Tuesday, June 23, 2009

மிக பிடித்த இரு கவிதைகள்

எனக்கு மிக மிக பிடித்த இரு கவிதைகள்.. இரண்டும் கல்லூரி காலத்தில் படித்தவை.. இவை என் வாழ்க்கையோடு ஒன்றி போய் விட்டன.

****************

கவிதை -1

எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்.
கத்திகள் எங்கிருந்தும் முதுகில் பாயலாம்
யாரும் யாரையும் எதுவும் பேசலாம்...
கூளமாய் நரகலாய் நினைக்கலாம்
எல்லாம் அவர்களை அவர்கள் காட்டும் காரியம்
நீ போய்க்கொண்டிரு...
-ஜெயந்தன்


கவிதை -2

எதையேனும் சார்ந்திரு...
கவித்துவம்.. தத்துவம்
காதல்.. சங்கீதம்...
இங்கிதம்.. இப்படி
எதன் மீதேனும்
சார்ந்திரு...
இல்லையேல்
உலகம்
காணாமல் போய் விடும்..
-வண்ண நிலவன்

4 comments:

  1. tipவாவ் !!!
    நல்ல கவிதைகள்.
    ந‌ன்றி!!!
    நினைவுப‌டுத்தி அதை த‌ங்க‌ள் த‌ள‌த்தில் வெளியிட்ட‌மைக்கு.

    ந‌ண்ப‌ரே!!! தப்பா நினைக்காதீங்க. எப்போதும் என‌க்கு ஒரு க‌ம்பிள‌ய்ண்ட் உண்டு. முக்கிய‌மாக‌ க‌விதைக்கு.

    பொதுப்ப‌டையான‌ வார்த்தைக‌ள் வாசிக்கும் ந‌ம்மிட‌த்தில் இருந்து அர்த்த‌ம் திருடிக் கொள்ளும்.

    வாசிக்கும் மனநிலை, வாசிப்ப‌வ‌ரின் அனுப‌வ‌ம் என‌ கூடி கும்மிய‌டித்து விடும். க‌விஞ‌ர் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தார் என‌ க‌டைசிவ‌ரை புரியாம‌ல் சென்று விடும். நாஸ்ட‌ர் தாம‌ஸ் மொழி போல‌.


    ஜெயந்தனின் கவிதை இதையா சொல்கிறது

    உல‌கை, ச‌க‌ ம‌னித‌னை ச‌ட்டை செய்யாதே
    வெளியில் கவனிக்காது
    உனக்குள் செல்
    தீர்மானம் செய்
    எது உன் பாதை,
    எது உன் ல‌ட்சிய‌ம்
    எது உன் பிரையாரிட்டி
    திடமாய் அந்த பாதையில் நட‌
    நீ நினைச்சது தான் ரைட்டு ராஜா!!
    யாருக்கும் தூக்காதே கூஜா!!!


    வ‌ண்ண‌ நில‌வ‌ன் இதையா சொல்கிறார்.
    உல‌க‌ம் பார்க்க‌
    உன‌க்கு க‌ண்க‌ள் வேண்டும் !!!!
    இல்லையெனில் உல‌க‌ம் தெரியாது

    (ஒகே !!!! ந‌ல்ல‌ பாயிண்ட், அப்போ க‌ண்க‌ள் எது???? )
    அது கவித்துவம்.. தத்துவம்
    காதல்.. சங்கீதம்...இங்கிதம்..

    என அவர் சொல்லும் போது போது அர்த்த‌ம் இடிக்கிற‌தே. அல்ல‌து புரிய‌வில்லையே.

    இறையியல், மனித நேயம், சமூக தொண்டு என உலகை பார்க்க வேறு கண்களும் உண்டே. பின்னர், ஒன்றுக்கு மேலாய் சில கண்களும் நல்லதல்லவா.

    சங்கீதம் மெய் மறக்க செய்யும். இங்கிதம் இணக்கம் விதைக்கும். தத்துவம் தடுமாறும் உணர்வை சீர் செய்யும்.

    சரி, இவற்றை சாராத வாழ்க்கை யாரேனும் வாழ்கிறார்களா!!!! என்ன ?????

    தாங்க‌ள் கிர‌கித்த‌ அர்த்த‌த்தை சொல்லுங்க‌ளேன்.

    ReplyDelete
  2. நண்பர் படுக்காளி அவர்களே,

    தங்கள் கேள்விகளுக்கு நன்றி. பதில் சற்று பெரிதாக அதுவே ஒரு பதிவு போல் அமையுமோ என்ற ஐயம்..

    முதலில், "எங்கும் யாருக்கும்" கவிதை:

    இந்த கவிதையில் மிக பிடித்தது அந்த முதல் வரி தான். "எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்".

    Anything can happen to any body at any point of time. This is the irony of life.

    இந்த கவிதையை படித்து 20 ஆண்டு ஆகிறது ! இந்த 20 ஆண்டுகளில் நெருக்கமான மனிதர்களின் மரணம் போதெல்லாம் இந்த வரி பெரும் ஆறுதலை தந்துள்ளது.

    அடுத்த மூன்று வரிகள்.

    "கத்திகள் எங்கிருந்தும் முதுகில் பாயலாம்
    யாரும் யாரையும் எதுவும் பேசலாம்...
    கூளமாய் நரகலாய் நினைக்கலாம் "

    எத்தனை முறை நெருங்கிய உறவுகளே நம்மை ஏளனம் செய்கின்றன.. நம் மீது தவறு இல்லாத போதும்.

    கண்ண தாசன் வரிகளில்
    "உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி.
    மனிதர் எதையோ பேசட்டுமே.. மனசை பார்த்துக்க நல்ல படி.."

    இந்த 3 வரிகள் சொல்வதும் இது தான். அவரவரும் மற்றவரை தத்தம் அனுபவம் பொறுத்தே அளக்கின்றனர்.

    "நீ போய் கொண்டிரு" என்பது மற்றவர் உன் மீது எறியும் எதிர் மறை விமர்சனங்களுக்காக உன்னை நீ மாற்றி கொள்ளாதே. உன் இலக்கு நோக்கி போய் கொண்டிரு என்பதாக உணர்கிறேன்.

    ஜெயந்தன் எந்த உணர்வில் எழுதினார் என அறியேன். இது தான் ஒரு நல்ல கவிதையின் சிறப்பு. வெவ்வேறு மனிதர்களுக்கு அது வெவ்வேறு அர்த்தம் தரும்.

    மிக நல்ல கவிதைகள் மனம் மிக காயப்பட்ட பொழுதுகளில் தான் தோன்றுகின்றன. ஜெயந்தனும் அப்படி ஒரு கணத்தில் தான் இந்த கவிதை எழுதியிருக்க வேண்டும்.

    அடுத்த கவிதை பற்றி தனியே எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. வண்ண நிலவன் கவிதை பற்றி:

    யோசித்து பார்த்தால் எல்லோரும் ஒரே மாதிரி வாழ்க்கை தான் தினமும் வாழ்கிறோம்! சாப்பிடுவது, தூங்குவது, இடையில் அவரவர் ஒவ்வோர் வேலை பார்க்கிறோம். அப்படி ஆனால் வாழ்வை சுவை மிகுந்ததாக ஆக்குவது எது? அவரவருக்கும் இருக்கும் தனிப்பட்ட interests தான். சிலருக்கு கவிதை. சிலருக்கு இசை. நமக்கு blog இல்லையா? அப்படி. இதனைத்தான் கவிஞர் "எதேயேனும் சார்ந்திரு" என்கிறார்.

    உதாரனமாய் ஒரு retire ஆகும் நபரை எடுத்து கொள்ளுங்கள்; அவருக்கு வேலை போன பின் எதிலாவது வேறு ஆர்வம் இருந்தால் தான் வாழ்க்கை சுவைக்கும். இல்லா விடில் வண்ண நிலவன் சொல்வது போல், "உலகம் காணாமல் போய் விடும்"

    மேலும் சார்ந்திருப்பது ஒரு விஷயம் மேல் தான் என்பது கட்டாயம் இல்லை. பல விஷயங்கள் மேல் இருக்கலாம். என்னையே எடுத்து கொண்டால் எனக்கு பல விஷயங்களில் நிறையவே interest உண்டு. அது தான் வாழ்கையை சுவை மிகுந்ததாக மாற்றுகிறது.

    நண்பர் படுக்காளி அவர்களே விளக்கம் தங்களுக்கு திருப்தியா?

    ReplyDelete
  4. எஸ்.
    நல்லா இருக்கு.

    தங்கள் விளக்கம் ஜாடிக்கேற்ற மூடி போல் பொருந்து கிறது.

    இதையே பதிவா போடுற அளவுக்கு மேட்டர் இருக்கு

    கலக்குங்க

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...