Friday, December 29, 2017

வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் அருவி.

மகள் தேர்வு முடிந்த அன்றே சென்ற படம் வேலைக்காரன்


"உலகத்தின் மிக சிறந்த சொல் செயல்" - இந்த ஒரு வரி போதும் - படத்தின் நோக்கத்தை பற்றி சொல்ல.

கதை 

கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் தங்கள் மார்க்கெட்டிங் உத்திகளால் மக்களை சுரண்டுகிறார்கள் என உணரும் நாயகன் - அதனை எதிர்த்து வித்தியாச முறையில் நடத்தும் போராட்டமே வேலைக்காரன்

பிளஸ் 

வித்தியாச கதைக்களன்- மற்றும் எடுத்து கொண்ட விஷயத்தை விட்டு விலகாமல் செல்லும் திரைக்கதை

சிவா - சேரி பையன் - ஆபிஸ் ஊழியர் போன்ற இரு முகங்களும் apt ! வழக்கமாய் காமெடியிலேயே படத்தை ஓட வைத்து விடும் சிவா முதன்முறை சீரியஸ் பாத்திரம் எடுத்து அதற்கு தன்னால் முடிந்த நியாயமும் செய்துள்ளார்

கலை இயக்கம் - அட்டகாசம். அந்த சேரி முழுவதுமே செட்டிங் தான் .. கூவம் ஓடும் அந்த ஏரியாவை அமர்க்களமாக காட்டியுள்ளனர்.

படத்தில் சின்ன சின்ன திருப்பங்கள்,  சிறு சஸ்பென்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை தெரியாமல் பார்த்தால் மட்டுமே  படத்தை ஓரளவு ரசிக்க முடியும் !

ஓரிரு பாடல்கள் (மட்டும்) நன்று. போலவே ஒரு டூயட் (அனாவசியம் !) தவிர பாடல்கள் மிக குறைவே. பின்னணி இசை பல இடங்களில் அசத்தல். எல்லா இடத்திலும் இசையை தட்டணும் என்றில்லாமல் சில இடங்களை சைலன்ட் ஆக விட்டிருக்கலாம். சிவா- நயன்தாரா பேசும்போது கூட பின்னால் எதோ ஒரு டமுக்கு டப்பா இசை ஓடுகிறது !

படத்தில் சண்டைகள் வைக்க எத்தனையோ காரணிகள் இருந்தாலும் - ஒரு மிக சின்ன சண்டை (நிஜமாகவே அவசியமானது) தவிர படத்தில் சண்டைகளே  இல்லை !  சண்டைகள் இல்லாத ஆக்சன் படம் என்பதே ஆச்சரியமாக தான் உள்ளது

பகத் பாசில் நிறைவான நடிப்பு. சூப்பர் மார்க்கெட்டில் - சிவாவிடம் பகத் பாசில் பேசும் காட்சி அட்டகாசம் ! ஏனோ அவர் பாத்திரம் பார்க்கும் போது தனி ஒருவன் அரவிந்த் சுவாமி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.  ஆனால் அரவிந்த் சுவாமி ஏற்படுத்திய தாக்கம் இப்பாத்திரம்  ஏற்படுத்த வில்லை.

சீரியஸ் படத்தின் இடையே ரோபோ ஷங்கர் காமெடி அவ்வப்போது ரிலாக்ஸ் ஆக்குகிறது

தனி ஒருவன் ராஜாவின் அடுத்த படைப்பு இது. நல்ல விஷயம் சொல்ல நினைத்ததற்கு ஷொட்டு. ஒரு சில காட்சிகள் வெயிட்டாக வைத்திருக்கிறார். கிளைமாக்சில் பாடல் வைத்து படத்தை முடித்திருப்பது வித்யாசம் + நைஸ்.

படம் முடியும் போது " எங்களின் இந்த படம் கூட ஒரு மார்க்கெட்டிங் தான்..நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் செய்யும் மார்க்கெட்டிங்" என முடிப்பது புன்னகையை வரவைக்கிறது

மைனஸ் 

கார்ப்பரேட் கம்பெனிகள் அனைவருமே திருடர்கள் - அனைவரும் அதிக கெமிக்கல் கலந்து மக்கள் உடலை நாசம்  செய்கிறார்கள் என பொதுமை படுத்திய அடிப்படை விஷயம் பெரும் தவறு. ஓரிரு நிறுவனங்கள் அப்படி இருக்கலாம். அனைவரும் அல்ல

லாஜிக் மீறல்கள் 2 காட்சிக்கு ஒரு முறை கிண்டலடித்து சிரிக்க வைக்கின்றன. ஒரு சின்ன மிரட்டலுக்கு பயந்து இந்தியாவின் 5 பெரிய கம்பெனி ஓனரும் ஒட்டு மொத்தமாய் கம்பெனியை விற்க ஒத்து கொள்வது ; போர்ட் ஆப் டைரக்டர்ஸ் கோட் சூட்டுடன் கூட்டமாய் கம்பெனி வாசலில் நின்று பகத்திடம் " நீங்கள் தான் அடுத்த CEO" என சொல்வது  இப்படி பல காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன .. லாஜிக் ஓட்டையால் !

நயன் - அந்த மெச்சூர்ட் பாத்திரத்துக்கு தனியே பொருந்தினாலும் சிவாவுடன் சேர்த்து பார்த்தால் அக்கா மாதிரி உள்ளார். பரோட்டாவிற்கு தக்காளி சட்னி காம்பினேஷன் மாதிரி ரொம்ப சுமாராக உள்ளது இவர்கள் கெமிஸ்ட்ரி

 இவர்களில் யார் பரோட்டா ? யார் தக்காளி சட்னி ?

வசனம் ! இந்த படத்திற்கு வசனம் எழுதிய பேப்பரை விற்றால் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுத்து விடலாம். நம் காது வலிக்கும் வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சினிமா ஒரு விசுவல் மீடியம் - இவ்வளவு வசனம் தேவையா ? இடைவேளைக்கு முன் சிவா 20 நிமிடம் வீர பாண்டிய கட்டபொம்மன் போல் பேசுகிறார். வசனத்தாலேயே படம் பார்க்கும் பலர் தலை வலிக்குது - கொஞ்சமா பேசுங்கடா என்று கத்துகிறார்கள். தனி ஒருவன் போல் புத்திசாலித்தனமான காட்சிகளால் - சில விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் கடந்து போயிருக்கலாம். ஆனால் இங்கு கடைக்கோடி ரசிகனுக்கு தெளிவாக புரிய வேண்டுமென விம் வைத்து விளக்குகிறார்கள்

படம் பார்க்கும் போது ரசித்து பார்த்தாலும் பின்னர் யோசித்தால் இன்னும் பல லாஜிக் ஓட்டைகள் நினைவிற்கு வந்த வண்ணமே உள்ளது

பைனல் அனாலிசிஸ் 

படம் நிச்சயம் வெற்றி தான். போட்ட காசை எடுத்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது .. ஒரு வாரம் ஆனபின்னும் வியாழன் இரவு PVR -ல் 2 தியேட்டரும் ஹவுஸ் புல் !

குறைகள் சில இருந்தாலும் .. நிச்சயம் இது ஒரு காண வேண்டிய படைப்பு தான். தேவையில்லாத பொருட்களை வாங்கும் முன் சற்று யோசிக்க வைக்கும் பணியை இப்படம் ஓரளவேனும் செய்யும் என்றே நம்புகிறேன்

Sunday, November 12, 2017

மேயாத மானும் எஸ் மது சாங்கும் - விமர்சனம்

ல்யாணம் முதல் காதல் வரை என்ற மிக சுமாரான சீரியலை ப்ரியா பவானி சங்கர் என்கிற ஒரே நபருக்காக கண்டு களித்தவன் நான். ஆனால் மேயாத மான் என்னை கவர ப்ரியா மட்டுமே காரணம் அல்ல !

Image result for meyatha maan

ப்ரியாவை ரசிப்பது தற்காலிகம். நதியா துவங்கி அனுஷ்கா வரை எத்தனையோ தலைவிகள் மாறி விட்டார்கள். ஆனால் என்றும் மாறாமல் ரசிக்கும் விஷயம் நகைச்சுவை ! இப்படம் அந்த விதத்தில் தான் கவர்கிறது .

கதை 

இதயம் முரளி என்ற பெயரில் ஆர்கெஸ்டரா நடத்தும் வைபவ் ப்ரியாவை - கல்லூரியில் 3 வருடம் காதலித்து இன்றும் சொல்லாமலே இருக்கிறார் (இதுவும் நம்ம வழக்கம் தான்.. கல்லூரி காலத்தில் ).

அவருக்கு திருமணம் என்று தெரிந்து வைபவ் தற்கொலைக்கு செல்ல - அவர் நண்பர்கள் ப்ரியாவை விட்டு ஒரு முறை தொலை பேசியில் பேச வைக்கிறார்கள்.

பின் வைபவை கவனிக்க துவங்கும் ப்ரியா அவரை காதலிக்க ஆரம்பிக்க , காதல் - மோதல் என சென்று கடைசியில் சுபமாய் முடிகிறது படம்

ப்ளஸ் 

அட்ட கத்தி பார்ட் டூ போலவே செல்கிறது படம். அதே விதமான ஹியூமர். சில விஷயங்களை உரக்க சொல்லி சிரிக்க வைக்கிறார்கள். சில விஷயம் உற்று கவனித்தால் புன்னகைக்க முடியும்

ஹீரோ - ஹீரோயின் தவிர்த்து இரண்டாம் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு இதனை அற்புதமான பாத்திரம் மற்றும் ஸ்கொப் தந்த படம் தமிழில் கடைசியாய் எப்போது வந்தது என நினைவில்லை; வைபவ் தங்கை மற்றும் நண்பனுக்கிடையே வரும் காதல் - விவேக் பிரசன்னா -இந்துஜா இருவர் நடிப்பும் கச்சிதம்

வைபவ் - குடிகார காதல் தோல்வி பாத்திரத்துக்கு சரியாக பொருந்துகிறார். ப்ரியா முதல் படத்திற்கு நிச்சயம் நல்ல பெர்பாமன்ஸ். குறிப்பாக முகபாவங்கள் காட்சிக்கு தகுந்த படி மாறுவது ..கியூட். பாத்திரம் உணர்ந்து நடிக்கும் நல்ல தமிழ் நடிகைகள் லிஸ்ட்டில் இவரும் இணையட்டும் !

Image result for meyatha maan stills

கதை எழுதி இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் .. ரொம்ப தெளிவாக ஜாலியான படம் தர முயன்றுள்ளார். திரைக்கதையில் வரும்  சின்ன சின்ன காட்சிகளையும் பின்னால் வசனத்தில் இணைத்து நேர்த்தியான திரைக்கதை மற்றும் பாத்திரங்களை படைத்துள்ளார்.

மைனஸ் 

படத்தின் நீளம் நிச்சயம் அதிகம். காமெடி இல்லாத மற்ற காட்சிகளில் கத்திரி வைத்திருக்கலாம்

மிக ஏழை பையன் -பணக்கார பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு எப்படி மகிழ்ச்சியாய் வைத்திருப்பான். அவளுக்கு மாப்பிள்ளையை விடுத்து வைபவ் மேல் காதல் வர என்ன காரணம் - இவை வலுவாய் இல்லை

எஸ். மது பாட்டை தவிர மற்ற பாடல்கள் கவரவில்லை.

ஏண்டி ஏண்டி எஸ் மது 

எஸ். மது பாட்டை பற்றி தனியே சொல்லியே ஆகணும் !

முதலில் பார்த்தது படத்தில் தான் என்பதால் விழுந்து விழுந்து சிரித்தேன். தனியாய் பார்த்தால் அவ்வளவு காமெடியாய் தோன்றுமா என தெரியவில்லை. படத்துடன், அந்த காட்சியுடன் மிக பொருந்தி போகிறது பாடல் !

எஸ். மது ; பி ஸ் சி, எம். பி.ஏ பார் - பிரண்ட் ஆப் ப்ரியங்கா; நம்பர் சிக்ஸ், குறுக்கு தெரு, சாந்தி காலனி சென்னை

என்ன இது அட்ரஸ் என்கிறீர்களா? இது தான் பாடலின் வரிகள் !
எப்படித்தான் இப்படி ஒரு காட்சி கன்சீவ் செய்தனரோ !

"பொண்ணுங்களை திட்டி பாடப்போறேன்" என்கிறான் காதலியுடன் சண்டை போட்டு விட்டு பாரில் தண்ணி அடிக்கும் ஹீரோ.

" ஒரு பொண்ணு ஏமாத்துனான்னு எப்படி எல்லா பெண்ணையும் திட்டலாம் " என்கிறான் நண்பன்

" மது (காதலி) வை திட்டி பாடுறேன் "

" ஊர்ல எத்தனையோ மது இருக்காங்க; அவங்க கோவிச்சிக்க மாட்டாங்களா? "

" சரி.. எஸ். மது - அவளை திட்டி பாடுறேன் "

" டெலிபோன் டைரக்டரியில்  எஸ். மதுன்னு நூறு பேர் இருக்காங்க "

இப்போ - வேற எந்த பெண்ணையும் குறிக்காமல் தன் காதலியை - அவளது அட்ரஸை சொல்லி பாடுகிறான் ஹீரோ.

எஸ் மது என்ற பெயரையும் அந்த அட்ரஸையும் திரும்ப திரும்ப சொல்வது செம காமெடியாக இருக்கிறது. நடன அமைப்புகளும் சிரிப்பை அதிகமாகவே ஆக்குகிறது ! ஒரு மினி கொலை வெறி சாங் என்றே சொல்லலாம் !

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் இருவருக்கும் இந்த வித்தியாச முயற்சிக்காக ஸ்பெஷல் பாராட்டு !

நமக்கு தான் இந்த பாட்டு புதுசு. இணையத்தில்  ஏராளமான மக்கள் பாட்டை சிலாகித்துள்ளனர்.

பாடலை இங்கு பாருங்கள் :




***

மேயாத மான் -  Watch it for the Humour without much expectation !

Sunday, September 24, 2017

துப்பறிவாளன் - சினிமா விமர்சனம்

மிஷ்கினின் படங்கள் ஏறக்குறைய ஒரே ஜானரில் இருக்கும். இம்முறை த்ரில்லர் - அதிலும் குறிப்பாக துப்பறியும் கதையை கையில் எடுத்துள்ளார்.

Image result for thupparivalan

கதை 

வித்தியாசமான துப்பறியும் நிபுணர் கணியன் பூங்குன்றன்  (விஷால்). - (இந்த பெயர் வைத்தமைக்கே இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ் பெற்ற பாடலை எழுதியவர் கணியன் பூங்குன்றன் என்பது பலருக்கும் தெரியும். அவர் எழுதிய வேறு எந்த பாடலும் நம்மிடம் இல்லை; இந்த ஒரே பாடலில் மிக பெரும் பிரபலமானவர் கணியன் பூங்குன்றன் !)

விஷாலின் உன்னிப்பான பார்வை -எதையும் சட்டென ஊகிக்கும் திறன் இவை - மிக அழகாக சொல்லி கதை துவங்குகிறது.

ஒரு சிறுவன் தனது நாய் இறந்து விட்டது என அவன் சேமித்த 760 ருபாய் பணத்தை  எடுத்து வந்து தந்து துப்பறிய சொல்கிறான். அதை துப்பு துலக்கும் போது மிக பெரிய மர்ம கும்பலின் பின்னணி தெரிய வருகிறது !

பிளஸ் 

கதை முழுக்க முழுக்க விஷாலின் மீது தான் பயணிக்கிறது. அவரது அதீத புத்தி சாலித்தனத்தை நம்ப  சற்று சிரமமாய் இருந்தாலும் போக போக பழகி விடுகிறோம். உடல் மொழி மற்றும் நடிப்பில் விஷால் தன்னால் முடிந்த பங்களிப்பை தந்துள்ளார்.

வழக்கமாய் ஹீரோ அல்லது ஹீரோயினாய் வரும் சிலர் இதில் மர்ம கும்பல்- வில்லன் கூட்டமாய் வருகிறார்கள். அவர்களின் உடல் மொழி மற்றும் டீட்டையிலிங் சுவாரஸ்யம்.

குறிப்பாக வில்லன் - கொலை செய்யும் போது காபி குடிப்பதும், காபியை எவ்வளவு எளிதாக குடிப்போமோ அதே போல கொலையை செய்து விட்டு போவதும்...

Image result for thupparivalan

 ஹீரோயினுக்கு அதிகம் வாய்ப்பில்லாத கதை - இருப்பினும் வந்த வரை மனதில் நிற்கிறார். துவக்கத்தில் இவரை பிக் பாக்கெட்டாய் காட்டி விட்டு - கிளை மாக்சிற்கு முன் கடைசியாய் இவர் அடிக்கும் பிக் பாக்கெட் கிளாஸ் !

காதல்- காமம்-பாடல்கள் இவை இன்றி படம் விறுவிறுப்பாக நகர்கிறது (கிளை மாக்ஸ் மட்டும் இன்னும் சுருக்கியிருக்கலாம் )

மைனஸ் 

குறைகள் அதிகமில்லை;

பத்து நிமிடத்திற்கொரு முறை யாரேனும் இறப்பது சற்று அயர்ச்சி தருகிறது. போலவே கிளை மாக்ஸ் இழுவையை சற்று கவனித்திருக்கலாம்

பைனல் அனாலிசிஸ் 

ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் வரும் துப்பறியும் பாத்திரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை.

நிச்சயம் ஒரு சுவாரஸ்ய முயற்சி. த்ரில்லர் படம் விரும்புவோர் நிச்சயம் காணலாம் !

தமிழின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் ஒரு நல்ல/ வெற்றி படம் தந்திருப்பதால் மகிழ்ச்சி !

பின்குறிப்பு: நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து விலகி, சொந்தமாய் கம்பெனி செகரட்டரி மற்றும் சட்ட ஆலோசகராக இயங்கி வருகிறேன். இதனால் பிளாகில் தொடர்ந்து கட்டுரைகள் எழுத இயலவில்லை; சுயமாய் பணி செய்யும்போது துவக்க காலத்தில் நேரம் கிடைப்பது கடினம். விக்ரம் வேதாவிற்கு பிறகு இந்த படம் தான் காணவே முடிந்தது. ஒன்றரை மாதத்தில் ஒரு ரெண்டரை மணி நேரம் பணியை தவிர்த்து ரிலாக்ஸ் ஆனது இப்படத்தில் தான். பதிவுகள் இயலும் போது மட்டுமே வரும். பொறுத்தருள்க !

Tuesday, July 25, 2017

விக்ரம் வேதா - சினிமா விமர்சனம்

மிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்று வித்யாசமான கதைக்களம்..

சஸ்பென்ஸ் த்ரில்லர்... கடைசி வரை விடை தெரியாமல் செல்லும் கேள்விகள்.. அனைத்துக்கும் பதில் கிளைமாக்சில் தெரிவது எனும் இந்த பாணி மலையாளத்தில் மிக பிரபலம். மும்பை போலீஸ் என்கிற த்ரில்லர் அட்டகாச உதாரணம்.

கதை 

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மாதவன் - தாதா விஜய் சேதுபதியை கொல்ல நினைக்கிறார். அந்த முயற்சியில் இறங்கும் போது விஜய் சேதுபதியின் கடந்த காலமும் அதில் பல்வேறு மர்மங்களும் விரிகிறது ! கடைசி அரை மணியில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கிறது .

Related image

படத்தின் நிஜ டபிள்  ஹீரோ .. கதை மற்றும் திரைக்கதை.  மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இந்த திரைக்கதைக்கு பிக்ஸ் செய்ததும் இயக்குனர்கள் செய்த மிகசிறந்த விஷயம் !

மாதவன் -விஜய் சேதுபதி இருவரில் யார் அசத்தல் என சொல்வது சற்று கடினம். மக்கள் ஆரவாரத்துடன் ரசிப்பது விஜய் சேதுபதி என்றாலும் மாதவனின் நடிப்பும் கன கச்சிதம்

வசனங்கள் நச். "காந்தி பையன் காந்தி போல ஆனாரா?கோட்ஸே பையன் கோட்ஸேவா? "

இசை அமைப்பாளர் சாம் 2 பாட்டுகளிலும் பின்னணி இசையிலும் அசத்துகிறார். சர்வ நிச்சயமாக நல்ல எதிர்காலம் உண்டு.

கடைசி அரை மணி நேரம் அட்டகாச திரைக்கதை. கதை செல்லும் போக்கே சற்று திரும்புவதும், முதல் பாதியில் சாதாரணமாய் பேசப்பட்ட பல விஷயங்களுக்கு வேறு அர்த்தம் தெரிவதும்.. நைஸ் !

மாதவன் மனைவியாக வரும் ஷ்ரத்தா ..அழகு !

Image result for vikram vedha

ஏற்கனவே தள்ளாடும் தமிழ் சினிமாவை GST வரி ஒரு  காட்டு காட்டி விட்டு போனது...

2017 ல் நன்றாய் ஓடிய படங்கள் என்றால் - தனுஷின் பவர் பாண்டி தவிர சொல்லி கொள்கிற மாதிரி வேறு எந்த படமும் இல்லை.

தியேட்டர் டிக்கெட் விலை 160-170 ஐ தாண்டியதால் மக்கள் பிக் பாஸ் பக்கம் ஒதுங்கி  விட்டார்கள்.இந்நிலையில் ஒரு படம் ஹிட் ஆகணும்.. தியேட்டர் நிறையனும் என்றால் - ரஜினி, அஜித், விஜய் போன்றோரின் படம் வந்தால் தான் சாத்தியம் என  நினைத்திருந்தேன்.ஆனால் விஜய்  சேதுபதி அந்த நல்ல காரியத்தை செவ்வனே செய்து முடித்து விட்டார் !

இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இதுவரை ஓரம் போ - குவார்ட்டர் கட்டிங் போன்ற சுமாரான/ தோல்வி படங்களையே எடுத்தவர்கள்.. இம்முறை ஸ்க்ரிப்ட் மற்றும் நடிகர் தேர்வில் மிக அக்கறை எடுத்து - சொல்லி  அடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

மல்டிபிளக்சில் வார நாட்களிலும் மாலை காட்சி ஹவுஸ் புல் ஆக  ஓடுகிறது !(நாங்கள் பார்த்தது வேளச்சேரி PVR) ரொம்ப நாளைக்கு பிறகு தமிழில் ஒரு வெற்றிப்படம்

பி மற்றும் சி சென்டரில் படம் எப்படி ஓடும் என்பது சற்று கேள்விக்குறி தான். சென்னை போன்ற நகரங்களில் வெற்றி நிச்சயம்.

வித்தியாச/புத்தி சாலித்தன சினிமா விரும்புவோர் காண தவறாதீர்கள்.. விக்ரம் வேதாவை !

Wednesday, May 31, 2017

டார்ஜிலிங் -கேங்டாக் -கொல்கத்தா பயணம்..புகைப்படங்கள், வீடியோ +சிறு குறிப்பு

ண்மையில் டார்ஜிலிங் -கேங்டாக் -கொல்கத்தா சுற்றுப்பயணம் சென்று வந்தோம். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் சிறு குறிப்பு ...

டார்ஜிலிங் மேற்குவங்கத்தில் இருக்கும் ஒரு மலை வாசஸ்தலம். கொல்கத்தா அல்லது கவுகாத்தி வரை விமானத்தில் சென்று அங்கிருந்து பாக்டோக்ரா விமானத்தில் சென்றடைந்தோம். பாக் டோக்ராவில் இருந்து  நான்கு மணி நேர சாலை பயணத்தில் டார்ஜலிங் அடையலாம். 

மே மாதம் பகலில் டார்ஜலிங் வெப்பநிலை 15 டிகிரி மட்டுமே ! 

டார்ஜிலிங்கில் பார்க்க வேண்டிய இடங்கள் :

Tiger Hills, Mirik Lake, Rock garden, Japanese Peace Pagoda, Few monostries and Batasia loop

கேங்டாக் சிக்கிம்மின் தலை நகரம். மிக சுத்தமான அழகான நகரம். இங்கு சிறு கார்கள் தவிர ஜீப், பேருந்து எதுவும் நகரினுள் அனுமதி இல்லை !

இங்கு மதியம் வரை சற்று வெய்யில் அடிக்கவே செயகிறது. மதியத்திற்கு பின் குளிர் துவங்குகிறது.

 கேங்டாக்கில்  பார்க்க வேண்டிய இடங்கள் 

Chardom Siva temple, Snow point, Rope car travel and Tea gardens.

சென்னை வரும்முன் கொல்கத்தாவில் ஒரு நாள் தங்கி சில முக்கிய இடங்களான ஹவுரா பிரிட்ஜ், காளி கோயில், பிர்லா மந்திர், டிராம் வண்டி, விட்ட்டோரியா பேலஸ்,  அன்னை தெரசா இல்லம் ஆகியவை கண்டு வந்தோம்.   

பயணத்தில் எடுத்த சில படங்கள் மற்றும் ராஃப்ட்டிங் வீடியோ இதோ:




சார்த்தோம்  சிவன் கோவில்.. இங்கு ராமேஸ்வரம், மதுரா உள்ளிட்ட பல கோவில்களின் மாதிரி வடிவம் ரசிக்கும் படி இருந்தது 




மிரிக் லேக், டார்ஜலிங் 

மிரிக் லேக், டார்ஜலிங் 

Mirik Lake





கேங் டாக் தேயிலை தோட்டம் 

கேங் டாக் ரோப் கார் பயணம் 



வெள்ளை உடைக்கு மேட்சாக வெள்ளை கார்  

ரோப் கார் அருகே முயல் குட்டிகளுடன் 



அன்னை தெரசா நினைவு இல்லம் 

விக்டோரியா பேலஸ் நினைவு இல்லம் 








கொல்கத்தா சாலையில்..

Howrah Bridge, Kolkatta

Tram in Kolkatta

Victoria Palace, Kolkatta

தீவிர வாதிகள் அல்ல;கொல்கத்தா வெயிலில் இருந்து தப்பிக்க இந்த வேலை 




Birla Mandir, Kolkatta




River Rafting
ரிவர் ராப்ட்ட்டிங் வீடியோ இதோ :


பயணத்தில் ரசித்த/ மிக என்ஜாய் செய்த சில தருணங்கள் :

ரிவர் ராப்ட்டிங் 

மாபெரும் சிவன் கோவில்..அங்கு mist பெரும் சிவன் சிலையை மூடி மூடி சென்றது கண்கொள்ளா காட்சி 

கொல்கத்தா ஏசி பஸ்ஸில் அரட்டை அடித்து வயிறு குலுங்க சிரித்த படி செய்த பயணம் 

டார்ஜலிங்கின் குளிர் 

Tuesday, May 16, 2017

மின்ட் ஸ்ட்ரீட்டில் ஒரு சுவாரஸ்யமான Food Walk...

Food Walk ...சென்னையின் சில இடங்களில் மிகப் பிரபலம் ! அதில் முக்கியமானது ... சென்னை பாரிஸ் கார்னர் அருகிலுள்ள மின்ட் ஸ்ட்ரீட் Food walk.

அண்மையில் நண்பர்கள் சிலர் மின்ட் ஸ்ட்ரீட்டில் Food Walk சென்றோம்..ஏற்கனவே சென்று அனுபவம் உள்ள திரு.  முரளி ரங்கராஜன் எங்களை முன்னின்று அழைத்து சென்றார்

மாலை 4 மணிக்கு எங்கள் பயணம் வேளச்சேரி ரயில் பயணத்தில் துவங்கியது. ரயிலை விட்டு இறங்கியதும் முதல் மற்றும் முக்கிய வேலையை பார்த்து விட்டு (வேறென்ன செலஃபீ தான் !) நடக்க துவங்கினோம்



அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி வழியே பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று இடது புறம் திரும்பி சற்று தூரம் சென்றால் மின்ட் ஸ்ட்ரீட் வந்து விடுகிறது

மேத்தா பிரதர்ஸ் மித்தாய் வாலா

நாங்கள் முதலில் சென்ற கடை..இங்கு வடா பாவ் தான் பிரசித்தி பெற்றது. நாங்கள் சாப்பிட்டதும் அதுவே !





வடா பாவ்.........உருளை கிழங்கு நன்கு வேக வைக்கப்பட்டு ஒரு தவாவில் கடுகு, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் மற்றும் உப்பு  உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. சூடு குறைந்த பின் எலுமிச்சம் பழம் சைசில் உருண்டையாக உருட்டப்படுகிறது. இது பெங்கால் கிராம் மற்றும் கடலை மாவுடன் கலந்து  - உடன் சோடா மற்றும் உப்பு சேர்த்து  நன்கு வறுக்கப்படுகிறது. அற்புதமான போண்டா தயார். இதனுடன் சுவையான சட்னி (Green Chutney made of Coriander and garlic powder)  மற்றும் ஒரு Stuffed  Pav/ Bun சேர்த்து பரிமாறுகிறார்கள்.



நண்பர்கள் பலரும் ரசித்து சாப்பிட்ட உணவுகளில் இதுவும் ஒன்று !

காக்கடா ராம்பிரசாத் 

நாங்கள் சென்ற கடைகளில் குளிரூட்டப்பட்ட வசதியுடன், அமர்ந்து சாப்பிடும் படி இருந்த ஒரே கடை இது தான். பாதி பேர் தான் உள்ளே சென்று அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.   பெரும்பாலான மக்கள்   வெளியில் வாங்கி அங்கேயே சாப்பிட்டு .விடுகிறார்கள்.


ஆலூ டிக்கா, பாதாம் பால்  மற்றும் ஜிலேபி ஆகியவை இங்கு சாப்பிட்டோம்.

ஆலூ டிக்கா - தவாவில் நெய் ஊற்றி மிக நன்றாக வறுக்கப்பட்டு (deep fry ) செய்யப்படும் ஒரு உணவு. டிக்காவை துண்டு துண்டாக்கி - கடைந்த தயிர் அதன் மேலே ஊற்றப்பட்டு - சாட் மசாலா, ஜீரக பவுடர், தனியா, இனிப்பு சட்னி உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. இதனுடன் ப்ரெஷ் பன்னீர்  மற்றும் சீஸும் சேர்ந்து தரும்போது.. சாப்பிட ஓஹோ என்று இருக்கும். வயிறும் சீக்கிரம் நிரம்பிவிடும்.



பாதாம் பால் .. Simply Superb !

பாதாம் பால் பற்றி ஒரு நண்பர் சொன்னது "காலையில் ஓடும் முன் குடிக்க சிறந்த beverage இது !  பால் மற்றும் Almond இரண்டும் ஓடும் முன் குடிக்க மிகவும் உகந்தவை  !! "

(ரன்னிங் பிரியர்களாயிற்றே.. பல நேரம் .. ரன்னிங் பற்றி பேச்சு வராமல் இருக்காது !)

நிச்சயம் செல்ல வேண்டிய / தவற விடக்கூடாத கடைகளில் ஒன்று இது

லஸ்ஸி கடை

காக்கடா கடைக்கு அருகிலேயே உள்ளது ஏரியாவில் புகழ் பெற்ற லஸ்ஸி கடை.

காக்கடா கடைக்கு பக்கத்தில் ஒரு ஜைஜான்டிக் மனிதர் நின்று கொண்டிருக்கிறார். அவர் தான் லஸ்ஸி கடை ! அகில உலகிலும் இப்படி ஒரு லஸ்ஸி கடையை காண முடியாது ( கடை என ஒன்று இல்லாமல் தெருவில் நிற்கும் ஒரு மனிதரே கடை !)

அவரிடம் லஸ்ஸி வேண்டும் என்றதும், எத்தனை வேண்டும் என விசாரிக்கிறார். நாங்கள் காக்கடாவில் ஏற்கனவே ரவுண்ட் கட்டியதை பார்த்ததாலோ என்னவோ, உங்களால் முழு டம்பளர் லஸ்ஸி குடிக்க முடியாது; பாதி டம்பளர் எல்லாருக்கும் தருகிறேன் என்றார்.

பாதி டம்பளர் லஸ்ஸி 70 ரூபாய். முழு லஸ்ஸி  140 ரூபாய்.

அருகில்.. எதோ ஒரு சிறு இடத்தில் லஸ்ஸி தயாராகிறது; மொபைல் மூலம் ஆர்டர் தர அதிக காத்திருப்பின்றி,  சில நிமிடத்தில் லஸ்ஸி வந்து விட்டது.

எவ்ளோ பெரிய டம்பளர் !!!!!

கெட்டியான தயிர், சர்க்கரை, saffron இவை சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டு - பெரிய சைஸ் கிளாசில் தரப்படுகிறது.

பாதி டம்பளர் லஸ்ஸி குடிக்க குறைந்தது 5 நிமிடம் எடுத்து கொண்டேன். லஸ்ஸியை சிறிது சிறிதாக முழுக்க என்ஜாய் செய்து ரசித்து ருசித்து குடிக்க வேண்டும்..நாக்கில் சென்று ஒட்டி கொள்கிறது லஸ்ஸி.. முடியும் போது ஒரு பிளசண்ட் ஷாக். அடியில் அட்டகாசமான பால்கோவா.. வாவ் !

தஞ்சை அன்பு லஸ்ஸியை பீட் செய்ய உலகில் இன்னொரு லஸ்ஸி இருக்குமா என நினைத்து கொண்டிருந்தேன்.. சென்னையின் இந்த லஸ்ஸி நிச்சயம் அன்பு லஸ்ஸியை தோற்கடித்து விடும்.



ஓனர் தினேஷ் சோனி.. ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்து செட்டில் ஆன wrestler ! குடித்து முடித்து விட்டு ஓனருடன் ஒரு செலஃபீ எடுத்து கொண்டோம். கிளம்பும் முன் அவரிடம் "இதுவரை இவ்வளவு அருமையான லஸ்ஸி குடித்ததே இல்லை; ரொம்ப அருமையா இருந்தது" என சொல்ல " எல்லாம் கடவுள் செயல் " என சொல்லிய படி வானத்தை பார்த்தார் . முகத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் தெரிந்தது.

அகர்வால் மிஸ்தான் பந்தர் 

நாங்கள் பானி பூரி சாப்பிட்ட இந்த கடை - வழக்கமாய் நாம் சாப்பிடுகிற பானி பூரி தரத்திலேயே இருந்தது.



இங்கு நாங்கள் வேறு எதுவும் சாப்பிட்டு பார்க்க வில்லை

கணேஷ் கூல் பார் (கரும்பு ஜுஸ் கடை)

மின்ட் தெருவில் இருந்து ஆவுடையப்பன் தெரு செல்லும் முனையில் உள்ளது இந்த கரும்பு ஜுஸ் கடை. எப்போதும் கூட்டம் அள்ளுகிறது.



12 ரூபாய்க்கு ஐஸ் போட்ட ஜுசும், 15 ரூபாய்க்கு ஐஸ் இல்லாத ஜுசும் கிடைக்கிறது. ஆஹா ஓஹோ இல்லை. கொடுத்த காசுக்கு நிச்சயம் நல்ல ஜுஸ்.



நிறைய நடப்பதாலும், இனிப்பு சாப்பிடுவதிலும் நிறையவே தாகமாய் இருக்கும். எனவே கரும்பு ஜுஸ் தாகத்தை தணிக்க பெரிதும் உதவியது !

சீனா பாய் டிபன் சென்டர் 

டிபன் சென்டர் என ஹோட்டல் போல பெயர் இருந்தாலும், இதுவும் ஒரு சிறு கடை தான்.


NSC போஸ் ரோடில் இருக்கும் இக்கடையில் சீஸ் முறுக்கு மற்றும் காக்ரா சாண்ட் விச் இரண்டுமே .. மிக ரசிக்கும் வண்ணம் இருந்தது.



சீஸ் உள்ளிட்டவை சிக்கனம் பார்க்காமல் போடுகிறார்கள். சின்ன கடை என்றாலும் லாபம் பார்க்காமல் - கொடுத்த பணத்திற்கு நியாயம் செய்கிறார்கள்...



அவசியம் செல்ல வேண்டிய சாப்பிட்டு பார்க்க வேண்டிய உணவு வகைகள் இவை. சின்ன விஷயம்: இவை இரண்டுமே தயார் செய்ய சற்று நேரம் எடுக்கிறது !

பொடி இட்லி கடை

பயணத்தின் இறுதியில் சாப்பிட்டது பொடி இட்லி கடை. சிறிய சைஸ் இட்லிகள் (மினி இட்லி அளவு அல்ல.அதை விட நிச்சயம் பெரிது; நமது வழக்கமான இட்லியை விட சற்று சிறிது )


பொடியுடன் நெய் ஊற்றப்பட்டு இட்லி மணக்கிறது. வயிறு ஏற்கனவே நிரம்பி இருந்ததால் ஆளுக்கு ஒவ்வொரு இட்லி மட்டுமே சாப்பிட்டோம். நிச்சயம் வித்தியாச சுவை; முயற்சித்து பார்க்க வேண்டிய கடை

சில குறிப்புகள் :

* வார நாட்களின் மாலை ஏராள மக்கள் பர்சேஸ் செய்ய வருவதால் கூட்டம் அதிகமாயிருக்கும். ஞாயிறு பாதி கடைகள் இருக்காது. எனவே சனிக்கிழமை மாலை Food walk க்கு செல்வது நல்லது 

* காரில் செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. மின்ட் ஸ்ட்ரீட்டில் பார்க் செய்வது மிக கடினம். ஒருவேளை கார் எடுத்து சென்றால் உயர் நீதி மன்றம் அருகே நிறுத்தி விட்டு நடக்க வேண்டும். 

* ரயில் என்றால் Fort ஸ்டேஷனில் இறங்கி நடக்கவேண்டும். கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் நடை இருக்கும். அல்லது Fort ஸ்டேஷனில் இருந்து ஒரு ஆட்டோ மூலம் மின்ட் ஸ்ட்ரீட் வரை சென்று அங்கிருந்து நடையை துவங்கலாம்.



* மின்ட் ஸ்ட்ரீட் ரொம்ப நீட் ஆகவெல்லாம் இருக்காது. இதை மனதில் கொள்க ! கார், பைக், சைக்கிள், ரிக் ஷா, ஆட்டோ எல்லாம் - இரண்டு பக்கமும் செல்லும்; ( ஒன் வே என்று சொல்கிறார்கள். பார்த்தால் அப்படி தெரியலை ) வாகனங்களுக்கு இடையில் கிடைத்த கேப்பில் புகுந்து செல்லவேண்டும்.  

மின்ட் ஸ்ட்ரீட் 

* வாங்கும் உணவு வகைகளை அவசியம் பிரித்து சாப்பிடவும்.கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டால் தான் பல இடங்களில் சாப்பிட்டு முயல முடியும். 

* அவசியம் ஏழெட்டு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் செல்லுங்கள். உணவு சாப்பிடுவது ஒரு சந்தோசம் என்றால் அரட்டை அடித்தபடி அவர்கள் தரும் கமெண்ட்களுடன் செல்வது தான் சிறப்பே !

 நிறைவாக ...

இந்த Food walk சென்ற பலரும் அண்மையில் நண்பர்களானவர்கள் தான். (எனக்கு மட்டுமல்ல.. ஒரு சிலர் தவிர்த்து ஏராளமானோர் ஓரிரு வருடத்தில் வைப்ரன்ட் வேளச்சேரி வந்தவர்களே) ஆயினும் எந்த சிறு தயக்கமும் இன்றி இந்த Food walkல் ஒரே தட்டில் .....ஆளுக்கு ஒரு கை எடுத்து சாப்பிட தயங்கவே இல்லை.

எந்த ஒரு உணவையும் யாரும் முழுமையாக சாப்பிட வில்லை ( கரும்பு ஜுஸ் தவிர) ..எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான். அநேகமாய் பலரும் அன்று இரவு டின்னர் சாப்பிட்டிருக்க மாட்டார்கள் ! அந்த அளவு இனிப்பு மற்றும் ஸ்நாக்சிலேயே வயிறு நிரம்பி விட்டது.



வேளச்சேரியில் கிளம்பி - சென்னை Fort சென்று - அத்தனை வகை உணவுகளை சாப்பிட்டு, ஆங்காங்கு தொடர்ந்து மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி குடித்த படியே இருந்தும் கூட, ஒருவருக்கான செலவு ..200 ரூபாயை கூட தாண்டவில்லை..

 இவ்வளவு குறைவான செலவில் - உணவால் வயிறும், உடன் வந்த நண்பர்களால் மனதும் நிறைந்து போனது.. !

அனைத்தும் கூடி வந்தால்.. ஒரு நான் வெஜ் Food walk (அத்தோஸ்) விரைவில் நடக்கலாம் !

நன்றி:

புகைப்படங்கள் -  வடிவேல் & ஆரத்தி

அடிஷனல் தகவல்கள் - ஹேமா ஸ்ரீகாந்த் & பாஸ்கர் 
Related Posts Plugin for WordPress, Blogger...