Saturday, October 26, 2019

பிகில் - சினிமா விமர்சனம்

ட்லீ படங்களின் ரசிகனல்ல நான். ஆயினும் பிகில் என்னை கவர்ந்தது. மிக எளிய காரணம். பெண்களுக்கும் கனவு என ஒன்று இருக்கலாம்; அதை அவர்கள் தொடரவேண்டும் - திருமணம், ஆசிட் அட்டாக் போன்ற எதுவும் அந்த கனவுகளுக்கு தடையாய் இருக்க கூடாது என்று தெளிவாய் சொன்ன கருத்து தான் நிச்சயம் படத்தை ஆவரேஜ் என்று சொல்லாமல் "குட்" என்று சொல்ல வைக்கிறது.



ரொம்ப சுமாரான முதல் பாதி; வெறித்தனம் பாட்டு அமர்க்களம் என்றால்- அதை படமாக்கிய விதம் - குறிப்பாய் நடனம் இன்னும் நன்றாய் இருந்திருக்கலாம் (விஜய் அட்டகாசமாய் ஆடக்கூடியவர்; அவருக்கு  எக்ஸர்சைஸ் செய்யும் வகை ஸ்டெப் எதற்கு !) சிங்கப்பெண்ணே  மற்றும் மாதரே பாடல்கள் படமாக்கம் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

காமெடி என்று எதோ முயற்சிக்கிறார் இயக்குனர். அதுவும் எடுபடலை. இடை இடையே சண்டைகள் வேறு (நிறைய அனாவசியம்)

முதல் பாதி மோசமா என்றால் - வழக்கமான ஸ்டார் படம் (ரஜினியின் பழைய மசாலா படங்கள்) போல தான் இருந்தது.

இடைவேளைக்கு சற்று முன் லேசாக முக்கிய விஷயத்தை தொடுகிறார் இயக்குனர்

செகண்ட் ஹாப் நிச்சயம் என்னை முழுதும் திருப்தி படுத்தியது. குறிப்பாக திருமணம் ஆனபின் வந்து ஆடும் காயத்ரி - ஆசிட் அட்டாக்கில் மீண்டு ஆட வரும்  பெண் இருவர் பகுதியும் சரியான விதத்தில் எமோஷனல் ரீச் ஆகிறது.

பிற்பாதியில் சில ரசிக்க வைக்கும் சீன்கள் வந்த வண்ணம் உள்ளன - டில்லி போலீஸ் ஸ்டேஷனில்  விஜய் செய்யும் அடாவடி  - மேட்ச்கள் (தோற்கும் படி சென்று ஜெயிக்கும் வழக்கமான பாணி எனினும்) ..

படத்திற்கு மிக்ஸட் ரிவியூ வருவதை உணர முடிகிறது. இணையத்தில் அதிகமாய் விஜய் ஹேட்டர்ஸ் முடிந்த பங்கை செய் கிறார்கள். ஆனால் படம் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு பிடிக்கும் படம் ஹிட் ஆகவே செய்யும் ..

பாலசோவில் முதன் முறை படம் பார்த்தோம். அட்டகாசமான திரை அரங்கம். தியேட்டர் காம்ப்ளெக்ஸ்  வியக்க வைக்கிறது; ஸ்னேக்ஸ் மிக ரீஸன்பில் விலை; (நாங்கள் வழக்கமாய் செல்லும் PVR -ல் Snacks கொள்ளை விலை.

எலைட் ஆடியன்ஸ். விஜய் வரும்போதும் சரி, ஏ ஆர் ரகுமான் திரையில் வரும்போதும் சரி- எண்ணி நான்கு பேர் கை  தட்டினார்கள்.

அதை விட இன்னொரு விஷயம்: படம் போட்ட பின் பல நிமிடம் சத்தம் தான் வந்தது; திரையில் ஒன்றுமே தெரியலை. மக்கள் சத்தம் போடாமல் அமைதியோ அமைதி காத்தனர்.

டயலாக் எல்லாம் துவங்கிய பின் சிலர் கத்த, நிறுத்தி விட்டு, முதலில் இருந்து படம் போட்டனர் !


பிகில்

அதிக எதிர்பார்ப்பின்றி செல்லுங்கள். நிச்சயம் ஒரு முறை காண தகுந்த படம் தான் !

Sunday, October 20, 2019

அன்புள்ள அப்பா...

அமுதா பார்மசி

ப்பா என்றதும் முதலில் நினைவில் வரும் சித்திரம் - அமுதா பார்மசி மருந்து கடையில் அவர் அமர்ந்திருக்கும் காட்சி தான். அவர் தன் வாழ்நாளில் அதிகம் இருந்த இடம் அந்த கடையாகத்தான் இருக்கும். தனது 4 குழந்தைகளை படிக்க வைத்தது, திருமணம் செய்வித்தது அனைத்தும் அந்த சிறு கடை மூலம் தான்.

அப்பா ஒரு மருந்தாளுனர் (Pharmacist). அவரது அப்பாவும் அதே தொழில் தான். அவர் காலத்தில் இதற்காக படிக்க கல்லூரி இல்லை; தனது அப்பாவிடம் பணிபுரிந்த அனுபவம் - மேலும் ஒரு தேர்வு மட்டும் எழுதி அதில் தேர்வானால் Pharmacist !

அப்பாவின் தினசரி நாள் இப்படியாக இருக்கும்:

காலை ஐந்தரை மணியளவில் எழுந்து விடுவார். பத்து நிமிடத்தில் தயாராகி - ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்கு சைக்கிளில் செல்வார். சின்ன வயல்.. ஒரு ஏக்கர் (மூன்று மா) . அங்கு தினம் என்னதான் வேலை இருக்குமோ தெரியாது. ஆனால் அப்பா வயலுக்கு செல்லாத நாட்கள் ஏதும் இருந்ததாய் நினைவில் இல்லை. 

ஆறரை அளவில் வீடு திரும்பி - குளித்து பூஜை செய்வார். எங்கள் வீட்டு பூஜையறை மிக சிறியதாய் இருக்கும். ஏராள சாமி படங்கள், பீரோ இவை தவிர 2 பேர் நிற்க முடிந்தால் பெரிய விஷயம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அப்பா உள்ளே நின்று பூஜை செய்ய நாங்கள் வெளியில் நின்று தான் கும்பிடுவோம். 

மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். தினசரி பூஜை அரை மணி நேரம் போல் நடக்கும். ஒவ்வொரு சாமிக்கும் எதோ மந்திரம் சொல்வார். அது தமிழா, சமஸ்கிருதமா என கொஞ்ச நாள் ஆராய்ந்து பின் புரியாமல் விட்டு விட்டேன். அவர் குரல் வேறு கர கர -வென சற்று தெளிவில்லாமல் இருக்கும் (என்னை தெரிந்தவர்களுக்கு மட்டும் - என் குரல் தெரியும் அல்லவா? Exactly அதே கர கர குரல் !)

ஏழு மணியளவில் சாப்பிட்டு விட்டு (அநேகமாய் இட்லி) ஏழே காலுக்கு கடை திறக்க சென்று விடுவார். கடையும் வீடும் -அடுத்தடுத்த தெரு -  நூறு மீட்டர் தூரம். 2 நிமிட நடை. 

ஏழே காலுக்கு கடைக்கு சென்றால் இரவு 10 மணி வரை கடை தான். மகன்கள் யாரேனும் இருந்தால் மதியம் சென்று சாப்பிட அவரை அனுப்புவோம். இல்லா விடில் அரை மணி நேரம் பூட்டி விட்டு,  வீடு வந்து சாப்பிட்டு செல்வார். 

ஒரு நாளைக்கு 15 மணி நேரம் கடை வாசம் தான். இத்தனைக்கும் 15 மணி நேரத்தில்அந்த சிறிய ஊரில் 30 அல்லது 40 பேர் மருந்து வாங்க வந்தால் அதிகம். 

சுற்று வட்டத்தில் "ஆராமுது கடை " என அவருக்கென்று வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் அப்பா இல்லாத நேரம் வந்தால் - "அப்பா வரட்டும், அப்புறம் வர்றேன்" என சென்று விடுவர்.  

குறைந்தது 45 வருடம் இப்படி கடையுடன் தான் வாழ்ந்திருப்பார். அவரது முக்கிய identity அந்த கடை தான் !

மிகுந்த குறைந்த லாபத்திற்கு தான் வியாபாரம் செய்வார். தீபாவளி சமயம் அதே கடைக்கு வெளியே  வெடிக்கடை வைக்கும் போது - எனது நண்பர்கள் எல்லாம் வந்து வியாபாரம் செய்வார்கள். ஆனால் அப்பாவை வெடிக்கடையில் உட்கார வைக்க மாட்டோம். அவர் இருந்தால் 200 ரூபாய்க்கு வெடி வாங்கி, 100 ரூபாய் தந்து விட்டு, மீதி அப்புறம் தருகிறேன் என சொல்லி சென்று விடுவர் .. இப்படி சென்றோர் ஒருவரும் மீதம் பணம் கொண்டு வந்து தந்தாக வரலாறு இல்லை. 

உண்மையில் அமுதா பார்மசி என்ற தலைப்பிலேயே ஒரு தனி பதிவு எழுதலாம்.. தனிப்பட்ட முறையில் ஏராள நினைவுகள்.. அது பிறிதொரு சந்தர்ப்பத்தில் !

கடைக்குட்டி செல்லம் 

அம்மா - அப்பாவிற்கு முதலில் ஒரு பெண் குழந்தை (கோதை) பிறந்து இறந்து விட்டது. பின் கொஞ்ச காலம் குழந்தை இல்லை. சற்று இடைவெளிக்கு பின் அடுத்தடுத்து இரு மகன்கள்.. (கோவிந்த குமார் & பாலாஜி குமார்)  பின் ஒரு மகள் (செண்பக லட்சுமி). 

அப்புறம் ஒரு பையன் பிறந்து (முரளி) சில மாதங்களில் இறந்து விட, சில ஆண்டு கழித்து கடைக்குட்டி நான் பிறந்தேன்.



கடைசி பிள்ளை என்பதால் நிறையவே செல்லம். குறிப்பாய் அப்பா என்னை அடித்ததாக நினைவே இல்லை. மட்டுமல்ல, நான் எதுவும் கேட்டு அவர் வாங்கி கொடுக்காமல் இருந்ததும் இல்லை. போலவே, பணமும் !  கடையில் இருக்கும் போது சென்று பணம் கேட்டால், கை உடனே கல்லா பெட்டியை திறந்து விடும்.  எவ்ளோ வேணும்பா  என்று தான் கேட்பாரே ஒழிய எதற்கு என்று கூட கேட்க மாட்டார்.

பள்ளி செல்லும் வரை  நான் டூ பாத் ரூம் சென்றால் அப்பா தான் வந்து கழுவி விடணும். வேறு யார் செய்தாலும் நோ தான். இதனால் கடைக்கு யாராவது சென்று அப்பாவை அனுப்புவார்கள். அவரும் அலுக்காமல் அந்த ஒரு நிமிடத்திற்காக வந்து செல்வார். "ஏண்டா வேற யார்கிட்டேயும் செஞ்சுக்க மாட்டியா என ஒரு முறை அடித்திருந்தால் அப்படி அடம்பிடித்திருக்க மாட்டேன்" என இப்போது நினைப்பதுண்டு  

பள்ளியில் படிக்க ஆரம்பித்த பின் ப்ராகிரஸ் கார்ட் - அவரிடம் கையெழுத்து வாங்குவது போன்ற ஈஸியான வேலை வேறு எதுவும் இல்லை. மிக சாதாரணமாக நீட்ட, அவரும் ஆட்டோ கிராப் போட்டு தரும் வி.ஐ. பி போல சில நொடிகளில் கையெழுத்து போட்டு தந்து விடுவார். (அந்த கருமம் பிடித்த ப்ராகிரஸ் கார்ட்டை - அதற்கு முன் அண்ணன்கள்- அக்காவிடம் காட்டி  - வாங்க வேண்டிய அனைத்தும் வாங்க வேண்டும் என்பது தனி சோகம்; அதுவும் அண்ணன் - அக்காவே  பாலோ செய்து கொண்டிருப்பர். குவார்ட்டளி முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சே.. இன்னுமா ப்ரோக்ராஸ் கார்ட் வரலை? ) 

எல்லாம் நன்மைக்கே 

எல்லாவற்றையும் பாசிட்டிவ் ஆக மட்டும் தான் அப்பா எடுத்து கொள்வார். அது நாங்கள் கிண்டல் அடிக்கும் அளவு extreme ஆக சில நேரம் இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாரத்தை. 

அறுவடை நேரம் மழை வந்து பாதித்தால் அதுவும் நன்மைக்கே என ஒரு காரணம் சொல்லுவார். 

இப்போது யோசித்தால் உண்மையில் அந்த தீவிர பாசிட்டிவ் எண்ணம் மற்றும் நம்பிக்கை தான் பல நேரங்களில் அவர் சோர்ந்து விடாமல் காப்பாற்றியுள்ளது 

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 

அப்பா அடிக்கடி சொல்லும் இன்னொரு பழமொழி இது. அவர் சொன்ன பல விஷயங்களை அவர் முடிந்த வரை பின்பற்றினார் என்பது தான் சிறப்பே. 

குடும்பத்தில் ஒரு முறை சின்ன சண்டை - ஒரு மருமகளை அவரது தந்தை வந்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டார்.

வீட்டில் அனைவரும் "அவர் தான் வந்து கூட்டி போனார். அவரே கொண்டு வந்து விடட்டும்" என்று சொன்னாலும் அப்பா அதனை சிறிதும் பொருட்படுத்தாமல்  தனியாக கிளம்பி சென்று - அவர்களிடம் பேசி திரும்ப அழைத்து வந்து விட்டார் 

70 வயதுக்கு மேல் அண்ணன் வீட்டில் இருக்க ஆரம்பித்த பிறகும் சரி, அவ்வப்போது திருச்சியில் அக்கா இல்லம் வந்து சில மாதங்கள் தங்கும் போதும் சரி  இருக்கிற இடத்திற்கு தகுந்த மாதிரி முழுதும் தன்னை adopt செய்து கொள்வார். அங்கிருப்போர் பற்றி ஒரு குறையும் சொல்ல மாட்டார். இதனால், அவர் இருக்கும் இடத்தில அவரால் எந்த சண்டையும் வராது. 

நீங்கள் கேட்டவை 

நீடாமங்கலத்தில் முதலில் அம்சவல்லி- காவேரி என இரு டூரிங் தியேட்டர்கள் (டென்ட் கொட்டாய்கள்). பின் சரவண பவன் என்ற நல்ல தியேட்டர் வந்தது. பசங்களுக்கு பெரிய குஷி சினிமா போவது தான். ஆனால் அப்பா வருடம் ஒரு படமாவது பார்த்தாரா என்றால் இல்லை என்று தான் சொல்லணும்.

அம்மா கூட அரிதாய் சாமி படம்- சிவாஜி படம் என எங்களுடன் சினிமாவிற்கு வருவதுண்டு. அப்பா ... ஊஹூம் . 

அப்பா, அம்மா, 4 பிள்ளைகள் என 6 பேரும் சேர்ந்து குடும்பமாய் பார்த்த படம் ஒன்று கூட இல்லை !

ஒரு முறை பொங்கலுக்கு பாலு மஹிந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை - சரவண பவனில் வந்தது. பொங்கல் நேரம் - நான்கைந்து நாட்கள் -எங்கள் ஊரில் எந்த படமாய் இருந்தாலும் ஹவுஸ் புல் தான். என்னுடன் வழக்கமாய் சினிமாவிற்கு வரும் நந்து-  மோகன் படம் பார்த்து விட்டனர். இதனால் படத்திற்கு போகணும் என தொடர்ந்து நான் அழுது கொண்டே இருக்க, அப்பா முதல் முறை என்னுடன் படம் பார்க்க வந்தார். 

அதுவும் இரவு பத்து மணிகாட்சி  - கடை மூடி விட்டு தான் சென்றோம்.  

படம் தந்த சந்தோஷம் ஒரு புறம் இருக்க, சினிமாவே செல்லாத அப்பா, எனக்காக உடன் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது  

வாழை பழத்தார் சண்டை 

 பொங்கல் பற்றி சொல்லும்போது இன்னொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.

அப்பா என்னைத்தான் அடிக்க மாட்டாரே ஒழிய பெரிய அண்ணன் அவரிடம் அவ்வப்போது அடி வாங்குவார்.  பெரிய அண்ணன் சிறு வயது சுபாவமே வாலு என்பதாலும், வீட்டுக்கு தெரியாமல் பக்கத்து ஊர் சினிமா போவது போன்றவை செய்து அப்பாவிடம் மாட்டி அடி  வாங்குவார். 

அப்பா " முன் ஏர் போற படி தான் பின் ஏர் போகும்" என முதல் பிள்ளை ஒழுங்காக படித்தால், மற்றவை அவனை பார்த்து ஒழுங்காய் படிக்கும் என நினைத்திருக்கலாம்.   (ஒரு பிள்ளையை ட்ரக் இன்ஸ்பெக்டர் ஆக்கணும்; ஒரு பிள்ளை டாக்டர் ஆகணும் என நினைத்தார். முடித்து விட்டார் )

பெரிய அண்ணன் - சின்ன அண்ணன் இருவருக்கும் 2 வயது தான் வித்யாசம் என்பதால் நண்பர்கள் போல பழகுவர். அதே நேரம் திடீர் சண்டை வெடிக்கும். பல நேரம் பெரிய அண்ணன்  தான் வில்லனாக இருப்பார். 

ஒரு முறை பொங்கல் நேரம் இரண்டு அண்ணன்களுக்கும் பலத்த சண்டை ! சண்டை துவங்கியதும் அம்மா கடைக்கு தகவல் அனுப்பி விட்டார்.  நெல் கொட்டி வைக்கும் பத்தாயத்தின் இடுக்கில் சின்ன அண்ணன் தலையை வைத்து தள்ளி கொண்டிருந்தார் பெரிய அண்ணன். பத்தாயத்தில் தலை மாட்டி இறந்தே போய் விடுவாரோ என்ற பயத்துடன் பார்த்து கொண்டிருதோம். பெரிய அண்ணன் எல்லாம் அப்போ ஒரு டெரர் .. சண்டையில் நாங்க எல்லாம் கிட்ட கூட போக முடியாது 

அப்பா சரியான நேரம் என்ட்ரி கொடுத்தார். பொங்கலுக்கு வாங்கி - உத்தரத்தில்  தொங்க விட்டிருந்த வாழை பழ தாரை பிடித்த பிடி சர்ரென்று பறந்து வந்து பெரிய அண்ணனுக்கு விட்டார் ஒரு உதை ! சில பல அடிகளுக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. 

இன்றும் வாழை பழத்தார் சண்டை என்றால் அவரது பிள்ளைகள் முகத்தில் ஒரு புன்முறுவலை காணலாம். 

நந்து -மோகன் 

12வது படிக்கிறேன். அது தான் வாழ்க்கையை முடிவு செய்யும் வருடம் என வீட்டில் ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள்.  நானோ கிரிக்கெட் விளையாடியும், டிவி பார்த்தும் வீணாய் போய் கொண்டிருக்கிறேன்  

நண்பர்கள் நந்து -மோகன் இருவரும் என்னை காண வீட்டுக்கு வருவார்கள். கடையை தாண்டிதான் எங்கள் வீட்டுக்கு செல்லணும் என்பதால், அவர்கள் தெருவில் போவதை பார்த்தாலே. " வீட்டுக்கு போகாதே .. அவன் படிக்கிறான்" என டிராபிக் கான்ஸ்டபிள் போல் அடம் பிடித்து திரும்ப அனுப்பி விடுவார். நிஜமாக கடைத்தெருவில் ஏதாவது அவர்கள் வாங்க வந்தாலும் அந்த ஒரு வருடம் - இதே கதை தான் ! 

இதுக்கெல்லாம் மசிவோமா நாங்க !  இன்னோர் சுத்து வழியில் வந்து எப்படியும் என்னை தள்ளிக்கிட்டு போய்டுவாங்க பசங்க !

ஒரு முத்தம் 

5 வருடம் சட்டம் படித்து, பின் ACS இன்டர் வரை முடித்து விட்டு - ACS ட்ரைனிங் செல்ல துவங்கினேன். ஏனோ அந்த வேலை பிடிக்க வில்லை. இந்த படிப்பே வேணாம்; நான் ஊரில் போய் அப்பாவுக்கு உதவி பண்றேன்; ஜிராக்ஸ் கடை வைக்கிறேன் என சென்னையிலிருந்து கிளம்பி நீடாமங்கலம் வந்து விட்டேன். சில மாதங்கள் ஊரிலேயே சுற்றி வந்தேன். தஞ்சை - திருச்சி என சென்று எந்த நண்பனை பார்த்தாலும் " ஒழுங்கா ACS படிச்சு முடி; வேற எதுவும் உனக்கு செட் ஆகாது " என ஒரே மாதிரி கூறினர் 

என்ன செய்வது என பயங்கர குழப்பம். ஏறக்குறைய depression . 

ஒரு நாள் இரவு - சுத்தமாய் உறக்கம் வரவில்லை; மனதில் ஏதேதோ பயம்.. தூக்கம் வரவில்லை என்ற கவலை வேறு. 

24 வயது பையன் - தூங்கி கொண்டிருந்த அப்பா அருகில் சென்று அவரை எழுப்பி " அப்பா தூக்கம் வரலை; பயமா இருக்கு" என்கிறேன். அப்பா ஏதேதோ சமாதானம் சொல்கிறார். மனது ஆறவே இல்லை. 

"நான் இருக்கேன் பா. எதுக்கும் கவலை படாதே. இந்த வீடு, கடை, வயல் எல்லாம் உனக்கு தான்" என்று சொல்லி விட்டு எனக்கு அழுந்த ஒரு முத்தம் தந்தார். 

அன்று இரவு முழுக்க எதோ பயத்தில் நான் தூங்கவில்லை என்றாலும் - அப்பா சொன்ன வார்த்தைகளும்,  அந்த முத்தமும் எதோ ஒரு ஆறுதலை தந்தது. 

இதில் "இந்த வீடு, கடை, வயல் எல்லாம் உனக்கு தான்" என்கிற டயலாக் கொஞ்சம் பேமஸ். காரணம் அப்பா எல்லா பசங்களிடமும் அந்த வரியை எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வார். நம்ம முன்னாடியே இன்னொரு பையன் கிட்டேயும் இதே மாதிரி சொல்றாரே என சற்று அதிர்ச்சியாய் இருக்கும் !

அப்பா தனது கடைசி நாள் வரை கடையில் இருப்பார் என்று தான் நானெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால் 70-72 வயதளவில் தனக்கு முடியவில்லை என மருந்து கடையை மூடி விட்டார். அம்மாவின் உடல்நிலையும் அப்போது சீராக இல்லை   

அம்மாவின் இறுதிக்காலம் 

அம்மாவிற்கு வயதான காலத்தில் அப்பா செய்த பணிவிடைகள் போல இன்னொரு கணவர் யாரேனும் செய்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஒரு ஆண் நர்ஸ் போல் தான் -அத்தனை வேலையும் முகம் சுழிக்காமல் செய்தார். இருவரும் படும் துயரத்தை பார்த்து விட்டு " அம்மா சீக்கிரம் போயிட்டா நல்லதுப்பா " என்றால் அதனை ஒப்பு கொள்ளவே மாட்டார்.

அப்பா மிக நொடித்து போனதும், அழுததும் அம்மா மரணத்தின் போது தான் காண முடிந்தது. வயதாகி, நீண்ட காலம் படுக்கையில் இருந்து மறைந்தாலும் -அம்மாவின்   மரணத்தை அவரால் எளிதில் ஏற்க முடியவில்லை. 

அப்பாவின் பிரபலமான " எல்லாம் நன்மைக்கு" வரியை அம்மா மரணத்தில் அவர் ஏற்கவே இல்லை !           

அப்பா .. இப்போது !

அம்மா மரணத்திற்கு பின் அண்ணன் வீட்டில் தனது அனைத்து வேலைகளையும் தானே பார்த்த படி நன்றாகவே இருந்தார். சிறு வயது முதல் மிகுந்த உணவு கட்டுப்பாடு. சுகர் எட்டி பார்த்ததும், டயட் மூலமே மீண்டும் வராமல் பார்த்து கொண்டார். BP எப்போதுமே இல்லை 

ஒரு முறை அக்கா (அவரது பெண் ) தஞ்சை வந்த போது அவரை காண அவசரமாய் வந்தவர் வழுக்கி விழ, காலில் எலும்பு நொறுங்கி விட்டது. ஆப்பரேஷன் செய்தாக வேண்டும் என்று சொல்லி, அது முடிந்த பின் ஆளே மாறி போய்விட்டார். 

நினைவு திரும்பவே பல வாரங்கள் ஆனது. விழித்து பார்த்தாலும் எங்களை தெரியவில்லை. 

சுகர், BP என வேறு எந்த உடல் உபாதைகள் இல்லாமல் இருந்தவர் வீட்டில் அனைவர் கண் முன்பு வழுக்கி விழுந்து இப்படி ஆகி விட்டார் என்பதில் அனைவருக்கும் பெரும் வருத்தம் 

முழு நேரம் ஆள் வைத்து தான் அனைத்து வேலைகளும்  அவருக்கு இப்போது நடக்கிறது. அப்பாவை பாதுகாக்கும் விஷயத்தில் அண்ணன் - அண்ணி இருவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்; அதிலும் அண்ணன் அப்பாவிற்காக மெனக்கெடுவது மிக மிக அதிகம் ! 

அப்பா சில நேரம் எங்களை சரியாக அடையாளம் கண்டு சொல்லுவார். அப்படி சொன்னாலே எங்களுக்கு பரம சந்தோசம்.

அண்மை படம் : அப்பா - பெரிய அண்ணன், அக்கா மற்றும் என்னுடன்    


இம்முறை சென்ற போது என்னை பார்த்து புன்னகைத்தார். " நான் யார் சொல்லுங்க" என்றதும் " கடைசி பிள்ளை..மோகன் குமார்" என்றார். 

கொஞ்ச நேரம் பேசிய பின் " மெட்றாஸ் வர்றீங்களா? " என்றதும் " வேணாம்பா .. அவ்ளோ தூரம் தாங்காது" என்றார். இவ்வளவு தெளிவாக கேள்வியை புரிந்து அதற்கான பதில் சொன்னது ஆச்சரியம் !

 அப்பாக்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.. தனக்காக எதுவும் செய்து கொள்ளாதவர்கள் ..குழந்தைகள் நலன் மட்டுமே எப்போதும் நினைப்பவர்கள். அம்மாவிடம் காட்டும் அன்பில் சிறு துளி கூட அப்பாவிடம் காண்பிக்க தவறுகிறோம். அம்மாக்கள் தங்கள் அன்பை காட்ட எத்தனையோ வழிகள் உண்டு. உணவு, உபசரிப்பு என அம்மாக்கள் தினம் தினம் நம் மனதில் நிறைகிறார்கள். அப்பாக்கள் அப்படி அன்பை காண்பிக்க தெரியாதவர்கள் 

அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை என்பார் சுஜாதா 

எத்தனை உண்மை இது !

இதோ.. இந்த கட்டுரை கூட அப்பா நல்ல நினைவோடு இருக்கும்போது எழுதப்பட்டிருக்கலாம். 

என்றைக்கேனும் ஒரு நாள் இந்த கட்டுரையை அப்பாவிடம் படித்து, அவர் அதனை புரிந்து கொள்ள நேர்ந்தால், அதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்காது !

Wednesday, October 9, 2019

அசுரன் சினிமா விமர்சனம்

ழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் - வெற்றி மாறன்- தனுஷ் கூட்டணியில் அசுரத்தனமாக வந்துள்ளது ..

1960-70களில் நடந்த கதை. சாதி பிரச்சனை, நில மீட்பு போன்றவை பின்புறமாய் இருந்தாலும் ஒரு குடும்பத்தின் வலி நெஞ்சை தைக்கும்படி பளிச்சென்று பதிகிறது.



நாவல் வாசிக்க வில்லை; மூலக்கதை என்று தான் போடுகிறார்கள். நிச்சயம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்து தான் தந்துள்ளார் இயக்குனர். அதனால் தான் படத்தை ரசித்து பார்க்க முடிகிறது.

இன்றைக்கும் நேற்றைக்கும் சென்று வரும் திரைக்கதை நம்மை பதை பதைக்க வைக்கிறது. தனுஷ் (சிவசாமி) குடும்பத்துடன் சேர்ந்தே நம்மை பயணிக்க வைக்கிறார் இயக்குனர்

சரியான காஸ்டிங்.. தனுஷை கல்யாண வயதில் மகன் உள்ள ஒரு தந்தையாக துவக்கத்தில் ஏற்று கொள்ள சிரமமாயிருந்தாலும் போக போக அற்புத நடிப்பால் நம்மை அசர அடிக்கிறார்...சிறிதும் மிகை படுத்தல் இன்றி அவர் தந்துள்ள நடிப்பு .. அற்புதம் !

இடைவேளையில் வரும் சண்டை காட்சி .. அமர்க்களம். இண்டெர்வெல் முடிந்து   வந்ததும் பஞ்சமி நில பிரச்சனை மற்றும் தனுஷின் குடும்பம் குறித்த பிளாஷ் பேக் நம்மை பெரிதும் தாக்குகிறது..  பிளாஷ்பேக்  முடிந்ததும் மெயின் கதைக்குள் நாம் வரவே நேரமாகிறது.. இரண்டாவது பிளாஷ் பேக் அந்த அளவு தாக்கி விடுகிறது. 



இப்படியெல்லாம் கூட நடக்குமா என்போர் பஞ்சமி நிலமீட்பு என்றும் கீழ வெண்மணி என்றும் கூகிளில் தேடி பாருங்கள். படத்தில் காண்பித்தது ஒரு துளி தான் என்று தெரிய வரும்.

மஞ்சு வாரியர் , தனுஷின் இளைய மகன், ஆடுகளம் நரேன்.. அனைவரையும் விட வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ்  அனைவரும் நேர்த்தியான நடிப்பு (படத்தில் பிரகாஷ் ராஜ்  பெயர் சேஷாத்ரி.. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாதாடும் வக்கீல் ஒரு மேல் சாதி காரர் என்பதும் ஒரு குறியீடு )

படம் எத்தனையோ விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது; உதாரணத்திற்கு ஒன்று: பிள்ளைகள் பல நேரம் பெற்றோர் சொல் கேட்பதே இல்லை; ஆனால் பெற்றோர் ஒவ்வொரு முறையும் அவர்களின் நல்லதற்கு மட்டுமே தான் சொல்கிறார்கள். அது அவர்களுக்கு அப்போது புரிவதே இல்லை ! போலவே பெற்றோர் தம் குழந்தைகளுக்காக எந்த வித தியாகமும் செய்வார்கள் என்பதுவும் படம் போகிற போக்கில் சொல்லி செல்கிறது..

ஜீவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை நம்மையும் இரண்டு பேரை அடிக்கலாமா என்கிற விதத்தில் உசுப்பேற்றுகிறது..

தனுஷ் வேலைக்கு சேர்க்கும் ஆள் மிக சரியாக வளர்ந்து அவருக்கே எதிராக திரும்பும் cliche,  சற்றே அதிகமான வன்முறை, மனதில் பதியாத பாடல்கள் என சிற்சில குறைகள் இருந்தாலும் - அவை யாவும் வெற்றி மாறனின் கதை சொல்லும் பாங்கு  மற்றும் அவரது அசாத்திய நேர்த்தியின் (Perfection) முன் அடிபட்டு போய்  விடுகிறது.

 இடைவேளையிலேயே என்னா மாதிரி நடிகன்யா தனுஷ்.. என்ன ஒரு அற்புத இயக்குனர்யா வெற்றிமாறன் என பிரமித்து போயிருந்தேன். படம் முடிந்து வரும்போதும் மீண்டும் அதே எண்ணம் தான் எட்டி பார்த்தது !

இறுதியில் தனுஷ் தன் மகனிடம்

"நம்ம கிட்டேர்ந்து அவங்க நிலத்தை பிடுங்கலாம். ஆனா படிப்பை பிடுங்க முடியாது; நல்லா படிச்சுக்க ; படிச்சு நீ ஒரு பதவிக்கு வந்தா - அவங்க நமக்கு பண்ண விஷயங்களை நீ பண்ணாதே " என்பதில் தேவர் மகன் சாயல் மிக லேசாக இருந்தாலும் (போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கய்யா) - படத்திற்கு அதை விட அருமையான முடிவும், செய்தியும் இருக்க முடியாது .

அசுரன் .. அசத்தல் !
Related Posts Plugin for WordPress, Blogger...