Saturday, March 31, 2012

ஏப்ரல் 1 : சட்டக்கல்லூரி நண்பர்களை ஏப்ரல் Fool ஆக்கியது எப்படி?

நாளைக்கு ஏப்ரல் 1 ! இன்னமும் அருகில் இருப்போரை முட்டாளாக்க பார்க்கும் பழக்கம் குறைய வில்லை. மனைவியையும் குழந்தையும் நாளை எப்படி ஏமாற்றுவது என டீப்பா யோசிச்சிட்டு இருக்கேன்

சட்டக்கல்லூரி   கோஷ்டி இன்று : இடமிருந்து வலம்: நித்தி, மோகன்குமார், நவீன் (பாலா- டெய்ஸி மகன்), ரவி, பிரேம்,  டெய்ஸி, பாலா

பலரையும் பல விதமாய் ஏமாற்றினாலும், 18 வருடங்களுக்கு முன் கல்லூரி காலத்தில் நண்பர்கள் பிரேம் மற்றும் டெய்ஸியை April fool-ஆக்கியது பசுமையாக இன்னும் நினைவில் ....

****
அதனை சொல்லும் முன் எங்கள் கேங் பற்றி சுருக்கமாக. 20 வருடத்துக்கு முன் சட்டகல்லூரியில் படித்த போது, எங்கள் செட் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சேர்த்து 15 - 20 இருப்போம். ஒவ்வொருவர் பிறந்த நாளுக்கும் சினிமா மற்றும் ஹோட்டல் போவது வழக்கம். ஒரே கொட்டம் தான் !

20 நெருங்கிய நண்பர் குழுவில் இரு காதல் திருமணம் நடந்துள்ளது. மற்ற அனைவரும் நண்பர்கள்.. அவ்வளவு தான் !

இந்த பகுதியில் நாம் பார்க்க போகும் நபர்கள் பாலா, பிரேம் மற்றும் டெய்சி.

*********
இந்த முறை போலவே ஏப்ரல் 1: அந்த வருடம் ஒரு ஞாயிறில் வந்தது. அன்று கல்லூரி இல்லை.

நண்பர்கள் பிரேம் மற்றும் டெய்சியை ஒரே நேரத்தில் ஏப்ரல் Fool -ஆக்க, பாலாவும் நானும் சேர்ந்து plan போட்டோம்.

முதலில் பிரேமுக்கு போன் செய்தோம்.

" டேய் விஷயம் தெரியுமா? டெய்ஸிக்கு accident ஆகிடுச்சு"

" அப்படியா? எங்கே? என்ன ஆச்சு?"

" வெளியே போயிட்டு cycle-ல் வீட்டுக்கு வரும் போது, கார் மோதிடுச்சு"

"அப்படியா? இப்ப எங்க இருக்கா?"

" Hospital -ல்"

"எந்த Hospital?"

" டெய்ஸி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள BHEL Hospital தான் ; நீ டெய்ஸி வீட்டுக்கு வந்துடு. அங்கே கேட்டுகிட்டு ஆஸ்பிட்டல் போயிடலாம் " என போனை வைத்தோம்.

அடுத்த அரை மணி நேரம் காத்திருந்து விட்டு, பின்,  டெய்ஸி வீட்டுக்கு போனோம்.. (பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிரேம், டெய்ஸி வீட்டுக்கு வர அரை மணி நேரம் ஆகும் !!) 

டெய்ஸியீடம் இதே கதையை மாற்றி சொன்னோம்...

"பிரேமுக்கு accident ஆகிடுச்சு" .

" ஐயையோ என்ன ஆச்சு?"

"அதெல்லாம் போகும் போது பேசிக்கலாம்.  கிளம்பு ; Hospital போய் பார்த்துட்டு வரலாம்" என பேசிட்டு இருக்கும் போதே கதவு மீண்டும் தட்ட பட்டது.

டெய்ஸி போய் கதவு திறக்க, எதிரே நின்றது பிரேம்.

"உனக்கு accident ஆகிடுச்சு -ன்னு சொன்னாங்களே" என பிரேம் கேட்க டெய்ஸியும் அதையே பிரேமிடம் கேட்க...

நானும் பாலாவும் "ஏப்ரல் Fool ! ஏப்ரல் Fool !" என கத்தினோம் !   

அப்புறம் பாலாவுக்கும் எனக்கும் அவர்கள் இருவரிடமிருந்து செம மாத்து விழுந்தது..

அடி, உதை சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த டெய்ஸி அம்மா " ஏம்பா accident-ன்னு சொல்லியா ஏமாத்துவீங்க" என எங்களை கேட்டாலும்,  அவரும் சிரித்து தீர்த்தார்.

****
அதன் பின் பிரேமை அருகிலிருந்த பாலா வீட்டுக்கு கூட்டிட்டு போய்,  அரை நாள் பேசிட்டு இருந்து பின் அனுப்பினோம்..

அப்போதெல்லாம் நண்பர்கள் மணி கணக்கில் பேசுவோம்.. அரசியல், சினிமா, college politics என எத்தனையோ விஷயங்கள்..

இப்போது பாலாவுக்கும் டெய்ஸிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ப்ரேமுக்கும் ரெண்டு குழந்தைகள் ..

கல்லூரியில் 5 வருடம் ஒன்றாய் சுற்றிய நண்பர்களில் பலர் சென்னையில் தான்,  கல்யாணம் ஆகி settle-ஆகி விட்டனர்.

இப்போதும் 3 - 4 மாதங்களுக்கு ஒரு முறை குடும்ப சகிதமாய் எதாவது ஒருவர் வீடு அல்லது ஒரு ஹோட்டலில் 6 or 7 குடும்பங்கள் சந்திப்போம். ஹோட்டல் என்றால் அனைவரின் குட்டி பசங்களும் அங்கும் இங்கும் ஓடி எதையாவது கீழே தள்ளி விடுவர்.. Hotel bearer -தான் எதுவும் உடைய கூடாது என கவலையில் அவர்கள் பின்னால் ஓடுவர்..

நாங்கள்? அனைத்தையும் மறந்து யாராவது ஒருவனை செமையாய் கிண்டல் செய்து சத்தமாய் சிரித்தவாறு இருப்போம்...

*********
நம்முள் இருக்கும் குழந்தையை எழுப்பி பார்க்கும் இத்தகைய (ஏப்ரல் Fool) குதூகலங்கள் தேவை தான்.
 
நாளை யாரை ஏமாற்றலாம் என யோசியுங்கள். கூடவே நீங்கள் யாரிடமும் ஏமாறாமல் இருக்க முயலுங்கள் !! All the best !!

Thursday, March 29, 2012

கேரள பயணக்கட்டுரை: பாகம்-4: 20ஆவது மாடியில் அற்புத சர்ச்டவர்

திருச்சூரில் நான் பார்த்த Zoo, மியூசியம் மற்றும் சர்ச் டவர் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்

**
சென்னை வண்டலூர் / மைசூர் Zoo-க்களுக்கு சென்றிருந்தால்,  மற்ற Zoo சின்னதாய் தெரியும் தான். ஆனாலும் அவை செல்லாதோருக்கு இது பெரிய இடம் தான் ! சின்ன Zoo போல தெரிந்தாலும் பின் நடந்து நடந்து கால் வலி வந்து விட்டது !


நுழைந்த உடன் கிளிகள் உள்ளன. அவற்றை பார்த்ததும் எங்கள் கிளிகள் நினைவு வர சற்று Homesick ஆகி விட்டது. ஒருவழியாய் மீண்டு மற்ற இடங்கள் சென்றேன்


***********
ஆந்தை முழின்னு சொல்றாங்களே; முழியை நேரில் பாத்தா நிஜமா பயமா தான் இருக்கு :))



**********
ஆந்தைக்கு சாப்பிட இறந்த எலியை வைத்துள்ளனர்; கீழே பாருங்கள் தெரியும்




ஆர்ட் மியூசியம் Zoo-விற்கு நடுவில் உள்ளது. அதனை சுற்றி பல வண்ண மலர்கள், செடிகள் மனதை மயக்குகிறது இதில் பழங்கால கற்கள், மணல் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளன.

மன்னர்கள் பயன் படுத்திய வாள், அம்பு முதலியவையும் உண்டு.

ஆர்ட் மியூசியம்

சிங்கம், யானை, புலி போன்ற மிருகங்கள் பாடம் செய்யப்பட்ட நிலையில் இங்கு உள்ளது.

யானை, சிங்கம் இவற்றின் எலும்பு கூடும் உண்டு

அங்கும் மின்சார பற்றாக்குறையோ என்னவோ எந்த மின்விசிறியும் ஆன் செய்ய வில்லை
பழங்கால பொருட்கள் 


இங்கு தமிழ் குரல் கேட்டது. சில கல்லூரி பெண்கள் !! அறிமுகம் செய்துகொண்டு எந்த ஊர் என கேட்டேன். கோபிசெட்டிபாளையம் குமுதா ஆசிரியர் கல்லூரியில் இருந்து வருவதாகவும், கல்லூரியிலிருந்து சேர்ந்து வந்துள்ளோம் என்றனர். வெளியூர் செல்லும் போது தமிழ் குரல் கேட்டால் நிறையவே மகிழ்ச்சி தான். (டேய் உண்மையை சொல்லு; எவ்வளவு நேரம் சேர்ந்து சுற்றி கடலை போட்டாய்? என பின்னூட்டம் போட்டால், பதில் கிடைக்காது. )


புலியையும் அதனை ரசிக்கும் குட்டி பாப்பாவையும் இந்த வீடியோவில் காணலாம் கூடவே (பாப்பாவின் அம்மா ப்ளீஸ் டைகர் என கிட்டே வர சொல்லி கூப்பிடுவதையும் கேட்கலாம்)





பெரிதான ஆலமரம் ; பலர் இங்கு படம் எடுத்தனர்


படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் 





மாடு போல இருக்கும் வித்யாசமான இந்த மிருகம் பேர் மிதுனாம் !


விழுந்து கிடக்கும் இந்த மரதோற்றம் வித்யாசமாய் இருந்தது. நான் சரியான கோணத்தில் எடுக்கலை. கலை அம்சம் உள்ளோர் எடுத்தால் நன்கு எடுத்திருப்பர்

அங்குள்ள சில மான்களுக்கு வயலட் நிற மருந்து போட்டு கொண்டிருந்தனர். விசாரித்ததில் மான்களுக்கு ஜூரம் என்றும் அதற்கு தான் மருந்து போடுவதாக கூறினர்.

இந்த வீடியோவில் சிங்கம் மற்றும் தண்ணீர் அருகே  ஹாயாக  படுத்திருக்கும் சிறுத்தை புலி பார்க்கலாம்:




இந்த கிராமத்திலிருந்து இருநூறு பேர் முதலாம் உலக போரில் கலந்து கொண்டதாக இந்த நினைவு தூண் சொல்கிறது. அதில்  இறந்தவர்,  பிழைத்தவர் குறித்த எண்ணிக்கை இல்லை ! 

Zoo மற்றும் மியூசியத்தில் வேலைக்கு இருப்பது அநேகமாய் பெண்கள் ! அவர்கள்  அனேகமாய் பேப்பர் படித்து கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே அங்கு வரும் குழந்தைகளை, அவர்கள்  பிறரை  ரசிப்பதை  பார்த்த வண்ணம் உள்ளனர்.





என்ன மரம் என தெரியலை
 *********
Zoo-விலிருந்து சர்ச் டவர் செல்லும் வழியில்  உள்ளது இந்த அரசு பில்டிங்.  நமது ராஜாஜி  ஹால்  மாதிரி இடம் போலும் இது.  முன்னாள் முதல்வர் கருணாகரன் மறைந்த போது மக்கள் அஞ்சலி செய்ய இங்கு தான் வைத்திருந்தனராம்



இங்கு தற்போது ஒரு லைப்ரரி உள்ளது. போட்டோ எடுக்கும் போது சரியாக ஒரு நபர் நடுவே வந்து விட்டார்.




***********
திருச்சூரின் புகழ் பெற்ற சர்ச் டவர் இந்த சர்ச்சை சார்ந்தது தான். இந்த பில்டிங்கிற்கு பின்னே தான் சர்ச் டவர் உள்ளது. இந்த சர்ச் 1921-ல் கட்டி முடிக்கப்பட்டது  




சர்ச் உள்ளே உள்ள கேரள பாணி கட்டிடம்
*
ர்ச் டவர் கட்டப்பட்டது 2002-ல் துவங்கி 2006-ல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரீசன்ட்-ஆக கட்டப்பட்டது தான் !!
செல்லும் போது லிப்டில் சென்று விடலாம். இதற்கு டிக்கெட் முப்பது ரூபாய் வாங்குகின்றனர். (நடந்து சென்றால் இலவசம்). இருபத்தி மாடி என்பதால் மேலே ஏறும்போது லிப்டில் சென்று விட்டு இறங்கும் போது நடந்து வருவது நல்லது. ஏன் இறங்கும் போது நடக்க வேண்டும் என்கிறீர்களா?

மேலே சென்று அவ்வளவு உயரத்தில் திருச்சூர் அழகை ரசிக்கலாம். ஆனால் அதை விட இறங்கும் போது இருபது மாடிகளின் படிகளிலும் வரைந்த ஓவியங்களை, அதன் அழகை ரசிக்க தான் நீங்கள் நடந்து இறங்க வேண்டும்.

இயேசு குறித்து கதை (பிறந்தது முதல், சிலுவையில் அறையப்பட்டு உயிர்ப்பிப்பது வரை) . பிற மதத்தவரும் படங்கள் வரைந்த கலையை நிச்சயம் வியந்து ரசிப்பார். சுவற்றில் வரைந்தவை அழகு எனில், கண்ணாடியில் வரைந்தவை மிக அழகு.


சர்ச் டவர் உள்ளேயும் ஓவியங்களையும் படம் எடுக்க அனுமதி இல்லை. செல்போன்  கூட எடுத்து போக முடியாது. லாக்கரில் செல்போன் வச்சு பூட்டிட்டு தான் உள்ளே அனுமதிக்கிறார்கள்

சர்ச் டவர் அருகேயுள்ள சிலைக்கு முன்பு

இந்த இருபது மாடி கட்டிடத்தின் பில்லர்கள் கூட சிலுவை போன்ற வடிவில் செய்திருப்பது பார்த்து அசந்து போனேன். சர்ச் டவர்  மற்றும்  படங்களை பராமரிக்க கத்தோலிக்கன் சிரியன் பேன்க் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உதவுகின்றன.  




Zoo-விலிருந்து கிளம்பி ஆட்டோவில் தான் மேலே சொன்ன இடங்கள் ஒவ்வொன்றாக பார்த்தேன். உடன் வந்த ஆட்டோ டிரைவர் பெயர் ஜோமன். இவர் ஒரு கிறித்துவர்;  ஆயினும் சர்ச் டவர் மேல் இது வரை ஏறி பார்த்ததில்லையாம். அவரையும் உடன் அழைத்து சென்றேன். என்னை விட மேலே வந்து பார்த்த போதும் சரி, இறங்கும் போது ஓவியங்களை பார்த்தபோதும் அவர் மிக மகிழ்ந்தார் !

தன்னை எடுத்த போட்டோவை வாங்கி பார்த்து விட்டு குழந்தை போல சிரித்தார். அவர் முகவரி வாங்கி வரவில்லை. இல்லாவிடில் போட்டோ பிரிண்ட் போட்டு அனுப்பியிருக்கலாம் !!

***********
அடுத்த பதிவில்: மனதை மயக்கிய அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி 

Wednesday, March 28, 2012

வானவில் 81 :ஆபிஸ் விளையாட்டு: கையை சுட்டு கொண்ட எழுத்தாளர்

நம்மை பார்த்து கெட்டு போனவர்கள்

நாம் ப்ளாக் எழுதுவது, நண்பர்கள் சிலருக்கு ப்ளாக் துவங்க உந்துதலாக உள்ளது. சமீபத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர் ப்ளாக் துவக்கிட்டாங்கன்னா பாத்துக்குங்க ! கண்ணன் என்ற பள்ளி நண்பன் ஒரு ப்ளாக் துவக்கி உள்ளான். அதன் லிங்க் பிறகு தருகிறேன் (பையன் முதல் பதிவிலேயே என்னை வில்லன் மாதிரி எழுதிட்டான். படிச்சா நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிடும்)

ராமசுப்ரமணியம் என்கிற கம்பனி செகரட்டரி "வழித்துணை" என்கிற ப்ளாக் ஆரம்பித்துள்ளார். , தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ் உள்ளிட்ட பதிவுலக அவசியங்கள் அவருக்கு தெரியலை ! என்னுடன் சேர்ந்து நீங்களும் அவருக்கு கற்று தாருங்கள்: "தொலை பேசி அழைப்புகளில் இருந்து தப்புவது எப்படி" என ஒரு பதிவு எழுதி உள்ளார். நகைச்சுவை இயல்பா வருது. வாசித்து உங்கள் ஆதரவை தாருங்கள்! 

பேஸ்புக் கிறுக்கல்கள்
ந்தியா மட்டுமில்ல நாம் சப்போர்ட் பண்ற எல்லா டீமும் தோக்குது

இலங்கை Vs ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலிய முத்தரப்பு கிரிகெட்) : ஆஸ்திரேலியாவை சப்போர்ட் பண்ணோம். தோத்துடுச்சு

இலங்கை Vs பங்களாதேஷ். (ஆசிய கோப்பை லீக் ஆட்டம்) இலங்கையை சப்போர்ட் பண்ணோம். தோத்துடுச்சு

பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் (ஆசிய கோப்பை பைனல்) .பங்களாதேஷ் சப்போர்ட் பண்ணோம். அதுவும் தோத்துடுச்சு

ஏதோ சதி திட்டம் நடக்குதுன்னு நினைக்கிறேன் :))
##########

பவர் கட் பற்றி எங்கோ வாசித்த ஒரு ஜோக்:
பிறந்த குழந்தை கண்ணு முழிச்சு கேட்டுதாம்: கரண்டு இருக்கா?
நர்ஸ் சொன்னாங்களாம்: "இல்லை"

" அட கடவுளே ! மறுபடி தமிழ் நாட்டுலே வந்து பிறந்துட்டேனா"

##########

சச்சின் அடிச்சது ஒன் டேயில் 49-ஆவது சென்சுரியாம்! அப்போ அடுத்தது 50-ஆவதுக்கு மறுபடி காத்திருக்கணுமா?

முடியலை !!
########## 
இன்னிக்கு நைட்டு நீயா நானா சுவாரஸ்யமான டாபிக்..." மாமியார் Vs மருமகள்"!. கல்யாணமான அனைவரும் பார்த்து மகிழலாம்.. பார்க்கும் போது நமட்டு சிரிப்புடன், மேலே வேறு ஏதும் கமெண்ட் அடிக்காமல் பார்ப்பது இல்லற வாழ்வுக்கு நல்லது
##########

கண்கள் நீயே பாட்டு 

இளம் வயதிலேயே GV பிரகாஷின் திறமை வியக்க வைக்கிறது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் "கண்கள் நீயே" என்கிற இந்த பாட்டை கேட்டுள்ளீர்களா? டியூன் மற்றும் இசை ! சான்சே இல்லை !

படத்தில் பார்க்கும் போது அந்த அளவு தாக்கம் இல்லை என்பதால் பாடலின் ஆடியோ மட்டும் தான் இங்கு ஷேர் செய்கிறேன்.கேட்டு பாருங்கள்




இது ஒரு அம்மா பாச பாட்டு தான். ஆனால் பாடல் பிடிப்பதற்கு காரணம் அம்மா செண்டிமெண்ட் அல்ல ! மிக அற்புதமான மெலடி, மனதை மயக்கும் பாடலின் டியூன் இவை தான் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
பாடகி சித்தாரா
பாடலை பாடியது சித்தாரா-வாம் ! மலையாள பாடகியான இவரின் முதல் தமிழ் பாடல் இது என நினைக்கிறேன். என்ன ஒரு குரல் ! என்ன ஒரு திறமையான rendition ! இவரின் அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறேன். 

அலுவலக விளையாட்டுகள்

ரேடியோ மிர்ச்சி பல நிறுவனங்களுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு சில போட்டிகள் நடத்தி குஷிபடுத்தி வருகிறது. இந்த வாரம் எங்கள் அலுவலகம் வந்து டான்ஸ், பாட்டு மற்றும் நிறைய குட்டி போட்டிகள் வைத்து அசத்தியது. என் டீமில் பணி புரியும் ஒருவர் "சாதுவாய் பூனை" மாதிரி இருப்பார். ஆனால் அன்று டான்சில் வெளுத்து வாங்கி விட்டார். பார்த்த அனைவரும் அசந்து போய் விட்டனர். பார்க்காத நண்பர்களுக்கு மாலை கேண்டினில் வேறு ஆடி காட்டினார். ஒரு போட்டியில் அய்யாசாமியையும் மாட்டி விட்டனர். 

தண்டால் எடுக்கும் அய்யாசாமி
வேலை சுமையை மறக்க, Employees -க்கு இதெல்லாம் தேவையாய் உள்ளது ! ஒவ்வொரு நிறுவனத்திலும் HR-ல் ஒரு டீமே இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் செய்து வருகின்றன.


இலங்கைக்கு எதிரான தீர்மானம் 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வென்றது மகிழ்ச்சி. ஆனால் பெரும்பாலான ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன பாருங்கள் ! உலகம் முழுதும் அரசியல் வாதிகள் எந்த பிரச்சனையிலும் தனக்கு என்ன லாபம் என்பதை பொறுத்தே நிலைப்பாடு எடுப்பார்களே அன்றி நியாயம் பக்கம் இருக்க மாட்டார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது.

இந்தியா மட்டும் என்னவாம். ஆதரித்து வாக்களித்தாலும், இலங்கை பாதிக்காத அளவு அந்த தீர்மானத்தை மாற்றியது நாங்கள் தான் என்கிறது. நல்லா இருக்குதுய்யா உங்க நியாயம் !

இந்த தீர்மானத்துக்கு பிறகாவது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்லது நடக்கிறதா என பார்க்கலாம் !

தேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை

மைசூரில் ஒரு தந்தை தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் பெண்ணை கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்துள்ளார். தாய் இல்லாத இந்த பெண் அழுது கொண்டே பிச்சை எடுத்துள்ளார். போலிசுக்கு தகவல் தெரிந்து கைதான தந்தை இப்போது அவளை தன்னுடன் சேர்த்து கொள்ள மறுக்கிறாராம் ! வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என உணர்த்தவே இப்படி செய்ததாக சொல்கிறாராம் அவர். படிப்பின் பேரில் நம் குழந்தைகளை எவ்வளவு படுத்துகிறோம் பாருங்கள் ! நம் கல்வி முறை மாற வேண்டியது எத்தனை அவசியம் என இன்னும் ஒரு முறை நமக்கு சொல்கிறது இந்த நிகழ்ச்சி. கூடவே நம் குழந்தைகள் மேல் நாம் செலுத்தும் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தான் !

இது குறித்த பத்திரிக்கை செய்தி இங்கே

கையை சுட்டு கொண்ட எழுத்தாளர்

சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் செமையாக கையை சுட்டு கொண்டார். ஏதோ புத்தகம் போட்டு சரியாக விற்காமல் கையை சுட்டு கொண்டார் என நினைத்தீர்களா? அது தான் இல்லை. அவர் வீட்டு அடுப்படியில் தான் இது நடந்தது ! மனைவி வாணலியில் காய்கறி சமைத்து அடுப்பை ஆப் செய்திருக்க, இந்த எழுத்தாளர் பிடி துணி வைத்து தான் இறக்கினார். ஆனால் மெல்லிய துணி என்பதாலோ என்னவோ கை நன்றாக சுட்டு கொப்பளம் வந்து விட்டது. இதை காரணம் காட்டி அடுத்த இரு நாள் வீட்டில் வேலை செய்யாமல் ஓ. பி அடித்தார். அலுவலகத்தில் கையெழுத்து போட ஒரு பெரிய பண்டில் வர, "இருநூறு முன்னூறு கையெழுத்தெல்லாம் ரெண்டு நாள் வரை போட முடியாது; கையில் கொப்பளம் வந்துடுச்சு" என பந்தா காட்டினார். பொறுத்து பொறுத்து பார்த்த அவர் மனைவி, " தினம் எத்தனையோ தடவை சூடு வாங்கிட்டு தான் சமைக்கிறேன். சீன் போடாம வேலையை பாருங்க" என்றதும் " நீ சொன்னா சரிதான் " என்று பம்மியபடி மீண்டும் வேலையில் குதித்தார்.

இந்த புகழ் பெற்ற எழுத்தாளர் யார் என்பது சஸ்பென்ஸ். :)))
*****************
டிஸ்கி: 1.  கோடை விடுமுறையை முன்னிட்டு, வீடுதிரும்பல் வாசிப்போர் பயன்பெறும் வகையில் மே மாதம் முடியும் வரை அனைத்து வெள்ளிகிழமைகளும் வெவ்வேறு ஊர்களின் பயண கட்டுரை வெளியாகும் !

டிஸ்கி 2. நேற்றைய பதிவு:  அஜூ என்கிற பியூட்டிபாய்

Tuesday, March 27, 2012

எங்கள் குடும்பத்தில் ஐக்கியமான புதிய நபர்: படம் & வீடியோக்களுடன்

குடும்பத்திற்கு வந்த புது நபர் என்றதும் என் பெண்ணுக்கு தம்பி அல்லது தங்கை என நினைத்து உள்ளே வந்திருந்தால் ஐ யாம் சாரி ! :))

எங்கள் வீட்டுக்கு ஒரு புது ஆண் கிளி வந்துள்ளது. அவன் பெயர் அஜூ. பியூட்டி பாய் என்றும் செல்லமாய் கூப்பிடுவோம் ! அவனை தான் உங்களுக்கு அறிமுக படுத்த போகிறேன். எங்களிடம் உள்ள நாட்டி என்கிற பெண் கிளி பற்றி    ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.

அழகு பையன் அஜூ

அஜூ வீட்டுக்கு வந்ததிலிருந்து துவங்கலாம்

*********
நாட்டி தனியாக உள்ளது. துணை கிளி வேண்டும் என கொஞ்ச நாளாகவே பேசி வந்தோம். வாராவாரம் வெள்ளியன்று பல்லாவரம் சந்தை நடக்குமென்றும் அதில் கிளி கிடைக்குமென்றும் தெரிய வந்தது. ஒரு வெள்ளியன்று திடீரென முடிவெடுத்து பெண்ணை பள்ளியில் விட்டு விட்டு நேரே பல்லாவரம் சந்தைக்கு சென்றேன். கிளி விற்பவரை காண, அவர் அஜூவை காட்டினார். சின்ன துணி பையில் போட்டு வைத்திருந்தார். "துணி பைக்குள் மூச்சு முட்டிடாதா?" என்றால் "அதெல்லாம் ஆகாது" என்றார். அஜூவை அப்படியே வண்டி பாக்ஸில் போட்டு விட்டு கிளம்பினேன். பைக்குள் வேறு இருக்கான்; பாக்ஸ் வேறு மூடி இருக்கு செத்து போயிட போறான் என மிக மிக வேகமாய் ஓட்டி வீடு வந்து சேர்ந்தேன்.


பாக்சை திறந்து பார்த்தால் பையை விட்டு வெளியே வந்து கோழி போல ஒடுங்கி உட்கார்ந்துள்ளான். இப்போ அடுத்த பிரச்சனை. எப்படி வீட்டிற்கு உள்ளே கொண்டு போவது என்பது. கையில் தூக்கி கொண்டு நடந்தால் பறந்திட வாய்ப்புண்டு. மேலும் அறிமுகம் இல்லாததால் நன்கு கடிக்கவும் கூடும். வண்டியை எப்படியேனும் வீட்டினுள் கொண்டு போய் பாக்ஸ் திறக்க பார்த்தால் வண்டியை மேலே ஏற்ற முடியலை. பின் ஒரு வழியாய் கதவுக்கு அருகில் வண்டியை வைத்து விட்டு அவனை தூக்கி வீட்டினுள் விட்டு விட்டு கதவை சாத்தி விட்டேன்.

அப்போது வீட்டில் ஒரு பெரிய கூண்டும் ஒரு மிக சிறிய கூண்டும் இருந்தன. நாட்டி வெளியே வேண்டுமானாலும் இருக்கட்டும். இவன் பெரிய கூண்டில் இருக்கட்டும் என நாட்டியை வெளியே விட்டு விட்டு இவனை பெரிய கூண்டின் மேல் விட்டேன். நாட்டி இதனை பார்த்தது. மெதுவாக இறங்கி நடந்து வந்து, " என் கூண்டிலா நீ உட்காருகிறே?" என அவனை கடி கடி என கடித்தது.

ஒரு வழியாய் நாட்டியை பிரித்து இருவரையும் வேறு வேறு ரூமில் போட்டு விட்டு ஆபிஸ் கிளம்பினேன். வீட்டில் ஆள் இல்லாததால் எப்படி இருப்பான் என அலுவலகம் சென்றும், முதல் நாள் யோசனையாகவே இருந்தது.

மாலை வந்து பார்த்த பெண்ணுக்கும் மனைவிக்கும் செம Surprise + குஷி.

முதல் இருநாள் அஜூ ஒழுங்கா சாப்பிடாம, தூங்காம இருந்தான். அப்போது நாட்டியையும் இவனையும் ஒன்றாக விட மாட்டோம். புது கிளிகளை தன் இடத்தில் விட கூடாது என கொத்தி கொத்தி கொன்றும் விட கூடும் என தெரிந்தவர் ஒருவர் கூறியிருந்தார் .

அஜூவுக்கு புது கூண்டு வாங்கினோம். ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் இரு கிளிகளும் ஒன்றாய் இருக்கும். நாங்கள் இல்லாத போது தனி தனி ரூமில் போட்டு விடுவோம். பின் நன்கு பழகியதும் அருகருகே உள்ள கூண்டில் வைத்து விட்டு போய் விடுவோம்.

கணக்கு போடும் நாட்டி
கொஞ்சம் கொஞ்சமாய் இரண்டும் நன்கு பழகி இப்போது ஒரு நிமிடம் கூட ஒன்றை விட்டு அடுத்தது இருக்காது என்கிற நிலை வந்து விட்டது.

முன்பெல்லாம் நாட்டியை நாங்கள் தூக்கி கொஞ்சினால் பேசாமல் இருக்கும். சோபாவில் நம் அருகில் வைத்து விட்டு நாம் பாட்டுக்கு புத்தகம் படிக்கலாம். டிவி பார்க்கலாம். அது பேசாமல் உட்கார்ந்திருக்கும். சோபா மேல்புற முனையில் அமர்வது முன்பு நாட்டிக்கு மிக பிடித்தமான ஒன்று. இப்போது அங்கு வைத்தால் உடன் இறங்கி அஜூவிடம் ஓடுவேன் என நிற்கிறது !

மனிதர்களில் பெண்கள் அழகு. விலங்குககளில் பெண்ணினத்தை விட ஆண் அழகு தான். அஜூ-மீசை, தாடி எல்லாம் வைத்து கொண்டு என்ன ஸ்மார்ட் ஆக இருக்கான் பாருங்கள் !



மூக்குக்கு மேலே கோடு போகுது பாருங்க .. அது தான் மீசை. மூக்குக்கு கீழே தாடி தெரியுதா?

நாட்டி முகத்தில் நிறைய சுருக்கம் இருக்கும். இதனால் சில நேரம் "கிழவி" என சொல்லி கிண்டல் செய்வோம். ஆனால் இவன் முகத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லாமல் மொழு மொழு வென்று இருப்பான்.
************
அஜூ வந்த  புத்தில் எடுத்த வீடியோ;  அப்போது நாட்டியுடன்  அதிகம்  தோஸ்த் ஆகலை  :



ஆரம்பத்தில் இப்படி தனித்தனி கூண்டில் இருந்தனர் நாட்டியும் அஜூவும்.....


இன்னும் நாட்டி மாதிரி எங்களிடம் மிக எளிதாய் வர மாட்டேன் என்பது தான் குறையாய் இருக்கு. அவன் அடிக்கும் லூட்டிகள் சில:

கூண்டு திறந்து இருந்தால் நாட்டி நடந்து நடந்து வெளியே போகும். ஆனால் அஜூ ரெண்டு காலாலும் தாவி தாவி நடப்பான். இது பார்க்க செம அழகாய் வேடிக்கையாய் இருக்கும்.
கொஞ்சம் நட்பானபின் ஒன்றாய் நடைபோடுகிறார்கள்
செம புத்திசாலி. நாம் பேசுவதை நன்கு கேட்பான். சிறு சத்தமும் தெரிந்து விடும். அலர்ட் ஆகிடுவான்.

இப்போது எல்லா நேரமும் ஒரே  கூண்டினுள்

வெயில் காலம் என்பதால் பெரும்பாலான நாள் இருவரையும் ஒன்றாய் குளிப்பாட்டுவோம். தண்ணீர் ஊற்றினால் அஜூ நன்கு காட்டுவான். நாட்டிக்கு இன்னும் குளிக்க பிடிப்பதில்லை.

குளிக்க போகும் போது மட்டும் இதில் போவார் அஜூ

கூண்டை விட்டு வெளியே வந்ததும் டைனிங் டேபிள் மேல் ஏறுவார். அங்கு இருக்கும் நீல நிற பர்ஸ்சை கடிக்க அஜூவுக்கு ரொம்ப பிடிக்கும்.
இதனை ஒவ்வொரு படியாக புகைப்படம் எடுத்துள்ளோம் பாருங்கள்

டைனிங் டேபிள் மேல் ஏறியாச்சு.

என்னென்ன இருக்கு என பார்வையிடுறார்

கிட்டே வந்தாச்சு

வந்ததே இந்த பர்சை கடிக்கத்தான்  !

நாட்டி அஜூவை கொஞ்சும் வீடியோ, 2 or மூன்று நிமிஷம் ஓடும். சில நிமிடம் பார்த்து விட்டும் க்ளோஸ் செய்யலாம்





காலை எழுந்ததும்கூண்டை திறந்து விட்டால் முதலில் அஜூ தான் வெளியே வருவான். எதிரே இருக்கும் ஸ்க்ரீன் மேல் ஏறி அதன் மேலே உள்ள கம்பியில் சென்று அமர்ந்து கொள்வான். அவன் போனதும் நாட்டி கீ கீ என்று சற்று நேரம் கத்தி தீர்க்கும். பின் தானும் வெளியே வந்து அவனை போலவே கம்பிமேலே சென்று அமர்ந்து கொள்ளும்.

நாங்கள் வீட்டில் உள்ள போது ஹாலில் உயரத்தில் உள்ள கம்பி மேல் தான் இருவரும் அமர்ந்திருப்பார்கள். கதவு பகல் நேரத்தில் திறந்திருந்தாலும் இருவருக்கும் பறக்கும் வெளியே பறந்து தப்பிக்கும் எண்ணம் வரவில்லை!

ஸ்கிரீனுக்கு பின்னே ஜன்னல் இருக்கும். ஜன்னலை மூடியுள்ள  நெட்லானை அஜூ கடித்து கடித்து ஒரு வழி ஆக்கிட்டான். விரைவில் அதை மாத்தணும் !

ரொம்ப நேரம் மேலே இருந்து விட்டு பின் நிறைய பசி வந்ததும் தானாய் கூண்டுக்குள் போய் சாப்பிடுவார்கள். நெடு நேரம் கழித்து சாப்பிடுவதால் நன்றாக சாப்பிடுவர்.

நாட்டி தான் அஜூவை நன்கு கொஞ்சும். அவன் கொஞ்ச வந்தால், திட்டி தள்ளி விடும். ஸ்க்ரீன் மேலே போனதும் அஜூ தன் தலையை காட்ட, நாட்டி அதனை நன்கு கடித்து கடித்து கொஞ்சும். இதில் அஜூ செம குஷி ஆகிடுவார்.
அஜூவை கொஞ்சும் நாட்டி

இதுவும் கொஞ்சல்ஸ் தான்

அஜூவிற்கு மிக பிடித்த உணவு வேர் கடலை. ஏனோ தரையில் அமர்ந்து சாப்பிட தான் இவனுக்கு அதிகம் பிடிக்கும்.

இரண்டு கால்களையும் விரித்து  கொண்டு ஆளவந்தான் கமல் போல 
அஜூ நிற்கும் காமெடி போஸ் கீழே உள்ள படத்தில் 



ஆண் குழந்தை ஒன்று இல்லாத குறையை போக்க வந்த வாலு பயலாக இருக்கிறான் இவன். என்ன ஒன்று இன்னும் எங்களிடம் முழுசாய் பயம் போகலை. எங்கள் கைக்கு வர ஆரம்பிக்கலை. நாட்டி இப்போது சர்வ சாதாரணமாக எங்களிடம் வருவாள். (ஆனால் அஜூ அதே ரூமில் இருந்தால் சீக்கிரம் இறங்கி அவனிடம் போகணும் என துடிப்பாள். வேறு ரூம் என்றால் பேசாமல் எங்களுடன் இருப்பாள்)


நாட்டி அவ்வப்போது கத்துவாள். அஜூ அநேகமாய் பேசுவதே இல்லை. வீடு பூட்டி விட்டு, நெடு நேரம் கழித்து வந்து திறக்கும் போது ஒரு வித சவுண்ட் கொடுப்பான். எங்கள் பெண் அதே சவுண்ட் திரும்ப தந்தால், தானும் அதே சவுண்ட் விடுவான்.

நாட்டி ரொம்ப கடித்தால், தொந்தரவு செய்தால் மட்டும் அடி தொண்டையில் சின்னதாய் ஒரு சத்தம் போடுவான். மற்றபடி இவன் தான் அவளை நிறைய வம்பு வளர்ப்பான்.



ஒவ்வொரு நாளும் காலை எங்கள் மூவருக்கும் இவர்களை கொஞ்சிய படி தான் விடியும். Pets -இல்லாமல் இருக்கவே முடியாது என்கிற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறோம் !

இப்போதைக்கு நாட்டி என் பெண்ணுடைய செல்லம். அஜூ என் செல்லம்.
நீங்களும் ஏதேனும் ஒரு Pet animal வீட்டில் வளர்த்து பாருங்கள். வாழ்வில் சந்தோஷம் மிகுவதை உணர்வீர்கள் !


டிஸ்கி: நாட்டி பற்றி முன்பு எழுதிய பதிவில் ஹுசைனம்மா " நாட்டி தனியாவே இருந்துடுமா?" என அக்கறையுடன் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். இதனால் அஜூ வந்து ஒரு மாதம் கழித்து ஹுசைனம்மவிற்கு அவன் எங்களிடம் வந்த தகவல் சொன்னேன். உடன் வந்த பதில்: "வக்கீல் சார்; பொறுப்பான குடும்ப தலைவர்  ஆகிட்டீங்க !  பின்னே ? கிளிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடீங்களே   :))

Monday, March 26, 2012

இறையன்பு எழுதிய "ஓடும் நதியின் ஓசை"

இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது.


இறையன்பு எழுதிய "ஓடும் நதியின் ஓசை" கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்:

"சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு ஆசை இல்லை. நான் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என் அனுபவங்களை"

ஆயினும் புத்தகம் நிச்சயம் நம்மை குறித்து நிறையவே சிந்திக்க வைக்கிறது. 

சின்ன சின்ன விஷயங்களை உடனுக்குடன் செய்து முடித்தால் நம் முன்னேற்றம் இன்னும் துரிதமாகும் என்பதை தன் அனுபவம் கொண்டே சொல்கிறார். 

நடைபயிற்சி குறித்த பகுதியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி யாருடனும் சேர்ந்து நடப்பதை விரும்பவே மாட்டாராம். உடன் வருபவர் இயற்கையை உற்று நோக்குவதை, ரசிப்பதை தடை செய்து விடுவார் என்பதே காரணமாம் என்று சுவாரஸ்ய தகவல் கூறுகிறார். 

எதிர்காலம் பற்றி சொல்லும் போது " கணினி எல்லாம் நிறைந்திருக்கும்.... காற்று  மட்டும் குறைந்திருக்கும்" என அவர் சொல்லும் போது நம்மால் பெருமூச்சு விடாமல் இருக்க முடிய வில்லை. 

படிப்பு மட்டுமே வாழ்வல்ல என்பதற்கு இவர் கூறும் நண்பரின் வாழ்க்கை மாணவர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். எப்போதும் பாடத்தில் முதல் வகுப்பெடுக்கும், சினிமா கூட பார்க்காத, கதை புத்தகம் வாசிக்காத நண்பன் பின்னாளில் வாழ்க்கையில் சற்று குழம்பி, யாருடனும் படிப்பு தவிர வேறு எந்த விஷயமும் பேச முடியாமல் நின்ற நிலையை பகிரும் போது சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது. 

ஒவ்வொரு மனிதனும் அங்கீகாரம் தேடவே செய்கிறான். அது கிடைக்கா விடில், என்னை யாரும் அங்கீகரிக்க வில்லை என மனதுக்குள்ளோ, வெளியிலோ புலம்புகிறான். இது பற்றி விரிவாய் பேசும் இறை அன்பு, "நாம் யாரை அங்கீகரித்துள்ளோம் ..பிறர் நம்மை அங்கீகரிக்க?" என கேள்வி எழுப்புகிறார். பின் இவ்வாறு நெத்தியடியாக சொல்கிறார். " உண்மையான அங்கீகாரம் என்பது நமக்கு நாமே கொடுத்து கொள்கின்ற அங்கீகாரம் மட்டும் தான்" 

"நிகழ் காலத்தில் வாழுங்கள்"  என்பது குறித்த அத்தியாயத்தில் அவர் மேற்கோள் காட்டும் "நொடிக்கு நொடி வாழுங்கள்" என்கிற ஜென் தத்துவ வரிகள் அருமை ! 

எந்த வித மனச்சிக்கலும் இல்லாத நபரை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என ஒரு மன நல மருத்துவரை கேட்டார்கள். " அப்படி யாரேனும் ஒரு நபர் இருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் குணப்படுத்திவிடுவோம்"  என்கிற வரிகளை வாசித்தவுடன் சிரிப்பு வந்தாலும், அது நமக்கு பெரும் ஆறுதல் தரும் வரிகளாக இருப்பது நிஜம்! இந்த வரிகளில் உள்ள உண்மை புரிந்தால், நமக்கு அன்றாடம் வரும் மன குழப்பங்களுக்கு இனி பெரிதாக வருந்த மாட்டோம் !

உழைப்பு, முயற்சி, பொறுமை குறித்த கீழ் காணும் வரிகள் அற்புதம் !

ஒரு விதை ஜெயிப்பதற்கு மரம் எவ்வளவு முறை பூக்க வேண்டியிருக்கிறது? எத்தனை முறை காய்களை சுமக்க வேண்டியிருக்கிறது? 

திருப்பதியில் சுவாமியை தரிசிக்கும் நேரம் சில நொடி. ஆனால் அதற்கு சென்று வருகிற கால அளவு எவ்வளவு மணி நேரம்? 

தேர்வு எழுதுவது மூன்று மணி நேரம்.ஆனால் அதற்கு படிப்பு எத்தனை மாதங்கள்? சில தேர்வுக்கு எத்தனை வருடங்கள் !

நாம் வெகு சாதாரணமாக ஒரு சில நொடிகளில் கடக்கிற பாலம் எத்தனை வருடங்கள் எத்தனை பேரின் உழைப்பில் உருவாகிறது? 

உலகத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்புகளை தந்தவர்கள் எல்லாரும் ஞாபக திறனில் அதிக கவனம் செலுத்தாதவர்களாக இருந்தார்கள். ஐன்ஸ்டீனில்இருந்து எடிசன் வரை, ஆர்க்கிமிடசில் இருந்து ராமானுஜர் வரை ஞாபக சக்திக்கு முக்கிய துவம் தரவில்லை. தந்திருந்தால் அவர்களும் சராசரி மனிதர்களாக இருந்திருப்பார்கள் சரித்திர புருஷர்கள் ஆகியிருக்க மாட்டார்கள் என சொல்லி "அட!" போட வைக்கிறார்.

இறுதியாக புத்தகத்தில் சொன்ன ஒரு வரிகள் சொல்லியே இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன். " நாம் ரசித்து செய்யா விட்டால் ரொட்டி கூட புளித்து போகும் -கலீல் கிப்ரான்" !

இறையன்பு அவர்கள் ரசித்து செய்த இந்த புத்தகம் அவசியம் நாம் , ஜப்பானியர்கள் தேநீர் அருந்துவது போல் நிதானமாய் ரசித்து வாசிக்க வேண்டிய புத்தகம் !

நூலின் பெயர்:  : " ஓடும் நதியின் ஓசை"
வெளியீடு நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ், சென்னை  
ஆசிரியர்: இறை அன்பு 
விலை: ரூ. 60
**********
திண்ணை மார்ச் 25,2012  இதழில் வெளியான கட்டுரை 

Friday, March 23, 2012

கேரள பயணகட்டுரை: ஒரு டேமும் இரு கோயில்களும்

திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பேச அழைப்பு. இது வரை செல்லாத ஊர் என்பதால் கூடுதலாய் ஒரு நாள் தங்கி சில இடங்கள் பார்த்து வர திட்டமிட்டேன்.

சென்னையிலிருந்து குறைந்தது நான்கு ரயில்கள் தினம் திருச்சூர் செல்கின்றன. இரவு 9.15 -க்கு கிளம்பும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மறு நாள் காலை ஏழு மணிக்கு திருச்சூர் செல்வதால் மிக வசதியாய் உள்ளது.

***
திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் வெளியே ஒரு போலிஸ் பூத் உள்ளது. அங்கு ஆட்டோ எண்ணை குறித்து கொண்டு நம்மை ஒரு ஆட்டோவில் ஏற்றி விடுகிறார்கள் போலீசார். (ஜாக்கிரதைக்கு தான் !) நாங்கள் தங்கிய கேசினோ ஹோட்டல் ரயிலடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆட்டோவிற்கு மீட்டர் போட்டு 12 ரூபாய் தான் கேட்டனர். இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது (நம்ம ஊராய் இருந்தால் நாற்பது ரூபாய் வாங்கியிருப்பர்). காலை ஏழு மணிக்கு கிளைமேட் சிலு சிலுவென்று இருந்தது. கடைகள் எட்டு மணி வரை திறப்பதே இல்லை. ஆங்காங்கு ஒரு சில டீ கடைகள் மட்டும் தெரிந்தன.
****
றைக்கு சென்று குளித்து விட்டு விரைவில் கோயில் பார்க்க கிளம்பி விட்டோம்.

திருச்சூரில் உள்ள மிக பெரிய மற்றும் தவற விடாமல் அனைவரும் செல்லும் கோவில் வடக்கு நாதர் கோவில் தான். நகரின் மைய பகுதியில் இருக்கிறது இக்கோவில். மிக மிக பெரிய வளாகம்.36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. சிவன் கோவிலான இங்கு ராமர், கிருஷ்ணர், ஐயப்பன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

வடக்கு நாதர் கோவிலின் உள்ளே படமெடுக்க அனுமதி இல்லை. வெளியிலிருந்து எடுத்த படங்கள் இதோ


கேரளாவில் நிறைய கோவிலில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல கூடாது. சில கோவில்களிலோ வேட்டி அணிந்தால் தான் அனுமதி. இந்த கோவிலை பொறுத்த வரை பேன்ட் போட்டாலும் அனுமதிக்கிறார்கள். ஆனால் சட்டை நிச்சயம் போட கூடாது. ஒரு கையில் சட்டையை பிடித்து கொண்டு, மறு கையில் கடவுளை கும்பிடுவது கஷ்டமாக உள்ளதால் பலரும் சட்டையை முழுதும் கழற்றமால் இடது கையை மட்டும் சட்டைக்குள் விட்டு , ஒரு கையில் சட்டை தொங்கி கொண்டு இருக்குமாறு கோவில் வளாகம் முழுதும் சுற்றி வருகிறார்கள். இது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது




வடக்கு நாதர் கோயிலில் நெய் உருகாமல் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இங்கு வசிஷ்டர் மரம் என்று ஒன்று உள்ளது. ஏதேனும் வேண்டி கொண்டு, இங்கு உள்ள மணலில் நம் விரலால் எழுதினால் அது பலிக்கும் என்பது ஒரு நம்பிக்கை !

கோயில் வெளியில் பெயர் பலகை துவங்கி சாமி பெயர்கள் பலவும் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் எழுத பட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. (ஆனால் பஸ்களில் எல்லாம் மலையாளத்தில் மட்டும் தான் பெயர் பலகை உள்ளது )


என்னுடன் செமினார் எடுக்க வந்த மற்ற இரு faculty-கள் பிரகாஷ் மற்றும் ஸ்ரீனிவாசன்.



படத்தில் கண்ணாடி அணிந்துள்ள பிரகாஷ் Airforce-ல் இருந்தவர். அதில் வேலை பார்த்தவாரே ACS படித்து முடித்தார். கோர்ஸ் முடித்த உடனே, ACS வகுப்புகளில் பாடம் எடுப்பது உள்ளிட்ட எங்கள் Institute-க்கு பயன் தரும் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். (இப்படி ஈடுபடுவோர் மிக குறைவே) சென்னையின் ஒரு முக்கிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தாலும், மறுபுறம் சென்னையில் கம்பனி சட்டம் குறித்த பாடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க ஆசிரியராக இருக்கிறார். மாணவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் போன் செய்து சந்தேகம் கேட்டு இவரை தொந்தரவு செய்தவாறே உள்ளனர். மனுஷன் பசங்களிடம் ரொம்ப பேமஸ் !

கோயிலை விட்டு வெளியே வந்ததும் இவரிடம் " யோவ் நெஞ்சு முழுக்க முடி வச்சிக்கிட்டு சத்யராஜ் மாதிரி சீன் போடுறீரா? சட்டையை போடுமையா" என செல்ல சண்டை போட்டார் அய்யாசாமி.


மற்றொருவர் சீனிவாசன். தன் நண்பர் அழகருடன் (Genicon அழகர்) தனியாக நிறுவனம் வைத்து பல கம்பனிகளுக்கு சேவை/ வேலை செய்து வருகிறார். வக்கீலுக்கும் படித்த இவர் தொழிலாளர் சட்டம் உள்ளிட்டவற்றில் மிகுந்த நாட்டம் உள்ளவர்.

கூச்ச சுபாவம் உள்ளவராதலால் கோயில்களில் சட்டையை கழற்றினால் மேலே போட்டு கொள்ள துண்டு கொண்டு வந்திருந்தார். வெளியில் வந்த பின்னும் துண்டை விடாமல் பிடித்திருக்க, கிண்டல் செய்தவாரே இருந்தோம்.  

அய்யாசாமியை பார்த்த சீனிவாசன் "உங்களுக்குள் ஒரு ரிப்போர்டர் இருக்கார். உங்களால் சும்மாவே இருக்க முடியாது" என்று சொன்னார் !

வீடு திரும்பல் ப்ளாக் பார்த்து விட்டு மிக மகிழ்ச்சியாகி நானும் ஒரு நாள் ப்ளாக் எழுதணும் என்று சொல்லி வருகிறார்

சரி கேரளாவிற்கு மீண்டும் வருவோம்

வடக்கு நாதர் கோவில் பரசுராமரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் திருச்சூர் பூரம் பண்டிகை இந்த கோவிலில் கொண்டாடப்படும்.

உங்களுக்கு நினைவு கூற வேண்டுமெனில், நீங்கள் பார்த்த சினிமா அல்லது டிவியில் நிறைய யானைகள் நின்று வாத்தியங்கள் முழங்க ஒரு கேரளா விழா காண்பிப்பார்களே ! அது தான் பூரம் திருவிழா !

குட்டீஸ் கார்னர்





படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்



**********
பீச்சி டேம்

திருச்சூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் பாலக்காடு செல்லும் வழியில் உள்ளது பீச்சி டேம். ஏராளமான பேருந்துகள் இங்கு செல்கின்றன. பீச்சி என்பது ஊர் பெயர். அங்கு இருப்பதால் டேம் பெயரும் அதுவே ஆனது

பேருந்தில் செல்லும் போது அருகில் அமர்ந்த வயதான பெரியவர் (மலையாளி) நான் தமிழன் என்றதும் பாச மழை பொழிந்தார். அவர் அரசு அலுவலகத்தில் Dr . ரத்னம் என்கிற தமிழரின் கீழே வேலை செய்ததாகவும், தற்போது இருவரும் ரிட்டையர் ஆகி விட்டதால் அவரை பார்க்க திருச்சி போக எண்ணியுள்ளதாகவும் சொல்லி கொண்டிருந்தார். Dr .சுந்தர்ராஜன், Dr .கைலாசம் என பல தமிழர்கள் தன்னுடன் வேலை பார்த்ததாக இவர் சொல்ல, நீங்கள் மருத்துவ துறையில் இருந்தீர்களா என கேட்டேன். " இல்லை ஆராய்ச்சி துறையில் இருந்தேன். இங்கு Forest Research Department , Engineering Research Department , Banana Research Department நிறைய துறைகளும் அலுவலகங்களும் உண்டு" என்றார். வழியெல்லாம் அந்த ரிசர்ச் சென்டர்களை எனக்கு காட்டி கொண்டே வந்தார் அவர்.

திருச்சூர் டு பீச்சி நடுவே இருந்த ஒரு ஊர் பெயர் : பட்டிக்காடு ! நாம் கிராமத்தை "பட்டிக்காடு" என்று கிண்டலாக சொல்வோம். அங்கு அந்த பெயரில் ஒரு ஊரே இருக்கு !

இருபது நிமிட பிரயாணத்தில் பீச்சியை அடைந்தோம். துவக்கத்திலேயே டேம் கட்ட உதவிய இஞ்சிநியர்கள் பெயர்கள் போட்டு ஒரு கல்வெட்டு வைத்துள்ளனர். நமது டேம்களில் இவை இருக்குமா? நினைவில்லை








பீச்சி டேமில் வெளியிலிருந்து எடுத்த வீடியோ







இந்த இடத்தை காணும் போது    திருச்சியில் கல்லணை மற்றும் முக்கொம்பு நினவுக்கு வந்தன. அவையும் இதே போல சிறு டேம்கள் தான். ஆனால் அவை மிக மோசமாக மெயின்டெயின் செய்யப்படும். காதலர்கள் என்று சொல்லி கொண்டு சில்மிஷம் செய்யும் நிறைய பேர் வந்து பதுங்கும் இடமாக அவை ஆகி போயின. ஆனால் இங்கு இந்த வளாகம் முழுதும் மிக அருமையாக கார்டனிங் செய்யப்பட்டு பார்க்கவே மிக அழகாக உள்ளது






சற்று உயரத்திலிருந்து எடுத்த போட்டோ

இங்கே நீர் சுழித்து கொண்டு ஓடும் காட்சி பார்க்கவே செம அழகாய் உள்ளது.


ஏராளமான மரங்களுக்கிடையே மிக அழகான ஒரு இடம் இங்கு இருந்தது. இதற்கு நடுவில் ஒரு போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்பட்டு அங்கிருந்த ஒருவரிடம் காமிரா தர, இரண்டு படங்கள் எடுத்தார். இரண்டிலும் ஷேக் ஆகி படம் சரியாக வரலை. அதனால் என்ன.. நான் எடுத்த இந்த இடத்தை பாருங்கள் :



பீச்சி டேமின் தண்ணீரையும், அழகான கார்டனையும் இந்த வீடியோவில் பார்க்கலாம் ( நடந்து கொண்டே எடுத்ததால் சற்று ஜெர்க் இருக்கும். பொறுத்தருள்க !)




***********
பரமக்காவு கோவில்  

இந்த கோவில் திருச்சூர் நகரின் முக்கிய இடத்தில் உள்ளது. இதற்கு சற்று தள்ளி ஒரு Circle உள்ளது. இங்கு நிறைய கடைகள் ஷாப்பிங் செய்ய வசதியாக உள்ளன



இந்த கோவிலுக்கு எதிரிலேயே மற்றொரு சிவன் கோவில் உள்ளது. இதுவும் சற்று விசேஷமான கோவில் தான் இரவில் விளக்குகள் பொருத்திய பின் சிவன் கோவிலை பார்த்தால் செம அழகாக உள்ளது

சிவன் கோவில்
 பரமக்காவு அம்மன் கோவிலில் நான் சென்ற மாலை நேரம் பெண்கள் உள் பிரகாரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டிருந்தனர். சமையல் அறை சாமி இருக்கும் இடத்திற்கு மிக அருகே உள்ளது. அங்கு ஏதோ சரியான சமையல் நடந்து வாசனை தூக்கலாக இருந்தது.



கோயில் பலரின் Contribution-ஆல் கட்டப்பட்டது போலும். ஒவ்வொரு தூணுக்கும் மேலே அதனை கட்ட யார் உதவினார் என்று இருக்கிறது. பலரும் தங்கள் தாயார் அல்லது தந்தை பெயர் போட்டு அவர் நினைவாக என்று குறிப்பிட்டுள்ளனர் !

வடக்குநாதர், பரமக்காவு மற்றும் திருவெம்பாடி ஆகிய மூன்று கோயில்களும் பூரம் festival-ல் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
*****
நண்பர்கள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள் !

******
2-ம் பகுதி: கேரளாவில் பார்த்த புது மம்மூட்டி படம்: கேரள தியேட்டர்கள் எப்படி?

******
அடுத்த பதிவில்:

ஆட்டோ காரர் போக விரும்பிய, இதுவரை செல்லாத இடத்துக்கு அவரை கூட்டி சென்ற அய்யா சாமி
திருச்சூர் Zoo-ஒரு அனுபவம்

இரண்டாம் உலக போரில் பங்கேற்ற கிராம மக்கள்

இருபது மாடி உயரத்திலிருக்கும் சர்ச் டவர்- அட்டகாச அனுபவம்
Related Posts Plugin for WordPress, Blogger...