Saturday, July 24, 2010

வானவில் தமன்னா Vs அனுஷ்கா

டிவி பக்கம் : ஷின்சன் & போண்டா கொரில்லா

உங்களுக்கு ஷின்சன் அப்படின்னா யாருன்னு தெரியுமா? என்னது தெரியாதா? Atleast ஹீமாவாரி? என்ன சார் எந்த உலகத்தில்  இருக்கீங்க?  இதிலிருந்து என்ன தெரியுதுன்னா ஒன்னு உங்களுக்கு கல்யாணம் ஆகலை அல்லது உங்க வீட்டில் உள்ள பசங்க பெரியவங்களாய்ட்டாங்க!!  

"Hungamaa" அப்படின்னு ஒரு சேனல்.  சூப்பரான இங்கிலீஷ் சீரியல்களை தமிழில் டப் பண்ணி போடுறாங்க; சின்ன பசங்க எப்ப பார்த்தாலும் ஷின்சன் பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்காங்க. 

ஷின்சன் தான் அண்ணன். ஏழு வயசு. செம வாலு; அவன் தங்கை ஹீமாவாரி ஒரு வயது கூட பூர்த்தியாகாத கை குழந்தை ; ஆனா அவனை விட வாலு; ஹீமாவாரி செய்யும் கூத்துக்கெல்லாம்  ஷின்சன்  வாங்கி கட்டிக்குவான். இவங்க ரெண்டு பேரின் அம்மா ஒரு ஷாபிங் பிரியை. அப்பா உங்களையும் என்னையும் மாதிரி மனைவிக்கு பயந்தவர்.. (ஹி ஹி). ஒரு நாளைக்கு எவ்ளோ மணி நேரம் இந்த சீரியல் வருதோ பார்க்கும் போதெல்லாம் இதான் ஓடுது. 

இதை தவிர இன்னொரு சீரியலில் சுவாரசியமான இன்னொரு பெயர் காதில் அடிக்கடி விழும்.. போண்டா கொரில்லா.. ம்ம் நல்லா வைக்கிராங்கடா பேரு ...

முரளியும் எண்ணூறும்

முரளிதரன் எண்ணூறு விக்கட் எடுக்காமல் போய் விடுவாரோ என சென்ற வானவில்லில் எழுதி இருந்தேன். என் கணிப்பை பொய்யாக்கி எண்ணூறு விக்கட் எடுத்து முடித்தார் முரளி. கடைசி நாள்.. கடைசி விக்கட் எடுத்து எண்ணூரை தொட்டார்; அவர் அணியும் வெற்றி பெற.. இதை விட மகிழ்வான வழியனுப்புதல் அவருக்கு இருக்க முடியாது. பாகிஸ்தான் மீது நமக்கெல்லாம் எப்படி கோபம் உண்டோ அதே போல் தான் இலங்கை அணி மீதும்...இருந்தும் முரளியை ரசிக்காமல் இருக்க முடியாது. காரணம் தமிழர் என்பதும் இருக்கலாம். அதை விட முக்கியமாய் அந்த வெள்ளை சிரிப்பு. அவரது பவுலிங் ஆக் ஷ ன் காரணமாய் உலகம் அவரை முழுமையாய் (ஷேன் வாரன் போல) மதிக்கவில்லை, ஏற்று கொள்ள வில்லை என்பது சற்று சோகம் தான். 

ரசித்த கவிதை 

வேலிக்கு வெளியே 
தலையை நீட்டிய என் 
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!  
வேலிக்கு அடியில் 
நழுவும் என் வேர்களை 
என்ன செய்வாய்? 
- அப்துல் ரகுமான் 

(இந்த கவிதை இந்த வருட ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகம் - சமச்சீர் கல்வியில் வாசித்தது!!)

ப்ளாகுகளில் இந்த வாரம் ரசித்தது

மதராசபட்டினம் படத்தை பாரதிராஜா, பாக்யராஜ், ராஜேந்தர் இவங்க எடுத்தா எப்படி இருக்கும்னு எழுதிய வித்யாவின் இந்த பதிவு  !!  நீங்கள் இதுவரை படிக்கா விடில் படித்து சிரியுங்கள் !

தமன்னா Vs அனுஷ்கா

சமீபத்தில் சுறா பட பாடல் ஒன்று டிவியில் பார்க்க நேர்ந்தது. என்னங்க இது !!  பாட்டு ஆரம்பிக்கும் போதே விஜய் தமன்னா போட்டிருக்கிற முக்கால் டிராயரை கீழே இறக்கி இறக்கி மறுபடி போடுறார்! இந்த கருமத்தை மறுபடி மறுபடி வேற காட்டுறாங்க! இயக்குனருக்கும், டான்ஸ் மாஸ்டருக்கும் என்ன ரசனையோ போங்க! அவங்க தான் இப்படின்னா இந்த தமன்னா ஏன் இப்படி நடிக்க ஒத்துக்கணும்?

தமன்னா கட்சியிலிருந்து விலகி அனுஷ்கா கட்சியில் சேர இதை விட வேற காரணம் வேணுமா சொல்லுங்க?

நண்பர் ரகு: தமன்னவுக்காக நாம ரெண்டு பெரும் கொஞ்ச நாள் சண்டை போட்டோம்; போயிட்டு போகுது; என்னோட நண்பரான உங்களுக்காக தமன்னாவை உங்களுக்கே விட்டு குடுத்துடுரேன். எனக்கு அனுஷ்கா போதும். ஆனா அந்த ஏரியாவுக்கு வராதீங்க; ஏற்கனவே கேபிள், ஜாக்கி போன்ற மிடில் ஏஜ் மக்கள் போட்டியிலே இருக்காங்க. :))

அய்யாசாமிக்கு வந்த சத்திய சோதனை

அய்யாசாமி பெட்ரோல் பங்கில் போய் பெட்ரோல் போட்டார். போடும் முன் ஐநூறு ரூபாய் தந்தார். அங்கிருந்த ஒருவர் மீதம் நானூறு ரூபாய் தந்தார். பின் பெட்ரோல் போட்டு முடித்ததும் இன்னொருவரும் மறுபடி நானூறு ரூபாய் ரெண்டாம் முறையா தந்தார். அய்யாசாமி குழம்பியவாரே வண்டியுடன் பெட்ரோல் பேங்க் வெளியே வந்தார். பல முறை பெட்ரோல் கம்மியா போட்டு நம்ம கிட்டே காசு அடிக்கிறாங்க ; இதை திரும்ப தரணுமா என ஓர் எண்ணம்; பாவம் அவங்க கை காசிலிருந்து தர வேண்டி வரும்னு இன்னொரு எண்ணம்; ரெண்டாவது எண்ணம் ஜெயித்தது. மறுபடி போய் அந்த எக்ஸ்டிரா பணத்தை அவங்களிடம் குடுத்துட்டு வந்துட்டார்.  ம்ம் சத்திய சோதனை!! ஆனா அய்யாசாமி ஜெயிச்சிட்டார்!!

அந்த ரெண்டு பேரும் அய்யாசாமிக்கு தேங்க்ஸ் கூட சொல்லாம " நீ ஏண்டா குடுத்தே? " என ஒருவரை ஒருவர் திட்டிகிட்டாங்க.

தமிழிஷ் மற்றும் இண்ட்லி

தமிழிஷ் இப்போ இண்ட்லி   என்ற  இணைய தளத்துடன் இணைந்து விட்டது ..   இண்ட்லி மூலம் உங்களை புதிதாக தொடர்கிறார்கள் என தினம் சில மெயில்கள் வருகின்றன. மகிழ்ச்சி தான். ஆனால் நம்ம ப்ளாகிலேயே ஒரு தொடர்வோர்   பட்டை வைத்திருக்கோம்.  இந்த எண்ணிக்கை அதிகமானால் மகிழ்கிறோம். நண்பர்கள் இண்ட்லி மூலம் தொடர்ந்தால் இங்கு எண்ணிக்கை கூடாது இல்லையா? (என்ன இது சின்ன புள்ள தனமா இருக்குன்னு நீங்க கேட்டாலும் மனசுல நினைக்கிறதை சொல்றேங்க). இதனால என்ன சொல்றேன்னா, நீங்க   இண்ட்லி மூலம் தொடர்ந்தாலும், இங்கேயும் தொடர்வோரில் சேர்ந்து இந்த சின்ன பையனை (நான் தான்!  நான் தான் !!) ஊக்கபடுத்துங்க !ஓகேவா ?

Thursday, July 22, 2010

வாங்க முன்னேறலாம்- நம்மை பின்னிழுக்கும் ஆமை

பாராட்டு நாணயத்தின் ஒரு பக்கமென்றால் அதன் மறு(எதிர்) பக்கம்  பொறாமை.

உங்களுடன் படித்த நண்பர் உங்களை விட பணியிலும் அந்தஸ்திலும் சில மடங்கு பெரியவராக உள்ளது - உங்களுக்கு நெருடலாக உள்ளதா?
அலுவலகத்தில் உங்களுக்கு இணையானவர் - ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் - சம்பள உயர்வு அதிகம் பெற்றால் நீங்கள் சுணங்கி போகிறீர்களா? உங்கள் உடன் பிறந்தவர் அல்லது உறவினர் - புது வீடு வாங்க - உங்களுக்கு பெரு மூச்சு எழுகிறதா?

இவற்றிற்கு நம் பதில் ஆம் எனில் அந்த ஆமை சற்று இறுக்கமாய் பிடித்திருக்கிறது என்று கொள்ள வேண்டியது தான்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுவதாக சொன்னார் வள்ளலார். பொறாமை வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களை பார்த்தால் வாடி விடுவார்கள்.

மனித பிறப்பின் அற்புதமே ஒவ்வொரு மனிதரும் வித்யாசமான தனி தன்மை பெற்றிருப்பது தான். அடுத்தவரின் இலக்கு/ பயணம்/ துயரம் இவை நமக்கு எப்படி தெரியும்? ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவது, ஒப்பிடுபவரை அவமானபடுத்துவதற்கு சமம். இப்போது சொல்லுங்கள்: உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமான படுத்திக்கொள்ள போகிறீர்களா?


ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை கொண்டவராதலால் அவரை அவருடன் தான் ஒப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறீர்களா? உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருந்தால் அதை நோக்கி கொஞ்சமேனும் முன்னேறியிருக்கிறீர்களா?சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில்  ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா? 


இப்படி சென்ற ஆண்டில் இருந்த உங்களுக்கும், தற்போதைய  உங்களுக்கும் செய்யும் ஒப்பிடே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டு முடியும் போது நான் இவ்வாறே சுய பரிசோதனை செய்வது வழக்கம்.


உங்கள் நண்பர்/ உறவினர் மேல் கொள்ளும் பொறாமை என்னென்ன விதமான தீங்கு விளைவிக்கிறது?

முதலில் அந்த தீய எண்ணங்கள்  உங்கள் மனதிற்கும் உடலுக்கும் கெட்டது செய்யும். வயிற்றெரிச்சல், அல்சர் போன்ற உடல் பிரச்சனைகளும் நிம்மதியின்மை போன்ற மன தொந்தரவுகளும் தரும். 

அடுத்து உங்கள் பொறாமை சம்பந்தப்பட்ட நபருக்கு உங்கள் பேச்சிலேயே தெரிந்து விடும். 

"உனக்கென்னப்பா.. சொந்த வீடு.. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க.. ராஜா மாதிரி இருக்கே" என்ற ரீதியில் பேசினால் நண்பருக்கு என்ன தோன்றும்? அவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உங்களிடமிருந்து தூரம் செல்ல துவங்கி விடுவார்.

அவரது வளர்ச்சியை பார்த்து நீங்கள் "கண் வைப்பதாக" அவருக்கு நெருங்கியவர்களே சொல்ல கூடும். ( தனிப்பட்ட முறையில் இந்த கண் வைக்கும் சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் இந்த உலகம் இன்னும் இந்த மாதிரி சமாசாரங்களை நம்பிக்கிட்டு தான் இருக்கு!!)

ஒரு துறையில் உன்னத நிலையை அடைந்தவரை, ஒரு ரோல் மாடலாக கொண்டு அவர் அளவு உயர வேண்டும் என உழைக்கலாம். அவர் வளர்ச்சியில் பாதி உயர்ந்தாலும் நாம் கணிசமான வளர்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நெருங்கிய நண்பர்/ உறவினர் வளர்ச்சியுடன் உங்கள் வளர்ச்சியை எக்காரணம் கொண்டும் ஒப்பிடாதீர்கள். அது எல்லா விதத்திலும் கெடுதலே செய்யும்.

மற்றவர் வெற்றியிலும், சந்தோஷத்திலும் நாம் வருத்தபடுபவராயிருந்தால், வாழ்நாளைக்கும் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது. 

வெற்றி பெற, முன்னேற, மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூட தனம். வாழ்க்கையும் வாய்ப்புகளும் அனைவருக்கும் பொது.  

*************

பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். எப்போதும் மகிழ்வாய் இருக்க இது சிறந்த வழி.

பிறர் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள். உங்கள் முன்னேற்றமும் இயல்பாய் நடக்கும்.

பிறர் சிரிக்கும் போது சேர்ந்து சிரியுங்கள். அது உங்கள் உறவுக்கு நல்லது.

ஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன். 

Tuesday, July 20, 2010

தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

எனது சொந்த ஊரான நீடாமங்கலத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது தஞ்சாவூர். அடியேன் பிறந்தது தஞ்சாவூரின் அரசு மருத்துவ மனையில் தான்!! சினிமா பார்க்கவும், துணி வாங்கவும், டாக்டரிடம்  காட்டவும் எங்க ஊர் மக்கள் வருவது தஞ்சாவூருக்கு தான். நான் +1, +2  ரெண்டு வருஷம் இங்கு படித்தேன். டீன் ஏஜ் வயது. படிப்பில் கவனம் போகலை. கிரிக்கெட்டால் கெட்டு அலைந்தேன். அப்புறம் சற்று தெளிந்து கல்லூரி, வேலை, குடும்பம் என வாழ்க்கையில் நிறைய தூரம் வந்து விட்டாலும் தஞ்சையை வருடத்துக்கு சில முறையாவது தரிசிக்கிறேன். சமீபத்தில் தஞ்சை சென்றேன். 30 வருடங்களுக்கு முன் எனக்கு மகிழ்ச்சி தந்த சில இடங்கள் இன்னும் கூட உள்ளது. நீங்கள் தஞ்சை காரர் எனில் நான் சொல்லும் இடங்களை மிக ரசிப்பீர்கள். இல்லா விடினும் வாசிக்கலாம்...
 
இதோ எனக்கு பிடித்த சில இடங்கள் 
 
சாந்தி புரோட்டா கடை 
 
நீங்கள் என்னை சாப்பாட்டு ராமன் என நினைத்தாலும் பரவாயில்லை; சாந்தி பரோட்டா, சாந்தி பரோட்டா தான். அந்த குருமா.. அடடா.. வெக்க படாமல் பல முறை ஊற்ற சொல்லி வெளுத்து வாங்குவேன். என்ன பரோட்டாவில் சற்று டால்டா அதிகமாய் இருக்கும். ஆனால் அந்த டேஸ்ட் புடிச்சு போச்சே!! இந்த கடை கடந்த முப்பது ஆண்டுக்கும் மேலாக எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த முறையும் இங்கு சாப்பிட்டேன். என்ன ஒன்று. முதலிலேயே சாப்பிடும் பரோட்டாவிற்கு காசு குடுத்து டோக்கன் வாங்க சொல்கிறார்கள். எத்தனை சாப்பிடுவோம் என முன்பே முடிவு பண்ண முடியுமா என்ன? அப்படியும் டோக்கன் வாங்கிட்டு பரோட்டா தயாராகும் வரை மக்கள் பொறுமையாய் காத்திருக்கிறார்கள்.  
 
தஞ்சை பழைய பஸ் நிலையத்திற்கு நேர் எதிரில் இந்த கடை உள்ளது. இந்த நிறைய திரை அரங்குகள் உள்ளன. இவற்றில் எல்லாம் எவ்வளவு படங்கள் பார்த்துள்ளோம்! அவசரமாய் சாந்தியில் பரோட்டா சாப்பிட்டுட்டு மதிய காட்சிக்கு ஓடிய நினைவுகள் வருகிறது...
 
போனால் ஒரு முறை இந்த பரோட்டா சாப்பிட்டு பாருங்கள். முதலிலேயே பரோட்டா பிச்சு போட்டுட்டு அப்புறம் குருமா ஊற்ற சொல்லணும். இது ரொம்ப முக்கியம். :)
 
அன்பு பால்/ லஸ்ஸி கடை

அதே பழைய பஸ் ஸ்டாண்ட் வெளியே பரோட்டா கடைக்கு நேர் எதிரே உள்ளது அன்பு லஸ்ஸி கடை. பகலில் லஸ்ஸியும் இரவில் கற்கண்டு பாலும் விற்பார்கள். நின்றவாரே எவ்வளவு கூட்டம் குடிக்கும் என்பதை நீங்கள் நேரில் பார்த்து தான் ஆச்சரிய படனும். இது போன்ற லஸ்ஸியை நான் வேறெங்கும் குடித்ததில்லை. லஸ்ஸி தயார் செய்து விட்டு மேலே பாலாடை போடுவார்கள். பின் அதன் மேல் சர்க்கரை தூவுவார்கள். இந்த ஆடையை கொஞ்சம் கொஞ்சமாய் கடைசி வரை வைத்து குடிக்க வேண்டும். அப்போ தான் நல்லா இருக்கும். ஒன்று குடித்து முடித்ததும் இன்னொன்று குடிக்கலாமா என temptationவரும். அதனை அடக்கி கொண்டு கிளம்ப வேண்டும்.


இவர்களே இரவில் கற்கண்டு பால் தயார் செய்வார்கள். இதற்கும் கூட்டம் அம்மும். இந்த முறையும் கற்கண்டு பால் குடித்தேன். ஆனால் பழைய டேஸ்ட் இல்லை.

அவசரமாய் பால் குடித்து விட்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பஸ்ஸை ஓடி போய் பிடிக்கும் மக்கள் இன்னும் மாற வில்லை.

தஞ்சை தியேட்டர்கள்


தியேட்டர்கள் பற்றி சொல்லி கொண்டே போகலாம். சாந்தி கமலா இரண்டும் சிவாஜி கணேசன் கட்டியது. பின் ஜீவி பில்ம்ஸ் வாங்கினார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலான முக்கிய படங்கள் இங்கு வந்து விடும். கமலாவை விட சாந்தி பெரிய தியேட்டர். அருகில் விஜயா தியேட்டர். இங்கு அந்த காலத்திலேயே டிக்கட் விலை அதிகம்.

திருவள்ளவர் என ஒரு தியேட்டர். உள்ளூர் நிர்வாகமே நடத்தியது என நினைக்கிறேன். ரொம்ப சுமாரான maintenance. இங்கு குறிப்பாக தீபாவளிக்கு சில நாள் முன் போடப்படும் மலையாள படங்கள் ரொம்ப பேமஸ் (நம்புங்கப்பா.. நான் பார்த்ததில்லை). ராஜ ராஜன் என இன்னொரு தியேட்டர். சற்று பெரிது. டீசண்டாக இருக்கும். இவை அனைத்தும் தாண்டி தற்போது தஞ்சையை கலக்குவது ராணி பேரடைஸ் தியேட்டர் தான். முன்பிலிருந்தே உள்ளது இந்த தியேட்டர். ஆனால் தற்போது புதுப்பிக்கப்பட்டு  நல்ல sound effect உடன் செமையாய் உள்ளது என்கின்றனர். நல்ல படங்களாகவும் எடுக்கின்றனர். புதுப்பிக்கப்பட்ட பின் நான் இன்னும் படம் பார்க்கலை.

அனுமார் கோவில்


ரயில் நிலையம்/ ராஜ ராஜன் திரை அரங்கிற்கு அருகே உள்ளது ஒரு மிக சிறிய அனுமார் கோவில். ஏறக்குறைய நடை பாதை கோயில் போல் தான் இருக்கும். ஆனால் சனி கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த அனுமார் மிக சக்தி வாய்ந்தவர் என நம்பிக்கை.
 
பெரிய கோவில்


தஞ்சை பற்றி சொல்லிட்டு பெரிய கோவில் பற்றி சொல்லாமல் போக முடியுமா? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மன நிலை, அனுபவம் தரும் கோவில். அற்புத புல்வெளி நம் மனதை கொள்ளை கொள்ளும். மிக பெரிய பிரகாரங்கள். கோயில் கோபுர நிழல் கீழே விழாது என்கிறார்கள். நந்தியும் மிக ஸ்பெசல் தான். கோயில் உள்ளே போகா விட்டால் கூட வெளியே சில கிலோ மீட்டர் தூரத்தில் நாம் எங்கு சென்றாலும் அந்த கோபுர அழகு மயக்கும்.

********
இவை தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை நிறைய இருக்கலாம். நீங்கள் தஞ்சை நண்பர் எனில் உங்களுக்கு பிடித்த இடம் பற்றி பகிருங்கள். தஞ்சை டவுனை தாண்டும் போது எல்லா பக்கமும் வயல்கள்.. இவை தற்போது குறைந்து வந்தாலும் இன்னும் பசுமையான வயல்கள், போர்வேல்கள் மனதை நிறைக்கின்றன.


தஞ்சை.. ஒரு முறை அவசியம் சென்று வர வேண்டிய ஊருங்க !!

Monday, July 19, 2010

வானவில் - நான்கு வகை மனிதர்கள்

ரசித்த சிறுகதை

விகடனில் இந்த வாரம் படித்த "மிஸ்டர் மார்க்" என்ற சிறுகதை மனதை கனக்க வைத்தது. (இதே விகடனில் ராஜாராம் கவிதை, கார்க்கி, யுவகிருஷ்ணா, பரிசல் ஆகியோரின் டுவிட்டுகளும் வந்துள்ளன.) "மிஸ்டர் மார்க்" ஒரே ஒரு சினிமா எடுத்த இயக்குனர். அதன் பின் எந்த படமும் எடுக்க முடியாமல் அல்லாடும் கதை. பள்ளிக்கு போகும் சிறு குழந்தை, குடி பழக்கம், கொஞ்சம் தெரிந்தவரிடம் பேசினால் பணம் கேட்கும் நிலை.. சீரியலுக்கு வசனம் எழுதுவது (" எல்லா கதைலயும் கண்ணாலயே ஒண்ணுக்கு போறாங்க") என மிக இயல்பாய் இருந்தது. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தது. முடிவு மனதை பிசைந்தது. படித்து முடிந்ததும் வேறு வாசிக்க பிடிக்காமல் புத்தகத்தை மூடினேன். இது தான் அந்த கதை தரும் பாதிப்பு. செழியன் எழுதிய இந்த கதையை முடிந்தால் வாசியுங்கள்.

குமுதத்தில் ஒரு கேள்வி பதில்

கேள்வி: அனுஷ்கா தமன்னாவை மிஞ்சி விடுவார் போலிருக்கிறதே?




பதில்: அணிகிற கைக்குட்டைகளை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது !!


ரசித்த SMS:

Three Golden rules from Vivekananada.

1. Who is helping you, don't forget them.
2. Who is loving you, don't hate them.
3. Who is hoping you, don't cheat them.


முதலிடத்தில் தமிழகம்

நல்ல செய்தி ஒன்று: உடல் உறுப்புகள் தானம் செய்வதில் பல வருடங்களாக ஆந்திரா முதல் இடத்தில இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் ஆந்திராவை விஞ்சி முதல் இடத்தில உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் தற்போது வந்துள்ள உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்ச்சி மற்றும் தமிழக அரசு இதற்காக எடுக்கும் முயற்சிகள் இரண்டும் தான் என நான் வாசிக்கும் "ஆங்கில தினத்தந்தி" ( Times Of India) சொல்கிறது. ம்ம்ம் அவ்வபோது இப்படி நல்ல விஷயமும் காதுக்கும் கண்ணுக்கும் எட்டுகிறது.

டிவி பக்கம்


zee தமிழ் தொலை காட்சியில் ஜான்சி ராணி என்ற சீரியல் வந்து கொண்டிருக்கிறது. டப்பிங் சீரியல் தான். இருந்தாலும் ஜான்சி ராணி என்ற வீர பெண்ணின் கதை என வீட்டிலுள்ள ரெண்டு வீர மங்கைகள் பார்த்து வருகிறார்கள். வாசிக்கும் புத்தகத்திலிருந்து நிமிர்ந்து அவ்வபோது நான் பார்த்த வரையில் செம செட்டுகள், நல்ல நடிப்பு என பிரம்மாண்டமாக தான் உள்ளது. முடிந்தால் பாருங்கள்.

நான்கு வகை ஜாதி - உங்கள் சிந்தனைக்கு

சமீபத்தில் ஒரு பெரியவருடன் பேசி கொண்டிருந்தேன். அவர் சொன்னார்:

" அலுவலகம், சமூகம் இப்படி எல்லாத்திலும் நான்கு வகை மனிதர்கள்  இருக்கு தெரியுமா?"

நான் பேசாதிருக்க, என் பதிலை அவர் மீண்டும் கேட்டார். " பிராமின், நான் பிராமின் ..." என நான் இழுக்க,
" இல்லை. ஒரு அலுவலகத்தை எடுத்துக்குங்க. பியூன், செக்கியூரிட்டி போன்றவர்கள் இருப்பார்கள். இவர்களை அரசு அலுவலகத்தில் கிளாஸ் போர் ( Class IV ) என்பார்கள். இதே போல் கிளார்க் போன்றவர்கள் கிளாஸ் த்ரீ (Class III ) என்பார்கள். இந்த கிளார்க்குகளின் மேனஜரை கிளாஸ் டூ ( Class II) என்றும், அலுவலக தலைமை அதிகாரியை கிளாஸ் ஒன் என்றும் சொல்வார்கள்.

இப்படி மக்களை நான்காக பிரிக்காமல் வேலை செய்ய முடியுமா? எல்லோரும் ஒரே கிளாசில் இருக்க முடியுமா? நான் ஜாதி பத்தி பேசலை. ஒரு பிராமணன் பியூன் வேலை கூட செய்யலாம். நான் அங்கே போகலை. அலுவலகமும் சமூகமும் இப்படி நான்காக பிரிஞ்சு இருக்குன்னு மட்டும் தான் சொல்றேன்”

அவரே மேலும் தொடர்ந்தார். " பணம் நிறைய சேர்ந்தா நினைச்சதை செய்யலாம்; ஹேப்பியா இருக்கலாம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா பணக்காரன் நிம்மதி இல்லாம தவிக்கிறான். தேவைக்கு மேல் பணம் வந்தாலே நிம்மதி போய்டும்; பணம் கம்மியா இருந்தாலும் பிரச்சனை; அதிகம் இருந்தாலும் நிம்மதி இல்லை. எவன்கிட்டே போதுமான அளவு பணம் இருக்கோ அவன் தான் நிம்மதியான ஆசாமி"

அய்யாசாமி அப்டேட்ஸ்

அய்யாசாமி சமீபத்தில் ஒரு திங்கள் கிழமை காலை கல்யாணத்திற்கு சென்றார். மனைவிக்கு வேண்டியவர்கள் வீட்டு கல்யாணம். நேரே மண்டபம் சென்றவர் மாப்பிள்ளையை பார்த்து கையில் மொய் கவர் தந்தார். பின் வந்த வேலையை பார்ப்போம் என சாப்பிட்டு முடித்தார். வெளியே வந்தவர் மாப்பிள்ளை -பெண் பெயர் பலகை பார்த்து அதிர்ந்து போனார். அது வேறு யாரோ வீட்டு கல்யாணம். அவர் செல்ல வேண்டியது அல்ல. சினிமா தியேட்டர் போல ஒரே காம்ப்ளக்சில் ரெண்டு மண்டபங்கள்!! மனுஷன் தப்பான கல்யாண மண்டபம் போய் மொய்யும் தந்து, சாப்பிட்டும் வந்துட்டார். நெக்ஸ்ட்டு?? அதே காம்ப்ளக்சில் இருந்த அடுத்த கல்யாணமும் போய் மொய் குடுத்து கை குலுக்கிட்டு கிளம்பிட்டார் (அங்கே சாப்பிடலை.. சாப்பிடலை.. சாப்பிடலை)

Thursday, July 15, 2010

ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"



" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?).

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதம் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.

Tuesday, July 13, 2010

தலைப்பில்லா ...

நாய்கள் ஜாக்கிரதை 
பலகை தாண்டி உள் சென்றால் 
முன் எச்சரிக்கை ஏதுமின்றி 
மனதை குதறும் 
மனிதர்கள் !!
     *********

மறைந்து விடுகிறது 
பிடித்த நிறம் ரசிக்கும் முன் 
வானவில் !
     


                        *********

சகதியில் எழுந்து வரும் எருமை 
மறப்பதில்லை 
வாலை விசிற ..

Monday, July 12, 2010

வானவில்- மதராச பட்டினமும் கருணை கொலையும்

கொலையா? கருணை கொலையா?

அருப்புகோட்டையில் ஒரு பெண்மணி வயதானவர்களை விஷ ஊசி போட்டு சாகடித்துள்ளார். இறக்கும் தருவாயில் இருப்போர் அல்லது வயதாகி நீண்ட நாள் படுக்கையில் இருப்போரின் உறவினர்கள் சொல்லி இந்த பெண்மணி மூவாயிரம் ருபாய் பணம் வாங்கி கொண்டு இவ்வாறு செய்துள்ளார். ஒருவரின் சம்மதம் இன்றி இவ்வாறு அவருக்கு விஷ ஊசி போடுவது - கொலை செய்வது போல தான். இந்த பெண்மணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ம்ம் நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன பார்க்கலாம் !!

முரளிதரனும் 800 விக்கட்டும்

இந்தியா - இலங்கை தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இந்திய பந்து வீச்சாளர்கள் சஹீர் கான், ஸ்ரீ சாந்த் காயம் காரணமாக விலகியுள்ளனர். கபில் தேவ் எத்தனை வருடங்கள் எந்த காயமும் இன்றி ஒரு மேட்ச் கூட விடாமல் விளாயாடினார்!!

நிற்க. முரளிதரன் 800 விக்கட் எடுக்க இன்னும் எட்டு விக்கட் பாக்கி இருக்க ஏன் அதற்குள் ரிடையர் ஆவதாக அறிவிக்க வேண்டும்? ஒரு மேட்சில் எட்டு விக்கட் எடுப்பதை நிச்சயமாக சொல்ல முடியுமா? கஷ்டமே. இது ஒரு மிக முக்கிய நிகழ்வு/ சாதனை என்னும் போது குறைந்தது இரு மேட்ச்களாவது ஆடியிருக்கலாம் அவர். பேட்டிங்கில் பிராட்மன் டெஸ்ட் சராசரி 99. 99 என்று அமைந்தது போல் முரளி 800-க்கு சில விக்கட்டுகள் குறைவாக தனது டெஸ்ட் வாழ்கையை முடிப்பாரோ என்று தோன்றுகிறது!

ரசித்த SMS

Life is not a rehearsal. Each day is a real show. No retakes. No rewinding. So give the best performance in all your roles.

ஹெல்த் டிப்ஸ்

சிறுநீரக நோய் ( சிறுநீரகத்தில் கல், மற்றும் இதர நோய்கள்) வராதிருக்க தினம் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரை ஒரேயடியாக லிட்டர் கணக்கில் குடிப்பதை விட ஒரு மணிக்கு ஒரு முறை 300 மில்லி தண்ணீர் என்ற அளவில் குடிப்பது உடலில் எப்போதும் தண்ணீர் இருக்கும் படி பார்த்து கொள்ளும் என்று ஒரு மருத்துவர் சமீபத்தில் சொன்னார்..


மதராசபட்டினம் பாடல்கள்

ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் ஈர்ப்பது ரொம்ப அரிதாக ஆகி வருகிறது. ஆனால் மதராசபட்டினம் படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமையாய் உள்ளது.
 
 
 
குறிப்பாய் வாம்மா துரை அம்மா பாட்டில் நடுவில் வரும் பேச்சுகளுடன் சேர்த்து பாடல் சுவாரஸ்யமாக உள்ளது. பூக்கள் பூக்கும் தருணம் அருமையான மெலடி. பிரகாஷ் குமார் இந்த சிறு வயதில் அசத்தி உள்ளார். கடந்த சில நாட்களாக தினம் இரு முறை கேட்டு வருகிறேன் இந்த பாடல்களை!

இணையத்தில் ரசித்தது

அம்மாஞ்சியின் பெங்களூர் குறித்த இந்த பதிவு மனம் விட்டு சிரிக்க வைத்தது. எப்போதாவது எழுதினாலும் மனம் விட்டு சிரிக்க வைப்பவர் அம்மாஞ்சி. வாழ்த்துக்கள் அம்மாஞ்சி !!

TamilBlogger திரட்டியில் வீடு திரும்பல்

தமிழின் முக்கிய ப்ளாகுகள் அதன் சமீபத்திய பதிவுகளை காட்டும் TamilBlogger என்ற திரட்டி தமிழில் உள்ள குறிப்பிட்ட 100 ப்ளாகுகளை காட்டுகிறது. இதில் வீடு திரும்பலும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தின் இறுதியில் கடை குட்டியாய் இணைந்துள்ளது வீடு திரும்பல் பக்கம். இயலும் போது இந்த திரட்டியை பாருங்கள்.

Thursday, July 8, 2010

வாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்

முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.

யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா?

குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம்.

உண்மையில் அத்தகைய வாக்கியங்கள் குறைவாகவும் பாராட்டும் வாக்கியங்கள் அதிகமாகவும் பேசுவதே அவர்களுக்கு நன்மை தரும்.




ஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும். தான் அப்படி இல்லையே, தன்னால் அப்படி செய்ய முடியலையே என மனதுள் குமைய கூடாது. நாம் பாராட்டும் போது அந்த தொனி வர கூடாது. அது கெடுதலே அதிகம் செய்யும்.

டேல் கார்நிஜி என்ற ஆங்கில எழுத்தாளர் மிக பிரசித்தம். அதிலும் அவரின் “ How to win Friends and influence people” பலரும் விரும்பி படித்த புத்தகங்களுள் ஒன்று. அதில் அவர் மனிதர்களுடன் நல்ல உறவு / நிறைய நண்பர்கள் வேண்டுபவர்கள் அவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள் என மறுபடி, மறுபடி சொல்கிறார்.

பசங்க - எனக்கு தமிழில் ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று. அதில் வரும் ஒரு வசனம்: " ஒவ்வொரு மனுஷன் மனசும் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கிட்டு இருக்கு" எவ்வளவு உண்மையான வரிகள்!! படத்தின் இறுதியில் கூட இறக்க இருக்கும் மாணவன் கைதட்டல் ஒலிகளால் நினைவு வந்து எழுவதாக காட்டியிருப்பார்கள். பார்க்கும் போதே நெகிழ்வில் அழ வைக்கும் காட்சி அது. இந்த படத்தின் அடி நாதமாக இருந்தது " பிறரை மனம் விட்டு பாராட்டுங்கள்" என்பதே.

கவிஞர் வைரமுத்துவை ஒரு முறை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நண்பர்கள் சிலர் சந்தித்தோம். அப்போது அங்கிருந்த வயதான ஒருவர் அவர் எழுத்துக்களை, சில வரிகளை குறிப்பிட்டு புகழ்ந்தார். வைரமுத்து மகிழ்ச்சியில் குழந்தை போல தோற்றமளித்தார். எத்தனை தேசிய விருதுகள் வாங்கிய மனிதர்! அவரையும் ஒருவர் உண்மையாக பாராட்டும் போது குழந்தை மாதிரி குதூகலம் அடைந்ததை நேரில் பார்த்தேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Even God is pleased when praised!!

எனது அனுபவத்தில் சிறு வயது முதல் இன்றுவரை பல சூழல்களில் யார் யார் என்னை எப்படி பாராட்டினார்கள் என்பதை பெரும்பாலும் நினைவில் வைத்துள்ளேன். அவற்றை அடிக்கடி நினைத்து பார்ப்பது என் மேல் எனக்கே நம்பிக்கை தரும்.

இன்னொரு பக்கம், எனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் நிச்சயம் பாராட்டி விடுவேன். உறவினர் வீட்டில் குடித்த தேநீர் நன்றாக இருந்தால் அதை தயார் செய்தது யார் என கேட்டு நேராக அவரிடமே சென்று பாராட்டினால் தான் நிம்மதி எனக்கு. போலவே அரங்கில் ஒருவர் பாடுகிறார்/ பேசுகிறார், அது பிடித்தது எனில் விழா முடிந்து செல்வதற்குள் அவரை தேடி சென்று பாராட்டிவிடுவேன்.

ஆனால் இப்படி பாராட்டுபவர்களை வாழ்வில் மிக குறைவாக தான் பார்க்கிறேன். பலரும் மற்றவர்களிடம் பாராட்டுகிறார்களே அன்றி குறிப்பிட்ட அந்த நபரிடமே பாராட்டுவதில்லை.

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு மூன்று மருமகள்கள். ஒரு மருமகளிடம் பேசும் போது மற்ற மருமகளிடம் பார்த்த நல்ல குணங்கள், அவர் வீட்டில் இருந்த போது எப்படி உபசரித்தார் என புகழ்ந்து தள்ளுவார். ஆனால் குறிப்பிட்ட அவரிடம் இவற்றிற்காக பாராட்டியிருக்க மாட்டார். இதில் என்ன பலன்? கேட்டவர் " அப்ப உங்களுக்கு அவரை தான் பிடிக்கும் போல இருக்கு" என நினைத்து கொள்வது மட்டும் தான்!! இதற்கு பதில் அவரிடமே " உனக்கு என் மேல எவ்வளவு பிரியம்; என்னை நல்லா பார்த்துக்குறியே" என சொல்லியிருந்தால் அவரும் மகிழ்ந்திருப்பார்.

உண்மையில் தன்னை முழுதாய் அறிவது தான் கடினமான செயல். நீங்கள் பாராட்டும் நபருக்கே தன் பலம் தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அவரது பலத்தை அவருக்கே நீங்கள் உணர வைக்கிறீர்கள்!! எண்ணி பாருங்கள் எத்தனை உன்னதமான செயல் இது!!

நிறைவாக பாராட்டு - சில விதிகளை பார்ப்போமா?

1. பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். செயற்கையாகவோ அடுத்து அவரிடமிருந்து வேறு உதவி எதிர் பார்த்தோ இருக்க கூடாது. உண்மையான பாராட்டிற்கும், பொய் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

2. பாராட்டுவதில் தயக்கம் கூடாது. முதலாவதாக பாராட்டுபவராக இருங்கள். முதலில் வேறு யாரும் பாராட்டி விட்டாலும் நீங்களும் எப்படி உணர்ந்தீர்கள் என சொல்லி பாராட்டலாம். 

3. பாராட்டும் போது முடிந்த வரை பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட எந்த விஷயம் பிடித்தது என சொல்லி பாராட்டுவது நலம்.

4. எதற்காக பாராட்டலாம்? எதற்காகவும் பாராட்டலாம். உடைக்காக, தலை அலங்காரத்திற்காக, அவரிடம் உள்ள நல்ல பழக்கத்திற்காக ..இப்படி அந்த நேரத்தை பொறுத்து உங்கள் மனதில் அவரை பற்றி நல்ல எண்ணம் வரும் போது பாராட்டலாம். கவனம்: எதிர் பாலார் opposite sex - எனில் உடை மற்றும் அழகுக்காக பாராட்டுவது சில நேரம் ரசிக்க படாமல் போகலாம்.

5. யாரை பாராட்டலாம்? யாரையும் பாராட்டலாம். உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அலுவலகத்தில் உங்கள் கீழ் வேலை செய்பவர் மட்டுமல்ல உங்களுக்கு இணையான நபர், உங்கள் பாஸ் என யாரையும் சரியான காரணத்துக்காக பாராட்டலாம். (சிலர் பாஸை பாராட்டுவதை " காக்கா" பிடிப்பதற்காக செய்ய கூடும். அவ்வாறு இல்லாமல், முதல் பாயிண்டில் சொன்னது போல் பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். காக்கா பிடிக்க செய்யும் முயற்சிகள் பாஸுக்கு எளிதில் தெரியும்)

6. எப்படி பாராட்டலாம்? பெரும்பாலும் நேரில் பாராட்டுவது மிக சிறந்தது. அது இயலாத போது மெயில் அல்லது போனில் பாராட்டலாம். மெயில் எனில் சிலர் அந்த பாராட்டுகளை டெலிட் செய்யாமல் நினைவாக வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.

வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே.. உங்களை சுற்றி உள்ளவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்களும் மகிழ்வார்கள். என்றும் அந்த வரிகளை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்தே நினைவில் கொள்வார்கள்.

(இன்னும் மேலேறுவோம்)

Wednesday, July 7, 2010

இன்னும் இரு காதல் கவிதைகள்

மிச்சம்

உன்னை மறக்க
உபாயங்கள் தேடினேன்
கவிதைகளை பட்டமாக்கி
பறக்க விட்டேன்
கடிதங்களை தீக்கு மணமுடித்தேன்
முகத்திலும் தாடியிலும்
முடியை பறிகொடுத்து
முகம் மாறினேன்

சட்டைகளில் சிலவற்றை
தானமளித்தேன்

எஞ்சிய நினைவு பொருட்களை
பரணுக்கு அனுப்பினேன்

எல்லாம் ஆயிற்று..

நீயே சொல்லு

என் மனசை என்ன செய்வது?


                                                                                    விளைச்சல்




ஏதோவொரு நிலத்தில்
அன்பை விதைக்க
அமோக விளைச்சல்
இன்னொரு வயலில்...

Monday, July 5, 2010

ஹார்ட் அட்டாக் வராதிருக்க வழிகள் (பாகம் 2)

முதல் பாகம் இங்கே

நன்றி: அப்பலோ மருத்துவ மனை

1. கோபம் இதய நோயாளிகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. கோபத்தை தகுந்த counseling மூலம் குறைப்பதால் அதனால் வரும் தீங்கு ( stress ) 70 % குறைகிறது.


2. நம்பிக்கை உங்கள் உடல் உறுப்புகளுக்கு நல்லது செய்யும். மத நம்பிக்கை உள்ளவர்கள், அந்த நம்பிக்கை இல்லாதவர்களை விட 8 முதல் 10 வருடங்கள் அதிகம் வாழ்கின்றனர்.

3. வருடாந்திர உடல் பரிசோதனை நல்ல ஆயுளுடன் வாழ அடிப்படை தேவையாகும்.

4. உங்கள் வார நாட்களை அலுவலதிற்காக செலவிடும் நீங்கள் உங்கள் வார இறுதி நாட்களை குடும்பத்திற்காக செலவிடுங்கள்.

5. வார நாட்களிலும், பகலில் நீங்கள் செய்ய வேண்டியதை உங்கள் அலுவல் முடிவு செய்தாலும், மாலை வேளையில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

6. மிகவும் பணி சுமை உள்ள வேலை எனில் உங்களுக்கு ஓய்வான விடுமுறை தேவை. தொடர்ந்து ஒரே வித வேலை செய்பவர்களுக்கு மலை ஏற்றம் (trekking) போன்ற அதிக செயல்பாடுகள் உள்ள விடுமுறை தேவை.
7. வருடத்திற்கு ஒரு முறை இரண்டு அல்லது மூன்று வார விடுமுறை எடுப்பது உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் உடல் நலனுக்கும் நல்லது.

8. உங்கள் வேலை ஒன்று உங்களை திருப்தி படுத்தும். அல்லது சோர்வாக்கும். 50 % க்கும் மேற்பட்டோர் வேலை சார்ந்த மன சுமையால் அவதி படுகிறார்கள்.

9. அலுவலகத்தில் மிக அதிக திட்டு வாங்குபவர், அதிக அளவு sick leave எடுக்கிறார்.

10. மன சுமை தரும் வேலைகள் இதயத்திற்கு அதிக தீங்கு தருகின்றன. உங்கள் வேலை உங்களை தொடர்ந்து துன்புறுத்தினால், அதிலிருந்து மாறுவதே நல்லது.

11. நீங்கள் செய்யும் சிறு நல்ல செயல்களுக்காக உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். வேறு யாரும் அதனை செய்ய போவதில்லை.


12. தினம் 8 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். குறைவாக தூங்குவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்பு அதிகம். தினம் குறிப்பிட்ட நேரம் தூங்க சென்று குறிப்பிட்ட நேரம் விழிப்பது நல்லது.

13. கோபத்துடன் தூங்க செல்லாதீர்கள்.

14. இசை இதயத்திற்கும் மனதிற்கும் நல்லது. அது மன சுமையை குறைக்க வல்லது.

15. மன சுமை இருக்கும் போது நீண்ட பெருமூச்சு விடுங்கள். ஒரு மணிக்கு ஒரு முறை சிறிது தூரம் நடப்பது அலுவலக சுமையை குறைக்க உதவும்.

16. பூக்கள் , செடிகள், மீன் தொட்டி இவையும் stress குறைக்க உதவும்.

17. இதய நோய்களில் மூன்றில் ஒரு பங்கு சிகரட் குடிப்பதால் வருகிறது. சிகரட்தில் நம் உடலுக்கு தீங்கு செய்யும் பொருட்கள் 4000 உள்ளன!! சிகரட் குடிப்போருக்கு இருதய நோய் மற்றும் கேன்சர் வர வாய்ப்பு அதிகம்.

18. ஒவ்வொரு ஒரு மணி நேரம் நடப்பதன் மூலம் உங்கள் வாழ் நாள் ஒரு மணி நேரம் நீட்டிக்கபடுகிறது.

19. விளையாட்டு உடலில் உள்ள வியாதிகளுடன் எதிர்த்து போரிட உதவுகிறது.

20. உடற் பயிற்சி மகிழ்வான சுரப்பிகளை உடலில் சுரக்க வைக்கிறது. உடலை அழகாக வைத்திருக்கவும் நலமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

21. தொடர்ந்து உடற் பயிற்சி செய்பவர்கள் ஹார்ட் அட்டக்கை எதிர் கொண்ட பின்னும் வாழ்கிறார்கள். உடற் பயிற்சி இருதயம் உள்ளிட்ட அனைத்து தசைகளையும் உறுதி செய்கிறது.

22. 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்வது இதயத்துக்கு நல்லது.

23. தினம் செய்யும் வீட்டு வேலைகள் (தோட்ட வேலை, படியேறுவது,etc ) ஹார்ட் அட்டக் வருவதற்கான வாய்ப்பை பாதியாக குறைக்கும்.

24. அதிகம் நடக்காமல், வேலை செய்யாமல் ஒரே இடத்தில இருப்பது சிகரட் புகைப்பது போன்ற கெடுதல் இதயத்திற்கு செய்யும்.

25. உடல் குறித்து நீங்கள் எடுக்கும் நல்ல தீர்மானங்களை தள்ளி போடாதீர்கள். உடன் துவங்குங்கள்.

Saturday, July 3, 2010

வானவில் - ஜாக்கி சேகரும் காஞ்சனா பாட்டியும்

இணையத்தில் வாசித்ததில் பிடித்தது 

ஜாக்கி சேகர் தனது வலை உலக flashback மூன்று பதிவுகளாக எழுதியுள்ளார். அதில் கடைசி பதிவில் நிறைய பழைய படங்களை வெளியிட்டுள்ளார். சமீபத்து வலையுலக சண்டையில் மோதி கொண்ட பல நண்பர்களை ஒன்றாய்  மகிழ்ச்சியாய் சிரித்தவாறு பார்க்க எவ்வளவு நன்றாக உள்ளது!! 

இந்த பதிவை வாசித்த போது, சமீபத்தில் வந்த இந்த SMS நினைவிற்கு வந்தது

ரசித்த SMS: 

Love photoes; because the best thing about it is that, it never changes, even when the people in it change. 



ராவணன் -சிறு குறிப்பு


ராவணன் பார்த்தேன். படம் என்னை கவரவில்லை. ஒரு படத்தை வெறும் technical brilliance-க்காக மட்டும் ரசிக்க பட முடியாது. அதன் சம்பவங்கள், அதில் உள்ள மனிதர்களின் துயரம் நம்மை பாதிக்க வேண்டும். ராவணனில் இது நடக்க வில்லை. ஐஸ்வர்யா ராய் என்ற எண்ணமே மனதில் நிற்கிறதே அன்றி, தமிழ் பெண், கடத்தப்பட்ட பெண் என எந்த எண்ணமும் வர வில்லை. போலவே விக்ரம் மற்றும் குழுவிற்கு அவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்ற எந்த பின்னணியும் இன்றி அவர்கள் நோக்கம் மீதும் ஈடுபாடு வரவில்லை. மணி ரத்னம் படங்கள் பல எனக்கு பிடிக்கும். ராவணன் அந்த லிஸ்டில் நிச்சயம் வராது.


தமிழ் புத்தகத்தில் வாசித்தது 

"நல்லார்   எனத்தான் நனி விரும்பிக் கொண்டாரை    
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு 
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.  (நாலடியார்) "

பொருள்: 

நல்ல நண்பர் என விரும்பி ஏற்று கொண்டவரிடம் குற்றம் இருந்தாலும் பொறுத்து ஏற்று கொள்ள வேண்டும். நெல்லில் உமி இருப்பது போல், நீரில் நுரை இருப்பது போல், பூவில் மணமற்ற வெளி மடல் இருப்பது போல் குறைகள் மனிதர்களிடம் உண்டு. எனவே நண்பர் குறைகளை பொறுத்து அவர்களை திருத்த முயல வேண்டும்.

அறிவிப்பு

வாங்க முன்னேறி பாக்கலாம் தொடர் வெகு விரைவில் மீண்டும் துவங்க உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இயலும் போது எழுத எண்ணம்.



சென்னை ஸ்பெசல்: காஞ்சனா பாட்டி

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய நாட்களில் குழந்தைகளை பார்த்து கொள்ளும் creche-கள் நிறைய வந்து விட்டன. அப்படி ஒரு creche-தான் காஞ்சனா பாட்டி. சிறிய அளவில் துவங்கி தற்போது சென்னையில் வேளச்சேரி, திருவான்மியூர் என பல இடங்களில் உள்ளனர். சற்று costly எனினும் நன்கு பார்த்து கொள்வதாக நண்பர்கள் சொல்கிறார்கள். குழந்தை பள்ளியிலிருந்து வந்ததும், கை, கால் முகம் கழுவ வைத்து சாப்பிட ஏதும் (அவர்களே தயார் செய்து) தருகிறார்கள். பின் அங்குள்ள மைதானத்தில் விளையாட வைக்கிறார்கள். பின் வீட்டு பாடம் செய்ய வைக்கிறார்கள். நாள் முழுதும் உள்ள சிறு குழந்தைகளுக்கு ரைம்ஸ் போன்ற CD-கள் போட்டு காட்டுகின்றனர். சாதாரண தொலை காட்சி நிகழ்ச்சிகள் காட்டுவதில்லை. இந்த குழந்தைகளுக்கு மதிய சாப்பாடும் அவர்களே தயார் செய்து தருகிறார்கள். உணவு hygienic ஆக இருப்பதாக சொல்கிறார்கள். 

டிவி பக்கம்: Zee - Top 10 செய்திகள்

கலைஞர் செய்திகள் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாகவும் மக்கள் மிக மகிழ்வாக வாழ்வதாகவும் சொல்ல, ஜெயா செய்திகளோ நாட்டில் ரத்த ஆறு ஓடுவதாக சொல்கிறது. இந்த இரண்டு மாதிரியும் (extremes ) இல்லாமல், சுவாரஸ்யமாக உள்ளது இரவு பத்து மணிக்கு Zee தமிழ் தொலை காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகள். Top 10 செய்திகள் என, தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு என ஒவ்வொன்றிலும் அன்றைய சிறந்த 10 செய்திகளை சுவாரஸ்யமாக தருகிறார்கள். முடிந்தால் பாருங்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...