Saturday, November 19, 2016

நைட் ஷிப்ட் வேலை - விரிவான அலசல்

ல வித மனிதர்களை - அவர்கள் வாழ்க்கை, வேலை குறித்த கேள்விகளோடு வீடுதிரும்பல் மூலம் அவ்வப்போது சந்தித்து வருகிறோம். சென்னை பஸ் கண்டக்டர் பேட்டி வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வரிசையில் இரவு நேர பணி செய்யும் ஒரு நண்பர் மூலம் இந்த பணியின் சங்கடங்கள் குறித்து விரிவாய் அறிய முடிந்தது. நமக்கு நன்கு அறிமுகமான பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் தான் நமது கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்துள்ளார். இதோ நைட் ஷிப்ட் வேலை குறித்த அவரது பேட்டி:
**************
நீங்கள் எதனால் இரவு நேர பணியை தேர்ந்தெடுத்தீர்கள்? 

இரவுப்பணியை 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்(நான் உட்பட)விரும்பி தேர்ந்து எடுப்பதில்லை. இந்திய – அமெரிக்க நேர வித்யாசம் ஒன்றே இதற்கு முக்கிய காரணம். அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு பகல் பணி கிடைப்பது உண்டு. உதாரணத்திற்கு சிங்கப்பூர் போன்ற க்ளயன்ட் இருக்கும் அணிகளை சொல்லலாம்.

எத்தனை வருடமாக இரவு நேர பணி செய்கிறீர்கள்? தொடர்ந்து எத்தனை வருடம் ஒருவரால் இரவு நேர வேலை செய்ய முடியும்?

நான்கைந்து ஆண்டுகள் இரவுப்பணியில் வெரைட்டி வெரைட்டி ஷிப்ட்களை செய்து உள்ளேன். தொடர் இரவுப்பணி செய்தால் கஷ்டம்தான். ஜிம் பாடி என்றால் இரண்டு ஆண்டு. பிஞ்சு பாடி என்றால் ஓராண்டு தாங்கும். அதன் பின் உடல்நிலை படிப்படியாக மோசமாகும். பிரஷர் இல்லாத டீமில் இரவுப்பணி என்றால் மேலும் ஓராண்டு மைலேஜ் தரும் நம்ம பாடி.

இரவு நேர பணியாளர்கள் பொதுவாய் என்ன விதமான வேலை செய்கிறார்கள்?

எனக்கு தெரிந்து வாய்ஸ் மற்றும் நான் வாய்ஸ் என இருவகை இரவுப்பணிகள் உண்டு. வாய்ஸ் ப்ராசஸ் செய்பவர்கள் பொதுவாக அமெரிக்க எசமான்/நுகர்வோர் கேட்கும் துறை சார்ந்த சந்தேகங்களை போனில் பேசியே தீர்த்து வைப்பார். இதில் இன்னொரு வகை கலக்சன் போஸ்டிங். அதாவது கம்பேனிக்கு காசு தராமல் இழுத்து அடிக்கும் வெளிநாட்டவரை போனில் தாஜா/எச்சரிக்கை செய்து பணம் வாங்குதல். நான் வாய்ஸ் துறையில் இருப்பவர்கள் தப்பு செய்தால் மெயிலில் மட்டுமே திட்டு வாங்குவர். வாய்ஸ் ப்ராசஸ் என்றால் போனிலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

இரவிலேயே வெவ்வேறு ஷிப்ட் உள்ளதா? என்ன அது?

இரவுப்பணியில் கூட நேர வித்யாசங்கள் உண்டு. இரவு 12, 4 மற்றும் காலை சூரியன் வரும் வரை கல் உடைக்கும் வண்ணம் வெவ்வேறு ஷிப்ட்கள் உண்டு. அதிகாலை கோழி கூவும் முன் துவங்கும் ஆஸ்திரேலிய ஷிப்ட், நள்ளிரவு நாய் ஊளையிடும்போது துவங்கும் கர்ண கொடூர ஷிப்ட், அனைத்திலும் மேலாக இரவு 10 அல்லது 11 மணிக்கு துவங்கி காலை 7வரை கதற கதற அடிக்கும் ஷிப்டும் உண்டு. இதற்கு க்ரேவ்யார்ட் ஷிப்ட் என்று பெயர் வைத்து உள்ளனர். அடியேன் இந்த ஷிப்டில் பல மாதங்கள் கல் உடைத்து உள்ளேன்.

சிலர் இங்கிலாந்து நேரம் என மதியம் 1 மணிக்கு சென்று விட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு வருகிறார்கள். இவர்கள் பாடு சற்று தேவலாம் என சொல்லலாமா?

நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு யு.கே ஷிப்ட் என்று பெயர். மதிய உணவு நேரத்திற்கு பின் தொடங்கி அதிகபட்சம் இரவு ஒரு மணிக்குள் முடிந்துவிடும். ஆறு மணி நேரம் நிம்மதியான உறக்கம். அதிகாலையில் அரக்க பரக்க எழுந்திரிக்க வேண்டாம் என்பதால் பலருக்கு பிடித்த ஷிப்ட் இதுதான். குறிப்பாக இந்த ஷிப்ட் துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் ட்ராபிக் தொல்லை இல்லாமல் இருப்பது மற்றொரு ப்ளஸ்.

துவக்கத்தில் இரவு விழித்து பகலில் தூங்குவதில் என்ன சிரமம் (உடல் மற்றும் மன ரீதியாக) இருந்தது? அது எப்போது சரியானது அல்லது பழகி போனது?

நினைவு தெரிந்த நாள் முதல் இரவு ஒன்பது மணிக்கு முன் தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கு துயில் எழுந்த எனக்கு முதலில் முழு இரவுப்பணி (இரவு 11 முதல் காலை 7) கிடைத்தபோது சங்கடமாகத்தான் இருந்தது. பல ஆண்டுகள் விளையாட்டில் நித்தம் ஈடுபட்டவன் என்பதால் உடல் ரீதியாக பிரச்னை பெரிதாக இருந்ததில்லை. அதே சமயம் மனரீதியான பிரச்னை வீட்டில் இருந்தது. “சிவா நைட் ஷிப்ட் போயிட்டு வந்து தூங்கிட்டு இருக்கு போல?” என்று அம்மாவிடம் கேட்டுவிட்டு “நேத்து நாட்டார் கடைல உளுந்து வாங்கனேன். இன்னைக்கு அந்த சீரியல் என்னாச்சி?” என்று பக்கத்து வீட்டு ஆன்ட்டிகள் உரக்க பேசி தூக்கத்தை கெடுக்கும்போது அறைக்கதவை படாரென சாத்தி, கோபத்தில் கத்தி உள்ளேன் பலமுறை.

அம்மன் கோவில் லவுட் ஸ்பீக்கர், பக்கத்து வீட்டு டி..வி.சத்தம், நன்றாக தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில் காலிங் பெல் அடிக்கும் குரியர் ஆட்கள், சேல்ஸ்மேன்கள்...இம்சைக்கா பஞ்சம்..

இரவில் வேலைக்கு நடுவே ஓரிரு மணி நேரம் தூங்க அனுமதி உண்டா?


பெரும்பாலான ஆபீஸ்களில் தூங்க அனுமதி இல்லை. கேப்டீரியாவில் வேண்டுமெனில் சில நிமிடங்கள் குறட்டை விடலாம். வேலை செய்யும்போதே தூங்கி வழியும் ஆட்கள் பலர் உண்டு. அரை தூக்கத்தில் அண்ணன்கள் இருக்கும்போது மவுஸ், கீபோர்ட் போன்றவற்றை ஒளித்து வைத்து விடுவோம். அது தெரியாமல் அவர்கள் வெறும் டெஸ்க்கில் டைப் செய்தல், மாவு பிசைவது போல மவுஸ் இருந்த இடத்தை கையால் ஆட்டுதல் போன்றவற்றை செய்வதை கண்டால் சிரிப்பை அடக்க முடியாது.

பகல் நேரம் நன்றாய் தூங்க முடியுமா? பல்வேறு சத்தங்களும் வெளிச்சமும் இருக்குமே? பகலில் தூங்க தூக்க மாத்திரை உபயோகிப்போர் உள்ளனரா?

ப்ளாட் சிஸ்டம், பங்களாவில் தங்கும் அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்கார ஊழியர்கள் பெரும்பாலும் நிம்மதியாக தூங்கலாம். சாதாரண வீடுகளில் தங்கி இருப்போர் ட்ராபிக் சத்தம், வீட்டில் இருப்போர் நடமாட்டம், வெளிச்சம் போன்றவற்றை தாங்கி தூங்கி ஆக வேண்டும். இல்லாவிடில் மறுநாள் ஆபீசில் வேலை செய்ய முடியாத அளவிற்கு கண்ணை சொக்கும். தூக்க மாத்திரை உபயோகிப்போர் மிகவும் குறைவுதான்.

இரவு நேரம் பணி என்பதால், ஐந்து நாள் பகலில் தூங்குவோர் வார இறுதியில் எப்படி தூங்குவார்கள்?

சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் அவ்வளவு லேசில் தூக்கம் வந்து விடாது. நள்ளிரவை தாண்டியே விழித்து பழக்கப்பட்ட பாடி ஒத்துழையாமை இயக்கத்தை வீக்கெண்டிலும் விடாமல் பின்பற்றும். இதை நான் டைப் செய்வது கூட சனி இரவு 11மணிக்கு பிறகுதான்.

உங்கள் அலுவலகத்தில் பெண்கள் இரவு நேர டியூட்டி செய்கிறார்களா? ஆண்களுக்கும் அவர்களுக்கும் உடல் அல்லது மன ரீதியாக இரவு நேர பணியில் வேறுபாடுகள் உண்டா?

நிறைய அலுவலகங்களில் பெண்கள் இரவுப்பணியை செய்ய ஆரம்பித்து ஆண்டுகள் சில ஆகின்றன. சோர்வின் காரணமாக மயக்கம் போட்டு விழும் பெண்களும் உண்டு.பெண்கள் இரவுப்பணி வேலைக்கு சேர்ந்த சில மாதங்களுக்கு பின் மிகவும் சோர்ந்து மேலதிகாரிகளிடம் வேறு ஷிப்ட் கேட்பதும், கைக்குழந்தையை பராமரிக்க நேரம் ஒதுக்க வேலையை ராஜினாமா செய்வதும் அடிக்கடி நடக்கும்.

இரவு நேர பணியில் stress-அதிகம் என்பதால், stress relief ஆக ஆண்-பெண் செக்ஸ் அலுவலகத்திலேயே மிக எளிதாக நடக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே. இது எந்த அளவுக்கு உண்மை?

மிக எளிதாக நடக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து எவருடனும் நேரடி விவாதம் செய்ய தயார். நிர்வாகத்திற்கு தெரியாமல் சில ஆர்வக் கோளாறுகள் சேட்டை செய்வது நிஜம்தான். நிறைய டீம்கள் வேலை செய்யும் ஒரு சில அலுவலகத்தின் சாக்கடை கழிவுகளை அகற்றுகையில் கிலோ கணக்கில் காண்டம்கள் இருந்தது செய்தியாகவே வந்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் வாலிபால் ஆடாதவன் எந்த துறையில்தான் இல்லை? சாப்ட்வேர் துறை ஆட்களை மட்டும் அடிக்கடி குறிப்பிட்டு பேசுவது சரியென்று தோன்றவில்லை.

உங்களுக்கு தெரிந்த கணவன் - மனைவி - ஒருவர் இரவிலும் மற்றவர் பகலிலும் வேலை பார்க்கிறார்களா? குடும்பத்தை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்?

இரவு பகல் என வெவ்வேறு வேலை நேரத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கு பெரிதாக பிரச்னைகள் குறைவு. ஒரே ஷிப்டில் இருந்தால் மண்டை காய்ச்சல் அதிகம். சோர்வாக வீட்டுக்கு வந்த உடன் யார் சமைப்பது, இதர வேலைகளை செய்வது என்று.

திருமணத்தின் போது இரவு நேர வேலை என்பதால் மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார் யோசிக்கிறார்களா? மணம் முடிக்க மறுக்கிறார்களா?

உண்மைதான். இரவுப்பணி செய்யும் நபர்களுக்கு கல்யாணம் செய்வது என்பது மன்மோகன் வாயில் இருக்கும் கொழுக்கட்டையை பிடுங்குவதை விட கடினமான செயல். கல்யாணம் நிச்சயம் ஆனதும் பெரும்பாலான பெண்கள் வேலையை ராஜினாமா செய்து விடுவார்கள். ஆண்கள் “கல்யாணம் நடக்குற ஒரு நாளைக்கு முன்னாடி இருந்து எனக்கு பகல் ஷிப்ட் ஆரம்பம் மாமா. உங்க திரிஷாவை எனக்கே தாங்க” என்று அல்வா கிண்டுவார்கள். தாலி கட்டிய மறுநாள் நைட் ஷிப்டுக்கு கிளம்புவார் புது மாப்ளே. இது ஜகஜம்தான் சார்.

இரவு நேர வேலையில் நல்லது எது? கெட்டது எது?

திருவிளையாடல் தருமி டைப் கேள்வி..ரைட்டு. நல்லது என்றால் நைட் ஷிப்டுக்கு கிடைக்கும் அதிக சம்பளம்தான் வேறொன்றும் இல்லை. கெட்டது என்றால் அதே சம்பளத்தை சில ஆண்டுகளில் டாக்டருக்கு மொய் வைக்கும் நிலை வருவதுதான். “ராத்திரி பூரா இத்தனை வருஷம் நாயா உழைச்சனே? அதுக்கு பிரமோஷன் இல்லையா எசமான்?” என்று அப்ரைசல் நேரத்தில் மேனேஜர் சட்டையை பிடித்து யூனியன் தலைவர்(உதாரணம்: ‘துலாபாரம்’ ஏ.வி.எம்.ராஜன், ‘பாசமலர்’ ஜெமினி ) ரேஞ்சுக்கு டயலாக் பேசினால் பருப்பு வேகாது.

இரவு நேர வேலை செய்வோர் வார இறுதி நாட்களை எப்படி கழிக்கிறார்கள்? நீங்கள் எப்படி கழிக்கிறீர்கள்?

இரவு நேரத்தில் வேலை செய்வோர் அதிகபட்சம் சனி அன்று மதியம் அல்லது மாலை வரை நன்றாக ஓய்வு எடுப்பர். நல்ல பிள்ளைகள் ஏதோ ஒரு கோர்சில் சேர்ந்து சனி, ஞாயிறு அன்றும் படித்து கொண்டே இருக்கும். சுமாரான வசதி உள்ளவர்கள் டாஸ்மாக் பாரில், டப்பு பார்ட்டிகள் பப்பில் (தற்காலிக) தோழிகளுடன் சனி இரவில் புரியாத பாஷையில் ஓடும் பாட்டுக்கு மொக்கையாக மூவ்மெண்ட் போட்டு ஆடுவர். நான் கெட்ட பயக்கம் இல்லாத பயபுள்ள என்பதால் அடிக்கடி தியேட்டரில் டென்ட் அடிப்பேன். சினிமா இஸ் மை passion.

சம்பளம் குறைவாக இருந்தாலும் இரவு வேலையை விட்டு விட்டு பகல் நேர வேலைக்கு வரவே பலரும் விரும்புவதாக சொல்கிறார்களே உண்மையா?

முற்றிலும் சரி. 

பல ஆண்டுகள் நைட் ஷிப்ட் மட்டுமே செய்து, தொப்பை விழாத அதிசய பிறவிகளும் உண்டு. அவர்கள் எல்லாம் பிரம்மனால் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து அனுப்பப்பட்ட ஆஜானுபாகுக்கள்.  இது மிக குறைந்த சதவீதமே

ஆரம்பத்தில் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு விட்டில் பூச்சிகளாக இரவுப்பணிக்கு வருவோர் கொஞ்ச காலம் கழித்து குறைவான சம்பளம் கிடைத்தால் போதும். இந்த 'பேய் பங்களா'வை விட்டு ஓடணும்டா சாமி என்றுதான் நினைப்பார்கள்.  இது தான் பெரும்பான்மையானவர்கள் நிலை !

*******

Thursday, November 17, 2016

பாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்

சென்னையில் இது மாரத்தான் காலம்.. பொதுவாகவே வெய்யில் சற்று குறைந்த அக்டோபர் முதல் ஜனவரி முடியும் வரை பல மாரத்தான்கள் நடக்கும்.

பெரும்பாலான மாரத்தான்களில் நாம் பணம் கட்டவேண்டியிருக்கும். நமக்கு டி ஷர்ட் - காலை உணவு போன்ற செலவுகளை பார்த்து கொள்வர்.

இருப்பினும் முழுவதும் இலவசமான சில மாரத்தான்களும் உண்டு. அப்படி நடந்தது தான் அண்மையில் பில்லர் பேசர்ஸ் என்ற குழு நடத்திய மாரத்தான்.

ஒரு மாரத்தான் எப்படி நடத்த வேண்டும் என இந்த குழுவிடம் கற்று கொள்ள வேண்டும். அனைத்து ஏற்பாடுகளும் அவ்வளவு துல்லியம். ஒவ்வொரு கிலோ மீட்டர் இடைவெளியிலும் வாலன்டியர்கள் மழையில் நின்றபடி எலக்ட்ரால் கலந்த நீர் தந்த படி இருந்தனர்.. எனவே எனர்ஜி குறையாமல் ஓட முடிந்தது. 

ஓடி முடித்ததும்  Physiotherapy team மூலம்செய்த கூல் டவுன் அதி அற்புதம். ஓடிய 500க்கும் மேற்பட்டோருக்கு இளநீர் ஏற்பாடு செய்திருந்தது ஆச்சரியம் !! அப்புறம் அற்புதமான சாப்பாடு. 

மழையில் நனைந்தவர்களுக்கு  துண்டு கொடுத்து தலை துவட்டி கொள்ள சொன்னதெல்லாம் நினைத்து பார்க்க முடியாத விருந்தோம்பல் !

நிகழ்ச்சி துவங்கும் முன் மழை பெய்வதால் காத்திருக்க, அப்போது நரேஷ் அய்யரை கண்டேன். அவர் தானா என சந்தேகம். அருகில் சென்று உங்கள் பேர் என்ன என்று கேட்க, நரேஷ் என்றார். அப்புறம் அவர் தான் என தெரிந்ததும், அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன். 

மழை தொடர்ந்து கொண்டே போனதால் - கொஞ்ச நேரம் அவரிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது; வெளிச்சம் அதிகம் வரவில்லை; எனவே பலரும் அவரை அடையாளம் கண்டு கொண்டு வந்து பேசவில்லை (ஓடி முடித்ததும் ஏராள மக்கள் அவருடன் சேர்ந்து படம் எடுத்து கொண்டனர்.. குறிப்பாக பெண்கள் !)

பிறந்து வளர்ந்தது மும்பை என்றாலும் எப்போதுமே சென்னை - மும்பை என மாறி மாறி இருப்பதாக சொன்னார். இப்போதும் அசோக் நகரில் வீடு இருக்கிறதாம். எனவே மாரத்தான் நடத்தும் குழுவில் சிலரை நன்கு தெரிந்திருக்கிறது 

முன்பே வா என் அன்பே வா பாடல் பற்றி பேசாமல் இருக்க முடியாது ; இது வரை வந்த மொத்த தமிழ் பாடல்களில் சிறந்தவற்றை பட்டியலிட்டால் அதில் அந்த பாட்டு வந்து விடும் என்றேன். சிரித்தபடி " எல்லா க்ரெடிட்டும் ரகுமான் சாருக்கு தான் " என்றார். "அந்த பாட்டு தான் உங்களுக்கு signature பாட்டு மாதிரி ஆகிடுச்சு இல்லை?" என்றேன். "ஆமாம் " என்றார். மெலடி தான் அதிகம் பாடுகிறீர்களோ என்றதற்கு - அவ்வப்போது பாஸ்ட் பீட் பாட்டுகளுக்கும் கூப்பிடுகிறார்கள்; அண்மையில் கெத்து படத்தில் பாடிய வேகமான பாட்டு நன்கு ரீச் ஆனது என்றார். 

முதல் முறை ஓடுவதாக சொன்னார். ஆனால் டென்சன் இல்லாமல் கூல் ஆக தான் இருந்தார். 

எந்த ஆடம்பரமும் இல்லை; மராத்தான் முடித்த பின் பலரும் வந்து படமெடுக்க, சிரித்தபடி ஒத்துழைத்தார். 

நாமெல்லாம் மொபைலை சும்மாவே நொண்டி கொண்டிருப்போம். அங்கிருந்த சில மணி நேரத்தில் அவர் கையில் மொபைலை காண வில்லை; எந்த டைவர்ஷனும் இல்லாமல் முழுக்க முழுக்க மாரத்தான் அனுபவத்தை மட்டுமே என்ஜாய் செய்தார். 

பெரிய மாரத்தான் என்றால் கூட்டம் அதிகமாய் இருக்கும் - இது போன்ற 400- 500 பேர் ஓடும் மாரத்தான் என்றால் அதிகம் பிரச்சனையில்லை என நினைத்திருக்கலாம்.

ஓடி முடித்த பின்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; அவரது குரலும், பல பாடல்களும் எனக்கும் மட்டுமல்ல - மகளுக்கும் மிக பிடித்தமானவை; வீட்டில் வந்து பெண்ணிடம் சொன்னதும், வராமல் போனதற்கு ரொம்பவும் மிஸ் செய்தாள் !

மரத்தானில் எடுத்த புகைப்படங்கள் சில..  

மழை நிற்கும் வரை நரேஷ் அய்யருடன் ஒரு உரையாடல் 

வைப்ரன்ட் வேளச்சேரி ரன்னிங் குழுவுடன் ..(நான் அவ்வப்போது செல்வது இங்கு தான் .. அருகில் உள்ளதால் )

10 கி. மீ ஓட்டம் துவங்குகிறது 

ஓட்றா ..ஓட்றா ஓட்றா !!!

நரேஷ் ஓடுகிறார் 
எப்ப 5 கி. மீ வரும்? எப்ப பாதி தூரம் முடிச்சி திரும்ப ஓட ஆரம்பிப்போம் ??

மழையில் புகைப்படக்காரரும் குழந்தைகளும் 


மழையிலும் பைக்கில் சென்ற படி புகைப்படம் எடுக்கும் வாலன்டியர்கள் 


வாகனங்கள் எதிர் திசையில் மட்டுமே அனுமதி. வழியெங்கும் போலீஸ் நின்று உதவினர் ....


ஐ.. அதோ முடியுற இடம் கண்ணில தெரியுது !!!


ஓடி முடிச்சாச்சு.. மெடலு வாங்கியாச்சு 



ஓடி முடித்ததும் மிக அருமையாக அவர்களே கூல் டவுன் உடற் பயிற்சிகள் செய்தனர்

Bluedart  நண்பர்கள் ..நாங்கள் இணைந்து தான் ஒன்றாக சென்றோம்
ACS நண்பர் சரவணன் (எனக்கு இடது) மற்றும் அவரது ரன்னிங் குழு நண்பர்களுடன் ..மாரத்தான் முடித்த சந்தோஷத்தில்.. மழையில்  !

                                                நரேஷ் அய்யருடன் ஒரு புகைப்படம் 
****
புகைப்படங்களுக்கு நன்றி: Nithins Photography, ஆர்த்தி சுவாமி நாதன் மற்றும் பில்லர் பேசர்ஸ் குழுவினர்
****
தொடர்புடைய பதிவுகள்

உடல் எடை குறைப்பு: உணவாலா? உடற் பயிற்சியாலா: ஒரு நேரடி அனுபவம்

மராத்தான் ..சில தவறான புரிதல்கள்

சென்னையின் மாபெரும் - விப்ரோ மாரத்தான்.. சில பாசிட்டிவ் & நெகட்டிவ்

முதல் மாரத்தான் அனுபவங்கள் 


Friday, November 11, 2016

அச்சம் என்பது மடமையடா - சினிமா விமர்சனம்

நூறு  ரூபாய் - ஆயிரம் ரூபாய் விஷயம் தீப்பற்றி எரியும்போது - படத்தின் பெயருக்கேற்ப தைரியமாக வெளிவந்துள்ளது - அச்சம் என்பது மடமையடா !

Beep பிரச்சனைக்கு பிறகு வெளிவரும் சிம்புவின் படம்; நிச்சயம் சிம்பு படம் என்பதால் காணவில்லை; கவுதம் மேனனுக்காக தான் தியேட்டரில் பார்த்தது ! வெகு சில படங்கள் தவிர அவரது பல படங்கள் ரசிக்கும் வண்ணமே இருக்கும் ! அந்த நம்பிக்கையை கவுதம் காப்பற்றினாரா?

கதை 

(முழு கதையும் சொல்லவில்லை; கவலை வேண்டாம் )

தன் தங்கையின் தோழி மஞ்சிமாவை காதலிக்கிறார் சிம்பு; அவரது ஊருக்கு செல்லும்போது - ஒரு கூட்டம் அவரது குடும்பத்தையே பழி வாங்க அலைவது தெரிகிறது; காப்பாற்றினாரா என்பது டிபிக்கல் கவுதம் மேனன் ஸ்டைலில்  திரையில் விரிகிறது !



Image result for acham enbathu madamaiyada

ஒரு டிக்கெட்டில் இரண்டு படம் 

முதல் ஒரு மணி நேரம் முழுக்க ரொமான்ஸ்... அட்டகாசமான 5 பாடல்களும் முதல் ஒரு மணியில் முடிந்து விடுகிறது. ஒவ்வொரு பாட்டுக்குமான சூழல், அதை படமாக்கிய விதம் அனைத்தும் அழகு

தள்ளி போகாதே பாடல் ஆரம்பிக்கும் இடம் அதிர்ச்சி ! என்னடா இந்த இடத்தில் பாட்டா என நினைத்தாலும் - பாடல் முடியும் முன் - அந்த புதிரை சிறிது சிறிதாக விடுவிக்கிறார்

அந்த ஒரு மணி நேரம்முடிந்ததும் -  ஆக்ஷன் படம் துவங்குகிறது; பின் ரொமான்ஸ் மிக அரிதாக ஓரிரு நிமிடமே வருகிறது

ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் எடுக்க எண்ணி இரண்டு வெவ்வேறு ஜானர் கலந்து படம் தந்துள்ளார் !

சிம்பு - மஞ்சிமா 

சிம்பு எவ்வளவு திறமையான நடிகர்.. ஆனால் இவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் பல படங்களில் மகா மோசம் ! தேவையற்ற பில்ட் அப் - லிட்டில் சூப்பர் ஸ்டார் என சொல்லி கொள்வது - இதையெல்லாம் விடுத்து இப்படிப்பட்ட இயக்குனர் கையில் கிடைக்கும் போது மட்டும் தான் சரியாக வெளிப்படுகிறார். இந்த படத்தில் கடைசி 10 நிமிடம் தவிர்த்து மற்ற நேரம் ரொம்ப apt !


மஞ்சிமா - முதல் பாதியை நாம் ரசிக்க முக்கிய காரணம். சிறிதே பூசிய உடல் வாகு எனினும் கேரளத்து பைங்கிளி; இரண்டாம் பாதியில் இவர் அழகை துளியும் ரசிக்க இயலாமல் கதை நகர்கிறது


ரகுமான் 

சந்தேகத்திற்கிடமின்றி படத்தின் இன்னொரு ஹீரோ ரகுமான் தான்.. என்னா மாதிரி பாட்டுகள் ! இந்த வருடத்தில் மிக சிறந்த ஆல்பங்களில் ஒன்று. முதலில் கேட்கும் போது 3 பாட்டுகள் பிடித்தது; படத்தோடு பார்க்கையில் அனைத்துமே அட்டகாசம் !


கவுதம் 

போலீஸ் கதையில் கவுதம் மேனனின் ஆர்வம் குறையவே குறையாது போலும் ! எல்லா ஹீரோவுக்கும் ஒரு போலீஸ் ஸ்டோரி தந்து விடுகிறார்.

காதலை இவரை போல் அழகாய் காட்ட - தமிழில் இயக்குனர்கள் மிக குறைவு. காதல் உருவாவதை  - பூ மலர்வது போல ரசித்து எடுக்கும் இவர் இளைஞர்களின் பிரிய இயக்குனராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இரண்டாம் பகுதியில் லாஜிக் மீறல்கள் மற்றும் முதல் பகுதியின் ஸ்வீட் நெஸ் இல்லாமல் போனது மக்களிடம் எப்படி ரசிக்கப்படும், எடுபடும் என தெரியவில்லை.

Image result for acham enbathu madamaiyada

ஹிட்டா ? மிஸ்ஸா ? 

சிம்புவின் நேரம் .. அரிதாக அவர் படம் சொன்ன படி ரிலீஸ் ஆக, வேறு பல விஷயங்கள் படத்தின் வசூலை பாதிக்கிறது. ஆன்லைனில் டிக்கெட் புக்  செய்து  பார்க்கும் சென்னை போன்ற மல்டிப்ளக்ஸ்களில் - 500- 1000 ரூபாயால் சிறிதளவே பாதிப்பிருக்கும். தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் படம் முதல் வார இறுதியில் full ஆகி ஓடுவதே மிக கடினம்.

வேறு நேரத்தில் வந்திருந்தால் - தோற்காமல் தப்பித்திருக்கும் படம்; இப்போது கமர்ஷியல் ஹிட் ஆவது மிக கடினம் !

பைனல் வெர்டிக்ட் 

நான், மனைவி, மகள் - மூவர் பார்த்தோம்; எனக்கு படம் - ஓகே; அவர்கள் இருவருக்கும் சுத்தமாய் பிடிக்க வில்லை !

பீல் குட் படம்; இளைஞர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்; லாஜிக் மீறல்களை மறந்து ஜாலியாய்  ஒருமுறை காணலாம்.. கவுதம் மேனன் மற்றும் AR ரகுமானுக்காக !

Sunday, November 6, 2016

பெயில் குறித்து : நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும் ...

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

வாரண்ட் இன்றி போலிஸ் எப்போது கைது செய்யலாம்

நீங்கள் கைதானால் உங்கள் உரிமைகள்

**************
ழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் வரக்கூடிய வழக்கு என்றும் பெயிலில் வர முடியாத வழக்கு என்றும் பிரிக்கலாம்.

பெயிலில் வரக்கூடிய வழக்குகள்

இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல் துறை அதிகாரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடுவிக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி கூட குற்றம் சாட்டப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விடலாம்

பெயிலில் விடுவிக்க முடியாத வழக்குகள்

"பெயிலில் விடுவிக்க முடியாத " என்பதன் பொருள் காவல் துறை அதிகாரியால் பெயிலில் விட முடியாது அதை ஒரு நீதிபதி தான் செய்ய முடியும் என்பதுதான்.

நீதிபதி குற்றவாளி குறித்த முதற்கட்ட முடிந்த பின் அவரை பெயிலில் விடுவிக்க கூடும். அவர் தான் குற்றம் புரிந்தார் என்பதற்கு நியாயமான காரணம் இல்லை என்பதாலும் வழக்கு முடிவதற்கு இடையிலும் பெயிலில் செல்ல நீதிபதி அனுமதிப்பார்

                                                       

பெயிலில் விட  மறுக்க  போலிஸ் பொதுவாக கூறும் காரணங்கள்

 1. குற்றவாளி விசாரணையின் போது ஆஜராக மாட்டார்

2. சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்

3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்

 4. காவல் துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை

 5. திருட்டு போன பொருட்கள் இன்னும் கைப்பற்ற படவில்லை

 6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றபட்வில்லை

 7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

 குற்றம் சாட்டப்பட்டவர் போலீசார் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்கவேண்டும். அவற்றை மறுக்கவிடில் பெயில் கிடைப்பது கடினம்

பெயிலில் வர மனு

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு பெயில் அப்ளிகேஷன் போட ஒரு வழக்கறிஞரை நியமிப்பது மிக நல்லது. அதற்கான மனு அவர் நீதிபதியின் முன் தரவேண்டும் (பெரும்பாலும் வெளியில் இருக்கும் நண்பர் அல்லது உறவினர் வழக்கறிஞரை பார்த்து விட்டு, அதற்கான கையெழுத்து மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாங்குவர் )

வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள இயலாதென்றால் குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதிக்கு மனுசெய்யலாம் (பொது மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்பதால் தானே வாதிடுவதை பொதுவாய் தவிர்ப்பது நல்லது)

பெயில் மனுவில் பொதுவாய் கீழ்க்காணும் காரணங்கள் சொல்லபடுகின்றன

1. பெயிலில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்

2. தான் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படுகிறது

3. காவலில் இருப்பவருக்கு உடல்நலமில்லை, சிகிச்சை எடுப்பது வெளியில் தான் சாத்தியம்

பெயில் மறுப்பும் மேல் முறையீடும்

பெயிலில் விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்.

ஒருவரது பெயில் தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்

ஆண்டிசிபேட்டரி பெயில் (Anticipatory Bail)

ஒருவர் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு

இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி (Anticipatory Bail ) பெயில் மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது .

*********
அண்மை பதிவுகள் :

வானவில் + தொல்லை காட்சி: எஸ். ரா Vs சாரு, நீயா நானா, பியா இன்னபிற

உணவகம் அறிமுகம் : சுக நிவாஸ் லஸ் கார்னர்

Related Posts Plugin for WordPress, Blogger...