Friday, January 27, 2023

"கரை வந்த பிறகே பிடிக்குது கடலை" - வாழ மறந்தவனின் வாக்குமூலம்

ரு நல்ல பாட்டு என்னவெல்லாம் செய்யும் ? 

நம்மை அதில் முழுவதுமாய் மூழ்கவைக்கும். ஏனைய சிந்தனைகள் இன்றி வேறொரு உலகிற்கு அழைத்து செல்லும். ஏறக்குறைய தியான நிலை !

பாடலை கேட்கும் எல்லா நேரத்திலும் இத்தைகைய அனுபவம் கிட்டி விடாது; அதற்கான மனநிலை தோதாக இருக்க வேண்டும்

அண்மையில் அத்தகைய மனநிலை வாய்க்கப்பட ஒரு காலை நேரம் இப்பாடலை பார்க்க துவங்கினேன். மனம் என்னவோ போல் ஆகி வீட மீண்டும், மீண்டும் லூப்பில் ஓடியது பாடல்.

எப்படி இந்த பாடலை இத்தனை வருடம் தவற விட்டேன்? 

96- தியேட்டரில் மட்டுமே இரண்டு முறை பார்த்த படம்; டிவியில் போடும்போதும் பார்ப்பதுண்டு. 


எங்கு இந்த பாடல் வித்தியாசப்படுகிறது?

தமிழில் வரும் பாடல்களில் 90 சதவீதம் காதல் பாடல்கள் தான். ஆண் பெண்ணை பற்றி பாடுவான். பெண் ஆணை நினைத்து உருகும் பாடலும் உண்டு. இருவரும் சேர்ந்து பாடும் டூயட் பாடல்களுக்கு கணக்கே இல்லை.

ஆனால் - இந்தப்பாட்டு -  ஒரு மனிதன் தன்னை பற்றியே பாடுகிறான். தனது கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலம் மூன்றையும் பற்றி பாடுகிறான்.

சுய புரிதல் (Self realization ) வகை பாடல்கள் 1970,80- களில் கண்ணதாசன் மற்றும் வாலி நிறைய எழுதியிருக்கின்றனர். இந்த ஜெனரேஷனில் அந்த வகை - அருகி போய் விட்டது

கார்த்திக் நேத்தா - இந்த பெயரை இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை -  இப்பாடலை எழுதியவர் இந்த இளைஞர்தான்!  தமிழில் பத்துக்கும் குறைவான சினிமா பாடல்களே எழுதியுள்ளார். எண்ணிக்கை முக்கியமல்ல - "யாதும் ஊரே யாவரும் கேளீர்" எழுதிய கணியன் பூங்குன்றனார் மிகப் பிரபலம். ஆனால் இந்த ஒரு பாடல் தவிர அவர் எழுதிய வேறு எந்த பாடலும் இன்று நம்மிடம் இல்லை.

ஒரே ஒரு சிறந்த படைப்பு போதும் ஒரு மனிதன் - தான் வாழ்ந்ததை மறக்கவே முடியாமல் பதிவு செய்து விட்டு போக..!

பாடலுக்குள் நுழைவோம்.

அநேகம் பேருக்கு - பள்ளியில் படிக்கும் போது அக்காலம் மிகுந்த சிறப்பாய் இருந்திராது. படி, படி என தொடர் துன்புறுத்தல், தேர்வு எனும் கசப்பு மருந்து - இவை மாணவனை தொடர்ந்து துரத்துகிறது. ஆயினும் பள்ளியில் கடைசி நாள் முடிந்து வெளியே வரும்போது "பல வருடம் எத்தனையோ நினைவுகள் சுமந்த இந்த பள்ளிக்கு நாளை வரமாட்டோம்" என எண்ண, ஒரு துக்கம் தொண்டையை அடைக்கும். பள்ளியின் மீதும், பள்ளி காலத்தின் மீதும் ஒரு பெரும் அன்பு கவிழும்.

ஏன் இது நிகழ்கிறது ?

எனக்கு ஒரு நண்பன். குறைந்தது ஏழெட்டுக்கு நிறுவனத்தில் வேலை செய்திருப்பான். எங்கு வேலை செய்தாலும் சற்று புலம்பிய படியே இருப்பான். ஆயினும் எப்போதும் சொல்வான் " போன கம்பெனி மாதிரி வரவே வராதுடா - அந்த வாழ்க்கை ஒரு சொர்க்கம் !" உடனே நான் சொல்லுவேன் " டேய் - நீ போன கம்பெனியில் வேலை பாத்தப்போ எவ்ளோ புலம்பினேன்னு எனக்கு தாண்டா தெரியும் !" பெரிதாக சிரித்து விட்டு " ஆமாம் அப்டி தான் " என்பான்

நாம் யாருமே நிகழ் காலத்தை, அதன் அழகை, சிறப்பை மதிப்பதே இல்லை. ஒரு காலத்தை கடந்து வந்த பின்பே அதன் மகத்துவத்தை உணர்கிறோம்

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

After reaching the shore…
I love the sea.
After the hair greys…
I understand the world.
Yesterday’s joys come together…
Today, at this moment, they find meaning.
Today’s joys will come together…
To find their meaning tomorrow.

ஏதோ ஒரு நேரத்தில் - வாழ்க்கையை வாழ தவறி விட்டேன் என்று உணர்ந்த பிறகு வெளிப்படும் வரிகளை கவனியுங்கள்.

வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இன்றே இங்கே ஆழ்கிறேன்

To live my life that I never lived.
Unable to bear this, upwards I go…
To kindle my never ending passion.
Here and now, I am coming out of it…
Here and now, I immerse into the depths…

இதில் கடைசி இரு வரிகளும் - இனி மீண்டுவிடுவேன் எனும் நம்பிக்கையை கவித்துவமாய் சொல்வது அழகு !

தன்னை தானே தள்ளி நின்று பார்க்கிறான் அவன் - தியானத்தில் நிகழ்வது போல் ..

யாரோ போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே.. இயல்பாய்.. சுடர் போல் தெளிவாய்

I look at myself as someone else.
Not with any reason, just naturally.
With clarity, like that of a sun ray!

" இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா "

பாடலின் மிக அற்புதமான வரி இது.. 

இதுவரை வாழ தவறியவன்/ வாழ மறந்தவன் என்ன விதமான வாழ்க்கை கேட்கிறான் பாருங்கள்




நடந்து செல்லும்போது உள்ளங்கால்களுக்கு இடையே பூனை வந்து விளையாடிய அனுபவம் கிட்டியிருக்கிறதா ? மிக சிறிய சந்தோஷம் தான் இது. ஆனால் இத்தகைய சின்னச்சின்ன சந்தோஷங்கள் போதாதா - இனிமையான ஒரு வாழ்க்கைக்கு ?

இதே போன்ற ஒரு தருணத்தை மறைந்த எனது நண்பன் இலட்சுமணன் ஒரு கவிதையில் பதிவு செய்திருந்தான் :

பேருந்து பயணத்தில்
யாரோ ஒருவரின் தோளில் இருக்கும்
குழந்தையின் கால்கள்
என்மீது படும்படி
ஆசீர்வதிக்கப்படுவேனாக !

சரி .. இனி எப்படியான வாழ்வை வாழ உத்தேசம்?

நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்


I will always be myself.
Every day I will live to the fullest,
Will object, a life of conventions.

எதிர்காலம் பற்றிய எந்த கனவுகளும் இல்லாமல், வாழ்க்கையை அது காட்டும் போக்கில் வாழ முடியாதா என்ன ?

காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய் , நிகழ்வே அதுவாய்
நீரின் ஆழ்த்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

With the wind flies the Hawk.
Beautifully, without a path.
It being its own reality.
Like the rock that goes to the depth of the waters…
With a renouncing of sound…
I drown in the sights I see.

மீண்டும் ஒரு முறை அறைகூவல் விடுக்கிறான் - என்ன விதமாய்,  தான் வாழ போகிறேன் என ..

திமிலேறி காலை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது நடப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்

Like the bird that rides on the bull’s hump…
I will live upon the Earth.
I would join hands, and walk along with the Earth.

பாடல் இப்படியாக முடிகிறது..

ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே - ஆரோ ஆரிரோ

Some kind of ecstasy is flowing…
That provides depth!!!
This moment envelops like a mother…
Singing a lullaby.

கவிஞர் (கார்த்திக் நேத்தா), பாடகர் (பிரதீப்) , இசை (கோவிந்த் வசந்தா) மூவருக்குமே அவர்களின் மிகசிறந்த படைப்பில் ஒன்றாக இது இருக்கும்

படமாக்கம் - மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு - இரண்டும் அற்புதம் !  

அண்மையில் பிரதீப்பின் லைவ் ஷோவில் இப்பாடலை அவர் பாடியபோது - மக்கள் சேர்ந்து பாடியது அற்புதமான இன்னொரு காட்சி !

இப்பாடல் - 2018ஆம்- வருடத்தின் சிறந்த பாடலாக (கார்த்திக் நேத்தா & பிரதீப்) - ஆனந்த விகடன் துவங்கி, பிலிம்பேர் வரை - பல விருதுகளை வென்றிருக்கிறது

விருதுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். யூ டியூபில் பாடலின் கீழ் உள்ள கமெண்டுகளை வாசியுங்கள் . எத்தனை பேர் வாழ்வில் இனிமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது !


திரைப்பாடல் ஒன்று இலக்கியமாக மிளிர்வது மிக அரிதான ஒரு தருணம் !

காலத்திற்கும் ரசிக்கும்படி - ஒரு பாடல் தந்த - இயக்குனர் ப்ரேம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கவிஞர் கார்த்திக் நேத்தா மற்றும் பாடகர் பிரதீப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் !

3 comments:

  1. ஒவ்வொரு வரியும் அருமை... ரசித்தேன்...

    ReplyDelete
  2. அருமை அண்ணா..!!! பலரால் ரசிக்கப் பட்ட பாடல்....கவிஞர் கார்த்திக் நேத்தா அந்த நேரத்தில் பலரால் தேடப் பட்டவர்.

    ReplyDelete
  3. Super Sir, After long time, enjoyed your writing. Please try to write more like in 2010 to 12 . Please keep writing even though less readers

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...