Monday, June 29, 2015

வானவில்..மாஸ்.. ஒரு விபத்து.. சூப்பர் சிங்கர்

ஒரு விபத்து.. சில எண்ணங்கள் 

மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த சம்பவம் இது

நிறைய வீடுகள் உள்ள இடம்.... ஒரு வயதானவர் மாலை நான்கு மணி அளவில் டூ வீலர் ஓட்டி வந்திருக்கிறார். எதிரே மிக அதிக வெயிட் ஏற்றி வந்த இன்னொரு டூ வீலருடன் இவர் வண்டி மோத கீழே விழுந்து விட்டார். இன்னொரு வண்டியில் வந்தவர்  கீழே விழுந்த தனது மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்று விட, வயதானவர் - ஒரு பக்க காது அடிபட்டு நிறைய ரத்தம் வெளியேறி தரையில் சாய்ந்துள்ளார். வண்டிகள் எதுவும் நிற்காமலே சென்று கொண்டிருந்திருக்கின்றன. காமாட்சி மருத்துவமனை ஆம்புலன்சுக்கு போன் செய்ய, அவர்கள் அரை மணி நேரம் ஆகியும் வர வில்லை.

மடிப்பாக்கம் போலிஸ் ஒரு வழியாக வந்து சேர்ந்து அவரது உறவினர் வரும் வரை அங்கிருந்து நகர்த்த முடியாது என்று கூறி விட்டனர். அரை மணியாக ஏராள ரத்தம் இழப்பு. ..அங்குள்ள வீட்டார் அரை மணி நேரம் கழித்து ஒரு வழியாக உதவ முன் வர, அப்போதும், அவரது உறவினர் வராமல் ஏதும் செய்ய கூடாது என்று கூறி விட்டனர்.

அடிபட்டவர் அப்படியும் இப்படியும் மெதுவாக அசைந்த வண்ணம் அரை மயக்கத்தில் இருக்க, அவரது உறவினர் ஒருவர் வந்து அழைத்து போகும் வரை போலிஸ் அந்த இடத்திலேயே இருந்திருக்கிறது.

தலையில் அடிபட்ட ஒருவரை எவ்வளவு விரைவாக மருத்துவ மனையில் சேர்க்க வேண்டுமோ, அந்த அளவு அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் போலிஸ் அங்கு வந்தும் அரை மணியாக அவரை மருத்துவ மனையில் சேர்க்க முயலாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு !! இன்னொரு புறம் மிக அதிக அளவு மூட்டைகள் ஏற்றி வந்தவர் - அவரை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு சென்றதும், அதை கண்டும், அவரை தடுக்காமல் இருந்த மக்களும் !!

இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும் என நினைக்கிறேன்.. ஹூம் !

பார்த்த படம் - 36 வயதினிலே 

மலையாளத்தில் இதன்  ஒரிஜினல் படமான - How old are you பார்த்திருந்த போதும் - 36 வயதினிலே மிக கவர்ந்தது...

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அவசியம் காண வேண்டிய படம்..

ஜோதிகா நடிப்பு மிக இயல்பு..

பெண்களின் வலியை, இழப்பை மிக சரியான முறையில் மென்மையாக சொல்கிறது படம்..

இறுதியாக - இலக்கை எட்ட வயதோ, ஆண் - பெண் பேதமோ தடை இல்லை  என்கிற நல்ல கருத்துடன் முடிகிறது..

நிச்சயம் இவ்வருடம் வந்த படங்களில் ஒரு நல்ல படம். ..

அவசியம் காண பரிந்துரைப்பேன் !!

பார்த்த படம் 2- மாஸ்

பேய் படம் என்று பில்ட் அப் தந்தாலும் - நிஜத்தில் தந்தையை கொன்றவனை - மகன் பழி வாங்கும் அரத பழசான கதை... இதில் பேய்கள் எல்லாம் சூரியா கண்ணுக்கு மட்டும் தெரியும் என்கிற கான்செப்ட் மட்டுமே புதிது.



பாடல்கள் அனைத்தும் மரண கொடுமை ! பிரேம்ஜியை வைத்து கொண்டு காமெடி என்ற பேரில் இன்னும் எத்தனை படத்தில் தான் வெங்கட் பிரபு மொக்கை போடுவாரோ ??

படம் என்னை சிறிதும் கவர வில்லை.. ஆனால் பெண்ணோ, பரவாயில்லை.. ஒருதடவை பார்க்கிற மாதிரி தானே இருக்கு என்றாள் !!!

போஸ்ட்டர் கார்னர் 

கிரிக்கெட் கார்னர் - இந்தியாவா இது !!

உலக கோப்பையில் நன்கு ஆடிய இந்தியா - அதற்கடுத்து நடந்த பங்களா தேஷ் சீரிஸில் இவ்வளவு மோசமாய் ஆடியது பெரும் அதிர்ச்சி தான்... வழக்கமாய் பங்களா தேஷ் போன்ற நாடுகளுக்கு செல்லாமல் சீனியர் வீரர்களில் சிலர் ஓய்வெடுப்பர் .. இம்முறை முழு ஸ்க்வாட் சென்றும் இப்படி 2-1 என தோற்றுள்ளனர்... பங்களா தேஷ் கொஞ்ச நாளாகவே நன்கு ஆடி வருவது உண்மை தான் எனினும், இந்திய அணியில் இருக்கும் கோஷ்டி பூசலும், ஒற்றுமையின்மையும் மிக முக்கிய காரணம் என தோன்றுகிறது... 

காப்டனாக தோனி  நீண்ட நாள் நீடிக்க முடியாது என்றே தோன்றுகிறது... !!

என்னா பாட்டுடே .. விண்மீன் விதையில் 

தெகிடி.. சென்ற ஆண்டு வந்தவற்றில் என்னை கவர்ந்த ஒரு படம். அதிலும் இந்த பாடல் கியூட். 

ரசிக்க வைக்கும் மெலடி, இனிமையான படமாக்கம் என டிவியில்  எப்போது போட்டாலும் சானல் மாற்றாமல் ரசிக்கும் பாட்டு இது.. 


Saturday, June 27, 2015

மேகாலயா பயணம் - ஒரு FAQ

மேகாலயாவை தேர்ந்தெடுத்தது எப்படி ?

நண்பர்கள் அச்சுதன் - இந்திராணி சில மாதங்கள் முன் மேகாலயா சென்று வந்தனர். அவர்கள் இவ்விடம் பற்றி மிக நன்றாக சொன்னது தான் துவக்கம். அவர்கள் தந்த மாதிரி திட்டம் - இந்தியாமைக் எனும் பயண வெப் சைட்டில் பகிர - அங்கு கரிக்கோர் என்ற மேகாலயாவை சேர்ந்த நண்பர் அதனை சற்று மாற்றி அமைத்து தந்தார். குறிப்பாக அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்தில் தங்க சொல்ல, முதலில் மிக தயக்கமாய் இருந்தாலும் பின்னர் சற்று ரிசர்ச் செய்ததும் அது தான் நல்லது என்பது புரிந்தது. காரணம் ஒவ்வொரு இடத்திற்கும் காலை 2 மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டும். பின் மாலையும் அப்படி பயணம் செய்வது அவ்வளவு உகப்பானது இல்லை என்பதால் - வெவ்வேறு இடத்தில் தங்குவது நல்லது.



எந்தெந்த இடங்களில் தங்கினீர்கள்?

முதலில் Mawphalang என்கிற இடத்தில் உள்ள  Maple pine Farm house என்கிற இடத்தில் இரு நாள் தங்கினோம்.



பின் Mawphanlur ; அதன் பின் Mawlynnong .. இரு இடங்களிலும் கெஸ்ட் ஹவுஸ்கள் - பின் சிரபுஞ்சியில் சாய் மிக்கா ரிசார்ட் - இங்கு இரு நாள்; இறுதியாக ஷில்லாங்.. இங்கு Orchid Lake resort என்ற இடத்தில் தங்கினோம்.

நாங்கள் சுற்றி பார்த்த இடங்கள் தந்த மகிழ்ச்சி தவிர - வெவ்வேறு  இடங்கள் ஒவ்வொன்றும் அற்புத அனுபவத்தை தந்தது. சில இடங்கள் சுற்றி பார்த்த போது ஏமாற்றம் தந்த போதும் அதனை சரி செய்யும் விதத்தில் ஒவ்வொரு இடமும் இதமாக இருந்தது... மிக மிக ரசிக்கும் விதத்திலும்....



உணவு??

வெஜ் மற்றும் நான் வெஜ் இரண்டு வகை உணவுகளும் கிடைக்கின்றன. சாதம் .. சென்னை அரிசிக்கு கிட்ட தட்ட மேட்ச் செய்யும் விதத்தில் உள்ளது. 2 அல்லது 3 வகை காய்கள் (உருளை  கிழங்கு  நிச்சயம் உண்டு.. அங்கு விளைகிறதே !!) - சிக்கன் போன்றவை வழக்கமாய் கிடைக்கும் உணவுகள்...

சிரபுஞ்சியில் ஆரஞ்ச் ரூட் என்கிற ஹோட்டல் உள்ளது. இங்கு இட்லி, தோசை போன்றவை கிடைக்கின்றன.



இதனை நடத்தும் உரிமையாளர் தமிழர். வங்கியில் VRS வாங்கி விட்டு - பின் இங்கு வந்து சேரா ஹொலிடே ரிசார்ட் எனும் தங்குமிடம் துவங்கினார்.  இது சிரபுஞ்சியின் முதல் ஹோட்டல் !! இன்றும் மிக சிறப்பான நம்பர் ஒன் ஹோட்டலாக இது திகழ்கிறது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த ஹோட்டலும் மிக நன்று. இங்கு செல்லும் போது டிபன் வகைகள் மட்டும் சுவையுங்கள். அரிசி உணவு விலை அதிகம். அந்த அளவு நன்றாக இல்லை.

%%%%%%%%%%%%%%%



அங்கு வேற்று மொழி சமாளிப்பது எப்படி ?

ஆங்கிலம் டிரைவர்கள் பெரும்பாலும் பேசுகிறார்கள். ஹிந்தி பலருக்கும் தெரிவதில்லை !!



ஆங்கிலம் நன்கு தெரிந்த டிரைவர் வைத்து கொள்வது மிக முக்கியம். மேலும் சில இடங்களில் Guide அவசியம் வைத்திருக்க வேண்டும்.


கைட் உதவி தினம் தேவையா ?

தினம் தேவை இல்லை. மவுலான்க்ப்னா போன்ற ஓரிரு இடங்கள் மற்றும் டபிள் டெக்கர் பாலம் செல்லும் போது கைட் உதவி தேவைப்படும். மற்ற நேரம் டிரைவர்கள் உதவியில் சமாளிக்கலாம்

வட கிழக்கு மாநிலங்கள் பாதுகாப்பானவையா?

இந்த கேள்வி பல நண்பர்கள் கேட்டனர். மற்ற மாநிலங்கள் பற்றி தெரியாது. ஆனால் மேகலாயா மிக பாது காப்பாகவே இருந்தது. எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் சென்று வந்த நண்பர்கள் சொன்னதும் அதுவே.

மேகாலயாவில் உள்ளூர் பயணம் எப்படி ?

பஸ் போன்றவை அதிகம் இல்லை. கார் எடுத்து கொள்வதே நலம்,. 1700 முதல் 3000 வரை காரின் தன்மை மற்றும் தூரம் பொறுத்து ஒரு நாளைக்கான கார் செலவு இருக்கும்

மொத்த செலவு ?

ஒரு நபருக்கு - ஒரு வாரத்திற்கு 20,000 முதல் 30,000 வரை செலவாகும் (பயணம், தங்கும் இடம் அனைத்தும் சேர்த்து)

எந்த நேரத்தில் பயணிப்பது சிறந்தது ?

ஏப்ரல், மே மிக நன்று. ஜூன், ஜூலை கூட அருவிகளில் நிறைய தண்ணீர் வரும் என்பதால் நன்றாக இருக்கும் என்றனர். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் - மழை அதிகம் என்பதால் தவிர்க்கலாம். டிசம்பர், ஜனவரி குளிர் அதிகம்.. 5 டிகிரி போல் இருக்கும்... அதனை என்ஜாய் செய்ய நினைப்போர் அப்போது பயணிக்கலாம்.

மேகாலயாவில் அவசியம் காண வேண்டியவை ?

அதிக கூட்டம் இன்றி ஒரு குளிர் பிரதேசம் என்பதே மிக பெரிய சந்தோஷமான விஷயம். மேலும் குகைகள், அருவிகள், ரூட் பிரிட்ஜ்கள் என ரசிக்க ஏராள விஷயங்கள் உண்டு. !!













Thursday, June 25, 2015

பொன்னியின் செல்வன்... நாடக வடிவில்

ல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக எடுக்க ரஜினி துவங்கி மணிரத்னம் வரை எத்தனையோ பேர் ஆசைப்பட - நாடகமாக பார்க்கும் வாய்ப்பு சென்னை வாசிகளுக்கு கிடைக்க பெற்றுள்ளது



SS இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் மேஜிக் லாண்டன் இணைந்து சென்ற வருடம் 10 க்கும் மேற்பட்ட முறை நாடகத்தை அரங்கேற்ற - மிகபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மீண்டும் இவ்வருடம் அதே குழு கலக்க உள்ளது.  இது குறித்து சில உபரி தகவல்கள்...

*  ஜூலை 3 முதல் 15 வரை மியூசிக் ஆகாடமி அரங்கில் மாலை ஆறு மணிக்கு அரேங்கேற்றுகிறார்கள் இந்நாடகத்தை !

* .மேஜிக் லாண்டன் நிறுவனம் அறிமுகம் செய்த பின் - மீண்டும் பல நிறுவனங்கள் இதே நாடகத்தை அரேங்கேற்றுகிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் நாடகம் - மேஜிக் லாண்டன் நிறுவனம் நடத்துவது தான் நன்றாக உள்ளதாக சொல்கிறார்கள்

* ஜூலையில் தான் நாடகம் எனினும் - புக்கிங் இப்போதே துவங்கி மிக வேகமாக நடந்து வருகிறது...நாடகம் நடக்கும் ஜூலை முதல் மற்றும் இரண்டாம் வாரம் டிக்கெட் கிடைப்பது  கடினம் என்கிறார் சென்ற வருடம் பார்த்த நண்பர் ஒருவர்..



* முதல் வரிசை 3000 ரூபாய், அதன் பின் 2000, 1000, 500.

மாடி- பால்கனியில் ரூ. 300 மற்றும் 200. பால்கனி - ரூ 300 டிக்கெட் முதல் ஓரிரு வரிசையில் டிக்கெட் வாங்குவது நல்லது- இதுவும் சென்ற வருடம் பார்த்த நண்பர் சொன்னதே ( பணம் பிரச்சனை இல்லை எனில் 3000 டிக்கெட் கூட புக் செய்து முதல் ஓரிரு வரிசையில் அமரலாம் !!)

* 300 ரூபாய் டிக்கெட் - நான்கு வாங்கினால் பொன்னியின் செல்வன் புத்தகம் இலவசமாக தருகிறார்கள்... இதில் சென்ற வருடம் இந்நாடகம் பார்த்த பல பிரபலங்கள் (ரஜினி, மணி ரத்னம் உட்பட பலர்   ) நாடகம் பற்றி மிக பாராட்டி பேசியுள்ளது பின் இணைப்பாக உள்ளது

* நாடகம் குறித்து ஆனந்த விகடன் கூட சென்ற இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விஜய் டிவி இதே குழு பற்றி செய்த ஒரு நிகழ்ச்சியும் காண முடிந்தது

இந்நாடகம் குறித்து ஹிந்து பத்திரிக்கையின் விமர்சனம் இங்கு வாசிக்கலாம் :

http://www.thehindu.com/features/friday-review/theatre/team-work-at-its-best/article6107362.ece

* இணையத்தில் டிக்கெட்கள் கிடைக்கும் என்றாலும், மிக குறைந்த அளவே இணைய டிக்கெட்டுக்கு ஒதுக்கி உள்ளனர்.  SS இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தினமும் டிக்கெட் கிடைக்கிறது

முகவரி :

73, 5th Street, Luz Avenue
Mylapore Chennai.

http://www.ssinternationallive.com/

மேலும் நாடகம் நடக்கும் மியூசிக் ஆகாடமி அரங்கில் வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்கிறது.

ஜூலை முதல் வாரத்தில் குடும்பத்தொடு பார்க்க டிக்கெட் புக் செய்தாகி விட்டது. நாடகம் பார்த்த பின் நிச்சயம் அது எப்படி இருந்தது என்றும்  பகிர்வேன் !

Thursday, June 18, 2015

சிரபுஞ்சி... மரத்தின் வேர்களால் பாலம்.. ஒரு ட்ரெக்கிங் அனுபவம்


சிரபுஞ்சி.. இந்த பெயரை கேட்டதும் மிக அதிக மழை பெய்யும் ஊர் என்பது தான் நம் நினைவுக்கு வரும். இதே சிரபுஞ்சியில் அமைந்த உலக புகழ் பெற்ற ஒரு இடம் தான் டபிள் டெக்கர் பாலம்..



3000 படிக்கட்டுகள் முதலில் இறங்க வேண்டும்.. திரும்பும் போது ஏற வேண்டும்.. ட்ரெக்கிங் இப்படி வித்தியாச முறையில் அமைந்துள்ளது


இரவு முழுதும் மழை கொட்டி தீர்க்க (சார் சிரபுஞ்சி சார் !!),  மறு நாள் டபிள் டெக்கர் செல்வோமா என்பதே யோசனையாக இருந்தது. காலை மழை நின்று விட, ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம்... உடன் துணைக்கு ஒரு கைட்  (Guide )

குறிப்பிட்ட இடத்துக்கு சென்று நடக்க துவங்கும் முன் மீண்டும் மழை... அங்கிருந்த கடையில் பொறுமையாக காத்திருந்து மழை நின்ற பின் கிளம்பினோம்....



மழை பெய்து முடிந்தால் மிக வழுக்கும் என்பர்.. ஓரளவு உண்மை தான். ஆனால் எச்சரிக்கையாக சென்றதால் அதிக பிரச்சனை இல்லை.

நடுவில் பாதி வழியில் மீண்டும் ஒரு மழை அடிக்க, மழை கோட் அணிந்த படி நடக்க துவங்கி விட்டோம் .. காட்டை மழையில் காண்பது ஒரு பரவச அனுபவம்..அப்போது அது வேறு முகம் கொண்டிருக்கிறது

வழியில் மிக பெரும் சுமை தூக்கிய படி செல்வோரை காண முடிந்தது. ரொம்ப கஷ்டமான வேலை சாமி !!



போலவே அக்கிராமத்தில் இருந்து ஏராள குழந்தைகள் தினம் இப்படி 3000 படிகள் ஏறி, இறங்கி - பள்ளி சென்று படிக்கிறார்கள் !!

வழியில் இரு அட்டகாசமான தொங்கு பாலங்கள் உள்ளன. இவற்றில் நடப்பதே ஒரு த்ரில்லிங் அனுபவமாக இருந்தது



டபிள் டெக்கர் பாலம் செல்லும்போது பெரும்பாலும் படிகளில் இறங்குவோம்.. கடைசி சில பகுதி மட்டுமே ஏறுவோம்... எனவே அதிக சிரமம் இன்றி நடந்து முடித்தோம்..



டபிள் டெக்கர் பாலம் மரத்தின் வேர்களால் ஆனது. இரண்டு அடுக்ககளில் கீழும் மேலுமாய் இருக்கும் இதன் அமைப்பு மட்டுமல்ல, அருகில் இருக்கும் அற்புத இயற்கை நீச்சல் குளமும் அற்புதம்.... (அதிக தண்ணீர் இல்லா விடில் இங்கு குளிக்கலாம் )



இவ்விடத்தின் அருகே ஒரு வீட்டில் உணவளிக்கிறார்கள் (காசுக்கு தான் நைனா !!) - அங்கு தான் மதிய உணவை முடித்தோம்



திரும்பும் போது பாதி வழி வரை அதிக சிரமம் இல்லை; ஆனால் கடைசி பகுதியில் 2000 படிக்கட்டுகள் செங்குத்தாக ஏறவேண்டும்.. இது மிக சோதிக்கும் இடம்.. மனைவி மிக சிரமப்பட்டார். 100 படிக்கட்டுகள் மட்டுமே ஏறுவது.. பின் ஓய்வு.. கூடவே சத்தமாக மொபைலில் இளையராஜா பாடல்கள் என சிரமத்தோடே இறுதி பகுதியை முடித்தோம்...



இந்த டபிள் டெக்கர் பாலமும், ட்ரெக்கிங் பற்றியும் BBC ஒரு அரை மணி நேர ஆவன படம் வெளியிட்டுள்ளனர். அதன் பின் தான் இவ்விடம் மிக புகழ் பெற்றதாக சொல்கிறார்கள்.



வயாதானவர்கள், நடக்க முடியாத சிறு குழந்தைகள் உள்ளோர் தவிர ஏனைய மக்கள் அவசியம் இந்த மறக்க முடியாத பயணத்தை அவசியம் மேற் கொள்ளலாம் !

Wednesday, June 10, 2015

மவுளினாங் - ஆசியாவின் தூய்மையான கிராமம் : ஒரு அனுபவம்

ஒரு வாரத்திற்கு மேல் செல்லும் ஒரு பயணத்தில் ஓரிரு நாட்கள் நம்மை சற்று மூட் அவுட் ஆக்குவதும் உண்டு. இப்பயணத்தில் மவுலான்க்ப்னா என்ற இடத்திற்கு செல்லும் போது எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.



மவுலான்க்ப்னா  செல்லும் போது அங்குள்ள அரசு கெஸ்ட் ஹவுசில் தங்குவதாய் இருந்தால் மட்டுமே செல்வது நல்லது. இல்லையேல் அங்கு செல்வதையே தவிர்த்து விடலாம். அங்கு தங்கினால், அவர்களே Guide - arrange செய்கிறார்கள். அவர் நம்மை எல்லா இடமும் சுற்றி காட்டி விடுவார்.

எங்களுக்கு அங்கு தங்க இடம் கிடைக்க வில்லை. ஆனால் கெஸ்ட் ஹவுஸ் கேர் டேக்கரிடம் - Guide - மட்டும் arrange செய்து கொடுங்கள் என்று கேட்க சரி என்று கூறியிருந்தார். அங்கு சென்றதும் எனது ஏர் டெல் போனில் சிக்னல் கிடைக்க வில்லை. அங்கு ஏர் செல் அல்லது BSNL மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. சென்னையிலிருந்து செல்லும் போதே இரண்டு கம்பனி சிம்மில் -  ஒன்று வாங்கி சென்று விடுவது நல்லது. அங்கு சென்று முயற்சிக்க வேண்டாம். சிம் கிடைத்து ஆக்டிவேட் ஆக  ஒரு வாரம் ஆகுமாம்.

Mawlongbna Guest house contact No: 9615 1700 25

மவுலான்க்ப்னாவில் நாங்கள் கயாக்கிங் எனப்படும் போட்டிங் மட்டும் செய்தோம். நாமே படகோட்டும் இந்த விளையாட்டு நன்கு ஓட்ட தெரிந்தால் மட்டுமே சுவாரஸ்யமாய் இருக்கும்




இதே இடத்தில் ஒரு சின்ன குகையும் - அவர்கள் கடவுளாக கருதும் பாறை ஒன்றும் உள்ளது. இவை இரண்டையுமே பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது - சிர புஞ்சியில் 2 அற்புத குகைகள் உள்ளன. அவற்றை பார்த்தாலே போதுமானது

****
ரிவாய் ரூட் பிரிட்ஜ் என்கிற இடம் - மவுளினாங் அருகே உள்ளது. மேகாலயாவில்  மரத்தின் வேர்களால் ஆன ரூட் பிரிட்ஜ் பல உண்டு.



அவற்றில் ரிவாய் ரூட் பிரிட்ஜ்  நிறைய பயணிகளை ஈர்க்கும் இடம். அவசியம் இவ்விடத்தை காணுங்கள். குறிப்பாக டபிள் டெக்கர் எனப்படும் ரூட் பிரிட்ஜ் காண முடியா விட்டால் அதன் குட்டி வடிவமான இதையேனும் பார்க்கலாம்


இங்கு பயணிக்கும்போது எப்போதும் குடை, மழை கோட்டு கை வசம் வைத்திருக்க வேண்டும். மேலும் காரில் இறந்து இறங்கி செல்லும்போது மழை இல்லா விடினும் கையில் அவற்றை எடுத்து செல்ல வேண்டும். திடீர் என மழை வந்து கையில் குடை இல்லா விடில் - மழை நிற்கும் வரை காத்திருக்க நேரிடும். எங்களுக்கு இங்கு அப்படித்தான் ஆனது





*****
மவுளினாங் ஆசியாவின் தூய்மையான கிராமம் என கருதப்படுகிறது. சாலைகள் அருமையான செமின்ட் ரோடில்  அமைக்கப்பட்டுள்ளன.



சாலைகளில் குப்பை பார்க்கவே முடியாது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை இருப்பதுடன் - அழகான தோட்டமும் உள்ளது



இங்கு நாங்கள் தங்கிய இடமும் அற்புத சூழலில் இருந்தது.



முழுக்க மரங்கள் அவற்றின் இடையே - ஒரு காட்டின் நடுவே இருப்பது போன்ற உணர்வை தந்தது. நல்ல உபசரிப்பு.. உணவு...

Mawlynnong Guest house contact :  Mr. Rishat -8575 615877



இதே இடத்தில் மர  வீடு போன்ற அமைப்பின் மீது ஏறி, மேகலாயா மற்றும் பங்களாதேஷ் பார்டரை பார்க்கலாம்.






மேகலாயாவில் பல இடங்களுக்கு செல்லும்போதும் - பங்களாதேஷ் பார்டரை காட்டி " அது தான் பங்களாதேஷ்"  என கூறுகிறார்கள் டிரைவர்கள்...


Saturday, June 6, 2015

மாபான்லூர்.. பூமியில் ஒரு சொர்க்கம் .. மேகாலயா பயண கட்டுரை


மாபான்லூர்.. இந்த பெயரை உச்சரிக்கும் போதே முகத்தில்  புன்னகை வந்து விடுகிறது .. இங்கு சென்ற அனைவருக்கும் பல இனிய நினைவுகள் நிச்சயம் இருக்கும்...



சிறிய மலை மேல் அமைந்த ஒரு அழகிய ஊர்... முதல் 5 கிலோ மீட்டர்  மோசமான சாலை.. பின் நல்ல தார் ரோடு.. அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ்க்கு போன் செய்தால் கீழே வந்து நம்மை ஜீப்பில் அழைத்து சென்று விடுவார்கள்.. சாலை  சரியாகும் வரை அவர்கள் ஜீப்பில் செல்வதே நல்லது (ஜீப் பயணம்...ஒருவருக்கு ரூ. 100 வாங்குகிறார்கள்)



ஜீப்பில் சென்று இறங்கியதுமே அந்த இடத்தில் அழகில் அசந்து போகிறோம்.. சுற்றிலும் மலை, ஏரி ..எங்கெங்கு காணினும் பசுமை..

நாங்கள் சென்ற காலை 10 மணிக்கு 18 டிக்ரீ அளவில் தான் வெப்பம் இருந்தது ( 20 என்பது அதிக பட்சம் இங்கு !!)

எங்கு பார்த்தாலும் மனிதர்கள் கண்ணில் படவே இல்லை ... எப்போதாவாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை யாரேனும் ஒருவர் நடந்து செல்வதோடு சரி...





இங்கு உள்ள கெஸ்ட் ஹவுஸ் லோக்கல் பஞ்சாயத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது.. அற்புதமான உபசரிப்பு.. மிக நல்ல சாப்பாடு. மேலும் குளிர் காய நெருப்பு துண்டுகளை சட்டியில் போட்டு நமக்கு தந்த வண்ணம் உள்ளனர்...



மாலை ஆறு மணிக்கு மேல் பனி சூழ்ந்து விடும் என்பதால் பகல் முழுதும் பசுமையான சூழலில் சுற்றி வந்தோம்,,,

மாலை கெஸ்ட் ஹவுஸ் வந்த போது அந்த பகுதி MLA அங்கு  வந்திருந்தார்.அவரிடம் வரும் வழியில் உள்ள சாலையை செப்பனிட சொல்லி கோரினோம். அவசியம் மிக விரைவில் செய்ய இருப்பதாக  சொன்னார்.

இரவு.. அந்த பகுதி முழுமையையும் பனி சூழந்தது. அருகில் இருக்கும் ஏரி கூட  கண்ணில் படவில்லை...



காலை இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்திருந்தது.

சில நிமிடம்.. பனி. பின் . வெய்யில்.அடுத்த ஓரிரு நிமிடம் மழை .. இதே சூழலே காலை 7 முதல் 9 வரை நீடித்தது.  வருடத்தின் 365 நாளும் இதே போல் தான் இருக்குமாம் !!




அடுத்த நாள் காலை.. கிளம்ப மனமின்றி மாபான்லூர் விட்டு கிளம்பினோம்..



அந்த அற்புத ஏரியை தாண்டும் போது " இன்னொரு முறை இந்த இடத்துக்கு வருவோமா?" என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ள, ஜீப் மெதுவாக அந்த சொர்க்கத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது ...
**********
Mawphanlur Guest house contact  Phone No: 9615 043 847

Monday, June 1, 2015

மேகலாயா பயண கட்டுரை - புகைப்படங்கள் + ஒரு மினி டிரைலர்

நண்பர்களே,

அண்மையில் ஒரு வாரம் மேகாலயா சுற்று பயணம் செய்தோம்... அதிகம் அறியப்படாத அற்புதமான இந்த ஊர் குறித்து சில பதிவுகள் எழுத உள்ளேன். பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்க அற்புதமான இடங்கள் குறித்து அவசியம் பகிர்வேன்.. இப்போதைக்கு பயணத்தில் எடுத்த சில புகைப்படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு...

மாபாலாங் - என்கிற நாங்கள் தங்கிய இடமருகே எடுத்த படம் 







சேரா ஹொலிடே ரிசர்ட் மற்றும் ஆரஞ்ச் ஹோட்டல் அதிபர் உடன்.... இவர் ஒரு தமிழர்.. 

மாபான்லூர் என்கிற அற்புதமான கிராமத்தில் 



காட்டுக்குள் ஒரு பயணம் 



நாங்கள் தங்கிய அறைக்கு தினம் வந்து விளையாடும் இரு அழகிய பப்பிகள் 

ஷில்லாங் டான் பாஸ்கோ மியூசியம் அருகில் 



மகாபலிபுரத்தில் உள்ளது போல் அங்கும் ஒரு பாலன்சிங் ராக் உண்டு.. 



மர வீடு (Tree  house  )  




தொங்கு பாலம் ஒன்றில் 

பாரம்பரிய காசி உடையில் சில பெண்கள் 

மரத்தின்  வேரால்  ஆன டபிள் டெக்கர் பாலத்தில்..