மூன்றாவது சந்திப்பு
சென்னை மயிலாப்பூரில் 2006-ல் ஒரு இலக்கிய விழா. திரு. பாண்டிய ராஜன் (Mafoi) அழைப்பில் சென்றிருந்தேன். எனது அடுத்த இருக்கையில் வெள்ளை சட்டை, வேஷ்டியில் பாலகுமாரன். அன்றைய விழாவில் அவர் இறுதியில் யாருக்கோ நினைவு பரிசு தர மட்டுமே மேடை ஏறினார். ரெண்டு மணி நேரத்திற்கும் மேல் அருகிலேயே அமர்ந்துள்ளேன். முதல் முறை மெல்லியதாய் சிரித்ததை தவிர இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை. ரொம்ப நேரம் கழித்து தான் தோன்றியது. ஒரு காலத்தில் ஆதர்சமாய் இருந்த எழுத்தாளர் அருகில், அவரை உரசியவாறு பல மணி நேரம் அமர்ந்தும் சில வார்த்தை கூட பேச தோன்ற வில்லையே ! அப்படி அமர்ந்திருப்பது எந்த மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தர வில்லையே! ம்ம்..காலம் எத்தகைய மாற்றங்களையெல்லாம் செய்கிறது !!
இரண்டாவது சந்திப்பு
1995 என நினைவு. எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் ஒரு மாலை நேரத்தில் வீட்டில் படுத்தவாறே ஏதோ புத்தகம் படித்த படி இருக்க, ஊர் நண்பன் ஒருவன் ஓடி வந்து சொல்கிறான்: " சீக்கிரம்.. கடை தெருவுக்கு வா,, உன்னை பால குமாரன் கூப்பிடுறார்".
" என்னது பாலகுமாரனா? அவர் எப்படி இங்கே?"
"ஆலங்குடி கோயிலுக்கு போயிட்டு வந்தவர் நம்ம ஊரில் டிபன் சாப்பிட நின்னுருக்கார். ஓட்டல் வெளியில் வந்து நின்னவரை நாங்க பாத்து போய் பேசினோம். அப்போ எங்க ஊரில் ஒருத்தர் எழுதின லெட்டர் உங்க புக்கில வந்திருக்குன்னு சொன்னோம். அப்படியான்னு ஆச்சரியமா" அவர் இருக்காரா? பாக்க முடியுமான்னு கேட்டார்".
வீட்டிலிருந்து அந்த ஹோட்டலுக்கு நடந்த மூன்று நிமிடத்தில் முதல் சந்திப்பு ஞாபகத்தில் ஓடியது. என்னை நினைவிருக்குமா?
நீடாமங்கலத்தில் ஓட்டல் வெளியே பாலகுமாரன் நின்றிருந்த காட்சி இன்னும் நினைவில் உள்ளது. சென்று அறிமுக படுத்தி கொண்டேன். என்ன செய்கிறேன் என கேட்டார். பாலகுமாரன் அப்போது விசிறி சாமியார் உள்ளிட்ட ஆன்மீக சமாச்சாரம் நிறைய எழுத ஆரம்பித்து விட்டார். அப்போது எழுதிய சில நாவல்கள் பெயர் சொல்லி வாசித்தீர்களா என்றார். " இல்லை" என்றேன். அவர் முகம் சற்று மாறியது. அவரது நாவல்களில் பிடித்தது என அவரது மெர்குரி பூக்கள், இரும்பு குதிரை உள்ளிட்ட சில நாவல்கள் பெயர் சொன்னேன். குடும்பத்தார் ஓட்டல் உள்ளிருந்து வந்து காரில் அமர்ந்தனர். பத்து நிமிடம் போல் பேசி விட்டு கிளம்பி விட்டார்.
முதல் சந்திப்பு
கல்லூரி காலத்தில் பாலகுமாரன் ரசிகன் என்பதை விட வெறியன் என்று தான் சொல்ல வேண்டும். பாலகுமாரனை பற்றி யாரும் தவறாக பேசினாலே கோபம் வந்து விடும். வீட்டில் வேறு யாருக்கும் பாலகுமாரன் எழுத்துக்கள் பிடிக்காது. போலவே நெருங்கிய நண்பர்களான நந்து மற்றும் மோகனும் கூட அவரை கிண்டல் செய்து என்னை வெறுப்பேற்றுவார்கள்.
பாலகுமாரன் தொடர்கள் ஒரே நேரத்தில் பாக்யா (மாலை நேரத்து மயக்கம்), சாவி (பந்தய புறா), விகடன் (பயணிகள் கவனிக்கவும்) என வந்து கொண்டிருந்தது. இவை ஒவ்வொன்றையும் வாசித்து விட்டு நான் எழுதிய கடிதங்கள் அந்தந்த புத்தகங்களில் அரை பக்க அளவில் வெளி வந்தன. ஜூனியர் விகடனில் பிரசுரமான " இனிது இனிது காதல் இனிது" தொடர் முடிந்ததும் மூன்று பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் எழுதிய பாலகுமாரன் " உங்களது இந்த கடிதம் புத்தகத்தில் பிரசுரமாகும். சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டிற்கு வரவும்" என எழுதி இருந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
சென்னை செல்லும் வாய்ப்பு வந்தது. அப்போது சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தான் நண்பன் நந்து. தகவல் சொன்னதும் " வா..வா. இந்த தடவையாவது என்னோட தண்ணி அடிப்பியா?"
"மாப்ளே அந்த பேச்சு பேசினே.. உன்னை பாக்கவே வரலை"
" சரிடா. விடு.. எப்ப வர்றே?"
விரைவில் வந்தேன். சென்ற வேலையை விட பாலகுமாரனை சந்திப்பதே முக்கிய வேலையென மனம் சொன்னது. காலையே பாலகுமாரனுக்கு போன் செய்தேன். அவரது கடிதத்தை நினைவூட்ட, பகல் பதினோரு மணிக்கு வர சொன்னார். நந்துவும் நானும் சென்றோம்.
எங்களை உள்ளே அழைத்து அமர சொன்னவர் "எழுத்தாளனை எதுக்கு பாக்கனும்னு நினைக்கிறீங்க?" என்று பேச ஆரம்பித்தார். நான் சொன்ன பதில்களையும் கூடவே என் மூக்கையும் உடைத்து நொறுக்க ஆரம்பித்தார். சற்று அடி வாங்கியதும் மெள்ள "நீங்க தான் சார் லெட்டரில் "சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டுக்கு வரவும்'னு எழுதியிருந்தீங்க. நானாக கேட்கலை"
அதன்பின் வேறு விஷயங்களுக்குள் நுழைந்தார். சட்டம் படிப்பதாக அறிந்ததும் அறிவுரை தொடங்கியது. "ஐயருங்க எல்லாம் சூப்பரா இங்கிலிஸ் பேசுவானுங்க. நீயும் இங்கிலிஸ் பேச கத்துக்கோ" நந்து எதுவும் பேசாமல் நாங்கள் இருவரும் பேசுவதை பார்த்து கொண்டிருந்தான்.
பொதுவான விஷயங்கள் பேசும் போது நான் அவரது கதை மாந்தர்கள் அல்லது அவரது கட்டுரையில் "பாலகுமாரனாக" உள்ளவரின் நிலை பாட்டை எடுத்தேன். அவர் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் பேசினார். அதிர்ச்சியாக இருந்தது. சாதாரண கதைகள் என்றால் சரி. அவர் அப்போது எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அவரின் பயோகிராபி தான். கதைகளில் மட்டுமல்ல, அதற்கு முந்தய வாரம் குமுதத்தில் கூட, தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது முன் பின் தெரியாத அனைவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்தியதாக எழுதி இருந்தார். நேரில் தன் ரசிகன் மீது நேச உணர்வின்றி பேசியது ஜீரணிக்க சிரமமாயிருந்தது.
அவரின் எழுத்தும் அவரும் வேறு வேறாய் இருப்பதாய் நான் சொல்ல, "ஆம் அவையெல்லாம் கதை" என்றார். அப்படியானால் கட்டுரைகள் காட்டிய பால குமாரன்?
ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் இல்லத்தில் அமர்ந்து பேசிய போதும் "தண்ணீர் குடிக்கிறீர்களா? " என்று கூட பேச்சுக்கு கேட்க வில்லை. பன்னிரண்டு மணி மொட்டை வெயிலில் வெளியே வந்தோம்.
நந்துவிற்கு சிரிப்பு தாளலை. என்னை கிண்டல் செய்து சிரித்தவாறே வந்தான்.
எனது ஆதர்ச எழுத்தாளரின் பிம்பம் ஒரு மணி நேரத்தில் உடைந்து நொறுங்கிய அதிர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாய் உள் வாங்கி கொண்டிருந்தேன்.
அந்த சம்பவத்தின் தாக்கத்தை நான் பேசிய அடுத்த ஒரு வரியில் சொல்லி விடலாம். சட்ட கல்லூரியில் நான்கு வருடமாய் படித்தும், அதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் "பழம்" என்று நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டவன், முதன் முறையாய் கேட்டேன்
" மாப்ளே தண்ணி அடிக்கலாமா?"
***
நேற்றைய பதிவுகள்
நாளைய பதிவு:
ஹைதை ராமோஜி பிலிம் சிட்டி ஏராளமான படம் & வீடியோக்களுடன்

