Wednesday, May 10, 2017

நங்கநல்லூர் .......ஒரு விரிவான பார்வை

ங்கநல்லூர்....

ஒரு காலத்தில் சென்னை புறநகராக இருந்து - இன்று சென்னையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. முழுக்க முழுக்க குடியிருப்புகள் மட்டுமே.. தொழிற் சாலைகள் போன்றவை மருந்துக்கும் இல்லை.


சென்னை வந்த போது நான் முதன்முதலில் தங்கிய இடங்களுள் ஒன்று நங்கநல்லூர். மாமா - மாமி வீடு இங்கு தான் உள்ளது (இப்போது இருவரும் இல்லை; அடுத்தடுத்த வருடம் தவறி விட்டனர்) ; 20 வருடம் முன்பு பார்த்த நங்கநல்லூருக்கும் இப்போதைக்கு நிறையவே வித்யாசம்.

அருகில் உள்ள  மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பல்லாவரம் போன்ற ஏரியாக்களை விட நங்கநல்லூரை மக்கள் அதிகம் விரும்ப முக்கிய காரணம் இங்குள்ள அகலமான சாலைகள்....மற்றும் கோவில்கள் !

முன்கதை சுருக்கம் 

நங்கநல்லூர் என்கிற ஏரியா கடந்த 40 வருடத்திற்கு முன் தான் உருவாகியது; அதற்கு முன் முழுவதும் வயல் வெளிகள். முதன் முதலில் சில ஆயிரம் ரூபாய்க்கு இடம் வாங்கி சிலர் குடி வந்தனர்.

அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையமோ திரிசூலம் ரயில் நிலையமோ கிடையாது; செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலத்தில் இறங்கி இருந்த ஒரே பேருந்தில் ஏறி நங்கநல்லூர் வரவேண்டும்

நங்கநல்லூர் கோ ஆபரேட்டிவ் பில்டிங் சொசைட்டி பிளாட் போட்டு விற்க துவங்கிய பின் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடியேற துவங்கினர். முதலில் அதிகம் வந்த மக்கள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள். பின் அடுத்தடுத்து மற்றவர்களும் வரத்துவங்கினர் !

அன்றும் இன்றும் 

நங்கநல்லூர் என்றால் ஒரு காலத்தில் .. எப்போதோ ஒரு முறை பஸ் வந்து போகும், சுமாரான சாலைகள் கொண்ட,  Connectivity க்கு சுமாரான  ஊர் என்று 20 ஆண்டுக்கு முன் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆன நங்கநல்லூர் வாசிகளுக்கு மனதில்  பதிந்திருக்கலாம்.

இன்று நங்கநல்லூர்..  அட்டகாசமான சிமெண்ட் சாலைகள்.. (வெள்ளத்தில் கூட சிமெண்ட் சாலைகள் பாதிக்கப்படலை !) அதிகமான பேருந்துகள், ஏராள சூப்பர் மார்க்கெட்டுகள், மெட்ரோ ஸ்டேஷன் என அசத்துகிறது !

பழவந்தாங்கல் Vs நங்கநல்லூர்

நங்கநல்லூருக்கு ரயிலில் வந்தால்  பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இந்த ரயில் நிலையம் அருகில் நான்கைந்து தெரு மட்டும் பழவந்தாங்கல், சென்னை -114 என்று கூறுகின்றன. உடனேயே நங்கநல்லூர் (சென்னை 61) வந்து விடுகிறது !

பழவந்தாங்கல் மற்றும் நங்கநல்லூர் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள் ! பிரிக்க முடியாத இரு ஊர்கள் என்றால் அவை இவை தான். குறிப்பாக நங்கநல்லூர் இல்லாமல் பழவந்தாங்கலுக்கு என தனி identity இருக்காது !

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்குவோரில் 10 % பழவந்தாங்கலுக்கு சென்றால் அதிகம். 90% நங்கநல்லூர் செல்லும் மக்கள் தான் !

சாலைகள்.. பெயர்கள்....

நங்க நல்லூரில் சாலைகளுக்கு பெயர் வைக்க நிரம்ப சிரமப்படவில்லை; தில்லை கங்கா நகரை எடுத்து கொண்டால் முதல் தெரு,  இரண்டாவது தெரு என 35 வது தெருவிற்கு மேல் நீள்கிறது. இதை தவிர நங்கநல்லூர் முதல் தெரு, இரண்டாம் தெரு என 45க்கு மேல் செல்கிறது. பீ.வி நகர் என்பது இன்னொரு முக்கிய ஏரியா. இங்கும் முதல் தெரு... இரண்டாம் தெரு கதை தான். இப்படியே நம்பரை வைத்தே நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் இருக்கின்றன.

தில்லை கங்கா நகரில் இந்த நம்பரை பெயராக கொண்ட தெருக்களை  கண்டுபிடிப்பது புது ஆட்களுக்கு கஷ்டமான காரியம். 15 வது தெருவுக்கு உள்ளே போனால் குறுக்கே 18 வது தெரு இருக்கும். 16 எங்கே என மண்டையை உடைத்து கொள்ளணும்.சில நேரம் ஒரே ரோடில் பாதி வரை 15 வது தெரு.. அடுத்த பகுதி சம்பந்தமே இல்லாமல் 27 வது தெரு என்று இருக்கும் !

இரத்தினபுரம் மலைச்சரிவு என்ற வித்தியாச பெயருடன் ஒரு சாலை 

கமர்ஷியல் பக்கம் 

பழைய காலத்தில் கமர்ஷியல் ரோடு  என்றால் அது.. எம் ஜியார் ரோடு ! தற்போது நான்காவது மெயின் ரோடு.. ! வசந்த் அண்ட் கோ, விவேக்ஸ் அண்ட் கோ, முருகன் இட்லி கடை, GRT Jewellery என பாதி தி.நகரை தனக்குள் கொண்டிருக்கிறது . இதே தெருவில் இருக்கும் சிறிய கடையான சிதம்பரம் ஸ்டோர்ஸ் - ஒரு பாரம்பரிய அடையாளம். எவ்வளவோ பெரிய கடைகள் வந்தபின்னும் இன்னும் சிதம்பரம் ஸ்டோர்ஸ் - என்பது பேருந்து  நிறுத்த அடையாளமாக இருக்கிறது

வங்கிகள் 


கோவில்களுக்கு இணையாக ஏராள வங்கிகள் நங்கநல்லூரில்  உள்ளது. தேசிய மயமான வங்கிகளில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வாங்கி, KVB துவங்கி தனியார் வங்கிகளில் HDFC, Axis, ICICI, IDBI, Repco  என அண்மையில் உதயமான ஈக்குவிட்டாஸ்  வங்கி வரை இங்கு உண்டு. இதனால் பென்ஷனர்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது நங்கநல்லூர் !

பூங்காக்கள்- உடற் பயிற்சி 

ஏராள பூங்காக்கள் இருக்கின்றன.குறிப்பாக சுதந்திர தின பூங்கா - நிறைய மரங்களுடன் பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக இருந்த இப்பூங்கா வரதா புயலில் எக்கச்சக்க மரங்களை இழந்து நிற்கிறது.

காலை 5 மணி துவங்கி பார்க்கை மக்கள் மொய்க்க துவங்கி விடுகிறார்கள்



எல்லா பார்க் போல நடக்கிற மக்கள் தான் அதிகம்.  யோகாவிற்கென தனி அறை ..அதில் 10-15 பேர் யோகா செய்து பழகுகிறார்கள்.


                           

இன்னொரு பக்கம் ஷட்டில் ஆடுகிறார்கள் ;ஓட்டம் முடித்து விட்டு வந்த வீரர்கள் ஸ்ட்ரெட்சஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பண்டிட் ரன்னர் எனப்படும் இவர்கள் ஒவ்வொரு திங்கள்-புதன் - வெள்ளி  ஆகிய 3 நாள் இங்கிருந்து காலை 5.30க்கு ஓட்டத்தை துவக்குகிறார்கள். இதில் இணைய எந்த கட்டணமும் இல்லை; விருப்பமுள்ள எவரும் சுதந்திர தின  பூங்காவில் இவர்களை சந்தித்து இணையலாம் .

நூறடி சாலை அருகிலேயே நான்கைந்து பார்க்குகள் உள்ளன  ;ஸ்கேட்டிங் பயிற்சிக்கு ஒரு தனி கிரவுண்டும் உள்ளது

கோவில்கள்

சின்னதும் பெரியதுமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள்  இங்கு உண்டு.  இதனால் நங்கநல்லூரை கோவில்கள் நகரம் என்றும் சின்ன காஞ்சிபுரம் என்றும் சொல்கிறார்கள்.

பழமையான மற்றும் முக்கிய கோவில்கள் என்றால் -  வரசித்தி விநாயகர் கோவில், உத்திர குருவாயூரப்பன் கோயில், ஐயப்பன் கோயில், இராஜராஜேசுவரி கோயில், இராகவேந்திர கோயில், சத்ய நாராயணன் கோயில், தேவி கருமாரியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், ஏழூரம்மன் கோயில், ஹயவதன பெருமாள் கோயில், அர்த்த நாரீசுவரர் கோயில், லட்சுமி நாராயணன் கோயில், லட்சுமி ஹயக்ரீவர் கோயில் !

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு கோவில் -32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில் ! நங்கநல்லூருக்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது !

நங்கநல்லூர் பிரசாதம்  : Information is Wealth !

நங்கநல்லூரில் இரவு சாப்பாடு பற்றி கவலையே படவேண்டாம். பல கோவில்களில் இரவு நேரம் பிரசாதம் இலவசமாக கிடைக்கும். ஆஞ்சநேயர் கோவில், ஹயக்ரீவர் கோவில், குருவாயூரப்பன் கோவில் இவையெல்லாம் அநேகமாக தினம் பிரசாதம் கிடைக்கும் கோவில்கள். இவை அனைத்தையும் ஒரு ரவுண்ட் வந்தால் நிச்சயம் இரவு உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வசதி இரவில் மட்டும் தான் உண்டு என்றும் காலை/ மதிய நேரங்களில் இல்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார் நமது நங்கநல்லூர் நண்பர் !

குடிநீர் - டிரைனேஜ் 

முதலில் நல்ல விஷயம்- டிரைனேஜ் - பல இடங்களுக்கும் வந்து விட்டது. நல்லதொரு ரிலீப் இது.

குடி நீர் - மெட்ரோ வாட்டர் கனக்ஷன் மற்றும் பாலாறு நீர் பல இடங்களுக்கும் வருகிறது. ஆனால் இது தண்ணீர் பிரச்சனை இல்லாத நேரத்தில் தான். கோடையில் மெட்ரோ வாட்டர் வாரத்தில் ஓரிரு நாளோ, ஒரு நாளோ தான் வருகிறது.

போர்வெல் வெய்யில் காலத்தில்  பல்லிளித்து விடுகிறது.. எனவே சில ஏரியாக்களில் மட்டும் வெளியிலிருந்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழல்.

சாப்பாடு

உணவகங்களை பொறுத்த வரை அடையார் ஆனந்த பவன் துவங்கி, முருகன் இட்லி கடை உள்ளிட்ட பல பிராண்டட் கடைகள் ஒரு பக்கம், மிக சாதாரணமான - ஆனால் அருமையான மெஸ்கள் இன்னொரு பக்கம் என ஏராள தேர்வுகள் உள்ளன.( பெரிய ஹோட்டல்கள் எல்லாம் அண்மையில் தான் இங்கு வந்துள்ளன.. !)

துர்கா நிவாஸ் .. பழமையான ஹோட்டல்.. சீப் அண்ட் பெஸ்ட் ...அதனாலேயே இன்றும் பலரால் விரும்பப்படுகிறது

ராஜபுத்ரா ரெஸ்ட்டாரண்ட், சீஸ் அண்ட் பிரீஸ், 80 டிகிரி ஈஸ்ட், அன்னப்ரஸன்னம் இவை புதிதாய் வந்துள்ள  நல்ல ஹோட்டல்கள் !

நண்பர் ஒருவர் சொன்ன தகவல்: நங்கநல்லூரின் மைய பகுதியில் நான் வெஜ் ஹோட்டல்கள் அநேகமாய்  இருக்காது. வானுவம்பேட்டை சர்ச் அருகிலோ - ரெங்கா தியேட்டர் அருகிலோ ஒரு சில நான் வெஜ் ஹோட்டல்கள் இருக்குமே ஒழிய மற்றபடி நகரின் - மைய பகுதியில் நான் வெஜ் ஹோட்டல்கள் இல்லை !

போலவே - கறிக்கடையும் கூட இதே ஏரியாவில் அதிகம் காண  முடியாது. இது யாரும் restriction போட்டு  வரவில்லை;தானாகவே அமைந்தது என்கிறார்.

அதே நண்பர் சொன்ன இன்னொரு தகவல்: ஒரு காலத்தில் இங்கு வசிப்போரில் குறைந்தது 75 % மக்கள் பிராமணர்களாக  இருந்துள்ளனர்.தற்போது அது ஓரளவு குறைந்தாலும் இன்னமும் 60 % பேராவது பிராமணர்கள் தான் என்றார்.

தியேட்டர்கள் - மருத்துவமனைகள்

ரங்கா தியேட்டர் என்பது நங்கநல்லூரில் முக்கிய அடையாளத்தில் ஒன்றாக இருந்தது. இப்போது அது வெற்றிவேல் மற்றும் வேலன்  என்ற இரு தியேட்டர் ஆகிவிட்டது. ஆனால் மக்கள் பீனிக்ஸ் உள்ளிட்ட மால் செல்லவே அதிகம் விரும்புகிறார்கள்.

வேலனில் 2  D  சவுண்ட் சிஸ்டம் தான். ஒருவேளை அருகில் சினிமா பார்க்கணும் என்றால் வேலனை விட - மடிப்பாக்கம் குமரன் (4 D சவுண்ட்) நிச்சயம் பரவாயில்லை என்கிறார்கள். அதுவும் ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது.

மருத்துவமனைகளை பொறுத்தவரை ஹிந்து மிஷன்  ஹாஸ்பிடல், சிட்னி மருத்துவமனை, ஸ்ரீ சக்ரா .. இவை மூன்றுமே மக்கள் விரும்பும் மருத்துவ மனைகள்.. மேலும் தனி மருத்துவர்களிலும் டயபடீஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆன ஹரிஹரன் துவங்கி ஏராள நல்ல டாக்டர்கள் உண்டு.

நகரமா ......கிராமமா ?

நங்கநல்லூரில் தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்.. என்ன தான் நவநாகரீகமாக மாறினாலும், இன்னமும் தன் பழமையை விடாதிருப்பது தான் !

பல இடங்கள் தொடர் அடுக்கு மாடி குடியிருப்புகளால் நிறைந்திருந்தாலும் BV நகரின் சில பகுதிகள் கிராமத்திற்கென்று உள்ள பல விஷயங்களை தன்னிடம் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு இந்த போஸ்ட்டரை பாருங்கள்

முதலாவது பிறந்த நாளுக்கு ரஜினி, விஜய் படம் போட்டு பிளக்ஸ் 
அதே நகரில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதி வந்ததும் அப்படியே ஷாக் ஆகி நின்று விட்டேன். இந்த படத்தை பாருங்கள்.




பெரிய மலையை குடைந்தது போன்ற தோற்றம்.. நங்கநல்லூரின் மையப்பகுதியில் உள்ளது இந்த இடம்.

BV நகரில் செல்ல  பிராணிகள் சிகிச்சை மையம், கால்நடை மருந்தகம் இவை இலவசமாக இயங்குகின்றன. இதுவும் கூட கிராமங்களில் அதிகம் காணக்கூடிய ஒரு விஷயம்..இங்கு காண முடிகிறது







வீடுகள் .. Flat கள் 

முதன் முதலில் 2000 ரூபாய்க்கு ஒரு கிரவுண்ட் விற்ற நங்கநல்லூரில் இன்று காலி இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. Flat கள் தான் கிடைக்கிறது. விலை 7500 லிருந்து தான் துவக்கமே. 60- 70 லட்சத்துக்கு குறைவாய்  இன்று Flat கிடைப்பதே கடினம் என்கிற நிலை !

ரங்கா தியேட்டரில் நின்று பார்த்தால் ஒரு காலத்தில் நேரு அரசு பள்ளியும், ரயில்வே ஸ்டேஷனும் தெரியுமாம் ! இன்று காலி இடம் என்பதே இல்லை !

காலி மனை ஒரு கிரவுண்ட் சற்று உள் தள்ளியிருந்தால் 1.5 கோடியும், முக்கிய இடமெனில் 2.5 கோடிக்கும் செல்கிறதாம் !

இடம்/ வீடுகள் இவற்றின் விலை இவ்வளவு இருந்தாலும், வாடகைக்கு வீடுகள் ( 2 பெட் ரூம்) 8000 துவங்கி பல ரேட்டில் கிடைக்கிறது. 10000 - 12000 ல் நல்ல டீசண்ட் ஆன 2 பெட் ரூம் வீடு கிடைத்து விடும். (தற்சமயம் .. கடந்த ஓரிரு வருடமாய் வாடகை பொதுவாய் சற்று குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்)    

பள்ளிகள் - கல்லூரிகள்

ஒரு காலத்தில் நேரு அரசு பள்ளி தான் ஒரே பள்ளியாக இருந்தது. இப்போது பலரும் விரும்பும் பள்ளிகள் மாடர்ன் ஸ்கூல் மற்றும் பிரின்ஸ் ஸ்கூல்.


Image result for nanganallur images

மாடர்ன் CBSE  பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டது.  பிரின்ஸ் முன்பு மெட்ரிகுலேஷன் பாட திட்டத்தையும், தற்போது ஸ்டேட் போர்ட் மற்றும் CBSE பள்ளி ஒன்றும் நடத்தி வருகிறதுஇந்த இரு பள்ளிகளுமே பல ஸ்டேட் ரேங்க் மாணவர்களை தொடர்ந்து உருவாக்கும் பள்ளிகள் !

கேந்திர வித்யாலயா, பெஸ்ட் மெட்ரிகுலேஷன், செல்லம்மாள் வித்யாலயா உள்ளிட்ட இன்னும் பல பள்ளிகள்

ஆனால்  நங்கநல்லூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று - ஒரு அரசு கல்லூரி வேண்டும் என்பது.

நேரு அரசு மேல்நிலைப்பள்ளி பத்து ஏக்கருக்கும் மேல் பறந்து விரிந்து கிடக்கிறது. இங்கு காலி இடம் ஏராளமாக உள்ளது. அரசு இடம்/ நிலம் தான்.  மாநில அரசாங்கம் நினைத்தால் நிச்சயம் ஒரு அரசு கல்லூரி கட்டலாம். ஆனால் 20 வருடத்திற்கு மேலாக இந்த கோரிக்கை இருந்தும் எந்த அரசும் இதனை நிறைவேற்றவில்லை.

அருகில் ஜெயின் கல்லூரி இருந்தாலும் - அது தனியார் கல்லூரி - கட்டணம் சற்று அதிகம். அரசு கல்லூரி நங்கநல்லூரில் வந்தால் அது நங்கநல்லூருக்கு மட்டுமின்றி சுற்றியுள்ள ஆலந்தூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட ஊர்களுக்கும் பயன் தர கூடியதாய் இருக்கும்

மற்றொரு தேவை மினி பஸ்கள் மிக குறைந்த அளவில் இயக்கப்படுகிறது. பிற பேருந்துகளின் எண்ணிக்கையும் மடிப்பாக்கம்- கீழ்கட்டளை அளவிற்கு இல்லை; எனவே ஏராள மக்கள் ரயில் நிலையம் சற்று தள்ளி உள்ளதால் கால் டாக்சி - ஆட்டோவை இன்னும் நம்ப வேண்டியுள்ளது. மினி பஸ்கள் இன்னும் அதிகம் இயக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கைகளில் ஒன்று.

என்ன இடம் இது?



நங்கநல்லூர் பஸ் டிப்போ... காலை ஏழரை மணிக்கு இந்த நிலையில் இருக்கிறது.. ! நல்ல வேளை 8 மணிக்கு திரும்பி வந்த போது பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது

பஸ் டெர்மினஸ் அருகிலேயே உழவர் சந்தை.. அதுவும் பரிதாப நிலையில் - பூட்டி கிடந்தது ; காலை 8 மணிக்கு மேல் தான் அதையும் திறக்கிறார்கள்



ஒரு காலத்தில் பஸ் சர்வீஸ் இங்கு மிக மிக குறைவு. 18 C பஸ் ஒன்று தான் இங்கு வரும். இதனால் ஆட்டோ வாலாக்கள் சவாரிக்கு நிறையவே சார்ஜ் செய்ய  ஆரம்பித்தனர். மேலும் வெளியிலிருந்து வரும் ஆட்டோக்களை இங்கு சவாரி ஏற்ற விடமாட்டார்கள் .. நாங்கள் தான் சவாரி ஏற்றுவோம் என.. இதனால் வெளியில் இருந்து வரும் போதும் ஆட்டோக்கள் " நங்கநல்லூரா? அங்கே ரிட்டன் சவாரி நாங்க ஏத்த கூடாது; காலியா வரணும்" என சொல்லி அதிகம் சார்ஜ் கேட்பார்கள் ! ஷேர் ஆட்டோக்களும் கூட இங்கு காண முடியாது !

இப்போது  18 C தவிர இன்னும் சில பஸ்களும், மினி பஸ்ஸும் கூட வரத்துவங்கி விட்டன.

தவிர - சாந்தி பெட்ரோல் பங்க் வழியே GST  சாலையை அடைந்தால் எல்லா இடத்துக்கும் ஏராள பேருந்துகள் ! பஸ்ஸில் போகணும் என்றால் நான்  GST  சாலைக்கு வந்து விடுவேன்; அது தான் வசதி என்கிறான் எனது பள்ளிக்கால நண்பன் மது !

மெட்ரோ ரயில் 

நங்கநல்லூர் சாலை என ஒரு மெட்ரோ ரயில் ஸ்டேஷன் இருக்கிறது ! ஆனால் வீட்டில் கோபித்து கொண்டு வெளியே போன பெரியவர் மாதிரி நங்கநல்லூரை தாண்டி GST சாலையில் இருக்கிறது. இங்கு சென்று சேர வழி, சாலை எல்லாமே மக்கள் விரும்பும் படி இல்லை என்பதால் தற்சமயம் அது பரவலாக நங்கநல்லூர் மக்களால் பயன்படுத்த படவில்லை !

காமெடி கார்னர் 

BV நகரில் கண்ட ஒரு போர்டு..

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாட்டுப்பால் மற்றும் ஆட்டுப்பால் கிடைக்குமாம்..இதில் டிவி புகழ் என்ற பந்தா வேறு...



நங்கநல்லூர் டைம்ஸ்

நங்கநல்லூர் டைம்ஸ் பத்திரிகை 40000 பிரதிக்கு மேல் அச்சிடப்பட்டு வாரம் இருமுறை வெளியாகிறது. இதன் காப்பி இணையத்திலும் காண முடிகிறது

கடிகாரத்தில் கேட்கும் திருக்குறள் - நங்கநல்லூரில் புதுமை 



நங்கநல்லூருக்கு ஒரு புது வரவு.. மணிக்கூண்டுகள்.இவற்றில் புதுமை என்னெவென்றால்.. இவை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஒரு திருக்குறளை ஒலிக்கின்றது

கண்ணன் நகர், சுதந்திர தின பூங்கா, TNGO காலனி லட்சுமி நகர் ஏழாவது தெரு எஸ்ட்டென்ஷன் மற்றும் MMTC காலனி ஆகிய இடங்களில் இது நிறுவப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் திருக்குறள் ஒலிக்கும்

மூன்று சப்வேக்களும் மழை நாட்களும்   

நங்கநல்லூரில் 3 சப்வேக்கள் உள்ளன. பழவந்தாங்கல் சப்வே, தில்லை கங்கா நகர் சப்வே, மீனம்பாக்கம் சப்வே இவை மூன்றும் நங்கநல்லூரை இணைக்கும் சப்வேக்கள்

சில மழை நேரங்களில் அடைப்போ அல்லது வேறு என்ன பிரச்சனையோ இதில் ஒரு சில சப்வே மழை நீரில் நிரம்பி ஒரு சில நாள் போக்குவரத்து பாதிப்பதும்  உண்டு



2015 சென்னையை உலுக்கிய வெள்ளத்தில் நங்கநல்லூரில் மாடன் ஸ்கூல் மற்றும் மார்க்கெட் அருகே உள்ள ஏரியாக்கள் தான் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும் மற்ற சில இடங்களில் தெருவில் தண்ணீர் ஓடியதோடு சரி.. வீடுகளுக்கு உள்ளே தண்ணீர் வரவில்லை என்கிறார்கள்...

பிளஸ் 

கோயில்கள்.. இதனை தவிர்த்து விட்டு நங்கநல்லூரை யோசிக்கவே முடியாது. இங்கு வந்து பலரும் செட்டில் ஆக முக்கிய காரணங்களில் ஒன்று...இங்குள்ள அற்புத கோவில்கள்

மிக அமைதியான, பழமையை இன்னும் விட்டு கொடுக்காத இடம்.

ஓய்வு பெற்றவர்கள் மிக விரும்பும் ஊர்களில் ஒன்று நங்கநல்லூர் !

ஏர்போர்ட்டுக்கு அருகில் உள்ளது. கிண்டியில் ஏராள கம்பெனிகள் வந்துவிட்டன... அவற்றை 15 நிமிடத்தில் அடையலாம். இன்னொரு புறம் OMR சாலையும் ரொம்ப தூரம் இல்லை

ரயில் மற்றும் பஸ் டெர்மினஸும் உள்ள அரிதான ஊர்களில் ஒன்று.

பெரும்பாலும் அகலமான சாலைகள்....

அகலமான சாலைகள் 
மைனஸ் 

வாடகைக்கு வீடு மற்றும் புதிதாக வாங்க எண்ணினால் அதன் விலை இரண்டுமே மிக அதிகம்.எனவே ஏற்கனவே இருப்போர் இங்கு தொடர்ந்து இருப்பது தொடர்கிறது. புதிதாக வருவோர் மேடவாக்கம், மடிப்பாக்கம் போன்ற இடங்களில் விலைக்கு வாங்கவும், வாடகைக்கு இருக்கவும் நினைக்க காரணம் அங்கு affordable ஆக இருக்கிறது என்பதால் தான்.

தண்ணீர் கஷ்டம் சில இடங்களில் உண்டு. சில இடங்களில் போர்வெல் குறிப்பிட்ட அளவே இருக்கும். 5 நிமிடத்திற்கு மேல் தண்ணீர் வராது. விட்டு விட்டு தான் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்றுவர். இந்த ஏரியாக்களில் தண்ணீர் வெளியே வாங்குவது ஒரு தனி செலவாக அமைந்து விடுகிறது.

வளர்ச்சியை பொறுத்தவரை வேளச்சேரியும், நங்கநல்லூரும்  அருகருகில் இருந்தாலும் வேளச்சேரி பெற்ற  வளர்ச்சியை நங்கநல்லூர் பெறவில்லை என இங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஒரு நண்பர் கூறினார். இதற்கு காரணம் புதுமையை அதிகம் விரும்பாத conservative மனப்பான்மை தான் என்பது இவரின் கருத்து !

இறுதியாக...

இங்கிருக்கும் மக்களை கேட்டால் இந்த இடத்தை விட்டு நகரவே மாட்டார்கள் என்பது தெரியும். அலுவலகமோ, கல்லூரியோ எதுவாய் இருந்தாலும் ரயிலில் செல்லும் வசதி, மெட்ரோ வாட்டர் கனக்ஷன், டிரெயினேஜ் வசதி, வயதானோருக்கு விருப்பமான கோவில்கள், அகல சாலைகள்..எல்லாவற்றுக்கும் மேல் இன்னும் பழமையை எங்கோ ஓர் ஓரத்தில் வைத்திருக்கிறது நங்கநல்லூர் !

நன்றி:

மதுசூதன்
ஸ்ரவண் குமார் &
திருமதி பூமிஜா 

முந்தைய பதிவு  

சென்னை 1 முதல் 130 வரை-பள்ளிக்கரணை - ஒரு பார்வை


9 comments:

  1. நல்ல விரிவான அறிமுகம்.

    ReplyDelete
  2. நங்கநல்லூர் - எனது உறவினர்கள் சிலரும், நண்பர்கள் சிலரும் இங்கே தான். நல்ல இடம்.

    விரிவான தகவல்கள் மற்றும் இடம் பற்றிய அலசல்... தொடரட்டும் சென்னை பதிவுகள்!

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள்.. மிக்க நன்றி.
    ஒரே ஒரு நெருடல்..
    "டயபடீஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆன ஹரிஹரன் துவங்கி ஏராள நல்ல டாக்டர்கள் உண்டு"
    ஆனால், பாரம்பரிய மருத்துவம் என்று சொன்னதை, Comedy Corner என்று எள்ளல் செய்கிறீர்கள்??

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது உண்மைதான். நங்கநல்லூர் மக்களுக்கு mobility குறைவு. அதுவே அவர்களின் வசதிக்குறைவுக்குக் காரணமாகி விட்டது. இன்னொரு, சப்வேக்கள் எப்போது நிரம்பி வழியும் என்று தெரியாது.

    இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Amazing write-up Ji !!!

    ReplyDelete
  8. ஸ்ரீராம் சார்: நன்றி

    வெங்கட்: முயல்கிறேன்; நிறைய உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது; பல முறை சென்று வர வேண்டியுள்ளது; சைக்கிளிங்குடன் சேர்த்து செய்வதால் முடிகிறது. நன்றி

    நண்பா: நன்றி

    செல்லப்பா சார்: நன்றி

    காமாட்சி ஏகாம்பரம்: நன்றி மேடம்

    ReplyDelete
  9. அடடே.. இப்போ தான் பதிவை படித்தேன்... நம்ம ஊரை புட்டு புட்டு வச்சுடீங்க....அருமை...நானும் நங்கநல்லூர் தான்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...