பற்றியே சொல்லி, இப்படியா பட்ட மாட்டை இந்த மரத்தில் தான் கட்டுவார்கள் என்கிற கதை மாதிரி - ஆண்கள் இப்படி நடப்பது பெண்களை பாதிக்கிறது என்கிறார்.. மனதில் பதிய மறுக்கிறது..

பாடல்கள் மிகப்பெரும் இடைஞ்சல்; நடிப்பை பொறுத்த வரை எஸ். ஜே. சூர்யா எப்போதும் குடிப்பது எரிச்சலை உண்டாக்கினாலும் மனுஷன் சில காட்சிகளில் அசத்துகிறார். அந்த தயாரிப்பாளர்- இயக்குனர் கிளைக்கதை மனதை தைக்கிறது (தயாரிப்பாளர் பாத்திரத்தில் போகப்போக கொஞ்சமே கொஞ்சம் சினிமாட்டிக் விஷயம் கலந்து விட்டார்)

பாபி சிம்மா -பாத்திரம் மிக வித்யாசமான ஒன்று. அஞ்சலி பாத்திரமும், நடிப்பும் குட்.

பல விஷயங்களில் செயற்கைத் தனம் படம் முழுதும் தெரிகிறது.. மக்கள் முட்டாள்கள் இல்லை; கார்த்திக்கின் சரியான 2 படத்தை கொண்டாடினர். இப்படத்தை புறம் தள்ளி விட்டனர்.. வித்தியாசமாய் முயல நினைத்ததில் தவறில்லை; ஆனால் திரைக்கதை மற்றும் Execution சொதப்பி விட்டது

இவ்வளவு சொன்னாலும் இறைவி அது தரும் சில சர்ப்ரைஸ்-களுக்காக டிவி யிலேனும் ஒரு முறை பார்க்க தகுந்ததே !

QUOTE CORNER 

The true measure of a man is how treats someone who can do him absolutely no good.

வாசித்த புத்தகம் : நில்லுங்கள் ராஜாவே 

சுஜாதாவின் வித்யாசமான நாவல் " நில்லுங்கள் ராஜாவே"; ஈர்க்கும் இந்த தலைப்பு கதையின் ஒரு மிக முக்கிய அங்கம்.

ஒரு சாதாரண மனிதனை ஹிப்னாடிஸ் செய்து இந்தியா வரும் - ஒரு வெளிநாட்டு  அதிபரை கொல்ல திட்டமிடுகிறார்கள். அதற்கு முன் இவர் இந்த வேலைக்கு சரிப்படுவாரா என அறிய - ஒரு சின்ன வேலை தருகிறார்கள். அது ஒரு போலீஸ் கேஸ் ஆகிவிட, கணேஷ்- வசந்த் வசம் வழக்கு செல்கிறது; அவர்கள் துப்பறிவதில் தான் - வெளிநாட்டு அதிபரை கொல்ல நடக்கும் சதி முறியடிக்கப்படுகிறது

கதையின் முடிவில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் (டாக்டர்கள் !!) வெளிநாடு தப்பி விட, யாரையும் கைது செய்யாமலே கதை முடிகிறது

எடுத்தால் இறுதி வரை ஒரே மூச்சில் முடிக்காமல் வைக்க முடியாமல் பர பரவென செல்லும் இந்த நாவல் தொடர் கதையாய் வந்த போது மக்கள் மிக ஆர்வமாய் வாசித்திருப்பர்.

தல-யின் அட்டகாசமான இந்த நாவலை வாய்ப்பிருந்தால் வாசியுங்கள் !

அழகு கார்னர் 



தத்துவம்

வீட்டில் சமீபத்தில் கார் பார்க்கிங் ஏரியா உயர்த்தப்பட்டது; அப்போது தரை தளம் போடும்போது பேவர் பிளாக் என்கிற வகை கற்கள் பாதிக்கப்பட்டது. முதன் முறை அப்போது தான் பேவர் பிளாக் பற்றி ஓரளவு அறிந்து கொன்டேன். விஷயம் அதை பற்றியல்ல.

பின் பல ஹோட்டல்கள், பிளாட்பாரங்கள் செல்லும்போதெல்லாம் எங்கு பேவர் பிளாக் போட்டிருந்தாலும் அது தவறாமல் கண்ணில் பட்டது; பேவர் பிளாக்கில் எத்தனை வகை உள்ளது; நம் வீட்டில் போட்டது என்ன வகை; இது என்ன விதமானது என கவனிக்கவும், யோசிக்கவும் செய்தது மனது...

இத்தனைக்கும் அவை அத்தனையும் புது இடங்கள் அல்ல, அலுவலகம் மற்றும் நான் சாதாரணமாக சென்று வரும் இடங்கள் தான்.

இது எனக்கு உணர்த்திய செய்தி இது தான்:

நமது சுற்றத்தில் நாம் கவனிப்பது மிக சிறிய பகுதியை மட்டுமே ..  ! நமக்கு தெரியாமலும், நாம் கவனிக்கமாலும் எத்தனையோ விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது; ஆர்வம் வரும்போது மட்டுமே அதை தெரிந்து கொள்ள முற்படுகிறோம்..

பல விஷயங்களில் ஆர்வம் கொண்ட சிலரோ (உதாரணம்: எழுத்தாளர்கள் ) நிறைய விஷயங்களை கவனிக்கிறார்கள்; தெரிந்து கொள்கிறார்கள்..

Interest makes the difference !!

நீயா நானா - படிப்பும், பயணமும் 

நீயா நானாவில் பல டிகிரி வாங்கிய நபர்கள் ஒரு புறமும், பயணம் மூலம் கற்போர் மறுபுறமும் இருந்து பேசிய நீயா நானா ரொம்ப நாளுக்கு பின்  முழுதும் காண முடிந்த நிகழ்ச்சியாய் இருந்தது.

ஏராள டிகிரி வாங்கியோர் அதற்கு சரியான காரணம் எதுவும் சொல்லவே இல்லை; மேலும் இதனால் என்ன பலன் அடைந்தார்கள் என்ற கேள்விக்கும் எந்த விடையும் இல்லை. உண்மையில் அவர்களை செம காய்ச்சு காய்ச்சி விட்டனர் என்று தான் சொல்லவேண்டும்..

நிகழ்ச்சியில் பேசிய - 140 டிகிரி படித்த பார்த்திபன் அவர்கள் எனது நண்பர். அவர் ஒரு கம்பெனி செகரட்டரியும் கூட !

இந்நிகழ்ச்சியை முடிந்தால் இணையத்தில் காணுங்கள் !

பார்த்த படம்-2: ஒரு நாள் கூத்து 

இதுவும் ஒரு பெண்ணிய படம் தான் ! திருமணத்துக்கு நம் சமூகம் தரும் முக்கியத்துவம்;  திருமணமாகாமல் தாமதம் ஆகும் பெண்ணின் வலி போன்ற விஷயங்களை தொட்டு செல்கிறது

இயக்குனர் திறமை வாய்ந்தவர் என்பது தெளிவாக தெரிகிறது; வெவ்வேறு ஜோடிகள்.. ஒவ்வொருவருக்கும் சிற்சில பிரச்சனைகள் .. எல்லாம் சரியாகி ஒரு மகிழ்வான முடிவு வருகிற மாதிரி போக்கு காட்டி விட்டு அனைத்தையும் கிளை மாக்சில் நாசம் செய்கிறார். சில இயக்குனர்களுக்கு சோகமான முடிவு இருந்தால் தான் படம் மக்கள் மனதில் தங்கும் என ஒரு பொய்யான உணர்வு..

நடிப்பில் ரேடியோ ஜாக்கியாக வரும் ரித்விகா மட்டுமே கவர்கிறார். காமெடி மற்றும் ஹீரோக்கள் உள்ளிட்ட பிறர் நடிப்பு ஆவரேஜ் தான்

ஒரு நாள் கூத்து.. Skip it !

1 comment:

  1. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete