Sunday, March 31, 2013

உணவகம் அறிமுகம்: திருநெல்வேலி ஆர்யாஸ்.

திருநெல்வேலியில் உள்ள நல்ல ஹோட்டல்களில் ஒன்று ஆர்யாஸ்.குற்றாலம் சென்று விட்டு அங்கு சாப்பிடாமல் திருநெல்வேலி வந்து விட்டோம். மாலை நான்கரை மணிக்கு சாப்பிடுற மாதிரி ஆனது.




திருநெல்வேலியில் மட்டுமே இவர்களுக்கு 9 ஹோட்டல்கள் இருக்கிறது. ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாகி விட்டால், இன்னொரு இடத்திலிருந்து உணவு வகைகள் சில நிமிடங்களில் தருவித்து விடுகிறார்கள்.

"ஹோட்டல் பிசினஸில் ஒரு ஹோட்டலாக நடத்துவது தான் கஷ்டம். நான்கைந்து ஹோட்டல் இருந்தால் உணவு வகைகள் மட்டுமல்ல, சமைக்கிற ஆட்களும் கூட குறையும் நேரங்களில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பி சமாளிக்கலாம் " என்றார் நம் நண்பர் வேங்கடப்பன்.

சரி ஆரியாஸ் ஹோட்டலுக்கு வருவோம். சப்பாத்தி, பரோட்டா, பொங்கல் போன்ற ஐட்டங்கள் எல்லாம் 40 ரூபாய். இந்த ஊருக்கு விலை சற்று அதிகம் என தோன்றினாலும் சுவை நிச்சயம் சான்சே இல்லை. சென்னையின் பல ஹோட்டல்களை விட நன்றாகவே இருந்தது.

வழக்கமான மீல்ஸ் 65 ரூபாய். ஸ்பெஷல் மீல்ஸ் 165 ரூபாய்.

தோசையில் மட்டும் 20 வகை இருக்கிறது. அதிலும் ரவா தோசையில் மட்டுமே 10 வகை ! (நம்ம ப்ளாக் ஸ்ரீராம் சார்: ஹாப்பி??)

டாக்டர் வேங்கடப்பன் 

நெல்லை வரும் பல வி. ஐ. பி களும் இந்த ஹோட்டலில் வந்து சாப்பிட தவறுவதில்லையாம். குறிப்பாக பின்னணி பாடகி தனக்கு பிடித்த உணவு என " நெல்லை ஆர்யாஸ் ஹோட்டல் ரவா தோசை" என ஒரு பத்திர்க்கை பேட்டியில் சொன்னதை கட் செய்து பிரேம் செய்து வைத்துள்ளனர்.

நாங்கள் இங்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்க, பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா & ப்ரைட் ரைஸ் தான் என்று கூறினார். அவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். பசி நேரத்தில் தேவாமிர்தமாக இருந்தது. பரோட்டா, ரவா தோசை ஆகியவையும் கொஞ்சம் டேஸ்ட் செய்தோம்.

கடைசியாய் பில்டர் காபி - அற்புதம் ! ஒவ்வொரு ஊருக்கும் காபிக்கு தனி சுவை இருக்கிறது !

இது போர்டிங் & லாட்ஜிங் ஹோட்டல். தங்கும் அறைகளும் ரீசனபில் ரேட்டில் தான் இருக்கிறது
நெல்லை சென்றால் அவசியம் சென்று சாப்பிட்டு வாருங்கள் ஆர்யாஸ் ஹோட்டலுக்கு !
************
மேலதிக குறிப்புகள்:

ஆரியாஸ் ரெசிடென்ஸ்

க்ரூப் இணைய தளம் : http://aryaasgroup.com/about.html

நாங்கள் சாப்பிட்ட ஹோட்டல் http://aryaasgroup.com/resi_aryaas.html
************
அண்மை பதிவுகள் :

Saturday, March 30, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா -விமர்சனம்

சங்க என்கிற தனது முதல் படத்திலேயே அசத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ் . பின் வம்சம் மற்றும் மெரீனா என முதலுக்கு மோசமில்லாத படங்கள் தந்தவர், இம்முறை முழுக்க முழுக்க காமெடியை நம்பி களம் இறங்கியிருக்கிறார்

கதை

விமல் மற்றும் சிவ கார்த்திகேயன் வேலையின்றி ஊரில் சுற்றி வரும் நண்பர்கள். கூடவே கல்யாணம் ஆகி வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கும் பரோட்டா சூரி. பொறுப்பின்றி இருக்கும் இவர்கள் பிரிந்தால் தான் உருப்படுவார்கள் என பெற்றோர் பல விதமாய் முயற்சிக்கிறார்கள்.



ஹீரோக்களின் ஒரே குறிக்கோள் உள்ளாட்சி தேர்தலில் நின்று கவுன்சிலர் ஆவது. கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அந்த தேர்தலும் வருகிறது. நம் ஹீரோக்கள் நின்றனரா வென்றனரா என்பதை சிரிக்க சிரிக்க சொல்கிறார்கள்

****
இதனை டபிள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதை விட ட்ரிபிள் ஹீரோ சப்ஜக்ட் என சொல்லலாம்.

முதல் ஹீரோ - சிவகார்த்திகேயன். அடுத்து - பரோட்டா சூரி. மூன்றாவது - விமல்.

சிவகார்த்திகேயனுக்கு - டைலர் மேட் ரோல். டிவி யில் எப்படி காமெடி செய்து  நம்மை சிரிக்க வைப்பாரோ அதே பணியை தொடர்கிறார். ஓட்டு சேர்க்கிறேன் என இவர்கள் அடிக்கும் லூட்டி ஒவ்வொன்றும்  வெடி சிரிப்பு ! குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க,   ஒருவர் ஓடிவந்து அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம் என சொல்ல, அதற்கு ஹீரோக்கள் போடும் பில்ட் அப் தியேட்டர் குலுங்குகிறது. கிளை மாக்சில் எப்படியும் தேர்தலில் சிவகார்த்தி ஜெயிப்பார் என நினைத்தால் அந்த காட்சியையும் அதகள காமெடியாக்கினர்.

சால்வையை  டாஸ்மார்க்கில் குடிப்போருக்கு போட்டு ஓட்டு கேட்பது, தேர்தல் பிரசாரத்தை செண்டிமெண்டலாக டாஸ் மார்க்கில் துவங்குவது என ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்

பரோட்டா சூரி. சீரியசாக முகத்தை வைத்து கொண்டு இவர் அடிக்கிற கமண்ட் ஒவ்வொன்றுக்கும் செம ரெஸ்பான்ஸ். மனுஷன் இந்த படத்தை வைத்து சம்பளத்தை நிச்சயம் உயர்த்தி விடுவார்

" கல்யாணத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி ஊமை மாதிரி இருந்தா "

" கல்யாணத்துக்கு அப்புறம்?"

" நான் செவிடு மாதிரி இருக்கேன்" .. இப்படி பெண்களை கிண்டலடிக்கும் வசனங்களுக்கு ஓஹோன்னு சவுண்ட் விடுறாங்க மக்கள்.

 ஒரு காட்சியில் ஒரு பெரிய மனிதர் சீரியசாக பேச சூரி மைண்ட் வாய்ஸ் இப்படி சொல்கிறது " ரொம்ப நல்லவரா இருக்காரே; பேசாம உன் வீட்டுக்கு நான் வீட்டோட மாப்பிள்ளை ஆயிருக்கனும்யா "

மாம்ஸ் கிப்ட் என போட்ட பைக்கில் சுற்றுவதும், 'வெட்கம் ரோஷமே இல்லையா ?" என கேட்கும் பொண்டாட்டிக்கு சொல்லும் பதிலாகட்டும் சூரி பிச்சு உதறிட்டார்.

படத்துக்கு திருஷ்டி பரிகாரமே விமல் தான். சிவா மற்றும் சூரி முன்பு இவர் சுத்தமாய் எடுபடாமல் போகிறார். அதுவும் இவருக்கும் சிவாவுக்கும் அவ்வப்போது வரும் அடிதடி சண்டைகளுக்கு  வலுவான காரணம் எதுவுமே இல்லை. பிந்து மாதவியிடம் அடி வாங்கி கொண்டு இவர் விழிப்பது அதிகம் எடுபடலை. ஆனால் பிந்து மாதவியின் அப்பா " இது ஒரு பரம்பரை வியாதி; என் மாமியார் மற்றும் என் பெண்டாட்டி எல்லாரும் இப்படி தான் என விளக்கம் சொல்ல அதற்கு அவர்கள் கட்டும் ஆக்ஷன் காட்சிகள் .. வயிற்று வலி தான் !

படத்தின் இனிய சர்ப்ரைஸ் - சிவா ஜோடியாக வரும்  ரெஜினா..




வாவ்.. குறைவான மேக் அப்பிலேயே அசத்துகிறார் . செம கியூட். வருங்கால தமிழ் படங்களில் வாய்ப்பு தாருங்கள் டைரக்டர்களே !

பிந்து மாதவி முதல் சீனில் கண்ணடித்து கொண்டே வந்து பயமுறுத்துகிறார் போக போக இவரும் மேக் அப் இன்றி வசீகரிக்கிறார்.

ஓரிரு பாடல்களே தேறுகின்றன. சிவா - ரெஜினா பாட்டு வரும் இடம் பொருந்தாமல் செய்த திணிப்பு.

கிராமங்களில் ரயிலடி தான் நண்பர்கள்  ரெகுலராய் சந்திக்கும் இடமாய் இருக்கும். அதே போல இங்கு நண்பர்கள் எப்போதும் ரயிலடி பெஞ்சிலேயே கிடக்கிறார்கள்.  அந்த பின்னணியே வித்யாசமாய் இருக்கு

டில்லி கணேஷ், இயக்குனர் மனோஜ் குமார் என பல குட்டி பாத்திரங்கள் அழகு.



பாண்டிராஜ் - தெளிவாய் காமெடியை நம்பி இறங்கியுள்ளார். இடைவேளையின் போது 2 ஹீரோயின்களும் ஹீரோக்களை அடித்து விரட்டுகிறார்கள். மீண்டும் படம் போட்டதும் வாங்கி வந்த பப்ஸ் சாப்பிட்டு முடிப்பதற்குள் சொல்லி வைத்த மாதிரி இருவரும் மன்னித்து சேர்த்து கொள்கிறார்கள். இப்படி சில தலை சுற்றல்கள் இருந்தாலும் ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி ஒரு படம் கொடுத்தமைக்கு வாழ்த்துகள் ! 

2 மணி நேரம் சிரிக்க வைத்து விட்டு, கடைசி 10 நிமிஷம் சீரியஸ் சீன் போட்டு, மீண்டும் ஜாலியாக தான் படத்தை முடிக்கிறார்கள். நிச்சயம் அந்த 10 நிமிஷம் இல்லாட்டி படத்தில் ஒண்ணுமே இல்லை என்று பொதுமக்கள் சொல்லியிருப்பார்கள். ஓரளவு சரியாக தான் அந்த எமோஷனல் காட்சிகளை ( அப்பா செண்டிமெண்ட் ) வைத்துள்ளனர்!

படம் முடிந்ததும் மக்கள் மிக திருப்தியாக சிரித்து பேசியவாறு செல்கிறார்கள்.

இணையத்தில் படம் ரிலீஸ் ஆகாமல்,  DVD  கிடைக்காமல்  தியேட்டரில் மட்டுமே பார்க்க முடியும் என்றிருந்தால் நிறையவே லாபம் பார்க்கும் இப்படம்.. திருட்டு பிரிண்ட் தடை செய்வது சாத்தியமே இல்லை என்பதால் நிச்சயம் போட்ட காசை எடுத்து விடுவார்கள்  !

ஒரு முறை பார்த்து ஜாலியாய் சிரிக்கலாம் இந்த பில்லா - ரங்காவை !

அண்மை பதிவுகள் :

சென்னையில் ஒரு நாள் மலையாள ஒரிஜினலை மிஞ்சியதா - விமர்சனம் 

Friday, March 29, 2013

சென்னையில் ஒரு நாள் -- விமர்சனம்

மிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் வைத்து மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் - டிராபிக். அதன் ரீ மேக் உரிமை வாங்கி ராதிகா சரத்குமார் தயாரிக்க, சண் பிக்சர்ஸ் வெளியீடாக வந்துள்ளது சென்னையில் ஒரு நாள்.



கதை 

செப்டம்பர் 16- அன்றைய தினம் பலரின் வாழ்வை புரட்டி போட்டு விடுகிறது.

காலை நேரம் - சாலையில் ஒரு விபத்து நிகழ்கிறது. டூ வீலர் பில்லியனில் அமர்ந்து சென்ற வாலிபன் கீழே விழுந்த மண்டையில் அடிபட்டு நினைவை இழக்கிறான் அவனது தந்தை (மருத்துவர்) ஒரே பையன் என காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்.

இன்னொரு புறம் பிரபல நடிகர் பிராகாஷ் ராஜின் 12 வயது மகளுக்கு மிக அவசரமாக இருதயம் தேவைப்படுகிறது. பெரிய இடத்து பிரஷர் எல்லாம் தந்து கேட்டாலும் பையனின் தந்தை " என் மகனை அவரசமாய் கொல்ல நான் தயார் இல்லை" என்கிறார். பின் அவர் இனி தன் மகன் பிழைக்க  வாய்ப்பு இல்லை என உணர்ந்து, இருதய மாற்றுக்கு ஒப்பு கொள்ள, அந்த இளைஞனின் இருதயத்தை மூவர் அணி எடுத்து கொண்டு பயணமாகிறது

இதில் டிரைவராக செல்பவர் சேரன். போலிசாக இருந்து லஞ்சம் வாங்கி,  Suspend ஆனவர். இதனால் அவர் தங்கை  கூட சரியே பேசாமல் இருக்க, இந்த விஷயத்தில் நல்ல பெயர் கிடைத்தால் தன் மேல் உள்ள கறையை அழிக்கமுடியும் என தைரியமாக இறங்குகிறார். இன்னொருவர் இறந்த பையனை தனது பைக்கில் வைத்து பயணமான நண்பன். மூன்றாம் நபர் ஒரு டாக்டர்.

இந்த கார் செல்லும் வழியில் உள்ள தடைகளை நீக்கும், தேவையான உத்தரவுகள் தரும் உயர் அதிகாரியாக சரத்குமார்

மிக வேகமாக செல்லும் கார் திடீரென காணாமல் போகிறது அது என்ன ஆனது சரியான நேரத்தில் இருதயம் சென்று சேர்ந்ததா என்பது க்ளைமாக்ஸ்.
************
ரீ மேக் படங்களை பார்க்கும் போது முக்கிய பிரச்சனை - ஒரிஜினலடுன் ஒப்பிட்டவாறே இருப்போம். என்ன தான் எடுத்தாலும் " ஒரிஜினல் மாதிரி இங்கே இல்லை ; அங்கே இல்லை" என சொல்வது ரொம்ப ஈசி.

ஆனால் இந்த படம் நிச்சயம் ஒரிஜினல் அளவிற்கு - சில இடங்களில் அதை விட நன்றாகவே எடுத்துள்ளனர்

முக்கிய காரணம் காஸ்டிங். சரத் குமார், சேரன், பிரசன்னா, பிரகாஷ் ராஜ் , ராதிகா இவர்கள் அனைவருமே பாத்திரத்துக்கு நன்கு பொருந்துவதோடு நன்றாக நடித்துள்ளனர். மேலும் மொழி முழுவதும் புரிவதால் இன்னும் நன்கு ரசிக்க முடிகிறது
**************
இது முழுக்க முழுக்க ஒரு எமோஷனல் படம். பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த உணர்வுகளில் ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் அழைத்து செல்கிறார்கள்.

ஆரம்பத்தில் வரும் டூயட் மற்றும் குட்டி பாடல் இரண்டுமே குட். படத்தின் இறுதியில் நாடோடிகள் சம்போ சிவா சம்போ பாணியில், கார் வேகமாக செல்லும் போது ஒரு பாட்டு. பாடல்களை விடவும் பின்னணி இசை படத்துக்கு தேவையான பரபரப்பை சரியாக கூட்டுகிறது. (மலையாள இசையமைப்பாளர் )




லஞ்சம் வாங்கி மாட்டி கொள்ளும் சேரனின் பெயர் - சத்திய மூர்த்தி :)) சேரன் ஓவர் ஆக்டிங் செய்யாமல் சரியாக செய்துள்ளார். வாழ்க்கை என்கிற நெடும் பயணத்தில், தவறு செய்யும் மனிதனுக்கும் கூட மறு வாய்ப்பு ஒரு நாள் கிடைக்கும் என்பது இவர் பாத்திரம் மூலம் அழுத்தம் திருத்தமாய் பதிவாகியுள்ளது அழகு.  

கார்த்திக் காதலியாக வரும் அதிதியின் கண்ணாடி ஆரம்பத்தில் உறுத்தி கொண்டே இருந்தாலும் போக போக பழகிடுது. குறிப்பாய் கார்த்திக் இதயத்தை தானம் தரலாம் என முதலில் சொல்பவர் இந்த காதலி தான். " Let us give him a wonderful farewell" என்று அவர் சொல்வது தெளிவாய்  படமாக்கப்பட்டுள்ளது 

பிரகாஷ் ராஜுக்கு அந்த திமிர் பிடித்த நடிகர் பாத்திரம் செமையாக பொருந்துகிறது ( ஆனால் அவர் தன் வீட்டிலே தங்காமல் வேறொரு வீட்டில் எப்பவும் தங்குற மாதிரி ஏன் காட்டுகிறார்கள்?). டிவி பேட்டியில் காமிராவை ஆப் செய்ய சொல்லி விட்டு " உனக்கு பிடிச்ச டீச்சர் யாரு ? " என மகளிடம் கேட்டு " சௌமியா டீச்சர் " எனும்போது ஒரிஜினல் பார்க்காத மக்கள் குதூகலிக்கிறார்கள்.
கணவனை அதட்டும் அந்த மனைவிக்கு ராதிகா பக்கா. " ஒவ்வொரு மனுஷனுக்கும் குடும்பம் தான் முக்கியம். வெளியிலே ஜெயிச்சாலும் குடும்பத்தில் நல்ல பேர் இல்லாட்டி அந்த மனுஷன் தோத்தவன் தான் " என்று ராதிகா பேசும் வசனத்துக்கு விசில் பறக்கிறது. ஒரு தயாரிப்பாளராக மலையாளத்தை விட ரிச்சாகவும் படம் வந்துள்ளதற்கு இவரை பாராட்ட வேண்டும்.

இருதய தானம் பெரும் பிரகாஷ் ராஜ் மகள் செம கியூட். அப்பாவின் அன்புக்கு ஏங்குவதில் தொடங்கி, தன்னை பற்றி அப்பாவுக்கு தெரியுதா என கேள்விகள் எழுதி தருவது வரை பேசாமலே நம் அன்பையும் பரிதாபத்தையும் சம்பாதிக்கிறாள்

ஏராள பாத்திரங்கள் இருந்தாலும் குழப்பமின்றி பொறுமையாய் அறிமுகம் செய்வது அழகு. இதயம் தரும் கார்த்திக்கின் பெற்றோராய் வரும் ஜெயப்ரகாஷ் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணா நிறைவு முக்கிய பாத்திரங்களை தவிர மற்றவர்கள் நிறையவே மலையாளிகள் ( இயக்குனர்க்கு ஊர் பாசம் போகுமா என்ன?)

படம் முழுக்க கிண்டி கத்திப்பாரா, போரூர் என நம்ம ஊர் பெயரை கேட்கவே செம ஹாப்பியா இருக்கு

கார் பயணிக்கும் காட்சிகளில் காமிரா பரபரப்பை கூட்டுகிறது. ஆனால் ஹாஸ்பிட்டல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தான் அங்கு அவர்களை தவிர வேறு யாருமே காணும். இரண்டு இடத்திலும் ஏதோ அவர்களுக்கு மட்டுமே சிகிச்சை நடக்கிற மாதிரியிருக்கு.

நடிகர் சூர்யாவை சின்ன பாத்திரத்தில் நன்கு யூஸ் செய்திருந்தாலும் படம் முடிந்த பின் அவர் திரையில் தோன்றி உறுப்பு தானம் பற்றி பேசும்போது மக்கள் மெரிசல் ஆகிறார்கள். 

ஏற்கனவே மலையாளத்தில் பார்த்த படம். ஒவ்வொரு காட்சியும் என்ன ஆகும் என தெரியும். இருந்தும் சில காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்குவதை தடுக்க முடிய வில்லை.

பதிவர்களில் சிலர் மலையாளத்துடன் ஒப்பிட்டு " அந்த அளவு இல்லை" எனலாம். ஆனால் தியேட்டரில் அமர்ந்து பார்த்த பலரும் படத்தை மிக ரசித்தனர் என்ஜாய் செய்தனர்

சென்னையில் ஒரு நாள் - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் ! 

வத்திக்குச்சி ...இது படமல்ல, பாடம் !

ரே ஒரு படம்... வத்திக்குச்சி .. அது சொல்லும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை .. ! படம் பார்த்ததும் எனக்கு தோன்றிய சில இங்கே :

1. ஆளு சுமாரா இருந்தாலும் சரி , நடிக்க தெரியாட்டியும் பரவால்லை; பிரபல் டைரடக்கர் தம்பியா இருந்தா ஹீரோவாகிடலாம்.

2. வில்லனுங்க எல்லாம் முட்டா பசங்களா தான் இருப்பாங்க

3. ஹீரோயின் 80 கிலோ வெயிட் இருந்தாலும் படம் முழுக்க முக்கா கை சட்டை போட்டா, குண்டா இருப்பதை ரசிகர்கள் கண்டுக்க மாட்டாங்க.



ஹீரோயின் கை - ஒவ்வொண்ணும் திருமலை நாயக்கர் தூண் மாதிரி ஆகி போனது சினிமா பாக்குறவங்களுக்கு தெரியவே தெரியாது !
                         
4. கதை - கதைக்குள் கதை - கதைக்குள் கதைக்குள் கதை- கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை.. (ஹலோ எங்கே ஓடுறீங்க.. படம் பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? மருவாதியா மேலே படிங்க !)

5. ஆக்ஷன் சீனை கூட வசனம் பேசியே விளக்கு விளக்குன்னு விளக்கலாம். ரொம்ப புதுமையா இருக்கும்.

6. பாக்ஸ் ஸ்டார் மாதிரி ஒரு ப்ரொடியூசர் கிடைச்சா எப்படி வேண்ணா ரிஸ்க் எடுக்கலாம். அவங்க ஓடி போனா என்ன அடுத்து இன்னொருத்தர் கிடைக்காமலா போயிடுவாங்க?

7. பத்து பேரோட சண்டை போடுறதுக்கு முன்னாடி தண்டால் எடுக்கணும், ஜிம் கம்பியில் ஏறி ஏறி இறங்கனும். அப்படி 2 நிமிஷம் செஞ்சா அருவா, துப்பாக்கி என எவ்ளோ ஆயுதத்துடன் ஆளுங்க வந்தாலும் பந்தாடலாம்.

8. யார் யாரை எப்போ கொலை பண்றது அப்படிங்கறதை ரோடில் அல்லது டீ கடையில் நின்னு, பத்தடி தள்ளி நிற்பவருக்கு கேட்குற மாதிரி போனில் பேசி தான் முடிவு பண்ணுவாங்க.

9. ஹீரோயின் பிரண்ட்டுண்ணா கருப்பா இல்லாட்டி குண்டா இருக்கணும்

                  

10. எந்த வில்லனா இருந்தாலும் ஹீரோவை உடனடியா கொல்ல மாட்டங்க. சில மணி நேரமோ, சில நேரம் சில நாளோ கூட அவரை கொல்லாம வச்சிக்கிட்டு வேடிக்கை பார்ப்பாங்க.

11. நிஜ வாழ்க்கையில் ரோடில் அடி பட்டு கிடந்தா கூட சீந்த யாரும் வர மாட்டங்க. ஆனா ஹீரோவானவர் யார் என்னன்னு தெரியாத ஆளுங்களுக்கு ஆதரவா ஊரில உள்ள அத்தனை ரவுடிங்க கூடவும் தில்லா மோதுவார்

12. ஹீரோயின் அம்மான்னா அவர் ஹீரோவோட பெருமைகளை எடுத்து சொல்லி " அவனையே நீ லவ் பண்ணு " என தன் மகளுக்கு அட்வைஸ் பண்ணனும்.

13. தாம்பரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தள்ளி இருக்க அம்பத்தூருக்கும், 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்க வேளச்சேரிக்கும் ஷேர் ஆட்டோ ஓடுது (நானும் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரிக்கு பல தடவை போயிட்டேன். இந்த ஷேர் ஆட்டோ ஒரு தடவை கூட நமக்கு கிடைக்கலைங்க !)

14. என்ன தான் படம் மொக்கையா இருந்தாலும் பேப்பரில் " சூப்பர் ஹிட்" அப்படின்னும், " ஆல் ஷோஸ் .. ஹவுஸ் புல் " னும் தினம் விளம்பரம் கொடுக்க மறக்க கூடாது.. !
***
போதும் ! முடிச்சுக்குவோம்...

நாங்களும் ஒரே ஒரு மெசேஜ் கடைசியா சொல்றோம்:

படத்தில் நல்ல விஷயங்களும் எங்கேயோ சில இடத்தில ஒளிஞ்சிகிட்டு இருக்கு. டிவியில் போடும்போது (மட்டும்) பார்த்து அதை கண்டு பிடிங்க !

வத்தி குச்சி - நமத்து போச்சு !

****
டிஸ்கி:  படம் ரிலீஸ் ஆகி 2 வாரம் கழிச்சு விமர்சனம் எழுதுவதா என கோபிக்கும் நண்பர்களுக்கு.. லாங் வீக் எண்டை முன்னிட்டு இவ்வாரம் ரிலீஸ் ஆகும் 2 படத்துக்கு டிக்கெட் போட்டிருக்கோம்.. அவற்றின் விமர்சனம் அடுத்தடுத்து வீடுதிரும்பலில் வெளியாகும் !
***********

அண்மை பதிவுகள் :

கேடி பில்லா கில்லாடி ரங்கா காமெடி கலாட்டா - Go For it !

வானவில் - இலியானா -கம்யூனிஸ்ட் - மேவி

Thursday, March 28, 2013

வானவில் - இலியானா- கம்யூனிஸ்ட்- மேவி- ஸ்நேகிதனே ..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் என்ன வேறுபாடு?

இந்த கேள்வி என்னை ரொம்ப நாளாக உறுத்தி கொண்டிருந்தது. பல இடங்களில் இரு அணியும் சேர்ந்து தான் தேர்தலில்  நிற்கும். சித்தாந்தத்திலும் பெரிய வேறுபாடு இருக்கிற மாதிரி தெரியலை.

நண்பனின் மாமா ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். சமீபத்தில் பேசும்போது அவரிடம் இந்த சந்தேகத்தை கேட்க இப்படி பதில் சொன்னார்

" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் முதலில் இருந்தது. அதிலிருந்து பிரிந்து போனவர்கள் தான் இந்திய கம்யூனிஸ்ட். தங்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லைன்னு தான் எதோ காரணம் சொல்லிட்டு பிரிஞ்சு போனாங்க

கேரளா, மேற்கு வங்காளம் இங்கெல்லாம் ஆட்சியை பிடித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான். கம்யூனிஸ்ட் ஓட்டு நிறைய இருக்கும் இடத்தில் பிரிஞ்சு நிற்பாங்க மற்ற இடங்களில் தேர்தலில் சேர்ந்து நிற்பாங்க.

இந்திய கம்யூனிஸ்ட் - பல நேரம் அரசாங்கத்துக்கு சாதகமா நடந்துப்பாங்க. உண்மையான கம்யூனிஸ்ட் அரசோட தவறான நடவடிக்கைக்கு எதிரா போராடணும். தங்களுக்கு கிடைக்கும்  சில பலன்களுக்காக அரசோட கை கோர்த்து போனா அப்புறம் எப்படி மக்கள் பிரச்னையை உரக்க பேச முடியும்? " என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு வேறு வித்தியாசம் இருக்கா? தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்க !

அழகு கார்னர் 

" இருக்காண்ணா  ? அட இல்லியாண்ணா ? " என "ண்ணா" விஜயை குழம்ப வைத்தவர். 

ஆரம்ப கட்டத்தில் இவர் அதிகம் கவராவிடினும் நண்பனில் ஓரளவு  பிடித்தது. பார்பி ஹிந்தி படம் பார்த்ததும் இவர் அழகில் சொக்கி போய் விட்டேன். 

நமக்கெல்லாம் ஒல்லி குச்சி நடிகைகளை சுத்தமாய் பிடிக்காது. (குண்டாய் இருந்தாலும் பிடிக்காது தான் !) இந்த இஞ்சி இடுப்பழகியை மட்டும் எப்படி பிடித்தது என்று சற்று ஆச்சரியமாய் தான் இருக்கு ! அடுத்து எப்போ தமிழ் படம் நடிப்பாரோ ஹூம் :(
                                 
பதிவர் அறிமுகம் - மேவி

மேவி என்கிற பெயர் கூகிள் பிளஸ் வட்டத்தில் மிகவும் பிரபலம். மிக இளைஞர் இப்போது தான் திருமணம் நிச்சயமாகி கடலை சாகுபடியில் பிஸி ஆக உள்ளார்.

ஆயினும் கொஞ்ச காலமாக தனது ப்ளாகை தூசு தட்டி அவ்வப்போது மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார்

கொத்து பரோட்டா, வானவில் வகையில் கலவை என்று எழுதுவது சுவாரஸ்யமாக உள்ளது. மேவியின் ப்ளாக் பெயர் : தினசரி வாழ்க்கை. வாசித்து பாருங்கள் !

என்னா பாட்டுடே ! ஸ்நேகிதனே - ஸ்நேகிதனே

எதை சொல்வது எதை விடுவது?

வைரமுத்துவின் அற்புதமான பாடல் வரிகள் ! அதை தான் முதலில் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு அழகாய் சொன்ன பாடல்கள் தமிழில் மிக குறைவு !

அடுத்து கவர்வது ஷாலினி ! வாவ் ! அந்த கண், மூக்கு மற்றும் சிரிப்பு.. .சான்சே இல்லை ! ஷாலினி அஜீத்தை மணந்த பின் திரையுலகை விட்டு விலகியது மிக பெரிய இழப்பு !

அருமையான மெட்டு மற்றும் டாமினேட் செய்யாத இசையமைத்த ரகுமான்.. கலக்கிட்டார்.பாடிய சாதனா சர்கமுக்கு தமிழில் இது முதல் பாட்டு என நினைக்கிறேன்.

படமாக்கத்தில் சினிமாத்தனம் இருந்தது தான் சற்று உறுத்தும். குழு நடனமின்றி - கணவன் - மனைவி நெருக்கத்தை மட்டும் காட்டும் பாடலாக இருந்திருக்கலாம்.

என்றைக்கும் அலுக்காத அற்புத பாட்டு இது. கேட்டு/ பார்த்து ரசியுங்கள் !



டாப் 20- இஞ்சினியரிங் கல்லூரிகள்

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது இது.

உண்மையான ஆய்வா, எப்படி இதை ஏற்கமுடியும் , இந்த காலேஜ் மிஸ் ஆகிருக்கு என எப்படியும் வாதாடலாம். ஆனால் சில காரணிகளின் அடிப்படையில் அண்ணா யூனிவர்சிட்டியால் சொல்லப்பட்ட தகவல் என்ற அடிப்படையில் இவ்வருடம் +2 படிக்கும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் பயன்பட கூடும் என்பதால் பகிர்கிறேன்


சென்னை ஸ்பெஷல் : ஒண்ணே கால் லட்சத்தில் வீடு

ஒண்ணே கால் லட்சத்தில் குரோம்பேட்டையில் வீடு என விளம்பரம் தூள் பறக்குது. பஸ்களின் பின் பக்க விளம்பரமென்ன.. டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு பக்க விளம்பரமென்ன... 

என்னடா இது இந்த விலைக்கு காலி இடமே கிடைக்காதே வீடு எப்படி கிடைக்கும் என அவர்கள் தந்திருந்த நம்பருக்கு தொலை பேசினேன் . 

ஒண்ணே கால் லட்சம் என்பது முதலில் கட்டும் பணமாம். மத்ததெல்லாம் லோன் போட்டு கட்டணுமாம். 20 லட்சத்தில் இருந்து சிங்கிள் பெட் ரூம் வீடு இருக்காம். 



இவர்கள் சொன்ன பிறகு கவனித்தால் " நோ மோர் டவுன் பேமென்ட் வொர்ரீஸ்" என்ற வரிகளை கவனித்தேன். அதை யாரு கவனிக்கிறா? இவர்களே ஒண்ணே கால் லட்சத்தை தானே பெரிது பண்ணுகிறார்கள் ! அதுவும் ஒண்ணே கால் லட்சத்தில் வீடு என்று தான் சொல்கிறார்கள். 

யாரோ அமர் பிரகாஷ்னு  பில்டராம். குவாலிட்டி எப்படி இருக்குமோ தெரியலை. 

வானவில்லில் ஒரு சின்ன பாரா எழுத ஆசைப்பட்டு கால் செய்ய,  இப்போ அங்கிருந்து ஒரு பெண்மணி நமக்கு கால் மேலே கால் செஞ்சிக்கிட்டு இருக்காங்க !

அய்யாசாமி கார்னர்

அய்யாசாமி தன் நண்பரிடம் ஒரு முறை பெருமையாய் இப்படி சொன்னார்:

" ஒரு சில வீட்டில கிளம்பும் போது தான் வண்டி சாவி எங்கே, வீட்டு சாவி எங்கே அப்படின்னு தேடுவாங்க. நம்ம வீட்டில் அந்த பிரச்சனையே வராது. ஏன்னா எல்லா சாவியும் கரக்டா குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கும் "

நண்பர் சொன்னார் " எங்க வீடு இதுக்கு ஒரு படி மேலே; சாவி எப்பவும் சரியா ஒரே இடத்தில் வைப்போம். அதுக்கு மேலே எல்லா சாவிக்கும் ஒரு டூப்ளிகேட் சாவியும் வச்சிருப்போம். இந்த டூப்ளிகேட் சாவி எல்லாத்தையும் அது எதற்கான சாவின்னு ஒரு சின்ன அட்டையில் எழுதி அந்த கீ செயினுடன் வைத்திருப்போம். எப்பவாவது சாவி காணும்னா உடனே அந்த பையிலிருந்து ஒரு நிமிடத்தில் ஸ்பேர் கீ எடுத்துடுவோம் " என்றார்

அய்யாசாமி வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க கூடாது. " திருடன் வந்தா அந்த பை மட்டும் எங்கே இருக்குன்னு பார்த்தா போதும்.. இல்லே?" என்று கேட்க நண்பர் முறைத்தார் பார்க்கணுமே !

******
அண்மை பதிவு :


Wednesday, March 27, 2013

திருவண்ணாமலை கிரிவலம் - அறியாத தகவல்கள் - நேரடி அனுபவம்

திருவண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய கேள்விபட்டுள்ளேன். பலர் இதற்கென்று முன்னரே திட்டமிட்டு செல்வார்கள். எனக்கு நிகழ்ந்தது மிக எதேச்சையான ட்ரிப். வழக்கறிஞர் நண்பன் பிரேம் ஒரு ஞாயிறு மாலை வேறு சில விஷயங்களுக்காக போன் செய்து பேசியபோது, திருவண்ணாமலை கிளம்பிக்கிட்டே இருக்கேன்  நீயும் வர்றியா? என்று கேட்க, " சரி வர்ரேன்" என்றேன். போன் பேசி அடுத்த முப்பதாவது நிமிடம் அவனது காரில் நாங்கள் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

இனி கிரிவல அனுபவங்கள் :

பவுர்ணமி முழுதுமே நடக்கலாம் எனினும் இரவில் நடப்பது ரொம்ப விசேஷம். நாங்கள் மாலை ஆறரைக்கு சென்னையில் கிளம்பினோம். சாப்பிட்ட உடன் நடப்பது சிரமம் என திண்டிவனத்தில் இரவு சாப்பாடு முடித்து விட்டு அடுத்த ஒண்ணரை மணி நேரம் பயணம் செய்து திருவண்ணாமலை அடைந்தோம்.

திருவண்ணாமலை ....

கார் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியாத படி ஜனத்திரள் வந்து விடுகிறது. ஆனால் நாம் நடக்க துவங்கும் கிரி வல பாதை இன்னும் 1 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. இந்த தூரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் 10 ரூபா வாங்கி கொண்டு நம்மை அழைத்து போகிறது

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று 13 கிலோ மீட்டரை நடந்தே சுற்றி வருகிறார்கள். வழியில் உள்ள கடவுளை வணங்குகிறார்கள். இந்த வரி தான் இதற்கு முன் அறிந்தது. நேரில் பார்க்கும் போது ஏராள வித்தியாச அனுபவங்கள் !

இங்கு கடவுள், மலை மேலேயே / மலை உருவிலேயே இருப்பதாக நம்புகிறார்கள். இந்த கடவுளை வணங்கும் விதம் அதனை சுற்றி வருவது தான். இது தான் கிரிவலம்.

கிரிவலம் செல்லும்போது அமைதியாகவும், அரட்டை அடிக்காமலும், வேகமாய் நடக்காமல் மெதுவாக மந்திரங்கள் சொல்லியபடி செல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலானோர் இங்கு நடக்கும் போது செருப்பு அணிவதில்லை (வெகு சிலர் அணிகிறார்கள். யாரும் தடுப்பதில்லை)

பஞ்ச பூதங்களில் வாயு, நீர் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஒரு இடத்தை சிறப்பாக கருதுவார்கள். அப்படி நெருப்புக்கு உரிய தளம் திருவண்ணாமலை.

பவுர்ணமி அன்று சித்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்றும் அன்று அங்குள்ள மூலிகை மனத்தை நுகர இரவு நேரத்தில் நடப்பது தான் நல்லது என்றும் கூறுகிறார்கள்

திருவண்ணாமலையில் உள்ள பெரிய சிவன் கோவிலில் இருந்து நம் நடை பயணம் துவங்குகிறது. ஆனால் கிரிவலம் வரும் மக்களில் 10 % கூட கோவில் உள்ளே செல்வதில்லையாம். வெளியில் இருந்து வணங்கி விட்டு நடக்க துவங்கி விடுகிறார்கள். நாங்கள் நடக்க துவங்கிய இரவு 11. 30 க்கு வெளியிலேயே அவ்வளவு தள்ளு முள்ளு.

சுற்றி வரும் பாதை முழுதும் 12 லட்சம் செலவில் சோடியம் விளக்குகள் போட்டு தந்தது நடிகர் ரஜினி காந்த் ! சொல்லப்போனால் அவர் அருணாசலம் என்று இந்த ஸ்தல பெயரில் படம் நடித்த பின் இந்த இடம் மிக பிரபலமானதாகவும், அதன் பின் கூட்டம் இன்னும் அதிகமானதாகவும் சொல்கிறார்கள்

நடப்பவர்களில் பாதிக்கு பாதி பெண்களாக உள்ளனர் இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எதோ சபரிமலை மாதிரி ஆண்கள் தான் அதிகம் செல்வார்கள் என மனதில் கற்பனை செய்திருந்தேன்.

நாம் நடக்கும் 13 கிலோ மீட்டர் முழுதும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், , எம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய 9 லிங்கங்கள் உள்ளன. சிலர் மட்டுமே அந்த லிங்கம் ஒவ்வொன்றும் பார்த்து வருகின்றனர் நாங்கள் நேரே நடை ராஜா தான். (பல முறை சென்ற நண்பனும் கூட ஒரு முறையும் எல்லா லிங்கமும் பார்த்ததில்லை என்றான்; மலையை சுற்றி நடப்பது தான் முக்கியமாம் )

13 கிலோ மீட்டர் முழுதும் இரு புறமும் கடைகள் தான். வியாபாரம் அமோகம் ! குறிப்பாய் ஏராளமான சாப்பாட்டு கடைகள். அதிலும் சிறு இட்லி கடைகள் தான் நிறைய ! விடிய விடிய இட்லி சுட்டு தர, மக்கள் பொறுமையாய் காத்திருந்து சாப்பிடுகிறார்கள். பழங்கள், காபி , திருநெல்வேலி அல்வா என சாப்பாட்டு விஷயங்கள் அநேகம்

சாப்பாட்டு கடை தவிர்த்து அதிகம் இருப்பது பெண்கள் சமாசாரங்கள். ஹேர்பின், கிளிப் துவங்கி அடுப்படிக்கு தேவையான சாரணி வரை எக்கச்சக்க கடைகள். பெண்கள் ஆன்மீகத்தின் இடையே சுவாரஸ்யமாய் இவற்றை பர்ச்சேஸ் செய்கிறார்கள்

நடப்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எடுத்து கொள்கிறார்கள். மொபைலில் ஏதேனும் சுலோகம் வைத்து கொண்டு, அதை கேட்டபடி தனியாய் நடப்பவர்கள்; கைக்குழந்தையுடன் நள்ளிரவில் நடந்து செல்லும் குடும்பங்கள், ஒரு குழுவாய், இசை உபகரணங்களுடன் பஜனை செய்தபடி செல்லும் மக்கள், நடக்கிற தூரம் தெரிய கூடாது என ஓடி பிடித்து விளையாடிய படி செல்லும் இளைஞர் கூட்டம், இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி செல்லும் நம்மை மாதிரி ஆட்கள்.....

இவர்களை விட நம்மை பெரிது ஆச்சரியப்படுத்துவோர் குளித்து விட்டு ஈர துணியுடன் வெறும் வேஷ்டியுடன் சிவமந்திரம் சொன்ன படி தனியே நடந்து போகும் சிலர் தான். (நமக்கு சட்டை, காதுக்கு ஸ்கார்ப் போட்டு கொண்டு நடக்கும் போதே குளிருது; ஈரத்துடன் சட்டை போடாமல் நடந்து போகும் சிலரை பார்த்தால் ஆச்சரியமாய் இருந்தது )

கிரிவலத்துக்கு மிக அதிக கூட்டம் கார்த்திகை தீபத்தின் போது தான் ! திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றிய பின் தான் தமிழகம் எங்கும் வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். அப்படி புகழ் பெற்ற கார்த்திகை தீபம் காண கூட்டம் மொய்த்து விடுமாம். 13 கிலோ மீட்டருக்கும் ஜன திரள் இருக்க, கூட்டம் மெதுவாக ஊறுமாம்.

அடுத்து சித்திரா பவுர்ணமி அன்று பல இடங்களில் வசிக்கும் சித்தர்களும் இங்கு மீட் செய்வார்கள் என்று சொல்கிறார்கள் ( பொதுவாகவே இங்கு சித்தர்கள் நிறைய வசிக்கிறார்கள் என்று கேள்வி..சித்தர்கள் போல ஆக்டிங் தரும் பலரையும் நாங்கள் கண்டோம் )

ஆங்காங்கு 5 ரூபா கட்டின கழிப்பிடம் இருக்கிறது. ஆனால் ஒன் பாத் ரூம் என்றால் ஆண்கள் ஆங்காங்கு நடக்கும் வழியிலேயே ஒதுங்கி  முடிக்கிறார்கள். 5 ரூபா வாங்குவதாலோ என்னவோ, அவ்வளவு கூட்டத்துக்கும் கழிப்பிடம் ஓரளவு சுத்தமாய் இருந்தது (ஒரு வேளை நாங்கள் சென்ற இடம் மட்டும் நல்லா இருந்ததா தெரியலை) 

கண் தெரியாதோர் சிறு வேன் வைத்து கொண்டு அதில் சாமி பாட்டு பாடுகிறார்கள். வெளியே ஒரு சிலர் நின்று உண்டியலில் தானம் கேட்கிறார்கள்.

குறைந்தது 50 கிளி ஜோசியக்காரர்களையாவது கண்டேன். ஒவ்வொருவரிடமும் யாராவது அந்த நள்ளிரவில் ( இரவு 2 மணி !!) ஜோசியம் பார்த்து கொண்டிருந்தனர். பவுர்ணமி அன்று ஜோசியம் பார்ப்பது விசேஷமாம் !
நடப்பதில் பெரும்பகுதி பஸ் ரூட் தான். கிரிவலம் அன்று மட்டும் அந்த பாதையில் பஸ் போகாமல் டைவர்ட் செய்து விடுகிறார்களாம் ! நடுவில் திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டையும் கடக்கிறோம். நடுவில் 1 கிலோ மீட்டருக்கு பஸ்சும் நாம் நடக்கும் பாதையில் செல்கிறது. பஸ் ரூட் என்பதால் ரோடு செம நீட்டாக உள்ளது. திருப்பதி மலைக்கு நடந்தே செல்வது போன்ற ஒரு அனுபவம் தான். ஆனால் அது மலை; இது சம தளம். அது தான் முக்கிய வித்யாசம்.

அங்கு மக்கள் நடக்கிற விதத்தை சொல்கிறேன்: நம் வரிசையிலேயே 5 முதல் 10 பேராவது வருவார்கள். நமக்கு சற்று முன்னர் தள்ளி ஓரடி இடைவெளியில் இன்னும் 10 பேர் சென்று கொண்டிருப்பார்கள். போலவே பின்னால் ஓரடி தள்ளி 10 பேர் வந்து கொண்டிருப்பார்கள். இப்படி சாரை சாரையாய் எறும்பு போல மக்கள் கூட்டம் செல்கிறது !

ரோடுக்கு இருபுறமும் நடைபாதை இருந்தாலும், அதில் நடந்தால் நடைபாதை சற்று ஷேக் ஆகிறது. டைல்ஸ் சரியே போடலை போலும். அதற்கு நடு ரோடில் நடப்பதே நல்லது என்று நடக்க துவங்குகிறோம் ; நடைபாதை மேல் நடப்பது மிக சிலரே !

ஆன்மிகம், பிரார்த்தனை என மக்கள் வருவதாலோ என்னவோ, பிச்சைகாரர்கள், சாமியார்கள் என பலரும் நடைபாதை முழுதும் அமர்ந்துள்ளனர். பவுர்ணமி ஒரு நாள் கலக்ஷன் வச்சு ஓரிரு வாரம் ஓட்டிடலாம் என நினைக்கிறேன்

ரமண மகிரிஷி ஆசிரமம் , மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், புரொபஷனல் கூரியர் நிறுவனத்தினர் என வழியில் பல்வேறு அமைப்புகளும் அன்னதானம் செய்கின்றன. நள்ளிரவு 2 மணிக்கு மக்கள் பெரும் கூட்டமாக கியூவில் பொறுமையாய் காத்திருந்து சாப்பாடு வாங்கி உண்ணுகின்றனர். இவர்கள் இரவு சாப்பாடு சாப்பிடவே இல்லையா? அல்லது அப்போது ஒரு ரவுண்ட் முடித்து விட்டு ரொம்ப நேரம் விழித்திருப்பதால் இன்னொரு ரவுண்ட் சாப்பிடுகிறார்களா என்றெல்லாம் கேள்வி மனதில் ஓடியது

சன் டிவி மற்றும் ரஞ்சிதா புகழ் நித்யானந்தாவுக்கும் பெரும் இடம் அங்கிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு அன்னதானம் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஒரு டிவி வைக்கப்பட்டு அதில் நித்யானந்தா சொற்பொழிவு ஆத்தி கொண்டிருந்தார்

பல சிறு ஊர்களை தாண்டி வருகிறோம். அதில் அடி அண்ணாமலை என்கிற ஊர் வந்தால் கிட்டத்தட்ட மலைக்கு கீழே வந்து விட்டோம் என்றாகிறது. அதன் பின் ஓரிரு கிலோ மீட்டர் நடையில் நம் பயணம் முடிவடைகிறது.

நடக்கும் போதே அவ்வப்போது மலையை பார்த்து கொண்டே தான் நடக்கிறோம். சிவன் அந்த மலை வடிவில் இருக்கிறார் என்பதால் அந்த மலையை சுற்றி வருவது தான் ஐதீகம். . இறங்கி முடித்த பின் ஓரிடத்தில் மலையை நோக்கி வணங்கி விட்டு சூடம் ஏற்றி காட்டிய பின் நம் கிரிவலம் முடிவுக்கு வருகிறது

சென்னை டு திண்டிவனம் வரை சாலை அருமை. திண்டிவனம் துவங்கி திருவண்ணாமலை வரை தற்போது சாலை மிக மிக மோசமாய் உள்ளது.

காரில் சென்றால், சென்னை டு திருவண்ணாமலை பயணம் 4 மணி நேரம், நடக்க 4 மணி நேரம்; திரும்ப 4 மணி நேரம் என 12 மணி நேரத்தில் கிரிவலம் முடித்து வீடு திரும்பி விடலாம்.

அதிகாலை மூன்று மணி அளவில் நாங்கள் கிரிவலம் முடிக்க, சிலர் அப்போது தான் நடக்க துவங்கியிருந்தனர் !

இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இன்றைக்கும்  கூட திருவண்ணாமலையில் கிரிவல நாள் தான் !

ஓம் நமச்சிவாயா !
********



Tuesday, March 26, 2013

தொல்லை காட்சி - ராதிகா சரத்குமார் - ஆசை- விசு -தகேஷிஸ் கேசில்

சீரியல் பக்கம் ஆசை - விஜய் டிவி 

தெரியாத்தனமா ஒரே ஒரு நாள் இந்த சீரியலை பாத்து தொலைச்சிட்டேன். வழக்கமா மாமியார், மருமகள் பத்தி தான் பேசுவாங்க. இதில் எதோ ஆபிஸ் பத்தி மட்டுமே வருதேன்னு தான் பார்த்தேன்.

எந்த ஆபிசில் இப்படி எந்த வேலையும் பார்க்காம பேசுவாங்களோ தெரியலை ! 8 மணி நேரமும் , பெண்களை பார்த்த படி, அல்லது பெண்களுடன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சண்டையிட்டவாறு, நண்பரிடம் அரட்டை அடித்தவாறு எங்கு சார் இருப்பாங்க? எப்பவாவது அலுவலகத்தில் வேலை செய்தவரை விட்டு திரைக்கதை ,வசனம் எழுத சொல்லலாம். அதிலும் அந்த டயலாக் எல்லாம் சுத்த டிராமாத்தனம் !

டிவி என்கிற மீடியாவை எவ்வளவு அழகா உபயோகிக்கலாம் ! அதவும்... ஆபிஸ் அங்குள்ள பாலிடிக்ஸ் என்பது மிக பெரிய கதைக்களம். அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்காங்க தயவு செய்து பாத்துடாதீங்க.. இந்த சீரியலை !

மக்கள் டிவியில் திருக்குறள் 

மக்கள் டிவி சத்தமின்றி பல நல்ல நிகழ்சிகள் தந்து வருகிறது. அவற்றில் ஒன்று... திருக்குறள் குறித்த நிகழ்ச்சி.

தொலை பேசியில் நிலையத்துக்கு போன் செய்ய, நிகழ்ச்சி தொகுப்பாளினி (யப்பா. இதை சொல்லவே கஷ்டமா இருக்கு ! எப்படி தான் முழுக்க தமிழில் பேசுறாங்களோ !) ஒரு திருக்குறளின் ஆரம்ப வார்த்தையும் நடுவில் வரும் சில வார்த்தைகளும் சொல்லி கண்டு பிடிக்க சொல்கிறார். " வேணும்னா வீட்டில் இருக்கவங்க கிட்டே கேளுங்க" என சொன்னாலும் கூட, மக்கள் பெரும்பாலும் திருக்குறள் வரிகளை தவறாகவே சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கேட்கும் அனைத்தும் மிக பிரபல குறள்களே !

லைன் கிடைச்சா ஒரு தடவை பேசி பாக்கணும்னு அப்பப்ப தோணும்..அப்புறம் அப்படியே மறந்துடும் !

தகேஷிஸ் கேசில் 

போகோ டிவி யில் வரும் நிகழ்ச்சியில் ஒன்று தகேஷிஸ் கேசில்



ரொம்ப வினோதமான விளையாட்டுகள் நடத்துவார்கள். சறுக்கு பாறையில் ஓடுவது, உயரமான வழுக்கும் இடத்தில் கயிறு பிடித்து கொண்டு தொங்குவது.. இப்படி பல விளையாட்டுகள். பங்கேற்கும் மக்கள் விழுவதும், தோற்பதும் தான் பார்க்க காமெடியாய் இருக்கும்.

எல்லா விளையாட்டிலும் பெரும்பாலானோர் தோற்க ஒருவரே ஜெயிப்பர். மொழி தான் பேஜாரா இருக்கும். சைனீசோ, வேறு என்ன கருமமோ.. புலம்பி தள்ளுவாங்க ஒண்ணும் புரியாது.

குட்டி பசங்க ஆர்வமாய் பார்த்தாலும் நாமும் கொஞ்ச நேரம் சேர்ந்து சிரிக்க கூடிய நிகழ்ச்சி இது !

விசுவின் மக்கள் அரங்கம் 

சன்னில் பல வருடங்கள் வந்த அரட்டை அரங்கம் அப்புறம் சில வருடங்களாய் ஜெயாவில் தொடர்கிறது.

சன்னில் வரும்போது அடியேன் 3 முறை அரட்டை அரங்கத்தில் பேசியுள்ளேன். இதற்கான செலக்ஷன் - 3 நாள் நடக்கும். நீங்கள் 3 அல்லது 4 நாள் ஆபிசுக்கு லீவு போட்டு விட்டு, கியூவில் காத்திருந்து பேசணும். ஒவ்வொரு ரவுண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து கடைசியில் பேசும்போது வீடியோ எடுத்து அதை விசுவே பார்த்து பின் டிவியில் யார் பேசணும் என தேர்வு செய்வார். நான்காம் நாள் தான் ஷூட்டிங் !

சன்னில் வரும்போது நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருந்த விசு இப்போது சேர் போட்டு அமர்ந்து விட்டார். நிகழ்ச்சி ஏனோ முன்பளவு சுவாரஸ்யம் இல்லை.

இருந்தாலும் எப்போதேனும் சானல் மாற்றும் போது சிலர் நன்கு பேசினால் பார்க்கிற வழக்கம். இவ்வாரம் மிலிட்டரியில் பணியாற்றிய ஒருவர் தங்கள் பணி எத்தனை கடினமானது என்றும், மிலிட்டரி காரர்கள் வாழ்க்கையையும் நெகிழ்ச்சியுடன் பேசினார். திரும்ப வந்த பிறகு சமூகம் தங்களை அதிகம் மதிப்பதில்லை என்றும் வருத்தத்தை பதிவு செய்தார். ஆயினும் நம்பிக்கை குறையாத இவர் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பதாகவும், வாழ்க்கையில் வெல்ல முக்கிய தேவை அவரவர் "attitude " தான் என்றும் பேசியது நிறைவு

நீயா நானா - பாரம்பரிய உணவு Vs மாடர்ன் உணவு

இவ்வார நீயா நானாவில் பாரம்பரிய உணவு Vs மாடர்ன் உணவு - அவ்வளவு சுவாரஸ்யமாய் செல்லவில்லை. ஆயினும் ஸ்பெஷல் கெஸ்ட் வந்த பின் சற்று சூடு பிடித்தது. இத்தகைய உணவு சாப்பிடுவதன் பின் உள்ள அரசியல் (!!??) பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தனர்

பாரம்பரிய உணவை ஆதரித்து பேசிய மருத்துவர், உணவு சம்பந்தமாய் பல வரலாற்று தகவல்கள் மட்டுமல்லாது இன்றைய நிலையும் அருமையாய் பேசினார். குறிப்பாக " அமெரிக்காவில் மாடர்ன் உணவு தான் சாப்பிடுகிறார்கள் அங்கு நூறாண்டு வாழ வில்லையா? 'என கேட்கப்பட, " ஆம். ஆனால் அமெரிக்கா தான் உலகில் புற்று நோயில் நம்பர் ஒன் தெரியுமா? அதற்கு மாடர்ன் உணவு மட்டுமே காரணம் இல்லை. ஆனால் அதுவும் ஒரு காரணம் தான் என்றார் அவர்.

எந்தெந்த உணவு கெடுதல், எது நல்லது என்று நீண்ட டிஸ்கஷன் ஹவுஸ் பாசுக்கு மிக பிடித்தது, ஒரு லெவலுக்கு மேல் நான் தான் - கொர் .....கொர் !

சென்னையில் ஒரு நாள் ஆடியோ ரிலீஸ் 

ராதிகா சரத் குமார் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீடு - சென்னையில் ஒரு நாள். மலையாளத்தில் டிராபிக் என்று வந்த சக்கை போடு போட்ட படத்தின் ரீ மேக். (டிராபிக் விமர்சனம்: இங்கு)

ஆடியோ ரிலீசில் சரத்குமார், தனுஷ், சேரன் என பலரும் ஜாலியாக பேசினர். குறிப்பாக சரத் குமார் - தன் மனைவி ராதிகாவை செமையாக நக்கல் அடித்தார். அவரும் அதை ஸ்போர்டிவ் ஆக எடுத்து சிரித்து கொண்டிருந்தார் (வீட்டுக்கு போனதும் பாடி பில்டரின் பாடி என்ன ஆனதோ?)

தனுஷ் கூட ராதிகா மாதிரியே பேசி கலாய்த்தார். சேரன் டிரைவர் ஆக நடிப்பது தான் சற்று பயமா இருக்கு. சீனிவாசன் அற்புதமாக நடித்த பாத்திரத்தை இவர் எவ்ளோ டிராமா செய்ய போறாரோ?

சின்ன தலைவி ரம்யா நம்பீசன் ஒரிஜனலில் ஒரு சிக்கலான பாத்திரத்தில் நடித்தார். தமிழில் அவரை நடிக்க வைக்காததை வன்மையாக கண்டிக்கிறோம். (நடிக்கா விட்டாலும் , ஆடியோ ரிலீசுக்கு அந்த குயில் வந்து அழகாய் கூவியது ஹீ ஹீ )

Monday, March 25, 2013

இந்தியா ஆஸியை 4-0 என ஜெயிக்க யார் காரணம்?

ந்தியா ஆஸ்திரேலியாவை 4-0 என அடித்து நொறுக்கியுள்ளது. இப்படி நாலு டெஸ்ட் போட்டி தொடரில் நான்கிலும் இந்தியா வெல்வது முதல் முறை. அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரே என்பது கூடுதல் மகிழ்ச்சி.

ஆஸி அணி இம்முறை மிக பலவீனமான அணி என்பது ஓரளவு உண்மை தான். குறிப்பாக பலருக்கும் இந்திய பிட்ச்களில் ஸ்பின் ஆடி வழக்கமில்லை. ஆனால் இந்தியன் பிட்ச்களை பொறுத்த வரை மிக வலுவிழந்த நியூசிலாந்து, (சற்று முந்தைய )மேற்கு இந்திய தீவு அணிகள் கூட இப்படி ஒரு ஒயிட் வாஷ் சந்தித்ததில்லை.

இந்த ஆஸி அணியின் பலகீனமாக கருதப்படுபவை :

மோசமான துவக்க ஆட்டக்காரர்கள், அதை விட மோசமான மிடில் ஆர்டர் வீரர்கள்

லயன் தவிர வேறு சரியான ஸ்பின் பவுலர் இல்லை

ஆட்டத்தின் நடுவில் சில வீரர்கள் மேல் எடுத்த ஒழுங்கு நடவடிக்கை; துணை கேப்டன் வாட்சன் கோபித்து கொண்டு ஊருக்கு கிளம்பியது

வழக்கமான ஆஸி அணிகளிடம் இருக்கும் வெறி ! குறிப்பாய் sledging -இல்லாதது (கடைசி டெஸ்ட்டில் மட்டும் sledging -இரு பக்கமும் சற்று தலை தூக்கியது)

இந்தியா 4-0 என ஜெயிக்க காரணமான சில வீரர்கள் பற்றி ....

முரளி விஜய் 

சீரிஸில் இரண்டு செஞ்சுரி அடித்த ஒரே வீரர் நம்ம விஜய் தான். (இரண்டும் 150 பிளஸ் ஸ்கோர்கள் ) குறிப்பாக மொஹாலி டெஸ்டில் தவான் புகுந்து விளையாண்ட போது, அவருக்கு நிறைய ஸ்ட்ரைக் கொடுத்து, மிக பொறுமையாய் இவர் ஆடி சேர்த்த 167 ரன்கள் பெரிதும் கை கொடுத்தது.

கடைசி டெஸ்ட் வரும்போது இவரோ அல்லது அஷ்வினோ - ஒரு தமிழக வீரர் தான் மேன் ஆப் தி சீரிஸ் வாங்குவார் என நினைத்தேன். நான்காவது டெஸ்ட்டின் கடைசி இன்னிங்க்சில் தேவையின்றி ரிவர்ஸ் ஸ்வீப் செய்து அவுட் ஆனார். புஜாரா போல அவுட் ஆகாது இருந்திருந்தால் இவருக்கு கூட மேன் ஆப் தி சீரிஸ் கிடைத்திருக்கலாம்.

இந்த சீரிஸில் இரு அணிகளிலும் சேர்த்து அதிக ரன் சேர்த்தவர். அடுத்த சீரிசுக்கு நிச்சயம் இவர் உண்டு. வெளிநாட்டு Bouncy பிட்ச்களில் எப்படி விளையாடுகிறார் என பார்ப்போம் !

புஜாரா 

இந்தியன் பிட்ச்களில் புஜாரா = கிளாஸ் ! ரொம்ப ரொம்ப அட்டகாசமாக விளையாடுகிறார்.டிராவிட் மாதிரி நிதானம், அதே நேரம் லூஸ் பந்துகளை தவற விடுவதே இல்லை. இங்கிலாந்து, ஆஸி போன்ற நல்ல டீம்களுடன் அசத்தலாக ஆடும் புஜாரா அவசியம் ஒரு நாள் அணியிலும் இடம் பிடிக்க தகுதி உள்ளவர். க்ளோஸ் இன்னில் நல்லதொரு பீல்டர்.

நான்காவது டெஸ்ட் நாம் ஜெயிக்க இவர் அடித்த 82 மிக முக்கிய காரணம். அவர் சீக்கிரம் அவுட் ஆகியிருந்தால் மேட்ச் நம் கையை விட்டு போயிருக்க கூடும். இத்தனைக்கும் பிராக்ச்சர் ஆன ஒரு விரலுடன் ஆடியுள்ளார் ! வெல்டன் புஜாரா !

அஷ்வின் 

இங்கிலாந்துக்கெதிராக சற்று நன்கு பந்து வீசாத அஷ்வின் இம்முறை consistent ஆக நன்கு வீசினார்.... (கடைசி டெஸ்ட்- கடைசி இன்னிங்க்ஸ் தவிர)

அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற முறையில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கி, இந்தியாவின் ஸ்ட்ரைக் பவுலர் என தோனி கூறும் அளவிற்கு - நம்பிக்கை நட்சத்திரமாய் இருப்பது அஷ்வின் !  பேட்டிங்கில் இம்முறை அதிகம் ஷைன் பண்ணலை. 5 பேட்ச்மேன்களுடன் விளையாடும்போது அஷ்வின் சற்று ரன்கள் சேர்த்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.

ரவீந்திர ஜடேஜா 

சீரிஸின் மிக பெரிய ஆச்சரியம் ஜடேஜா தான். சென்னை சூப்பர் கிங்க்சில் மிக அதிக விலை கொடுத்து வாங்கினாலும், தோனிக்கு அவரை பிடிக்கலையோ என்று தான் தோன்றியது. அதற்கு தகுந்த படி அவர் T -20, ஒன் டே என அனைத்திலும் சொதப்பி டிராப் அவுட் ஆனார். ஆனால் ரஞ்சி டிராபியில் கலக்கு கலக்கு என கலக்கி, அதன் அடிப்படையில் மீண்டும் அணிக்குள் வந்தார்

Ravindra Jadeja celebrates after dismissing Michael Clarke
ஆஸி கேப்டனை 5 முறை அவுட் ஆக்கினேன் என சைகை காட்டும் ஜடேஜா 

ரொம்ப சாதாரண பவுலர் தான். ஆனால் ஒவ்வொரு பந்தும் விக்கெட்டுக்கு நேரே வீசுகிறார். இவர் பந்தை கண்டிப்பாய் ஆடி ஆகணும் எனும்போது கேட்ச் மற்றும் எல். பி. டபிள்யூ வாய்ப்புகள் அதிகம் ஆகிறது. ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் சற்று மெதுவாய் பந்து வீசணும் என்பார்கள். இவரோ அதற்கு நேர் மாறாக அத்தகைய பிட்ச்களில் வேகமாய் பந்து வீசினால் தான் யோசிக்க நேரமிருக்காது என்று கூறினார். ஆஸி கேப்டன் மற்றும் டாப் ஆர்டர் பலரை தொடர்ந்து வீழ்த்திய ஜடேஜா ஓரிருமுறை பேட்டிங்கிலும் கை கொடுத்தார். இவருக்கு தான் மேன் ஆப் தி சீரிஸ் கிடைத்திருக்கணும் என்று சொல்வோரும் உண்டு !

ஷீக்கர் தவன்

மூன்றாம் டெஸ்ட் முதல் நாள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய பின், முதலில் ஆடிய ஆஸி 400 க்கும் மேல் ரன் சேர்த்தது. இந்தியா தோற்க அல்லது மேட்ச் டிரா ஆக வாய்ப்பு அதிகம் என்ற நிலையில் ஷீக்கர் தவன் அதிரடி ஆட்டம் தான் இந்தியா ஜெயிக்க காரணமானது

M Vijay and Shikhar Dhawan shared an unbroken opening stand of 283 runs

சேவாகுக்கு பதில் அணிக்குள் வந்தார். அவரை போலவே அதிரடியாய் ஆடினார். இருந்தாலும் ஆஸி அணியின் வீரர் ஒருவர் இவரை டான் பிராட் மேனுடன் ஒப்பி ட்டதெல்லாம் ரொம்ப டூ மச். அவரது முதல் இன்னிங்க்ஸ் ஆட்டமே அவரது வாழ்நாளின் மிக சிறந்த அல்லது அதிகபட்ச ரன்களாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பார்மில் இருக்கும்போது உள்ள கம்பீர் போல சற்று நிலைத்து நின்று ஆடினால் நன்றாயிருக்கும்.

தோனி

சென்னையில் இவர் அடித்த 200 - இந்த சீரிஸின் மிக சிறந்த இன்னிங்க்ஸ் என்று சொல்லப்படுகிறது. அணியில் மாற்றங்கள் சரியான முறையில் கொண்டு வந்தார். ஷேவாக், கம்பீர், ஹர்பஜன் போன்ற பெரிய வீரர்கள் சரியாக ஆடாத போது அவர்களை நீக்கி விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு தந்து, வெற்றிக்கு அழைத்து சென்றதில் தோனியின் பங்கு கணிசமானது.

சில நேரம் கீப்பிங்கில் வழிந்தாலும், தலைவராக தோனி - கிங் தான் ! குறிப்பாக நான்கு முறையும் இந்தியா டாஸ் தோற்று கடைசி பேடிங் செய்ய வேண்டிய நிலை. அதை மீறியும் அனைத்து மேட்சிலும் வென்றது பெரிய விஷயம் தான் !

சொதப்பிய சிலர்

சச்சின்

முதல் டெஸ்ட்டில் அடித்த 81 தவிர உருப்படியாய் ஏதும் செய்யலை. இனி இந்தியாவில் கிட்டத்தட்ட 1 ஆண்டு கழித்து தான் மறுபடி டெஸ்ட் மேட்ச் இருக்கும். அதனால் சச்சின் இந்தியாவில் இனி டெஸ்ட் ஆடுவது சந்தேகம் என உரக்க சொல்கிறார்கள். பார்க்கலாம்..

இஷாந்த் ஷர்மா 

இந்தியன் பிட்ச்களில் வேக பந்து வீச்சு ஈடுபடுவது கடினம் தான் என்றாலும், இவரது சக பந்து வீச்சாளரான புவனேஷ் குமார் இரு முறை - 3 விக்கெட் (அதுவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மான்களை ) வீழ்த்தினார். ஷர்மா வெளிநாட்டு பிட்ச்களில் நிச்சயம் ஷைன் செய்வார் என நினைக்கிறேன்
****
4-0 என ஜெயித்தாலும் இன்னும் சில பிரச்சனைகள் முழுக்க சரியாகலை.

நமது பாஸ்ட் பவுலிங் அவ்வளவு சிறப்பாய் இல்லை; ஓபனிங் - விஜய் மற்றும் தவன் தொடர்ந்து நன்கு ஆடுகிறார்களா என பார்க்க வேண்டும்; சச்சினின் மோசமான பார்ம், மேலும் நாம் ஒரு பேட்ஸ்மேன் குறைவாய் ஆடுவதன் விளைவுகள், நமது பீல்டிங் குளறுபடிகள் இவை எல்லாம் வெளிநாட்டில் வெட்ட வெளிச்சமாகும்.

போகட்டும்.. இப்போதைக்கு இந்த வெற்றியை கொண்டாடுவோம் ! வெல் டன் டீம் இந்தியா !
**********
பிற்சேர்க்கை

நான்கு டெஸ்ட் ஸ்கோர் சுருக்கமாய் உங்கள் பார்வைக்கு

முதல் டெஸ்ட் - சென்னை

ஸ்கோர்


ஆஸ்திரேலியா - 380 (Clarke 130, Henriques 68, Ashwin - 7 Wkts) & 241 (Henriques 68, Ashwin - 5 Wkts)

இந்தியா - 572 (Dhoni 224, Kohli 107, Sachin 81, Pattinson - 5 wkts) & 50 for 2

ரிசல்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Man of the Match : Dhoni

இரண்டாவது டெஸ்ட் -

ஸ்கோர்

ஆஸ்திரேலியா - 237 (Clarke 91, Wade 62, Kumar & Jadeja - 3 Wickets each ) & 131 (Ashwin - 5 , Jadeja - 3 wickets)

இந்தியா - 503 (Pujara 204, Murali Vijay 167)

ரிசல்ட்: இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Man of the Match : Pujara

மூன்றாவது டெஸ்ட் -

ஸ்கோர்


ஆஸ்திரேலியா - 408 (Starc - 99, Smith - 92, Cowan - 86) & 223 (Hughes 69, Kumar and Jadeja - 3 Wickets each)

இந்தியா - 499 (Shekar Dhawan 187, Murali Vijay 153) & 136 for 4

ரிசல்ட்: இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Man of the Match : Shekar Dhawan

நான்காவது டெஸ்ட் - டில்லி

ஸ்கோர் :


ஆஸ்திரேலியா - 262 (Siddle - 51, Ashwin - 5 wickets) & 164 (Siddle - 50, Jadeja - 5 wickets)

இந்தியா - 272 (Vijay 57, Pujara 52, Jadeja - 43, Lyon - 7 Wickets) & 158 for 4 (Pujara 82, Kohli 41)

ரிசல்ட்: இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Man of the Match : Ravindra Jadeja

Sunday, March 24, 2013

உணவகம் அறிமுகம் திருநெல்வேலி : A -1 ஹோட்டல்

ண்பர் வேங்கடப்பன் குடும்பமும் நாங்களும் செமையாய் சுற்றி விட்டு நெல்லை வர, அதன் பின் சமையலை ஆரம்பித்தால், சோர்வாக இருக்கும் - ஹவுஸ் பாஸ்களுக்கு கஷ்டம் ; So இரவு சாப்பாடை பார்சல் வாங்க முடிவு செய்தோம்.

உணவகம் அறிமுகம் தொடர்ந்து எழுதுபவன் என வேங்கடப்பன் நல்ல ஹோட்டலுக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பதில் குறியாக இருந்தான். அதன்படி நாங்கள் சென்றது - A -1 ஹோட்டல். அட ஹோட்டல் பெயரே அது தாங்க !

திருநெல்வேலி டவுனில் பெருமாள்புரம் ரவுண்டானா அருகே உள்ளது இந்த ஹோட்டல். உரிமையாளர் இங்குள்ள கார்பரேஷன் கவுன்சிலர் என்று அறிகிறேன்

மாலை மட்டுமே திறந்திருக்கும் இந்த கடையின் ஸ்பெஷாலிட்டி ஹீ ஹீ நம்ம புரோட்டா தாங்க !



அமர்ந்து சாப்பிட இடம் 10 X 10 அளவில் ! புரோட்டா போட, பார்சல் கட்டி கேஷ் வாங்க முன்புறம் இன்னொரு 10 X 10 இடம் அவ்வளவு தான் கடை !

உள்ளே உட்கார சிறிதும் இடமில்லை. ஹவுஸ் புல் !  சாப்பிடுவதற்கு சமமாக பார்சல் வாங்கி போகும் கூட்டம் இன்னொரு பக்கம்.

வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா, சிக்கன் 65 என நிறைய பார்சல் வாங்கி கொண்டு கிளம்பினோம். 

நீங்கள் செல்லும்போது "சாதா குருமா" வுடன் ஸ்பெஷல் குருமாவும் தாங்க என உரிமையாய் கேட்டால் மட்டும் இன்னொரு வகை குருமா கொடுப்பார்கள். முதல் குருமா அருமை என்றால் இரண்டாம் குருமா தாறு மாறு !



வீட்டுக்கு வந்து பார்சல் எல்லாவற்றையும் பிரித்து குருமாவை தனித் தனி பாத்திரத்தில் ஊற்றி விட்டு நிமிர்ந்தால் சிக்கன் 65 பாதி காலி. பசங்க புகுந்து விளையாடிட்டாங்க அட பாவிகளா. எங்களுக்கும் குடுங்கடா என வாங்கி சாப்பிட வேண்டியாதாயிற்று.

பரோட்டாவை பிய்த்து போட்டு குருமாவை ஊற்றி சாப்பிட்டோம். அடடா சான்சே இல்லை. சொர்க்கம் ! சூப்பர் டேஸ்ட் என்பதால் சற்று அதிகம் சாப்பிடுற மாதிரி ஆகிடுச்சு.

நிற்க. பரோட்டா, சிக்கன் 65, கொத்து பரோட்டா என பல வகை உணவுகள் 6 பேருக்கு வாங்கியும்,  வயிறு நிரம்ப சாப்பிட்ட பின்னும் பில் 300 ரூபாயை தாண்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது !

நெல்லை காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் !
****************
மேலதிக தகவல்கள் :

உணவகம் பெயர்: A -1 ஹோட்டல்

முகவரி: பெருமாள் புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி  

நேரம்: மாலை மட்டும்

ஸ்பெஷல்: பரோட்டா, வீச்சு, கொத்து பரோட்டா சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்

Friday, March 22, 2013

பத்து ரூபாயில் திருமணம் முடித்த அரசியல் தலைவர் -ஆதிமனிதன்


பத்து ரூபாய் செலவில் ஒரு பிரபல அரசியல் தலைவரின் திருமணம் முடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய அரசியலில், மா.செ முதல் மாநில அமைச்சர்களின் 'இல்ல திருமண' விழாக்களில் பணம் படும் பாடு நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் தோழர். ஜீவா அவர்கள் வெறும் பத்து ரூபாயில் தன் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார்.

தனது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான பத்துக்கும் உட்பட்ட தோழர்களை மட்டும் அழைத்து அவர்களில் ஒருவரிடம் ஒரு பத்து ரூபாயை கொடுத்து இரண்டு மல்லிகைப்பூ மாலை மீதமுள்ள பணத்திற்கு 'சாக்லேட்' மிட்டாய்களையும் வாங்கி வர சொல்லி, மணமக்கள் அந்த மல்லிகைபூ மாலையை மாற்றிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் கையில் ஆளுக்கு ஒரு சாக்லேட் கொடுத்து அவ்வளவுதான் திருமணம் முடிந்து விட்டது எல்லோரும் போகலாம் என்றாராம்.




ஒரு முறை திரு. ஜீவாவும், காம்ரேட் ஒருவரும் மதுரைக்கு கட்சிக்காக நிதி சேர்க்கும் பொருட்டு சென்று திருச்சி திரும்பிய போது இரவு நேரமாகி விட்டதாம். திருச்சி ரயில் நிலையத்தில் சென்னை ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருடன் வந்திருந்த தோழர், காம்ரேட், காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. வயிறு பசிக்கிறது. ஏதாவது வாங்கி சாப்பிடலாமா என கேட்டிருக்கிறார்.

அதற்கு திரு ஜீவாவோ, ஓ சாப்பிடலாமே. எவ்வளவு பணம் வச்சிருக்கே என கேட்டாராம். பணமா, என்னிடம் ஏது காம்ரேட். உங்களிடம் தான் வசூலித்த பணம் நிறைய இருக்கே. சாப்பாடுக்கு தானே, அதிலிருந்து வாங்குவோமே என்று திரும்பி கேட்டாராம். அதற்க்கு திரு ஜீவா அவர்கள், இதோ பார். அது மூட்டை தூக்கி பிழைப்பவனும், வண்டி இழுத்து பிழைப்பவனும் கட்சிக்காக கொடுத்தது. அதிலிருந்து ஒரு சல்லி காசு நாம் எடுக்க கூடாது. என்னிடமும் வேறு பணமில்லை. ஒரு இரவு தானே, பொறுத்துக்கொள். சென்னை சென்றதும் என் வீட்டில் பழைய சாதம் இருக்கும். இரண்டு பெரும் சாப்பிடுவோம் என்றாராம். அந்த அளவிற்கு திரு ஜீவா அவர்கள் எளிமையையும் அரசியலில் நேர்மையையும் கடைபிடித்தவர். ஹ்ம்ம்...கனவில் தான் இத்தகையவர்களை நாம் இனி காண முடியும்.

பின்னாளில் திரு. ஜீவா அவர்களின் மகளுக்கு திருச்சியில் திருமணம் நடந்த போது (திரு. ஜீவா அவர்கள் மறைவிற்கு பின்) பேசிய தந்தை பெரியார், ஜீவா இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இத்திருமணம் நடந்திருக்காது, நடத்த விட்டிருக்க மாட்டார். நாம் அனைவரும் ஜீவாவின் வீட்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறோம் என்று பெருமை பட்டுக்கொண்டாராம். இத் திருமணத்தில் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா, கலைஞர் உட்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு ஜீவாவின் இல்ல திருமணத்தை சிறப்பித்துள்ளார்கள்.

எளிமைக்கு பெயர் பெற்ற கர்மவீரர் காமராஜ், மரியாதைக்குரிய கக்கன் போன்று தோழர் ஜீவாவும் ஒருவர். தமிழ் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த ஜீவா அவர்கள், தூய தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என விரும்பியவர். அதனாலேயே தன பெயரை 'உயிரின்பன்' என மாற்றிக்கொண்டார். இன்று தமிழ் தமிழகத்தின் அலுவல் மொழியாக ஆவதற்கும், தமிழ் வழிக் கல்வியை கொண்டு வருவதற்கும் அவர் ஒரு முக்கிய காரணம் என கூறலாம். 'தாமரை' என்ற தமிழ் இலக்கிய இதழையும் அக்காலத்தில் அவர் தொடங்கி நடத்தி வந்தார்.

சுய மரியாதை சுடரான திரு ஜீவா அவர்களிடம் தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங்கின் Why I am an atheist என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க கோரி இருந்தார். அதை ஏற்று அப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்த காரணத்திற்காக (அப்புத்தகம் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் தான்) அப்போதைய ஆங்கில அரசு பெரியார் மற்றும் திரு ஜீவா அவர்களை சிறையில் தள்ளி, விடுதலை வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க கூறியது. இதை அடுத்து தந்தை பெரியார் அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார். ஆனால் தன்மான சிங்கம் திரு ஜீவா அவர்கள் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சிறையில் தண்டனை காலம் முடிந்தே வெளியேறினார். இவ்வாறு ஜீவாவின் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.

திரு. ஜீவா அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உண்டு. திருமதி. பத்மாவதி ஜீவானந்தம் அவர்களும் பல வருடங்களுக்கு முன்னரே இயற்கை எய்தி விட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் முதல் மந்திரியாக இருந்த போது யாரோ பத்மாவதி அம்மையாரை பிடிக்காதவர்கள் அவர்களை பற்றி புகார் ஒன்றை தட்டி விட, அது அண்ணாவிடம் போய் சேர்ந்திருக்கிறது. யார், என்ன வென்று விசாரித்து தெரிந்து கொண்ட அண்ணா அவர்கள், ஜீவா அவர்கள் நினைத்திருந்தால் எப்படி எல்லாமோ வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடைசி வரை அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து மறைந்தவர் அவர். அவர் குடும்பத்தில் ஒருவர் மீது உண்மையிலேயே புகார் இருந்தால் கூட அதை இந்த அரசு உப்பு மிளகாய் கணக்கில் சேர்த்து விடும். ஒன்றும் குடி முழுகி போய் விடாது என்று திருப்பி அனுப்பி விட்டாராம்.

எல்லோரையும் தன் பேச்சு திறமையால் ஈர்த்த, தன் வாழ்நாள் முழுதும் ஏழை எளிய, தொழிலார் வர்கத்திற்க்காக போராடி, காந்திய வழியில் எளிமையை கடை பிடித்தும், பெரியார் வழியில் தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்தவரும், கம்யூனிசத்தை ஒடுக்கப்பட்டோருக்காக வளர்த்து சென்ற தோழர். திரு ஜீவா அவர்கள் ஜனவரி 18, 1963 அன்று தாம்பரத்தில் உள்ள தன் எளிய வீட்டிலேயே வீர மரணம் அடைந்தார். சுமார் இரண்டு லட்சம் மக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனராம்.

நன்றி: எனக்கு அரசியல் பற்றியும் அரசியல் தலைவர்களை பற்றியும் சிறு வயது முதல் சொல்லி வந்த என் தாய், தந்தைக்கு! மேற்கூறிய பல விசயங்கள் என் பெற்றோர் சொல்லி செவி வழி கேட்டதே.


***
தொடர்புடைய முந்தைய பதிவு :

தோழர் ஜீவா - ஏறினால் ரயில் - இறங்கினால் ஜெயில்

Thursday, March 21, 2013

குளிச்சா திப்ப்ப்பரப்பு - ஜாலி குளியல் அனுபவம்

திருநெல்வேலி, கன்யாகுமரி பயணக்கட்டுரையில் இம்முறை திப்பரப்பு நீர்வீழ்ச்சி மற்றும் நாகராஜா கோவிலை ஒரு ரவுண்ட் அடிப்போம் !

*****
குளிச்சா திப்பரப்பு 

திப்பரப்பு நீர்வீழ்ச்சி ஒவ்வொரு முறையும் கவர முக்கிய காரணம் - தண்ணீர் எப்போதும் இருக்கும் ! மேலும் அதிக கூட்ட நெரிசலின்றி ஜாலியாக குளிக்கலாம்




இம்முறை செல்லும்போது அந்த இடம் சற்று மாறுதலுக்கு உள்ளானது தெரிந்தது. சுற்றிலும் குரோட்டன்ஸ் உள்ளிட்ட நிறைய செடிகள் வைத்து ஒரு பூங்காவை வடிவமைத்துள்ளனர். அருவிக்கு சென்றால் சிலர் குளிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பார்கள் அல்லவா? அத்தகையோர் பூங்காவில்,  தள்ளி அமர்ந்து அருவியை ரசிக்கலாம்

இப்படத்தில் அய்யாசாமியும் கீறாராம் ! சொல்ல சொன்னார் :)

நான்கைந்து இடங்களில் அருவி கொட்ட, நடுவில் தடுப்பு சுவறொன்று வைத்து பெண்களுக்கான இடம் பிரித்து விட்டுள்ளனர். அருவிக்கு அருகே சிறு ஓடை போல் ஓட , சிறுவர் சிறுமிகள் அதில் ஆனந்தமாக நீந்தி மகிழ்கிறார்கள்.

ஒரே ஒரு செக்கியூரிட்டி நின்று கொண்டு ஆண்கள் பெண்கள் பக்கம் செல்லாமலும், வேறு சண்டைகள் வராமாலும் ஏரியாவை மெயிண்டைன் (!!) செய்கிறார்

திப்பரப்பு அருவியின் அழகை இந்த வீடியோவில் கண்டு களிக்கலாம்:


அருவிக்கு சென்றாலே முதலில் இறங்குவதும், கடைசியில் "போதும்; கிளம்பலாம்" என்று தர தரவென இழுத்து செல்லும் என்னை மாதிரி ஆளுக்கு ஏற்ற இடம் திப்பரப்பு ! கூட்ட தொந்தரவோ, யாரும் எண்ணை பிசுக்குடன் மேலே இடிக்கிறார்கள் என்றோ கவலை இன்றி வேண்டிய மட்டும் குளிக்கலாம். 

நின்றவாறு- படுத்தவாறு, அமர்ந்தவாறு வெவ்வேறு போஸில் ஆசை தீரும் வரை குளித்து தீர்த்தேன்.

குளியல் முடிந்து பசி வயிற்றை கிள்ள, திப்பரப்பில் சாப்பிட உருப்படியான ஹோட்டல் இல்லாதது பெரும் குறை.

நாகர்கோவில் பக்கம் செல்லும்போது தவற விடாதீர்கள் திப்பரப்பை !
****
நாகராஜா கோவில் 

நாகர்கோவில் என்பது மிக பெரிய ஊர் - கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் தான். ஆனால் நாகர்கோவிலில் பார்க்க என்ன இருக்கு என்று கேட்டால் - பத்மநாபபுரம் பேலஸ் திப்பரப்பு என 5 அல்லது 10 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இடங்களை தான் சொல்வார்களே ஒழிய, ஊருக்குள் ஒரு இடம் கூட பார்பதற்கு இருக்குற மாதிரி சொல்லவே மாட்டார்கள். அதையும் மீறி அழுத்தி கேட்டால், " நாகராஜா கோவில் மட்டும் தான் இங்கு விசேஷம் " என்று முணுமுணுப்பார்கள்.

ஒரு மாலை நேரத்தில் நாகராஜா கோவிலுக்கு சென்று வந்தோம்.



நாகர் கோவில் என்ற பெயரே இந்த கோவிலை வைத்து வந்தது தான். கோவில் முழுதும் நாகங்களின் படங்களை பார்க்க முடிகிறது. மேலும் கோவிலை வெளியிலிருந்து காப்பதும் இரு நாகங்களின் உருவங்களே

பரிகாரம் என்பது பெரிய பிசினசாக தொடர்கிறது. வெள்ளியில் கை, கால் வாங்கி சாமிக்கு காணிக்கை செலுத்துவது போன்ற நம்பிக்கைகளை காண முடிந்தது


கோவில் வந்ததுக்கு பின்னே ஒரு சிறு சம்பவம் கதை போல் சொல்லப்படுகிறது

ரொம்ப வருஷத்துக்கு முன் சிறுமி ஒருத்தி, இந்த இடத்தில் உள்ள புற்களை வெட்ட, திடீரென ரத்தம் கொட்டுவதை கண்டுள்ளாள். என்ன என்று பார்க்க, 5 தலை நாகமொன்றின் தலையை தெரியாமல் வெட்டியது தெரிய வந்துள்ளது. பயந்து ஓடி போய் ஊரில் சொல்ல, ஊர் மக்கள் வந்து பார்க்கும்போது அந்த நாகத்துக்கு பட்ட காயம் தானாகவே சரியாகி விட்டதை கண்டுள்ளனர். பின் இந்த இடத்தை சுத்தம் செய்து இந்த கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது



அதன் பின் ராஜா ஒருவர் கொடிய நோய் வந்து துன்புற்றதாகவும், அப்போது இந்த கோவிலுக்கு வந்து குணமானதால் அவர் இந்த கோவிலை மேலும் பிரபலமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு ஆவணி மாத ஞாயிறும் ராஜாவின் பரம்பரை பல வருடங்கள் இந்த கோவிலை வந்து வணங்கியிருக்கிறார்கள்.

கோவில் முழுவதும் நாக உருவங்களை தவிர முருகன், பிள்ளையார் சந்நிதிகள் மட்டுமன்றி சில ஜெயின் சிலைகளும் கூட இங்கு உள்ளது.

********












தொடர்புடைய திருநெல்வேலி / கன்யாகுமரி பயணக்கட்டுரைகள்:

சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்

திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை

கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்
***********
கோவிலில் நான் கவனித்த ஒரு காமெடியான விஷயம் இதோ:



கோவில் குறித்து எனக்கு தெரிந்த குறைவான் தகவல்களை கூறியுள்ளேன். பயண தொடரை தொடர்ந்து வரும் நெல்லை நண்பர்கள் மேலும் தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம் !

******
அண்மை பதிவுகள் :

வானவில்: கருணாஸ் பேச்சு- தேசிய விருது- தமன்னா 


ஈழ பிரச்சனை-கலைஞர் நிலை- விகடன் கட்டுரை

பரதேசி - தமிழில் ஒரு உலக சினிமா - சல்யூட் பாலா !

எதிர் நீச்சல் - பட்டை கிளப்பும் பாட்டுகள் ஆடியோவுடன் ! அசத்தும் அனிருத் !

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன்



Wednesday, March 20, 2013

வானவில் - கருணாஸ் பேச்சு - தேசிய விருது - தமன்னா

கருணாஸ் பேட்டி

கல்கியில் கருணாஸ் உதிர்த்த சில முத்துக்களை வாசியுங்கள் :

ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஜால்ரா போட்டு தலையாட்டினால் இன்னிக்கு நான் தான் நம்பர் 1 காமெடியன். ஆனா நான் அப்படி கிடையாது. என் வீட்டு உலையில் போடுற அரிசிக்கு யார் கையையும் நான் எதிர்பார்க்கலை

(அப்ப சந்தானம் ஜால்ரா அடிச்சு தான் நம்பர் 1 ஆனாரா? சந்தானத்தை லட்சகணக்கா மக்கள் ரசிக்கிறாங்களே ..அது எப்படியாம்?))

பவர் ஸ்டார் சீரியஸா காமெடி பண்றார். பாலும் கள்ளும் ஒரே கலரில் இருக்கும் . அதுக்காக ரெண்டும் ஒண்ணாக முடியுமா?

இன்னைக்கு ராஜா, ரகுமான், யுவன், ஜி. வி. பிரகாஷ் தவிர வேறு யார் இசையிலும் ஜீவன் இல்லை

( ஹாரிஸ் ஜெயராஜ், இமான், அனிருத் இவங்க தொடர்ந்து ஹிட் பாட்டு தர்றாங்களே .. அவங்க எல்லாம் அப்ப வேஸ்ட்டா ?)

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டே கல் எறிவது என்பது இது தான் ! என்னத்தை சாதித்து விட்டோம் என கருணாஸ் இப்படி பேசுகிறாரோ தெரிய வில்லை ! சனியன் அவர் நாக்கில் உட்கார்ந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறது. இப்படியே பேசினால் இனி அவரே படம் எடுத்து, அவரே ஹீரோவாக  நடித்து அவரே பார்க்க வேண்டியது தான் !

சென்னை ஸ்பெஷல் - சிகப்பு விளக்கு ஏரியா

சென்னை வேளச்சேரியில் இருந்து இறங்கி பள்ளிக்கரணை செல்லும் சாலையில் தினம் இரவு 8 மணி முதல் நான்கைந்து பெண்கள் முழு மேக் அப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள். கவனித்தால் அரவாணிகள் என்று தெரியும். சற்று தாமதமாய் வரும்போது ஒருவர் மட்டுமே நிற்பதையும் கண்டேன். காரணம் நமது டியூப் லைட் புத்திக்கு சற்று தாமதமாக தான் புரிந்தது.

முதலில் வருவதென்னவோ நால்வர் தான். (ஒரு நாள் ஆட்டோவில் நால்வர் ஒரே நேரத்தில் வந்து இறங்குவதை கண்டேன்).

அப்புறம் ஒவ்வொருவராக கஸ்டமர் கிடைத்து போய் விட சில நேரம் ஒருவர் மட்டும் நிற்கிறார் போலும் !

இந்த இடத்திலிருந்து காமாட்சி நினைவு மருத்துவமனை மற்றும்  போலிஸ் பீட் அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது !

அழகு கார்னர்



அனுஷ்காவிற்கு முன் மிக சில காலம் நம் தலைவியாக இருந்தவர். நடிக்க தெரிந்த நடிகை. ரொம்ப அதிக வெள்ளை என்பதே ஒரு குறை என நினைக்கிறேன் ! வட நாட்டுக்காரர் எனினும் தமிழை என்ன அழகாய் பேசுகிறார் இந்த பெண் ! வெரி டேலண்டட் கேர்ள் !

கவுண்டர் பிறந்தநாள் ஸ்பெஷல்

தல கவுண்டமணிக்கு 2 நாள் முன்பு பிறந்த நாள்... பதிவர் நண்பர் ஒருவர் ஸ்பெஷல் பதிவு வெளியிட்டிருந்தது பார்த்து அறிந்தேன். கவுண்டரின் பல காமெடிகள் மறக்காது என்றாலும், எனக்கு மிக பிடித்த சின்னத்தம்பி காமெடி இங்கு பகிர்கிறேன்:




போஸ்டர்/ அய்யாசாமி கார்னர்




தேசிய விருதுகள் 

இந்த வருட தேசிய விருதுகளில் வழக்கு எண் தமிழில் சிறந்த படமாகவும் (சரியான தேர்வு), விஸ்வரூபதுக்கு சிறந்த நடனத்துக்கும் (!!!!), பரதேசி சிறந்த ஆடை வடிவமைப்புக்கும் விருதுகள் பெற்றுள்ளது. இது சென்ற வருட இறுதி வரை உள்ள கணக்கெனினும் பரதேசி அதற்கு முன் சென்சார் ஆகி விட்டது என்கிறார்கள். பரதேசிக்கு விருதுகள் சற்று குறைவாக கிடைத்ததாகவே எண்ணுகிறேன்.

ஒவ்வொரு திங்களன்றும் எனது பெண் பள்ளியிலிருந்து வந்ததும் சனி ஞாயிறு விடுமுறையில் புது ரிலீஸ் பார்த்த நண்பர்கள் படம் பற்றி என்ன கூறினர் என்று சொல்வாள்.ஆட்டோவில் வரும் சிறுவர் சிறுமியரும், வகுப்பில் உள்ள சிலரும் "பரதேசி பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது" என்று சொன்னார்களாம். பள்ளி மாணவ மாணவியருக்கு இந்த சோக படம் எப்படி பிடித்தது என ஆச்சரியமாகவே உள்ளது !

அமாவசையும் பாட்டி முகமும்

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் வட இந்திய நண்பரை ஒரு முக்கிய நிகழ்வுக்கு அழைக்க, " இன்று அமாவாசை; இன்று வேண்டாம்; நாளை செல்லலாம் " என்றார். " என்ன இப்படி சொல்றீங்க. சென்னையில் அமாவாசையில் தான் நல்ல காரியம் ஆரம்பிப்பாங்க. அதற்கடுத்த நாள் பிரதமை அல்லது பாட்டி முகம் என நல்ல காரியம் செய்ய மாட்டாங்க. நீங்க பிரதமையில் ஆரம்பிக்கலாம் என சொல்றீங்க " என சொல்ல, "வட இந்தியாவில் அமாவாசையில் எந்த காரியமும் செய்ய மாட்டோம்; அதற்குடுத்த நாள் தான் நல்ல காரியம் துவங்குவோம் " என்றார்.

ஆச்சரியமாய் இருந்தது ! நாம் ப்ரதமையை நல்ல நாள் இல்லை என ஒதுக்குகிறோம். ஆனால் வடக்கில் அதே நாளில் நல்ல காரியம் துவங்கி நன்றாகவே நடந்தேறுகிறது ! எல்லாம் மனதில் + நம்பிக்கையில் தான் இருக்கிறது பாருங்கள் !

நல்ல நாள் என்றும் கெட்ட நாள் என்றும் எதுவுமில்லை. நல்ல விஷயம் செய்ய எல்லா நாளும் நல்ல நாளே !
****************
சும்மா தகவலுக்கு ....


அண்மை பதிவுகள் : 

ஈழ பிரச்சனை-கலைஞர் நிலை- விகடன் கட்டுரை

பரதேசி - தமிழில் ஒரு உலக சினிமா - சல்யூட் பாலா !

எதிர் நீச்சல் - பட்டை கிளப்பும் பாட்டுகள் ஆடியோவுடன் ! அசத்தும் அனிருத் !

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன்

******

Tuesday, March 19, 2013

ஈழ பிரச்சனை- கலைஞர் நிலை - விகடன் கட்டுரை

"ண்ணா பிசியா?  பேசலாமா? "

தேவா என்னுடனான தொலைபேசி பேச்சை இப்படித்தான் ஆரம்பிப்பான்.

அறை மணிக்கு முன் தனியறையில் ஆப்பு வாங்கியிருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் " சொல்லு தேவா " என்பேன்.

" விகடனில் ஈழ பிரச்சனை பத்தி திருமாவேலன் எழுதிய கட்டுரை படிச்சேன். என்னமோ போல ஆகிடுச்சு. கடைசி பகுதி மட்டும் படிக்கிறேன் கேளுங்க" என சொல்லி விட்டு போனிலேயே - பெரியார் சொன்ன வரிகளும் கட்டுரையின் கடைசி வரியையும் படிக்க "திடுக்" என்று தாக்கியது. அதன்பின் வழக்கம் போல் இருவரும் அது பற்றி பேசி ஆத்து போனோம். " இவர் மட்டுமா? எல்லா அரசியல் வாதியும் இலங்கை பிரச்னையை வச்சு அரசியல் தானே பண்றாங்க? " என்ற ரீதியில் போனது எங்கள் பேச்சு. 

மாலை வீடு வந்ததும் முதல் வேலையாக அந்த கட்டுரையை அச்சு வடிவில் - புத்தகத்தில் நிதானமாய் வாசித்தேன். 

அடுத்த சில நாட்களில் கூகிள் பிளஸ் அல்லது முகநூலில் யாரேனும் இக்கட்டுரை பற்றி எழுதுவார்கள் என நினைக்க, யாரும் பகிர்ந்த மாதிரி தெரியலை. உடன்பிறப்புகள் பொங்கிய மாதிரியும் தெரியலை. (என் கண்ணில் படாமலும் இருந்திருக்கலாம்)

என் தந்தை கலைஞருடன் திருவாரூர் மற்றும் குடந்தையில் நாடகத்தில் நடித்தவர். நகர தி.மு. க. பொருளாளராக இருந்து எமெர்ஜென்சியில் சிறை சென்றவர். அந்த ஈர்ப்பில் இன்றும் தி.மு.க தவிர வேறு கட்சிக்கு ஓட்டு போட மாட்டார். எனக்கும் தி. மு. க மீது சற்று ஈர்ப்பு உண்டு என்றாலும் நல்லது கெட்டது என வரும்போது தி.மு.க வை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நபர் இல்லை. சொல்ல போனால் கடந்த 15 ஆண்டுகளாக ஆளும் கட்சி எதுவாயினும் அதற்கு எதிர்த்து ஓட்டு போடும் சாதாரண மனிதனாகவே இருந்து வருகிறேன். 

இன்றைய தி.மு.க வில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் 3-

1. குடும்ப ஆதிக்கம்.

2. ஊழல் (இது - தி.மு.க - அ .தி.மு.க இரண்டு கட்சிக்கும் பொதுவே; இவ்விஷயத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை)

3. ஈழ விஷயத்தில் போடும் நாடகம் - ஆட்சியிலிருந்த போது அவர்களுக்கு எதுவும் செய்யாமல் போனது

நிற்க . பொங்கும் உடன்பிறப்புகள் இந்த கட்டுரையில் சொன்ன விஷயங்களுக்கு தகுந்த விளக்கங்களுடன் பொங்கலாம்.. !

விகடனில் வரும் கட்டுரைகளை ப்ளாகில் பகிர்வது எனக்கு அறவே பிடிக்காத விஷயம். அது இன்னொருவர் உழைப்பை திருடி குளிர் காயும் ஈன காரியம் என்று நினைப்பேன். இருந்தும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் இன்னும் ஆயிரம் பேருக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இங்கு பகிர்கிறேன்.

இன்றைய தேதியில் Draft-ல் இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை: 56. விகடனில் மட்டுமல்ல பிற பத்திரிக்கைகளில் வெளியாகும் கட்டுரைகள் வீடுதிரும்பலில் தொடர்ந்து வராது. நம்ம பதிவை தினம் ஒன்று போட்டாலே பல மாசம் தாங்கும் !

இனி விகடனில் வெளியான கட்டுரை ....

************

'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.

ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது,தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில்அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்திகருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்!

முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால்,இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம்ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும்,நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில்'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப்பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லதுவெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச்சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை.'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர்ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்தியஅரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என்தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!

''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார்கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களைஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை,ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன்,பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன?கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பானஇடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டுகள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள்உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.

''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லிஉண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால்,அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சி உள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள் கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்றுநிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்காவது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார்கள்... கொடுமைப்படுத்தினார்கள்... சித்ரவதை செய்தார்கள்’என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. 

அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல''என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார்.

அதாவது,இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.

''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும்இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன்,சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்''என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார்.

போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும்.'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக்காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.

''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும்.''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.

போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப்பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக்கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.

சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக்கொடுக்கிறது. 

உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்''என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால்,பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக்கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது.

அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களைவிரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல்இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு,கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத்தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். 

பெரியாரைக்காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்குயாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார்.

அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?

Monday, March 18, 2013

தொல்லை காட்சி- நீயா நானா - பரதேசி படகுழு - ஷீக்கர் தவன்

டிவி யில் பார்த்த படம் - ஸ்ரீ ராம ராஜ்ஜியம் 

சன் டிவி மகாபாரதம் உள்ளிட்ட பக்தி சீரியல்கள் ஒளி பரப்பி தங்களுக்கும், நாத்திகத்துக்கும் சம்பந்தமில்லை என காட்டி கொள்கிறது. கலைஞர் டிவி மட்டும் தான் இன்னும் கொஞ்சம் பிலிம் காட்டி வருகிறது (ஆனாலும் சிவராத்திரி அன்று நள்ளிரவு ஸ்பெஷல் சினிமா போட கலைஞர் டிவி மறக்க வில்லை !)

சன் டிவி மூலம் தெலுகு டப்பிங் படமான ஸ்ரீ ராம ராஜ்ஜியம் இப்போது தான் பார்க்க முடிந்தது. படம் குறித்த செய்திகள் வெளியாகும் போதே சீதாவாக நயன் தாராவா என்ற எண்ணமே அருவருப்பை தந்தது ( அப்போது தான் பிரபு தேவா குடும்ப வாழ்க்கையில் விளையாடி இருந்தார்) அதுவே அப்போது பார்க்காமல் போக காரணம். ஆனால் இப்போது பார்க்கும்போது நயன் தாரா அந்த பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளது புரிந்தது. 
ராமராக - பால கிருஷ்ணாவை தான் தாங்கி கொள்ள முடியலை. முகம், கழுத்து, உடல் எல்லாமே வயதானவர் என காட்டி கொடுத்து விடுகிறது. நல்லவேளை இவருக்கு அதிக போர்ஷன் இல்லை.


ராமர் இலங்கையில் சீதாவை தீக்குளிக்க சொன்னதே ஒரு தவறு என்றால் அதை விட பெரிய தவறையும் அவர் செய்துள்ளார். அயோத்தி வந்த பின் மக்கள் " அவள் ஒரு வருஷம் இன்னொருவனுடன் இருந்தவள் " என்று பேச, " இப்படி பேசப்படுபவள் ராணியாக இருந்தால், அது ராஜ வம்சத்துக்கு அவமானம் என தானாகவே முடிவெடுத்து - நிறை மாத கர்ப்பிணியான அவளை - அவளுக்கு சொல்லாமலே காட்டில் கொண்டு போய் விட வைக்கிறார். லவ, குச - குழந்தைகள் பிறந்து 10 வயது வரை வளர்ந்த பின்னும் ராமா - சீதா இணையவே இல்லை. இறுதியில் ராமனை காட்டில் ஒரு முறை பார்த்த பின் பூமி பிளந்து சீதா அதனுள் செல்வதாக கதை முடிகிறது.

ராமர் மீதிருக்கும் மரியாதையை அசைத்து பார்த்து விடுகிறது இப்படம் ! இன்னொரு முறை டிவி யில் போட்டால் அவசியம் காணுங்கள் !


கிரிக்கெட் கார்னர் - ஷீக்கர் தவன் 

சேவாக் மற்றும் கம்பீரை கட்டி கொண்டு அழுத இந்திய கிரிக்கெட் அணி கட்ட கடைசியில் பொறுமை இழந்து முரளி விஜய் மற்றும் ஷீக்கர் தவனுக்கு வாய்ப்புகள் தர, இருவருமே தங்களை நிரூபித்துள்ளனர்

Shikhar Dhawan reached his half-century off 50 deliveries

ஷீக்கர் தவன் தனது முதல் டெஸ்ட்டிலேயே ஆடிய ஆட்டம் அசத்தி விட்டது. விடுமுறை நாளில் டிவி முன் அமர்ந்து பார்த்த அனைத்து மக்களையும் பழைய ஷேவாக் ஆட்டம் போல அக மகிழ வைத்து விட்டார். முதல் நாள் அவ்வளவு அருமையாக ஆடியும் அடுத்த நாள் சடாரெனஅவுட் ஆனது ஏமாற்றம். ஆனால் கிரிக்கெட்டில் ஒரு Flow-வில் தான் அடிக்க முடியும். அன்றே இன்னொரு ஒரு மணி நேரம் இருந்தால் 250- ஐ தொட்டிருப்பார். இவர் நல்ல பீல்டரும் கூட;

T - 20 ல் டில்லி, மும்பை உள்ளிட்ட அணிகள் அவரை பந்தாடின. அதிலெல்லாம் 30 - 40 என அடிப்பாரே ஒழிய இவ்வளவு பெரிய திறமை ஒளிந்திருந்தது தெரியவே இல்லை. கம்பீர் மற்றும் சேவாக் இருக்கும் இந்திய அணியில் கடந்த பல வருடமாய் எந்த ஓபனிங் ஆட்டக்காரரும் உள்ளே நுழைய முடியாமல் இருந்ததும் ஒரு காரணம் !

ஆரம்பத்தில் அசத்தி விட்டு விரைவில் காணாமல் போன பிரவீன் ஆம்ரே, காம்ப்ளி, ஹிர்வானி போன்ற பட்டியலில் இணைய போகிறாரா அல்லது முதல் டெஸ்ட்டிலேயே அசத்தி பின் பல காலம் ஆடிய்த் டிராவிட், கங்குலி வரிசையில் சேர போகிறாரா என்று பார்க்கலாம் என என் நண்பர் அனந்து முகநூலில் சொன்னது தான் என் மனநிலையும் !

பரதேசி குழு - டிவியில் 

பொதுவாய் படத்தின் இயக்குனர்கள் தான் டிவி யில் வந்து படம் பற்றி பேசுவார்கள். ஆனால் பாலா தான் அதிகம் பேசாத ஆள் ஆயிற்றே? அதர்வா, தன்ஷிகா வேதிகா உள்ளிட்டோர் விஜய், கேப்டன், சன் என எல்லா சானல்களிலும் வந்து பரதேசி பற்றி பேசினர்.

ஒரு சில சம்பவங்கள் சுவையாய் இருந்தது. வேதிகா - அதர்வாவுக்கு சாப்பாடு ஊட்டுவது போல் ஒரு காட்சி வரும். படத்தில் வேதிகாவுக்கு கருப்பு மேக் அப் என்பதால், கைக்கும் கருப்பு கலர் அடிதிருப்பார்களாம். ஆனால் அதர்வா வாய்க்குள் சாப்பாடு கொடுத்து விட்டு கையை எடுத்தால் கருப்பு நிறம் மறைந்து வெள்ளை ஆகி விடுமாம். இதனால் ரீ டேக் மேல் ரீ டேக் எடுத்துள்ளனர்

இதில் அவ்வளவு கருப்பு மேக் அப்பும் அதர்வா வயிற்று க்குள் செல்ல, அவர் நிலையை நினைத்து பாருங்கள் !

3 மாதத்தில் படம் முழுதும் எடுத்து முடித்தது, அழுக்கு தண்ணீ ர் உள்ள குளத்தில் ஒரே ஷாட்டில் 500 பேர் தண்ணீர் குடித்தது என பல சுவாரஸ்ய விஷயங்கள் பேசினர்.

என்ன ஒன்று - ஒரு டிவி யில் பார்த்து விட்டு, இன்னொரு டிவி யில் பார்த்தால் டிட்டோவாக அங்கு என்ன பேசினாரோ அதையே தான் அனைவரும் ஒப்பித்தனர் ஏனுங்க கொஞ்சம் மாத்தி பேச கூடாதா?

வெறுப்பேற்றும் விளம்பரம் 

பாண்ட்ஸ் ட்ரீம் பிலவர் பவடருக்கு ஒரு விளம்பரம் போடுகிறார்கள்

ஒரு வீட்டின் தோட்டத்தில் இளம் பெண் பாஸ்கட்பால் பந்தை வைத்து பயிற்சி செய்கிறாள். ரோட்டில் போகும் ஒருவன் அவளை பார்த்து விட்டு " எப்படி ஆடுவது என சொல்லி தரட்டுமா? " என கேட்க, உடனே ஹீ ஹீ என சரி என்கிறாள். சொல்லி தருகிறேன் என கையில் ஆரம்பித்து முன்னே பின்னே எல்லாம் கட்டி பிடிக்கிறான். அவன் பாண்ட்ஸ் பவுடர் போட்டிருப்பதால் அவளும் சகஜமா எடுத்துக்குராளாம். இதுவே அசிங்கம்னா இதுக்கு மேலே அசிங்கம் கடைசி ஷட்டில் அவளுக்கு ஏற்கனவே பேஸ்கட் பால் தெரியும் என்பதும், அவன் சீண்டவே அப்படி நடித்தாள் என்பதும் !

ஹூம்.. ரோடில் போற ஒருத்தனை எந்த பெண் இப்படி அனுமதிப்பாளோ ? கொடுமை :(

தெலுகு - சொல்லுங்கண்ணே சொல்லுங்க 

சொல்லுங்கண்ணே சொல்லுங்க தெலுகிலும் வருகிறது.



அப்படியே அதே செட்டிங்க்சை வைத்து ஜெமினி டிவி யில் எடுக்கிறார்கள். என்ன ஒன்று .. தமிழில் மழலை மாறாத சிறுவர், சிறுமியர்கள் தான் வருவர். அங்கு சற்று வளர்ந்த ( ஐந்தாவது. ஆறாவது படிக்கும் ) சிறுவர்கள் கூட வருகிறார்கள்

இங்கு இமான் அண்ணாச்சி செய்கிற ரோலை செய்வது- பாடகர் மனோ. இமான் அளவு காமெடி சென்ஸ் அவருக்கு இல்லை. அது மட்டுமல்ல, குழந்தைகளை பேச விடாமல், இவரே அதிகம் பேசி அறுக்கிறார். யாராவது அவருக்கு சரியான பீட்பேக் தந்து சற்று குறைவாய் பேச சொல்லலாம் !

நீயா நானா - முன்னேறிய Vs வீழ்ந்த மக்கள்

கஷ்டப்பட்டு முன்னேறிய மக்கள் ஒருபுறமும், நன்றாக இருந்து நொடித்து போனோர் மறுபுறமும் அமர்ந்து பேசிய நீயா நானா சுவாரஸ்யம் மற்றும் நெகிழ்ச்சி.

குறிப்பாக - இன்றைக்கு நன்றாக இருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் - எதோ ஒரு பொழுதில் சாப்பாட்டுக்கு வழியின்றி இருந்ததையும், யாரோ சிலரால் சில பொழுது பெரும் அவமானப்பட்டதையும் பகிர்ந்தனர். இன்னொரு பக்கம் வீழ்ந்த மக்கள் தாங்கள் முன்பு ராஜா மாதிரி எப்படி இருந்தோம் - அதிலிருந்து எப்படி வீழ்ந்தோம் என விரிவாக பேசினர். வீழ்ந்தவர்களில் எப்படி இத்தனை பேரை identify செய்து அரங்கிற்கு கொண்டு வந்தனரோ தெரிய வில்லை.. ஆச்சரியம் !

புகழேந்தி என்ற நிதிநிலை ஆலோசகர் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக வந்திருந்தார் " பணம் சம்பாதிப்பது பெரிதில்லை; அதை சரியே முதலீடு செய்யணும். தன்னிடம் இருப்பதில் பாதி பணத்தில் தான் ரிஸ்க் எடுக்கணும். பலரும் முழு பணமும் போட்டு ரிஸ்க் எடுக்கிறார்கள். நொடித்து போக காரணம் அது தான்" என்றார்

" பணக்காரனாக இருந்தால் கூட ஹெல்த் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ், வியாபாரத்துக்கான இன்சூரன்ஸ் அவசியம் " என்றும் "வியாபாரம் நல்லா போகிறதோ இல்லையோ, அதனால் பெரிதும் பாதிப்படையாமல் தன் வசதிகளையும் ஸ்டேட்டசையும் எப்போதும் இழக்காமல் இருப்பவன் - அப்படி திட்டமிடுபவன் மட்டுமே பணக்காரன் " என்றார்.

நிகழ்ச்சி மிக நன்றாக சென்றாலும் ஏனோ டபக்கென்று ஒரு நிறைவு இல்லாமல் முடிந்த மாதிரி ஒரு பீலிங். இருப்பினும் சமீபத்திய நீயா நானாக்களில் இது ஒரு நல்ல நிகழ்ச்சி !
Related Posts Plugin for WordPress, Blogger...