Wednesday, January 22, 2014

வானவில்- மதயானை கூட்டம்- ஹன்ஷிகா- ஒரே ஒரு ஊருக்குள்ளே

பார்த்த படம் - மத யானைக்கூட்டம்

மதுரை மற்றும் சாதிய பின்னணியில் ஒரு படம். கதை சொல்லும் பாணியில் இயக்குனர் விக்ரம் சுகுமார் திறமை உள்ள இயக்குனர் என நம்பிக்கை தருகிறார். அவரை விடவும் அதிகம் கவரும் இன்னொருவர் இசை அமைப்பாளர் ரகுநந்தன். 2 பாடல்கள் ரொம்ப அட்டகாசமாய் செய்துள்ளார்.

முன்னும் பின்னும் மாறி மாறி பயணிக்கும் கதை வித்யாச அனுபவம். நடிக்கும் பலரும் புதுமுகங்கள் என்பதால் - நிஜ சம்பவங்களை பார்க்கும் உணர்வை தருகிறது.

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மேலே உள்ள இரு பாராக்களும் படம் பார்த்த உடன் எழுதியது ஓரிரு வாரம் கழித்து இப்போது யோசித்தால் கதை என்ன என்று குழப்பமாக உள்ளது. பார்க்கும்போது ஓரளவு ரசித்தாலும் அதன் பின் மனதில் பதியாமல் கடந்து போகும் இன்னொரு படம் ... அவ்வளவே !

அழகு கார்னர் 

ஹன்ஷிகா வந்த புதிதில் சற்று பூசிய வண்ணம் இருந்ததால் அதிக ஈர்ப்பில்லை. இப்போது நன்கு இளைத்து சிவ கார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தேயில்   கியூட் ஆக இருக்கிறார். உடம்பு இப்படியே மெயின்டெயின் செய்தால் நன்றாயிருக்கும் !

Maan Karate Movie Press Meet Stills – Hansika Motwani Beautiful Stills

பதிவர் பக்கம் - பொன்மலர்

தமிழில் பதிவர்களுக்கு தேவையான தொழில் நுட்பம் சார்ந்து பதிவு எழுதுவோரில் குறிப்பிடத்தக்க ஒருவர் பொன்மலர். கடந்த 5 வருடங்களாக பல பயனுள்ள பதிவுகளை எழுதியுள்ளார்.

இந்த பதிவுகளை வாசித்து பாருங்கள் :

எந்த மொழி படமாய் இருந்தாலும் சப் டைடிலுடன் பார்ப்பது எப்படி ?

http://ponmalars.blogspot.com/2013/06/get-subtitles-for-downloaded-movies.html

கூகிளின் ஆட் சென்ஸ் செக் உங்களுக்கு வர உள்ளதா? எப்படி செக் செய்யலாம் ?

http://ponmalars.blogspot.com/2012/09/how-to-track-adsense-cheque-in-india.html

என்னா பாட்டுடே

எனக்கு பிடித்த தமிழ் படங்களில் ஒன்று தவமாய் தவமிருந்து... என்றேனும் ஒரு நாள் இப்படம் மற்றும் அது என்னுள் நிகழ்த்திய சில மாற்றங்கள் பற்றி எழுத வேண்டும்...

சரி பாட்டுக்கு வருவோம்... பாடலில் காட்டப்படும் எத்தனையோ விஷயங்கள் கிராமத்தில் வளர்ந்த என்னை போன்றோர் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும்.

அம்மா - அப்பா - இரு குழந்தைகளிடையே உள்ள அன்னியோனியம் பாடல் முழுதும் அழகாய் விரியும். பாடல் துவங்கும் போது குட்டி பையனுக்கு வருகிற கோபம்... குளத்தில் பசங்க குளிக்கும் போது டிராயரை கழட்டி விட்டு அம்மணமாய் குளிக்க செல்வது .. 3 ஆண்கள் இருக்கும் போது ஒரு காட்சியில் சைக்கிளை சரண்யா தள்ளி கொண்டு வருவது... தலைக்கு மேல் பையனை தூக்கி வைத்து கொண்டு நடக்கும்  தந்தை இப்படி பாடலில் ரசிக்க ஏராளமான விஷயங்கள்.

பாடலை கேட்கும் சில நேரங்களில் விழியின் ஓரம் கண்ணீர் கசிந்து விடும்....



உயில் - சில விளக்கங்கள் 

நண்பர் ஸ்கூல் பையன் சென்ற பதிவில் உயில் குறித்து சில சந்தேகங்கள் எழுப்பியிருந்தார். அவற்றுக்கான விளக்கம் பின்னூட்டமாய் சொல்லாமல் - இங்கு சொன்னால் நலம் என நினைக்கிறேன்

கேள்வி - 1: உயிலை முத்திரைத் தாளில் தான் எழுதவேண்டுமா அல்லது வெள்ளைத் தாளில் எழுதலாமா? முத்திரைத்தாள் எனும் பட்சத்தில் எத்தனை ரூபாய் முத்திரைத்தாளில் எழுதவேண்டும்?

பதில் : சாதா தாளில் கூட எழுதலாம். நம் மக்களுக்கு ஸ்டாம்ப் பேப்பர் என்றால் - தான் ஒரு நம்பிக்கை வரும் இல்லையா  ? அதற்காக ஸ்டாம்ப் பேப்பர் பயன்படுத்துவர். 50 அல்லது 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் பயன்படுத்தலாம் (மீண்டும் சொல்கிறேன் : ஸ்டாம்ப் பேப்பரே கூட இல்லாமலும் எழுதலாம் )

கேள்வி - 2: உயிலை முழுவதும் படிக்காமல் எப்படி கையெழுத்திடலாம் என நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் சிலர் சாட்சிக் கையெழுத்து இட்டவர்களையும் சந்தேகிக்கும் வாய்ப்புள்ளதே!! இதுபற்றி அரசு விதிகள் என்ன சொல்கின்றன?

பதில் : உயில் என்பது ரகசியமான ஒன்றாக இருக்க வேண்டும். சாட்சி கையொப்பம் இடுபவர் அதன் content - ஐ சொந்த காரர்களிடம் சொன்னால் - அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

சாட்சி கையெழுதிடுவோர் இரண்டே காரணங்களுக்காக தான் இடுகிறார்கள். ஒன்று உயில் எழுதியவர் நல்ல மன நிலையில் தான் இருந்தார் என்பதற்காக. அடுத்தது அவர் தான் கையெழுத்திட்டார் என்பதற்காக

கேள்வி - 3: ரிஜஸ்தர் செய்வதற்கு என்னென்ன நடைமுறைகள்? கட்டணம் எந்த அடிப்படையில் (slab முறையா) வசூலிக்கப்படுகிறது?

பதில் : பதிவு செய்வது பற்றி சுருக்கமாக கூறி விட்டேன். சாதாரண சொத்து விற்கும் முறையில் என்ன செய்வோமோ அதே போல், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிக பட்சம் 500 ரூபாய் மட்டுமே பதிவு கட்டணம் இருக்கும்

கேள்வி - 4: எனக்கு ஊரில் இருக்கும் சில லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலங்களை இங்கு சென்னையில் ரிஜஸ்தர் செய்வதால் புரொபேட் பெறுவது எனது வாரிசுதாரர்களுக்கு - அவர்கள் அவர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல்கள் இருக்கும் பட்சத்தில் - அவசியமா?

அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தால் பிரித்து கொள்ள ப்ரோபெட் தேவையில்லை; ஆனால் பிற்காலத்தில் சொத்து விற்கும்போது வாங்குபவர் அதை பற்றி கேட்கலாம். எனவே இப்போதே ப்ரோபெட் பெறுதல் நல்லது

கேள்வி - 5: சொந்த தாய் தந்தைக்கு சொத்துக்களை எழுதிவைக்கும் பட்சத்தில் - உயில் எழுதியவரின் வாரிசுதாரர்கள் தங்களது தாத்தா பாட்டி காலத்துக்குப்பின் அதில் சொந்தம் கொண்டாட முடியுமா?

பதில் : இது போல நடக்க வாய்ப்புகள் மிக குறைவு. 99 % உயில் எழுதுவோர் தன்னை விட வயதில் குறைந்தோருக்கு தான் (மனைவி, மகன், தம்பி  etc )எழுதுவார்கள்

உங்கள் கேள்விக்கு வருவோம். உயில் எழுதியோரின் வாரிசு தாரர்கள் - அதன் அடிப்படையில் சொத்தில் பங்கு - கேட்க முடியாது. யாருக்கு சொத்து செல்கிறதோ - அவர் அதனை யாருக்கும் எழுதி வைக்கலாம். இல்லையேல் அவரது மற்ற சொத்துக்களுடன் இதுவும் சேர்ந்து - அவர் காலத்துக்கு பின் அவரது வாரிசு தாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும்.

போஸ்டர் கார்னர்



Friday, January 17, 2014

வானவில் - ஜில்லா - தோல்வி நிலையென நினைத்தால்

பார்த்த படம் - ஜில்லா

வடிவேலு சொல்றது மாதிரி " நல்லா தான போய்கிட்டு இருக்கு " என்று தான் முதல் முக்கால் மணி நேரம் நினைத்தேன் . போகப்போக மோசமாகி, படம் முடியும் போது - நம்மை நாமே திட்டி கொள்வதா .. எப்பவும் இதே தரத்தில் தொடர்ந்து நடிக்கும் விஜய்யை திட்டுவதா என்று மண்டை காய்கிறது.



இத்தனைக்கும் விஜய்க்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம்.. பெரியவர்களை விடுங்கள்.. பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகளில் மிக பாப்புலர் ஹீரோ விஜய் .............(சொந்தக் கார மற்றும் அக்கம் பக்க சிறுவர்களை வைத்து சொல்கிறேன்). கொஞ்சமேனும் இந்த நிலையை ஜஸ்டிபை செய்யும்படி மனிதர் நடிக்கலாம் !  காஜல் பின்பக்கத்தை இவர் ஒரு நிமிடத்துக்கு அழுத்தி பிடிப்பதெல்லாம் உச்ச பட்ச அசிங்கம். இது போன்ற காட்சிகளை ரசிக்கும் ஆட்களும் இருப்பார்களா? இயக்குனர் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்கும் காட்சி அது.

மோகன்லால் முக மற்றும் உடல் தோரணையில் "கம்ப்லீட் ஆக்டர் " .....!. தமிழ் தான் தடுமாறுகிறது

பூர்ணிமா வழக்கமான காரிகேச்சர் அம்மா.

நிவேதா தாமசை அதற்குள் தங்கையாக்கி இருக்க வேண்டாம் :((

பாடல்கள் தனியே கேட்க நன்றாய் இருந்தாலும் நேரங்கெட்ட நேரத்தில் வந்து இம்சை செய்கிறது

எத்தனை சண்டைகள் என்று எண்ண முடியவில்லை.... 10 -12 இருக்குமா ? போலவே லாஜிக் ஓட்டைகள் .. தோன்றி கொண்டே இருக்கிறது...

"ஓரளவு நல்ல கதை தான். விஜய்யின் கோமாளித்தனம் மற்றும் மோசமான திரைக்கதையால் சின்னா பின்னமாகி விட்டது படம் " என்ற ரீதியில் இணையத்தில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். ஒரே வரியில் ஜில்லா படத்தை இதை விட சரியாய் விமர்சித்து விட முடியாது !


ATM குறித்த ஒரு தகவல்.....

ATM நிலையங்களில் சமீப காலமாக நடந்து வரும் திருட்டுகளையடுத்து - அதிக பாது காப்பு ஏற்பாடுகள் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த செலவுகள் - ATM ஐ பயன்படுத்தும் நம் தலையில் தான் விடிய போகிறது !

இப்போதைய நிலை

எந்த வங்கி ATM வைத்துள்ளீர்களோ - அந்த வங்கி ATM -ல் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். பிற வங்கி ATM -ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்

இனி

எந்த வங்கி ATM வைத்துள்ளீர்களோ - அந்த வங்கி ATM -ல் - 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் ! அதன் பின் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட அளவு பணம் பிடிக்கப்படும் !

பிற வங்கி ATM -ல் நீங்கள் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த தான் வேண்டும் !

சுருக்கமாய் சொல்லணும் என்றால் - இனி உங்கள் வங்கி ATM -ல் மட்டுமே பணம் எடுக்கும் வழக்கம் ஏற்படுத்தி கொள்ளுங்கள். அதுவும் உங்கள் வங்கி ATM உபயோகிப்பதை மாதம் 5 முறைக்குள் முடித்து கொள்ளுங்கள் !

இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை. அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

தங்க மீன்கள் மேக்கிங் 

இயக்குனர் ராம் தங்க மீன்கள் மேக்கிங் பற்றிய சிறு வீடியோ Facebook -ல் பகிர்ந்திருந்தார். பாடலில் ஒரு இடத்தின் அழகை நாம் சாதாரணமாக பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அப்பாடலை எடுக்கும்போது எவ்வளவு குளிரிலும் - சிரமங்களிற்கு இடையேயும் எடுத்துள்ளனர்  என்பது இத்தகைய வீடியோக்கள் காணும் போது தான் தெரிய வருகிறது



அழகு கார்னர்



பதிவர் பக்கம் - இதயம் பேத்துகிறது ஜவஹர் 

இதயம் பேத்துகிறது என்ற வித்தியாச பெயரில் பதிவெழுதுகிறார் திரு ஜவஹர். சினிமா, நகைச்சுவை துணுக்குகள் , சுய முன்னேற்றம், பயண கட்டுரை என பல வித பதிவுகளும் எழுதுவது இவரின் ஸ்பெஷாலிட்டி. வோர்ட் பிரஸ்ஸில் இயங்குவதால் நம்மால் ப்ளாகர் மூலம் வாசிக்க முடியாதது ஒரு குறை. இதனை தாண்டி இவர் ப்ளாகை தொடர்ந்து வாசிப்போர் ஏராளம் பேர் இருக்கிறார்கள்

இதயம் பேத்துகிறது வலைத்தளம் : http://kgjawarlal.wordpress.com

என்னா பாட்டுடே

"தோல்வி நிலையென நினைத்தால் " - ஊமை விழிகள் படப்பாடலை இப்போது வீடியோ வடிவில் பார்க்கும்போது சில இடங்கள் காமெடியாக இருக்கிறது. ஆயினும் சில வரிகளும், இறுதி பகுதியும் மனதை நெகிழவைத்து விடுகிறது

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தினர் இப்பாடலை மிக விரும்பி கேட்டதாக சொல்லப்படுவதுண்டு.



பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் 

மிக கொஞ்சமாய் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் கண்டேன்.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலந்து கொண்ட - நம்ம வீட்டு பிள்ளை - சிவா பேசுவது வரைக்கும் நன்றாயிருந்தது. ஆனால் அங்குள்ள பெண்களை வைத்து சிவா வுக்கு ஊட்டி விட வைப்பதும் " நீங்க எனக்கு ஊட்டுங்க " என்று பெண்கள் சொல்வதும், " என்னை தூக்கி கொண்டு நடங்க " என்பதும் - சகிக்க முடியவில்லை...

நீயா நானா - தமிழர் அடையாளம் குறித்த விவாதத்தில் சாரு- வை நான்கு கெஸ்ட்டில் ஒருவராய் அமர வைக்க, சாரு எது பேசினாலும் - மூன்று கெஸ்ட்டில் ஒருத்தர் அவரது கருத்தை எதிர்த்த படி இருந்தனர். சாரு "ஏன் தான் வந்தோமோ ?" என நிச்சயம் நினைத்திருப்பார்.

இது மட்டுமன்றி நாலு பேருக்குள்ளும் தனித்தனியே சண்டை... கடைசியில் ஆங்கிலத்தில் ஒருவரை ஒருவர் திட்டி கொள்ளும் அளவு சென்று விட்டது.. !

இணையத்தில் இந்த நிகழ்ச்சி கிடைத்தால் கடைசி அரை மணி நேரம் கண்டு களியுங்கள்.

Wednesday, January 15, 2014

'வெற்றிக்கோடு' - இருவேறு விமர்சனங்கள்

வெற்றிக்கோடு குறித்து வந்த இரு விமர்சனங்கள் இங்கு பகிர்கிறேன்

பதிவர் கோபி, சார்டர்ட் அக்கவுண்டண்ட்



Mohan Kumar இன் 'வெற்றிகோடு' படித்துவிட்டேன்.

சுயமுன்னேற்றப் புத்தகங்களுக்கான தேவைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன.

சென்ற டிசம்பர் மாதம் இந்தியா சென்றிருந்த சமயத்தில் முன்னாள் தலைமையாசிரியர் 'The Secret' புத்தகத்தை எடுத்துக் கையில் கொடுத்து 'படிச்சிட்டு எனக்கு எப்படி இருக்குன்னு ஃபோன் பண்ணி சொல்லு' என்றார். இன்னும் படித்து முடித்த பாடில்லை!

அதே புத்தகத்தை எங்கள் வகுப்பு மாணவர் ஒருவர் தினமும் படிப்பதாகத் தொலைபேசியில் கூறினார். வாழ்வின் எல்லாக் கதவுகளும் சாற்றப்பட்டுவிட்ட பின்னர் அந்தப் புத்தகம் ஒன்றே அவருக்கு இருக்கக்கூடிய ஒரே ஜன்னல். நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனம்.

புனைவல்லாத எழுத்துகள் மேல் எனக்கு எப்போதும் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. அதிலும் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் என்றால் காததூரம் ஓடிவிடுவேன். இந்த genre இல் நான் படித்த ஒரே புத்தகம் '7 habits of highly effective people.'

கடந்த செப்டம்பர் மாதம் அகநாழிகையில் புத்தகங்களை வாங்கியபோது வெற்றிக்கோடு கண்ணில் பட்டது. மோகன்குமார் நினைவிற்கு வந்தார். வாங்கிவிட்டேன்.

மோகன்குமாரின் எழுத்தில் நல்ல ஃப்ளோ இருக்கும். புத்தகம் வாங்க அதுவே காரணம்.

புத்தகம் படித்து முடித்தபிறகு எனக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது. அவர் புத்தகத்தில் சொல்லும் பல விஷயங்களை நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறேன்! அப்படிஎன்றால் நான் ஏற்கனவே முன்னேறிவிட்டேன் என்று அர்த்தமா?!!! இதை ஒரு validation ஆகப் பார்க்கிறேன். சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்கிற திருப்தி. நான் அடிக்கடி வலியுறுத்தும் சில விஷயங்கள் (ஆயுள் காப்பீடு, மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு) குறித்தும் எழுதியிருக்கிறார்.

மற்ற சுய முன்னேற்றப் புத்தகங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் ஒன்றுதானே என்று நாம் நினைக்கலாம். அது ஓரளவிற்கு உண்மை என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. உயரமான ஓரிடத்தில் நின்றுகொண்டு 'இதைச் செய் அதைச் செய்' என்று சொல்லாமல் 'நான் இப்படியெல்லாம் செய்தேன், செய்கிறேன்' என்று நம்மோடு நின்று பேசுகிறார். சொந்த அனுபவம் குறித்த எழுத்துகள் எப்போதுமே அசலானவை.
*************
திரு ராஜசேகர்
Founder - President
உரத்த சிந்தனை

வெற்றிக்கோடு - உங்கள் நூல் படிக்க எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது. பாராட்டுகள்.

வெற்றிக்கோடு - உங்கள் பாதையின் அடிச்சுவடு. மிகவும் கடினமாக (Hard ) இருந்த ஒரு நபர் எப்படி பண்பட்டு தெளிந்திருக்கிறார் என்பதன் சுருக்கமே இந்த நூல்.

ஒவ்வொரு தலைப்பும் ஒன்றுக்குப் பல முறை படிப்போரை வாசிக்க வைக்கிறது.

கோபம் கட்டுரையில் உங்கள் தாய் அன்போடும், பாசத்தோடும் கொடுத்த டம்பளருக்கு உங்கள் கோபத்தால் ஆன கதியை படித்த போது மனம் வலித்தது. நீங்கள் உணர்ந்துள்ளதை தெரிவித்தது மற்றவர்களது சினத்தை தவிர்க்க உதவும். நீங்கள் சொல்லியிருப்பது போல் - தெரிந்தவர்களிடமும், அன்பானவர்களிடமும் தான் நமது கோபம் வெளிப்படுகிறது - இது தவறு.

உங்கள் நூலின் தலைப்புகள் ஒவ்வொன்றும் எல்லோரது வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று.

பலரும் படிக்க வேண்டிய சிறப்பான நூல். இருந்தாலும் என் கண்களில் பட்ட சில தவறுகள் - இரண்டு கட்டுரைகளின் தலைப்புகள் பயம் என்று அச்சாகி உள்ளது. பெரியோர் ரோல் மாடல் தலைப்பு எண் 11 க்கு பதில் 1 என இருக்கிறது

நம்முடன் கை பிடித்து வரும் நண்பர் - நம்மை பாதுகாத்து - கவனமுடன் மறுபக்கம் கொண்டு விடுவது போல உங்கள் நூல் அமைந்திருப்பதே அதன் சிறப்பு.

அன்புடன்

SVR

********************
பின்குறிப்பு :

வெற்றிக்கோடு புத்தகம் அகநாழிகை பதிப்பக வெளியீடு. புத்தக சந்தையில் ஸ்டால் எண் - 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) கிடைக்கும்.

எண்பது ரூபாய் விலை கொண்ட இப்புத்தகம் புத்தக சந்தையில் பதிவர் நண்பர்களுக்கு - ரூ. 50 க்கு  அகநாழிகை ஸ்டால் எண் 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) கிடைக்கும்.

Tuesday, January 14, 2014

வீரம் - சினிமா விமர்சனம்

கதை

கல்யாணமே வேண்டாம் என தம்பிகளுடன் வாழும் அஜீத், காதலில் விழுந்த பின் - காதலி குடும்பத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளை பந்தாடுவது தான் " வீரம் "

பிளஸ்

அஜீத் - அஜீத் - அஜீத்
சந்தானம்
ஜாலியான முன்பகுதி
குடும்பத்துடன் பார்க்க கூடிய கதை
வசனம் (பஞ்ச் டயலாக்ஸ்)

மைனஸ்

தேவி ஸ்ரீ பிரசாத் (இசை)
தம்பி ராமையா
பிற்பாதியில் வரும் தெலுகு பட வாடை



தமிழேண்டா !

வேஷ்டி - சட்டையில் அஜீத் அமர்க்களமாய் இருக்கிறார். சாப்பாடு போட்டு அடிப்பதென்ன - காட்சிக்கு காட்சி அவர் பேசும் தத்துவ பஞ்ச் டயலாக்ஸ் என்ன - ரயில் சண்டை என்ன - ஒரு மாஸ் ஹீரோ என்ன செய்யணுமோ அத்தனையும் அசால்ட்டாய் செய்கிறார்.

இடைவேளைக்கு பின் தாடியை எடுத்ததும் அவ்வளவு நன்றாக இல்லை - குறிப்பாக நாசரும் அவரும் அமர்ந்து பேசும் முதல் காட்சியில் மாமனும், மாப்பிள்ளையும் போல இல்லை - சம்பந்திகள் இருவர் பேசிக்கொள்கிற மாதிரி இருந்தது. அஜீத் அவசியம் அடுத்தடுத்த படங்களில் கெட் அப் மாற்ற வேண்டும் (குறிப்பாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் ) ஆனால் மங்காத்தா, ஆரம்பம், வீரம் என 3 படங்கள் இதே கெட் அப்பில் ஹிட் என்பதால் தயாரிப்பாளர் தரப்பு ஒத்துக் கொள்ளுமா என தெரியலை !

அஜீத்துக்கு அடுத்து கவர்வது சந்தேகமே இன்றி சந்தானம் தான் ! ஜாலியான முதல் பாதி சந்தானம் உபயம். சந்தானம் இருந்தும் கூட இரண்டாம் பகுதி காமெடி ஏனோ அதிகம் எடுபடலை.

தம்பி ராமையா சாட்டை பட கெட் அப்பில் அநியாயத்துக்கு மொக்கை போடுறார். அவர் சிரிக்க வைப்பது ஓரிரு காட்சிகளில் மட்டுமே !

சிவா - சிறுத்தை சிவா !

முதல் படம் ரீ மேக் செய்த சிவா - இம்முறை கதை, திரைக்கதை - வசனம் இயக்கம் !

அஜீத் ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் இருவரையும் கவரும் படி கதை - திரைக்கதை இரண்டும் அமைத்தது பெரிய ப்ளஸ் - படத்தின் வெற்றிக்கு அதுவே காரணம்.

சின்ன சின்ன டயலாக்ஸ் சிரிப்பை அள்ளுகிறது. வில்லன் " நீங்க நார்த் பக்கம் வருவீங்களா ?" என கேட்பது ஒரு உதாரணம்.

ஆனால் ஹீரோ வொர்ஷிப் மட்டுமே கவனத்தில் கொண்ட அவர் - மற்ற எந்த பாத்திரத்துக்கும் அதிகம் மெனக்கெடலை. பாலச்சந்தர் படங்களில் ஒரே காட்சியில் வரும் பாத்திரத்துக்கு கூட ஒரு identity இருக்கும். இயக்குனர் சிவா இந்த விஷயத்தை அடுத்த படத்தில் நினைவு கொள்வது நல்லது

சிறுத்தை சிவா - தமன்னா ரசிகரோ? இது வரை எடுத்த 2 படங்களிலும் அம்மணி தான் ஹீரோயின். தமன்னா குடும்ப பாங்காய் வருகிறார். கிளாமர் குறைவு தான்



படத்தில் எத்தனையோ வில்லன் இருந்தாலும் நிஜ வில்லன் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்  !

இவருக்கு மொத்தம் நான்கைந்து டியூன் மட்டுமே தெரியும் போலும். அஜீத் அறிமுகமாகும் முதல் பாட்டு சிங்கம் படத்து காப்பி என்றால் - அவர் பாடும் டூயட்கள் சில அப்படியே தெலுகு பட மூடுக்கு கொண்டு செல்கிறது (அஜீத் போடும் மஞ்சள் கலர், சிகப்பு கலர் பேன்ட்கள் வேறு சிரிப்பை உண்டு பண்ணுகிறது )

ரஜினி நடித்த எஜமான் போன்ற 80- 90 கள் காலத்து கதை தான். அஜீத்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மற்றும் காமெடி தான் படத்தை காப்பாற்றுகிறது

வீரம்  - குடும்பத்துடன் ஜாலியாக ஒரு முறை காணலாம் !

***************
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !

Sunday, January 12, 2014

தூம்-3, பாண்டிய நாடு & விடியும்முன் - சினிமா விமர்சனம்

வ்வொருவரும் வீரம் அல்லது ஜில்லாவுக்கு விமர்சனம் எழுதும் போது ரீலீஸ் ஆகி கொஞ்ச காலமான வேறு சில படங்களுக்கு எழுதுகிறேன்.. பொறுத்தருள்க !
***********
தூம் - 3

எனது அபிமான நடிகர் அமீர்கான் மற்றும் நம்ம தலைவிகளில் ஒருவரான காத்ரீனா இணைந்து கலக்கும் தூம் - 3 சமீபத்தில் கண்டேன்.

கடந்த சில வருடங்களில் வந்த அனைத்து ஹிந்தி பட ரிக்கார்டுகளை முறியடித்துள்ளதாக சொல்கிறார்கள்.. அந்த அளவு படத்தில் அப்படி என்ன இருக்கு என்று தான் தெரியலை...நிச்சயம் ஒரு முறை பார்க்கத்தக்க படம். அவ்வளவே !



அமீரின் உழைப்பு, சர்க்கஸ் என்ற பின்னணி, இடைவேளைக்கு பின் வரும் செம டுவிஸ்ட், காத்ரினாவின் டான்ஸ் போன்றவை பலம். கொட்டாவி வர வைக்கும் பின்பகுதி, அபிஷேக் பச்சன் அசிஸ்டெண்ட்டாக வருபவர் ஜோக் என்ற பெயரில் போடும் மரண மொக்கை போன்றவை படத்தை மிக சுவாரஸ்ய படம் என்று சொல்ல விடாமல் தடுக்கிறது !

போகட்டும்.... காத்ரீனா அறிமுக காட்சியில் போடுகிறார் பாருங்கள் ஒரு டான்ஸ்... அதுக்கே காசு சரியா போச்சு. மற்ற படி படத்தின் பிற காட்சிகளும் அவை தரும் entertainment -ம் வெறும் போனஸ் மட்டுமே !

கத்ரினா ஆடும் "கமலி - கமலி" என்கிற அந்த பாட்டு இதோ...



பாண்டிய நாடு

கிட்டத்தட்ட டிவி யில் போடும் நிலைக்கு வந்த பின் இங்கு எழுதுவது பற்றி மன்னிக்க ! இப்போது தான் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தது.



அருமையான, ஜாலியான டிபிகல் தமிழ் மசாலா படம் ! நல்ல பாட்டு, 3 பைட்டு,  குடும்ப செண்டிமெண்ட், கிச்சு கிச்சு மூட்டும் காமெடி என வெற்றிகரமான தமிழ் படத்தில் என்னென்ன வேண்டுமோ அவற்றை சொல்லி அடித்து வெற்றி கண்டுள்ளார் சுசீந்திரன். ஒரு இயக்குனராக இவரது வெற்றி சதவீதம் ஆச்சரியமூட்டுகிறது. ( விக்ரம் வைத்து செய்த ராஜபாட்டை படம் மட்டுமே தோல்வி என நினைக்கிறேன் ). வெண்ணிலா கபடி குழு, நான் மகான்  அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர் மற்றும் பாண்டிய நாடு - அனைத்தும் ஹிட் படங்களே !

கடைசியில் வரும் இரு சண்டைகள் தவிர விஷால் படம் முழுதும் பயந்தவராய் வருவது  ஆச்சரியமான விஷயம். ஹீரோ கண்ணுக்கு முன் இன்னொருவர் (விக்ராந்த்) ஹீரோ போல சண்டை போடுகிறார் !

பாரதிராஜாவின் நடிப்பு- மெலோ டிராமா. ஆனாலும் இயக்குனர் இமயம் இனி இந்த வேலையில் பிஸி ஆகி கொள்ளலாம்.  நாமும் அவரது படங்களிலிருந்து தப்பிப்போம் .

பாடல்கள் - பலவும் கேட்கும்படி உள்ளது. இமான் தமிழ் திரை உலகில் நன்கு காலூன்றி விட்டார்.

படம் - சுமாரான வெற்றி என்றே நினைக்கிறேன். வெற்றிக்கு முழு காரணம் - இயக்குனர் சுசீந்திரன் மட்டுமே !

நல்ல டைம் பாஸ் படம் .. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

விடியும் முன்

அண்மையில் என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திய தமிழ் படம் இது  தான். பல விதங்களில் வழக்கமான தமிழ் சினிமா பாணியை தைரியமாக உடைத்துப் போட்டுள்ளனர்.

ஒரு 30 வயது பெண்மணி மற்றும் - 12 வயது பெண் குழந்தை - இருவரும் யாரிடமிருந்தோ தப்பி ஓடியபடி இருக்க - அவர்களை தேடி அலையும் இரண்டு வில்லன்கள்... இதிலேயே கதை நகர்கிறது. ஹீரோ என்ற ஒருவர் இல்லை என்பதே நமக்கு உறைக்காத படி செல்ல, கடைசியில் ஹீரோ என்று ஒருவரும் இருக்கிறார் என அறியும் போது செம சுவாரஸ்யம் !



படத்தின் ஒரிஜினல் DVD -தற்போது வந்து விட்டது. அதில் தான் இரவு 8 மணிக்கு பார்க்க துவங்கினோம். பின் படம்  தந்த படபடப்பான மன நிலையில் சாப்பிடவே தோன்றவில்லை.  ஒரு வழியாய் படம் பார்த்தவாறே சாப்பிட்டாலும் - கை கழுவ கூட எழ முடியவில்லை.. !

40 வயதுக்கு மேற்பட்ட ஆணோ, பெண்ணோ பார்க்கும்போது நமது குழந்தை இப்படி பட்ட கும்பலிடம் சிக்கினால் என்ன ஆவது என்ற எண்ணம் மனதின் ஓரம் ஓடிய படியே இருக்கும். கிட்டத்தட்ட அஞ்சாதே படத்தில் மிஸ்கின் பயன்படுத்திய உத்தி இது. 

ஆங்காங்கு மிஸ்கின் படம் பார்க்கும் உணர்வு வந்த படி இருந்தது. இதனை குறையாக அல்ல - பாராட்டாகவே சொல்கிறேன்.

 மிக அழகான பூஜா - ராசி இல்லா நடிகை என - தமிழ் திரை உலகம் அதிகம் பயன்படுத்தி கொள்ள வில்லை. இப்படத்தில் ரொம்ப  apt -ஆன  நடிப்பு அவருடையது. 

அந்த குட்டி பெண் பேச்சிலும், முக பாவத்திலும் - அசத்துகிறாள். 

குறுந்தாடி வைத்த (படத்தின் துவக்கத்தில் ஒரு பெண் இவருக்கு ஷேவிங் செய்து விடுவார்) வில்லன் யார்? இயக்குனர் ஜனநாதன் முகஜாடையில் இருந்தார். இவரும் - இன்னொரு வில்லனான ஜான் விஜய் - இருவரும் நம் திட்டுகளை மொத்தமாக வாங்கி கட்டி கொள்கிறார்கள் 

இந்த கதை - இரண்டு அடுக்குகளை கொண்டது. குழந்தைகள் கடத்தும் கும்பல் -  விபசாரம் உள்ளிட்ட கருப்பு பக்கங்கள் - நிஜமாக - நடக்கும் சாத்தியம் உள்ளவை.

படத்தின் கடைசி 15 நிமிடத்தில் காட்டப்படும் பழி வாங்கும் படலம் பார்க்க மிக சுவாரஸ்யம் எனினும் - படம் முடிந்ததும் யோசித்தால் முழுக்க சினிமாட்டிக் என உறைக்கிறது 

இயக்குனர் பாலாஜி குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ! 

இது போன்ற வித்தியாச படங்கள் தான் தமிழ் திரை உலகம் மீது நம்பிக்கை கொள்ள செய்கிறது. 

Saturday, January 11, 2014

புத்தக சந்தையும், நம்ம புக்கும்

சென்னையில் நேற்று முதல் தொடங்கிய புத்தக சந்தையில் முதன் முறையாக எனது புத்தகமும் கிடைக்க உள்ளது.

ப்ளாகில் எழுதும் நண்பர்களில் - சிலரேனும் என்றேனும் ஒரு நாள் புத்தகம் எழுதி வெளியிட வேண்டுமென்று விரும்புவர். அப்படித் தான் எனக்கும் இப்புத்தக வெளியீடு நிகழ்ந்தது !

வெற்றிக்கோடு புத்தகம் குறித்து சில தகவல்கள்/ அனுபவங்களை சிறிது தயக்கத்தோடு பகிர்கிறேன்...

தயக்கத்தின் காரணம் - முக நூலிலோ, பிளஸ்-சிலோ இப்படி எழுதுவது பற்றி கிண்டல் அடிக்கப்படலாம்..... ஆயினும், இங்கு பகிர்பவை எனக்கு நிகழ்ந்த அனுபவங்கள். நான் சொல்லா விட்டால் (குறிப்பாக இங்கு குறிப்பிடும் சம்பவங்கள் ) - வாசிக்கும் உங்களுக்கு தெரியாமல் தான் போகும். எனவே இப்பதிவுக்கு நண்பர்களின் கிண்டல்களை - பாசிடிவ் ஆக எடுத்து கொண்டு சிரித்த படி கடந்து செல்லும் மனபாவத்தை ப்ளாகாண்டவர் எனக்கு அளிக்கட்டும் !
*************
வெற்றிக்கோடு - 2013 ஆகஸ்ட்டில் வெளியான சுய முன்னேற்ற புத்தகம். மற்ற சுய முன்னேற்ற புத்தகங்களுடன் இது வேறுபடுவது தன் வாழ்க்கை அனுபவங்களை பெருமளவு அடிப்படையாய் கொண்டு எழுதியது தான்.



ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் ஒரு புத்தகம் எழுதுமளவு செய்திகள் (மெசேஜ்!) நிச்சயம் உண்டு. மேலும் வாழ்ந்து மறைந்த பின் - நாம் இங்கு இருந்தோம் என்பதன் சாட்சியாக ஒரு புத்தகம் அமையவேண்டும் என்பது ரொம்ப நாள் என் மனதில் பதிந்து போன ஒன்று.

மேலே சொன்ன இரண்டு எண்ணங்களும் தான் வெற்றிக்கோடு புத்தகம் வெளியாவதற்கு காரணம் !

வீடுதிரும்பல் ப்ளாகில் 10 அத்தியாயம் வரை வந்தது. அதன் பின் " எல்லாவற்றையும் இங்கு எழுதி விட்டால் - அப்புறம் புத்தகத்தை யார் வாங்குவார்? " என பிற அத்தியாயங்களை வெளியிடாமல் நிறுத்தி விட்டேன் :))

இயக்குனர் கேபிள் சங்கர் - அகநாழிகை வாசுவிடம் " இதை கண்டிப்பா புக்கா போடணும் " என பரிந்துரை செய்ய, பால கணேஷ் உதவியுடன் துரித காலத்தில் அச்சிடப்பட்டு  சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் வெளியானது.

முதல் 2 நாட்களில் 150 காப்பிகள் விற்றது நான் எதிபாராத விஷயம் தான் ! நண்பனின் புத்தகம் என்ற அன்பும், சுய முன்னேற்றம் மீது இருக்கும் சிறு ஈர்ப்பும்  தான் முதல் இரு நாட்கள் விற்பனைக்கு காரணம் என நினைக்கிறேன்

புத்தகம் வெளியான பின் கிடைத்த சில அனுபவங்களை பகிர விரும்புகிறேன்

சம்பவம் - 1

அண்ணன்கள் - அக்கா குடும்பத்துக்கு வெற்றிக்கோடு புத்தகம் கூரியரில் அனுப்பி வைத்திருந்தேன். ஒரு வாரம் கழித்து அக்காவிடமிருந்து போன்.

" உன் புக்கை பார்த்துட்டு தாத்தா  (இவர் எங்கள் உறவினர் அல்ல - 82 வயதிலும் வீடு கட்டி விற்கும் கிராமத்து மனிதர் )  " உங்க தம்பி எழுதினதா?" அப்படின்னு வாங்கிட்டு போனார்; படிச்சுட்டு திரும்ப தர மாட்டேங்குறார். என் வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயம் இதுல இருக்கு .  இந்த புக்கை நானே வச்சுக்கிறேன் " னு சொல்லிட்டாரு.

பில்டர் தாத்தாவின் கருத்தை கேட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அக்காவிற்கு அப்புறம் வேறு புத்தகம் அனுப்பி வைத்தேன்.

சம்பவம் - 2

ACS இன்ஸ்டிடியூட் சென்ற போது அங்கு பெரிய பொறுப்பிலிருக்கும் ராமகிருஷ்ணன் என்பவர் வெற்றிக்கோடு  படித்து விட்டு மிக சிலாகித்து பேசினார். அடுத்தடுத்த முறை செல்லும்போதும் நம்ம புக்கை டேபிள் மேலேயே வைத்திருந்தார்;  அது பற்றி கேட்க,

"மேலேயே புக்கை வச்சா தான் பார்த்துட்டு அது என்ன புக்குன்னு கேட்பாங்க ; நிறைய பேர் அப்படி கேட்டுட்டாங்க. ஆர்வமா கேட்குறவங்க கிட்டே -  புக்கை பத்தி டீடெயிலா பேசிருக்கேன். அவங்களுக்கு ரொம்ப ஆச்சரியம் !"

சம்பவம் -  3

ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளேன். எஸ்கலேட்டரில் ஏறும்போது " மோகன் சார் " என ஒரு குரல். திரும்பி பார்க்க - அழைத்தது அதே மீட்டிங்கிற்கு வந்த ரவி என்ற நண்பர் - இருவரும் சற்று தள்ளி நின்றவாறு எஸ்கலேட்டரில் சென்றபடி இருக்க - " உங்க புக் படிச்சேன் சார்; அருமையா இருந்தது. கோபம் பத்தி எழுதுனது எனக்கு அப்படியே கரக்ட்டா இருந்துச்சு "

எஸ்கலேட்டரில் செல்லும்போது இப்படி ஒரு நேரடி பின்னூட்டம் கிடைத்தது காமெடியான அனுபவமாய் மனதில் பதிந்து விட்டது.

சம்பவம் -  4

சென்னையில் இயங்கி வரும்  உரத்த சிந்தனை அமைப்பில் நானும் ஒரு உறுப்பினர். அதன் தலைவர் ராஜசேகருக்கு புத்தகத்தின் ஒரு பிரதி அனுப்பியிருந்தேன். படித்து விட்டு மிகவும் பிடித்து போய் - அது பற்றி ஒரு விமர்சன / பாராட்டு கடிதம் எழுதியவர் - அடுத்து உரத்த சிந்தனை மூலம் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் - முதல் மூன்று பரிசுகள்  பெற்ற மாணவர்களுக்கு தர இப்புத்தகம்  20 பிரதிகள் வாங்கினார்.

அதே உரத்த சிந்தனையை சேர்ந்த பிச்சம்மாள் என்ற வயதான பெண்மணி புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் ஒவ்வொரு பாராவில் அலசி 5 பக்கத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

சம்பவம் -5

இதனை சம்பவம் எனச் சொல்வதை விட சம்பவங்கள் என்று சொல்லணும்.

பதிவர் நண்பர்கள் என்ற குழுவுக்கு அடுத்து - இப்புத்தகத்தை அதிகம் வாங்கிய/ படித்த இன்னொரு நண்பர் குழு  - மனைவி அலுவலகத்தில் வேலை செய்வோர் தான்.

" இலவசமாக புத்தகத்தை யாருக்கும் தராதே; பணத்துக்காக சொல்லலை; இலவசம் என்றால் படிக்கவே மாட்டார்கள் " என மனைவியிடம்  சொல்லியிருந்தேன். 50 ரூபாய்க்கு தான் மனைவி அனைவருக்கும் புத்தகத்தை தந்திருக்கிறார்.

குறைந்தது இருபதுக்கும் மேற்பட்ட மனைவியின் சக ஊழியர்கள் புத்தகம் பற்றி போனில் பேசியிருக்கிறார்கள்.

குறிப்பாக - மிக வறுமை நிலையிலிருக்கும் - ஒரு அட்டெண்டர் பெண்மணி  புத்தகத்தை  படித்து விட்டு " இவருக்கு நான் ஏதாவது பரிசு தரணும்" என இரண்டு பேனாக்கள் வாங்கி எனக்கு மனைவி மூலம்  அனுப்பியிருந்தார். மிக நெகிழ்வான தருணம் அது. ஏனோ அவற்றை வைத்து எழுதவே தோன்றவில்லை  - அப்பேனாக்களை அப்படியே வைத்துள்ளேன்

***********
மேலே சொன்னவற்றில் பெரும்பாலானவை நிகழ்ந்தது புத்தகம் வெளியான முதல் சில வாரங்களில்.

வெற்றிக்கோடு புத்தகம் அகநாழிகை பதிப்பக வெளியீடு. புத்தக சந்தையில் ஸ்டால் எண் - 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) வெற்றிக்கோடு உட்பட - அகநாழிகையின் அனைத்து படைப்புகளும் கிடைக்கும்.

எண்பது ரூபாய் விலை கொண்ட இப்புத்தகம் புத்தக சந்தையில் பதிவர் நண்பர்களுக்கு - ரூ. 50 க்கு  அகநாழிகை ஸ்டால் எண் 666 மற்றும் 667 -ல் (புதுப்புனல் ) கிடைக்கும்.



வெற்றிக்கோடு புத்தகம் ஏன் வாங்க வேண்டும் ?

1. சிறு கிராமத்தில் பிறந்து இன்று சென்னையில் கம்பனி செகரட்டரி துறையில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வர எப்படி முடிந்தது - இதன் பின் இருந்த உழைப்பு, திட்டமிடல் - இப்புத்தகம் மூலம் உங்களுக்கு தெரிய வரும்.

2. வெற்றி பெற 100 % நல்லவனாகவோ, 100 % திறமைசாலியாகவோ இருக்க  வேண்டுமென்று அவசியமில்லை. மனிதர்களுக்கே உரித்தான சின்னச் சின்ன குறைகளுடன் இருந்தாலும், தம் இலக்கில் எப்படி முன்னேறுவது என்பதையும், ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை எத்தனையோ மறு வாய்ப்புகள் வழங்குவதையும் இப்புத்தகம் சொல்கிறது.

3. சுய முன்னேற்ற புத்தகம் என்ற போதும் எளிமையான பாணியில் சொல்லப்பட்டதால் - இரண்டு மணி நேரத்தில் இப்புத்தகத்தின் 17 அத்தியாயங்களை நீங்கள் வாசித்து விடலாம் !

4. நீங்கள் அறிந்த ஒரு நண்பனின் வாழ்க்கைக்  குறிப்பு என்ற அளவிலும் இது வாசிக்க படலாம் !

5. புத்தக சந்தையில் 50 ரூபாய்க்கு இப்புத்தகம் கிடைக்கிறது... !
***********
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி !
***********
தொடர்புடைய பதிவுகள் :

சுய முன்னேற்ற புத்தகங்கள் அவசியமா ?


வீடு திரும்பல்' மோகன்குமாரின் "வெற்றிக்கோடுகள்" : ஒரு விமர்சன‌ பார்வை

Monday, January 6, 2014

2013 - ஒரு டயரி குறிப்பு

லைப்பில் சொன்னது போல - இது ஒரு டயரி குறிப்பு தான். விருப்பமிருந்தால் வாசியுங்கள் நண்பர்களே !

2013 - 8 விஷயங்களுக்காக எனக்கு  மறக்க முடியாத ஒரு வருடம்

1. வெற்றிக்கோடு புத்தகம் வெளியானது - 

வாங்க முன்னேறி பார்க்கலாம் என ப்ளாகில் எழுதியதன் நீட்சியே வெற்றிக்கோடு.

பதிவர் விழா - நாள் குறித்த பின் பேசி - இந்த புத்தகம் கொண்டு வர முடிவெடுத்து நண்பர் பால கணேஷ் உதவியுடன் - அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்தது.

கொஞ்சம் நேரமெடுத்து ப்ரின்ட்டிங்கில் நிகழ்ந்த சிற்சில தவறுகளை தவிர்த்திருக்கலாம் என்றாலும் உள்ளடக்கத்தில் மிகுந்த திருப்தியை தந்த புத்தகம்.

புத்தகம் தந்த/ தந்து கொண்டிருக்கும் அனுபவம் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்

2. கம்பனி சட்டம் 2013

கிட்டத்தட்ட 20 வருடத்துக்கும் மேலாக எதிர்பார்த்த கம்பனி சட்டம் இவ்வருடம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றதும், பின் அரசு கெசட்டில் வெளியானதும் - என்னை போன்ற கம்பனி செக்ரட்டரிகள் அனைவருக்குமே மிக முக்கிய நிகழ்வு.

இதன் பின் CA, ICWA, ACS இன்ஸ்டிடியூட் கள் நடத்தும் பல மீட்டிங்-களில்   கம்பனி சட்டம் குறித்து பேசி வருகிறேன். செப்டம்பர் முதல் வாரம் முதல் வருட இறுதி வரை - வாரம் ஒரு மீட்டிங் - காவது கம்பனி சட்டம் குறித்து பேசியிருக்கிறேன்

முதல்முறையாக சில கல்லூரிகளிலும் கம்பனி சட்டம் உள்ளிட்ட சில தலைப்புகளில் பேச அழைத்ததும் இவ்வருடம் தான் துவங்கியது.

சென்னையில் மட்டுமன்றி வெளியூரிலும் சென்று பேச எந்த தடையும் சொல்லாமல் ஆதரிக்கும் எனது நிறுவனத்தையும், ஹவுஸ் பாசையும்  இந்த நிமிடம் நன்றியோடு நினைவு கூர்கிறேன்

3.  ஆனந்த தீபாவளி 

ரொம்ப வருடங்களுக்கு பிறகு பெற்றோர்- அண்ணன்கள்- அக்கா அவர்களது குழந்தைகளுடன் இவ்வருடம் தீபாவளி கொண்டாடினோம். சின்ன சண்டையோ, மனஸ்தாபமோ இன்றி குடும்பத்தினர் அனைவரும் செம ஜாலியாக கொண்டாடிய இவ்வருட தீபாவளி மறக்க முடியாத ஒன்று.

4. பயணம் 

மே மாதம் நண்பர்களுடன் - கேரளா சென்று படகு இல்லத்தில் தங்கியது அற்புதமான அனுபவம். குறிப்பாக அந்த 2 நாட்களும் சாப்பிட்ட மீன்களின் ருசி வாவ் !!



அந்த பயணத்தில் நாங்கள் சென்ற கொச்சின் மற்றும் அதிரப்பள்ளி அதிகம் ஈர்க்க வில்லை (அதிரப்பள்ளி நல்ல இடம் என்றாலும், நாங்கள் சென்ற போது அருவியில் தண்ணீர் அதிகம் இல்லை )

அம்மாவிற்கு உடல் நலமில்லை என்பதால் தனியாக அடிக்கடி தஞ்சை சென்று வந்தேன். தஞ்சையின் மிக புகழ் பெற்ற பம்பாய் சுவீட்ஸ் ஓனரை சந்தித்து விரிவான பேட்டி எடுத்து, மற்ற வேலைகளின் நடுவே  அதனை பதிவாக்காமல் விட்டு விட்டேன் :((

வருட இறுதியில் அண்ணன் வீட்டுக்கு சென்ற பெங்களூரு விசிட் - நிறைவான ஒன்றாக இருந்தது.

5.  சில நற்காரியங்கள் 

தஞ்சை சேவை இல்லத்துக்கு மேஜை, நாற்காலிகள் நண்பர்கள் பாலகுமார் (AIMS India, USA) மற்றும் ஆதி மனிதன்  மூலம் பெற்று தந்தது



புழுதிவாக்கம் பள்ளியில் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளித்த விழா 

அதே புழுதிவாக்கம் பள்ளி மாணவர்களுக்கு செய்த காரியர் அவேர்நேஸ் நிகழ்ச்சி 

நேரம் கிடைத்த போது சில ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் இல்லங்களுக்கு வார இறுதியில் சென்று டியூஷன் எடுத்தது

போன்றவை இவ்வருடம் செய்த சில நற்காரியங்கள்.

6. எங்களது ஸ்டடி சர்க்கிள் 

ACS இன்ஸ்டிடியூட்டின் ஒரு கிளையாக சென்னை வெஸ்ட் ஸ்டடி சர்க்கிள் என்ற அமைப்பில் நாங்கள் மாதம் ஒரு மீட்டிங் நடத்தி வருகிறோம். இந்த அமைப்பின் தலைவராக நண்பர் ரெங்கராஜனும், துணை தலைவராக நானும் சென்ற ஜனவரியில் தேர்வானோம்.

ஸ்டடி சர்க்கிள் துவங்கி 2 வருடம் ஆனாலும், இந்த வருடம் இதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்க அளவில் இருந்தது. ஒவ்வொரு மீட்டிங்கிற்கும் வந்த கூட்டம் நாங்களே எதிர்பாராதது. வித்யாசமான புதுப்புது தலைப்புகளில் மீட்டிங் நடத்தியதும், குழு இளைஞர்களின் உழைப்பும் தான் வெற்றிக்கு காரணங்கள் !

7. பதிவுலகம் 

பதிவர் திருவிழா இந்த ஆண்டு அதிக சச்சரவின்றி (அல்லது குறைவான சர்ச்சைகளோடு)  நடந்து முடிந்தது. பதிவர்கள் பலரும் - ப்ளாகை விட முகநூலில் அதிக ஆக்டிவ் ஆகி கொண்டிருக்கிறார்கள் என தோன்றுகிறது.

வீடுதிரும்பல் - ஒரு வருடம் தமிழ் மணத்தில் முதல் இடம் பிடித்திருந்தது மற்றொரு சந்தோஷமான விஷயம்.

ப்ளாகோமேனியா-வை விட்டு ஒரு வழியாக நான் வெளிவந்ததும் இந்த ஆண்டு தான் !

8. கார் ! கார் !!

2013 இறுதியில் கார் வாங்கினேன். அது பெரிய விஷயமல்ல - 42 வயதில் கார் ஓட்ட கற்று கொண்டு ஓட்ட ஆரம்பித்து விட்டேன். அது நிஜமாவே பெரிய விஷயம் தான் (அட்லீஸ்ட் எனக்கு !) இன்னும் கொஞ்ச காலம் தாமதித்திருந்தால் கடைசி வரை கார் டிரைவிங் தெரியாமலே போயிருக்கும் ! 

***********
யோசித்து பார்க்கையில் மேலே சொன்னவற்றில் பெரும்பாலான விஷயம் - இவ்வருடத்தில் நிகழும் என வருட துவக்கத்தில் நினைக்க வில்லை. 

வாழ்க்கை இப்படித்தான் பல்வேறு சுவாரஸ்யங்களை தன்னுள் புதைத்து வைத்து கொண்டிருக்கிறது .....

2014 - என்னென்ன சர்ப்ரைஸ் தரப்போகிறது? பார்க்கலாம் !

Sunday, January 5, 2014

வானவில் - பெங்களூரு -மண்ணில் இந்த காதலன்றி - இவன் வேற மாதிரி

பெங்களூரு பயணம் 

இரண்டு நாள் பயணமாக பெங்களூரு சென்று - ஷாப்பிங் (மட்டும்) செய்து வந்தோம்.

பெங்களூருவில் இம்முறை வியக்க வைத்த விஷயங்கள் :

எங்கள் அண்ணன் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் - அடடா ! இது இந்தியாதானா . வெளிநாடா என வியக்க வைத்தது. அட்டகாசமான ஜிம், வெது வெதுப்பான தண்ணீரில் நீச்சல் குளம், அற்புதமாய் பூத்து குலுங்கும் ரோஜாக்கள்.................... அப்பார்ட்மெண்ட்டை ஒரு முறை ரவுண்ட் வந்தால் ஒரு கிலோ மீட்டர் தூரமாம். ஆள் ஆளுக்கு - 3 அல்லது 4 ரவுண்டாவது வருகிறார்கள்

அழகான சுவெட்டர், வெட்டி விடப்பட்ட முடி, எளிய மேக் அப் உடன் ஒருவர் வந்து சமையல் செய்து கொண்டிருந்தார். நான் கூட பக்கத்து வீட்டு பெண்மணி என நினைத்தேன். வீட்டு வேலை செய்பவராம் ! அடேங்கப்பா ! அவரை தனியாக பார்த்தால் அப்படி சொல்லவே முடியாது !

பகல் 12 மணிக்கு மக்கள் - உடலில் வெய்யில் நன்றாக உறைக்கும் படி அடிக்கட்டும் என சிமெண்ட் பெஞ்ச்களில் வந்து அமர்கிறார்கள். சென்னையில் பகல் 12 மணிக்கு உள்ள நிலையை நினைத்து பார்த்தது மனது ! ஹூம் !

"ஊரோடு ஒத்து வாழ்" என்ற பழமொழிக்கேற்ப அங்குள்ள மக்களை போல் உடையணிய வேண்டுமென்றால்- நிச்சயம் பல ஆயிரங்கள் செலவு செய்யணும்....

மனைவியும், மகளும் இங்குள்ள டிசைன்கள் சென்னையில் கிடைக்கவே கிடைக்காது என்று என் தலை மேல் அடித்து சத்தியம் செய்து உடைகளாக வாங்கி தள்ளினார்கள்.. எனக்கு வழக்கம் போல ஒரே ஒரு குண்டூசி கூட கிடைக்கலை  !

பார்த்த படம் - இவன் வேற மாதிரி 

சரவணன் இதற்கு முன்பு இயக்கியது " எங்கேயும், எப்போதும் " . அப்படத்தை மறந்து விட்டு பார்த்தால் - இப்படத்தை ஓரளவு ஓகே என கொள்ளலாம்.

" எங்கேயும், எப்போதும் " இயக்கிய சரவணனின் அடுத்த படைப்பு என்ற எண்ணத்துடன் பார்த்தால் - பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.



சிட்டிசன்,  ஜென்டில் மேன் காலத்துக் கதை. லாஜிக் ஓட்டைகள் எக்கச்சக்கம். " எங்கேயும், எப்போதும் " படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதன் இயல்பான காமெடி. இங்கு ஹீரோயினை காமெடி செய்ய வைக்கிறேன் என ஜோக்கர் போல ஆக்கி விட்டார். (ஹீரோயின் சுரபி அழகாய் இருக்கிறார். தமிழில் அடிக்கடி நடித்தால் ஆதரவு தரலாம் )

சுஜாதா சொல்வது போல் இரண்டாவது படம் தான் எந்த இயக்குனருக்கும் பெரிய சவால். அந்த சவாலில் சரவணன் தோற்று விட்டார் என்று தான் வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது !

அழகு கார்னர்



படித்ததில் பிடித்தது

நம்ம வாழ்க்கை மொத்தம் 360 டிகிரியில் சுத்திக்கிட்டு இருக்கு. ஆனா நாம எல்லோரும் நம்ம பாயிண்ட் ஆப் வியூவை மட்டும், அதாவது 90 டிகிரி காட்சிகளை மட்டுமே கவனிச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.  இந்த விஷயம் எனக்கும் ரொம்ப தாமதமாக தான் புரிந்தது. 360 டிகிரியில் 90 ஐ கழிச்சு வர்ற 270 டிகிரி கோணத்தை நாம் கண்டு கொள்வதே இல்லை

விகடன் கேள்வி பதில் பகுதியில் நடிகர் சத்யராஜ்

முகநூலில் கிறுக்கியது

எந்த ஒரு செயலையும் தொடங்குவது தான் கடினம். தொடங்கிய பின் மற்றவை தானாகவே நடக்கிறது. நம்மில் பலரும் எத்தனையோ விஷயங்களை "அப்புறம் செய்யணும்" என்றே துவங்காமல் இருந்து விடுகிறோம்.

போலவே தொடங்கிய ஒரு நல்ல விஷயத்தை சரியாக முடிப்பது இன்னொரு பெரிய சாலஞ்ச். (மாடிக்கு ஒரு பீரோவை தூக்கி செல்லும்போது கடைசி சில படிகளில் நிரம்ப திணறுவோம்.. நினைவிருக்கா? எந்த ஒரு போட்டி ஓட்டத்திலும் கடைசி சில நிமிடம் இழுத்து பிடித்து ஓடுவது தான் மிக பெரிய சவால் !)

எப்படி தொடங்குவது, எங்கே சரியாக முடிப்பது இதை சரியாக செய்ய துவங்கினால் - நினைத்த எதையும் அடையலாம் !

எதையும்.. எதையும்.. எதையும்... !

இதையே வடிவேலு பாணியில் சொல்லணும்னா " எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்... ஓகே?"

என்னா பாட்டுடே

ராஜாவின் மேஜிக்கில் இன்னொரு அற்புதமான பாட்டு - "மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?"

மூச்சு விடாமல் பாடுகிறார் SPB என்பது இப்பாடலையும், படத்தையும் செமையாக மார்கெட்டிங் செய்ய உதவியது. (படமும் அருமையாக இருந்தது.... )

சரணத்தை கேட்கும் போதெல்லாம் SPB எங்கேனும் மூச்சு விடுகிறாரா என்று தான் கவனிக்கிறோமே அன்றி -  பெண்ணின் அருமையை சொல்லும் இப்பாடலின் வரிகள் கவனிக்கப்படாமலே போய் விட்டது

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா ? கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா என்று செல்லும் இப்பாடலை எழுதியது பாவலர் வரதராசன் என்று படத்தின் டைட்டில் சொன்னாலும், பின்னாளில் கங்கை அமரன் பாடலை எழுதியது தான் தானென்றும் படத்தின் மார்கெட்டிங் உத்திக்காக அப்போது வரதராசன் எழுதியதாக சொல்லப்பட்டது என்றும் சொன்னார்.

படம் வெளியான 1990- 91 ல் ரேடியோ மற்றும் டிவி யில் அதிக அளவு ஒளி /  ஒலி பரப்பப்பட்ட பாடல் இது. எங்கள் கல்லூரி நண்பன் ரவி இப்பாடலை மூச்சு விடாமல் "ஒப்பிப்பான்". எங்களுக்கு அது காமெடியாக இருக்கும் !

முதல் சரணம் முடிந்து இரண்டாவது சரணம் தொடங்கும் முன் ராஜா ப்ளூட்டில் மயக்கியிருப்பார் .. பார்த்து ரசியுங்கள் (அட்ட்டகாச ப்ளூட் இசை முடிகிற இடத்தில் தான் ராதிகா - ரஜினி ஸ்டைலில் நடந்து காண்பிப் பார் ...)



சம்பவம் 

மகளுக்கு உயிரியல் பாடத்திற்காக குறிப்பிட்ட ஒரு பூ வேண்டுமென பல இடங்கள் தேடி அலைந்தோம். கடைசியாக காமாட்சி மெமோரியல் மருத்துவமனை இருக்கும் நூறடி சாலையில் அந்த பூ கிடைத்தது.

அந்த பூ ஒரு வித்யாசமான வீட்டின் (??) அருகே இருந்தது. அது ஒரு நடமாடும் வேன். அதன் அருகில் டென்ட் போல் அமைத்து ஒரு வடநாட்டு குடும்பம் ஏகப்பட்ட சிறு குழந்தைகளுடன் வசித்தனர். அதனை ஒட்டி தான் இந்த பூ கிடைத்தது.

சற்று தயக்கத்துடன் சென்று நாங்கள் பூவை பறிக்க உள்ளிருந்து ஒரு பெண்மணி - இடுப்பில் ஒரு குழந்தையுடன் வந்து " இன்னும் கொஞ்சம் பறித்து கொள்ளுங்கள் " என்று சைகை செய்தார். அழுக்கான குழந்தைகள் மூக்கில் சளி ஒழுக நின்று வேடிக்கை பார்த்தனர். குடும்ப கட்டுப்பாடே செய்து கொள்ள மாட்டார்கள் போலும் !

என் மனதை தொட்ட ஒரு விஷயம் - அவ்வளவு வறுமையில் இருக்கும் அவர்கள் ஒரு நாய் வளர்த்து வந்தது தான். அந்த நாயும் அவர்கள் ஏழ்மையை குறிப்பது போல் எலும்பும் தோலுமாய் இருந்தது.

இத்தகைய மனிதர்களை காணும் போது - அவர்களோடு பேசும்போது தான் கடவுள் நம்மை எவ்வளவோ மேலான நிலையில் வைத்துள்ளார் என தோன்றுகிறது !
Related Posts Plugin for WordPress, Blogger...