உன்னுடைய பிறந்த நாளான இன்று உன்னுடனான நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன்
நான்கு குழந்தைகள் உள்ளது நம் குடும்பம்.. முதல் இரண்டு ஆண்கள் (அண்ணன்கள்) மிக மிக நெருக்கம்- நண்பர்கள் என்றே தான் சொல்லவேண்டும். அடுத்த இருவரான நாம் இதனாலேயே தனி கூட்டணி ஆனோம்.
நான் கைக்குழந்தையாய் இருந்த போது - கொழு கொழு என்று இருப்பேன் (இன்னிக்கும் அப்படித்தான் ); அப்போது நான்கு புறமும் தலையணை வைத்து உட்கார வைப்பாய்- நான் பாலன்ஸ் இன்றி தலையணை மேல் சாய்வது உனக்கு செம குஷியாய் இருக்கும். உன்னைக் குறித்தான முதல் நினைவு என்றால் இது தான்..
உன் தோழிகளுடன் நம் வீட்டு ஊஞ்சலில் என்னை வைத்துக் கொண்டு ஆடுவீர்கள் - நீ கம்பியை பிடித்த படி ஊஞ்சலில் நின்றவாறு ஆடும் சித்திரம் இன்னும் நினைவில் இருக்கிறது
இப்படி ஒரு முறை நீ உன் தோழிகளுடன் ஊஞ்சல் ஆட, வாசலில் சிறு குழந்தையான நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கையில் தங்கக்காப்பு அணிந்திருக்க - தள்ளு வண்டியில் பஞ்சு மிட்டாய் விற்கும் ஆள் - என் வாயில் மிட்டாய் வைத்து விட்டு தங்கக்காப்பை கழட்டி சென்று விட்டான். எனக்கு பேச தெரியவில்லை; ஆனால் அழும் சத்தம் கேட்டு உன் தோழிகள் எல்லோரும் ஓடி வந்து, வாயில் இருந்த பஞ்சு மிட்டாய் வைத்து - அதனை விற்கும் ஆளாய் இருக்கும் என தேட - அந்த ஆளும் சரி - பொருளும் சரி கிடைக்கவே இல்லை !
நீடாமங்கலத்தின் வீட்டினுள்ளேயே (வராண்டா அல்ல- நிஜ வீட்டின் உள்) நாம் இருவரும் மட்டும் கிரிக்கெட் ஆடுவோம். நான் பசங்களுடன் எப்பவும் விளையாடும் பையன். உனக்கோ விளையாடி பழக்கமே இருக்காது; இருந்தாலும் தோற்கக் கூடாது என வெறியுடன் ஆடுவாய் ; சில நேரம் தோற்கடிக்கவும் செய்வாய் ! Competitive to the core !
சிறு வயதிலேயே மிக நன்கு படிக்கக் கூடிய பெண்ணாய் நீ இருந்தாய்; 4 பேரில் மிக நன்கு படித்தது நீயே.
நான் பள்ளி செல்ல ஆரம்பித்த பின் - ஒழுங்காய் படிக்க வேண்டும் - விளையாடி விட்டு ஆறு மணிக்குள் வீட்டுக்கு வரவேண்டும் என கண்டிஷன் போடுவாய்; 6 மணிக்கு மேல் தாமதமாய் வீடு திரும்பினால், கையில் ஸ்கேலால் ஒரு நிமிட தாமதத்திற்கு ஒரு அடி ! அம்மா - அப்பாவிடம் என்றும் அடி வாங்காத நான்- அக்கா - அண்ணன் களின் கண்டிப்பில் தான் வளர்ந்தேன்
நம் இருவரின் சிறு வயது எதிரி - பெரிய அண்ணன் ! நமக்கு அவர் ஒரு டெர்ரர் ஆக இருந்தார்; சாப்பிட உட்கார்ந்த பின்- வீட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட ஹோட்டலில் ஏதேனும் வாங்கி வரச் சொல்லி உன்னை அனுப்புவார்; ரேடியோவில் ஒரு பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும் போது கிளம்பும் நீ, அந்தப் பாடல் முடிவதற்குள் திரும்ப வேண்டும். நீ எவ்வளவு வேகமாய் ஓடி, டிபன் வாங்கி வருவாய்.... பஸ் போனால் அதையும் கண்டு கொள்ளாமல் புகுந்து- பறந்து வருவாய் என்பது குடும்பத்தில் மட்டுமல்ல - பக்கத்து வீடுகளுக்குக் கூட தெரியும்
பத்தாவது முடித்த பின் +1, +2 மன்னார்குடி கான்வென்ட்டில் படித்து வந்தாய்; துவக்கம் முதலே நீ டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பதே அப்பா மற்றும் உனது குறிக்கோளாய் இருந்தது; நீடாவில் இருந்து மன்னை பஸ்சில் சென்று வந்த நீ- +2 பஸ்ஸில் சென்று வருவது சிரமமாய் உள்ளது என மன்னார்குடியில் மாமா வீட்டில் தங்கினாய் - நீ வீட்டில் இல்லாததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை- தினம் அழுகை- ஒரு வாரம் ஒழுங்காய் சாப்பிடாமல் அழுதவாறே இருக்க, ஒரே வாரத்தில் உன்னை திரும்ப அழைத்து விட்டனர்- அப்புறம் வீட்டிலிருந்தே செல்ல ஆரம்பித்து விட்டாய்
முதல் 2 அண்ணன்களை டாக்டர் ஆக்க நினைத்த அப்பாவால்- அது முடியாமல் போனாலும்- உனக்கு டாக்டர் சீட்டு கிடைத்தது குடும்பத்தில் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது ; அருகில் உள்ள தஞ்சையில் படிக்க துவங்கினாய்.
இப்போது ஹாஸ்டலில் தங்க ஆரம்பித்தாய் - நான் அப்போது எப்படி அழாமல் இருந்தேன் என தெரியவில்லை- சற்று பெரிய பையன் ஆனதால் புரிந்து கொண்டிருக்கலாம்.
அவ்வப்போது நீ உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் சிறுவனாக இருந்த நான் வந்து தங்கி உள்ளேன்; ஒரு முறை நீ தோழிகளுடன் அவர்கள் ரூமில் அரட்டை அடிக்கச்செல்ல - உனது ரூமில் நான் - பூட்டி கொண்டு தூங்கி விட்டேன். கதவை எவ்வளவோ தட்டியும் திறக்க வில்லை; நீண்ட நேரம் தட்டி எல்லாரும் டென்சன் ஆகி கதவை உடைக்கும் முன் நானே திறந்து விட்டேன். இது பல முறை பேசி சிரித்த ஒரு சம்பவம்
படிப்பு முடித்ததும் நம் ஊரிலேயே நமது மருந்து கடைக்கு நேர் எதிரில் க்ளினிக் வைத்தாய் - அப்பாவின் நீண்ட நாள் கனவு நினைவேறியது; சில நேரம் அப்பா இல்லாமல் நான் கடையில் இருப்பேன்; உனது மருந்து சீட்டுகளுக்கு நான் மருந்து தந்தது - ஒரு அனுபவம் !
மருத்துவர் வாழ்க்கை என்பது எத்தனை கடினம் என்பது- அவரது குடும்பத்து உறுப்பினர்களுக்கு மட்டும் தான் தெரியும் ! பல நாள் நள்ளிரவு 1- 2 மணிக்கு வந்து வீட்டு கதவைத் தட்டுவர் ; அவர்கள் உண்மையில் நோயாளிகளா - இல்லை திருட வந்தவர்களா என மிக பயமாய் இருக்கும்.
வெளியூர் கிளம்பும் நேரம் சரியாக பேஷண்ட் வீட்டுக்கு வந்து விடும்; கிளம்ப சர்வ நிச்சயம் தாமதம் ஆகும்
படிப்பு முடித்து ஓரிரு வருடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்; உனது எதிர்பார்ப்பு "மாப்பிள்ளை நல்லவராக இருக்க வேண்டும்; கெட்ட பழக்கம் ஏதும் இருக்க கூடாது" என்பதாக இருந்தது; அத்தகைய ஒருவரே கணவராக வந்தார். பெண் பார்த்த சம்பவமும் அதில் முரளி அத்தான் டை கட்டி வந்ததும் இன்னும் நினைவில் இருக்கிறது
உனது திருமண நிச்சயதார்த்தம் குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக என்னால் மறக்கவே முடியாது; சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்; எனது நண்பர்கள் நிச்சயதார்த்தத்திற்கு உதவி செய்ய முதல் நாள் இரவே வந்து விட்டனர்; ஏனோ இரவு ஏகப்பட்ட வேலைகள்.. எல்லாம் முடியவே நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது; ஓரிரு மணி நேரம் தூங்கணுமா என குளத்தை பார்த்தவாறே அரட்டை அடித்து கொண்டிருந்து விட்டு, ஒரு நிமிடமும் தூங்காமல் நேரே காலை மீண்டும் அனைவரும் வேலை பார்க்க ஆரம்பித்தோம்
தஞ்சையில் நடந்த உனது திருமணம் பெரிய அண்ணன் தான் முன்னின்று நடத்தினார். அடுத்த ஒரு வாரத்தில் சின்ன அண்ணன் பாலாஜி குமார் திருமணம் - குடும்பத்தில் ஒரே வாரத்தில் 2 திருமணங்கள் - மிக பிஸியான மாதமாக அனைவருக்கும் இருந்தது. எத்தனையோ வருடங்கள் ஆனாலும் நிறையவே நினைவுகள் இவை இரண்டிலும்..
திருமணத்திற்கு பின்னும் உனது கிளினிக் நீடாமங்கலத்தில் இருந்ததால் - நம் தெருவிலேயே தனி வீட்டில் இருந்தாய்; இதனால் உன்னை எப்போதும் நாங்கள் மிஸ் செய்யவே இல்லை; அடுத்து பல வருடங்களுக்குப் பின் நெய்வேலியில் வேலை கிடைத்து நீ செல்லும் வரை நம் ஊரிலேயே இருந்தது அம்மா - அப்பாவிற்கு பெரும் சந்தோஷமாய் இருந்தது
முதல் முறை நீ கன்சீவ் ஆன போது - உன் வீட்டுக்கு வந்த என்னிடம் சொன்னாய்; எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை; அடுப்படிக்கு ஓடி சர்க்கரை டபபாவை எடுத்து வந்து முதலில் உன் வாயில் சர்க்கரை போட்டேன்
முதல் பையன் - நந்த கிஷோர் டெலிவரி திருச்சியில் நடந்த போது பெரும்பாலும் நானும் அம்மாவும் தான் கிளினிக்கில் உடன் இருந்தோம். டெலிவரி தாமதமாகிக் கொண்டே போக-ஒரு நாள் கிளினிக்கில் இருந்து நைஸ் ஆக வெளியே வந்து - அருகில் இருந்த சோனா தியேட்டரில் சின்ன கவுண்டர் பார்த்து விட்டு சென்றோம்- நீ சற்று டென்சன் ஆக இருந்ததால் மூட் டைவர்ட் செய்ய சென்றோம் என நினைக்கிறேன்
"வளர்ந்ததும் யாவரும் தீவாய் போகிறோம் .."என்ற நா. முத்து குமாரின் பாடல் வரி போல உடன் பிறந்தோர் - அவரவரும் காலப்போக்கில் குடும்பம், தத்தம் குழந்தைகள் என ஆகிப் போனாலும், அனைவருக்கும் நடு நிலையாக - எல்லோரையும் இணைக்கும் காரணியாக நீ எப்போதும் இருந்திருக்கிறாய்
"வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நபர்" என உன்னை கிண்டல் அடிப்பேன் நான். அந்த செலவு எப்போதும் உனது இரு குழந்தைகளுக்காக தான் இருக்கும்- உனக்காக இருக்காது
அம்மா எத்தனையோ உடல் உபாதைகளுடன் - 75 வயது வரை இருந்தது நிச்சயம் பெரிய அண்ணன் மற்றும் உனது கவனிப்பால் தான்.
முரளி அத்தான் உடல்நிலையை நீ பார்த்து கொண்டதும், அத்தனை வருடம் அவர் வாழவும் உனது கண்காணிப்பு தான் காரணம்
உனது ரிட்டயர்மெண்ட்க்கு வந்த போது உன்னுடன் பணி புரிந்த அனைவரும் உன்னை பற்றி உயர்வாய் பேசியது கேட்டு மிக மகிழ்வாய் இருந்தது - கடும் உழைப்பைக் கொண்ட பெண் - தனது வேலை மற்றும் வீடு இரண்டிலும் நல்ல பேர் எடுக்க முடியும் என நீ நிரூபித்திருக்கிறாய்
அத்தான் மற்றும் உனது நல்ல மனதுக்கேற்ற மாதிரி - உனது 2 குழந்தைகளும் வளர்ந்தனர் - போலவே அவர்களுக்கு அமைந்த துணைகளும் அற்புதமானர்களாய் இருக்கின்றனர்.
நீ ரிட்டயர்ட்மெண்ட்க்கு பிறகு சென்னையில் இருக்கத் துவங்கியது எனக்கு பெரும் சந்தோஷத்தை தந்தது.. அடிக்கடி நாம் பார்க்கா விட்டாலும் கூட நினைத்தால் பார்த்து விடலாம் என்கிற தைரியம் தான் காரணம் ; நீ பெங்களூரு சென்றது எனக்கு ஒரு இழப்பே. ஏதேனும் அதிசயம் நடந்து நீ மீண்டும் சென்னை வந்தால் எல்லோருமே மகிழ்வோம் !
இறுதியாக -
முரளி அத்தான் மரணத்தை நீ எதிர்கொண்ட விதம் - மிக மிக போராடி விட்டீர்கள் - கடைசி வரை உனது முயற்சிகளை நீ விடவில்லை - எல்லா போராட்டமும் தாண்டி அவர் இறைவனடி சேர்ந்து விட்டார்
நீ எவ்வளவு மன உறுதி படைத்தவர் என்பதை - உன்னை சிறு வயது முதல் பார்த்து வந்த நான் அன்று தான் கண்டேன்.
கடவுளாலும் மாற்ற முடியாத விஷயம் ஒன்று உண்டு - நடந்ததை மாற்ற அவராலும் முடியாது என்பதை மருத்துவ துறையில் இருந்ததால் நீ உணர்ந்திருக்கலாம்
உனது மன உறுதியில் 5 % இருந்தால் கூட மனிதர்கள் தைரியமாக வாழ்ந்து விடலாம்
அக்கா
அம்மா
டீச்சர்
முதல் தோழி
குடும்ப டாக்டர்
- இப்படி பல விதமாய் எனக்கு நீ இருக்கிறாய் - இது எத்தனை பேருக்கு சாத்தியம் ! நான் நினைத்து நினைத்து மகிழும் விஷயம் இது !
இதே விதமான மகிழ்வுதான் நீ நெருங்கி பழகும் எல்லோருக்கும் இருக்கும் !
நூறு ஆண்டுகளுக்கான உழைப்பை 60 வயதுக்குள் செய்து விட்டாய்.. இனியாவது உனக்கு உயிரான பேரன்களுடன் மகிழ்ச்சியாக விளையாடு ...ஓய்வெடு !
கடவுள் உனக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் தரட்டும் .. !






No comments:
Post a Comment