Saturday, June 30, 2012

இப்படியும் ஒரு தாய்

வேப்ப மரத்தின் கீழே அந்த குழந்தை கிடந்தது. பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை.. தொப்புள் கொடி நறுக்கப்பட்டு, ஒரு துணியில் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது.

வாசல் பெருக்க வந்த வனஜா குழந்தை சத்தத்தை கேட்டாள். முதலில் யார் வீட்டிலோ கத்துகிறது என்று தான் நினைத்தாள். வேப்ப மரம் அவள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம் தான். சற்று நேரத்தில் வேப்ப மரத்தடியில் நின்ற நாயும் அதன் அருகில் தான் குழந்தை சத்தமும் வருகிறது என தெரிந்தது.
நடந்து சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

குழந்தை வயிற்றில் இருந்து வடியும் ரத்தத்தை நாய் நாக்கால் சாப்பிட்டு கொண்டிருந்தது. நாயை முதலில் விரட்டினாள்.

அந்த குரூரத்தை உணர்ந்த அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது

" ஐய்யய்யோ ! பச்சை குழந்தை ! யாரு போட்டது "

குழந்தையை வீட்டுக்கு எடுத்து போகவும் மனசில்லை. அங்கேயே போட்டு போனாலும் நாய் மறுபடி வருமே என பயம். " என்னங்க என்னங்க" என தன் கணவனை கூவி அழைத்தாள்.

வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்தவன் எழுந்து வரவில்லை.

பக்கத்து வீட்டு சண்முகம் எட்டி பார்த்தார். " என்னம்மா?"

" பிறந்த பச்சை குழந்தையை யாரோ கொண்டு வந்து போட்டுருக்காங்க; நாய் வந்து இங்கே நிக்குது"

வயதான சண்முகம் பதறி போய் ஓடி வந்தார். குழந்தை முகத்தில் ஆங்காங்கு கீறல்கள். நாயின் வேலையாய் இருக்கணும்

" என்ன பாக்குறே ? தூக்கு குழந்தையை " என்றார்.

" தூக்கிட்டு போய் எங்கே வைக்கிறது? "

" உன் வீட்டுல வை; யார் என்னன்னு விசாரிப்போம்"

" என் வீட்டு காரர் என்ன சொல்வாரோ? "

" நான் பேசிக்கிறேன் தூக்கிட்டு போ "

சற்று தயங்கிய படி தூக்கினாள். குழந்தை வீரிட்டு அழுதது. உள்ளே தூக்கி வந்தவள், தன் கணவனை எழுப்பினாள்.

" என்னடி இவ்ளோ சீக்கிரம் எழுப்புறே " என்று எழுந்தவனுக்கு வீட்டினுள் ஒரு குழந்தையை பார்த்ததும் ஒன்றும் புரிய வில்லை.

வனஜா அனைத்தையும் சொன்னாள். " சண்முகம் சார் தான் இங்கே வச்சிருக்க சொல்லிருக்கார்; இப்போ வந்துடுவார்"

வனஜா நினைத்த மாதிரி அவள் கணவன் கோபிக்க வில்லை. "யார் பிள்ளையா இருக்கும்? யாராவது வேண்டாதவங்க எடுத்து கொண்டு வந்து போட்டிருப்பாங்களா " என்றான்.

" தெருவில என்ன நடக்குதுன்னே உங்களுக்கு தெரியாது. எல்லாம் அந்த மூணாவது வீட்டுக்காரி தான் "

" யாரு? சரசா?"

" ஆமா "

" என்னாடி சொல்றே"


" பக்கத்து வீட்டு அக்கா கூட சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அவள் வயிறு பெருசா இருக்குன்னு. இதுக்குன்னே எப்பவும் வயிறை மறைக்கிற மாதிரி பெரிய துணியா போட்டுக்கிட்டு இருந்தா. வெளியிலேயே அதிகம் வர்றதில்லை. கமுக்கமா இருந்து பிள்ளை பெத்திருக்கா "

" வீட்டுலேயேவா பிள்ளை பெத்திருப்பாங்க ?"

" ஆமா. எல்லாம் அவள் அம்மா காரி கூட இருக்கால்ல. அவ தான் நைட்டோட நைட்டா பிரசவம் பாத்து காலையில் பிள்ளையை கொண்டு வந்து மரத்தடியில் போட்டுருக்காளுவ"

" அவள் புருஷன் வந்து போயிக்கிட்டா இருக்கான்? "

" எங்கே வந்தான்? அவன் எந்த ஊரில இருக்கானே தெரியலை. சண்டை போட்டுக்கிட்டு போயி மூணு வருஷம் ஆவுது. "

"அப்ப ? சே ! என்ன அசிங்கமோ?"

" அதான் விஷயம். புருஷன் கூட இல்லாம புள்ளை பெத்திருக்கா இல்ல. அதான் நைசா கொண்டு வந்து போட்டுட்டாங்க "

" இப்படி கூடவா இருப்பாங்க. நாய் கடிச்சு பிள்ளை செத்திருந்தா என்ன ஆவறது?"

" சனியன் பிடிச்சதுங்க. உருப்படவே மாட்டாளுங்க"

வனஜா மீண்டும் வெளியே வந்தாள். தெருவில் ஆங்காங்கு கூடி நின்று பேச ஆரம்பித்தார்கள். வனஜா வெளியே வந்ததும் அவளை நெருங்கி விபரம் கேட்டனர்.

" ஆமா. நான் பாத்தப்போ நாய் கவ்விட்டு இருந்துச்சு....."

அதே கதை. அலுக்காமல் சொன்னாள்.

சண்முகம் நான்கைந்து வீடுகளுக்கு சென்று பேசி விட்டு சோர்வாய் வந்தார். " யார் செஞ்சிருப்பாங்கன்னே தெரியலையே"

" சரசு வீட்டுலே கேட்டீங்களா? "என்றாள் வனஜா.

" எப்புடி கேக்குறது? கூட அவ புருஷன் இல்லையே? உங்க வீட்டு பிள்ளையான்னு அங்கே போய் கேட்க முடியுமா?"

பக்கத்த்து வீட்டு ரமணி நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி திட்ட ஆரம்பித்தாள்.

படம்: நன்றி : இணையம் 
" கழிசல்ல போறவ.. எந்த சிறுக்கி இந்த வேலை பண்ணிருக்கா. நாய் வந்து கடிச்சிருக்கு. அப்படியே போட்டுருக்காளே. இவள்லாம் ஒரு அம்மாகாரியா?"

பல வீடுகளிலிருந்தும் ஆட்கள் வெளியே வந்து விட்டனர். சரசு வீட்டில் மட்டுமே யாரும் வெளியே வர வில்லை.

பலருக்கும் சரசு மீது தான் சந்தேகம்.

" எம் பொண்ணுக்கு வயித்துல கட்டி. ஆபரேஷன் செய்யணும்னு சொன்னுச்சு அந்தம்மா. ரெண்டு பேருமா சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்காளுங்க பாரு "

ஆள் ஆளுக்கு ஜாடை மாடையாய் சரசுவையும் அவள் அம்மாவையும் திட்ட தொடங்கினர்.

“ என்ன தான் பண்றது இப்போ?"

" போலிசுக்கு சொல்ல வேண்டியது தான்; அவங்க வந்து விசாரிக்கட்டும்"

உள்ளூர் காவல் நிலையத்துக்கு போன் செய்தார் சண்முகம். அரை மணியில் போலிஸ் ஜீப் வந்து சேர்ந்தது.

" யாரும்மா பார்த்தது? " விசாரணை ஆரம்பமானது.

" தெருவில யாரும் மாசமா இருந்தாங்களா?"

"............"

யாரும் பதில் சொல்ல வில்லை.

" என்ன யாரும் பதில் சொல்லலை"

" எங்களுக்கு தெரிஞ்சு யாரும் நிறை மாசம் இல்லீங்க "

"அப்ப வேறு ஏரியாவில இருந்து இங்கே கொண்டு வந்து போட்டிருக்கணும்"

" அப்படிங்களா?"

சரசு பற்றி ஏனோ யாருமே மூச்சு விட வில்லை. போலீசிடம் மாட்டி விட்டால், சண்டைக்காரியான அவள் அம்மா எல்லாரிடமும் சண்டை போடுவாள் என்கிற பயமா.. அல்லது வேறு என்ன காரணமோ?

" எங்க கூட ஸ்டேஷனுக்கு வந்து கம்பிலயின்ட் எழுதி குடுத்துட்டு வாங்க. ஏம்மா. நீதானே முதல்ல பார்த்தே. நீ வா.."

சண்முகம் , வனஜா, அவள் கணவன் குழந்தையுடன் போலிஸ் ஜீப்பில் ஏறினர்.

" சார் குழந்தையை என்ன பண்ணுவீங்க?"

" அநாதை குழந்தைங்க இல்லம் இருக்கு. அங்கே தான் விடணும்; அம்மா காரி மனசு மாறி வந்து வாங்கி கிட்டா உண்டு. முதல்ல நாய் கடிச்சதுக்கு டாக்டர் கிட்டே காட்டணும் "

போலிஸ் வண்டி புழுதியை கிளப்பி கொண்டு விரைந்தது.


வண்டி சென்று பத்து நிமிடம் கழித்து சரசு வீடு திறந்தது. வெளியே வந்தது சரசுவே தான். தெருவில் நின்று பேசி கொண்டிருந்தவர்கள் பார்வை, நைட்டி அணிந்த அவள் வயிறு மீதே இருந்தது.

அவர்கள் பார்வையை முற்றிலும் புறக்கணித்த சரசு அருகிலுள்ள கடைக்கு சென்று " ஒரு பாக்கெட் பிஸ்கட் குடுங்க" என்றாள்.

*********



NEWS ITEM IN TODAYS TIMES OF INDIA

*********
Newborn Baby rescued from roadside

CHENNAI: Police rescued a newborn baby found abandoned on the roadside in Pallikaranai on Friday morning. 

Pallikaranai police handed over the baby boy to a children's home in Tambaram. At 6am on Friday, passersby heard a baby's cry and found the child wrapped in a towel on the roadside. 

Police said the baby was given first aid at a private hospital and later shifted to the children's hospital in Egmore where the child was kept under observation for a couple of hours. The infant was found with a part of his umbilical cord intact. Investigation is on to find whether a single mother abandoned the baby. Police are also checking records of hospitals to know about the deliveries in the past few days to trace the parents, a police officer said. 

Nobody has come forward claimed the baby so far. 
**************


Friday, June 29, 2012

டில்லி:அற்புத அக்-ஷர்தாம் கோயிலும் நேரு இல்லமும்



 ந்திரா காந்தி இல்லம் பார்த்து முடித்ததும் நாங்கள் அதன் அருகில் உள்ள நேரு இல்லம் சென்றோம். நேரு இல்லம் மிக பெரியது. உள்ளே நுழைந்ததும் பிளானட்டரியம் உள்ளது. நாம் சென்னை கோட்டூர் புரத்திலேயே ஒரு பிளானட்டரியம் பார்த்ததால் செல்ல வில்லை.

நிறைய பள்ளி குழந்தைகள் பிளானட்டரியம் வந்து அதன் நிகழ்சிகளை பார்த்தனர். டில்லி பள்ளி பசங்க செம சுறுசுறுப்பு. ஒரு நிமிடம் சும்மாயிரமால் அங்கும் இங்கும் ஓடுறாங்க; டீச்சர்ஸ் பற்றி இவர்களுக்கு சிறிதும் பயமில்லை


ப்ளனாடோரியத்தில் துறுதுறு  டில்லி குழந்தைகள்
 ஒரு இடத்தில் நேரு, இந்திரா மற்றும் ராஜீவ் மூவரின் நினைவாக ஜோதி எரிகிறது.

3 பிரதமர்கள் நினைவாய் எரியும் ஜோதி
ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலை முறையை சேர்ந்தவர்கள் வேறு யாரும் பிரதமராக வர வர வாய்ப்பு இல்லை (ராகுல் வந்தால் நான்காம் தலை முறையாகும் !) 

தன் தந்தை பற்றி நேரு சொல்லும் போது " என் அப்பா பகல் முழுதும் கோர்ட்டில் வாதிடுவார். மாலை பல நண்பர்கள் வீட்டுக்கு வருவர். அவர்களுடன் ஒயின் அருந்துவார். பின் எங்களுடன் சேர்ந்து டின்னர் சாப்பிட வருவார். தினம் இவை மூன்றும் நடக்கும்" என்கிறார். மோதிலால் நேருவும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் !
நேருவின் அறை
நேரு சிறையில் இருந்த போது இந்திராவிற்கு தானே ஒரு சேலை நெய்து தந்துள்ளார். இந்திரா தன் திருமணத்துக்கு அணிந்தது இந்த புடவை தான். 

சிப்பாய் கலகம், இந்தியன் நேஷனல் காங்கிரஸ் உதயம், பெங்கால் பிரிவினை, முஸ்லீம் லீக் உதயம் என முக்கிய நிகழ்சிகள் அனைத்தும் குறித்து புகை படங்களும் வரலாறும் உண்டு.
நேரு உயிர் பிரிந்த அறை/ படுக்கை

இங்கு உள்ள கடையில் நிறைய பொது அறிவு புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது, மேலும் நேரு படம் போட்ட டீ ஷர்ட்டுகள் கிடைக்கின்றன!

                 

நிறைய செடிகள், மரங்கள் உண்டு. அதென்னவோ இங்கு மட்டுமல்ல டில்லி முழுதுமே செடி கோடிகளுக்கு கீழே உள்ள மண், களிமண் போல் உள்ளது. விசாரித்ததில் மண் இயல்பே அப்படி தான் என்றனர்.

நேரு இல்லத்தில் இப்போது ஒரு லைப்ரரி இயங்குகிறது. ஆனால் லைப்ரரி உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக படுகின்றனர்.
******************
அக் ஷர்தாம் கோயில்

டில்லியில் நாம் அடுத்து பார்க்க இருப்பது அக்-ஷர்தாம் கோயில் !


ந்த கோயிலின் உள்ளே காமிரா மட்டுமல்ல மொபைல் கூட அனுமதி இல்லை. இவ்வளவு ஏன் நமது பெல்ட் கூட கழற்ற சொல்லி அதனை செக் செய்கிறார்கள். சாமி சந்நிதியில் கூட்டமில்லை. மிக எளிதாய் சுற்றி வரலாம். ஆனால் கோயில் உள்ளே நுழையும் முன் பரிசோதனைக்கு தான் மிக அதிக நேரம் நிற்க வேண்டும் ( அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை !) இதே போல் குஜராத்திலிருக்கும் கோயிலில் தீவிரவாதிகள் அட்டாக் செய்ததால் இவ்வளவு சோதனை நடக்கிறது !

Central Doom: Photo: Wikipedia
முழுதும் மார்பிளால் ஆன கோயில் இது. ஆங்காங்கு இருக்கும் சிற்பங்கள் மிக நுணுக்கமான வேலை பாடுகள் கொண்டது. கோயிலை சுற்றிலும் யானை பொம்மைகள் மற்றும் நீரோடை உள்ளது.

மிக மிக அழகான புல்வெளி. பூ வடிவத்தில் புல்லை நறுக்கி வைத்துள்ளனர். என்னே கலை அழகு !

Crowd waiting to enter
ங்கு கோயிலுக்கு போகும் முன் ஒரு எக்சிபிஷன், படம் மற்றும் போட்டிங் உள்ளதாம். இதற்கு ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் வாங்குகிறார்கள். இவை மூன்றும் முடிக்க ஐந்து மணி நேரமாவது ஆகும் என்பதால் நாங்கள் அவற்றை ஸ்கிப் செய்தோம். ஆனால் அவை அவசியம் பார்க்க வேண்டியவை என்றும் மிஸ் செய்தீர்களா என விபரம் தெரிந்த அனைவரும் துக்கம் விசாரித்தனர்.

மேலே சொன்ன எக்சிபிஷன், படம் மற்றும் போட்டிங் இதற்கு தான் பணம் கட்டணும். கோயிலை மட்டும் சுற்றி பார்க்க பணமில்லை.

ள்ளேயே சாப்பிட நிறைய கடைகள் உள்ளன. ஐஸ் கிரீம், இதர ஸ்நாக்ஸ்கள் நிறைய கிடைக்கின்றன (மற்ற உணவுகள் உள்ளே அனுமதி இல்லை)

கோயிலை சுற்றி நடந்து வந்தால் செருப்புடன் கூட வரலாம். இதற்கு அனுமதி உண்டு . வெய்யில் நேரம் எனில் முதலில் செருப்புடன் சுற்றி வந்து விட்டு, செருப்பை போட்டு விட்டு பின் சன்னதிக்கு செல்லலாம். செருப்பை ஒரு துணி பைக்குள் போட்டு கட்டி வைக்கின்றனர்.
யில்களும் மாடு போன்ற ஒரு மிருகமும் நிறைய பொம்மை வடிவில் உள்ளது.

கோயிலின் உள்ளே நீங்கள் போட்டோ எடுக்க தனி ஆட்கள் உள்ளனர். 130 ரூபாய் தந்தால் கோபுரம் பின்னணியில் உங்களை போட்டோ எடுத்து தரிசனம் முடிந்து போவதற்குள் தந்து விடுவார்கள்

ன்னதி உள்ளே ராமர்- சீதா சிலை, கிருஷ்ணா- ருக்மணி சிலை, சிவன்- பார்வதி சிலை ஆகியவை உள்ளன. அனைத்தும் தங்க முலாம் பூசியவை.

சுவாமி நாராயண் என்பவர் தான் இந்த கோயிலின் முக்கிய காரணகர்த்தா. அவர் நினைவாக கட்டப்பட்டது தான் இக்கோயில். இவர் வாழ்ந்த காலம் 1781- 1830 வரை மட்டுமே. இவரது உடை, செருப்பு, கால் பதம் ஆகியவை பத்திரம் செய்து வைத்துள்ளனர்.

விவேகானந்தர் போல் இவருக்கு பெரிய சிலை உள்ளது. இது தான் முக்கிய சந்நிதி போல ! இந்த சிலையில் அவர் துண்டை தோளில் ஒரு புறமாய் போட்டு கொண்டு அதன் மறு முனை கையிலிருக்க, நின்ற வண்ணம் உள்ளார். சுற்றி நின்று அவரது சீடர்கள் மலர் தூவுகிற மாதிரி அமைத்துள்ளனர்

ன்னதி உள்ளே தண்ணீர் கூட அனுமதி இல்லை. தவறி போய் எடுத்து சென்று, நீங்கள் தண்ணீர் குடிப்பதை பார்த்தால் பாய்ந்து வந்து தடுக்கிறார்கள். மார்பில் தரையில் தண்ணீர் கொட்டி அதில் யாரும் வழுக்கி விழ கூடாது என்கிற காரணம் தான் !

வி.ஐ.பி களுக்கு கோவிலில் பணி புரிவோரே கைடு போல அழைத்து சென்று அனைத்து விளக்கமும் தருகிறார்கள். மற்றவர்களுக்கு கைடு அனுமதி இல்லை.

நிறைய தூண்கள் உள்ளன. அவற்றின் அருகே தரையில் சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட, அவை ஒளியை பீய்ச்சி அடித்து கோயிலை வண்ண மயமாக்குகின்றன.

டல் முடியாதவர்களுக்கும், வயதானோருக்கும் வீல் சேரில் சுற்றி பார்க்க அனுமதி உண்டு.

சுருக்கமாய் சொன்னால், இது கட்டிட அழகை , மார்பிளில் கட்டப்பட்ட இந்த "அதிசயத்தை" கண்டு ரசிக்கத்தான் மக்கள் பெரும் கூட்டமாக வருகிறார்கள். பக்தி என்பது மருந்துக்கும் காணும் !

Thursday, June 28, 2012

சென்னை அண்ணா மேம்பால பஸ் விபத்து:சில கேள்விகள்

சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து, ஒரு பேருந்து விபத்துக்குள்ளானது உங்கள் அனைவருக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும். இது குறித்த ஒரு பார்வை.

பகல் மூன்று மணி அளவில் அலுவலகத்தில் இந்த செய்தி கசிய துவங்கியது. " செம ஆக்சிடன்ட்டாம் ! நிறைய பேர் சீரியசாம். மவுன்ட் ரோடு முழுக்க டிராபிக் ஜாமாம்" என்று பேசி கொண்டனர். மவுன்ட் ரோடுக்கு அலுவலக வேலையாக   செல்ல வேண்டியவர்கள் கூட " நாளை போய் கொள்ளலாம்" என தள்ளி போட்டனர்

அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் விழுந்தது என்றதும் மிக அதிக உயரத்தில் இருந்து விழுந்ததாக முதலில் நினைத்தோம். ஆனால் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது குறிப்பிட்ட தூரம் கீழே வந்த பின், ஒரு திருப்பத்தில் சுவற்றை உடைத்து கொண்டு பஸ் விழுந்துள்ளது. மிக அதிக உயரத்திலிருந்து விழுந்தால் விபத்து இன்னும் பெரிதாய் இருந்திருக்கும்

விபத்துக்கான காரணம் இரண்டு விதமாய் சொல்கிறார்கள்

பேருந்து ஓட்டுனர் யூனியனில் " பேருந்து நல்ல கண்டிஷனில் இல்லை ;  இதனால் திருப்பத்தில் ஓட்டுனர் சீட் உடைந்து விட்டது, அதனால் பாலன்ஸ் தவறி சுவர் மீது மோதினார்" என்கிறார்கள்.

இது ஏற்று கொள்ளும் வாதமாய் இல்லை. காரணம் நேரில் பார்த்தவர்கள் சொல்வது வேறு விதமாய் உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று பேசியதில் சம்பவ இடத்தில் இருந்த பலரும் ஓட்டுனர் செல்போனில் பேசியதாக சொல்கிறார்கள்

பேருந்து கீழே விழுந்து, சில நிமிடங்களில் கண்ணாடியை உடைத்து அனைவரையும் வெளியே எடுத்த பலரும் - ஓட்டுனரை வெளியே இழுத்த போது கூட அவர் செல்போனை விடாமல் கெட்டியாய் பிடித்து கொண்டிருந்ததாக சொல்கிறார்கள்.

ஓட்டுனர் செல்போனில் பேசியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பதை நிச்சயம் கண்டுபிடிக்க முடியும்.

ஒன்று- அவர் செல்போன் எண்ணுக்கு விபத்து நடந்த அந்த நிமிடத்தில் தொலை பேசி வந்ததா, அவர் போனை எடுத்து பேசினாரா என சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் கேட்க முடியும். அவர்கள் தரும் தகவல் நிச்சயம் அவர் அந்த நேரத்தில் செல்போன் பேசினாரா என உறுதிபடுத்தும்.

இரண்டு- வண்டியின் முன் பக்கம் - ஓட்டுனருக்கு இடது புறம் அமர்ந்தவர்கள் ஓட்டுனர் செல்போனில் பேசியிருந்தால் நிச்சயம் கவனித்திருப்பார்கள். இவர்களிடம் விசாரித்தாலும் உண்மை தெரிய வந்து விடும்

பதிவரும், புதிய தலைமுறை நிருபருமான யுவகிருஷ்ணா இவ்வாறு கூறுகிறார்:


"நேற்று விபத்து நடந்த கொஞ்ச நேரத்தில் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன்.

அடி எதுவும் பெரியதாக படாமல் தப்பிய அன்பு என்பவர் மீடியாவிடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ட்ரைவர் சீட்டிலிருந்து மூன்று சீட்டுகள் பின்னாலிருந்தார். டிரைவர் தனது லெப்ட் ஹேண்டில் செல்போன் பிடித்தவாறே, ரைட் ஹேண்டில் ஸ்டியரிங்கை சுமார் 40 கி.மீ வேகத்தில் லெஃப்டுக்கு திருப்பியிருக்கிறார். அவரால் எதிர்ப்பார்த்த அளவுக்கு திருப்பமுடியவில்லை. சுவரில் பஸ் மோதிவிட்டது.

நாம் கூடுதல் வசதி என்று நினைக்கிற செல்ஃபோன் மிகப்பெரிய பிரச்னையாக போய்க் கொண்டிருக்கிறது :-( "

*************
இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு சாதாரண பயணியாக நாம் எதிர்பார்ப்பது இதை தான்:

அரசாங்கம்- ஓட்டுனர் செல்போன் பேசியபடி வண்டி ஓட்டினாரா என உறுதி படுத்த வேண்டும். அப்படி இருந்தால் ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் செல்போன் ஓட்டிய படி வண்டி ஓட்டும் டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்க வேண்டும். அவர்கள் லைசன்சும் சில ஆண்டுகளாவது முடக்க வேண்டும்.

யூனியன்கள்- உங்கள் ஒற்றுமை பாராட்ட தக்கது. ஆனால் குடித்து விட்டோ, செல்போன் பேசியபடியோ வண்டி ஓட்டும் இத்தகைய ஓட்டுனர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள். அந்த ஒரு நபரின் குடும்பத்தை காப்பாற்ற நீங்கள் பொய் பேசுகிறீர்கள். ஆனால் பெரும் விபத்து நடந்தால் எத்தனை குடும்பம் பாதிக்கப்படும்? இத்தகைய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் பிறருக்கு பயம் இருக்கும்

மீடியா- ஒவ்வொரு நாளும் பேருந்து விபத்து நடக்க தான் செய்கிறது. ஓரிருவர் இறக்கின்றனர். அதையெல்லாம் விட்டு விட்டு ஏன் இந்த விபத்துக்கு இவ்வளவு முக்கியத்துவமும், மக்களிடம் பயமும் கிளப்ப வேண்டும்? உண்மையில் ஒரு நபரை தவிர மற்ற யாருக்கும் பெரிய அடி கிடையாது என டாக்டர்கள் பேசுவது மூலம் தெரிகிறது. எதற்கு இத்தனை பரபரப்பை கிளப்புகிறீர்கள்? புகழ் பெற்ற சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்து என்பதால் தான் உங்கள் TRP ஐ அதிகமாக்க உழைக்கிறீர்கள். உங்கள் எழுச்சி மூலம் செல்போன் பேசிய படி வண்டி ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை வந்தால் மகிழ்ச்சி

இதை வாசிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?

நம் நாட்டில் பலரும் " யாரும் கேக்கலை .. கேட்டால் பாத்துக்கலாம்" என்று தான் தப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். தட்டி கேட்காத வரை தவறுகள் தொடரும்.

நீங்கள் செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் - அது பஸ்ஸோ, காரோ - டிரைவர் செல்போனில் பேசினால், "வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு பேசுங்கள்; ஓட்டி கொண்டே பேசாதீர்கள்" என அவசியம் சொல்லுங்கள். இதை செய்ய தவறினால் விபத்துக்கு நாமும் காரணமாகிறோம் என மறவாதீர்கள்.

Wednesday, June 27, 2012

வானவில் 94 -சூப்பர் சிங்கர், SPB, ஏஜன்ட் வினோத்

முக நூல் கிறுக்கல்கள்

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இந்த வாரம் அக்ரஹாரம் ஸ்பெஷல் ! பார்வையாளர்கள் ,நடுவர்கள், போட்டியாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்அனைவரும் மடிசார் / பிராமின் உடையில். அதே பாஷை பேச முயற்சிக்கிறார்கள். அனைத்து பாடல்களும் அக்ரஹார பாடல்களே !

எனக்கு தெரிந்து இது எந்த சாராரையும் மகிழ்ச்சி படுத்தாது.

பிராமணர் அல்லாதோர் "எதற்கு பிராமணர்களுக்கு ஸ்பெஷல் நிகழ்ச்சி?" என நினைப்பார்கள். பிராமணர்களோ அந்த நிகழ்ச்சி முழுதும் தங்களை கிண்டல் செய்வதாக நினைப்பார்கள் ( மா. கா. பா டயலாக்: ஆத்துக்கு போறேளா? குளத்துக்கு போறேளா? )

விஜய் டிவி இத்தகைய கான்செப்டை தவிர்த்திருக்கலாம்
**********
னக்கு லாட்டரியில் USD 500௦௦,000 பரிசு விழுந்துருக்காம். "ரிசர்வ் பாங்கி"லிருந்து இப்போ தான் மெயில் வந்துருக்கு. இது தெரியாம இவங்க முன்னாடி அனுப்புன மெயிலை எல்லாம் படிக்காமலே டெலிட் பண்ணிட்டேனே ! இதுவரை எவ்ளோ பணம் லாஸ் ஆச்சோ?

ஏய்...நானும் இனிமே கோடீஸ்வரன்.. கோடீஸ்வரன்..கோடீஸ்வரன் !

பார்த்த படம்: ஏஜன்ட் வினோத்

வட நாடு போனதிலிருந்து இப்பல்லாம் நிறைய ஹிந்தி படம் பாக்க ஆரம்பிச்சாச்சு :)) இந்த வாரம் பார்த்தது : ஏஜன்ட் வினோத் !

சைப் அலி கான் நடிச்ச படம் இதுவரை பார்த்ததில்லை. இதான் பஸ்ட்டு ! கரீனா கபூர் அழகு நமக்கு கொஞ்சம் பிடிக்கும் (ஹிஹி)

ஹீரோ சைப் ஒரு ஸ்பை (Spy) ஆக நடித்துள்ளார். ஆக்ஷன் படம் என்கிற பேரில் தலை சுத்தல் கதை. என்ன தான் சப் டைட்டிலுடன் பார்த்தாலும் கதை என்ன என எங்கள் யாருக்கும் முழுசா புரியலை.

நம்ம விஜய காந்த் மாதிரி ஒன் மேன் ஆர்மியா ஹீரோ, வில்லன்களை பந்தாடுறார். படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் சுத்த தமிழர் !

சண்டை; சேசிங் இப்படியே படம் முழுக்க போகுது. கிளைமாக்சில் பெரிய நியூக்கிளியர் குண்டு வெடிக்காம ஹீரோ காப்பாத்துறார். ஹீரோயின் செத்துடுறார். சரி படம் முடிஞ்சுதுன்னு நினைச்சா அதுக்கப்புறம் ரெண்டு நாடுகளுக்கு போறார் ஹீரோ. அது  போகுது  பத்து நிமிஷம் ...! முடியல !

டிவியில் போட்டா கூட எஸ் ஆகிடுங்க !

என்னா பாட்டுப்பா இது !

சிறு வயதில் இளையராஜா ரசிகர்களுக்கும் MSV ரசிகர்களுக்கும் எப்போதும் சண்டை தான். நான் இளையராஜா ரசிகன். நண்பன் நந்து MSV பிரியன். ஆறாவது படிக்கும்போது ராஜா- MSV இருவரில் யார் சூப்பர் என சட்டையை பிடித்து கொண்டு உருண்டுள்ளோம்

கல்லூரி லெவல் வந்த பிறகு தான் MSV வெறுப்பை விட்டு நகர்ந்து அவரது சில பாடல்கள் எவ்வளவு அற்புதம் என புரிந்தது. உதாரணமாய் இந்த பாட்டை கேட்டு பாருங்கள். MSV-யின் மேதைமை புரியும்

பாடல் இடம் பெற்ற படம்: பட்டின பிரவேசம். பாடியது: SPB இசை MSV

பாடல்: வான் நிலா நிலா அல்ல, இதோ உங்களுக்காக 




மெட்டு, வயலின், அற்புதமான பாடல் வரிகள், SPB பாடலை பாடிய விதம் இப்படி பல ரசிக்கும் படி உள்ளது. படமாக்கிய விதம் (குறிப்பாய் ஹீரோயின்) better-ஆய் இருந்திருக்கலாம். :((

பதிவர் கார்னர்/ ரசித்த கவிதை

பதிவர் உழவன்குழந்தைகள் குறித்த சில அற்புத கவிதைகள் எழுதி உள்ளார். இவரது ப்ளாக் இதோ

மன்னிக்கவும்
கண்ணாடி முன்னால் நிற்கும்போதே
கவனிக்கத் தொடங்கிவிடுகிறாள்
பேண்ட் சர்ட் அணியும்போது
உறுதிப்படுத்தி விடுகிறாள்
வண்டிச் சாவியை எடுத்தவுடன்
தவழ்ந்தோடி வந்து
காலைக் கட்டிக்கொண்டு
அண்ணாந்து பார்த்து
அழுது அடம்பிடிக்கிறாள்.

என்ன கூறி சமாதானம் செய்வது
என்பது தெரியாமல்
அவளோடு விளையாட ஆரம்பித்துவிட்டேன்
மன்னிக்கவும்
இன்றைய என் வருகை
தாமதமும் ஆகலாம்
இல்லாமலும் போகலாம்! -  உழவன்

ஒரு கேள்வி
இது நிஜமாகவே ரொம்ப நாளாய் எனக்கு இருக்கும் சந்தேகம். யாராவது விளக்குங்கள் !
தமிழ் மணத்தில் ஏழு ஓட்டுக்கு மேல் வாங்கியிருந்தால் தான் "வாசகர் பரிந்துரை" தலைப்பின் கீழ் வருகிறது. அப்போது தான் நமக்கு யார் யார் ஓட்டு போட்டனர் என்பதும் பார்க்க முடிகிறது. ஏழுக்கு குறைவாய் ஓட்டு வாங்கும் பதிவுகளில் ( உதாரணமாய் ஐந்து ஓட்டு வாங்கும் போது) யார் யார் ஓட்டு போட்டனர் என தமிழ் மணத்தில் பார்க்க முடியுமா? முடியும் எனில் எப்படி ?

போஸ்டர் கார்னர்

Facebook-ல் நண்பர் பகிர்ந்திருந்த இந்த படம் நெகிழ்ச்சியாய் இருந்தது. ஒரு முஸ்லீம் தம்பதி தங்கள் குழந்தை பள்ளியில் நடக்கும் மாறுவேட போட்டியில் பங்கேற்று விட்டு செல்கிறார்கள்என்பது பார்க்கும் போதே தெரிகிறது.

It can happen only in India என்று தலைப்பிட்டிருந்தார்கள். மிக சரி தானே?

அஜூ நாட்டி கார்னர்

நாட்டியின் டாமினேஷன் பொதுவாகவே ரொம்ப அதிகமாக உள்ளது. "நான் தான் வீட்டுக்கு முதலில்வந்தேன்; நீ ஜூனியர்" என்கிற எண்ணமா.. அல்லது பெண்களுக்கே உரிய .. சரி வேண்டாம் விடுங்கள்.

இருவருக்கும் தனி தனி பாத்திரத்தில் சாப்பாடு வைப்போம். நாட்டி மட்டும் இருவர் பாத்திரத்திலும் சாப்பிடலாம். அஜூ தன்னுடைய பாத்திரத்தில் தான் சாப்பிடணும்; நாட்டி பாத்திரத்தில் அஜூ ஏதாவது சாப்பிட வந்தால் அவ்வளவு தான் பிரளயமே நடக்கும்.

அஜூ பையலும் சும்மா இருக்க மாட்டான். சமயத்தில் அவளை போய் தொந்தரவு செய்வான். வள்ளென்று அவனை குதற பார்ப்பாள் நாட்டி

சில நேரம் அவனது இறக்கையை பிய்த்து நாட்டி கடிப்பாள். அவன் பரிதாபமாய் பார்ப்பான்.அப்போது அவனை பார்க்க அய்யாசாமி போலவே பாவமாய் இருக்கும் :)

ஆக ...மனிதர்களோ, பறவைகளோ ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் கை தான் ஓங்கியிரு..............

இருங்க. .. ஹவுஸ் பாஸ் கூப்பிடுற சத்தம் கேட்குது..உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் :)

Tuesday, June 26, 2012

உணவகம் அறிமுகம்: மெட்ராஸ் கபே, ஆலந்தூர்

சென்னை - ஆலந்தூரில் ராஜா என்றொரு தியேட்டர் உள்ளது. " அஞ்சரைக்குள்ள வண்டி", "பாவம் கொடூரன்" போன்ற மலையாள படங்களை மட்டுமே வெளியிட தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தியேட்டர் இது ! இதனால் சென்னை வாசிகள் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த தியேட்டருக்கு அடுத்த தெருவில், தியேட்டரில் இருந்து நூறு மீட்டர் தொலைவில், ஆலந்தூர் எம். கே. என் சாலையில் உள்ளது மெட்ராஸ் கபே.

நாங்கள் சில ஆண்டுகள் ஆலந்தூரில் குடியிருந்தோம். அப்போதெல்லாம் எனது ஆஸ்தான ஹோட்டல் மெட்ராஸ் கபே தான். மனைவி தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்லும் போதோ, மனைவியுடன் சண்டை வந்து, வீட்டு சாப்பாட்டை புறக்கணிக்கும் நாட்களிலோ நான் நாடுவது மெட்ராஸ் கபேயை தான். இவை தாண்டி, பொழுது போகாத வார இறுதி விடுமுறை நாட்களின் மாலை நேரத்தில் நைசாக வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகி மெட்ராஸ் கபே வருவதுண்டு.

மெட்ராஸ் கபேயில் டிபன் ஐட்டங்கள் தான் பிரமாதமாயிருக்கும். மதிய உணவு அந்த அளவு அருமை என சொல்ல முடியாது.

சரி டிபன் ஐட்டங்களுக்கு வருவோம். எனக்கு இங்கு மிக பிடித்தது தோசை தான்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் வீட்டில் தோசை சாப்பிட நிறைய கண்டிஷன் போடுவேன். குறிப்பாய் தாகம் எடுக்குமென இரவு நேரத்தில் வீட்டில் எப்போதும் தோசை சாப்பிடாத நான், இந்த ஹோட்டலில் மட்டும் இரவானாலும் தோசை சாப்பிட தவற மாட்டேன்.

மாடல் தோசை- From- இணையம்
சாதா தோசை என்று சொல்வார்கள். ஆனால் அதுவே பெரிய சைசில் இருக்கும். மாலை நேரத்தில் நைசாக செல்வேன் என்றேனே... அப்போது ஒரே ஒரு தோசை மட்டும் தான் சாப்பிடுவேன். ஆனால் மிக சின்ன சின்ன துண்டாய் சாம்பார் மற்றும் சட்னியுடன் கலந்து பிச்சு உதறிடுவேன். தோசை மாவு  புளிக்காமல்,  தோசை அவ்வளவு அருமையாய் இருக்கும். இங்கு உள்ள அளவு சுவையான தோசை வேறு எங்கும் சாப்பிட்டதில்லை.

தோசைக்கு தொட்டு கொள்ள சாம்பார் மிக அருமையாய் இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தோசைக்கு நாம் கொடுக்கிற காசில் ஒரு ரூபா கூட அவங்களுக்கு லாபம் வராது என்கிற அளவில் சாம்பாரை குடித்து விட்டு தான் மறுவேலை.

ஒரு தோசையை இருபது நிமிடம் மிக மெதுவாய் ரசித்து சாப்பிட்டு விட்டு எழுந்தால் வரும் ஆனந்தம் இருக்கே அடடா ! பத்மா சேஷாத்ரியில் ஸ்கூல் சீட் கிடைத்த தந்தை மாதிரி பெருமிதமாய் வெளியே வருவேன்.

மாலையில் இப்படி தோசை + சாம்பார் கட்டு கட்டி விட்டு வீட்டில் ஒழுங்காய் சாப்பிடாமல் முழிக்கும் போது தான் " மெட்ராஸ் கபே தோசை" உள்ளே போன உண்மை வெளியே வரும் !

என்றைக்கும் இங்கு நான் இரண்டாம் தோசை சாப்பிட்டதே இல்லை. ஒன்றிலேயே மனம் நிரம்பி விடும். போலவே இங்கு டிபன் சாப்பிட போய் விட்டு தோசை சாப்பிடாமல் வந்ததே இல்லை.
சரி மற்ற உணவுகளுக்கு வருவோம்:

சப்பாத்தி ரொம்ப சுமார் தான். பரோட்டா மெத்து மெத்து என நல்லா இருக்கும். காலை நேரம் மட்டும் கிடைக்கும் பொங்கல், நெய் நிறைய ஊற்றி ஓஹோவென இருக்கும்  ! இட்லியும் பூ மாதிரி அருமையாய் இருக்கும். இந்த கடை ஓனர் முதல் சர்வர்கள் வரை அனைவரும் என்னிடம் மிக நன்றாக பேசுவார்கள். ..ரெகுலர் கஸ்டமர் என்பதால்.

ஆலந்தூரில் நாங்கள் இருக்கும் வரை ஞாயிறு காலை வீட்டில் சமையல் கிடையாது. இங்கு தான் வந்து பார்சல் வாங்குவேன். அந்த நேரம் செம கூட்டமாய் இருக்கும். நம்மை போல பலரும், வீட்டில் ஞாயிறு காலை சமைப்பதில்லை போல !

ஆலந்தூரில் இருந்து மடிப்பாக்கம் வந்த பிறகு நான் அதிகம் மிஸ் செய்வது மெட்ராஸ் கபே ஹோட்டல் தான். இங்கு வந்த புதிதில் ரொம்ப நாள் புலம்பி கொண்டிருந்தேன். " வேணும்னா மெட்ராஸ் கபே போய் சாப்பிட்டுட்டு வாங்க" என்பார் வீட்டம்மா. " இதுக்குன்னு பைக் எடுத்துட்டு போக முடியுமா? அருமையான ஹோட்டல்.. வீட்டுக்கு கூப்பிடு தூரத்தில் இருந்தால் நடந்து போய் சாப்பிடுற மாதிரி வருமா? " என புலம்புவேன்.

நிற்க, மெட்ராஸ் கபே ஹோட்டல் இன்னும் இருக்கா? மிக பழமையான, நல்ல லாபத்தில் நடக்கும் ஹோட்டல் இது. ஆலந்தூர் அருகே இருக்கும் யாராவது மெட்ராஸ் கபே இன்று எப்படி இருக்கு என சொன்னால் மிக மகிழ்வேன் !

Monday, June 25, 2012

சகுனி : வெற்றி சொல்லும் பாடம்

குனி படம் வெளியாகி அநேகமாய் அனைவரிடமும் திட்டு வாங்கியுள்ளது. நான் இன்னும் படம் பார்க்கலை. எனவே விமர்சனத்துக்குள் போகவில்லை.

ஆனால் ஒரு சின்ன கேல்குலேஷன் செய்து பார்த்துவிட்டு அரண்டு போய் விட்டேன். அதனை உங்களுடன் பகிர்கிறேன்

முதல் 3 நாள் படம் பார்த்தவர்களுக்கு தான் இந்த கும்பிடு ! 
*********
சகுனி 1154 தியேட்டரில் வெளியானதாக சொல்கிறார்கள். படம் வெளியாகும் முன், படம் எப்படி இருக்கும் என தெரியாமல் பெரும்பாலான திரை அரங்குகள் பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்து,  இந்த மூன்று நாளும் கிட்ட தட்ட படம் ஹவுஸ் புல் தான். இப்படி மூன்று நாளில் மட்டும் எவ்வளவு பணம் கலக்ட் ஆகும் என நினைக்கிறீர்கள்? வாருங்கள் கணக்கிடுவோம்

வெளியானது : 1154 தியேட்டர்கள்

வெள்ளி, சனி, ஞாயிறு முதல் மூன்று நாள் - ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் = 4 X 3 = 12 காட்சிகள்

ஒரு தியேட்டரில் சீட் Capacity அவரேஜ் ஆக ஐநூறு என எடுத்து கொள்வோம் (சில தியேட்டரில் அதிகம் இருக்கும். சில குறைவு ; ஐநூறுக்கும் குறைவாக இருக்கும் மல்டிபிளக்ஸ்கள் நான்கு காட்சிகளுடன் நிறுத்த மாட்டார்கள்; மாயா ஜால் போன்ற மல்டி பிளக்க்சில் ஒரு நாளைக்கு பத்து ஷோ நடக்கும் )

ஒரு டிக்கெட் விலை தோராயமாக நூறு ரூபாய்

இப்போது கணக்கிடுவோம் :

1154 X 12 (காட்சிகள் ) X 500 ( ஒரு ஷோ சீட் Capacity) X 100 (டிக்கெட் விலை) = 69,24,00,000

69 கோடிக்கு மேல் வசூல் என காட்டுகிறது !

சில தியேட்டரில் முழுக்க Full ஆகலை அல்லது சீட்டிங் குறைவு என்பதால், சீட்டிங் அளவு - 300 என எடுத்து கொண்டால்

1154 X 12 (காட்சிகள் ) X 300 ( ஒரு ஷோ சீட் fill ஆனது ) X 100 (டிக்கெட் விலை) = 41,54,00,000

41 கோடிக்கு மேல் வசூல் என காட்டுகிறது !

டிக்கெட் விலை ரூ. 70 என்றால் கூட: 

ஐநூறு பேர் சீட்டிங் எனில் 41 கோடியும், 
300 பேர் சீட்டிங் எனில் 30 கோடியும் 

வசூல் ஆகியிருக்கும் !  (நன்றி : Microsoft Excel)
******
சகுனி படத்தின் பட்ஜெட் 25 கோடி என விக்கி பீடியா இங்கு சொல்கிறது. இந்த  25 கோடியும் அதற்கு மேல் லாபத்தையும் முதல் மூன்று நாளில் எடுத்து விடுகிறார்கள் !

ஆக இப்போது சினிமா காரர்கள் செய்வது மிக சிம்பிள் கால்குலேஷன் தான்.

1. ரஜினி, கமல், விஜய், அஜீத், சூரியா, கார்த்தி போன்ற பெரிய நடிகர்கள் வைத்து படம் எடுப்பது. 

2. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீஸ் செய்வது. 

3. படம் வெளியாகும் முன்பும் பின் முதல் மூன்று நாளும் நிறைய விளம்பரம் செய்து மக்களை தியேட்டருக்கு வரவழைப்பது. 

4. படத்தின் பெரும் அளவு  செலவையும் (Budget) முடிந்தால் சற்று லாபமும்  முதல் மூன்று நாளில் பார்த்து விடுவது. அப்புறம் ஓடினால் என்ன, ஓடா விட்டால் என்ன? 

எனது கால்குலேஷனில் ஏதேனும் அடிப்படையான தவறு இருந்தால், கேபிள், ஜாக்கி, உண்மை தமிழன் போன்ற அனுபவஸ்தர்கள் சொல்லலாம். திருத்தி கொள்கிறேன்

எது எப்படி இருப்பினும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீஸ் செய்து, முதல் மூன்று நாள் ஒரளவு புல் ஆக ஓடிவிட்டால் லாபம் பார்த்து விடலாம் என்கிற அளவில் தான் இருக்கிறது தமிழ் சினிமா !

இது சாதாரண ரசிகனாக எனக்கு சொல்லும் செய்தி ஒன்று தான்: முதல் மூன்று நாள் என இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து, உடனே தியேட்டருக்கு போக கூடாது ! முதல் நாள் விமர்சனம் எழுதும் துடிப்புள்ள நம் நண்பர்கள் வேண்டுமானால் நம் சார்பில் முதல் நாள் செல்லட்டும். நாம் ரிசல்ட் தெரிந்த பின் போகலாம்.

"முதல் மூன்று நாள் " சினிமா காரர்கள் அடிக்கும் இந்த மொட்டையிலிருந்து தப்பி கொள்ளுங்கள் மக்களே !

Sunday, June 24, 2012

டில்லி : குதுப்மினாரும் ஹுமாயூன் டூம்பும்

குதுப்மினார் - டில்லியை வெற்றிகரமாக கைப்பற்றிய மொகலாயர்கள் அந்த வெற்றிக்காக கட்டிய கட்டிடம் இது.

பகல் மற்றும் இரவு எட்டரை வரை குதுப்மினாரை பார்க்க அனுமதி உண்டு. நாங்கள் மாலை ஏழு மணி அளவில் சென்றோம். மாலை நேரம் உஷ்ணம் இன்றி அழகான விளக்குகள் ஒளிர பார்க்க ரொம்ப அருமையாக இருந்தது. என்ன ஒரு குறையென்றால் புகை படத்தில் அந்த அழகை கொண்டு வர முடியவில்லை. நல்ல சூரிய வெளிச்சத்தில் எடுப்பது போல் விளக்கொளியில் எடுக்கும் படங்கள் வருவதில்லை.







இங்கு தமிழில் பேசும் ஒரு குடும்பத்தை பார்த்து ஆச்சரியமாய் பேச, அவர்களோ, தாங்கள் மங்களூரை சார்ந்தவர்கள் என்றும் மங்களூரில் பேசப்படும் கன்னடம் தமிழ் போலவே தான் இருக்குமென்றும் சொல்லி எங்களை ஆச்சரியப்படுத்தினார்கள்



ஹுமாயூன் டூம்ப்

ஹுமாயூன் இறந்த பின், அவர் மனைவி மெக்கா சென்று வந்தார். மெக்கா பயணம் முடிந்து திரும்பும் போதே தன் கணவர் நினைவாக இந்த மசூதி கட்ட முடிவெடுத்து அதற்கான ஆர்க்கிடெக்டை அழைத்து வந்து விட்டார். அப்படி ஆரம்பித்து கட்டப்பட்டது தான் இந்த கட்டிடம்.

தாஜ் மஹால் இறந்த மனைவிக்காக கணவன் கட்டியது என்றால், இறந்த கணவனுக்காக மனைவி கட்டிய மாளிகை இது !



கிட்ட தட்ட தாஜ் மஹால் போன்ற அமைப்பு தான் வெளியிலிருந்து பார்க்கும் போது உள்ளது. தாஜ் வெள்ளை நிறம். இது சற்று காவி நிறம். அது தான் வித்யாசம். அமெரிக்க அதிபர் ஒபாமா டில்லி வந்தபோது அவரால் ஆக்ரா செல்ல முடிய வில்லை என்பதனால், தாஜுக்கு பதிலாக அதே போல் இருக்கும் இந்த கட்டிடத்தை தான் காண வந்தார்.


                   

இங்கு ஹுமாயூன் சாமாதி மட்டுமல்லாது மொகலாயர்களில் நூற்றுகணக்கான அரசர்கள், மந்திரிகள் ஆகியோரின் உடலும் புதைக்க பட்டுள்ளது.



ப்ராபட் முகமது மிகவும் மனம் உடைந்திருந்த ஒரு கால கட்டத்தில் சிலந்தி கூடு கட்டுவதை கண்டாராம். எத்தனை முறை தடை வந்தாலும் மீண்டும் மீண்டும் சிலந்தி கூடு கட்டுவதை பார்த்து நம்பிக்கை வந்ததாம் அவருக்கு. இதன் நினைவாக இங்குள்ள மைய அரை சிலந்தி கூடு போல் வடிவமைக்க பட்டதாக சொல்கிறார்கள்


உள்ளே நுழையும் போது எடுத்த வீடியோ 










மலர்களும் தோட்டமும் 


மேலே இருந்து எடுத்த வீடியோ ஒன்று :


இங்கு எடுத்த இன்னும் சில படங்கள் :





இங்கு உடைந்த நிலையில் இருக்கும் சில கட்டிடங்கள் 






*****
மொகலாயர் காலம் குறித்தும் அக்கால கட்டிட சிறப்பையும் காண இந்த இரு இடங்களையும் டில்லி செல்லும்போது அவசியம் சென்று பாருங்கள் !

Saturday, June 23, 2012

உயில்மூலம் சொத்து- சட்டஆலோசனை-கேள்வி பதில்

கேள்வி: கண்ணன், அம்பத்தூர்


சென்னை அம்பத்தூரில் ஒரு மனை, விற்பனைக்கு வந்தது. அதனை வாங்கும் பொருட்டு, அதன் பத்திரங்களை நோக்கினோம். தாத்தாவின் பெயரில் முதலில் மனை இருந்தது. அவருக்கு இரு மகன்கள். முதல் மகன் தன்னைக் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இரண்டாம் மகனின் 10 – 12 வயதுள்ள இரு பிள்ளைகளுக்கு இந்த மனையைத் தானமாகக் கொடுப்பதாகப் பத்திரம் பதிவு செய்திருந்தார். பின்னர், முதல் மகனுடன் சமரசம் ஏற்பட்டு, தானத்தை ரத்து செய்வதாக, இன்னொரு பத்திரம் பதிவு செய்திருந்தார். சிலரிடம் கேட்டதில், தானமாகக் கொடுத்த பிறகு, அவர் கையிலிருந்த உரிமையை அவர் இழக்கிறார்; எனவே மீண்டும் அதனை ரத்துச் செய்ய அவருக்கு உரிமை இல்லை; இது தொடர்பாக உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது என்றனர்.

இன்னும் சிலரோ, தானம் கொடுத்தவர், உயிருடன் இருக்கிறார்; எனவே அவர் தன் தானத்தை ரத்துச் செய்யலாம் என்றனர். மைனர் வயதுள்ள பிள்ளைகளுக்குத் தானம் கொடுத்து அதனை ரத்து செய்ததால், அவர்கள் மேஜர் ஆனதும் வழக்குத் தொடர உரிமை உள்ளது என்றும் சிலர் கூறினர். எனவே இந்த மனையை வாங்குவதற்குக் கொடுத்த முன்பணத்தைத் திரும்பப் பெற்றோம். எனினும் இந்தச் சந்தேகம் தீரவில்லை. தானமாகக் கொடுத்த பிறகு, அதனை ரத்து செய்து, மீண்டும் சொத்தின் மீது உரிமை கோர ஒருவருக்கு உரிமை உண்டா?

பதில்:

ஒரு அசையா சொத்தை உயில் எழுதி வைப்பதற்கும், தானமாய்த் தருவதற்கும் வித்தியாசம் உள்ளது.

தானமாய்த் தந்து அது ரிஜிஸ்தர் செய்யப்பட்டால் அதை தானம் செய்தவருக்கு அந்த சொத்தின் மீது பின் எந்த உரிமையும் கிடையாது. குறிப்பிட்ட சொத்து மைனர்களுக்கு வேறு எழுதி வைக்கப்பட்டுள்ளது. மைனர் பெயரில் உள்ள சொத்தை மாற்றி எழுத, பிறருக்கு விற்க பெற்றோருக்கு கூட உரிமை கிடையாது.

சட்டப்படி அந்த பெரியவர் தான் தந்த தானத்தை கேன்சல் செய்தது தவறு.

இதே சொத்தை அவர் உயில் மூலம் எழுதி வைத்தார் எனில் , அவர் உயிரோடு இருக்கும் வரை அதனை திரும்ப வேறு யாருக்கும் எழுதி வைக்க அவருக்கு உரிமை உண்டு.

குறிப்பிட்ட சம்பவத்தில் தானத்துக்கும், உயில் மூலம் வரும் சொத்துக்கும் உள்ள நடைமுறைகளை குழப்பிக் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

இந்த குறிப்பிட்ட நிலத்தைப் பொறுத்த வரை, நிலத்தின் possession யாரிடம் இருந்தது என்பது முக்கியமான விஷயம். அந்த பெரியவர் வசமே possession இருந்தால், நீங்கள் அந்த சொத்தை வாங்கி இருந்தாலும், மறுபடி அந்த நிலத்தின் possession நீங்கள் பெறுவது கடினமாய் இருந்திருக்கும். நீதிமன்றம் சென்று வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகி நீங்கள் மன நிம்மதி இழக்க வேண்டி வந்திருக்கும்.

இப்படி குழப்பம் உள்ள நிலையில் நீங்கள் அந்த நிலத்தை வாங்காதது நல்ல முடிவு தான்.

*********
கேள்வி: தம்பிராஜா திருப்பூர்

1983ல் எனது தாத்தா சுயசொத்தை (மைனர்) எனக்கு ரிஜிஸ்டர் உயில் எழுதிய பிறகு அதை தாத்தாவின் மகன் (எனக்கு அப்பா), விற்க அதிகாரம் உண்டா?

பதில்:

உங்கள் தாத்தா மைனரான உங்களுக்கு ஒரு சொத்தை உயில் மூலம் எழுதி வைத்துள்ளார். அது தான் அவரது கடைசி உயில் எனில் அந்த சொத்துக்கு உரிமை தாரர் நீங்கள் தான். அதனை விற்க உங்கள் தந்தைக்கு உரிமை கிடையாது.

நீங்கள் அந்த சொத்தை விற்கவேண்டும் எனில் அந்த சொத்து (சென்னை, திருச்சி, மதுரை போன்ற) கார்ப்பரேஷன் லிமிட்டில் இருந்தால் அதனை முதலில் ப்ரோபெட் செய்யவேண்டும்.

அதாவது நீதி மன்றத்தில் உயிலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உயில் படி சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் தான் “ப்ரோபேட்” எனப்படும். அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திக் கொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே சொன்னது போல் உங்கள் சொத்து கார்ப்பரேஷன் லிமிட்டில் இருந்தால் மட்டுமே ப்ரோபெட் செய்வது அவசியமாகிறது

கேள்வி: தம்பிராஜா திருப்பூர்

ஒருவரின் சொத்தை வில்லங்கம் பார்க்கும் போது அதில் ரிஜிஸ்டர் உயில் (1983ல்) எழதி இருந்தால் அது வில்லங்கத்தில் வருமா?

பதில்:

இல்லை. வில்லங்கத்தில் அந்தசொத்து மேல் கடன் வாங்கியிருந்தால், அது ரிஜிஸ்தர் ஆனால் மட்டும் கடன் விபரம் தெரியும். உயில் எழுதிய விபரங்கள் வில்லங்கத்தில் தெரியாது !
*****

Friday, June 22, 2012

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நாவல் கட்டுரை சிறுகதை என பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துக்கள் வெளிப்படுவது சிறுகதையில்  தான் என பலரும் கருதுவது உண்டு. 

சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு முறையும் புன்னகையும், நம் இளமை காலத்தையும் கண் முன் வர வைக்கும் அற்புத சிறுகதை தொகுப்பு இது. 

ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !   

நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை  இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் முதல் கதையான கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (" சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்") நல்ல வேளையாக அப்படி நடக்க வில்லை. கதையின்  இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற  போது மனது  கனத்து போகிறது. 

இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்... இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !

சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை "பாம்பு". சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். "அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்" என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. "என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்" என்கிறார் சுஜாதா. 

நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை மிக டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு  வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் "வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா !

சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன்  எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை  திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாய் உள்ளது. 

போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்க பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும்  சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)   

உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு  சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர்  எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த  போது கிடைத்த சந்தோசம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா !

கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல்  சுஜாதா ! 
ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது

தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்க தவறாதீர்கள் !
********
கிழக்கு பதிப்பக வெளியீடான தமிழ் பேப்பரில் ஜூன் 19 வெளியான விமர்சனம்.

Thursday, June 21, 2012

தடையற தாக்க..அருண்விஜய்க்கு இன்னொரு இன்னிங்க்ஸ் !

டையற தாக்க படத்தின் டிரைலர் பார்த்த போது நடிகர் அருண் விஜய்யின் வழக்கமான இன்னொரு படம். திரைக்கு வந்து விட்டு சில நாட்களில் காணாமல் போகும் என்று தான் நினைத்தேன்.

சூர்யா, விஜய் போன்றோருடன் நடிக்க வந்தவர் அருண் விஜய். நடனம், சண்டை எல்லாம் செய்வார். நடிப்பு, காமெடி இரண்டும் நன்கு வரும். இருந்தும் ஏனோ அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஓடுவது இல்லை. அவ்வப்போது பாண்டவர் பூமி போன்ற நல்ல படங்களில் நடிப்பார். அந்த வரிசையில் ஒரு நல்ல படம் தடையற தாக்க

கதை

செல்வா (அருண் விஜய்) ஒரு டிராவல்ஸ் வைத்து நடத்துகிறார். இவர் காதலி மம்தா மோகன் தாஸ். கந்து வட்டியில் பணம் வாங்கி விட்டு கஷ்டப்படும் ஒரு பெண்ணுக்கு உதவ போகும் போது அந்த கும்பலின் வலைக்குள் வருகிறார்.

கந்து வட்டி கூட்டத்தின் தலைவரான மகா என்பவர் மோசமாக தாக்கப்பட்டு சுய நினைவு இழக்க, அருண் விஜய் மீது சந்தேகம் வருகிறது. வில்லன் கும்பல் அருண் விஜயை கொல்ல அலைகிறது. அவர்களின் கொட்டத்தை ஹீரோ எப்படி அடக்கினார் என்பதே இறுதி கதை
***
இது முழுக்க முழுக்க இயக்குனர் மகிழ் திருமேனியின் படம். கதையாக சொல்வதில் இதே போல பல படங்களை நாம் பார்த்தோம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் திரை கதையில் நிச்சயம் செம விறுவிறுப்பு.

படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள். அவை பற்றி அதிகம் யோசிக்காது படத்தை ரசிக்கும் படி செய்துள்ளார் இயக்குனர்.

மகாவின் சின்ன வீடு என சொல்லப்படும் பெண் கடத்தப்படும் போதே, யார் என்கிற நினைவை இழக்கிறாள் என்பது கதை ஓட்டத்துக்கு தான் உதவுமே தவிர, அதற்கு எந்த லாஜிக்கும் இல்லை.

அருண் விஜய் ஒரு டிராவல்ஸ் வைத்து நடத்துபவரையும் , காதலரையும் அப்படியே பிரதிபலிக்கிறார். சண்டை காட்சிகளில் நல்ல வேகம். இனியாவது நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் திரை உலகில் நீடிக்கலாம்

மம்தா மோகன் தாஸ் -ஹீரோயின்.   நிஜ வாழ்வில் புற்று நோயில் இருந்து மீண்டு வந்தவர். மிக அழகாக இருக்கிறார். நடிப்பும் ஓகே. ஆனால் பெண்கள் அணியும் உள்ளாடைக்கு பட்டர்பிளை என பெயர் வைத்து " இன்னிக்கு என்ன கலர் பட்டர்பிளை?" என ஹீரோ இவரிடம் அடிக்கடி கேட்பது ரொம்ப டூ மச். பெண்கள் எப்படி தான் இத்தகைய காட்சிகளில் நடிக்க ஒப்பு கொள்கிறார்களோ?

ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள் (காலம் காலமாய் ஹீரோவின் நண்பர்கள் செய்வது அது தானே?)

இரண்டே பாடல்கள்- முதல் பாதியில் முடிந்து விடுகிறது. இடை வேளைக்கு பின் ஒரே ஓட்டம் தான் !

வில்லன் மகாவை அடித்தது யார் என்று ஒரு கேள்வி- எதிர் வீட்டில் இருக்கும் அந்த பெண் யார்- அவள் கதை என்ன என்ற இரு கேள்விகளும் தான் படத்தின் பெரிய சஸ்பென்சுகள் . அவை இரண்டும் நாம் ஊகிக்க முடியாத படி உள்ளது. படம் நிமிர்ந்து நிற்பது இந்த ஆர்வம் கலந்த சஸ்பென்சில் தான்.

திரைக்கதை அருமை எனினும் இன்னும் கொஞ்சம் தெளிவாக எடுத்திருக்கலாம். படம் பார்க்கும் சிலருக்கு திரைக்கதை புரிய வில்லை. படம் பெண்கள் குழந்தைகள் இரு பிரிவினருக்கும் பிடிக்காது. சண்டைகள் மற்றும் ரத்த வாடை அதிகம்

மொத்தத்தில் - இந்த படம் மூலம் இயக்குனர் மகிழ் திருமேனி - கவனிக்க பட வேண்டியவராகிறார். அருண் விஜய் மீண்டும் ஒரு இன்னிங்க்ஸ் ஆட வாய்ப்பு.

தடையற தாக்க - ஒரு முறை பார்க்க !

டிஸ்கி: பொதுவாய் ஒரு நாளைக்கு ஒரு பதிவு வெளியிடுவது தான் நம் வழக்கம். இந்த படம் வெளிவந்து/ பார்த்து நாளாகி விட்டது. நாளை சகுனி படம் வெளிவந்தால் அடுத்த சில நாட்கள் சகுனி பற்றியே பேச்சாய் இருக்கும். எனவே இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது :)

ஜூன் 20 தேதியிட்ட வல்லமை இதழில் வெளியான விமர்சனம்.

சமீபத்து பதிவு :

காந்தி சுடப்பட்ட இடம் இன்று 

ஆனந்த விகடனும்  வீடுதிரும்பலும் 

காந்திஜி சுடப்பட்ட இடம் இன்று- நேரடி அனுபவம்

மகாத்மா சுடப்பட்ட இடம்
டில்லியில் மகாத்மா காந்தி நினைவாக இரண்டு குறிப்பிடத்தக்க இடங்கள் உண்டு. ஒன்று அவர் சுட்டு கொல்லப்பட்ட இடம். இன்னொன்று அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட அவரது சமாதி. நாங்கள் சென்ற மே மாதம் சமாதி இருக்கும் இடம் மிக அதிக சூடாக இருக்கும் என அங்கு செல்ல வில்லை.

பகல் 12 மணி அளவில் நாங்கள் மகாத்மா சுட்டு கொல்லப்பட்ட இடத்த்துக்கு சென்ற போது அங்கு பார்வையாளர்கள் மிக கொஞ்சமே இருந்தனர்.

துவக்கத்தில் மகாத்மா நினைவாக ராட்டைகள் இருந்தன. அவற்றில் இன்னமும் ஆடைகள் நெய்யத்தான் செய்கிறார்கள்

ராட்டைகள்
தையல் வகுப்பு அங்கு நடக்கிறது. ஏராளமான பெண்கள் தையல் பயிலுகின்றனர்.
தையல் வகுப்பு


மகாத்மா சுட்டு கொல்லப்படும் முன் பிரார்த்தனை நடத்தினார் அல்லவா? அந்த இடம் இப்போது ஒரு exhibition நடத்தும் இடமாக மாற்றி விட்டனர். நாங்கள் சென்றபோது சுதந்திரத்துக்கு போராடிய பெண்கள் படங்கள் அங்கு இருந்தது. எப்போதும் இதுவே தொடருமா என தெரியலை.



மகாத்மா இறுதியாய் நடந்து போன இடத்தில் காலடி தடம் போல செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தை நாம் கடக்கும் போது மனதை என்னவோ செய்கிறது. சுற்றிலும் புல்வெளிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

மகாத்மா சுடப்பட்ட அந்த குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும் போது செருப்பு அணிந்து செல்ல கூடாது. இதை வலியுறுத்த அந்த ஒரு இடத்தில் மட்டும் ஒரு காவலாளி அமர்ந்துள்ளார்.

ஒரு தீபம் எப்போதும் எரித்து கொண்டுள்ளது. நாங்கள் சென்ற போது ஒரு வெளிநாட்டவர் வந்து அதனை படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

இந்த இடத்தை பார்த்து விட்டு வந்தால், சுதந்திர போராட்ட வரலாறு முழுமையாக படத்துடன் சேர்ந்து விளக்கி உள்ளனர். இதை வாசிக்கும் போது பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன.

காந்தி 1915-ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வருகிறார். (இடைவேளைக்கு பின் வருகிற ஹீரோ மாதிரி ) அதன் பின் சுதந்திர போராட்டம் வேகம் எடுக்கிறது

பதிவர் வெங்கட்  நாகராஜ்  மியூசியத்தில் எடுத்த படம்
மவுண்ட்பேட்டன் வந்ததே இந்தியாவுக்கு சுதந்திரம் தர வேண்டும் என்கிற ஒரே நோக்கில் தான். இந்திய நிலையை பார்த்து விட்டு அவர் " இந்து-முஸ்லீம் இடையே இருக்கும் வகுப்பு கலவரம் மட்டுமே சுதந்திரம் தர தடையாக உள்ளது" என இங்கிலாந்துக்கு தெரிவிக்கிறார். பாகிஸ்தான் தனி நாடாகும் யோசனை உதிக்கிறது. காந்தி பலமாக எதிர்க்க நேரு உள்ளிட்ட தலைவர்கள் " எப்படியோ சுதந்திரம் கிடைத்தால் சரி" என அதற்கு சம்மதிக்கின்றனர்.

இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15, 1947 - அன்று சுதந்திரம் தர போவதாக ஜூன் மாதமே (Before 2 months) ஆங்கிலேயர்கள் அறிவித்து விட்டனர்

சுதந்திரம் கிடைத்த நாள் அன்று காந்தி மிக அப்செட் (பாகிஸ்தான் தனியே செல்வதால்). கொல்கத்தாவில் வகுப்பு கலவரத்தை அடக்குவதில் அன்று மும்முரமாய் இருந்துள்ளார் மகாத்மா.

முதல் பிரதமராகும் தருணத்தில் நேரு பேசியது நெகிழ்ச்சி " நமக்கு சுதந்திரம் கிடைக்க முக்கிய காரணம் மகாத்மா. அவர் நம் அனைவரையும் விட மிக உயர்ந்தவர். ஆனால் அவர் பேச்சுப்படி பல நேரங்களில் நாம் நடப்பதில்லை "

காந்தி- மோகன்
சுதந்திர போராட்ட கால துவக்கத்தில் கடிதங்களை தர, மனிதர்களே பயன்படுதபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் கடிதத்தை எடுத்து கொண்டு ஓடுவார்களாம். பிரிட்டிஷ் வந்த பின் போஸ்டல் முறை வர, இவர்களுக்கு வேலை போய் விட்டது. இதனால் கோபமடைந்த இவர்கள் ப்ரிடிஷுக்கு எதிராய் மிக தீவிரமாய் பணியாற்றி உள்ளனர். தபாலில் தகவல் சென்றால் ஆங்கிலேயர்கள் பிரித்து படித்து விடுவதால் இவர்கள் மூலம் கடித போக்குவரத்து நடந்துள்ளது !

தில்லி அருகே ஒரு ஊரில் ஒரு கிராமத்து மக்கள் அனைவரையும் ஆங்கிலேயர்கள் ஒரு குறிப்பிட்ட மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த மரம் இன்றும் நினைவு சின்னமாக உள்ளதாம் !

காந்தி நினைவு இல்லத்தில் எடுத்த வீடியோ இதோ:



வீடுதிரும்பல் பரிந்துரை : இந்தியாவின் வரலாறை அறிந்து கொள்ள விரும்புவோர் நிதானமாய் வாசித்து பார்க்க வேண்டிய விஷயங்கள் இங்கு உண்டு. காந்தி மீது அன்பு கொண்டோர் டில்லி செல்லும்போது இந்த இடத்துக்கு அவசியம் செல்லுங்கள்

டில்லி துணுக்ஸ்:

பேருந்துகளில் அதிக கூட்டமில்லை. மாறாக மெட்ரோ ரயில் நிரம்பி வழிகிறது.

டில்லியின் தெருக்களின் பெயர்கள் சுவாரஸ்யம் ! ஒரு பக்கம் அக்பர், ஔரங்கசீப், ஷாஜஹான், ஹுமாயூன் போன்ற மொகலாய பேரரசர்கள் பேரில் தெருக்கள்.. இன்னொரு புறம் அனைத்து மாஜி பிரதமர்கள் (இந்திரா, ராஜீவ், மொரார்ஜி, சரண்சிங், சந்திரசேகர்) , ஜனாதிபதிகள் பெயரில் தெருக்கள்.. மகா கவி பாரதி பெயரிலும் ஒரு ரோடு உண்டு !

நண்பன் தேவா இருக்கும் வசந்த் குன்ஜ் அருகே ஸ்பைனல் கார்ட் சர்ஜரிக்கான மிக சிறந்த மருத்துவ மனை உள்ளது ! இங்குள்ள லிவர் ஹாஸ்பிடல் ஒன்றும் மிக புகழ் பெற்றது. தினமும் குடிக்கும் இந்தியாவின் "முதல் குடிமகளும்" அவர் கணவரும் இங்கு தான் டிரீட்மென்ட் எடுத்துப்பார்களாம் ! இது டில்லியில் ஊரறிந்த ரகசியமாயிருக்கு !

Wednesday, June 20, 2012

வானவில் 93: ஷாரூக்கான்-கமல்-தமிழ்மணம்

பார்த்த படம் : தில்வாலே துல்ஹியானா லீ ஜாயேங்கே

"என்னாது காந்தி செத்துட்டாரா? என கேட்க கூடாது. இந்த படம் வெளிவந்து ஜஸ்ட் 16 வருஷம் தான் ஆகுது ! டில்லி போனபோது (ஆரம்பிச்சிட்டான்யா !) பஸ்ஸில் இந்த படம் பார்த்தோம். முடிவு பாக்க முடியாம சீ. டி நின்னுடுச்சு. அதனால் சென்னை வந்ததும் மறுபடி சீ. டி வாங்கி பார்த்தோம். அப்புறம் இந்த படம் பற்றி விக்கி பீடியாவில் படிச்சுட்டு அசந்து போயிட்டேன். ஹிந்தியில் இதுவரை வந்த படங்களில் மிக சிறந்த (Top 10) படங்களில் ஒன்று என்கிறார்கள்.

இது அந்த கால அழகுங்கோ..

ஷாரூக் - கஜோல் ஜோடி- காதலுக்கு மரியாதை டைப் காதல் கதை- செம பாட்டுகள்- வெளிநாட்டு லொக்கேஷன் என பீல் குட் மூவி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் !

QUOTE CORNER

“Difficulties in your life do not come to destroy you, but to help you realize your hidden potential and power; let difficulties know that you too are difficult.”


முகநூல் கிறுக்கல்கள்

மடிப்பாக்கத்தில் கடந்த இரண்டு நாளாய் ஒரு மணி நேரம் கரன்ட் இருந்தால், அடுத்த ஒண்ணரை மணி நேரம் கரண்ட் இல்லை. இரவிலும் கூட இதே நிலை தான். தினம் எட்டு மணி நேரம் கரண்ட் விடும் அம்மாவின் கருணையே கருணை !

கமல் ஹாசன் யார் கூடவோ சேர்ந்து ஹாலிவுட் படம் நடித்து, எழுதி, இயக்கி, தயாரிக்க போறாராம்.எனக்கு மருதநாயகம் ஞாபகம் வருது !

சகுனி படத்தில் "மனசெல்லாம் மழையே" பாட்டு மிக நல்ல மெலடி. குறிப்பாய் பல்லவி ரொம்ப சூப்பர். படம் எப்படி இருக்குதோ தெரியலை. ஆனா கார்த்தி- சந்தானம் காம்பினேஷனில் காமெடி கலக்கும் என எதிர்பார்க்கிறேன்.

பதிவர் கார்னர்


பலராமன் என்கிற இந்த பெரியவர் புற்று நோய் பற்றி நிறைய அனுபவ கட்டுரைகள் எழுதுகிறார். இவர் மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் அனுபவ கட்டுரைகள் இதுவரை வாசிக்கா விடில் வாசித்து பாருங்கள் ! அற்புதமான சில கட்டுரைகள் இவர் ப்ளாகில் உள்ளது !

அய்யாசாமி


ஊட்டி வெஜிடபிள் கடை பற்றி சென்ற வாரம் தான் இங்கு நல்ல விதமாய் எழுதினோம். அதற்குள் அய்யாசாமிக்கு அங்கு ஏடாகூட அனுபவம் கிடைத்து விட்டது. சென்ற வாரம் ஒரு நாள் காய்கறி வாங்க சென்றார் அவர். காய்களை நிறுத்து பில் போடுவது ஒரு இடம். பில் பெற்று கொண்டு இன்னொரு இடத்தில் பணம் கட்டவேண்டும். கட்டிய ஸ்லிப் காட்டி காய்கறி கவர் பெற்று கொள்ள வேண்டும். எல்லாம் சரியாக தான் நடந்தது. வீட்டுக்கு சென்று பார்த்தால் வேறு யாருக்கோ தர வேண்டிய காய்கறி கவர் அய்யாசாமியிடம் வந்து விட்டது. கிட்டத்தட்ட அதே விலைக்கு காய்கறி இருந்தால் கூட பேசாமல் இருந்திருப்பார். அவர் வாங்கியதில் பாதிக்கும் குறைவே இந்த கவரில் இருந்தது.

ஹவுஸ்பாஸ் " ப்ளாக் தான் உங்களை கெடுக்குது. என்ன எழுதுறதுன்னு நினைச்சுக்கிட்டே வேலை செஞ்சா இப்படி தான்" என்று "ஆசிகள்" வழங்க "இல்லை. இல்லை நான் ப்ளாக் பத்தி நினைக்கவே இல்லை" என்று கெஞ்சி மன்றாடினார் அய்யாசாமி. மறுநாள் காலை அதே கடைக்கு சென்ற போது அவர் கவரை மீண்டும் பத்திரமாக தந்து விட்டனர். கவர் மாறியதுக்கு அய்யாசாமி மனைவியிடம் தந்த விளக்கம் பின் வருமாறு: " நானும் ரெண்டு முருங்கை காய் வாங்கியிருந்தேனா? அந்த கவரிலும் அதே மாதிரி ரெண்டு முருங்கை காய் வெளியே நீட்டிக்கிட்டு இருந்தது. அதான் நம்ம கவர்னு வாங்கிட்டு வந்துட்டேன்"
 
நாட்டி கார்னர்

இந்த குட்டி வீடியோ, அஜூ வரும் முன் நாட்டி தனியே இருந்த போது எடுத்தது. நாட்டியின் சாப்பாட்டு டப்பாவை நான் எடுக்க என்னிடமிருந்து பிடுங்குவதை இதில் காணலாம்.

அஜூ எங்களிடம் இன்னும் வர ஆரம்பிக்கலை. எனவே நாட்டி தான் செல்லமாக உள்ளது. மனைவியோ மகளோ கையில் தூக்கினால், சில நேரம் அவர்கள் நெற்றியில் உள்ள பொட்டை சரியாக கவ்வி எடுத்து விடும் நாட்டி !




தமிழ்மணத்தில் வீடுதிரும்பல்

தமிழ்மணம் வாரா வாரம் ப்ளாகுகளுக்கு ரேன்க் வழங்கி வருவதை உங்களில் சிலர் கவனித்திருப்பீர்கள். வாரம் நாலு பதிவாவது போடும்போது வீடுதிரும்பல் முதல் இருபதுக்குள் வரும். தினம் ஒரு பதிவு போட்டால் முதல் ஏழுக்குள் வரும். இப்படி நான்காம் இடம், இரண்டாம் இடமெல்லாம் கிடைத்துள்ளது. அதிசயமாய் சென்ற வாரம் - வீடுதிரும்பல் தமிழ் மணத்தில் முதலிடத்தில் வந்தது.

தமிழின் முன்னணி வலைப்பதிவுகள்
RSS feed -



      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2012-06-17      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்


இந்த ரேங்கிங் ஹிட்ஸ், கமண்ட்ஸ், ஓட்டுகள் மூன்றும் வைத்து தான் தமிழ்மணம் தருகிறது. நம் பதிவுகளுக்கு ஹிட்ஸ் மற்றும் காமன்ட்சுக்கு குறைவில்லை. ஓட்டுகள் தான் மிக குறைவாய் விழுகிறது.

தமிழ்மண ஓட்டுகளில் ...

எப்போதும் ஆதரிக்கும் ரத்னவேல் ஐயா & எங்கள் ப்ளாக் - ஸ்ரீராம் (வணக்கம். தொடருங்கள் தங்கள் மேலான ஆதரவை!)

எப்போது உள்ளே வந்து கமன்ட் போடுகிறார்களோ அப்போது ஆதரிக்கும் ராமலட்சுமி மேடம், ரமணி சார், அமைதி அப்பா, ரெவரி, ஜெயதேவ் தாஸ் (அன்பிற்கு நன்றி: சில சமயம் கமண்டுக்கு நேரமில்லா விட்டாலும், ஓட்டு போடலாமே :)) )

எப்போதும் உள்ளே வந்தாலும், எப்போதாவது தான் ஆதரிக்கும் வெங்கட் நாகராஜ், வரலாற்று சுவடுகள், திண்டுக்கல் தனபாலன் (வீ வான்ட் மோர் சப்போர்ட் இன் தமிழ் மணம் ஓட்டு பிளீஸ்)

ஆகியோரை இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறோம் !

வீடுதிரும்பல் வாசிக்கும் அனைவரின் அன்பால் தான் இது சாத்தியமானது !

தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. இதுவும் கடந்து போகும் என அறிவேன். நன்றி !
Related Posts Plugin for WordPress, Blogger...