Tuesday, December 31, 2019

2019- சிறந்த 10 படங்கள்

வ்வருடம்  175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம்.

இவ்வருடம் சின்ன படங்கள் - தியேட்டரும் கிடைக்காமல், வெளியானாலும் ஒரே வாரத்தில் எடுக்கப்பட்டு, பணத்தை இழந்தது மிக அதிகமாக இருந்தது. வெற்றி பெற்ற - மக்கள் வரவேற்பை கண்ட பல படங்கள் நல்ல ஸ்டார் காஸ்ட் உள்ள படங்களாக மட்டுமே உள்ளது. இவ்வருடம் LKG, ராட்சசி, 100 (அவசர உதவிக்கு நாம் கூப்பிடும் அதே 100) என வெகு சில சின்ன பட்ஜெட்  படங்கள் ரசிக்க வைத்தன.

1. அசுரன்

சந்தேகமே இன்றி இவ்வருடத்தின் மிகசிறந்த படங்களில் ஒன்று அசுரன்.


வெக்கை நாவலை படமாக்கிய வெற்றி மாறன் - தமிழின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முக்கியமானவர்.

கதை- திரைக்கதை- நடிப்பு- வசனம் - இயக்கம் என அனைத்திலும் கச்சிதமான ஒரு படைப்பு.

அசுரன் விமர்சனம் இங்கு

2. தடம்

எனக்கு இவ்வருடம் ரொம்ப பிடித்த 2 படங்கள் என்றால் தடம் மற்றும் அசுரன் இவற்றை தான் சொல்வேன்.

தடம் - ஏதேனும் ஆங்கில/ வேற்று மொழி படத்தின் தழுவலா என தெரிய வில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் -  இயக்குனருக்கு சல்யூட் வைக்க வேண்டும்.

எப்படி இந்த மாதிரி கதையை யோசித்துள்ளார் ! அபாரம் ! படத்தின் இறுதி பகுதியில் அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும் போது நமக்கு பல இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் இயக்குனர்.

இதுவரை பார்க்காவிடில் நிச்சயம் பார்த்து விடுங்கள் தடம் படத்தை.. அட்டகாசமான த்ரில்லர் !

********
தடம் விமர்சனம் இங்கு

3. விஸ்வாசம்

அஜீத்- சிவா காம்பினேஷனில் இன்னொரு படமா என்ற தயக்கத்துடன் பார்த்தாலும், முழுதும் திருப்தி படுத்தி அனுப்பினார் சிவா.

ரொம்ப சுமாரான முதல் பாதி- செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் சரி விகிதத்தில் கலந்த இரண்டாம் பாதி அதனை ஈடு கட்டி விடுகிறது. அஜீத்திற்கு இந்த வருடம் வந்த 2 படங்களும் நன்கு ஓடி, தல ரசிகர்கள் ரொம்ப ஹாப்பி !

4. பேட்ட

ஸ்டைலிஷ் ரஜினியை காண்பித்து ஜாலியாக கொண்டு செல்லும் படத்தை - பின் பழி வாங்கல் - ரத்தம் என சினிமா ட்ரெண்டுக்குள் கொண்டு வருகிறார் இயக்குனர்.

படத்தின் முடிவில் தன் அக்மார்க் டிவிஸ்ட் வைத்து - சிரிப்புடன் நம்மை திரும்ப அனுப்பினார்.

அனிருத் இசையில் சில பாடல்கள் - கியூட்

ரஜினிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு ஹிட் படம் !
********

பேட்ட விமர்சனம் இங்கு

5. நேர் கொண்ட பார்வை

பிங்க் படத்தை தமிழுக்கேற்றவாறு மாற்றம் செய்து அழகாக தந்திருந்தார் இயக்குனர் வினோத். கூடவே அஜீத்தின் ஹீரோயிசத்திற்கேற்ற சில காட்சிகள் சேர்த்திருந்தார். நீட் அண்ட் க்ளீன் படம் ! வெல் டன் டீம் நேர் கொண்ட பார்வை !

****
நேர் கொண்ட பார்வை விமர்சனம் இங்கு 

6. கைதி

பிகிலுடன் நேரடியாக வெளியாகி வெல்லவும் செய்தது கைதி. ஓரிரவில் நடக்கும் கதை. பெரும்பகுதி பயணத்தில் செல்கிறது. ஏராள சண்டை காட்சிகள் - தவிர்க்க முடியாத படி கதை.

திரைக்கதையின் பெரும் சுவாரஸ்யம் - போலீஸ் ஸ்டேஷன்   காட்சிகள் தான். ஒரு சின்ன போலீஸ் காரக்டரை ஹீரோ ரேஞ்சுக்கு அமர்க்களமாய் ப்ரெசென்ட் செய்த விதம் செம அழகு.

7. பிகில்

இவ்வருடத்தின் மிக அதிக வசூல் செய்த தமிழ் படம் என்று விக்கிப்பீடியா சொல்கிறது (300 கோடி).

கால்பந்துடன்   பழி வாங்கும் கதையும் சேர்த்து அட்லீ செய்த கலவை. விஜய் ஸ்க்ரீன் ப்ரஸான்ஸால் மட்டுமே ஓடியது. தீபாவளி நேரம்- நீண்ட வீக் எண்டில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்தது. படம் ஓஹோ இல்லை; ஓகே
*******
பிகில் விமர்சனம் இங்கு

8. கோமாளி

இவ்வருடத்தின் சர்ப்ரைஸ் ஹிட். செமையாக சிரிக்க வைத்தனர். கூடவே மெசேஜ்-ம் இறுதியில் கூறினர் . மெசேஜ் தவிர்த்து முழு நீள ஜாலியான படமாக தந்திருக்கலாம் என்பது என் கருத்து. மக்கள் படத்தை கொண்டாடவே செய்தனர்.

கோமாளி விமர்சனம் இங்கு

9. மான்ஸ்டர் 


ஈயை வைத்து "நான் ஈ" சில வருடங்கள் முன்பு வந்து ஹிட் அடித்தது. எலியை வைத்து இப்படம் செய்துள்ளார் இயக்குனர். அதிலும் நிஜ எலி வைத்து சுவாரஸ்யமாக தந்துள்ளார்கள்..வள்ளலாரின் ஜீவ காருண்ய அடிப்படையில் அமைந்த கதை மற்றும் படமாக்கல் ரசிக்க வைத்தது








10. LKG 

தமிழக அரசியல் நிலையை பகடி செய்து - நிமிடத்திற்கொரு முறை சிரிக்க வைக்க முயன்று அதில் பெரிதும் வெற்றியும் பெற்றனர் LKG படக்குழுவினர். "ஜாலியான படம். சிரிச்சுட்டு போங்க" என தெளிவான ஐடியாவுடன் வந்து சைலன்ட் வெற்றி பெற்றது LKG.
*******
2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே

2016 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே

2015 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே 

2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

Thursday, December 26, 2019

அஞ்சலி: சோலையப்பன் சார்

ரணங்கள் அநேகமாய் என்னை அழ வைத்ததில்லை.

" எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று துவங்கும் ஜெயந்தனின் கவிதை வரி உள்ளுக்குள் மிக ஆழ பதிந்து போன ஒன்று.

மரணம் ... மனிதர்களுக்கு அவர்களது துன்பங்களில் இருந்து ஒரு விடுதலை. இறந்தோர்க்கு துன்பமில்லை என்பர். இவையெல்லாம் உள்ளுக்குள் ஊறிய விஷயங்கள்

மேற்சொன்ன அநேக விஷயங்கள் -பொய்த்து போனது சோலையப்பன் சார் மரணத்தில்.

79 வயது பெரியவர். மிக நன்றாக வாழ்ந்து விட்டார். ஆயினும் அவர் மரணம் என்னை தனிமையில் அழ வைத்து விட்டது.

அவர் ஒரு தலைவர். நிஜமான லீடர். தமது மக்கள் மீது மாறாத அன்பும் மிகுந்த அக்கறையும்  கொண்டவர்.



சேலம் நகரில் முதன்முதலில் கம்பெனி செகரட்டரி சாப்டர் துவங்க காரணமாக இருந்த சிலருள் அவரும் ஒருவர்.

சேலம் சாப்டர் துவங்கியது முதல் இன்று வரை அதன் ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு பெருமளவில் இருக்கும்.

இத்தகைய சிறு ஊரில் தொடர்ந்து சாப்டர் நடத்துவது மிகப்பெரும் சவால். சேலம் சாப்டருக்கு 10 ஆண்டுக்கும் மேல் சேர்மனாக இருந்தார். அவரிடம் ட்ரைனிங் எடுத்த ஏராள மாணவர்கள் இன்று வெவ்வேறு ஊர்களில் கம்பெனி செகரட்டரி ஆக  உள்ளனர்

2014 ஆம் ஆண்டு நான் சென்னை மேற்கு ஸ்டடி சர்க்கிளில் கன்வீனர் ஆக இருந்த போது சாரை பேச அழைத்திருந்தோம். நாங்கள் பேச்சாளர்கள் குறித்த தகவல்களை PPT யில் பல்வேறு புகைப்படங்களுடன் கலர்புல் ஆக காட்டுவது வழக்கம். இதனை வெகுவாக ரசித்தார் சார். அடுத்த முறை வேறொரு நிகழ்வுக்கு சேலம் சென்ற போது பேச்சாளர் தகவல்கள் PPT மூலம் புகைப்படங்களுடன் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் சார்.இந்த வயதிலும் நல்ல விஷயங்களை புதிது புதிதாக கற்று கொள்ளும் அவரது ஆர்வம் வியக்க வைத்தது   



சேலம் சென்ற போது அவரது இல்லத்தில் தங்கியிருக்கிறேன். காலை நேரம்- வெளியில் (ஹோட்டலில்) சாப்பிடுவோம். அந்த நேரம் சில கம்பெனி செகரட்டரிகளை வர சொல்லிவிடுவார். சாப்பிடும் நேரத்திலேயே நான்கைந்து நண்பர்களுடன் பேசிவிடும்படியும் செய்வது அவரது வழக்கம்

இம்முறை தென் இந்திய கம்பெனி செக்ரட்டரி அமைப்பிற்கு நான் தலைவர் ஆனபோது வாழ்த்து சொல்ல தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டவர் -சேலத்தில் நிச்சயம் இவ்வருடம் பெரிய கான்பரன்ஸ் ஒன்று நடத்த வேண்டும் என்றார். தனக்காக எப்போதும் எதுவும் கேட்டவர் அல்ல. மாறாக சேலம் சாப்டருக்காகத்தான் எப்போதும் பேசுவார்

அவர் கேட்டு கொண்டதிற்கிணங்க, தமிழக  கம்பெனி செகரெட்டரிகள் கான்பரன்ஸ் சென்ற மாதம் சேலத்தில் நடந்தது.

ரயிலில் சென்று அதிகாலை 5 மணிக்கு இறங்கியபோது  சேலத்தின் தற்போதைய சார்மன் பூபாலனுடன் எங்களை வரவேற்க .பூங்கொத்துடன் வந்து விட்டார். "சார் இவ்வளவு காலையில் நீங்க வரணுமா?" என்றால் புன்னகை மட்டுமே பதில்

அந்த புன்னகை தான் எப்போதும் அவரது அடையாளம். அந்த கான்பரன்ஸில் தான் அவரை கடைசியாக பார்த்தது.

சென்ற மாதம் கான்பரன்ஸில் கேள்வி கேட்கிறார் சார்..


டிசம்பர் 23 அதிகாலை மதுரையிலிருந்து சேலம் வந்த அவர் - சற்று அசந்து தூங்கி விட்டார். சேலத்தில் அவர்  இறங்கும் முன் ரயில் நகர  துவங்கி விட்டது. மெதுவாக ரயில் நகரும்போது அவர் இறங்க முயல, தவறி விழுந்து இறந்து விட்டார்.

எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றியவர் அவர். அவருக்கு இத்தகைய மரணமா என மனம் ஆறாமல் தவிக்கிறது

தனது இறப்பிலும் அவர் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறார்

பேருந்தோ, ரயிலோ - ஒரு போதும் -அவசரமாக ஓடி சென்று  ஏறவோ, இறங்கவோ செய்யாதீர்கள். அடுத்த ஸ்டேஷன் வரும். அடுத்த ரயில்/ பஸ் வரும். இன்னொரு வாழ்க்கை வராது....

நூறாண்டு வாழ்வார் என்று நினைத்திருந்தேன்.. அவர் மரணம்  சேலம் கம்பெனி செகரட்டரி குழுமத்திற்கு மிகப்பெரும் இழப்பு !

*************
சோலையப்பன் சார் குறித்து அவருடன் பழகிய இன்னும் சிலரின் நினைவேந்தல் :

திரு பூபாலன், சார்மன் கம்பெனி செகரட்டரி சாப்ட்டர், சேலம்


திரு. சோலையப்பன் அவர்கள் சில நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரி ஆக பணியாற்றி விட்டு பின் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தார். அவர் பிராக்டிஸ் துவங்கிய காலத்தில் நிறுவனம் துவங்கவும், அது தொடர்பான விஷயங்களுக்கும் CA முடித்த ஆடிட்டர்களை அணுகுவதே வழக்கமாக இருந்தது. இருப்பினும் சேலத்தில் அவர் ஒரு முன்னோடியாக தனது ப்ராக்டிஸை துவக்கினார்.

 சோலையப்பன் அவர்கள் எந்த வேலையை துவங்கினாலும் அதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். மிக எளிமையான மனிதர்.. அவர் செய்யும் எந்த செயலிலும் ஒரு human touch இருப்பதை நிச்சயம் உணர முடியும்.

20 ஆண்டுகளாக சேலம் கம்பெனி செகரட்டரி சாப்ட்ருக்காக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியது. சேலம் சாப்டர் துவங்கியது தொடங்கி - அதன் பல்வேறு நிலைகளிலும் அவர் - சார்மன் ஆக இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி, தொடர்ந்து இயங்கினார்

அவரது மறைவு - சேலம் வாழ் கம்பெனி செகரட்டரிகளுக்கு ஒரு மிக சிறந்த வழிகாட்டியை இழந்த - பெரும் வலியை தருகிறது. சேலம் சாப்டரோ தனது மாபெரும் தூண்களில் ஒன்றை இழந்து நிற்கிறது
***********

திருமதி. பூர்ணிமா, கம்பெனி செகரட்டரி, சேலம்

சோலையப்பன் சாரை கடந்த 10 வருடங்களாக அறிவேன். எளிமையும், அடக்கமும் ஒன்று சேர்ந்தவர். எந்த வயதினராக இருந்தாலும் - இளைஞர்கள் என்றாலும் கூட எளிதில் அவர்களுடன் பழகுவார்.  கம்பெனி செகரட்டரி கோர்ஸ் படிக்க எத்தனையோ மாணவர்களுக்கு (நான் உட்பட) அவர் உந்துதல் ஆக இருந்தார். சேலம் சாப்டர் துவங்க காரணமாக இருந்தது மட்டுமல்ல, சேலத்தில் இருந்து எத்தனையோ பேர் கம்பெனி செகரட்டரி ஆனதிலும் அவர் பங்களிப்பு இருந்தது.

தொடர்ந்து இயங்க வயது ஒரு தடையில்லை என்பதை தனது செயல்களின் மூலம் நிரூபித்தவர் சோலையப்பன் சார்

திருமதி சரண்யா, கம்பெனி செகரட்டரி, சேலம்  


சோலையப்பன் சாரிடம் 15 மாதங்கள் பயிற்சி (Training) எடுத்த மாணவி நான். அவர் ஒரு வழிகாட்டி (Mentor) மட்டுமல்ல, சிறந்த குருவாகவும், எப்போதும் நமது நலனை மட்டுமே விரும்புபவராகவும் இருந்தார்

Nothing is so strong as Gentleness, and nothing is so gentle as real strength.


மேற்சொன்ன வரிக்கு சோலையப்பன் சாரை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது

தென் இந்தியாவில் இருக்கும் மிக சீனியர் கம்பெனி செகரெட்டரிகளில் ஒருவர் அவர். குறைந்தது 15 கம்பெனி செகரட்டரிகளாவது அவர் மூலம் வாழ்க்கையை துவங்கியிருப்பர். மென்மையாக பழகுதல், ஆழ்ந்த அறிவு, நல்ல நினைவாற்றல், எப்போதும் மிகுந்த உற்சாகம், சிறந்த விருந்தோம்பல்.. இவை அனைத்தும் ஒரு சேர பெற்றவராக அவர் இருந்தார்

துளசி ராமன், ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரி,  சேலம்


கம்பெனி செக்ரட்டரி சர்க்கிளில் - சேலம் என்று சொன்னால், அடுத்து வரும் வாரத்தை- சோலையப்பன் சார், செகரட்டரி என்பதாக இருக்கும்.

எனது குருவுடன் கடந்த 10 வருடம் பழகியதில் - தொழிலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், பொது வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன் 

6 / 7 செப்டம்பர் 2013-ல் ஏற்காட்டில் - தென் இந்திய ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரிகள் கான்பரன்ஸ் நடந்தது. சோலையப்பன் சார் தான் அப்போது சேலம் சாப்டர் தலைவர்.

தனது மேனேஜிங் கமிட்டி மெம்பர்களோடு பல்வேறு வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.

துரதிஷ்ட வசமாக நிகழ்வுக்கு ஓர் வாரம் முன் அவருக்கு ஹிரண்யா ஆப்பரேஷன் நடக்கிற சூழல். மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறிய போதும் எந்த வேலையும் தொய்வின்றி நடக்கும்படி  பார்த்து கொண்டார். நிகழ்ச்சிக்கு 2 நாள் முன்பே ஏற்காடு வந்த அவர் அணைத்து வேலைகளையும் முன் நின்று கவனித்தார். பல முறை மாடிப்படியில் அவர் ஏறி இறங்கியதை காண எங்களுக்கு தான் கஷ்டமாக இருந்தது

இரவு முழுதும் தூங்காத அவர் மறு நாள் காலை தன் புன்னகை குறையாமல் வந்து நின்றார். அது தான் சோலையப்பன் சார் !

அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எத்தனையோ கற்று கொள்ள முடிந்தது. கம்பெனி சட்டத்தில் தொடர்ந்து விவாதித்து-  அறிந்து கொள்ள என்னை தூண்டிய வண்ணம் இருப்பார்

தொழிலில் சின்னசின்ன விஷயத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு, சிக்கனமான வாழ்க்கை முறை, அலுவலகம், சாப்டர் என அனைத்து  நபர்களிடமும் அவர் காண்பித்த அன்பு, எந்த விழாவிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாங்கு, உதவி தேவைப்படுவோருக்கு தயங்காமல் சென்று உதவும் மனது என அவரது நற்குணங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்

அவர் எப்போதும் ஒரு மிக சிறந்த ஆல் ரவுண்டர் ஆக இருந்தார். அவரிடம் எனது துவக்க கால பயிற்சியை கற்றதில் மிகுந்த  பெருமிதம் கொள்கிறேன்..

Saturday, October 26, 2019

பிகில் - சினிமா விமர்சனம்

ட்லீ படங்களின் ரசிகனல்ல நான். ஆயினும் பிகில் என்னை கவர்ந்தது. மிக எளிய காரணம். பெண்களுக்கும் கனவு என ஒன்று இருக்கலாம்; அதை அவர்கள் தொடரவேண்டும் - திருமணம், ஆசிட் அட்டாக் போன்ற எதுவும் அந்த கனவுகளுக்கு தடையாய் இருக்க கூடாது என்று தெளிவாய் சொன்ன கருத்து தான் நிச்சயம் படத்தை ஆவரேஜ் என்று சொல்லாமல் "குட்" என்று சொல்ல வைக்கிறது.



ரொம்ப சுமாரான முதல் பாதி; வெறித்தனம் பாட்டு அமர்க்களம் என்றால்- அதை படமாக்கிய விதம் - குறிப்பாய் நடனம் இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம் (விஜய் அட்டகாசமாய் ஆடக்கூடியவர்; அவருக்கு  எக்ஸர்சைஸ் செய்யும் வகை ஸ்டெப் எதற்கு !) சிங்கப்பெண்ணே  மற்றும் மாதரே பாடல்கள் படமாக்கம் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

காமெடி என்று எதோ முயற்சிக்கிறார் இயக்குனர். அதுவும் எடுபடலை. இடை இடையே சண்டைகள் வேறு (நிறைய அனாவசியம்)

முதல் பாதி மோசமா என்றால் - வழக்கமான ஸ்டார் படம் (ரஜினியின் பழைய மசாலா படங்கள்) போல தான் இருந்தது.

இடைவேளைக்கு சற்று முன் லேசாக முக்கிய விஷயத்தை தொடுகிறார் இயக்குனர்

செகண்ட் ஹாப் நிச்சயம் என்னை முழுதும் திருப்தி படுத்தியது. குறிப்பாக திருமணம் ஆனபின் வந்து ஆடும் காயத்ரி - ஆசிட் அட்டாக்கில் மீண்டு ஆட வரும்  பெண் இருவர் பகுதியும் சரியான விதத்தில் எமோஷனல் ரீச் ஆகிறது.

பிற்பாதியில் சில ரசிக்க வைக்கும் சீன்கள் வந்த வண்ணம் உள்ளன - டில்லி போலீஸ் ஸ்டேஷனில்  விஜய் செய்யும் அடாவடி  - மேட்ச்கள் (தோற்கும் படி சென்று ஜெயிக்கும் வழக்கமான பாணி எனினும்) ..

படத்திற்கு மிக்ஸட் ரிவியூ வருவதை உணர முடிகிறது. இணையத்தில் அதிகமாய் விஜய் ஹேட்டர்ஸ் முடிந்த பங்கை செய் கிறார்கள். ஆனால் படம் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு பிடிக்கும் படம் ஹிட் ஆகவே செய்யும் ..

பாலசோவில் முதன் முறை படம் பார்த்தோம். அட்டகாசமான திரை அரங்கம். தியேட்டர் காம்ப்ளெக்ஸ்  வியக்க வைக்கிறது; ஸ்னேக்ஸ் மிக ரீஸன்பில் விலை; (நாங்கள் வழக்கமாய் செல்லும் PVR -ல் Snacks கொள்ளை விலை.

எலைட் ஆடியன்ஸ். விஜய் வரும்போதும் சரி, ஏ ஆர் ரகுமான் திரையில் வரும்போதும் சரி- எண்ணி நான்கு பேர் கை  தட்டினார்கள்.

அதை விட இன்னொரு விஷயம்: படம் போட்ட பின் பல நிமிடம் சத்தம் தான் வந்தது; திரையில் ஒன்றுமே தெரியலை. மக்கள் சத்தம் போடாமல் அமைதியோ அமைதி காத்தனர்.

டயலாக் எல்லாம் துவங்கிய பின் சிலர் கத்த, நிறுத்தி விட்டு, முதலில் இருந்து படம் போட்டனர் !


பிகில்

அதிக எதிர்பார்ப்பின்றி செல்லுங்கள். நிச்சயம் ஒரு முறை காண தகுந்த படம் தான் !

Sunday, October 20, 2019

அன்புள்ள அப்பா...

அமுதா பார்மசி

ப்பா என்றதும் முதலில் நினைவில் வரும் சித்திரம் - அமுதா பார்மசி மருந்து கடையில் அவர் அமர்ந்திருக்கும் காட்சி தான். அவர் தன் வாழ்நாளில் அதிகம் இருந்த இடம் அந்த கடையாகத்தான் இருக்கும். தனது 4 குழந்தைகளை படிக்க வைத்தது, திருமணம் செய்வித்தது அனைத்தும் அந்த சிறு கடை மூலம் தான்.

அப்பா ஒரு மருந்தாளுனர் (Pharmacist). அவரது அப்பாவும் அதே தொழில் தான். அவர் காலத்தில் இதற்காக படிக்க கல்லூரி இல்லை; தனது அப்பாவிடம் பணிபுரிந்த அனுபவம் - மேலும் ஒரு தேர்வு மட்டும் எழுதி அதில் தேர்வானால் Pharmacist !

அப்பாவின் தினசரி நாள் இப்படியாக இருக்கும்:

காலை ஐந்தரை மணியளவில் எழுந்து விடுவார். பத்து நிமிடத்தில் தயாராகி - ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்கு சைக்கிளில் செல்வார். சின்ன வயல்.. ஒரு ஏக்கர் (மூன்று மா) . அங்கு தினம் என்னதான் வேலை இருக்குமோ தெரியாது. ஆனால் அப்பா வயலுக்கு செல்லாத நாட்கள் ஏதும் இருந்ததாய் நினைவில் இல்லை. 

ஆறரை அளவில் வீடு திரும்பி - குளித்து பூஜை செய்வார். எங்கள் வீட்டு பூஜையறை மிக சிறியதாய் இருக்கும். ஏராள சாமி படங்கள், பீரோ இவை தவிர 2 பேர் நிற்க முடிந்தால் பெரிய விஷயம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அப்பா உள்ளே நின்று பூஜை செய்ய நாங்கள் வெளியில் நின்று தான் கும்பிடுவோம். 

மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். தினசரி பூஜை அரை மணி நேரம் போல் நடக்கும். ஒவ்வொரு சாமிக்கும் எதோ மந்திரம் சொல்வார். அது தமிழா, சமஸ்கிருதமா என கொஞ்ச நாள் ஆராய்ந்து பின் புரியாமல் விட்டு விட்டேன். அவர் குரல் வேறு கர கர -வென சற்று தெளிவில்லாமல் இருக்கும் (என்னை தெரிந்தவர்களுக்கு மட்டும் - என் குரல் தெரியும் அல்லவா? Exactly அதே கர கர குரல் !)

ஏழு மணியளவில் சாப்பிட்டு விட்டு (அநேகமாய் இட்லி) ஏழே காலுக்கு கடை திறக்க சென்று விடுவார். கடையும் வீடும் -அடுத்தடுத்த தெரு -  நூறு மீட்டர் தூரம். 2 நிமிட நடை. 

ஏழே காலுக்கு கடைக்கு சென்றால் இரவு 10 மணி வரை கடை தான். மகன்கள் யாரேனும் இருந்தால் மதியம் சென்று சாப்பிட அவரை அனுப்புவோம். இல்லா விடில் அரை மணி நேரம் பூட்டி விட்டு,  வீடு வந்து சாப்பிட்டு செல்வார். 

ஒரு நாளைக்கு 15 மணி நேரம் கடை வாசம் தான். இத்தனைக்கும் 15 மணி நேரத்தில்அந்த சிறிய ஊரில் 30 அல்லது 40 பேர் மருந்து வாங்க வந்தால் அதிகம். 

சுற்று வட்டத்தில் "ஆராமுது கடை " என அவருக்கென்று வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் அப்பா இல்லாத நேரம் வந்தால் - "அப்பா வரட்டும், அப்புறம் வர்றேன்" என சென்று விடுவர்.  

குறைந்தது 45 வருடம் இப்படி கடையுடன் தான் வாழ்ந்திருப்பார். அவரது முக்கிய identity அந்த கடை தான் !

மிகுந்த குறைந்த லாபத்திற்கு தான் வியாபாரம் செய்வார். தீபாவளி சமயம் அதே கடைக்கு வெளியே  வெடிக்கடை வைக்கும் போது - எனது நண்பர்கள் எல்லாம் வந்து வியாபாரம் செய்வார்கள். ஆனால் அப்பாவை வெடிக்கடையில் உட்கார வைக்க மாட்டோம். அவர் இருந்தால் 200 ரூபாய்க்கு வெடி வாங்கி, 100 ரூபாய் தந்து விட்டு, மீதி அப்புறம் தருகிறேன் என சொல்லி சென்று விடுவர் .. இப்படி சென்றோர் ஒருவரும் மீதம் பணம் கொண்டு வந்து தந்தாக வரலாறு இல்லை. 

உண்மையில் அமுதா பார்மசி என்ற தலைப்பிலேயே ஒரு தனி பதிவு எழுதலாம்.. தனிப்பட்ட முறையில் ஏராள நினைவுகள்.. அது பிறிதொரு சந்தர்ப்பத்தில் !

கடைக்குட்டி செல்லம் 

அம்மா - அப்பாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை (கோதை) பிறந்து இறந்து விட்டது. பின் கொஞ்ச காலம் குழந்தை இல்லை. சற்று இடைவெளிக்கு பின் அடுத்தடுத்து இரு மகன்கள்.. (கோவிந்த குமார் & பாலாஜி குமார்)  பின் ஒரு மகள் (செண்பக லட்சுமி). 

அப்புறம் ஒரு பையன் பிறந்து (முரளி) சில மாதங்களில் இறந்து விட, சில ஆண்டு கழித்து கடைக்குட்டி நான் பிறந்தேன்.



கடைசி பிள்ளை என்பதால் நிறையவே செல்லம். குறிப்பாய் அப்பா என்னை அடித்ததாக நினைவே இல்லை. மட்டுமல்ல, நான் எதுவும் கேட்டு அவர் வாங்கி கொடுக்காமல் இருந்ததும் இல்லை. போலவே, பணமும் !  கடையில் இருக்கும் போது சென்று பணம் கேட்டால், கை உடனே கல்லா பெட்டியை திறந்து விடும்.  எவ்ளோ வேணும்பா  என்று தான் கேட்பாரே ஒழிய எதற்கு என்று கூட கேட்க மாட்டார்.

பள்ளி செல்லும் வரை  நான் டூ பாத் ரூம் சென்றால் அப்பா தான் வந்து கழுவி விடணும். வேறு யார் செய்தாலும் நோ தான். இதனால் கடைக்கு யாராவது சென்று அப்பாவை அனுப்புவார்கள். அவரும் அலுக்காமல் அந்த ஒரு நிமிடத்திற்காக வந்து செல்வார். "ஏண்டா வேற யார்கிட்டேயும் செஞ்சுக்க மாட்டியா என ஒரு முறை அடித்திருந்தால் அப்படி அடம்பிடித்திருக்க மாட்டேன்" என இப்போது நினைப்பதுண்டு  

பள்ளியில் படிக்க ஆரம்பித்த பின் ப்ராகிரஸ் கார்ட் - அவரிடம் கையெழுத்து வாங்குவது போன்ற ஈஸியான வேலை வேறு எதுவும் இல்லை. மிக சாதாரணமாக நீட்ட, அவரும் ஆட்டோ கிராப் போட்டு தரும் வி.ஐ. பி போல சில நொடிகளில் கையெழுத்து போட்டு தந்து விடுவார். (அந்த கருமம் பிடித்த ப்ராகிரஸ் கார்ட்டை - அதற்கு முன் அண்ணன்கள்- அக்காவிடம் காட்டி  - வாங்க வேண்டிய அனைத்தும் வாங்க வேண்டும் என்பது தனி சோகம்; அதுவும் அண்ணன் - அக்காவே  பாலோ செய்து கொண்டிருப்பர். குவார்ட்டளி முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சே.. இன்னுமா ப்ரோக்ராஸ் கார்ட் வரலை? ) 

எல்லாம் நன்மைக்கே 

எல்லாவற்றையும் பாசிட்டிவ் ஆக மட்டும் தான் அப்பா எடுத்து கொள்வார். அது நாங்கள் கிண்டல் அடிக்கும் அளவு extreme ஆக சில நேரம் இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாரத்தை. 

அறுவடை நேரம் மழை வந்து பாதித்தால் அதுவும் நன்மைக்கே என ஒரு காரணம் சொல்லுவார். 

இப்போது யோசித்தால் உண்மையில் அந்த தீவிர பாசிட்டிவ் எண்ணம் மற்றும் நம்பிக்கை தான் பல நேரங்களில் அவர் சோர்ந்து விடாமல் காப்பாற்றியுள்ளது 

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 

அப்பா அடிக்கடி சொல்லும் இன்னொரு பழமொழி இது. அவர் சொன்ன பல விஷயங்களை அவர் முடிந்த வரை பின்பற்றினார் என்பது தான் சிறப்பே. 

குடும்பத்தில் ஒரு முறை சின்ன சண்டை - ஒரு மருமகளை அவரது தந்தை வந்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டார்.

வீட்டில் அனைவரும் "அவர் தான் வந்து கூட்டி போனார். அவரே கொண்டு வந்து விடட்டும்" என்று சொன்னாலும் அப்பா அதனை சிறிதும் பொருட்படுத்தாமல்  தனியாக கிளம்பி சென்று - அவர்களிடம் பேசி திரும்ப அழைத்து வந்து விட்டார் 

70 வயதுக்கு மேல் அண்ணன் வீட்டில் இருக்க ஆரம்பித்த பிறகும் சரி, அவ்வப்போது திருச்சியில் அக்கா இல்லம் வந்து சில மாதங்கள் தங்கும் போதும் சரி  இருக்கிற இடத்திற்கு தகுந்த மாதிரி முழுதும் தன்னை adopt செய்து கொள்வார். அங்கிருப்போர் பற்றி ஒரு குறையும் சொல்ல மாட்டார். இதனால், அவர் இருக்கும் இடத்தில அவரால் எந்த சண்டையும் வராது. 

நீங்கள் கேட்டவை 

நீடாமங்கலத்தில் முதலில் அம்சவல்லி- காவேரி என இரு டூரிங் தியேட்டர்கள் (டென்ட் கொட்டாய்கள்). பின் சரவண பவன் என்ற நல்ல தியேட்டர் வந்தது. பசங்களுக்கு பெரிய குஷி சினிமா போவது தான். ஆனால் அப்பா வருடம் ஒரு படமாவது பார்த்தாரா என்றால் இல்லை என்று தான் சொல்லணும்.

அம்மா கூட அரிதாய் சாமி படம்- சிவாஜி படம் என எங்களுடன் சினிமாவிற்கு வருவதுண்டு. அப்பா ... ஊஹூம் . 

அப்பா, அம்மா, 4 பிள்ளைகள் என 6 பேரும் சேர்ந்து குடும்பமாய் பார்த்த படம் ஒன்று கூட இல்லை !

ஒரு முறை பொங்கலுக்கு பாலு மஹிந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை - சரவண பவனில் வந்தது. பொங்கல் நேரம் - நான்கைந்து நாட்கள் -எங்கள் ஊரில் எந்த படமாய் இருந்தாலும் ஹவுஸ் புல் தான். என்னுடன் வழக்கமாய் சினிமாவிற்கு வரும் நந்து-  மோகன் படம் பார்த்து விட்டனர். இதனால் படத்திற்கு போகணும் என தொடர்ந்து நான் அழுது கொண்டே இருக்க, அப்பா முதல் முறை என்னுடன் படம் பார்க்க வந்தார். 

அதுவும் இரவு பத்து மணிகாட்சி  - கடை மூடி விட்டு தான் சென்றோம்.  

படம் தந்த சந்தோஷம் ஒரு புறம் இருக்க, சினிமாவே செல்லாத அப்பா, எனக்காக உடன் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது  

வாழை பழத்தார் சண்டை 

 பொங்கல் பற்றி சொல்லும்போது இன்னொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.

அப்பா என்னைத்தான் அடிக்க மாட்டாரே ஒழிய பெரிய அண்ணன் அவரிடம் அவ்வப்போது அடி வாங்குவார்.  பெரிய அண்ணன் சிறு வயது சுபாவமே வாலு என்பதாலும், வீட்டுக்கு தெரியாமல் பக்கத்து ஊர் சினிமா போவது போன்றவை செய்து அப்பாவிடம் மாட்டி அடி  வாங்குவார். 

அப்பா " முன் ஏர் போற படி தான் பின் ஏர் போகும்" என முதல் பிள்ளை ஒழுங்காக படித்தால், மற்றவை அவனை பார்த்து ஒழுங்காய் படிக்கும் என நினைத்திருக்கலாம்.   (ஒரு பிள்ளையை ட்ரக் இன்ஸ்பெக்டர் ஆக்கணும்; ஒரு பிள்ளை டாக்டர் ஆகணும் என நினைத்தார். முடித்து விட்டார் )

பெரிய அண்ணன் - சின்ன அண்ணன் இருவருக்கும் 2 வயது தான் வித்யாசம் என்பதால் நண்பர்கள் போல பழகுவர். அதே நேரம் திடீர் சண்டை வெடிக்கும். பல நேரம் பெரிய அண்ணன்  தான் வில்லனாக இருப்பார். 

ஒரு முறை பொங்கல் நேரம் இரண்டு அண்ணன்களுக்கும் பலத்த சண்டை ! சண்டை துவங்கியதும் அம்மா கடைக்கு தகவல் அனுப்பி விட்டார்.  நெல் கொட்டி வைக்கும் பத்தாயத்தின் இடுக்கில் சின்ன அண்ணன் தலையை வைத்து தள்ளி கொண்டிருந்தார் பெரிய அண்ணன். பத்தாயத்தில் தலை மாட்டி இறந்தே போய் விடுவாரோ என்ற பயத்துடன் பார்த்து கொண்டிருதோம். பெரிய அண்ணன் எல்லாம் அப்போ ஒரு டெரர் .. சண்டையில் நாங்க எல்லாம் கிட்ட கூட போக முடியாது 

அப்பா சரியான நேரம் என்ட்ரி கொடுத்தார். பொங்கலுக்கு வாங்கி - உத்தரத்தில்  தொங்க விட்டிருந்த வாழை பழ தாரை பிடித்த பிடி சர்ரென்று பறந்து வந்து பெரிய அண்ணனுக்கு விட்டார் ஒரு உதை ! சில பல அடிகளுக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. 

இன்றும் வாழை பழத்தார் சண்டை என்றால் அவரது பிள்ளைகள் முகத்தில் ஒரு புன்முறுவலை காணலாம். 

நந்து -மோகன் 

12வது படிக்கிறேன். அது தான் வாழ்க்கையை முடிவு செய்யும் வருடம் என வீட்டில் ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள்.  நானோ கிரிக்கெட் விளையாடியும், டிவி பார்த்தும் வீணாய் போய் கொண்டிருக்கிறேன்  

நண்பர்கள் நந்து -மோகன் இருவரும் என்னை காண வீட்டுக்கு வருவார்கள். கடையை தாண்டிதான் எங்கள் வீட்டுக்கு செல்லணும் என்பதால், அவர்கள் தெருவில் போவதை பார்த்தாலே. " வீட்டுக்கு போகாதே .. அவன் படிக்கிறான்" என டிராபிக் கான்ஸ்டபிள் போல் அடம் பிடித்து திரும்ப அனுப்பி விடுவார். நிஜமாக கடைத்தெருவில் ஏதாவது அவர்கள் வாங்க வந்தாலும் அந்த ஒரு வருடம் - இதே கதை தான் ! 

இதுக்கெல்லாம் மசிவோமா நாங்க !  இன்னோர் சுத்து வழியில் வந்து எப்படியும் என்னை தள்ளிக்கிட்டு போய்டுவாங்க பசங்க !

ஒரு முத்தம் 

5 வருடம் சட்டம் படித்து, பின் ACS இன்டர் வரை முடித்து விட்டு - ACS ட்ரைனிங் செல்ல துவங்கினேன். ஏனோ அந்த வேலை பிடிக்க வில்லை. இந்த படிப்பே வேணாம்; நான் ஊரில் போய் அப்பாவுக்கு உதவி பண்றேன்; ஜிராக்ஸ் கடை வைக்கிறேன் என சென்னையிலிருந்து கிளம்பி நீடாமங்கலம் வந்து விட்டேன். சில மாதங்கள் ஊரிலேயே சுற்றி வந்தேன். தஞ்சை - திருச்சி என சென்று எந்த நண்பனை பார்த்தாலும் " ஒழுங்கா ACS படிச்சு முடி; வேற எதுவும் உனக்கு செட் ஆகாது " என ஒரே மாதிரி கூறினர் 

என்ன செய்வது என பயங்கர குழப்பம். ஏறக்குறைய depression . 

ஒரு நாள் இரவு - சுத்தமாய் உறக்கம் வரவில்லை; மனதில் ஏதேதோ பயம்.. தூக்கம் வரவில்லை என்ற கவலை வேறு. 

24 வயது பையன் - தூங்கி கொண்டிருந்த அப்பா அருகில் சென்று அவரை எழுப்பி " அப்பா தூக்கம் வரலை; பயமா இருக்கு" என்கிறேன். அப்பா ஏதேதோ சமாதானம் சொல்கிறார். மனது ஆறவே இல்லை. 

"நான் இருக்கேன் பா. எதுக்கும் கவலை படாதே. இந்த வீடு, கடை, வயல் எல்லாம் உனக்கு தான்" என்று சொல்லி விட்டு எனக்கு அழுந்த ஒரு முத்தம் தந்தார். 

அன்று இரவு முழுக்க எதோ பயத்தில் நான் தூங்கவில்லை என்றாலும் - அப்பா சொன்ன வார்த்தைகளும்,  அந்த முத்தமும் எதோ ஒரு ஆறுதலை தந்தது. 

இதில் "இந்த வீடு, கடை, வயல் எல்லாம் உனக்கு தான்" என்கிற டயலாக் கொஞ்சம் பேமஸ். காரணம் அப்பா எல்லா பசங்களிடமும் அந்த வரியை எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வார். நம்ம முன்னாடியே இன்னொரு பையன் கிட்டேயும் இதே மாதிரி சொல்றாரே என சற்று அதிர்ச்சியாய் இருக்கும் !

அப்பா தனது கடைசி நாள் வரை கடையில் இருப்பார் என்று தான் நானெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால் 70-72 வயதளவில் தனக்கு முடியவில்லை என மருந்து கடையை மூடி விட்டார். அம்மாவின் உடல்நிலையும் அப்போது சீராக இல்லை   

அம்மாவின் இறுதிக்காலம் 

அம்மாவிற்கு வயதான காலத்தில் அப்பா செய்த பணிவிடைகள் போல இன்னொரு கணவர் யாரேனும் செய்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஒரு ஆண் நர்ஸ் போல் தான் -அத்தனை வேலையும் முகம் சுழிக்காமல் செய்தார். இருவரும் படும் துயரத்தை பார்த்து விட்டு " அம்மா சீக்கிரம் போயிட்டா நல்லதுப்பா " என்றால் அதனை ஒப்பு கொள்ளவே மாட்டார்.

அப்பா மிக நொடித்து போனதும், அழுததும் அம்மா மரணத்தின் போது தான் காண முடிந்தது. வயதாகி, நீண்ட காலம் படுக்கையில் இருந்து மறைந்தாலும் -அம்மாவின்   மரணத்தை அவரால் எளிதில் ஏற்க முடியவில்லை. 

அப்பாவின் பிரபலமான " எல்லாம் நன்மைக்கு" வரியை அம்மா மரணத்தில் அவர் ஏற்கவே இல்லை !           

அப்பா .. இப்போது !

அம்மா மரணத்திற்கு பின் அண்ணன் வீட்டில் தனது அனைத்து வேலைகளையும் தானே பார்த்த படி நன்றாகவே இருந்தார். சிறு வயது முதல் மிகுந்த உணவு கட்டுப்பாடு. சுகர் எட்டி பார்த்ததும், டயட் மூலமே மீண்டும் வராமல் பார்த்து கொண்டார். BP எப்போதுமே இல்லை 

ஒரு முறை அக்கா (அவரது பெண் ) தஞ்சை வந்த போது அவரை காண அவசரமாய் வந்தவர் வழுக்கி விழ, காலில் எலும்பு நொறுங்கி விட்டது. ஆப்பரேஷன் செய்தாக வேண்டும் என்று சொல்லி, அது முடிந்த பின் ஆளே மாறி போய்விட்டார். 

நினைவு திரும்பவே பல வாரங்கள் ஆனது. விழித்து பார்த்தாலும் எங்களை தெரியவில்லை. 

சுகர், BP என வேறு எந்த உடல் உபாதைகள் இல்லாமல் இருந்தவர் வீட்டில் அனைவர் கண் முன்பு வழுக்கி விழுந்து இப்படி ஆகி விட்டார் என்பதில் அனைவருக்கும் பெரும் வருத்தம் 

முழு நேரம் ஆள் வைத்து தான் அனைத்து வேலைகளும்  அவருக்கு இப்போது நடக்கிறது. அப்பாவை பாதுகாக்கும் விஷயத்தில் அண்ணன் - அண்ணி இருவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்; அதிலும் அண்ணன் அப்பாவிற்காக மெனக்கெடுவது மிக மிக அதிகம் ! 

அப்பா சில நேரம் எங்களை சரியாக அடையாளம் கண்டு சொல்லுவார். அப்படி சொன்னாலே எங்களுக்கு பரம சந்தோசம்.

அண்மை படம் : அப்பா - பெரிய அண்ணன், அக்கா மற்றும் என்னுடன்    


இம்முறை சென்ற போது என்னை பார்த்து புன்னகைத்தார். " நான் யார் சொல்லுங்க" என்றதும் " கடைசி பிள்ளை..மோகன் குமார்" என்றார். 

கொஞ்ச நேரம் பேசிய பின் " மெட்றாஸ் வர்றீங்களா? " என்றதும் " வேணாம்பா .. அவ்ளோ தூரம் தாங்காது" என்றார். இவ்வளவு தெளிவாக கேள்வியை புரிந்து அதற்கான பதில் சொன்னது ஆச்சரியம் !

 அப்பாக்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.. தனக்காக எதுவும் செய்து கொள்ளாதவர்கள் ..குழந்தைகள் நலன் மட்டுமே எப்போதும் நினைப்பவர்கள். அம்மாவிடம் காட்டும் அன்பில் சிறு துளி கூட அப்பாவிடம் காண்பிக்க தவறுகிறோம். அம்மாக்கள் தங்கள் அன்பை காட்ட எத்தனையோ வழிகள் உண்டு. உணவு, உபசரிப்பு என அம்மாக்கள் தினம் தினம் நம் மனதில் நிறைகிறார்கள். அப்பாக்கள் அப்படி அன்பை காண்பிக்க தெரியாதவர்கள் 

அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை என்பார் சுஜாதா 

எத்தனை உண்மை இது !

இதோ.. இந்த கட்டுரை கூட அப்பா நல்ல நினைவோடு இருக்கும்போது எழுதப்பட்டிருக்கலாம். 

என்றைக்கேனும் ஒரு நாள் இந்த கட்டுரையை அப்பாவிடம் படித்து, அவர் அதனை புரிந்து கொள்ள நேர்ந்தால், அதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்காது !

Wednesday, October 9, 2019

அசுரன் சினிமா விமர்சனம்

ழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் - வெற்றி மாறன்- தனுஷ் கூட்டணியில் அசுரத்தனமாக வந்துள்ளது ..

1960-70களில் நடந்த கதை. சாதி பிரச்சனை, நில மீட்பு போன்றவை பின்புறமாய் இருந்தாலும் ஒரு குடும்பத்தின் வலி நெஞ்சை தைக்கும்படி பளிச்சென்று பதிகிறது.



நாவல் வாசிக்க வில்லை; மூலக்கதை என்று தான் போடுகிறார்கள். நிச்சயம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்து தான் தந்துள்ளார் இயக்குனர். அதனால் தான் படத்தை ரசித்து பார்க்க முடிகிறது.

இன்றைக்கும் நேற்றைக்கும் சென்று வரும் திரைக்கதை நம்மை பதை பதைக்க வைக்கிறது. தனுஷ் (சிவசாமி) குடும்பத்துடன் சேர்ந்தே நம்மை பயணிக்க வைக்கிறார் இயக்குனர்

சரியான காஸ்டிங்.. தனுஷை கல்யாண வயதில் மகன் உள்ள ஒரு தந்தையாக துவக்கத்தில் ஏற்று கொள்ள சிரமமாயிருந்தாலும் போக போக அற்புத நடிப்பால் நம்மை அசர அடிக்கிறார்...சிறிதும் மிகை படுத்தல் இன்றி அவர் தந்துள்ள நடிப்பு .. அற்புதம் !

இடைவேளையில் வரும் சண்டை காட்சி .. அமர்க்களம். இண்டெர்வெல் முடிந்து   வந்ததும் பஞ்சமி நில பிரச்சனை மற்றும் தனுஷின் குடும்பம் குறித்த பிளாஷ் பேக் நம்மை பெரிதும் தாக்குகிறது..  பிளாஷ்பேக்  முடிந்ததும் மெயின் கதைக்குள் நாம் வரவே நேரமாகிறது.. இரண்டாவது பிளாஷ் பேக் அந்த அளவு தாக்கி விடுகிறது. 



இப்படியெல்லாம் கூட நடக்குமா என்போர் பஞ்சமி நிலமீட்பு என்றும் கீழ வெண்மணி என்றும் கூகிளில் தேடி பாருங்கள். படத்தில் காண்பித்தது ஒரு துளி தான் என்று தெரிய வரும்.

மஞ்சு வாரியர் , தனுஷின் இளைய மகன், ஆடுகளம் நரேன்.. அனைவரையும் விட வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ்  அனைவரும் நேர்த்தியான நடிப்பு (படத்தில் பிரகாஷ் ராஜ்  பெயர் சேஷாத்ரி.. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாதாடும் வக்கீல் ஒரு மேல் சாதி காரர் என்பதும் ஒரு குறியீடு )

படம் எத்தனையோ விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது; உதாரணத்திற்கு ஒன்று: பிள்ளைகள் பல நேரம் பெற்றோர் சொல் கேட்பதே இல்லை; ஆனால் பெற்றோர் ஒவ்வொரு முறையும் அவர்களின் நல்லதற்கு மட்டுமே தான் சொல்கிறார்கள். அது அவர்களுக்கு அப்போது புரிவதே இல்லை ! போலவே பெற்றோர் தம் குழந்தைகளுக்காக எந்த வித தியாகமும் செய்வார்கள் என்பதுவும் படம் போகிற போக்கில் சொல்லி செல்கிறது..

ஜீவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை நம்மையும் இரண்டு பேரை அடிக்கலாமா என்கிற விதத்தில் உசுப்பேற்றுகிறது..

தனுஷ் வேலைக்கு சேர்க்கும் ஆள் மிக சரியாக வளர்ந்து அவருக்கே எதிராக திரும்பும் cliche,  சற்றே அதிகமான வன்முறை, மனதில் பதியாத பாடல்கள் என சிற்சில குறைகள் இருந்தாலும் - அவை யாவும் வெற்றி மாறனின் கதை சொல்லும் பாங்கு  மற்றும் அவரது அசாத்திய நேர்த்தியின் (Perfection) முன் அடிபட்டு போய்  விடுகிறது.

 இடைவேளையிலேயே என்னா மாதிரி நடிகன்யா தனுஷ்.. என்ன ஒரு அற்புத இயக்குனர்யா வெற்றிமாறன் என பிரமித்து போயிருந்தேன். படம் முடிந்து வரும்போதும் மீண்டும் அதே எண்ணம் தான் எட்டி பார்த்தது !

இறுதியில் தனுஷ் தன் மகனிடம்

"நம்ம கிட்டேர்ந்து அவங்க நிலத்தை பிடுங்கலாம். ஆனா படிப்பை பிடுங்க முடியாது; நல்லா படிச்சுக்க ; படிச்சு நீ ஒரு பதவிக்கு வந்தா - அவங்க நமக்கு பண்ண விஷயங்களை நீ பண்ணாதே " என்பதில் தேவர் மகன் சாயல் மிக லேசாக இருந்தாலும் (போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கய்யா) - படத்திற்கு அதை விட அருமையான முடிவும், செய்தியும் இருக்க முடியாது .

அசுரன் .. அசத்தல் !

Thursday, September 5, 2019

வானதி டீச்சர்

        பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் பார்த்திருக்கிறீர்களா? பள்ளி மாணவர்களுக்கும்- ஆசிரியைக்கும் உள்ள அன்பை கவிதையாய் சொன்ன அற்புதமான படம் அது. படத்தில் வரும் ஷோபா டீச்சர் போல ஒவ்வொருவருக்கும் இளம் வயதில் ஒரு டீச்சர் இருந்தே தீருவார். எங்களுக்கு அது ..வானதி டீச்சர் !

ஆறாவது, ஏழாவது, எட்டாவது - மூன்று வருடமும் எங்களுக்கு அறிவியல் எடுத்தார். அறிவியல் கான்செப்டுகளுக்கும் எனக்கும் அன்று முதல் இன்று வரை காத தூரம். ஆயினும் அந்த மூன்று வருடமும் அறிவியலில் முதல் மார்க் எடுத்தேன் என்றால் அது வானதி டீச்சருக்காக !

எனது இரு அண்ணன்கள்- அக்கா அனைவரும் அதே பள்ளியில் படித்திருந்தனர். மூவரும் நன்கு படிப்பவர்கள் என்பதால் அதே குடும்பத்தை சேர்ந்த நானும் நன்கு படிப்பேன் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. அது ஒரு சுமையாய் என் மீது இறங்கியது. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியதாகி விட்டது !

அறிவியலுக்கு வானதி டீச்சர் என்றதும் அண்ணன்களும் அக்காவும் சொன்னது : " அப்டியா ..அப்ப அந்த பாடத்தை பத்தி கவலைப்பட வேண்டாம்" .

படம்: இணையத்திலிருந்து
வானதி டீச்சர் புடவை கட்டியிருக்கும் விதமே மிக கண்ணியமாய் இருக்கும். ரெண்டுங்கெட்டான் வயது பசங்க - அவங்க மனசில் சலனம் வரக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அதில் இருக்கும்.

பாடத்தை தவிர வேறு விஷயம் பக்கம் அதிகம் போக மாட்டாங்க. ஆனா செம ஹியூமர் சென்ஸ் ! டக்குன்னு அந்த நேரத்துக்கு தகுந்த ஜோக் அடிப்பாங்க ! (வேறு சில டீச்சர்களும் ஜோக் அடிப்பார்கள் எனினும் அது தயாரிக்கப்பட்ட ஜோக்காய் இருக்கும். அந்த டீச்சர்கள் அடுத்தடுத்த வருஷமும் அந்த இடத்தில் அதே ஜோக்கை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். )

வானதி டீச்சரின் ஜோக் எல்லாருக்கும் புரிஞ்சிடாது. கொஞ்சம் உலக விஷயமும், புத்தக அறிவும் இருந்தால் தான் முழுசா புரியும். உதாரணமாய் அரசியல் வாதிகளுக்கு இருக்கும் பட்ட பெயரை வைத்து யாரையாவது கிண்டல் செய்வார்கள்.  அந்த நேரத்தில், அந்த இடத்தில் ஏன் அந்த பெயர் சொல்கிறார்கள் என்பது வகுப்பில் சிலருக்கு தான் புரியும்.

கிளாசில் தப்பு பண்ணாலோ, ஒழுங்கா பதில் சொல்லாட்டியோ டீச்சர் கிள்ளுவது பயங்கரமா வலிக்கும். வயிற்றில் உள்ள சதையை ரெண்டு விரலால் பிடிச்சு நல்லா கிள்ளுவாங்க. ஓரிரு முறை பாடம் நடத்தும் போது பக்கத்தில் பேசி அப்படி கிள்ளு வாங்கிருக்கேன். நன்கு வளர்ந்த பெரிய பையன்களை அப்படி கிள்ள மாட்டாங்க. "டீச்சர் நம்மளை கிள்ள மாட்டாங்க இல்ல" என்று சிரிப்பார்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு மட்டும் ஸ்கேல் பேசும் !

என்றைக்குமே பத்துக்கு மூன்று ஆசிரியர்கள் தான் நன்கு பாடம் நடத்துபவர்களாய் இருக்கிறார்கள். வானதி டீச்சர் நடத்தும் அறிவியல் பாடம் வீட்டில் நான் படித்த மாதிரி நினைவே இல்லை. கிளாசிலேயே நடத்தி, பாடத்தை முழுசாய் புரிய வைத்து அங்கேயே சொல்லியும் காட்டி விடுவோம். வீட்டில் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.

நம்மை விட பெரியவருக்கு நன்றி சொல்லணும்னா "Thank You" ன்னு சொல்லணும். நமக்கு சரி சமமான அல்லது குறைந்த வயது ஆட்கள் என்றால் " தேங்க்ஸ்" அப்படின்னு சொல்லலாம் என டீச்சர் சொல்லி தந்திருந்தார். ஒரு முறை அலமேலு என்கிற வயதான டீச்சர் தந்த ஒரு பொருளை திரும்ப தந்து விட்டு " தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு" என்றார் வானதி டீச்சர். வகுப்பில் எல்லாரும் பார்க்கும் போது டீச்சரிடம் கேட்டேன் " அலமேலு டீச்சர் உங்களை விட வயசானவங்க ஆச்சே. நீங்க எப்படி தேங்க்ஸ் சொல்லலாம்? தேன்க் யூ தானே சொல்லணும்?"

சிரித்து விட்டு டீச்சர் சொன்னார் : " நீ என்னை விட சின்னவன் இல்லையா? அதான் உன்னிடம் தேங்க்ஸ்ன்னு சொல்றேன்; நீ அவங்களிடம் சொல்லும் போது தேன்க் யூ ன்னு சொல்லிடு"

டீச்சர் முதலில் தவறு செய்து விட்டு அப்புறம் சமாளித்தார் என்றாலும், அவர் சமாளித்த விதம் அவ்வளவு அழகாய் இருந்தது !

எனது அக்காவிற்கு மருத்துவ படிப்புக்கு சீட் கிடைத்த போது வானதி டீச்சரை பார்த்து ஸ்வீட் கொடுத்து வர டீச்சர் வீட்டுக்கு என்னை அனுப்பியது இன்னும் நினைவில் இருக்கு.

முதல் முறை அப்போது தான் அவர்கள் வீட்டுக்கு செல்கிறேன். மிக சிறிய வீடு. இனிப்பை பெற்று கொண்ட அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ! தான் அறிவியல் சொல்லி கொடுத்த பெண் இன்று டாக்டர் ஆக போகிறார் என்று ஆனந்தம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. வகுப்புகளில் டீச்சர் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்து நான் பார்த்ததில்லை.

அதன் பின் அவ்வப்போது டீச்சருக்கு எங்கள் ஊர் லைப்ரரியில் கதை புத்தகம் எடுத்து தர அவர்கள் வீட்டுக்கு போவேன். டீச்சருக்கு ஒரே மகன். என்னை விட நான்கைந்து வயது சிறியவன். கணவர் எதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சுஜாதா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரின் கதைகளை தான் டீச்சர் மிக விரும்பி படிப்பார். இந்த இருவர் எழுதிய புத்தகங்களை தான் எடுத்து வர சொல்லுவார். சுஜாதா புத்தகங்கள் நான் அதிகம் வாசிக்க ஆரம்பித்ததும் இந்த கால கட்டத்தில் தான்.

பொதுவாய் ஒரு வருடம் முடிந்து அடுத்த வகுப்பு போகும் போது சென்ற வருடம் ஏழு "ஏ' வில் அறிவியல் எடுத்தவர்கள் இவ்வருடம் ஏழு " பி" க்கு அறிவியல் எடுப்பார்கள். எட்டாவது செல்லும் போது அப்படி பார்த்தால் வானதி டீச்சர் எடுக்க மாட்டார்; வேறு யாரோ வரவேண்டும். இதை ஏழாவது படிக்கும் போதே ஒரு முறை கேட்டோம் " அடுத்த வருஷம் நீங்க வர மாட்டீங்களா டீச்சர் ? " " ஆமா அடுத்த வருஷம் வேற டீச்சர் அறிவியலுக்கு வருவாங்க " என்றார்.

ஆனால் எட்டாவது அறிவியல் முதல் வகுப்புக்கு டீச்சரே வந்த போது சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனோம். பள்ளியில் எப்படி அந்த முடிவு எடுத்தார்களோ தெரியாது ஆனால் டீச்சர் எங்கள் வகுப்புக்கு அவர்கள் தான் எடுக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டு வந்ததாக நாங்கள் உறுதியாக நம்பினோம்.

அந்த பள்ளியை விட்டு ஒன்பதாம் வகுப்பு நான் வேறு பள்ளிக்கு மாறி விட்டேன். அதன் பின் டீச்சரை பார்ப்பது, பேசுவது எல்லாம் குறைந்து விட்டது. ஆனால் நண்பர்கள் நந்து, மதுவிடம் டீச்சர் பற்றி அவ்வப்போது விசாரிப்பேன்

எனக்கு திருமணம் நிச்சயமான போது, நண்பர்கள் அனைவரும் வெளியூரில் செட்டில் ஆனதால் ஊரில் பத்திரிக்கை வைக்க நான் செல்லவே இல்லை. அப்பாவும் கூட டீச்சருக்கு நியாபகமாய் பத்திரிகை வைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் வெளியூரில் திருமணமாகி பின் நானும், என் மனைவியும்  ஊரில் இருந்த சில மணி நேரங்களில் சரியாக வீட்டுக்கு வந்து டீச்சர் என்னை ஆசிர்வாதம் செய்தார்கள். என்னிடம் இருக்கும் டீச்சரின் ஒரே புகைப்படம் அன்று எடுத்தது தான். எனக்கு மனைவியுடன் டீச்சர் காலில் ஆசி வாங்கிய போது ஏனோ அழுகையே வந்து விட்டது. ஒரு நல்ல மாணவன் - நல்ல ஆசிரியரின் மனதில் என்றும் இருப்பான் என்பதை, டீச்சர் என்னை அன்று வாழ்த்த வந்தது உணர்த்தியது .

டீச்சரை கடைசியாய் நான் பார்த்தது அன்று தான். அவர்களை பார்த்து 15 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின் டீச்சரின் கணவருக்கு விபத்தில் கால்களை அகற்றும் படி ஆனது. டீச்சர் அந்த கஷ்டமான காலத்தை தாண்டி வந்தார் என்று நண்பர்கள் மூலம் அறிந்தேன். எனக்கு அந்த தகவல் பல மாதங்கள் கழித்து தான் சென்னையில் தெரிந்தது. டீச்சர் இன்று ரிட்டையர் ஆகி விட்டார். இப்போது எங்கள் ஊரில் வசிக்க வில்லை. எங்கு வசிக்கிறார் என தெரியாது.

இப்போது நரைத்து போய்,வயதான தோற்றத்தில் வானதி டீச்சர் இருக்கலாம். அவரை அப்படி பார்க்க விரும்பாததே கூட நான் பல ஆண்டுகளாய் பார்க்க முயலாததன் காரணமாய் இருக்க கூடும். இன்றும் வானதி டீச்சர் என்றால் எட்டாம் வகுப்பு கிளாஸ்ரூமில் அவர் கரும்பலகை அருகே நிற்கிற சித்திரம் தான் நினைவுக்கு வருகிறது !

இந்த முறை ஊருக்கு செல்லும்போது டீச்சர் எங்கு வசிக்கிறார் என நிச்சயம் விசாரிக்க வேண்டும் என தோன்றுகிறது. டீச்சரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் " உங்களை பற்றி நான் எழுதியிருக்கேன்" என சொல்லணும்;  பின் அவர் விரும்பினால் இந்த பதிவின் பிரிண்ட் அவுட் அவருக்கு தரவேண்டும். வாசித்தால் மகிழ்வார் என்று நினைக்கிறேன்.

ஆண்டவன் அந்த வாய்ப்ப்பை தருகிறானா என்று பார்ப்போம் !

இந்த களிமண்ணை ஒரு உருவமாய் மாற்றிய எத்தனையோ கைகளில் வானதி டீச்சரின் கையும் ஒன்று ! அவர் சொல்லிகொடுத்த விஷயத்துடனே இப்பதிவை முடிக்கிறேன் :

தேன்க் யூ டீச்சர் !

Thursday, August 15, 2019

கோமாளி சினிமா விமர்சனம்

16 வருடங்கள் கோமாவில் இருக்கும் (ஜெயம்) ரவி திடீரென ஒரு நாள் விழிக்க இத்தனை வருடத்தில் நடந்த மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோமாளி

பிளஸ் 

ட்ரைலர் மட்டும் பார்த்து பல்பு வாங்கிய படங்கள் நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும்.  நானும், பெண்ணும் ட்ரைலர் பார்த்து விட்டு காமெடி படம் என்று டிக்கெட் போட்டோம் !  எந்த ரிவியூவும்  இல்லாம, ட்ரைலர் பார்த்து போறோம்..சொதப்பாம இருக்குணும் என்று சொல்லியபடி இருந்தேன்..

காமெடி !  அது தான் படத்தின் பிளஸ். முதல் பாதியில் சிரிக்க  வைக்க எத்தனையோ சூழல்கள்.. அனைத்தையும் முடிந்தவரை சரியே பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.

வாட்ஸ் அப், பேஸ் புக் என பலவற்றை கிண்டல் அடித்தாலும், கூகிள் மேப்பை கிண்டலடிக்கும் போது தியேட்டர் குலுங்குகிறது

ஐ. டி வேலை செய்வோர், கூவத்தூர் ரிசார்ட் என பல விஷயங்கள் மக்கள் ரசிக்கும் வண்ணம் நக்கல் அடிக்கிறார் இயக்குனர்

இறுதியில் சென்னை வெள்ளத்தில் சொல்கிற மெசேஜ் - தியேட்டரில் மக்களிடம் நன்கு எடுபடுவதை காண முடிந்தது..

சில நெருடல்கள் 



ஒரு படம் நிச்சயம் கதை என ஒன்று  சொல்லியே ஆகணுமா?

கருத்து ? அது இருந்தே தான்  தீரணுமா?

இயக்குனர் அப்படித்தான் நினைக்கிறார் போலும்.

உள்ளத்தை அள்ளித்தா என்று ஒரு படம் - கதை என்று பேருக்கு எதுவோ ஒன்று இருக்கும்.. காமெடி மட்டும் காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கும்..

கிட்டத்தட்ட அந்த அளவு அமர்க்களமாய் இப்படத்தை கொண்டு சென்றிருக்கலாம்.. அழகான ஒரு பிளாட் கிடைத்து காமெடியும் இயக்குனருக்கு நன்றாகவே வருகிறது.. காமெடியில் முழுக்க பவுண்டரி, சிக்ஸர் என அடித்திருந்தால் இது ஒரு  மறக்க முடியாத படமாகியிருக்கும் .. ஆனால் இயக்குனரின் "கதை சொல்கிறேன்- கருத்து சொல்கிறேன்" என்ற "நல்லெண்ணத்தால்" அது நடக்காமல்  போகிறது.

மொத்தத்தில் 

இரண்டரை மணி நேர படத்தில் 45 நிமிடமாவது சிரிப்புக்கு காரண்டி.. அந்த நேரம்  இன்னும் அதிகமாய் இருந்திருக்கலாம்.. அது தான் வருத்தமே !

அதிக எதிர்பார்ப்பின்றி பார்த்தால், ஆங்காங்கு மனம் விட்டு சிரிக்கலாம் !

அண்மை பதிவு: நேர்கொண்ட பார்வை விமர்சனம்  இங்கு

Wednesday, August 14, 2019

நேர்கொண்ட பார்வை விமர்சனம்


ந்தியில்  வெளியான பிங்க் தமிழில்  "நேர்கொண்ட பார்வை " யாக !



கதை 

ஒரு பார்ட்டியில், சில இளம் ஆண்களும், பெண்களும் குடித்து விட்டு  பேசிக்கொண்டிருக்க, இளைஞன் -ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயல- அவள் பாட்டிலால் ஓங்கி அடித்து விடுகிறாள். பையன் பெரிய  இடம்.போலீஸ் கேஸ் ஆனபின், எல்லாம் தலை கீழ் ஆகிறது ...பெண்களுக்கு ஆஜர் ஆகி வாதிடுகிறார் அஜீத். நீதி கிடைத்ததா என்பதை இறுதி பகுதி கோர்ட் காட்சிகளால் சொல்கிறது

பிங்க் Vs நேர்கொண்ட பார்வை 

இந்த ஒப்பிடலை தவிர்க்க முடியாது.

இரண்டையும் பார்த்தோரில் சிலருக்கு பிங்க் ஏற்படுத்திய  தாக்கம் அதிகமாக இருக்கும் ! காரணம்.. கதை மற்றும் முதல்  முறை பார்க்கும் போது - அது தரும் எழுச்சி. Freshness !

தமிழில் நமக்கு பெரும்பாலும் என்ன  நடக்கும் என தெரிந்து விடுவது சிறு குறை. ஆயினும், சப் டைட்டில் படிக்கும் பிரச்சனை இன்றி நேரடியே ரசிக்க முடிவதால்,  பலருக்கும் தமிழ் version பிடிக்கவே செய்யும்

பிளஸ் 

அஜீத் !  இப்படத்தில் அஜீத் இல்லாவிடில் இந்த அளவு ரீச் மற்றும் வெற்றி கிடைத்திருக்காது. ஒரு பெரிய நடிகர் இந்த செய்தியை சொன்னதால் தான் அது  பேசப்படுகிறது. ரொம்ப subdued  ஆக - underplay செய்து நடித்துள்ளார் அஜீத்

இடைவேளை காட்சி பட்டாசு ! அஜீத் ரசிகர்களால்  சீட்டில் அமரவே முடியாத படி அந்த 10-15 நிமிடம் ரணகளப்படுகிறது. இப்பகுதி முழுக்க தமிழில் அஜீத்திற்காக மட்டும் சேர்க்கப்பட்டது !    அட்டகாசம் !



பின்னணி இசை - அடிநாதமான அற்புத கதைக்கு அடுத்து ரொம்பவும் அசத்துவது பின்னணி இசை தான். இண்டெர்வெல் பிளாக்கிற்கு தரும் நரம்பு புடைக்க வைக்கும் இசை - எமோஷனல்- த்ரில் காட்சிகளுக்கு தரும் இசை - என ஒவ்வொன்றும் ரசிக்க  வைக்கிறது.பாடல்கள் சுமார் தான் !

ஷ்ரத்தா ஸ்ரீநாத் - அட்டகாசமான role - முழுதும் உள்வாங்கி அனாயாசமாக நடிக்கிறார். பாத்திரமாக மட்டுமே பார்க்க முடிகிறது

இயக்கம் - இன்று 10 படம் வந்தால், 1 அல்லது 2 தான் போட்ட காசை எடுக்கிறது.இந்த சூழலில் வினோத் என்ற இயக்குனர் ஒன்றொக்கொன்று சம்பந்தமே இல்லாத ஜானரில் 3 படமெடுத்து மூன்றும் ஹிட் ஆவதெல்லாம் கிட்டத்தட்ட இமாலய சாதனை ! (முதல் 2 - சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம்  ஒன்று). உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவை இரண்டும் இப்படத்தை விட இன்னும் அசத்தியதன் காரணம் - freshness தான். இப்படத்தில் தமிழுக்கு  தேவையான விதத்தில் மிக சிறு மாறுதல்கள் செய்ததும், முக்கிய செய்தியை எவ்விதத்திலும் பாழாகாமல் சரியே சேர்த்த விதத்திலும் வினோத் வெல்கிறார்

எனக்கு தெரிந்து இதற்கு  முன் முதல் 3 படங்களும் ஹிட் ஆன இயக்குனர்கள் - பாரதி ராஜா மற்றும் ஷங்கர்.வினோத்தை அவர்கள் லெவலில் நிச்சயம் வைக்க முடியாது. ஆனால் தமிழில் நம்பிக்கை தரும் இளம் இயக்குனர் பட்டியலில் அவசியம் சேர்கிறார்

சில சிறு குறைகள் 

பிக் பாஸ் புகழ் அபிராமி இப்படத்திலும் அழுகிறார். மற்ற இரு பெண்களை விட மிக, மிக  முதிர்ந்தவராய்  தெரிகிறார்.


ரங்கராஜ் பாண்டே - எப்படி இத்தனை பவர்புல் பாத்திரம் ஒரு புதியவருக்கு தந்தாரோ இயக்குனர். பாண்டே தன்னால் இயன்ற வரை  செய்திருந்தாலும், அஜீத் எதிரில் இத்தனை புதியவர் எனும்போதே முடிவு யாவருக்கும் தெரிந்து விடும். பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற வலுவான நபர் நடித்திருக்க வேண்டிய பாத்திரம் இது.

கோர்ட்டில் - வேறு   வழக்குகளே இல்லையா? வந்ததும் முதல் வேலையாய் இந்த வழக்கை கூப்பிடுகிறார்கள்.  இந்த வழக்கு முடிந்ததும்  பல நேரம் நீதிபதி எழுந்து சென்று விடுகிறார் !

பெண்களுக்கான கையேடு என அஜீத் அவ்வப்போது சொல்வது " பெண்களை சமூகம் எப்படி பார்க்கிறது" என்ற எள்ளலுடன் கூடிய விஷயம் என எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் !. அவற்றை சிலர் சீரியஸாக கூட எடுத்திருக்கலாம் !

நிறைவாக

ஒழுக்கம் என்பது இரு பாலாருக்கும் பொது - அது பெண்களுக்கு மட்டுமே ஆனது  அல்ல -

ஒரு பெண் நோ என்று சொன்னால் - அதற்கு மேல் தொடர்வது யாராயினும் கூடாது

இந்த இரண்டு செய்தியும் மிக தெளிவாய் வந்து சேர்கிறது !

படம்  பெண்கள் அனைவரையும்  கவர்வது - வெளிப்படையாய் தெரிகிறது. பெண்கள் விரும்பும் படம்  வெற்றியடைந்தே தீரும்.

பிங்க் பார்க்காதோர் - மிஸ் பண்ணவே பண்ணாதீர்கள் ! ரொம்ப ரொம்ப ரசிப்பீர்கள் !

பிங்க் பார்த்தோறும் கூட - அஜீத்தின் அதிரடி + டயலாக் இரண்டிற்காகவும் நிச்சயம் காணலாம்  !

பிங்க் -  இந்தி பட விமர்சனம் : இங்கு 

Sunday, June 16, 2019

கொலைகாரன் சினிமா விமர்சனம்

கதை 

முதல் காட்சியில் ஒரு கொலை நடக்கிறது - அடுத்த காட்சியில் ஒருவர் சரண்டர் ஆகிறார்..

போலீஸ் அதிகாரி அர்ஜுன் துப்பறியும் போது மீண்டும் மீண்டும் முடிச்சுகள் விழுகின்றன

கடைசி 15 நிமிடத்தில் தான் முழு கதையும் புரிபடுகிறது...



திரைக்கதை 

த்ரில்லர் கதைக்கு - திரைக்கதை மிக முக்கியம்.

2 டூயட் - யோசிக்காமல் தூக்கியிருக்கலாம் (படத்தின் நீளம் குறைவு.. அது இன்னும் குறைந்திருக்கும் )

சிக்கலான கதையை புரிந்து கொள்ள - சாதாரண பார்வையாளன் சற்று சிரமப்பட வேண்டியுள்ளது

கொலை - யார் செய்தார் - எப்படி செய்தார் என ஒரு லாஜிக் - தொடர்பாக சில காட்சிகள் வருகின்றன... பின்  அதற்கு மாற்றாக இன்னொரு லாஜிக்.. காட்சிகள் உடனே மாறும்போது சற்றே குழுமபித்தான் போகிறோம். படத்தின் அடிநாதம் மற்றும் பிளஸ் ஆக இருக்க வேண்டிய இந்த விஷயம் சிறிது குழப்பம் விளைவிப்பது தான் பிரச்சனையே

நடிப்பு 

அர்ஜுன் தான் படம் முழுதும்  ஷார்ப் ஆன நடிப்பால் கவர்கிறார். விஜய் ஆண்டனிக்கு எவ்வித முகபாவமும் காட்டாமல் இறுக்கமாய் இருக்கும் பாத்திரங்கள் .....தானாய் . வருகின்றனவா...அல்லது டிசைனே அப்படியா தெரியவில்லை.



புதுமுக ஹீரோயின் அழகு ! குறிப்பாக அந்த மூக்கு !

இசை, இயக்கம் இன்னபிற 

இசை சற்றே இரைச்சல் . இயக்கம் - குழப்பத்தை குறைத்து சுவாரஸ்யம் தந்திருந்தால் பெரும் வெற்றிப்படமாகியிருக்கும்

த்ரில்லர் விரும்பிகள் - ஒரு வித்தியாச அனுபவத்திற்காய் ஒரு முறை காணலாம் இந்த கொலைகாரனை !

Saturday, June 8, 2019

தடம்- வெள்ளை பூக்கள் - K 13 - மூன்று த்ரில்லர் படங்கள் ஒரு பார்வை

க்ரைம் த்ரில்லர் மிகப் பிடித்த ஒரு genre  ஆக மாறி வருகிறது. மலையாள படங்கள் தான் இந்த ஆர்வம் வர காரணம். அவ்வகையில் இவ்வருடம் தமிழில் வெளிவந்த 3 க்ரைம் த்ரில்லர்கள் பற்றிய ஓர் பார்வை..

வெள்ளை பூக்கள் 

நடிகர் விவேக்கை ஹீரோவாக - ஒரு துப்பறியும் நிபுணராக வடிவமைத்துள்ளார் இயக்குனர். பார்க்க வித்யாசமாக உள்ளது. அவரும் முடிந்த வரை ஜஸ்டிபை செய்துள்ளார்.


அமெரிக்காவில் தொடர் கொலைகள்.... இவற்றை செய்வது ஒரே ஆளா, ஒரு கூட்டமா.. தமிழகத்தில் இருந்து ரிட்டையர் ஆகி - அமெரிக்கா சென்ற விவேக் - இதனை கண்டறிகிறார்.

நல்ல விஷயங்கள் முதலில்...

அமெரிக்காவின் அழகை காமிரா அள்ளிக்கொண்டு வந்துள்ளது.

அந்த கில்லரை சத்தியமாக நம்மால் கணிக்க முடியாது. இத்தனைக்கும் நம் கண் முன்னே பலமுறை இருக்கும் ஒரு நபர். திரைக்கதையில் மற்ற ஆட்கள் மீது சந்தேகம் வரும்படி செய்தாலும், இந்த நபரை அழகாக ஒதுக்கி விடுகிறார்கள். கடைசி 10 நிமிடத்தில் எல்லா முடிச்சுகளுக்கும் உள்ள தொடர்பு, கொலைக்கான காரணம் இவற்றை சொல்லும்போது அனைத்துக்கும் உள்ள லிங்க் புரிகிறது.

படத்தின் பெரும் பலவீனம் - மிக மிக மிக மெதுவாக செல்வது. விவேக், சார்லி, போலீஸ் ஆபிசர் என பலரும் பல காட்சிகளில் நடந்து கொண்டே இருக்கிறார்கள். கொஞ்ச நஞ்சமல்ல.. சில பல கிலோ மீட்டர்கள் !

இறுதி காட்சியில் விடை தெரியும் வரை குழப்பமாகவே செல்கிறது.. சற்று தெளிவில்லாமலும் . திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் - இன்னும் ஷார்ப் ஆக இருந்திருக்கும்

நேரம் இருப்பின், ஒரு முறை - பொறுமையாய் காணலாம் ..

K -13

த்ரில்லர் படங்களில் ஒரு நல்ல விஷயம் - படம் சுமார் என்றால் கூட - சஸ்பென்ஸ் மட்டுமே இறுதி வரை நம்மை பார்க்க வைத்து விடும். என்ன தான் சொல்றானுங்க பார்க்கலாம் என.. அத்தகைய ஒரு சுமார் ரக த்ரில்லர் தான் K -13



வித்யாசமாக செய்ய நினைத்த முயற்சி தான். குறிப்பாக படம் முடிந்து விட்டது என நினைத்த பின் வரும் கடைசி 2-3 நிமிடங்கள் அனைத்தையும் தலை கீழ் ஆக்குவது சூப்பர். ஆனால் அந்த இறுதி சில நிமிடங்களுக்காக படம் முழுதும் பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது..

தடம் 

இந்த வருடத்தில் மட்டுமல்ல, இதுவரை தமிழில் வந்த க்ரைம் த்ரில்லர்களில் -one of the  best  என நிச்சயம் கூறலாம்.


ரொம்ப வித்யாசமான கதை- அதைவிட வித்யாசமான திரைக்கதை- எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போல் கிளைமாக்ஸ் - படம் பார்த்து முடித்ததும்.... செய்த அடுத்த வேலை - யார் இயக்குனர் - இவர் இதற்கு முன்  என்ன படம் எடுத்தார் - என தேடி தேடி படித்தது தான்

க்ரைம் த்ரில்லருக்கு ஒரு திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என பாடமே எடுக்கிறது இப்படம். போலவே கிளைமாக்ஸ் டுவிஸ்ட். அமர்க்களம்.

அருண்விஜய்க்கு அற்புதமான வாய்ப்பு. மனிதர் நன்றாக பயன்படுத்தியுள்ளார்.

படத்தில் ரொம்பவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் சோனியா அகர்வால் காரெக்டர். கணவனை இழந்த இவர் - தினம் கிளப்புக்கு சென்று சீட்டாடுகிறார். மகனை அருகில் வைத்தபடியே. இத்தனைக்கும் அவர் பாத்திரம் பணக்காரர் கூட கிடையாது. அவருக்கு ஒரு அடிக்ஷன். அது தேவையாக இருக்கிறது  !

கதை மற்றும் அதன் நெளிவு சுளிவு பற்றி நிறைய சொல்லி நீங்கள் படம் பார்க்கும் போது உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்ப வில்லை;

இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று.. தவற விடாமல் பாருங்கள் !

Friday, May 17, 2019

மிஸ்டர் லோக்கல் சினிமா விமர்சனம்

திமிர் பிடித்த பணக்கார ஹீரோயினை -  அடக்கி ஒடுக்கும் மிடில் கிளாஸ் ஹீரோவின் கதை..எம்ஜியார், ரஜினி துவங்கி எத்தனையோ ஹீரோக்கள் செய்த ஓர் டெம்ப்லேட்  தான் ..ஒரே வித்யாசம்..இதுவரை வந்த எந்த படங்களிலும் இல்லாத - மரண மொக்கையாக வந்துள்ளது மிஸ்டர் லோக்கல் !



நானும் ஒரு காட்சியாவது சுவாரஸ்யாமாக அல்லது குறைந்த பட்சம் சிரிக்க வைக்கும் படி இருக்காதா - என கடைசி வரை பார்த்தேன்.. ஊஹூம்..  சிவகார்த்திகேயன் போல அரை டஜன் காமெடியன்கள் இருந்தும் சிரிப்பு துளி கூட வரலை...

லாஜிக். . அப்படின்னா?? மியூசிக்....காது கிழிய கொடுக்கும் சவுண்ட் தானே இருக்கு.. இருக்கு !

இத்தகைய படத்தை பார்த்து தியேட்டரில் ஓடும் என பணம் போடும் டிஸ்ட்ரிபியூட்டர்களை என்னவென்று சொல்வது ! ஐயோ பாவம் !

நயன் - சிவா என மார்க்கெட் உள்ள இருவர் இருக்கும்போது குறைந்த பட்ச சுவாரஸ்யம் +காமெடி இருந்தாலே  தப்பித்திருக்கலாம்.ராஜேஷ் சரக்கு தீர்ந்து விட்டதா? ஓடிய படங்கள் எல்லாம் சந்தானத்தால் மட்டும் தானா?

சிவகார்த்திகேயனுக்கு வழக்கமாய் ஜால்றா அடிக்கும் டிவி சானல் ஒன்று - சிவாவின் படங்களில் சிறந்த  அறுவை -சீம ராஜாவா -மிஸ்டர் லோக்கலா என பட்டிமன்றம் வைக்கலாம். நிச்சயம் இப்படம் தான் ஜெயிக்கும்

கடைசியாய் இந்த அளவு ரம்ப படம் என்ன பார்த்தோம் என நினைவில்லை ..கூட ஒரு சிவகார்த்திகேயன் fan ..அதனால் செல்லும்படி ஆனது ..ஹூம்

டிவியில் போட்டால் கூட தயவு செய்து பார்க்காதீர்கள். பொன்னான 3 மணி நேரம்,  மின்சாரம் இரண்டும் save ஆகும் ; தலைவலி யில் இருந்து தப்பலாம் ..

உங்களுக்கு யாரேனும் எதிரிகள் இருந்தால், யாரையும் வசமாய் பழி வாங்க நினைத்தால்   - இப்பட டிக்கெட் வாங்கி தரவும்...சீக்கிரம்.. சீக்கிரம்...படம் தியேட்டரை விட்டு போகும் முன் !

Sunday, March 31, 2019

சூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்

வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் 4 கதைகள்... ஓரிரு புள்ளிகளில் அவை சந்திக்கின்றன...அதற்கு மேல் கதையை சொல்வது சரியாய் இருக்காது

சாதாரண மனிதர்கள் வாழ்வில் - ஒரே நாளில் நடக்கும் சற்றே அசாதாரணமான சம்பவங்கள் தான் படம்.



முதல் பாதி பல இடங்களில் சன்னமாய் சிரிக்க வைத்தது. பாத்திரங்கள் அனைவரும் ஒவ்வோர் பிரச்சனை அல்லது சிக்கலில் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லா சூழலிலும் புன்னகைக்க வைக்கும் படி பல சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது

"ஆம்பளைன்னா அப்படி தான் இருப்பான். எப்படி ரெண்டாவது பொண்டாட்டி கட்டிட்டு வந்துட்டான் பாத்தியா ?" என விஜய் சேதுபதி பற்றி (புரியாமல்) உளறும் தாத்தா, மிஷ்கின் மற்றும் அவரின் உதவியாளர் பேசும் பிரார்த்தனை வசனங்கள் (நாங்க சாட்சி )...

பல காட்சிகளில் காட்சிக்கு சம்பந்தம் இல்லாமால் - டிவி அல்லது தெருவில் ஒலிக்கும் ஒலி - மிகுந்த முரணாக சிரிப்பை வரவைக்கிறது.. வயசு பசங்க அடி வாங்கும்போது டிவியில் ஜெமினி கணேசன் " அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சுமா" என சீரியஸாக பேசி கொண்டிருக்கிறார்.. பழைய பட்டு புடவைங்க உங்க வீட்டுக்கே வந்து வாங்கிக்கிறோம் என சீரியஸ் காட்சியில் ஒலிக்கும் குரல்.. என முதல் பாதியில் பல இடங்கள் புன்னகைக்க வைக்கின்றன

இதே பாத்திரங்கள் ... பிற்பகுதியில் பிரச்சனைகள் சந்திக்கும் போது எந்த காமெடியும் இன்றி சீரியஸாக படத்தை தருகிறார் இயக்குனர். இது தான் பெரும் ஏமாற்றத்தையம், வறட்சியையும் தருகிறது

முதல் பகுதி போல் பிற்பகுதியில் ஆங்காங்கு காமெடி - ரசிக்கும்படி வைத்திருந்தால் இப்படம் மறுபடி பார்க்க மாட்டோமோ என எண்ண வைத்திருக்கும்

நல்ல விஷயங்களுக்கு மறுபடி வருவோம்..

விஜய் சேதுபதி, சமந்தா, காயத்ரி, அஸ்வந்த் (சிறுவன்), மிஷ்கின் என பல்வேறு நடிகரின் பாத்திரம் மற்றும்  நடிப்பு ரசிக்க வைக்கிறது

குறிப்பாய் விஜய் சேதுபதி மகனாக வரும் ராசு குட்டி அசத்துகிறான். தந்தையிடம் அவன் கேட்கும் பல கேள்விகள் ஷார்ப்

பாட்டு மற்றும் சண்டை இல்லாமல் 2 மணி நேரம் 50 நிமிட படமெடுக்க எவ்வளவு தைரியம் வேண்டும் !!

நெகட்டிவ் 

காமெடியால் முதல் பாதி போனது தெரியா விட்டாலும் இரண்டாவது பகுதியில் சில காட்சிகள் தேவைக்கும் மேல் நீள்வது அலுப்பை ஊட்டுகிறது

பக்ஸ்  எப்படி ஒரே நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்  .. சமந்தாவையும் நாள் முழுதும் பின் தொடர்கிறார்..??

கெட்ட வார்த்தைகள் பாகத் பாசில் உள்ளிட்ட சிலர் சகஜமாக பேசிய வண்ணம் உள்ளனர். குறைத்திருக்கலாம்

கிளைமேக்ஸ் எந்த விதத்திலும் மனதில் பதிய வில்லை. நிச்சயம் பெட்டர் ஆக முடித்திருக்கலாம் 

மொத்தத்தில்

முதல் பாதி அமர்க்களம். இரண்டாம் பாதி ஏமாற்றம் !

Sunday, March 24, 2019

சென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்

சென்னை vs பெங்களூரு .. தோனி vs கோலி ..அதுவும் நம்ம சென்னையில் முதல் மேட்ச் ..இதை விட அட்டகாசமான விஷயம் இருக்க முடியுமா என்ன..

ஆனால் ஏக பில்ட் அப்பிற்கு பின் நடந்தது ஒரு ஒன் சைடட் மேட்ச் ..பெங்களூரு 70 ரன்னிற்கு ஆல் அவுட் ஆக , சென்னை அதனை 17.3 ஓவரில் தூங்கி கொண்டே அடித்து முடித்தது



நவீன திருவள்ளுவர் ஹர்பஜன் சிங் கோலி , டீ வில்லியர்ஸ், மொயின் அலி - 3 விக்கெட் எடுத்ததுமே - பெங்களூரு 100 கூட அடிக்காது என்பதும் சென்னை வெற்றியும் உறுதியாகி விட்டது

பெங்களூரு செய்த தவறுகள் 

வழக்கமான பிட்ச் என நினைத்து 160-180 முயற்சித்து தொடர்ந்து அடித்து ஆடியது தான் தோல்விக்கு பெரும் காரணம். பார்த்தீவ் படேல் உடன் ஒரு ஆட்டக்காரர் நின்று 15 ஓவர் வரை சிங்கிள் சிங்கிளாய் ஆடியிருந்தாலே 120 -130 வரை ஸ்கொர் வந்து - தோனி கடைசி ஓவரில் வந்து - 15 ரன் அடிக்க காட்டு காட்டும் வரை மேட்ச் nail baiting  ஆக சென்றிருக்கும்



பெங்களூர் பவுலிங் ரொம்ப சுமார். பாட்டிங்கை இன்னும் வலுப்படுத்தியவர்கள் பவுலிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இளம் சைனி சரியான பேஸ்  போடுகிறார். போக போக பார்க்கலாம்

சென்னை நல்லதும் கெட்டதும் 

வெற்றியோடு துவக்கியது , ஸ்பின் வைத்து கலக்கியது , பல டைமன்சன் ஆட்டக்காரர்கள் (வாட்சன், பிரேவோ, ஜடேஜா) உடன் டீமை வடிவமைத்தது எல்லாம்  ஓகே

ஆனால் - 70 ரன்னை அடிக்க 17 ஓவர் எடுக்கணுமா? தோனி இறுதி கட்டத்தில் அவசியம் ஏற்பட்டால் ஒழிய ரன் ரேட் பற்றி என்றும் கண்டு கொள்ள மாட்டார் .. ஜெயித்தால் போதும் அவருக்கு

சென்னை டீமில் எத்தனை பவுலர்கள் .. தீபக் சாஹர், தாக்கூர், பிரேவோ, வாட்சன் என மீடியம் பேஸர்கள் ..ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா, ஜாதவ் என ஸ்பின்னர்கள் ..நேற்று மேட்சில் பிரேவோ மற்றும் தாக்குர் தேவைப்படவே இல்லை.

குறைந்தது ஒரு பேட்ஸ்மேன் கொண்டு வந்திருக்க வேண்டும்..ஒரு பவுலரை குறைத்து விட்டு

போலவே 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் ஆடியது என்ன விதமான strategy என்றே புரியவில்லை.

ஜெயித்ததால்   இந்த குறைகள் பேசப்பட வில்லை; தோற்றால் இவை நிச்சயம் பேசப்பட்டிருக்கும்

இயலும் போது ஐ பி எல்  - சென்னை மேட்ச்கள் அல்லது பிற சுவாரஸ்ய மேட்ச்கள் பற்றி எழுத எண்ணம்.. பார்க்கலாம்
*****
தொடர்புடைய பதிவுகள் :

CSK வென்ற லகான் மேட்ச் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில அனுபவங்கள்


Sunday, February 3, 2019

பேரன்பு சினிமா விமர்சனம்

அத்தியாயம் - 1: கதை 

ஸ்பாஸ்டிக் குழந்தை ஒன்றை தந்தை மம்மூட்டி தனியாக வளர்க்கும் பேரன்பே கதை !



அத்தியாயம் - 2: நடிப்பு 

மம்மூட்டி நன்றாக  நடித்தார் என்பது விராட் கோலி நன்றாக  ஆடினார் என்பதை போல... இரண்டும் நடக்காவிடில்  தான் ஆச்சரியம்.

படம் முழுவதும் மம்மூட்டி கதை சொல்வதாகவே - நாவல் பாணியில் நகர்கிறது

வழக்கம்போல் மிகையில்லாத நடிப்பு.. அற்புத பாத்திரமாக கொண்டு செல்லும் இறுதி காட்சிக்கு முன்  மம்மூட்டி செய்ய இருக்கும் காரியம் நம் மனது பதைத்து விடுகிறது

சோகமான முடிவாக இருக்குமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்க, மிக அழகாக படத்தை நிறைவு செய்கிறார்கள்.

மகளாக வரும் சாதனாவிற்கு தேசிய விருதுக்கு வாய்ப்புகள் அதிகம். ஸ்பாஸ்டிக் பெண்ணாகவே பார்க்கும் வண்ணம் நிறைவு !

சிறு சிறு பாத்திரங்கள் பல அசத்துகின்றன. குறிப்பாக ஸ்பெஷல் ஸ்கூலில் வரும் பையன் ஒருவன் பாத்திரம் .. அற்புதம் !

அஞ்சலி பாத்திரம் மிக புதிரானது. மிக மெதுவாக (தூக்கம் வரும் வாய்ப்பு அதிகம்) துவங்கும் அரை மணிக்கு பின் அஞ்சலி வந்ததும் தான் கதை சுவாரஸ்யமாகிறது

பாபுவை வீட்டிற்கு அழைத்து வரும் மம்மூட்டி அவரிடம் அஞ்சலி பற்றி தொடர்ந்து பேசுவதும், அவர் உம் கொட்டி கொண்டே இருப்பதும்... தியேட்டர் கலகலக்கிறது

அத்தியாயம் - 3: ஒளிப்பதிவு, இசை இன்ன பிற 

முதல் பாதியில் ஒளிப்பதிவு நின்று பேசுகிறது. பாடல்கள் நன்று எனினும் - ராம் படத்தில் நா. முத்துக்குமார் இல்லாத வெறுமை மனதை என்னவோ செய்கிறது.

அத்தியாயம் - 4: ராம் 

இப்படிப்பட்ட கதை எடுக்க நினைத்த தைரியம் பாராட்டுக்குரியது

இரண்டாம் பாதி - மனதை கனக்க செய்துவிடும். மனதில் பாரத்தை ஏற்றிகொண்டே சென்று இறுதியில் இரண்டே நிமிடத்தில் ஒரு தீர்வு சொல்லி நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறார் ராம்  

படம் கமர்சியல் ஹிட் ஆகுமா என்பது சந்தேகமே. விருதுகளை வாங்குவது மட்டும் நிச்சயம் !

பேரன்பு .. நல்ல/ வித்தியாச சினிமாவை விரும்புவோருக்கு மட்டும் ! 

Tuesday, January 15, 2019

பேட்ட சினிமா விமர்சனம்

 ங்கரின் சிவாஜிக்கு பிறகு பக்கா ரஜினி ஸ்டைலில் ஒரு படம்.

பழி வாங்கும்  கதை தான். ஆனால் சொன்ன விதம் வித்யாசம்.

வாவ்.. என்ன ஒரு துவக்கம் !

முதல் பாதி அட்டகாச விருந்து.  அனிருத் பாடல்கள் படத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ரசிக்கவைத்தது



டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்ட முதல் பாதி கண்ணுக்கு குளிர்ச்சி. மெயின் பிளாட்டிற்கு வராவிட்டாலும் கூட முதல் பாதி மிக மிக ரசிக்க வைக்கிறது.

 சிம்ரன் வீட்டில் கலக்கும் ரஜினி -  பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை அடித்து நொறுக்கி விட்டு - அவர் வீட்டிற்கு நேரே சென்று பேசிவிட்டு - வெளியே வந்து அடிவாங்கியோரை நலம் விசாரிக்கும் பாங்கு.. என முதல் பாதியில் ரசித்து சிரிக்க பல காட்சிகள்.. ரஜினி படத்தை ரசிக்க கதையே தேவையில்லை - நல்ல காட்சிகள் போதும் என சொல்கிறது முதல் பாதி

ஆவரேஜ் செகண்ட் ஹாப் 

இரண்டாம் பாதியை- மட்டுமே முழு படமாய் எடுக்கலாம். அவ்வளவு விஷயம் இரண்டாம் பாதியில் வைத்ததால் நீண்ட படமாக தோன்றுகிறது.

முதல் பாதி மிகுந்த நேரமெடுத்து ஷாட் பை ஷாட்டாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் குறித்து அவ்விதம் சொல்ல முடியாது.

மேலும் பிளாஷ் பேக் முடிந்தவுடன் கிளைமாக்ஸ் மூட் வந்துவிடுகிறது. பின் படம் நீள்வது சற்றே அலுப்பு தட்டுகிறது

கிளைமேக்சில் வைத்த டுவிஸ்ட் இல்லாவிடில் இது கார்த்திக் சுப்புராஜ் படம் என்பதே மறந்திருக்கும். இயக்குனர் - எழுத்தாளர் சுஜாதா ரசிகர் போலும். முடிவை நம் ஊகத்திற்கு விடுகிறார். அடுத்த பார்ட் கூட எடுக்க வசதியாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் படத்தை முடிக்கிறார்.


பிற பாத்திரங்கள் 

சிம்ரன் கொஞ்சமே வந்தாலும் கவர்ந்து விடுகிறார்.

த்ரிஷா தான் மிக பாவம்.. ரஜினியுடன் நடித்தார் என்பதை தவிர மற்ற படி சொல்லி கொள்ள ஒன்றுமே இல்லாத ஒரு பாத்திரம். சசிகுமாரும் - சோ - சோ தான்.

வில்லனை இன்னும் கெத்தாய் காட்டியிருக்கலாம். ரஜினி கூட அவரை சுள்ளான் என்று தான் பல முறை அழைக்கிறார். தனுஷ் போன்ற உடல்வாகு கொண்ட நவாஸுதீன்.. நரித்தனத்தில் மட்டுமே வெல்கிறார்.

விஜய் சேதுபதி பாத்திரத்தை பரிதாபப்படும் படி செய்து விட்டனர்.

உண்மையில் ரஜினியை ப்ரமாண்டப்படுத்த மட்டுமே பிற பாத்திரங்கள்.. மற்றபடி அவர்களுக்கு பெரிதாக individuality ஏதும் இல்லை !



அவ்வப்போது பழைய பாடலை பாடும் ரஜினியின் ரேடியோவே ஒரு பாத்திரம் போல தான் வருகிறது. இந்த ரேடியோ அளவு கூட மற்ற எந்த பாத்திரமும் ரசிக்க வைக்கவில்லை என்பதே உண்மை !

இயக்கம் 

ரஜினியை மட்டுமே மையப்படுத்தினாலும் இது ஒரு டைரக்டர் படம் தான் !

எங்கெங்கு கைதட்டல் கிடைக்கும் ..எதனை மக்கள் ரசிப்பார்கள் என யோசித்து செய்த விதத்தில் வெல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

முதல் பாதி முழுதும் லேசான சிகப்பு டோன்  ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு - லொகேஷன் அனைத்தும் அசத்துகிறது முதல் பகுதியில் !

சரியான பன்ச் டயலாக் அனைத்தும் டிரைலரில் வைத்து விட்டார். அந்த டயலாக் ஏற்கனவே பரிச்சயம் ஆனதால் அவை வரும்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்பரிக்கின்றனர். இவ்விதத்தில் காலா போல ஏமாற்றவில்லை. பன்ச் எல்லாம் சரியான காட்சியில் தான் வைத்துள்ளார்

பேட்ட @ திண்டுக்கல் உமா தியேட்டர்

முதல் பாதி மாஸ் ....இரண்டாம் பாதி மரணம் என முகநூலில் எழுதினார் நண்பர் ஒருவர். இதில் கொஞ்சம் உண்மை உண்டு. 

இருப்பினும் பேட்ட - சினிமா ரசிகர்களுக்கு வேட்ட  தான் !

*****

அண்மை பதிவுகள்

2018 - சிறந்த 10 தமிழ் படங்கள்

கனா சினிமா விமர்சனம் 

Wednesday, January 9, 2019

தமிழ் சினிமா 2018- சிறந்த 10 படங்கள்

2018ல் பதிவுகள் எழுதுவது குறைந்ததே ஒழிய - படம் பார்ப்பது குறைய வில்லை.


10. செக்க சிவந்த வானம்

மணிரத்னத்துக்கு சின்ன பிரேக்கிற்கு பிறகு ஒரு ஹிட் படம். மிக பெரிய ஸ்டார் காஸ்ட் - அயல் மொழியில் இருந்து உருவப்பட்ட ஒரு கதை - விஜய் சேதுபதி - சிம்பு - அருண் விஜய் அனைவரும் தமது ஸ்டைலில் பிரகாசித்ததால் படம் வெற்றியை ஈட்டியது.

9. வட சென்னை

வெற்றி மாறன் படம் என்பதாலேயே அதிக எதிர்பார்ப்பு இப்படத்திற்கு. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் முழுமையும் பூர்த்தி ஆகவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.

ஏராளமான விஷயங்களை சொல்ல ஆசைப்பட்டு - சாதாரண பார்வையாளனுக்கு சற்று  தெளிவில்லாத  விதத்தில் படம் அமைந்து விட்டது.

கேங்ஸ்டர் படத்துக்கு தேவையான சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் நிச்சயம் மிஸ்ஸிங். சாவகாசமாக செல்லும் திரைக்கதை -வன்மத்துடன் அலையும் பாத்திரங்கள் - இவை படத்துடன் நம்மை ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது .

பாதி கதை தான் - வடசென்னையில் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் தோல்வி காரணமாக அடுத்த பாகம் வருவது சந்தேகமே

இருப்பினும் வெற்றி மாறனின் கதை சொல்லும் திறன் - நாம் எதிர்பார்க்க முடியாத சில சஸ்பென்ஸ்கள் இவையே படத்தை இறுதி வரை பார்க்க வைத்தன. படம் இவ்வருட டாப் 10 ல் வர காரணமும் இவையே !

8. பரியேறும் பெருமாள்

மிக அதிக பாராட்டை பெற்ற பரியேறும் பெருமாள் உண்மையில் என்னை ஓரளவு தான் கவர்ந்தது.

முதலில் நல்ல விஷயங்கள்..

வித்யாசமான கதை. காதலை அடிப்படையாய் கொள்ளாமல் சமூக பிரச்சனை ஒன்றை கையாண்ட விதம், கதிர் மற்றும் துணை பாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு, சோகமாய் முடிக்காமல் படத்தை நம்பிக்கையுடன் முடித்த விதம்..

இனி படம் ஏன் என்னை அதிகம் கவரவில்லை என்கிற விஷயத்திற்கு வருகிறேன் 

நானும் சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு படித்தவன் தான். இப்படம் மிக அதிகமாக கல்லூரியில் நாயகன் எதிர்கொள்ளும் சாதீய அடக்குமுறை பற்றி பேசுகிறது. குறிப்பாக நாயகன் மற்றும் அவன் தந்தையை கல்லூரி மாணவர்கள் அவனமானப்படுத்துவது ..

சட்ட கல்லூரியில் அட்மிஷன் சாதீய அடிப்படையில் நிகழ்வதால் உள்ளே வந்ததும் சாதீய அடிப்படையில் சில குழுக்கள் உருவாகி விடும். அனைத்து மாணவர்களும்  இந்த சாதீய குழுவில் சேர்வார்கள் என சொல்ல முடியாது 

ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த நபரை அதுவும் சாதி அடிப்படையில் அடித்தால் - அவர் சாதியை சேர்ந்த மற்ற மாணவர்கள் கண்டும் காணாமல் இருக்கவே மாட்டார்கள். அது மிக பெரும் பிரச்சனையாக வெடிக்கும். கல்லூரி ஸ்ட்ரைக் உள்ளிட்டவை அவசியம் இதனால் நடக்கும் 

இங்கு நாயகன் - அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் போது அவனுக்கு ஆதரவாக யாருமே வராதது நடைமுறையில் நடக்கவே நடக்காது. 

இந்த அடிப்படை பிரச்சனை தான் படத்துடன் என்னை ஒன்றை விடாமல் செய்தது. 

7. அடங்க மறு 

வருட  இறுதியில் வந்த இன்னொரு சுவாரஸ்யமான திரைப்படம். பழிவாங்கும் கதையை மிகுந்த வித்யாசமாக எடுத்திருந்தனர். குறிப்பாக வில்லன்கள் ஒவ்வொருவரும் அவரவர் தந்தை கையால் கொல்லப்படுவர் என சொல்லி - அப்படியே கொல்வது அட்டகாசம். த்ரில்லர் விரும்பிகள் தவற விடக்கூடாது படம் அடங்க மறு

6. சர்கார்

படம் வெளியாகும் முன்னும், அதன் பின்னும் பல சர்ச்சைகளை சந்த்தித்த சர்க்கார் - நிச்சயம் நான் ரசித்த படங்களில் ஒன்று. வித்யாசமான கதை- சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் விறுவிறுவென்று செல்லும் திரைக்கதை - ரஹ்மானின் இசை- விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் இவற்றால் இவ்வருடம் மிக அதிக வசூல் செய்த படங்களுள் ஒன்றாக நின்றது சர்க்கார்

5. நடிகையர் திலகம்

தெலுகு டப்பிங் என்றாலும் மனதை தொட்ட ஒரு  படம். நாம் ரசித்த சாவித்ரி என்கிற நடிகை பற்றிய கதை- பிரபலமானவர்கள் என்றாலே ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்ற எண்ணத்திற்கு மாற்றாக சாவித்ரி பட்ட துயரங்கள் கண்ணீரை வரவழைக்கும். கீர்த்தி சுரேஷ் சாவித்ரி பாத்திரத்தில் நம்மை வியக்க வைத்தார். இந்த ஜெனெரேஷன் சேர்ந்தோரும் கூட ரசிக்கும் படி எடுத்திருந்தனர் படக்குழுவினர் !

4. கடைக்குட்டி சிங்கம்

வசூல் சிங்கம் இப்படம் !

பீம்சிங் என்ற பழைய இயக்குனர் "பா" வரிசை படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் (பாலும் பழமும், பாவ மன்னிப்பு, etc ). பீம்சிங் டைப்பிலான குடும்ப கதை இக் கடைக்குட்டி சிங்கம்.

விவசாயம் பற்றி பேசிய இன்னொரு வெற்றிப்  படம் இது. செண்டிமெண்ட்- காமெடி- அழகிய ஹீரோயின்கள் - போர் அடிக்காமல் பார்க்க வைக்கும் திரைக்கதை இவற்றால் சொல்லி அடித்த கில்லி மாதிரி வெற்றியை எட்டினர்.

**********

கடைசி ஏழு படங்களை வரிசைப்படி பார்த்தாகி விட்டது. முதல் மூன்று இடங்களுக்கு ரேங்க் தர விருப்பமில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்ப இது மாறலாம். சென்ற வருடத்தின் சிறந்த 3 படங்கள் என இவற்றை சொல்லலாம் :

கனா

வழக்கமான ஸ்போர்ட்ஸ் படம் தான் - ஆனால் அதில் விவசாயத்தை சேர்த்து parallel ஆக சொன்ன விதத்தில் தனித்து தெரிந்தது கனா. உண்மையில் பார்த்தால் அவர்கள் அழுத்தம் திருத்தமாய் சொல்ல  நினைத்தது விவசாயம் குறித்து தான். அதனை தனியே சொன்னால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் கிரிக்கெட் என்ற இனிப்பு மறந்து கலந்து கூறினர்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு - காமெடி- இனிய பாடல்கள்- தைரியமான தெளிவான இயக்கம் இவற்றால் கனா - கவர்ந்தது

ராட்சசன்

இவ்வருடம் பார்த்து பிரமித்து போன படங்களில் ஒன்று ராட்சசன். முண்டாசு பட்டி என்கிற கிராமிய படம் எடுத்த இயக்குனரின் அடுத்த படம் ... என்ன ஒரு Changeover !

கதை, திரைக்கதை, சஸ்பென்ஸ் அனைத்துமே அட்டகாசம். கன்டண்ட்டின்  அடிப்படையில் இருக்கும் வயலன்ஸ் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வன்முறையை தேவையான அளவு மட்டுமே காண்பித்திருந்தார் இயக்குனர். மிக ஆச்சரியப்படவும், ரசிக்கவும் வைத்த படம் ராட்சசன்.


96

சென்ற வருடம் மிக அதிகம் பேசப்பட்ட, பலரையும் தம் இளமை காலத்திற்கு எடுத்து சென்ற படம். பள்ளி/ கல்லூரி  கால காதலை நினைத்து பார்க்க வைக்கும் இத்தகைய படங்கள் அவ்வப்போது வந்து வெற்றிக்கொடி நாட்டுவது வழக்கமே.

ஒரே நாளில் நடக்கும் கதை- திருமணமான காதலியை நினைத்து 20 வருடம் கடந்தும் மணமுடிக்காமல் இருக்கும் நாயகன் பாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி.

விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பு, இளையராஜா பாடல்களை பயன்படுத்திய விதம்- கவித்துவமான முடிவு.. இவை இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் 96 ஐ நினைவு கூற வைக்கும்.

************

இமைக்காத நொடிகள் நன்றாக இருந்ததாக பலர் கூறினர் ; பார்க்க வில்லை

2.0 தியேட்டரில் கண்டு வெறுத்தேன். எனக்கு மிக பிடித்தமான இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், காலி பெருங்காய டப்பா ஆகி வருவது பெரும் வருத்தம் !
************

மற்றபடி இவ்வருடமும் வெளியான படங்களில் 10 சதவீதம் மட்டுமே போட்ட பணத்தையே எடுக்க முடிந்தது. 2019 பேட்ட மற்றும் விஸ்வாசம் என்ற   இருபெரும் ரிலீஸ்களுடன் துவங்குகிறது. பார்க்கலாம் !
Related Posts Plugin for WordPress, Blogger...