Wednesday, January 9, 2019

தமிழ் சினிமா 2018- சிறந்த 10 படங்கள்

2018ல் பதிவுகள் எழுதுவது குறைந்ததே ஒழிய - படம் பார்ப்பது குறைய வில்லை.


10. செக்க சிவந்த வானம்

மணிரத்னத்துக்கு சின்ன பிரேக்கிற்கு பிறகு ஒரு ஹிட் படம். மிக பெரிய ஸ்டார் காஸ்ட் - அயல் மொழியில் இருந்து உருவப்பட்ட ஒரு கதை - விஜய் சேதுபதி - சிம்பு - அருண் விஜய் அனைவரும் தமது ஸ்டைலில் பிரகாசித்ததால் படம் வெற்றியை ஈட்டியது.

9. வட சென்னை

வெற்றி மாறன் படம் என்பதாலேயே அதிக எதிர்பார்ப்பு இப்படத்திற்கு. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் முழுமையும் பூர்த்தி ஆகவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.

ஏராளமான விஷயங்களை சொல்ல ஆசைப்பட்டு - சாதாரண பார்வையாளனுக்கு சற்று  தெளிவில்லாத  விதத்தில் படம் அமைந்து விட்டது.

கேங்ஸ்டர் படத்துக்கு தேவையான சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் நிச்சயம் மிஸ்ஸிங். சாவகாசமாக செல்லும் திரைக்கதை -வன்மத்துடன் அலையும் பாத்திரங்கள் - இவை படத்துடன் நம்மை ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது .

பாதி கதை தான் - வடசென்னையில் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் தோல்வி காரணமாக அடுத்த பாகம் வருவது சந்தேகமே

இருப்பினும் வெற்றி மாறனின் கதை சொல்லும் திறன் - நாம் எதிர்பார்க்க முடியாத சில சஸ்பென்ஸ்கள் இவையே படத்தை இறுதி வரை பார்க்க வைத்தன. படம் இவ்வருட டாப் 10 ல் வர காரணமும் இவையே !

8. பரியேறும் பெருமாள்

மிக அதிக பாராட்டை பெற்ற பரியேறும் பெருமாள் உண்மையில் என்னை ஓரளவு தான் கவர்ந்தது.

முதலில் நல்ல விஷயங்கள்..

வித்யாசமான கதை. காதலை அடிப்படையாய் கொள்ளாமல் சமூக பிரச்சனை ஒன்றை கையாண்ட விதம், கதிர் மற்றும் துணை பாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு, சோகமாய் முடிக்காமல் படத்தை நம்பிக்கையுடன் முடித்த விதம்..

இனி படம் ஏன் என்னை அதிகம் கவரவில்லை என்கிற விஷயத்திற்கு வருகிறேன் 

நானும் சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு படித்தவன் தான். இப்படம் மிக அதிகமாக கல்லூரியில் நாயகன் எதிர்கொள்ளும் சாதீய அடக்குமுறை பற்றி பேசுகிறது. குறிப்பாக நாயகன் மற்றும் அவன் தந்தையை கல்லூரி மாணவர்கள் அவனமானப்படுத்துவது ..

சட்ட கல்லூரியில் அட்மிஷன் சாதீய அடிப்படையில் நிகழ்வதால் உள்ளே வந்ததும் சாதீய அடிப்படையில் சில குழுக்கள் உருவாகி விடும். அனைத்து மாணவர்களும்  இந்த சாதீய குழுவில் சேர்வார்கள் என சொல்ல முடியாது 

ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த நபரை அதுவும் சாதி அடிப்படையில் அடித்தால் - அவர் சாதியை சேர்ந்த மற்ற மாணவர்கள் கண்டும் காணாமல் இருக்கவே மாட்டார்கள். அது மிக பெரும் பிரச்சனையாக வெடிக்கும். கல்லூரி ஸ்ட்ரைக் உள்ளிட்டவை அவசியம் இதனால் நடக்கும் 

இங்கு நாயகன் - அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் போது அவனுக்கு ஆதரவாக யாருமே வராதது நடைமுறையில் நடக்கவே நடக்காது. 

இந்த அடிப்படை பிரச்சனை தான் படத்துடன் என்னை ஒன்றை விடாமல் செய்தது. 

7. அடங்க மறு 

வருட  இறுதியில் வந்த இன்னொரு சுவாரஸ்யமான திரைப்படம். பழிவாங்கும் கதையை மிகுந்த வித்யாசமாக எடுத்திருந்தனர். குறிப்பாக வில்லன்கள் ஒவ்வொருவரும் அவரவர் தந்தை கையால் கொல்லப்படுவர் என சொல்லி - அப்படியே கொல்வது அட்டகாசம். த்ரில்லர் விரும்பிகள் தவற விடக்கூடாது படம் அடங்க மறு

6. சர்கார்

படம் வெளியாகும் முன்னும், அதன் பின்னும் பல சர்ச்சைகளை சந்த்தித்த சர்க்கார் - நிச்சயம் நான் ரசித்த படங்களில் ஒன்று. வித்யாசமான கதை- சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் விறுவிறுவென்று செல்லும் திரைக்கதை - ரஹ்மானின் இசை- விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் இவற்றால் இவ்வருடம் மிக அதிக வசூல் செய்த படங்களுள் ஒன்றாக நின்றது சர்க்கார்

5. நடிகையர் திலகம்

தெலுகு டப்பிங் என்றாலும் மனதை தொட்ட ஒரு  படம். நாம் ரசித்த சாவித்ரி என்கிற நடிகை பற்றிய கதை- பிரபலமானவர்கள் என்றாலே ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்ற எண்ணத்திற்கு மாற்றாக சாவித்ரி பட்ட துயரங்கள் கண்ணீரை வரவழைக்கும். கீர்த்தி சுரேஷ் சாவித்ரி பாத்திரத்தில் நம்மை வியக்க வைத்தார். இந்த ஜெனெரேஷன் சேர்ந்தோரும் கூட ரசிக்கும் படி எடுத்திருந்தனர் படக்குழுவினர் !

4. கடைக்குட்டி சிங்கம்

வசூல் சிங்கம் இப்படம் !

பீம்சிங் என்ற பழைய இயக்குனர் "பா" வரிசை படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் (பாலும் பழமும், பாவ மன்னிப்பு, etc ). பீம்சிங் டைப்பிலான குடும்ப கதை இக் கடைக்குட்டி சிங்கம்.

விவசாயம் பற்றி பேசிய இன்னொரு வெற்றிப்  படம் இது. செண்டிமெண்ட்- காமெடி- அழகிய ஹீரோயின்கள் - போர் அடிக்காமல் பார்க்க வைக்கும் திரைக்கதை இவற்றால் சொல்லி அடித்த கில்லி மாதிரி வெற்றியை எட்டினர்.

**********

கடைசி ஏழு படங்களை வரிசைப்படி பார்த்தாகி விட்டது. முதல் மூன்று இடங்களுக்கு ரேங்க் தர விருப்பமில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்ப இது மாறலாம். சென்ற வருடத்தின் சிறந்த 3 படங்கள் என இவற்றை சொல்லலாம் :

கனா

வழக்கமான ஸ்போர்ட்ஸ் படம் தான் - ஆனால் அதில் விவசாயத்தை சேர்த்து parallel ஆக சொன்ன விதத்தில் தனித்து தெரிந்தது கனா. உண்மையில் பார்த்தால் அவர்கள் அழுத்தம் திருத்தமாய் சொல்ல  நினைத்தது விவசாயம் குறித்து தான். அதனை தனியே சொன்னால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் கிரிக்கெட் என்ற இனிப்பு மறந்து கலந்து கூறினர்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு - காமெடி- இனிய பாடல்கள்- தைரியமான தெளிவான இயக்கம் இவற்றால் கனா - கவர்ந்தது

ராட்சசன்

இவ்வருடம் பார்த்து பிரமித்து போன படங்களில் ஒன்று ராட்சசன். முண்டாசு பட்டி என்கிற கிராமிய படம் எடுத்த இயக்குனரின் அடுத்த படம் ... என்ன ஒரு Changeover !

கதை, திரைக்கதை, சஸ்பென்ஸ் அனைத்துமே அட்டகாசம். கன்டண்ட்டின்  அடிப்படையில் இருக்கும் வயலன்ஸ் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வன்முறையை தேவையான அளவு மட்டுமே காண்பித்திருந்தார் இயக்குனர். மிக ஆச்சரியப்படவும், ரசிக்கவும் வைத்த படம் ராட்சசன்.


96

சென்ற வருடம் மிக அதிகம் பேசப்பட்ட, பலரையும் தம் இளமை காலத்திற்கு எடுத்து சென்ற படம். பள்ளி/ கல்லூரி  கால காதலை நினைத்து பார்க்க வைக்கும் இத்தகைய படங்கள் அவ்வப்போது வந்து வெற்றிக்கொடி நாட்டுவது வழக்கமே.

ஒரே நாளில் நடக்கும் கதை- திருமணமான காதலியை நினைத்து 20 வருடம் கடந்தும் மணமுடிக்காமல் இருக்கும் நாயகன் பாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி.

விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பு, இளையராஜா பாடல்களை பயன்படுத்திய விதம்- கவித்துவமான முடிவு.. இவை இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் 96 ஐ நினைவு கூற வைக்கும்.

************

இமைக்காத நொடிகள் நன்றாக இருந்ததாக பலர் கூறினர் ; பார்க்க வில்லை

2.0 தியேட்டரில் கண்டு வெறுத்தேன். எனக்கு மிக பிடித்தமான இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், காலி பெருங்காய டப்பா ஆகி வருவது பெரும் வருத்தம் !
************

மற்றபடி இவ்வருடமும் வெளியான படங்களில் 10 சதவீதம் மட்டுமே போட்ட பணத்தையே எடுக்க முடிந்தது. 2019 பேட்ட மற்றும் விஸ்வாசம் என்ற   இருபெரும் ரிலீஸ்களுடன் துவங்குகிறது. பார்க்கலாம் !

2 comments:

  1. வடசென்னை உங்களைக் கவரவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. திரைக்கதை அமைப்பில், எல்லோருடைய நடிப்பில் வடசென்னை ஒரு மிகச் சிறந்த படமாக நான் கருதுகிறேன். படம் பார்ப்பவர் புத்திசாலி என்று கருதும் படைப்பாளியாக வெற்றி மாறன் தெரிகிறார்.

    அதே நேரத்தில், செக்க சிவந்த வானம் படத்தை கொஞ்ச நேரம் கூட பார்க்க முடியவில்லை. வெள்ளை வெளேர் என்று உடை அணிந்து குருஸ் படகில் ஷாம்பெய்ன் கிளாஸ் வைத்திருந்தால் படம் ரிச்சாக இருக்கும் என்று எவன் சொன்னானோ!

    மற்றபடி, நீங்கள் சொன்னதுடன் 'ராட்சசன்' படத்தில் உடன் படுகிறேன். 96 பார்க்கவில்லை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...