Tuesday, June 28, 2016

வானவில்-சென்னை கொலைகள்-ஓ.எம்.ஆரில் கொடி கட்டி பறக்கும் வீட்டு உரிமையாளர்கள்

கோடம்பாக்கம்-நுங்கம்பாக்கம் கொலைகள் 

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம் பெண் கொடூரமாக கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; சுவாதி மீது ஏற்படும் பரிதாபம் ஒரு புறம்.. இன்னொரு பக்கம் நம் குடும்ப பெண் யாருக்காவது இப்படி ஆனால் என்ன செய்வது என்கிற பயம் தான் நம்மில் பலரையும் ஆக்கிரமிக்கிறது; நிச்சயம் அவன் ஒரு சைக்கோ அல்லது கூலிப்படை ஆளாய் இருந்திருக்க வேண்டும்.

நம் வீட்டு பெண்களிடம் யாரேனும் தவறாக நடக்க முயன்றால் தயங்காமல் பெற்றோரிடம் சொல்ல சொல்லி கூறலாம்.பல நேரம் ஏதேதோ காரணங்களால் அவர்கள் சொல்வதில்லை என்பதே கசப்பான உண்மை; நண்பர்களிடம் வெளிப்படையாக பேசுகிற மாதிரி பெற்றோரிடம் பேசுவது இல்லை;நாம் நட்பாகவே பழகினாலும் கூட..

சில வாரங்கள் முன் கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனைவி- மற்றும் அவள் கள்ள காதலனால் கூலிப்படை ஏவி கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. இறந்த வக்கீல் இரண்டொரு முறை தன்னை கொல்ல யாரோ முயல்கிறார்கள் என சந்தேகித்து தப்பித்துள்ளார்.. ஆனால் கடைசியில் மனைவி கொடுத்த தகவலின் பேரிலேயே ஒரு அப்பார்ட்மெண்ட் செல்லும் போது பட்ட பகலில் தெருவில் வைத்து கொல்லப்பட்டார்.

இதில் என்னை ரொம்ப தொந்தரவு செய்த விஷயம் ஒன்று தான்: அந்த வக்கீலை கொல்ல கூலிப்படை வாங்கிய பணம் 3 லட்சமாம் ! 3 லட்சமும் கூலிப்படையை அணுகும் வழியும் தெரிந்தால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்கிற விஷயம் சில்லிட வைக்கிறது !

அண்மையில் சட்ட சபையில் முதல்வர் கூலிப்படை என்பது தமிழகத்தில் இல்லவே இல்லை; அவர்களை முற்றிலும் ஒழித்து விட்டோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது :)
 
ரசித்த கவிதை 

ஷோபனா பாப்பா
ஒரு ரோஜாப் பூவை
நினைத்துக் கொண்டாள்

கோலமாவில்
ஒரு ரோஜாப் பூவை வரைந்தாள்
வெள்ளை வண்ணமாக
அவளது ரோஜாப்பூ
வாசலில் மலர்ந்து கிடந்தது

ஒரு வெள்ளை ரோஜாவை
அடையாளம் தெரியாமல்
இது என்ன இது என்ன
எனக் கேட்கும்
முட்டாள் மனிதர்களுக்காக
அருகிலேயே
ROSE
என்றும் எழுதி வைத்தாள்

                                        நந்தன் ஸ்ரீதரன்

அழகு கார்னர் 



என்னா பாட்டுடே : கோடை கால காற்றே

இளையராஜாவின் மிக சிறந்த பாடல்களில் ஒன்று...

மலேசியா வாசுதேவன் மென்மையான குரலில், அற்புதமான இசைக் கோர்வைகளும் இணைந்து மனதை வருடும்.. !

மெலடி என்றால் - அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பாட்டு.

பன்னீர் புஷ்பங்கள் என்கிற இந்த படமும் கூட அற்புதமான ஒன்று தான். ஒரே நேரத்தில் 2 படங்கள் பள்ளி பருவ காதலை ஒட்டி வந்தன.. அலைகள் ஓய்வதில்லை.. பள்ளி மாணவன்- மாணவி கடைசி காட்சியில் ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொண்டனர்..மாபெரும் வெற்றி.. !! பன்னீர் புஷ்பங்களிலும் ஏறக்குறைய அதே மாதிரி ஊரை விட்டு ஓட எத்தனிக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் வாத்தியார் வந்து " இவளை கூட்டிட்டு போய் நீ எப்படி குடும்பம் நடத்துவே? எப்படி சம்பாதிப்பே? இப்போ படிச்சு வேலைக்கு போங்க; அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் " என அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்புவார்..

சோகம் என்னன்னா - சரியான முடிவை சொன்ன இந்த படம் தோல்வி !!

இப்படத்தின் பல பாடல்கள் அட்டகாசம்.. அதிலும் இப்பாடல் ராஜாவின் எனது ஆல் டைம் பாவரைட்டில் ஒன்று..



இதே பாடலின் அழகான இன்ஸ்ட்ருமென்ட் வெர்ஷன் இது :




ஓ.எம்.ஆரில் கொடி கட்டி பறக்கும் வீட்டு உரிமையாளர்கள்

சென்னை  ஓ.எம்.ஆரில் மிக நெருங்கிய உறவினர் பெண் வேலைக்கு சேர்ந்தார். ஹாஸ்டல்கள் பற்றி விசாரித்த போது பல இடங்கள் சாப்பாடு சரியில்லை- வேலைக்கு செல்லும் பெண்களாக சேர்ந்து வீடு எடுத்து தங்குவது சிறந்தது என்று - மேலும் விசாரிக்க நல்ல, பாதுகாப்பான இடம் என ஒரு குடியிருப்பை பரிந்துரைத்தனர்.

3  பெட் ரூம் அடங்கிய இந்த வீட்டில் ஒவ்வொரு ரூமிலும் 3 பெண்கள் தங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெளியில் ஒரு மெஸ்ஸில் இருந்து வீட்டு ஓனரே சாப்பாடு அரேன்ஜ் செய்து விடுகிறார்.  ஒருவர் தருவது 8000 ரூபாய் ! மெஸ்ஸுக்கு அநேகமாய் 2000 ரூபாய் தந்தால் அதிகம் ! 6000 ரூபாய் ஒருவருக்கு - ஒரு வீட்டில் ஒன்பது பேர்.. கணக்கு போட்டு பாருங்கள்.. உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கிறார்கள்.

ஓ.எம்.ஆரில் 2-3 பிளாட்கள் இருந்தால் இது போல வாடகைக்கு விட்டு விட்டு ரிட்டயர்டு லைப் மாதிரி வாழலாம் என பேசிக்கொண்டோம். பிளாட்டின் இன்றைய விலை 80 லட்சம்...

ஆயினும் அதே ஓ.எம்.ஆரில் ஏராள பிளாட்கள் காலியாய் இருப்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும் !

ஆதார் அப்டேட் 

ஆதார் கார்டுக்கு ஒரு வழியாய் புகைப்படம் எடுத்தது குறித்து அண்மையில் எழுதியது நினைவிருக்கலாம்.

எனக்கும் ஹவுஸ் பாசுக்கும் புகைப்படம் ஒன்றாய் எடுத்தோம். ஒரு வாரம் முன்பு ஹவுஸ் பாஸுக்கு உங்கள் ஆதார் கார்ட் தயார் என மெசேஜ் வந்து விட்டது;எனக்கு இன்னும் காணும். கஜினி முகமது மாதிரி எனது ஆதார் புகைப்பட அனுபவம் தொடரும் என்று நினைக்கிறேன்..
ஆதார் கார்டுக்கு ஒரு வழியாய் புகைப்படம்  எடுத்தது  குறித்து அண்மையில் எழுதியது நினைவிருக்கலாம்.

எனக்கும் ஹவுஸ் பாசுக்கும் புகைப்படம் ஒன்றாய் எடுத்தோம். ஒரு வாரம் முன்பு ஹவுஸ் பாஸுக்கு உங்கள் ஆதார் கார்ட் தயார் என மெசேஜ் வந்து  விட்டது;எனக்கு இன்னும் காணும். கஜினி முகமது மாதிரி எனது ஆதார் புகைப்பட அனுபவம் தொடரும் என்று நினைக்கிறேன்.. 

Sunday, June 26, 2016

டாப்ஸ்லிப்- என்ன பார்க்கலாம்? எங்கு தங்கலாம்?பயணப்பதிவு

டாப்ஸ்லிப் - மர வீடு ( Tree house ) செல்லலாம் என்று தான் முதலில் துவங்கினோம்... 

பொள்ளாச்சி சென்று பின் டாப் ஸ்லிப் செல்ல வேண்டும் என்பதும் பொள்ளாச்சிக்கு நேரடி ரயில் ஒன்றே ஒன்று தான் சுற்று வழியில் செல்கிறது என்பதும் தெரிந்தது. கோயம்பத்தூர் வழியே பொள்ளாச்சி செல்வது தான் சுருக்கு வழி.. ஆனால் இந்த ரயில் பல ஊர் சுற்றி விட்டு 13 மணி நேரம் எடுத்து கொள்கிறது 

மேலும் நாங்கள் திட்டமிட்டது மிக குறுகிய நாட்களில் தான். எனவே ஸ்லீப்பர் பஸ்ஸில் பயணிக்க திட்டமிட்டோம் 

பொள்ளாச்சி வரை ஸ்லீப்பர் பஸ்ஸில் செல்ல SRM டிரான்ஸ்போர்ட் தான் மிக சிறந்த பஸ். காரணம் ஏ. சி ஸ்லீப்பர்  பஸ் குறைந்த விலையில் (700) இந்த வண்டியில் தான் உள்ளது. செல்லும் போது SRM யிலும் - திரும்பும் போது  K P N ஸ்லீப்பர் பஸ்ஸிலும் ( 1000) பயணித்தோம்  (SRM ஞாயிறு இரவுக்கு சீக்கிரம் புக் ஆகி விடுகிறது ) 


டாப்ஸ்லிப் செல்ல முதலிலேயே ரூம் புக் செய்து கொள்வது அவசியம். நல்ல விஷயம் - பணம் ஏதும் முன்னால் கட்ட வேண்டியதில்லை; அங்கு சென்று கட்டினால் போதும். 

வனத்துறை அதிகாரி காசிலிங்கம் என்பவரை போனில் தொடர்பு கொண்டு - ட்ரீ ஹவுஸ் வேண்டுமென புக் பண்ணினோம் 

இவரது போன் : 94867 80715

பொள்ளாச்சி சென்று, இவர்கள் அலுவலகத்தில் பணம் கட்டி - அந்த அனுமதி சீட்டுடன் சென்றால் தான் மேலே (Topslip) தங்க முடியும். மாற்றாக - நீங்கள் ஒரு நாள் பயணமாக மட்டும் டாப்ஸ்லிப் சுற்றி பார்க்கிறீர்கள் - அங்கு இரவு தங்க வில்லை எனில் - காசிலிங்கம் அவர்களிடம் பெர்மிஷன் ஏதும் வாங்க தேவையில்லை என நினைக்கிறேன். 


மூன்று நாளுக்கும் கார் ஏற்கனவே புக் செய்திருந்தோம்..

பரத் என்பவர் காருக்கு ஏற்பாடு செய்து தந்தார்; இவரது தொலைபேசி எண் : 94890 33707 (இவர் பொள்ளாச்சியில் ரிஸார்ட்டும் வைத்திருக்கிறார்; அங்கு தங்குங்கள் என மிக சொன்னாலும் ஏற்காதீர்கள்; டாப் ஸ்லிப் செல்ல முடிவெடுத்தால் டாப் ஸ்லிப்பில் வனத்துறை/ அரசு விடுதியில் தங்குவதே சிறந்தது ; மலைக்கு கீழ் அல்ல ); இவரிடம் கார் மட்டும் வேண்டும் என கேட்கவும்.

டாப் ஸ்லிப், பரம்பிக்குளம், பொள்ளாச்சி, ஆழியார் என 3 நாள் நம்முடனே கார் இருக்க - 4500 ரூபாய் மிக ரீசனபிள் ஆக தோன்றியது. இதுவே கோயம்பத்தூரில் இருந்து என்றால் 5500 வாங்குகிறார்கள்

பஸ் - காலை 6 மணிக்கெல்லாம் சென்று விட்டது.  நாங்கள் இறங்கிய சில நிமிடங்களில் நாங்கள் இருந்த இடத்திற்கு முன்பே புக் செய்த கார் வந்துவிட்டது .

பொள்ளாச்சி வனத்துறை அதிகாரி அலுவலகம் செல்ல, அவர்கள் 9.30 மணிக்கு தான் வருவார்கள் என்றனர்..வேறு எங்கு செல்லலாம் என யோசித்து அருகில் உள்ள அம்பாரம் பாளையம் ஆற்றுக்கு சென்றோம்..

ஆற்றில் ஒரு பக்கம் அதிக ஆழமில்லை; மறு பக்கம் நல்ல ஆழம். பாதுகாப்பான இடத்தில் மட்டுமே குளித்தோம். ரிஸ்க் ஆன மறுபக்கம் செல்ல வில்லை. இந்த ஒரு மணி நேரமும் ஜாலியாக பொழுது போனது


ஆற்றில் இன்னொரு பக்கம் ஏராள சலவை தொழிலாளிகள் துணிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.. இவர்களிடம் சலவை செய்யும் விதம் பற்றி சற்று விசாரித்து விட்டு கிளம்பினோம்




காசிலிங்கன் அவர்கள் போலீஸ் போன்ற (வனத்துறை) உடை அணிந்து தனது புல்லட்டில் மிக சரியாக 9.30க்கு வந்து இறங்கினார். 4 குடும்பங்கள் டாப் ஸ்லிப் செல்ல அனுமதி பெற காத்து கொண்டிருந்தனர்

ட்ரீ ஹவுஸ் maintenance வேலை நடக்கிறது; முடிய வில்லை; மூங்கில் வீட்டில் தங்குங்கள் என அனுமதி சீட்டு தந்தார். ஒரு நாள் வாடகை 2500; இருவருக்கு மேல் தங்கினால் அதற்கு தனி சார்ஜ் (முன்பே ட்ரீ ஹவுஸ் வேலை நடக்கிறது என்றால் - வராமல் போவோமோ என்று சொல்ல வில்லை போலும் )

டாப் ஸ்லிப்பில் பைசன் காட்டேஜ் - குறைவான செலவில் தங்க விரும்புவோருக்கு சரியான சாய்ஸ். இது 900 வாடகையில் இருந்து துவங்குகிறது; மர வீடு மற்றும் மூங்கில் வீடு ஒரு நாள் வாடகை 2500 ரூபாய்.  இங்கு அனைத்துமே அரசு நிர்வகிக்கும் அறைகள் மட்டுமே. தனியார் லாட்ஜ் எதுவும் இல்லை; பொள்ளாச்சி வனத்துறை மூலம் தான் அறைகள் புக் செய்ய வேண்டும். (மிக அரிதாக டாப் ஸ்லிப்பில் தங்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் வரும் டூரிஸ்ட் பின் தங்கலாம் என முடிவெடுத்து டாப் ஸ்லிப்பில் உள்ள வனத்துறை அதிகாரியை அணுகினால் அவர் அறை  இருக்கும் பட்சம் அனுமதி வழங்குகிறார்; இருப்பினும் பொள்ளாச்சி வனத்துறை மூலம் முன்பே புக் செய்வது நல்லது )


மலை ஏறுவது சிரமமாகவே இல்லை. கொண்டை ஊசி வளைவுகள் ரொம்ப சுற்றி எடுக்க வில்லை; வாந்தி, மயக்கம் வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு

அனுமதி சீட்டை காட்டியதும் நமது அறைக்கு அழைத்து செல்கிறார்கள். செக் இன் டைம்: மதியம் 12 மணி; செக் அவுட் டைம்: மறு நாள் காலை : 10 மணி; அறை காலியாக இருந்தால் 11 மணி போல் கூட நம்மை தங்க அனுமதிப்பார்கள்

Bamboo House தான் இருக்கும் அறைகளில் கடைசியாக உள்ளது; இதில் ஒரே பிரச்சனை - இந்த அறை ஒரு கடைசி என்றால் - சாப்பிடும் இடம் இன்னொரு கடைசி - எனவே 10 நிமிடம் நடந்தால் தான் சாப்பிடும் இடத்தை அடைய முடியும்.

இரவு நாங்கள் சாப்பிட நடந்த போது 2 காட்டெருமை வழியில் நின்று கொண்டிருந்தது  !! நல்லவேளையாக அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் நமக்கு தைரியம் சொல்லி காட்டெருமை சாலை விட்டு அகன்றதும் சாப்பிடும் இடத்துக்கு அழைத்து சென்றனர்.

காட்டெருமை அருகில் சென்றால் மிக ரிஸ்க் தான் என்றும் சற்று தூரத்தில் இருந்தால் பிரச்சனை இல்லை சென்றும் கூறினர்

Bamboo House ஒன்று மட்டுமே உள்ளது; அறை நன்றாக இருந்தாலும் கழிப்பறையில் - டைல்ஸ் எல்லாம் சற்று அழுக்காக இருந்தது; பைசன் உள்ளிட்ட மற்ற அறைகள் எப்படி என தெரியவில்லை



டாப் ஸ்லிப்பில் முக்கியமாக 3 activities தான். 

1. யானை மேல் ஏறி சவாரி செல்வது; இது நாங்கள் தங்கிய அறைக்கு மிக அருகில் நடந்தது. 

யானைக்கு மேல் அருமையாக மெத்தை போல தைத்து, சுற்றிலும் ஒரு கூண்டு போல் செய்து 4 அல்லது 5 பேர் அமர்ந்து செல்கிற மாதிரி செய்துள்ளனர். எனவே உடம்பு உறுத்தாது; கீழே விழாமல் பாது காப்பும் கூட  

காட்டுக்குள் 20 நிமிடம் யானை சவாரி மிக இனிமையாக இருந்தது; யானை பாகன் பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டார்; மேலும் சற்று முன் புலி வந்து சென்ற காலடி தடம் காண்பித்தார். 




நாங்கள் சென்று வந்த யானை பெயர் சூர்யா; 30 வயதுக்கு மேல் ஆன சீனியர் யானை அது 


இந்த படத்தில் யானை குளிக்க வில்லை; முகம் கழுவி கொள்கிறது !!


2. இரண்டாவது activity - Safari  -  வனத்துறை வேனில் தான் செல்ல வேண்டும். 25 நபர்கள் சேர்ந்தால் ஆளுக்கு 120 ரூபாய் வாங்குவார்கள். ஒரு ட்ரிப்புக்கு 3000 ரூபாய் என கணக்கு

குறைவான நபர்கள் இருந்தால் 3000 ரூபாய் அவர்கள் பங்கிட்டு கொள்ளவேண்டும் (நாங்கள் போன போது 18 பேர் இருந்தோம்; 3000 ரூபாயை ஆளுக்கு 175 என பங்கிட்டு கொண்டோம்; இதனை வனத்துறை அதிகாரிகளே கணக்கிட்டு வாங்கி விடுகிறார்கள்)

இந்த Safari மாலை 4-5 ட்ரிப்பில் செல்வது சிறந்தது. அப்போது 24 யானைகள் அனைத்தும் ஒன்றாக பார்க்க முடியும், மேலும் அவற்றுக்கு சாப்பாடு கொடுப்பதை காணலாம்.

12 மணிக்கு செக் இன் என்பதால் அனைவரும் மாலை ட்ரிப் தான் செல்லுவர்; அப்போது தான் 25 பேர் சேருவர்; அவர்கள் அனைவரும் பார்த்து விட்டால் காலை 7.30 ட்ரிப்புக்கு ஆட்கள் இருக்காது

காட்டுக்குள் சின்ன பஸ் பயணம்; கரும் குரங்குகள், மயில், மான் இவற்றை காண முடிகிறது

வேன் பயண வழியில் கண்ட மயில் 

யானைகள் சாப்பிட்டு முடித்ததும் மேய அனுப்பி விடுகிறார்கள்; அப்படி மேயும் ஒரு யானை 

24 யானைகள் இருக்கும் இடம் சென்றதும் - சாப்பாடு குடுக்கும் நேரம் நீங்கள் சென்றால் - ஜாலியாக இருக்கும். மிக பெரும் உருண்டைகளை அவை அனாயசமாக சாப்பிடுவதை காண முடியும்

மாலை 5 மணி தவிர மற்ற நேரம் Safari செல்வது மிக வேஸ்ட்; நாள் முழுதும் அறையில் தங்காமல் - பகல் நேரம் வரும்  பயணிகளையும் இந்த Safari அழைத்து போகிறார்கள்; ஆனால் அவர்கள் என்ன பார்ப்பார்கள் என தெரியவில்லை; யானைகள் மேய சென்று விடும்; பார்க்க முடியாது

யானையுடன் ஆர்வமாய் போட்டோ எடுக்கும் மக்கள் 


அருகிலேயே சிறு வீட்டில் ரெண்டரை வயது குட்டி யானையை சென்று பார்த்தோம்; கூட்டமாக அனுமதிக்க மாட்டார்கள். வேன் ட்ரைவர் சொன்னதால் சில பேர் மட்டும் சென்று கண்டோம்

சிறு வயது யானை  பரம சாதுவாக இருக்கிறது; அருகில் நின்றால் நமது கால்களை தொடுகிறது; ஆள் ஆளுக்கு இதை ரொம்பவும் செல்லம் கொஞ்சினார்கள்; வளர்ப்பவர் சொல்கிற பேச்சை அப்படியே கேட்கிறது

3. டாப் ஸ்லிப்பில் மூன்றாவது activity ட்ரெக்கிங்; காலை 7 அல்லது 8 மணி வாக்கில் ட்ரெக்கிங் செல்வது தான் சிறந்தது; பகலில் வெய்யில்; மாலை விலங்குகள் பயம் - அனுப்ப மாட்டார்கள்

மேலும் டாப் ஸ்லிப் வன அலுவலக ஆபிஸ் அருகே சிறு   கண்காட்சி சாலை உள்ளது




டாப் ஸ்லிப்பில் அனைத்து தங்கும் இடங்களுக்கும் சேர்த்து ஒரே உணவகம்; இங்கு மத்திய சாப்பாடு ரொம்ப சுமார். இரவு - சப்பாத்தி குருமா - காலை தோசை இரண்டும் ஓகே  ; வெவ்வேறு வித உணவு கிடைக்காது; இருப்பதை சாப்பிட வேண்டும். அதுவும் முதலிலேயே சொல்லி வைத்து விட வேண்டும்.

நிறைவாக:

1. டாப்ஸ்லிப் - ஒரு நாளுக்கு மேல் தங்க/ பார்க்க ஏதுமில்லை;

2. நன்கு விசாரித்து - மர வீடு கிடைத்தால் தங்கவும்; மேலும் Chittal House  என்ற கெஸ்ட் ஹவுஸ் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்; இங்கு சமைத்து தர ஆள் இருக்கிறார்கள் என கேள்வி; எனவே சாப்பாடு பற்றிய கவலை இல்லை

எகானாமி வகை வேண்டும் எனில் பைசன் காட்டேஜ் போன்ற 1000 ரூபாய்க்கும் குறைவான இடங்களை கேட்டு பெறலாம்.

3. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெய்யில் தான்; நல்ல கிளை மேட் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் (அக்டொபர் மேல் சென்றால் பகலும் குளிராக இருக்கலாம் )

4.யானை மேல் சவாரி அவசியம் செல்லவும்; ஜாலியான எக்ஸ்பீரியன்ஸ் அது;மேலும் மாலை 5 மணிக்கு மட்டும் யானைகள் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லும் Safari செல்லவும்

5. உணவு சுமார் தான். Be prepared !

டாப்ஸ்லிப்பில் இருக்கும் ட்ரைபல் பள்ளியில் - மாணவர்களுடன் சில மணி நேரங்கள் செலவிட்டேன்; அது பற்றியும், யானைகள் பற்றி சில தகவல்களும் அடுத்த பதிவில் .....

தொடர்புடைய பதிவுகள்

டாப் ஸ்லிப்- பழங்குடி மக்கள் + மாணவர்கள் வாழ்க்கை-ஓர் அனுபவம்

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் ட்ரைலர்

Saturday, June 25, 2016

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா -புத்தக விமர்சனம்

தற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தொடர் - குமுதத்தில் வெளியான போது நான் ஒரு தீவிர பாலகுமாரன் ரசிகன். ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாசிப்பேன். .



ஆனால் பல ஆண்டுகள் கழித்து இப்போது வாசிக்கும்போது இந்த சுய சரிதை வேறு சில சிந்தனைகளை தந்தது..

 17 வருடத்துக்கு மேல் வேலை பார்த்த "டபே" நிறுவனத்தை எப்போது குறிப்பிட்டாலும் " ட்ராக்டர் கம்பனி" என்றே கூறுவார் பாலகுமாரன் ..  எதனால் இப்படி? நிறுவனம் பெயர் தெரிய கூடாது; சொல்ல கூடாது என்பதாலா? ஆனால் அந்த ட்ராக்டர் கம்பனி- என்கிற ரீதியில் சொல்லும்போது - ஒரு வித அலட்சியம் தெரிகிற மாதிரி ஓர் எண்ணம்..

போகட்டும்.. ட்ராக்டர் கம்பனியில் பாலகுமாரன் 17 வருடம் இருந்து விட்டு வேலையை ராஜினாமா செய்வதில் துவங்குகிறது இந்த மினி சுய சரிதை.. அதற்கு முன் வேலையை விட தயங்கி கமலிடம் பேசியது; சுஹாசினியிடம் பேசியது என சில அத்தியாயங்கள்..

வேலையை விட்டு விட்டு தன்னிடம் சேர சொன்னது பாக்யராஜ் தான்.. ஆனால் பாலகுமாரன் கவிதாலயாவில் (பாலசந்தர்) சேருகிறார்... பின் இந்த நாவல் முழுவதுமே அடுத்த இரு படங்களில் பாலசந்தரிடம் - இவர் வேலை செய்த அனுபவங்கள் - அப்போது சினிமா காரர்களுடன் உள்ள அனுபவம் இவை மட்டுமே பேசுகிறது

இந்த சுய சரிதையில் ஒன்றுமே இல்லை.. அது தான் உண்மை.. ! கமலுடன் ஒரு மணி நேரம் பேசினேன் தெரியுமா என்றால் " அப்படியா ?" என வாயை பிளப்போருக்கு மிக சுவாரயமாய் இருக்கும் இப்புத்தகம். சிவகுமார், அனந்து, பாலசந்தர் என நமக்கு தெரிந்த சினிமா நட்சத்திரங்கள் குணாதிசயம், அவர்கள் பேசிய வார்த்தைகள் ..இதற்கு ஒரு புத்தகமா?

இதில்.. சினிமாவில் நான் இயக்குனராக எப்படி சாதிப்பேன் என்கிற வீர வசனம் வேறு .. பாலகுமாரன் சினிமாவில் என்ன சாதித்தார்  என யோசித்தால், பாஷா மற்றும் ஷங்கரின் ஒரு சில படங்களுக்கு வசனம் எழுதியதை தவிர வேறு பெரிதாய் எதுவும் செய்யவில்லை (பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு டைரக்ஷன் - பாலகுமாரன் என்று டைட்டிலில் போடுவார்கள்.. அதற்கு பின் டைரக்ஷன் மேற்பார்வை என பாக்யராஜ் பெயரை போடுவார்கள் :)

புத்தகத்தின் இறுதியில் ஓரிரு படங்களில் வேலை செய்து விட்டு பாலசந்தரிடம் இருந்து நின்று விடுகிறார் பாலகுமாரன்.. அப்புறம் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியோடு புத்தகம் நிறைவு பெறுகிறது..

இரண்டே இரண்டு படம்.. உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு சினிமா இண்டஸ்ட்ரியே புரிந்து விட்ட மாதிரி ஒரு புத்தகம் எழுத பால குமாரனால் மட்டுமே முடியும்.. !

பாலகுமாரனின் முன் கதை சுருக்கம் என்கிற பயோ கிராபி நிச்சயம் இதை விட நன்றாக இருக்கும் என நினைவு ...

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா ஆசை கொண்டோர் அல்லது பாலகுமாரன் தீவிர ரசிகர்களுக்கு மட்டும் !

Wednesday, June 22, 2016

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங்கள் ட்ரைலர்

பொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிக்குளம்- ஆழியாறு - 3 நாள் பயணமாக அண்மையில் சென்று வந்தோம். மிக இனிமையான இப்பயணத்தில் இருந்து சில புகைப்படங்கள் மட்டும் தற்போது... பயணம் பற்றிய குறிப்புகள் 3-4 பகுதிகளாக விரைவில் வெளியாகும்..








டாப் ஸ்லிப்பில் நாங்கள் தங்கிய அறைக்கு வெளியே மெல்லிய மழையில் .. 




நாங்கள் சென்ற காரின் பக்கவாட்டில் மிக அருகே காட்டெருமை கூட்டம் 

காட்டெருமையுடன் காரில் இருந்த படி மகளின் செல்பி   

பரம்பிக்குளத்தில் அற்புதமான ட்ரெக்கிங்கின் போது 

I am a strict father.. you know !!!

இவர் குளிக்க ஆரம்பிச்சா குளிச்சிக்கிட்டே   இருப்பாரே.. நிறுத்தவே மாட்டாரே 

சூர்யா என்கிற  யானை மேல் ஒரு இனிய சவாரி 

சூர்யாவோடு விளையாடும் மனைவி-மகள் 

டாப் ஸ்லிப்பில் ட்ரைபல் (Tribal) களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்களுடன் ஒரு சிறு கலந்துரையாடல் 

டாப் ஸ்லிப்பில் அறைக்கு அருகே உலா  வந்த மான் கூட்டம் 

ரெண்டரை வயது குட்டி யானையை அது இருக்கும் வீட்டினுள் சென்று பார்த்த அற்புத நிமிடங்கள் 

சண்டை போடுற டச் விட்டு போயிட கூடாது என்கிற நல்லெண்ணத்தில்...

பரம்பிக்குளம் அணை 

ஏராளமான கண் கொள்ளா காட்சிகளில் மாதிரிக்கு ஒன்று 

465 வயது மரத்துடன்  நாங்கள்.. நாங்கள் பிடிப்பது போல் இன்னும் மூவர் கை கோர்த்தால் மட்டுமே மரம் முழுதும் கை கோர்க்க முடியும் !!

பரம்பிகுளத்தில் ட்ரைபல் டான்ஸுக்கு முன்பு... 

தோகை விரித்து அமர்ந்திருக்கும் மயில்.. 

வெளி நாடல்ல.. பொள்ளாச்சி !!

தொடர்புடைய பதிவுகள் 

Monday, June 20, 2016

ஆதார் கார்ட் என்றொரு அபத்தம்

முதலில் நல்ல விஷயத்தை சொல்லி விடுகிறேன்.. 4 வருட படையெடுப்புக்கு பின் ஒரு வழியாய் ஆதார் கார்டுக்கான புகைப்படம் எனக்கும்- ஹவுஸ் பாசுக்கும் எடுத்து விட்டார்கள்..

முதல் வரியை சரியே கவனித்தீர்களா? 4 வருடங்கள்.. !! நான் இந்த போராட்டத்தை துவங்கி -  போட்டோ எடுக்கும் நிலைக்கு வரு முன் லட்சகணக்கான தமிழர்கள் இஞ்சினியரிங் கோர்ஸ் படிக்க துவங்கி, டிகிரியும் வாங்கி முடித்திருப்பார்கள் !!




முதல் கோணல் முற்றும் கோணல்

ஆதார் கார்ட் கணக்கெடுப்பு எப்படி துவங்கினார்கள் தெரியுமா?  சென்சஸ் எடுக்க வரும் டீச்சர்கள் ஆங்காங்கு வீடுகளில் வந்து தகவல் கேட்டு குறித்து சென்றுள்ளார்கள்.. ஊரில் பாதி வீடுகள் பகல் நேரங்களில் பூட்டி இருக்கின்றன.. இருவரும் வேலை பார்க்க- குழந்தைகளும் பள்ளி சென்று விட, யார் இருப்பார் வீட்டில்?

பிரச்சனை இங்கேயே துவங்கி விடுகிறது..

இப்படி அவர்கள் வந்து தகவல் சேகரித்த செய்தி அறிந்து - அருகில் உள்ள ஒவ்வோர் பள்ளியாக சென்று கடைசியில் எந்த பள்ளியில் சென்சஸ் எடுத்தார்களோ அவர்களை கண்டு கொண்டேன் ! கண்டு கொண்டேன் ! ஒரு முறையல்ல .. அடுத்தடுத்த மாதங்களில் 2 தடவை அவர்களிடம் இதற்கான பார்ம் பில் செய்து தந்தேன்..

அடுத்த கட்டம்

ஊரில் பலருக்கும் போட்டோ பிடிக்க துவங்கினர்.. கூட்டம் பிய்த்து உதறியது.



உங்களுக்கு மெசேஜ் வரும் .. அப்புறம் தான் போட்டோ எடுக்க வர முடியும் என கெத்து காட்டினார்கள்.. இல்லாட்டி அந்த புக்கில் உங்க பேர் வரணும் என்றார்கள்.

அந்த புக் என அவர்கள் சொன்னது ஒரு புக் இல்லை.. ஏழெட்டு புக் !! ஏரியாவாசிகள் பெயர்கள் மொத்தமும் அடங்கிய இந்த புத்தகம் அந்த சென்டரின் நுழை வாயிலில் இருக்கும்.. அந்த எட்டு புக்கின் அனைத்து பக்கத்தையும் ஒன்று விடாமல் நீங்கள் தேட வேண்டும்.. உங்கள் பெயர் இருக்கிறதா என்று !!!

என்ன தலையை சுற்றுகிறதா?

இப்படி எட்டு புக்கின் அனைத்து பக்கத்தையும் தேடும் படலம் மட்டும் 3 வருடத்தில் - மொத்தம் 20 முறைக்கு மேல் செய்த எனக்கு எப்படி இருக்கும் !!

ஒவ்வொரு முறையும் போய் புக்கில் பெயர் இருக்கா என தேடவேண்டியது.. இல்லை என்றதும், பாரம் பில் செஞ்சு கொடுங்க சார் என்பார்கள்.. இந்த பார்ம் மட்டும் 15 முறையாவது பில் செய்து தந்திருப்பேன்.. !!

ஊஹூம்.. எத்தனை தடவை எழுதி தந்தாலும் புக்கில் நம் பெயர் வருகிற மாதிரி இல்லை..

அந்த நாள்.. !!!

4 வருட படையெடுப்புக்கு பின் ஒரு நாள் வெறுத்து போய் இணையத்தில் ஏதாவது நம்பர் கிடைக்குமா என தேடினேன் ..எங்கள் ஏரியா அசிஸ்டென்ட் ரெவினியூ ஆபிசர் (ARO) தொலை பேசி எண் கிடைத்தது.. அவரிடம் போன் செய்து "நாலு வருட தவம் " பற்றி பேச, "நேரில் வாங்க பேசுவோம்" என்றார். ( இந்த ஆதார் கார்ட் வாங்கும் விஷயத்தில் இவர் தான் முக்கிய ஆபிசர் !!) மறுநாளே ஆபிசில் போய் பார்த்ததும், பியூனை அழைத்து "சாருக்கு போட்டோ எடுக்க சொல்லு" என அனுப்பி வைத்தார்..

நம்ப முடிய வில்லை.. இன்னிக்கு எடுத்துடுவாங்களா என ஆச்சரியத்துடன் செல்ல, "சாயந்திரம் 4 மணிக்கு வாங்க; இப்ப கூட்டமா இருக்கு " என அனுப்பி வைத்தனர்..

4 மணிக்கு வந்ததும் - ஒரு பார்ம் கொடுத்து பில் பண்ணுங்க என்றனர்.. 4 வருடத்துக்கு முன் பள்ளியில் கொடுத்த அதே பார்ம் ..!!!  15 தடவைக்கு மேல் பில் அப் பண்ணி தந்த பார்ம்...!! சுஜாதா பாணியில் என்னய்யா விளையாடுகிறீர்களா என கேட்காமல் ,  பொறுமையாய் பில் செய்தேன்..

ஒரு வழியாய், கண், காது, மூக்கு என தனி தனியே எல்லாவற்றையும் போட்டோ எடுத்தனர்.. நம்ம போட்டோ
உடன் சேர்த்து அக்னாலட்ஜ் மென்ட் ஸ்லிப் ஒன்று தந்தனர்..



ஹவுஸ்பாஸ் தனது போட்டோவை பார்த்து விட்டு " சே.. என்ன இது வேலைக்காரி மாதிரி இருக்கு" என அதிர்ந்தார் .. நானும் எட்டி பார்த்தேன்.. கொஞ்சம் அப்படி தான் இருந்தது.. இருந்தாலும் " ச்சே. சே. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்றேன் சிரிப்பை அடக்கிய படி ..

வெளியில் காத்திருந்த நேரம் போட்டோ எடுக்க வந்த ஒரு பெரியவர் சொன்னார்: "எனக்கு ஏற்கனவே போட்டோ எடுத்தாச்சு. ஆனா 2 வருஷம் ஆகியும் கார்ட் வரலை; அதான் மறுபடி எடுக்குறேன் !!"

அடப்பாவிகளா !! நான் எதோ இத்தோட முடிஞ்சு போயிடும்னு நினைச்சேன்.. இப்படி பயமுறுத்துறிங்களே  !! மறுபடி முதல்லேந்தா???

நிற்க. இன்றைக்கு ஒரே நாளில் பார்ம் பில் செய்து வாங்கி, போட்டோ எடுத்து மொத்த வேலையும் முடித்தார்களே . !! ஏன் இதனை முதலிலேயே செய்திருக்க கூடாது?

நேரில் வந்து - ஒரு முகவரி சான்று  (அட்ரஸ் ப்ரூப் ஒரிஜினல் ) காட்டி விட்டு, அன்றே போட்டோ எடுத்தால் வேலை எளிதாய் முடிந்திருக்கும்.. அதை விடுத்து முதலில் வீட்டிற்கு வந்து லிஸ்ட் எடுப்போம். .மிஸ் ஆனால் பார்ம் பில் செய்து தரனும்.. பின் புக்கில் பெயர் வரும். பெயர் வந்தால் மட்டுமே போட்டோ என எவ்வளவு சுத்தி விட்டார்கள் !! கொடுமை..

ஒரு அரசாங்க ப்ராஜக்ட் எப்படி நடத்த பட கூடாது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஆதார் கார்ட் வழங்கும் முறை தான்..

இதுவரை நீங்கள் ஆதார் வாங்காவிடில்..

தற்சமயம் பல்வேறு இடங்களில் அடிக்கடி ஆதார் போட்டோ எடுக்கும் வைபவம் நடத்துகிறார்கள்.. பேப்பரில் கவனியுங்கள்... அல்லது உங்கள் ஏரியாவில் சிலரிடம் சொல்லி வையுங்கள்.. நடந்தால் உங்களுக்கு தெரிவிக்க சொல்லி.. அங்கு நேரடியாக ஒரு அட்ரஸ் ப்ரூப் உடன் சென்று போட்டோ எடுத்து வந்து விடலாம்..

அல்லது உங்கள் ஏரியா ரெவினியூ ஆபிஸ் எங்குள்ளது என விசாரித்து - அங்கு சென்று பாருங்கள்.. அந்த ஆபிசில் தான் ஆதாருக்கு  தினமும் போட்டோ எடுக்கிறார்கள்.. அந்த ஆபிஸ் போகும் போது ARO-ஐ மறந்து விடாதீர்கள் !

ஆல் தி பெஸ்ட் !

Thursday, June 16, 2016

பூவார் (கேரளா)- ஒரு பயண அனுபவம்

ண்மையில் நண்பர்கள் பாலா- டெய்சி குடும்பத்துடன் கேரளாவில் இருக்கும் பூவாருக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டோம். அப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு இது:

பூவார் - கேரளா- தமிழக பார்டரில் இருக்கும் ஒரு பேக்வாடர்ஸ் இடம்...இங்கிருந்து சில கிலோ மீட்டர் தாண்டினால் தமிழகமும், பின் நாகர்கோவிலும் வந்து விடுகிறது.. நாங்கள் 3 நாள் பூவார் மகேந்திரா ரிசார்ட்டில் தங்கினோம். இதில் ஒரு நாள் பேக்வாட்டர்ஸ் பயணம்.. மற்ற படி ரிசார்ட்டில் இருக்கும் விளையாட்டுகள், மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விடல்.. (ரிசார்ட் காரர்கள் மீன் பிடிக்கும் வரை பேசாதிருந்து விட்டு பிடித்த பின் வந்து புலம்பியதால் - மீன்களை ஆற்றில் விட வேண்டியதானது) என மிக ரிலாக்ஸ்டு ஆக இருந்தோம்.

இறுதி நாள் ரூம் காலி செய்துவிட்டு - தொட்டி பாலம், திப்பரப்பு அருவி, பத்மநாபபுரம் பேலஸ் மற்றும் முட்டம் பீச் ஆகிய இடங்களுக்கு சென்று வந்தோம்...இந்த இடங்கள் அனைத்தும் பூவாருக்கு அருகில் தான் உள்ளது

பயணத்தில் சில இனிய விஷயங்கள்: 

பேக்வாட்டர்ஸ் பயணம் 

மகேந்திரா ரிசார்ட்டில் முதல் முறை தங்கிய அனுபவம்; இந்த ரிசார்ட் பற்றி நன்கு அறிய முடிந்தது ; அங்கு ஒவ்வொரு வேலையும் சாப்பிட்ட வகை வகையான உணவுகள் 

திப்பரப்பு அருவி குளியல் (முதல் நாள் வரை அருவியில் யாரும் குளிக்க அனுமதியில்லை; நாங்கள் சென்ற அன்று ஊரில் திருவிழா என மக்களை குளிக்க அனுமதித்தனர்.. ஆனந்த குளியல்.. அனைவரும் என்ஜாய் செய்தோம் )

பத்மநாபபுரம் பேலஸ் அனைவரும்  மிக ரசித்தனர்.. 

என நிறையவே இனிய நினைவுகள். 

நாங்கள் சென்று வந்து வாரங்கள் பல கடந்து விட்டதால் விரிவாக எழுத இயல வில்லை.. புகைப்படங்களும் அவை பற்றிய சிறு குறிப்பும் மட்டும் பகிர்கிறேன் 

சென்னை டு திருவனந்த புரம் - விமானத்தில் பயணித்தோம்; திரும்பியதும் அவ்வாறே; ஒரு மாதம் முன்பு புக் செய்ததால் மிக குறைவான விலையில் டிக்கெட் போட முடிந்தது 



நாங்கள் தங்கிய பூவார் மகேந்திரா ரிசார்ட் 


மகேந்திரா ரிசார்ட் 

மனைவி, மகள், நான் மூவருமே முதல் முறை பில்லியர்ட்ஸ் ஆட கற்று கொண்டோம்.. சுவாரஸ்யமான விளையாட்டு !!
பேக் வாட்டர்ஸ் படகு  பயணம் 


இப்படி அமர்ந்திருந்த பறவை.. 

போட்டோ எடுப்பது தெரிந்து - தண்ணீரில் நீந்தி எஸ்கேப் ஆனது 


மிதக்கும் படகு உணவகங்கள்.. மீன் .... முக்கிய, ருசியான உணவு 


பேக் வாட்டர்ஸ் படகு பயணத்தில் கேத்தலின்   


ஏரிக்கு நடுவே அமைந்துள்ள மாதா சிலை 


படகு பயணத்தில் வரும் பாலம் ஒன்று.. 

தொட்டி பாலம் அருகே - தோட்டம் ஒன்றில் 

பிடி... பிடி.. மீன் பிடி 


எனது மகள் சிநேகா, பாலா மகள் கேத்தலின் இருவருக்கும் சட்டம் படிக்கவே விருப்பம். பூவாரில் வாக்கிங் செல்லும் போது காவல் நிலையத்தை பார்த்து, உள்ளே செல்லவேண்டும் என்று கூறினர்.. சென்று காவலர்களிடம் சற்று பேசி விட்டு, நியாபகத்திற்கு எடுத்த போட்டோ..... 

கிராமத்தில் மீன் வலை பின்னும் ஒரு குடும்பத்தாருடன் அளவளாவல் 

திருநெல்வேலி அருகே ஒரு மிக பழமையான சர்ச் சென்ற போது எடுத்த புகைப்படம் 

முட்டம் கடற்கரையில் ஒரு மாலை வேளை 



பூவார் மிக ரிலாக்சட் ஆக 3 நாள் போல சென்று தங்க ஏற்ற இடம். திருவனந்த புரம் வரை ரயில் அல்லது விமானத்தில் சென்று பின் ஓரிரு மணி நேர கார் பயணத்தில் பூவார் அடையலாம். 

பூவாரில் நிறைய நல்ல ரிசார்ட்கள் உள்ளன. தண்ணீரில் மிதக்கும்  ரிசார்ட் ஒன்று மிக பிரபலம். அண்மையில் எனது அலுவலக நண்பர்கள் சிலர் அங்கு சென்று தங்கி வந்தனர். பூவார் செல்லும்போது முடிந்தால் நாகர்கோவில் அருகே இருக்கும் பத்மநாபபுரம் பேலஸ், தொட்டி பாலம், திப்பரப்பு அருவி இவையும் சேர்த்து பார்க்க திட்டமிடுங்கள்... 

Related Posts Plugin for WordPress, Blogger...