Tuesday, March 29, 2016

கோலி Vs சச்சின்

கோலி VS  சச்சின் பற்றி பேசுவதற்கு முன் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த (விர்ச்சுவல்) குவார்ட்டர் பைனல் பற்றி பார்த்து விடுவோம்...

placeholder

அதிரடியாய் துவங்கினர் ஆஸ்திரேலிய ஓப்பனர்கள்..  எப்போதும் சிறப்பாக பந்து வீசி வந்த பும்ரா மற்றும் அஷ்வினை துவைத்து எடுத்தனர்..

இறுதி ஓவர்களில் அட்டகாச யார்க்கர்கள் போடும் பும்ரா ஏன் துவக்க ஓவர்களில் அதற்கு முயற்சிப்பதே இல்லை என புரிய வில்லை ! லென்க்த்தில் விழும் பந்துகளை அடுத்தடுத்து நான்கிற்கு விரட்டினர்.

அஷ்வின் பவுலிங் அன்று கொடுமை !! பல பந்துகள் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசினார்; ஏகப்பட்ட ஓய்டுகள்... அந்த லைனே விக்கெட் எடுக்க வாய்ப்பில்லாத நெகடிவ் லைன்; இந்தியாவின் மிக பெரும் ஸ்ட்ரைக் பவுலர் - தொடர்ந்து இப்படி லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசுவது என்ன விதமான strategy யோ ? நல்ல வேளை அன்று 2 ஓவர்களுடன் அவர் கதையை தோனி முடித்து கொண்டார்..

துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசியது நெக்ரா தான்.. அதிலும் ஆப் ஸ்டம்பில் விழுந்து வெளியே செல்லும் பந்துகளை பேட்ஸ் மேன் அடிப்பது மிக சிரமம். அடித்தால் கேட்ச் ஆகும் வாய்ப்புகள் அதிகம். நன்கு விளையாடி கொண்டிருந்த க்வாஜா - இப்படி ஒரு பந்தில் தான் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மிடில் ஓவர்களில் - யுவராஜ், பாண்டியா போன்றோர் நன்கு வீசி - ரன் ரேட் உயராமல் பார்த்து கொண்டனர். 160 என்பது பெரிய ஸ்கோர் அல்ல.. கோலி தவிர சுத்தமாய் பார்மில் இல்லாத இந்திய பேட்டிங்கை நினைத்தால் தான் வயிற்றை கலக்கியது

துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கும் பார்முக்கு 23 ரன்கள் வரை சேர்ந்து ஆடியதே பெருசு.. அப்புறம்  தவான், ரோஹித் இருவரும் நடையை கட்ட, சிறிது நேரத்தில் ரைனாவும் கிளம்பி விட்டார்.

40 ரன்னுக்கு மூணு விக்கெட்; யுவராஜ் மற்றும் கோலி ஓரளவு நிதானித்தாலும், யுவராஜிற்கு காலில் அடிபட்டு சரியாய் ஓடமுடியவில்லை; கோலியோ - 2 ரன் ஓட - யுவராஜ் வேண்டாம் எனும்போது கடுப்பாகி கொண்டிருந்தார்

நல்லவேளையாக யுவராஜ் அவுட் ஆகி தோனி உள்ளே வர, 2 ரன்கள் அடுத்தடுத்து ஓட ஆரம்பித்தனர். தோனி வரும்போதே ஓவருக்கு 12 ரன் எடுக்க வேண்டும் என்ற கடுமையான நிலை..

கடைசி 3 ஓவர்கள் - தேவை 39 ரன்கள்; இங்கிருந்து தான் கோலியின்   விஸ்வரூபம் துவங்கியது. பால்க்னர் போட்ட இந்த ஓவரின் முதல் 2 பந்துகள் பவுண்டரி; மூன்றாவது சிக்சர் .. இந்நிலையில் இந்தியா நிச்சயம் ஜெயிக்கும் என தோன்ற ஆரம்பித்து விட்டது. 18 பந்துகளில் 39 ரன் என்ற நிலை மாறி, 15 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலை; நிச்சயம் ஒவ்வொரு பந்திலும் ஒரு ரன் எடுப்பர்; ஒரு நான்கு மற்றும் ஒரு ஆறு அடித்தாலே போதும் ஜெயித்து விடலாம்...

அடுத்த ஓவரில் கோலி 4 பவுண்டரிகள்.. அற்புதமான ரிஸ்க் ப்ரீ ஆட்டம்... அது தான் மிக முக்கியமாய் கவனிக்க வேண்டியது !

placeholder

கோலி ஆடியதில் சற்றே ரிஸ்க்கி ஷாட் என்றால் அவர் அடித்த 2 ஆறுகள் மட்டும் தான். அவை தவிர மற்ற அனைத்துமே - கேப்பில் செல்லுமாறு பார்த்து பார்த்து அடித்த பவுண்டரிகள்.. தனது விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பதை கோலி மிக நன்றாக அறிந்திருந்தார்.. 20 ரன் இருக்கும் போது கோலி அவுட் ஆனாலும் மேட்ச் எப்படி வேண்டுமானாலும் மாறிப்போகும் என்பது உணர்ந்து - ஷாட்டுகள் அனைத்தும் தரையோடு -கேப்பில் மட்டுமே ஆடினார்..

அணியின் மொத்த ஸ்கோரில் பாதிக்கு மேல் அடித்தது - கோலி ; 82 ரன்னுக்கு பிறகு அடுத்த பெரிய ஸ்கோர் யுவராஜ் அடித்த 21 தான் !

placeholder

தவான், ரோஹித், ரைனா, யுவராஜ் என எல்லாருமே சரியான பார்மில் இல்லை; ஏன் இவர்களை மாற்றாமல் வாய்ப்பு தருகிறார்கள் என ஸ்குவாடை எடுத்து பார்த்தால் - மீதம் உள்ள 4 பேரில் - ரஹானே மட்டுமே பேட்ஸ் மேன் ! ஹர்பஜன், ஷமி,  பவன் நேகி மூவருமே பந்து வீச்சாளர்கள்.. எப்படி இம்மாதிரி ஒரு ஸ்குவாட் எடுத்தார்கள் என இப்போது யோசிக்க வேண்டியிருக்கிறது.

நமது பேட்ஸ் மேன்கள் மீது அதிக நம்பிக்கை; பவுலர்கள் மீது நம்பிக்கை குறைவு; ஆனால் இம்முறை நடந்தது தலை கீழ்.. பவுலர்கள் மற்றும் கோலி புண்ணியத்தில் தான் இவ்வளவு தூரம் வந்துள்ளோம்

யுவராஜ் காயம் என்பதால் தற்போது மனிஷ் பாண்டே அணிக்கு வந்துள்ளார். அடுத்த மேட்ச் -யுவராஜுக்கு பதில் ரஹானே ஆட வாய்ப்புள்ளது ; ஆனால் பார்மில் இல்லாத தவான், ரோஹித், ரைனா இவர்களை என்ன செய்வது???

கோலி Vs சச்சின்க்கு வருவோம்..

கோலியின் இந்த ஆட்டம் 2 நாள் ஆகியும் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது; இந்த ஆட்டத்தை சச்சின் 18 வருடங்களுக்கு முன்  ஷார்ஜாவில் ஆடிய ஆட்டத்துடன் தான் ஒப்பிட வேண்டும்..

அந்த காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் முழுக்க முழுக்க சச்சினை நம்பியே இருந்தது; சச்சின் அடித்தால் இந்தியா ஜெயிக்கும்; அவர் அடிக்கா விட்டால் தோற்கும்; அவ்வளவு தான்.  நண்பர்கள் பலருக்கு சச்சின் இறுதி காலத்தில் அவர் செஞ்சுரி அடித்த நேரம் எல்லாம் இந்தியா தோற்றது நினைவிற்கு வரலாம்; அது வேறு காலம் :)

நான் சச்சினின் விசிறி தான்; கோலியை ரசித்தாலும் விசிறி என்ற அளவில் எண்ணியதில்லை; ஆனால் இந்த ஒரு மேட்ச் என்னையும்  கோலியின் ரசிகன் ஆக்கி விட்டது; இது போல லட்சக்கணக்கான புது இந்திய ரசிகர்கள் கோலிக்கு இந்த ஒரே ஒரு மேட்சின் மூலம் கிடைத்திருப்பர். 

மறுநாளே இருவர் ரிக்கார்டுகளையும் எடுத்து பார்க்க வைத்து விட்டது கோலி ஆடிய ஆட்டம்.

கோலி டெஸ்ட்டில் இதுவரை 11 செஞ்சுரி தான் அடித்துள்ளார்; சச்சினின் 51 செஞ்சுரிகளுடன் ஒப்பிடும் போது இது மிக குறைவு; சச்சினின் இந்த சாதனையை அவர் நெருங்குவது கடினம்..

கோலியின் சிறப்பு ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளில் தான் அதிகம் ஜொலிக்கும்; குறிப்பாக சேசிங்கில் இதுவரை உலகின் நம்பர் ஒன் என கருதப்பட்ட மைக்கல் பேவனை தாண்டி செல்லும் அளவு கோலி சிறப்பாக கருதப்படுவார்; சச்சினின்  CV - இந்த சேசிங் விஷயத்தில் படு வீக்; அவர் முதல் ஆட்டக்காரராக  ஆடினார்; அவரால் கடைசி வரை இருக்க முடியாது என தீவிர ரசிகர்கள் காரணம் கூறலாம்; கோலி கூட தான் ஒன் டவுனில் இறங்குகிறார்; அதிலும் பல நேரம் மிக சீக்கிரமாக முதல் 4-5 ஓவரிலேயே.. !! 20-20 ஆட்டம் மற்றும் சேசிங் - இவற்றில் கோலி நிச்சயம் சச்சினை பீட் செய்து விடுவார்..

ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் சாதனை மிக பெரிது; 49 செஞ்சுரி மற்றும் 18000 ரன்கள்.. நிச்சயம் ஒரு நாள் போட்டியில் கோலி சச்சினுக்கு இணையான ஒரு பேட்ஸ் மேன் தான்.. ஆனால் அவர் இந்த ரிக்கார்டை பீட் செய்வது இன்னும் 10-12 ஆண்டுகள் ஆடினால் தான் சாத்தியம்;  ரிக்கார்டுகளை விடுத்து பார்க்கும் போது ஒரு நாள் போட்டிகளில் சச்சின் மற்றும் கோலி இருவரும் இணையான அளவு திறமை கொண்ட வீரர்கள் என சொல்லலாம்..

இறுதியாக கிரிக்கெட் தவிர மற்ற விஷயங்கள்..  Humbleness பொது வெளியில் எப்படி  நடந்து கொள்கிறார் என்பன !  இங்கு தான் சச்சின் - மிக அதிகம் விரும்ப பட காரணம். இந்த விஷயத்தில் கோலி சச்சினை நெருங்கவே முடியாது; நெருங்க தேவையும் இல்லை; கோலி எப்போதும் ஒரு aggressive காரக்டர். தோனி அண்மையில் சொன்னது போல் அவர் அப்படி   aggressive ஆக இருப்பதே சிறப்பு.

சச்சினுடன் ஒப்பிடும் அளவில் நமக்கு ஒரு வீரர் கிடைத்துள்ளார்.. கோலி .. The Master Chaser ! Let us celebrate this moment !!

4 comments:

  1. //ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் சாதனை மிக பெரிது; 49 செஞ்சுரி மற்றும் 18000 ரன்கள்.. நிச்சயம் ஒரு நாள் போட்டியில் கோலி சச்சினுக்கு இணையான ஒரு பேட்ஸ் மேன் தான்.. ஆனால் அவர் இந்த ரிக்கார்டை பீட் செய்வது இன்னும் 10-12 ஆண்டுகள் ஆடினால் தான் சாத்தியம்//

    சற்று மாறுபடுகிறேன் நண்பரே! சச்சினை விட விரைவாகவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் கோலி அதிக சதங்களை அடித்திருக்கிறார். தற்போது சச்சினின் சாதனைகளை அவரைவிட விரைவாக முடிக்கிற சாத்தியங்களும் கோலிக்கே இருக்கிறது.

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே! ஆனால், சச்சின் ஷார்ஜாவில் ஆடிய ஆட்டத்தின்போது அவர் எதிர்கொண்ட ஆஸ்திரேலிய பந்துவீச்சு தற்போது மொஹாலியில் கோலி பதம்பார்த்த பந்துவீச்சைக் காட்டிலும் மிக வலுவானது மற்றும் அபாயகரமானதும் கூட! ஆகவே, சச்சினின் அந்த ஆட்டத்துடன் கோலியின் இந்த ஆட்டத்தை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  3. பதில் சரி.. பதிவு எப்போ வரும். Waiting..

    ReplyDelete
  4. மொஹாலி - Sachin played in a hopeless situation (His Birthday?)
    not to forget the play of Azhar too..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...