Saturday, March 28, 2020

கொரோனா @ சென்னை

கொரோனா குறித்த தகவல்கள் வந்த துவக்கத்தில் அது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என நினைக்கவில்லை

இந்தியா முழுதும் மட்டுமல்ல உலகின் பல நாடுகளும் ஒட்டு மொத்தமாக லாக் அவுட் ஆகியிருப்பது சரித்திரத்தில் முதல் முறையாக இருக்கலாம் (உலக போரின் போது இப்படி மக்கள் வெளிவராமல் இருந்தனரா .. தெரியவில்லை )ஆறுதலான விஷயங்கள்

1. இந்தியாவிற்கு மிக தாமதமாக வந்தது, மற்றவர்களிடமிருந்து நாம் ஓரளவு பாடம் கற்று கொள்ள முடிந்தது ; இருப்பினும் நமது நடவடிக்கை துவங்க சற்று தாமதம் தான்

2. பொதுவாகவே இந்நோயால் இறப்போர் எண்ணிக்கை 2 % தான் என்பது பெரும் ஆறுதல். மிக எளிதாக பரவுவது தான் பெரும் பிரச்சனை. இப்போது self quarantine செய்வது பரவுவதை ஓரளவு குறைக்கலாம்

சில குழப்பங்கள் - பிரச்சனைகள்

1. சென்னையை பொறுத்தவரை அரசு பல விஷயங்களில் மாறி மாறி அறிவிப்புகள் வெளியிடுவது பெரும் குழப்பம்.

முதலில் - மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறந்திருக்கும். பின் காலை 6 to  10 தான் திறந்திருக்கும். மறுபடி இல்லை இல்லை நாள் முழுதும் திறந்திருக்கும். இன்று மீண்டும் அதனை மாற்றி அறிவிப்பு

ஆவின் பால் காலை 10 மணி வரை மட்டுமே கிடைக்கும் என ஒரு அறிவிப்பு - பின் நாள் முழுதும் கிடைக்கும் என்று தகவல்

மக்கள் ரோட்டிற்கு வர இந்த அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை வந்து விடுமோ என்ற ஐயமே காரணம்

எங்கள் ஏரியாவில் மளிகை பொருட்கள் பல கடைகளில் விரைவாக காலியாவதால், அடுத்து எப்போது மளிகை பொருட்கள் கடைகளுக்கு வரும் என்ற கேள்விக்குறி உள்ளது. காய்கறி கிடைப்பதில் இதுவரை பிரச்சனை இல்லை

2. ரெசிடென்ஷியல் ஏரியாவில் வாகனங்கள் வழக்கமான அளவு போய் வந்த வண்ணம் உள்ளது. போலீஸ் தடுப்பதெல்லாம் மெயின் ஏரியா தான். மக்களுக்கு இன்னும் தீவிரத்தை உணர வில்லையா என்று தான் எண்ண வேண்டியுள்ளது

3. எங்கள் ஏரியாவிலேயே ஒரு வயதான பெண்மணி தனியாக அமெரிக்காவிலிருந்து ஒரு சில வாரம் முன்பு வந்துள்ளார். அவர் எந்த விதத்திலும் தனிமை படுத்த வில்லை. இது போன்று இன்னும் எத்தனை பேர் என்று தெரியவில்லை

4. ஏப்ரல் 14 உடன் இது முடியுமா என்றால் ..வாய்ப்புகள் மிக குறைவு என்று தான் தோன்றுகிறது

காரணம் .. மிக எளிதான ஒன்று. நோய் பரவல் குறைந்தால் தான் மறுபடி அனைத்தும் திறக்க முடியும். ஆனால் இந்தியா தமிழ் நாடு இரண்டு இடத்திலும் தினமும் கவுண்ட் கூடி கொண்டே போகிறது . நோய் கட்டுக்குள் வந்தால் தான் மறுபடி நார்மல் நிலை வர வாய்ப்புகள் உண்டு.


5. ஆந்திராவில் இருக்கும் நண்பர் ஒருவர் ஏராள விவசாய நிலம் அறுவடைக்கு தயாராக இருப்பதாகவும், அறுவடை செய்யாவிடில் நெல் முழுதும் கொட்டி விடும் என்றும் கூறினார். இது வருத்தப்படவைத்தது என்பதோடு , பின்னர் பஞ்சம் வரவும் இவை காரணமாக அமையும் என்ற ஐயமும் வருகிறது

எப்படி போகிறது பொழுது

வீட்டுக்குள் தான். அரிதாக காய்கறி வாங்க சென்றதையும் இனி குறைக்க யோசனை

சினிமா, டிவி, பாட்மிண்டன், வீட்டு மாடியில் நடை என கழிகிறது பொழுது

முடிந்த அளவு பாசிட்டிவ் ஆக இருக்க தான் பார்க்கிறோம். விரைவில் நிலைமை சரியாகவேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே .. மனதினுள் !
Related Posts Plugin for WordPress, Blogger...