Friday, November 29, 2013

இப்படியும் சில இளைஞர்கள்...

ஜூனியர் அச்சீவர் .. இது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் பெயர்.. (Website: http://www.jaindia.org/)

இவர்கள் செய்து வரும் அற்புதமான காரியம் - ஒவ்வொரு  வார இறுதியிலும் அரசு பள்ளி மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும்  செலவிட்டு - பல்வேறு வித படிப்புகள் குறித்த விழிப்புணர்வை வர வைப்பது ...

கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் வீட்டருகே உள்ள புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதில் எனக்கு பெரும் மன நிறைவு கிடைக்கிறது.

ஒரு காலத்தில் என்னை போன்ற நடுத்தர மக்களும் படித்தது இத்தகைய பள்ளிகளில் தான் ! இன்றோ - இந்த பள்ளியில் படிப்போர் அநேகமாய் -  கூலி வேலை அல்லது வீட்டில் வேலை செய்வோரின் குழந்தைகளே. அவர்களுக்கு இவ்வளவு படிப்புகள் இருக்கிறது என்பதே தெரியாது ! ஒரு தோழன்/ தோழி போல  ஏழெட்டு மணி நேரம் அவர்களுடன் செலவழித்து - அவர்களுக்கு எந்த  துறையில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து - அது சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்வார்கள் இந்த நிறுவனத்தினர்.

ஜூனியர் அச்சீவர் என்பது ஒரு மிக பெரும் அமைப்பு . அதனுடன் காக்னிசன்ட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த நற்செயல்களை செய்கின்றன.



தொடர்ந்து நான்காவது ஆண்டாக நாளை  சனிக்கிழமை காக்னிசன்ட் நிறுவனத்தை சேர்ந்த 14 வாலண்டியர்கள் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் - 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் - படிப்புகள், வேலை வாய்ப்பு பற்றி  - உரையாட உள்ளனர். மட்டுமல்ல - தங்களது தொலை பேசி மற்றும் மெயில் முகவரி தந்து - அவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் எந்த குழப்பம் இருப்பினும் தொடர்பு கொள்ளுமாறு கூறுவர் இவர்கள் !

செய்தி ஊடகம் என்றாலே - நெகடிவ் செயல்களை அதிகம் பேசும் - இருப்பினும் சத்தமின்றி இப்படி நடக்கும் நற்செயல்களையும் பாராட்டுவோம். பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

நான் செய்வது என் வீட்டுருகே உள்ள ஒரே ஒரு பள்ளிக்கு மட்டுமே. ஆனால் 22 வயது முதல் 25 வயது வரை உள்ள ஏராள இளைஞர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்படி எதோ ஒரு பள்ளியில் தங்கள் வார இறுதியை செலவிடுகிறார்கள். இவர்களால் சமூகத்தில் ஒரு சிறு மாறுதலை உண்மையில் விளைவிக்க முடிகிறது... பாசிடிவ் ஆன மாறுதல் !

இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். 

தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் - மிகுந்த முயற்சி எடுத்து - சென்னையை சேர்ந்த ஹிந்துஸ்தான் இஞ்சினியரிங் கல்லூரியில்   4 இலவச சீட்டுகள் (கல்லூரி பீஸ் முதல் பஸ் சார்ஜ் வரை அனைத்தும் இலவசம்!) பெற்றுள்ளனர். ஆனால் இந்த 4 இலவச சீட்டுகளில் சேரக்கூட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியது இல்லை. யாரேனும் ஒரே ஒருவர் - ஓரிரு வருடத்துக்கு ஒரு முறை தான் அந்த சலுகையை பயன்படுத்தி சேருவர். 

ஆனால் கடந்த 2 வருடங்களாக நிலைமை மாறி விட்டது. இப்போது ஒவ்வொரு வருடமும் 4 மாணவர் அல்லது மாணவி அந்த இலவச சீட்டை பயன்படுத்தி சேர்கிறார். 

இப்போது எங்கள் முன் இருப்பது வேறு விதமான சாலஞ்ச். அப்படி சேரும் மாணவர்கள் பலர் ஆங்கில மீடியமில் இஞ்சினியரிங் படிக்க திணறுகிறார்கள். படிப்பை நிறுத்தி விடலாமா என்றும் பலர் புலம்புகிறார்கள். 

இது போன்ற பிரச்சனை வராமல் தடுக்க 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் (Spoken  & Written English ) பள்ளிக்கு வெளியிலிருந்து ஒரு நண்பர் வந்து இலவசமாய் பாடம் சொல்லி தர ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் - தினம் காலை ஒரு மணி நேரம் மற்றும் சனிக்க்ழமைகளில் முழு நாளும் இவர்களுக்கு  ஆங்கிலம் சொல்லி  தருகிறார்.ஓரிரு வருடத்தில் இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திலும் நல்ல பேசும் மற்றும் எழுதும் திறன் பெறுவார்கள் என நம்புகிறோம் !

இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் என்ன செய்யலாம் ?

1. ஜூனியர் அச்சீவர்-ல் ஒரு வாலண்டியராக உங்களை இணைத்து கொள்ளலாம். அவர்கள் தரும் சிறு ட்ரைனிங்கிற்கு பிறகு - அனைத்து சனிக்கிழமைகளில் இல்லையென்றாலும் வருடத்தில் சில சனிக்கிழமையாவது இத்தகைய பள்ளி மாணவ மாணவிகளிடம் உங்கள் கருத்தை/அனுபவத்தை பகிரலாம்.



2. உங்கள் வீட்டருகே உள்ள பள்ளி அல்லது நீங்கள் படித்த பள்ளியில் இந்த நிகழ்வை நடத்த   வேண்டுமெனில் - குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது குறிப்பிட்ட பொறுப்பு ஆசிரியர்  தொலை பேசி  எண் தந்தால் - அப்பள்ளி மாணவர்களுக்கும்  இத்தகைய  ஒரு நாள் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் !

சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த மூலை, முடுக்கில் இருக்கும் பள்ளிக்கும் வந்த இந்நிகழ்வை நடத்த முடியும். பள்ளியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் தர வேண்டியது அனுமதி மட்டுமே !

3. மடிப்பாக்கம் அல்லது புழுதிவாக்கம் அருகில் நீங்கள் இருந்தால் - நாளை காலை 9.30 முதல் மதியம் 3.30 வரை நடக்கும் இந்த நிகழ்வை நீங்கள் நேரில் வந்து பார்வையிடலாம் ! நேரில் வந்து பார்த்தால் நீங்கள் நெகிழ்ந்து போவீர்கள் என்பது மட்டும் உறுதி !

4. இந்த தகவலை உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்தால்- அவர்களில் ஆர்வம் இருப்போர் வாலண்டியர் ஆகலாம். அல்லது குறைந்த பட்சம் தங்களுக்கு தெரிந்த அல்லது தாங்கள் படித்த பள்ளியில் இந்த பயனுள்ள நிகழ்வு நடக்க ஏற்பாடு செய்யலாம்

********************
சென்ற ஆண்டுகளில் நடத்திய இதே நிகழ்வு குறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் இங்கு காணலாம் :

http://veeduthirumbal.blogspot.com/2011/08/blog-post.html
**************
தொடர்புடைய பிற பதிவுகள் :

அரசு பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி 

சொந்த காசில் அரசு பள்ளி விழா நடத்தும் பெரியவர்கள் 

யுவகிருஷ்ணா - அதிஷா- மோகன் குமார் 

புழுதிவாக்கம் பள்ளியில் ஒரு விழா 

Wednesday, November 27, 2013

இணையப் பித்து !

ண்பர்  வா. மணிகண்டன் தினம் ப்ளாக்  எழுதுவது பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்

இது என்னுள் நிறைய எண்ணங்களை கிளறி விட்டது ....

*************

"தினம் பதிவு எழுதுவது பெரிய நேர விரயம் ; அதனால் பத்து பைசா பிரயோஜனம் இல்லை என்பதை எத்தனையோ நண்பர்கள் சொல்வார்கள் .. (எனக்கும் சொன்னார்கள்); சிலர் " எங்க காலம் மாதிரி வருமா ? இப்பலாம் யார் நல்லா எழுதுறாங்க சொல்லு"  என்று சொல்வார்கள் :) அது ஒருவித ராகிங் என்றும் கொள்ளலாம் !

*************

சிற்சில மக்கள் பதிவு எழுதுவது வேஸ்ட் என்று சொல்லும்போது " பொறாமையில் சொல்கிறார்கள்; அவர்களுக்கு சரக்கு தீர்ந்துடுச்சு ; அதனால் தான்  அப்படி சொல்கிறார்கள் " என்றெல்லாம் நினைத்தேன்

தினம் எழுதுவதும் அதன் ஊடாக நான்கைந்து கமண்ட் மற்றும் பத்து பன்னிரண்டு லைக் வாங்குவதும் பெரிய போதை. இதில் மிக பெரிய கொடுமை அடிக்கடி நமக்கு எத்தனை லைக் மற்றும் கமண்ட் வந்திருக்கிறது என்று எட்டி பார்ப்பது தான். அப்படி அடிக்கடி பார்ப்பது நமக்கே பிடிக்காது. ஆனாலும் அப்படி செய்வதை தடுக்க முடியாது. பதிவு போட்டு விட்டு  - கணினியில் அமராமல் வேறு வேலையை பார்க்கும் ஆசாமி என்றால் லைக் மற்றும் கமண்ட்டுக்கு எட்டி பார்க்கும் பிரச்சனை இல்லை. நாமோ கணினியிலேயே அமரும் ஆட்கள். எட்டி பார்க்க தான் தோன்றும். கூடவே இப்படி பார்க்கிறோமே என்ற குற்ற உணர்வும் தலை தூக்கும்

*************
நூறு பேர் சொல்லும்போது - தினம் பதிவு எழுதுவது - முட்டாள் தனம் என்று தெரியாது - அதை நாமே உணர ஒரே ஒரு வழி தான்.

பல்லை கடித்து கொண்டு சில வாரங்களோ, சில மாதங்களோ பதிவு எழுதாமல் இருப்பது மட்டுமே - தினம் பதிவு எழுதுவது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று உணர ஒரே ஒரு வழி. இதற்கு குறைவான விலையில் இந்த தெளிவை அடைய முடியாது. முடியவே முடியாது !

இந்த காலத்தில் - நாம் தொடர்ந்து பதிவு எழுதிய போது செய்த முட்டாள் தனங்கள் - போட்ட அனாவசிய சண்டைகள் எல்லாம் வரிசை கட்டி மனதில் வந்து போகும்; பாராட்டு / அங்கீகாரம் என்கிற விஷயத்துக்காக எவ்வளவு கூத்தடித்துள்ளோம் என்று நம்மை நினைத்து நமக்கே சிரிப்பு வரும்

எனக்கும் இது நிகழ்ந்தது ;

*************
ஒரு நேரத்தில் " இனி இணையத்தில் புழங்குவதை குறைப்போம் " என முடிவெடுத்து - Dashboard -ல் 30 க்கும் மேல் பதிவுகள் இருக்க, எப்படியோ தினம் பதிவு போடுவதை நிறுத்தினேன்

சந்தேகமே இல்லை - தினம் பதிவு எழுதுவதும், அதன் விளைவாய் -  இணையமே கதியாய் கிடப்பதும்  ஒரு போதை தான்.

இணையம் மூலம் நல்ல நட்புகள்  கிடைக்கின்றன. உண்மை. ஆனால் ஒரு அளவுக்கு மேல் - நம் குடும்பத்தாரை விட - இணைய மக்களே நம்மை அதிகம் புரிந்து கொள்கிறார்கள் - பாராட்டுகிறார்கள் என்று நம் மனது நினைக்க ஆரம்பிக்கும் அபாயமும் இருக்கிறது

*************
சிகரெட் பழக்கத்தை நிறுத்தும் சிலர் - அதை நிறுத்தும் போது பாக்கு போடும் பழக்கத்தை துவங்குவர்; அப்படித்தான் சிலர் ப்ளாக் எழுதுவதை நிறுத்தி விட்டு கையோடு கையாக - முகநூல் அல்லது கூகிள் பிளஸ்சில் சென்று ஐக்கியமாகி விடுகிறார்கள்

இதுவும் நான்  செய்தேன்

பின் அதுவும் குறைந்தது

*************
இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். தொடர்ந்து பதிவு எழுதிய காலத்திலும் எனது அலுவலக வேலையில் எந்த சிறு  குறையும் வைத்தது இல்லை. ஒன்று சொல்லட்டுமா ? அந்த இரு வருடங்களும் -Annual appraisal -ல் அதிக இன்க்ரீமென்ட் வாங்கிய வெகு சிலரில் நானும் ஒருவன்...

*************
பதிவு எழுதிய கடந்த சில வருடங்களில் ஓய்வு நேரம் முழுக்க என்ன பதிவு எழுதுவது என்று யோசித்தது போக - இப்போது அதே நேரத்தை - பாடல் கேட்கவும், எனது துறை சார்ந்து படிக்கவும், எழுதவும், எதிர் கால திட்டமிடல் மற்றும் அது சார்ந்த உழைப்புக்கும் செலவழிக்கிறேன்.

ப்ளாகில் எழுதவே மாட்டேன் என்றில்லை. அது பாட்டுக்கு ஓரமாய் இருக்கட்டும். வேண்டும்போது எழுதலாம் அவ்வளவே ; ப்ளாகின் பெரிய பிளஸ் வேண்டிய போது எழுதலாம் என்பதே. என்ன ஒன்று தினம் பதிவு போட்ட போது அதிக பட்சமாக 3000 - 3500 பேர் தினம்  வந்தனர். எப்போதேனும் ஒரு நாள் பதிவு எழுதினால் 1000- 2000 பேர் மட்டும் படிப்பர் ; இருந்து விட்டு போகட்டும் !

சுபம் !

Thursday, November 14, 2013

சச்சின் அசத்திய 5 டெஸ்ட் இன்னிங்சுகள்

வாழ்க்கை எத்தகைய மாறுதல்களை எல்லாம் தந்து விடுகிறது !↑

சச்சினின் ரசிகனாக இருந்தது ஒரு காலம். கடைசி சில வருடங்களில் " போதும் ; கெளம்பு ; காத்து வரட்டும் " என்று சொன்ன மனிதர்களில் ஒருவனாக மாறிப்போனேன்.

ஆனால் - இன்றைக்கு நிஜமாகவே சச்சின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை அறிந்தால் ஏனோ இனம் புரியாத சோகம் மனதை சூழ்கிறது

இனி அந்த ஸ்ட்ரைட் டிரைவ் பார்க்கவே முடியாதா ?

எப்போதேனும் பந்து வீச வரும்போது சட்டையை மடித்து கொண்டு சின்ன பையனின் குதூகலத்துடன் ஓடி வரும் அந்த சிரிப்பு .....

பீல்டிங்கில் நின்று கொண்டு அவர் செய்யும் சின்ன சின்ன குறும்பு தனங்கள்

இப்படி டிவி யில் பார்த்த நாமே நிறைய மிஸ் செய்ய போகிறோம் என்றால் - உடன் இருந்த - அவரை பல விதங்களிலும் குருவாக மதித்த Team Players  நிறையவே மிஸ் செய்வார்கள் !

சச்சினை Good கிரிக்கெட்டர் என்பதை விட ஒரு சிறந்த மனிதனாக - ஒரு Idol  ஆக நினைக்கும் பலரில் நானும் ஒருவன் !

எவ்வளவு உயரம் போனாலும் எளிமை; பெண்கள் போன்ற விஷயங்களில் சிக்காத  தன்மை ; தன் மீது சிறு கருப்பு புள்ளி கூட இல்லாத படி மிக ஜெண்டில் ஆக நடந்து கொண்ட விதம் ; மனைவிக்கும் குடும்பத்துக்கும் தரும் முக்கியத்துவம் இப்படி எத்தனையோ சொல்லலாம் !

சச்சின் இந்த மேட்சில் ஒரு செஞ்சுரி அடிப்பார் என்பது பலரை போல எனது எதிர்பார்ப்பும்....

சச்சினின் இறுதி டெஸ்ட் துவங்கும் இந்த நேரத்தில் அவரது சிறந்த 5 இன்னிங்க்ஸ் கள் - ஒரு மீள் பதிவாக...

*******
சச்சினின் ஐந்து சிறந்த டெஸ்ட் ஆட்டங்கள் இதோ:
 
இங்கிலாந்துக்கு எதிராக முதல் செஞ்சுரி : 1990 : சச்சின் 119 ரன்கள் Not out

முதலாவது செஞ்சுரி என்பது மறக்க முடியாத ஒன்று.. முதல் காதலை போல !




தன் பதினேழாவது வயதில் சச்சின் தன் முதல் செஞ்சுரி அடித்தார். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மிக மோசமான பிட்சில் இந்தியா தோற்காமல் மேட்சை காக்க வேண்டிய நிலையில் அவரது இந்த ஆட்டம் அமைந்தது. அதற்கு முன் நியூசிலாந்தில் 88 ரன் எடுத்து அவுட் ஆனார். அந்த மேட்ச் தான் சச்சின் என்கிற சிறுவன் செஞ்சுரி அடிப்பானா என அனைவரையும் ஆர்வத்துடன் பார்க்க வைத்தது.



அடுத்த சில மாதங்களில் இந்த மேட்ச். பிரேசர், மால்கம், கிரிஸ் லூயிஸ் போன்ற வேக பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சச்சின் அடித்த முதல் செஞ்சுரி நமக்கு மட்டுமல்ல அவருக்கும் மறக்க முடியாத ஒன்று !


இந்தியா Vs ஆஸ்திரேலியா பெர்த் மைதானம், 1991,  சச்சின் 114  ரன்கள்

பதினெட்டு வயது சிறுவனாக சச்சின். இந்தியா ஆஸ்திரேலியா உடன் மிக வேகமான மைதானம் என்று சொல்லப்படுகிற பெர்த்தில் ஆடியது. ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவின் வேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க, மறு முனையில் சச்சின் மட்டும் 114 ரன்கள் எடுத்தார். இந்தியா எடுத்த மொத்த ஸ்கோர் 240 மட்டுமே ! இந்த மேட்ச் வர்ணனையாளர்கள் "இப்படி ஒரு ஆட்டத்தை கடைசியாக யார் ஆடி எப்போது பார்த்தோம் என நினைவில்லை" என வியந்தார்கள். பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து டெஸ்டில் மிக அதிக ரன்கள் சேர்த்த அலான் பார்டரை பார்த்து மெர்வ் ஹியூக்ஸ் இப்படி சொன்னாராம்: "இந்த சின்ன பையன் நீ எடுத்த ரன்களை மிஞ்ச போகிறான் பாருங்கள் " A champion was in the making !

It can be watched here:

http://www.youtube.com/watch?v=1Aj6EINaDXc

பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை டெஸ்ட் செஞ்சுரி 1998 (சச்சின் 136 ரன்கள் )

கடினமான சூழலில், அற்புதமான பந்து வீச்சை தனி ஆளாக நின்று ஆடி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற மேட்ச் இது. இந்த மேட்ச் நான் சில நாட்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நேரிலும் பார்த்து, இந்தியா தோற்ற போது மனம் நொந்து போனேன். முதல் இன்னிங்க்சில் சச்சின் 0-க்கு அவுட். இந்தியா ரெண்டாவது இன்னிங்க்சில் 271 ரன் அடுத்தால் வெற்றி என்கிற இலக்கு. இம்ரான், சக்குலைன் முஷ்டாக் ஆகியோர் மிக அற்புதமாக பந்து வீசி கொண்டிருந்தனர். ஒரு புறம் விக்கட்டுகள் சரிந்து விட, நயன் மோங்கியாவை வைத்து கொண்டு சச்சின் 250 ரன் வரை வந்து விட்டார். முதுகு பிடிப்பு வந்து விட, சச்சினால் ஆடவே முடிய வில்லை. வேறு வழியின்றி அனைத்து பந்துகளையும் அடித்து ஆடி அவுட் ஆகி விட்டார். அதன் பின் இருபது ரன் எடுக்க முடியாமல் மீதம் நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தன. அன்று மேட்ச் முடிந்த போது அழுதவாறே இருந்த சச்சினுக்கு இந்திய வீரர்கள் யாருமே ஆறுதல் சொல்ல அருகில் கூட போக வில்லையாம் ! பயம் !!



காமெண்டரி தந்து கொண்டிருந்த கவாஸ்கர் டிவியில் கோபமாய் பேசியது இன்னும் நினைவிருக்கிறது : " Don't trust others and leave the result to them. You have to be there till the end to win the match for India !!"

சோகமான மலையாள படங்கள் போல இந்த மேட்சின் முடிவு வருத்தமானாலும், கடைசி நாள் பிட்சில் தனி ஆளாக சச்சின் ஆட்டம் மறக்க முடியாத ஒன்று !

இந்தியா vs  ஆஸ்திரேலியா சென்னை சேப்பாக்கம் 1998: சச்சின் 155 ரன்கள் :

முதல் இன்னிங்க்சில் சச்சின், வார்னே பந்தில் நான்கு ரன்னுக்கு அவுட் ஆகி விட்டார். இந்தியா ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்க்சில் 70 ரன்கள் குறைவாக எடுத்தது. இதனால் இரண்டாவது இன்னிங்க்சில் இந்தியா வேகமாகவும் அதிகமாகவும் ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலை.



சச்சின் Vs ஷேன் வார்ன். ஸ்பின்னுக்கு பெயர் போன சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம். சச்சின் வார்னேயை உரித்து எடுத்து விட்டார். லெக் ஸ்டம்புக்கு வெளியே தூக்கி வீச, வீச, அவற்றை இறங்கி இறங்கி நான்கும் ஆறுமாக அடித்தார். வார்னே மிரண்டு போனார். அந்த சீரீஸ் முடிந்த போது சச்சினிடம் ஆட்டோ கிராப் வாங்கினார் வார்னே !

இந்தியா vs  இங்கிலாந்து  சென்னை சேப்பாக்கம் 2008: சச்சின் 103 ரன்கள் Not out :

சச்சின் இரண்டாவது இன்னிங்க்சில் செஞ்சுரி அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்ததில்லை என்று ஒரு சாரார் கூறி கொண்டிருந்தனர். இதற்கு பதில் தருமாறு அமைந்தது சச்சின் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஆட்டம். நான்காவது இன்னிங்க்சில் இந்தியா 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்ய பட்டது. ஷேவாக் வழக்கம் போல் ஒரு விளாசு விளாசிட்டு போயிட்டார். அடுத்த சில விக்கெட்டுகள் விழுந்து விட்டன. யுவராஜ் வரும் போது இந்தியா மோசமான நிலைமையில் இருந்தது. ஆனால் சச்சினும் யுவராஜும் பின் விக்கெட் இழக்காமல் கடைசி வரை ஆடி இந்தியாவை ஜெயிக்க வைத்தனர். வின்னிங் ஷாட் சச்சினின் செஞ்சுரி ஆக அமைந்தது.



வார நாளில் மேட்ச் நடந்ததால் அப்போது எங்கள் அலுவலகம் இருந்த காம்ப்ளக்ஸ்சில் உள்ள ஒரு கடையில் நூற்று கணக்கானோர் மேட்ச் பார்த்து கொண்டிருந்தோம். சச்சின் வின்னிங் ஷாட் and செஞ்சுரி அடித்ததும் எழுந்த சத்தம் ! அப்பப்பா ! அனைவரும் தாங்கள் செஞ்சுரி அடித்தது போல் மகிழ்ந்தனர். மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதலுக்கு பின் நடந்த மேட்ச் இது. சச்சின் இந்த ஆட்டம் வருத்தத்தில் உள்ள மும்பை மக்களுக்கு சற்று மன மாற்றம் தந்தால், அது தான் சிறந்த பரிசு என சொன்னார் . அது தான் சச்சின் !!
*********

சென்ற பதிவு: சச்சினின் சிறந்த ஐந்து ஒரு நாள் ஆட்டங்கள்

Friday, November 8, 2013

வானவில் -ஆல் இன் ஆல் அழகுராஜாவும் - ஸ்ரீ திவ்யாவும்

முன் குறிப்பு: இங்கு எழுதப்படும்  சில தகவல்கள் ஏற்கனவே முகநூலில் பகிரப்பட்டவை

வாக்கிங் அனுபவம் - 1


கடந்த 3 வாரங்களாக ஹவுஸ் பாசும் நானும் காலையில் வாக்கிங் செல்கிறோம். அவரவர் அலுவலகக் கதைகள், இரு குடும்ப அக்கப்போர்கள் என பலவும் பேசிக்கொண்டு 45 நிமிடம் ஒன்றாக நடப்பது செம ஜாலியாக உள்ளது.

எனக்கு ஏராள நண்பர்கள் உண்டு; எனினும் First & best friend எப்பவும் மனைவி தான் ! ஒரு மனிதனுக்கு மனைவி மிகச் சிறந்த தோழியாய் இருந்தால் மட்டும் போதும்..... வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையையும் எளிதில் சமாளிக்கலாம் ! சமாளிக்கிறோம்

இருவராக வாக்கிங் செல்வதில் உள்ள சௌகரியம் ஒருவர் சோம்பேறித்தனமாய் இருந்தாலும் - மற்றவர் " ம் கிளம்பு " என இழுத்துக் கொண்டு கிளம்பி விடுவது தான்.. தனி நபர் எனில் தினமும் விடாமல் வாக்கிங் செல்ல ஏராள செல்ப் மோடிவேஷன் வேண்டும் !

இன்றைய வாக்கிங்கில் இரண்டு விபத்துகளை கண்டோம். ஒன்று மிக பெரிது. ஏறக்குறைய உயிர் போக வேண்டிய நிலை. இரண்டிலுமே பார்த்து விட்டு அப்படியே கடந்து போக முடியவில்லை ...

முதலில் உதவ சென்றது நான் என்றாலும் அடுத்து வந்த ஹவுஸ் பாஸ் நமக்கு மேலே பிரச்சனையில் இன்வால்வ் ஆகிட்டார்

"சினிமாவில் வர்ற விசு மாதிரி சோசியல் செர்வீசில் இறங்கிட்டோம். வீட்டுக்கு போவோம் - பொண்ணு ஸ்கூலுக்கு போகணும்" என இழுத்து கொண்டு வர வேண்டியதாய் போயிற்று

அந்த விபத்து

விபத்தில் என்ன நடந்தது என முகநூலில் விரிவாய் எழுதவில்லை இங்கு எழுதிவிடலாம்.

200 அடி சாலைக்கு நடுவே இருக்கும் டிவைடரை அவசரமாய் தாண்டி குதித்து கடந்தார் ஒரு இளைஞர். மிக வேகமாய் பைக்கில் வந்த இன்னொரு இளைஞர் இவர் க்ராஸ் செய்வதை எதிர்பார்க்கவே இல்லை. பைக் நேராக அவர் மீது மோத, இருவரும் சாலையில் உருண்டனர். பைக்குடன் சேர்த்து இருவரும் சாலையில் தேய்த்து கொண்டு போயினர். நானும் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்த இடத்திற்கு மிக மிக அருகில் எங்கள் கண் முன் இது நடந்தது.

அடுத்த நொடி பைக் ஓட்டி முகமெல்லாம் ரத்தமாக எழுந்து நின்றார். சாலையை கடந்த இளைஞர் பிரக்ஞை இன்றி விழுந்து கிடந்தார்

எங்கிருந்தோ நான்கைந்து பேர் வந்து இருவரையும் சாலை ஓரம் தூக்கி வந்தனர் ( மிக அதிக வாகனங்கள் வேகமாய் செல்லும் 200 அடி சாலை அது)

க்ராஸ் செய்தவர் மீது தான் முக்கிய தவறு எனினும் எல்லோரும் அவரையே பார்த்தோம். காரணம் - அவர் பேச்சு மூச்சின்றி இருந்தார். இதய துடிப்பு இருக்கிறதா என பார்த்து, முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சற்று உலுக்கிய பின் லேசாக அசைந்தார். சில நிமிடங்கள் கழித்து விழித்து பார்த்து மெதுவாக நடந்து சில அடிகள் நடந்து பின் அமர்ந்தார்

பைக் ஓட்டி - ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பினார் ! இல்லா விடில் அவர் வந்து விழுந்த வேகத்துக்கு மண்டை பிளந்திருக்கும். உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. இரண்டு பற்கள் உடைந்து விட்டது. அவரை ஒரு ஆட்டோ பிடித்து காமாட்சி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தோம்

சாலையை க்ராஸ் செய்தவர் - வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தொழிலாளி. அவரால் காமாட்சி மருத்துவமனை போன்ற இடத்தில் மருத்துவம் பார்க்க முடியாது. ஏதேனும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் தான் உண்டு. அருகில் தான் குடியிருப்பார் போலும். அவருடன் வசிக்கும் நண்பர்கள் வந்து அவரை கூட்டி சென்றனர்

ஒவ்வொரு சாலை விபத்திலும் - அநேகமாய் இளைஞர்கள் தான் உதவுவதை காண முடிகிறது.

என்னை போன்ற 40 வயது ஆசாமிகள் - 30 - 40 கிலோ மீட்டர் ஸ்பீடில் பைக்கில் செல்வோம். பலரும் சிரிப்பார்கள். ஆனால் எதையோ யோசித்து கொண்டே வண்டி ஓட்டும் எம்மை போன்றோருக்கு இப்படி மெதுவாக வண்டி ஓட்டுவதால் விபத்துகள் நடப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு.

அழகு கார்னர் 

படத்திலுள்ள அம்மணியை அடையாளம் தெரிகிறதா? வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா !


இவரை ஏன் பிடிக்கிறது - எதற்கு பிடிக்கிறது என்று சொல்ல தெரியலை....ஆனால் ரொம்பவே பிடிக்கிறது.

தமிழில் அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்று தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !

ரீ யூனியன்

நேற்று இன்று நாளை - மூன்று நாளும் சென்னை ITC க்ராண்ட் சோழா ஹோட்டலில் கம்பனி செகரட்டரி இன்ஸ்டிடியூட்டின் வருடாந்திர மாநாடு நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் நடக்கும் இவ்விழா 8 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இம்முறை நடக்கிறது 

போனிலும் மெயிலிலும் மட்டுமே பேசிய - ஏராள நண்பர்களை இந்த 3 நாட்களில் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ...கூடவே ஒவ்வொரு மாதமும் சந்திக்கும் சென்னை நண்பர்கள் குழு வேறு.. காலேஜ் ரீ யூனியன் போல செம செம ஜாலியாக உள்ளது. 

ஹோட்டல் பற்றி முடிந்தால் சுருக்கமாய் பின்னர் எழுதுகிறேன் 

பார்த்த படம் - அழகு ராஜா

"பார்த்த படம்" எனபதற்கு பதில் ஒரு மணி நேரம் (மட்டும் ) பார்த்த படம் என எழுதியிருக்கணும் !

கொடுமை ! இதற்கு மேல் வேறு எந்த வார்த்தையும் சொல்ல தோணலை ! ஓகே ஓகே போன்ற படங்களை இயக்கிய ராஜேஷா இப்படி ஒரு மொக்கை போட்டது ? பெரும்பாலான நேரம் சிரிப்பே வரலை . கார்த்தி தொடர் வெற்றிக்கு பின் தொடர் தோல்வியாக தந்து கொண்டிருக்கிறார் :(

போஸ்டர் கார்னர்
முகநூலில் நண்பரால் பகிரப்பட்ட இந்த போட்டோ வேறு பல சிந்தனைகளை என்னுள் விளைவித்தது ←

42 வருட வாழ்வில் "பணம் வாழ்வின் 80 % பிரச்சனைகளை சரிய செய்ய வல்லது என்று உணர்ந்துள்ளேன் (பணம் இருந்து அதை செலவு செய்ய- நீங்கள் தயாராகவும் இருக்க வேண்டும் ! இது முக்கியம் !)

ஆனால் பணத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் ஏராளம் உண்டு.←

அவற்றில் பலவற்றை கூட அன்பு, முயற்சி, பொறுமை - அனைத்துக்கும் மேலாக நேரம் போன்றவை சரி செய்யும் என்று நினைக்கிறேன் 


அய்யாசாமி தத்துவம்

ஒரு மனிதன் வளரத்துவங்கும் போது அவன் மீது கற்கள் வீசப்பட்டே தீரும். அந்த கற்களில் சில நட்பின்/ உரிமையின் பாற்பட்டு; சில பொறாமையில்; இன்னும் சில சென்ற சண்டையின் சொச்ச மிச்சம் .

இப்படி வீசப்படும் கற்களை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது நபருக்கு நபர் மாறுபடும்.

வீசப்படும் கற்களுக்கு மௌனமே சிறந்த பதில் என்று மிகத் தாமதமாய் உணர்ந்துள்ளேன்; இந்த தெளிவாவது தொடர்ந்து நீடிக்கட்டும்

ஆமென் !
Related Posts Plugin for WordPress, Blogger...