சென்னையில் இது மாரத்தான் காலம்.. பொதுவாகவே வெய்யில் சற்று குறைந்த அக்டோபர் முதல் ஜனவரி முடியும் வரை பல மாரத்தான்கள் நடக்கும்.
பெரும்பாலான மாரத்தான்களில் நாம் பணம் கட்டவேண்டியிருக்கும். நமக்கு டி ஷர்ட் - காலை உணவு போன்ற செலவுகளை பார்த்து கொள்வர்.
இருப்பினும் முழுவதும் இலவசமான சில மாரத்தான்களும் உண்டு. அப்படி நடந்தது தான் அண்மையில் பில்லர் பேசர்ஸ் என்ற குழு நடத்திய மாரத்தான்.
ஒரு மாரத்தான் எப்படி நடத்த வேண்டும் என இந்த குழுவிடம் கற்று கொள்ள வேண்டும். அனைத்து ஏற்பாடுகளும் அவ்வளவு துல்லியம். ஒவ்வொரு கிலோ மீட்டர் இடைவெளியிலும் வாலன்டியர்கள் மழையில் நின்றபடி எலக்ட்ரால் கலந்த நீர் தந்த படி இருந்தனர்.. எனவே எனர்ஜி குறையாமல் ஓட முடிந்தது.
ஓடி முடித்ததும் Physiotherapy team மூலம்செய்த கூல் டவுன் அதி அற்புதம். ஓடிய 500க்கும் மேற்பட்டோருக்கு இளநீர் ஏற்பாடு செய்திருந்தது ஆச்சரியம் !! அப்புறம் அற்புதமான சாப்பாடு.
மழையில் நனைந்தவர்களுக்கு துண்டு கொடுத்து தலை துவட்டி கொள்ள சொன்னதெல்லாம் நினைத்து பார்க்க முடியாத விருந்தோம்பல் !
நிகழ்ச்சி துவங்கும் முன் மழை பெய்வதால் காத்திருக்க, அப்போது நரேஷ் அய்யரை கண்டேன். அவர் தானா என சந்தேகம். அருகில் சென்று உங்கள் பேர் என்ன என்று கேட்க, நரேஷ் என்றார். அப்புறம் அவர் தான் என தெரிந்ததும், அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தேன்.
மழை தொடர்ந்து கொண்டே போனதால் - கொஞ்ச நேரம் அவரிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது; வெளிச்சம் அதிகம் வரவில்லை; எனவே பலரும் அவரை அடையாளம் கண்டு கொண்டு வந்து பேசவில்லை (ஓடி முடித்ததும் ஏராள மக்கள் அவருடன் சேர்ந்து படம் எடுத்து கொண்டனர்.. குறிப்பாக பெண்கள் !)
பிறந்து வளர்ந்தது மும்பை என்றாலும் எப்போதுமே சென்னை - மும்பை என மாறி மாறி இருப்பதாக சொன்னார். இப்போதும் அசோக் நகரில் வீடு இருக்கிறதாம். எனவே மாரத்தான் நடத்தும் குழுவில் சிலரை நன்கு தெரிந்திருக்கிறது
முன்பே வா என் அன்பே வா பாடல் பற்றி பேசாமல் இருக்க முடியாது ; இது வரை வந்த மொத்த தமிழ் பாடல்களில் சிறந்தவற்றை பட்டியலிட்டால் அதில் அந்த பாட்டு வந்து விடும் என்றேன். சிரித்தபடி " எல்லா க்ரெடிட்டும் ரகுமான் சாருக்கு தான் " என்றார். "அந்த பாட்டு தான் உங்களுக்கு signature பாட்டு மாதிரி ஆகிடுச்சு இல்லை?" என்றேன். "ஆமாம் " என்றார். மெலடி தான் அதிகம் பாடுகிறீர்களோ என்றதற்கு - அவ்வப்போது பாஸ்ட் பீட் பாட்டுகளுக்கும் கூப்பிடுகிறார்கள்; அண்மையில் கெத்து படத்தில் பாடிய வேகமான பாட்டு நன்கு ரீச் ஆனது என்றார்.
முதல் முறை ஓடுவதாக சொன்னார். ஆனால் டென்சன் இல்லாமல் கூல் ஆக தான் இருந்தார்.
எந்த ஆடம்பரமும் இல்லை; மராத்தான் முடித்த பின் பலரும் வந்து படமெடுக்க, சிரித்தபடி ஒத்துழைத்தார்.
நாமெல்லாம் மொபைலை சும்மாவே நொண்டி கொண்டிருப்போம். அங்கிருந்த சில மணி நேரத்தில் அவர் கையில் மொபைலை காண வில்லை; எந்த டைவர்ஷனும் இல்லாமல் முழுக்க முழுக்க மாரத்தான் அனுபவத்தை மட்டுமே என்ஜாய் செய்தார்.
பெரிய மாரத்தான் என்றால் கூட்டம் அதிகமாய் இருக்கும் - இது போன்ற 400- 500 பேர் ஓடும் மாரத்தான் என்றால் அதிகம் பிரச்சனையில்லை என நினைத்திருக்கலாம்.
ஓடி முடித்த பின்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்; அவரது குரலும், பல பாடல்களும் எனக்கும் மட்டுமல்ல - மகளுக்கும் மிக பிடித்தமானவை; வீட்டில் வந்து பெண்ணிடம் சொன்னதும், வராமல் போனதற்கு ரொம்பவும் மிஸ் செய்தாள் !
மரத்தானில் எடுத்த புகைப்படங்கள் சில..
super annae... wipro marathonla santhipom
ReplyDelete