" சார்...உங்க தெருவில ஒரு டெத் ஆயிடுச்சு"
"யாரு டேவிட்?"
"உங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்காரே.. ரவி.. அவர் முதல் பொண்ணு தூக்கு மாட்டி செத்துடுச்சு சார் "
அதிர்ந்தேன் " யாரு கயலா? எட்டாவது தான் படிக்கிறா அவளா? "
"ஆமா சார்".
கயல்.. பதிமூன்று வயது பெண்.. ஒல்லியாக கருப்பாக கண்ணாடி அணிந்திருப்பாள். அவளது தங்கை ஐந்தாவது படிப்பவள். எப்போதும் தெருவில் சைக்கிள் ஒட்டியவாறு இருப்பாள். அவளை அடிக்கடி நான் கிண்டல் செய்வேன். கயல் வயதுக்கு வந்த பெண் என சற்று தள்ளி இருப்பது வழக்கம்.
சென்ற வருடம் கயல் பெரியவளான போது மண்டபத்தில் வைத்து பெரிய விழாவாக செய்தார்கள். பதிமூன்று வயது பெண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது?
அதன் பின் மீட்டிங்கில் மனம் செல்ல வில்லை. எனது பாஸிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.
வண்டி ஓட்டும் போது ஏதேதோ நினைவுகள். எனக்கும் பதினோரு வயது பெண் உள்ளதால், இந்த வலி, அதன் தாக்கம் அதிகமாய் உணர முடிகிறது.
தெருவிற்குள் நுழையும் போது போலீஸ் ஏற்கனவே வந்திருந்தது. ஹாலில் கயல் கிடத்தபட்டிருந்தாள். பள்ளி யுனிபார்மில் தூங்குவது போல் தான் இருந்தாள்.
போலீஸ் கயலின் அம்மா அப்பா தவிர மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு வரிசையாய் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். நான் ஹாலுக்கு சற்று வெளியே உள்ள திண்ணையில் நின்றதால் அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது
கோணம் - 1
" யார் முதலில் பார்த்தது? "
" நான் சாப்பிட வீட்டுக்கு வந்தேன்; ரொம்ப நேரம் தட்டி கதவு திறக்கலை; ஜன்னல் வழியா தூங்குராலோன்னு பார்த்தேன். பேனில் தொங்கிட்டுருந்தா சார் " கயலின் அப்பா விம்மினார்.
" அவங்க அம்மா எங்க போய்ட்டாங்க? "
" சார் நான் மகளிர் சுய உதவி குழுல இருக்கேன்; அங்கே கூடை பின்ன கத்து தராங்க; அதுக்கு போயிருந்தேன்"
அம்மா போனது எத்தனை மணி, அப்பா வந்தது எந்த நேரம் என கேள்விகள் நீண்டது.
" மேலிருந்து இறக்கினது யாரு? "
"பக்கத்துல கட்டிட வேலை நடக்குது; அங்கே வேலை செய்றவங்க தான் வந்து பூட்டை உடைச்சு அவளை இறக்கினாங்க"
" இப்படி தொங்கினவளை இறக்கிருக்க கூடாது.. எப்படி நீங்களா இறக்கலாம்? நாங்க செய்ற வேலையை நீங்களே செய்வீங்களா? "
" சார் உயிர் இருக்கும்னு நினைச்சேன். உடனே டாக்டர் கிட்டே தூக்கிட்டு ஓடினேன். பாத்துட்டு உயிர் போய்டுச்சுன்னு சொல்லிட்டார்"
எனக்கு அருகிலிருந்தவரிடம் எப்படி போலீஸ் வந்தாங்க என நான் கேட்க, " கயல் அப்பா தான் போய் போலீசில் சொன்னார். பிரச்சனை ஆகிட கூடாதுன்னு தான்" என்றார்.
கேள்விகள் வேறு திசையில் செல்ல ஆரம்பித்திருந்தன.
" பெரியவளாகிட்டாலா? "
" ஆகிட்டா. போன வருஷம்.."
" கடைசியா எப்ப மென்சஸ் வந்தது? "
பதில் சொல்லாமல் கயல் அம்மா கதறினார். " ஐயோ கயலு என்ன கேள்வி கேக்குறாங்க"
" சொல்லும்மா" அதட்டினார் எஸ். ஐ.
" போன வாரம் தாங்க வந்துது"
"உண்மையாவா"
" ஆமாங்க"
" படிப்பில எப்படி"
"ரொம்ப சுமாரா தாங்க படிப்பா"
" திட்டுவீங்களா?"
" படி; டிவி பாக்காதேன்னு சொல்லுவேன்" கயல் அம்மா விசும்பலோடு சொன்னார்.
" ஏன் இன்னிக்கு ஸ்கூலுக்கு போகலை? "
" பத்தாவது பரீட்சை நடக்குது; பாதி நாள் தான் ஸ்கூல்; மத்தியானமா போவா"
" ஸ்கூலில் திட்டு வாங்குவாளா? "
"ஆமாங்க; ரொம்ப கண்டிப்பான ஸ்கூல் அது படிக்கலைன்னா அடிப்பாங்க; திட்டுவாங்க”.
அது கோ- எட் பள்ளியா என எஸ். ஐ. உறுதி செய்து கொண்டார்.
"கடைசியா எப்ப திட்டினதா சொன்னா ? "
"ரெண்டு நாள் முன்னாடிங்க"
கோணம் - 2
நான் வெளியே வந்தேன். அவர்களுக்கு நேர் எதிர் வீட்டில் வித்யா என்ற பெண்ணிடம் தான் அவள் டியுஷன் படித்தாள். அவர்கள் வீட்டினுள் சென்று நின்றேன். தெருவில் உள்ள இன்னும் சில பேரும் அங்கு தான் நின்று கொண்டிருந்தனர். வித்யா அழுது ஓய்ந்திருந்தாள். " என்ன வித்யா.. உன் கிட்டே தான சாயங்காலம் முழுக்க இருப்பா? என்ன காரணமா இருக்கும்? "
" அவ ரொம்ப டிப்ரஷனில் இருந்தா அங்கிள்..எனக்கு வாழவே பிடிக்கலைன்னு அடிக்கடி சொல்லுவா"
" என்னம்மா இது!! அவங்க அம்மா கிட்டே சொல்ல வேண்டியது தானே? "
" சொல்லிருக்கேன்; அவங்க பெருசா எடுத்துக்கலை. சைகியாடரிஸ்ட் கிட்டே அப்பாயின்மன்ட் வாங்கி தந்தேன். அது எக்மோர் ரொம்ப தூரம்ன்னு போகலை; அப்புறம் பக்கத்தில் வேளச்சேரியில் கூட ஒரு டாக்டர் பேர் சொல்லி, போங்கன்னு சொன்னேன்; போகலை"
கயலின் பக்கத்துக்கு வீட்டு அம்மா பேச ஆரம்பித்தார். " அவளுக்கு எங்கே பொண்ணு மேல அக்கறை? சும்மா ஊர் சுத்திக்கிட்டே இருப்பா; புருஷன் தான் சம்பதிக்கிறாநேன்னு பேசாம இருக்க வேண்டியது தானே? இந்த கூடை பின்ன கத்துக்கிட்டு என்ன செய்ய போறா? இப்ப பொண்ணு போயிட்டாளே"
வித்யாவின் அம்மா அதனை ஆமோதித்து பேசினார் " பசங்க பள்ளி கூடத்தில் இருந்து வந்து பசியோட கிடக்கும்; இது எங்காவது போய்டும்; சும்மா அடி, உதை.. வயசுக்கு வந்த பொண்ணை எவ்ளோ திட்டுறது, அடிக்கிறது? கொஞ்சம் கூட அவ மேல அக்கறை இல்லை "
போலீஸ் கயல் வீட்டிலிருந்து வெளியே வர பேச்சை நிறுத்தினர்.
" ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சா? "
"வந்திட்டுருக்கு சார்".
இதனிடையே ஒரு புகை பட காரர் வந்து கயலை போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.
எஸ். ஐ பக்கத்துக்கு வீடுகள், கயலின் தங்கை என ஒவ்வொருவராக விசாரித்து கொண்டிருந்தார்.
ஆம்புலன்ஸ் வந்து விட, கயல் போஸ்ட் மார்டம் செய்யபட எடுத்து செல்லபட்டாள்.
கயலின் அம்மாவின் அழுகை மிக அதிகமானது. " இன்னும் கொஞ்ச நேரம் பாத்துக்குரேங்க.. விடுங்க.. எல்லாத்துக்கும் ஆசை படுவாளே.. எல்லாம் வாங்கி தருவோமே; இப்ப இதுக்கும் ஆசை பட்டாளே.. காலையில் கூட ரப் நோட்டு கேட்டா.. வாங்கிட்டு வந்து குடுத்தேனே.. "
கயலின் தந்தை கம்பியை பிடித்தவாறு தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.. அழ வில்லை; அவர் அழுதால் நல்லாயிருக்குமே என தோன்றியது.
" ம்ம் இந்த பூமியில் அவளுக்கு உப்பும் தண்ணியும் அவ்ளோ தான். போய்ட்டா " என்றா வித்யாவின் அம்மா. ஆம்புலன்ஸ் புறப்பட்டது. கயல் அம்மா, உறவினர்கள் அழுகையில் எனக்கும் அழுகை எட்டி பார்த்தது .
கோணம் -3
ஆம்புலன்சும் போலீஸ் வேணும் சென்ற பின் வீட்டினுள் சென்றேன். அந்த அறை!! ஓரிருவர் நின்றிருந்தனர். வித்யா அம்மா கையில் ஒரு காகிதம்.
" என்னமோ இங்கிலிசில் எழுதிருக்கு. என்னான்னு புரியலை" என சொல்லி கொண்டிருக்க, " குடுங்க" என கேட்டு வாங்கினேன். அவள் உறவுக்கார பெண் ஒருத்தி அவள் ரப் நோட்டிலிருந்து அந்த கடிதத்தை எடுத்திருந்தாள். ஆங்கிலத்தில் தெளிவாக அடித்தல் திருத்தல் இன்றி எழுதி இருந்தாள். யாருக்கு எழுதப்பட்டது என்ற தகவலோ, என்று எழுதப்பட்டது என்ற விபரமோ இல்லை. அந்த கடிதம்….
“நீ ஏன் நேற்று வர வில்லை? நேற்று நீ வருவாய் என காத்திருந்து ஏமாந்தேன். உனக்கு நினைவிருக்கா உன்னை நான் எப்போது பார்த்தேன் என? அப்போது நாம் ஐந்தாவது படித்து கொண்டிருந்தோம். உன்னை தோழி வீட்டில் பார்த்தேன். என்ன பேர் என கேட்க " ராஜ்... பிரின்ஸ் ராஜ்" என உன் பள்ளி கூடம் பேர் சேர்த்து சொன்னாய். உன்னுடம் இருக்கும் நேரம் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? என்னை சிரிக்க வைப்பது நீ மட்டும் தான். ஒரு முறை நீ என்னை தள்ளி விட நான் கீழே விழுந்து அழ ஆரம்பித்து விட்டேன். அப்போது நீ என்னை " இதுக்கெல்லாமா அழுவாங்க? " (இது மட்டும் தமிழில் எழுத பட்டிருந்தது) என தேற்றினாய். நீ சொன்ன ஜோக்குகளை என்னால் மறக்க முடிய வில்லை. உன்னையும் தான். அனைத்துக்கும் நன்றி “.
" என்ன? என்ன?" என்றார் வித்யா அம்மா. " ஒண்ணுமில்லை. சும்மா எதோ எழுதிருக்கா" .. கயல் அப்பாவை தேடி அவரிடம் அந்த கடிதத்தை தந்தேன். மிக சாதாரணமாய் வாங்கி உள்ளே வைத்து கொண்டார். ஏற்கனவே படித்திருக்கலாம்!!
அதிர்ச்சியாக இருந்தது!! பதிமூன்று வயது பெண்!!
இன்னும் சிறிது நேரத்தில் பள்ளியிலிருந்து ஆட்டோவில் வர போகும் எனது பெண்ணுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மனம் அவளிடம் இதனை எப்படி சொல்வது என யோசிக்க ஆரம்பித்திருந்தது.
This comment has been removed by the author.
ReplyDeletemiga arumayana kathai. nerthiyaga eluthi ullirgal
ReplyDeleteநல்ல முயற்சிங்க. நல்லா வந்திருக்கு
ReplyDeleteநன்றாக உள்ளது சிறுகதை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகமெண்ட் மிஸ்ஸாவது நான் இப்பொழுததான் முதல்முறையாக பார்க்கிறேன். முதல் கமெண்ட் பதிவின் கீழ் வரவில்லை. ஆனால் அதை நான் டெலிட் செய்துவிட்டேன்.
ReplyDeleteநல்லா வந்திருக்கு
ReplyDeleteநல்லா இருக்குங்க.
ReplyDeleteகதையா?
ReplyDeleteநல்லாருக்கு,
வித்தியாசமான மூன்று கோணங்கள். நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
புது தில்லி
நன்றி ராதா கிருஷ்ணன் ஐயா, ராமசாமி கண்ணன்
ReplyDelete***
சங்கர்: நடந்த நிகழ்வு தான்; கற்பனை மிக குறைவு. இந்த நிகழ்வில் ஒரு சிறுகதைக்கான வடிவம் இருந்ததால் அந்த வகையில் எழுதி உள்ளேன்.
***
வெங்கட் நன்றி
கதை என்றுச் சொல்லுவதை விட... நிஜம் போலவே எழுதியிருக்கீங்க...
ReplyDeleteஅந்த கடிதத்தில் உள்ள விஷயம் உண்மையா?
ReplyDeleteit is an interesting story in different view-points.
ReplyDeleteநல்ல கதை வித்யாசமான பார்வை.
ReplyDeleteஉங்க வலைப்பதிவின் தலைப்பையும் விளக்கத்தையும் சேர்த்து
என் வலைபதிவில் ஒரு கவிதை பதிவு செய்தென் பார்த்திர்களா
வீடுதிரும்பலில்
நேசிக்கவும் -
நேசிக்க படவுமே
வாழ்கை.
ப்ச்...படிக்கும்போதே தெரிஞ்சுடுச்சு, இது கற்பனை கதை இல்லன்னு. எப்படிங்க, பதிமூணு வயசுலேயே தற்கொலை எண்ணம்....நினைச்சு பார்க்கவே பகீர்னு இருக்கு!
ReplyDeleteகதையின் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக செல்கிறது.
ReplyDelete//இன்னும் சிறிது நேரத்தில் பள்ளியிலிருந்து ஆட்டோவில் வர போகும் எனது பெண்ணுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். மனம் அவளிடம் இதனை எப்படி சொல்வது என யோசிக்க ஆரம்பித்திருந்தது.//
பெற்றோரின் வலியை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
தொடர்ந்து இதுபோன்ற சிந்திக்கத் தூண்டும் உண்மைச் சம்பவங்களை கதைகளாக எழுதவும்.
அன்பின் மோகன் குமார்
ReplyDeleteஅட அட - கதை நல்லாவே போகுதே - ஒரு நிகழ்விற்கு எத்தனை கோணங்கள் ....
நல்வாழ்த்துகள் மோகன்
நட்புடன் சீனா