Thursday, June 17, 2010

லட்சுமணன் என்கிற மனிதன்

சொல்லிக்கொள்கிற மாதிரி

அழகாயில்லை

சந்தன மரங்கள்

- இலட்சுமணன்
 
ஜூன் 17- எங்கள் நண்பன் லட்சுமணன் பிறந்த நாள்.. அவன் நினைவாக
இந்த பதிவு..
 
************

சட்ட கல்லூரியில் ஐந்து வருடம் உடன் படித்த லக்ஷ்மணன் 1997 வருடம் ஹீமோபிலியா என்ற நோயின் காரணமாக மரணம் அடைந்தான். "அனைவர்க்கும் இனியவன்" ஆன அவனது இழப்பு நண்பர்கள் அனைவர்க்கும் பெரிய அதிர்ச்சி. அவன் மரணத்திற்கு சில நாட்களுக்கு பின் நண்பர்கள் கூடி பேசினோம். அவனது கவிதைகளை புத்தகமாக கொண்டு வரவும், லக்ஷ்மணன் நினைவு கவிதை போட்டி தமிழகம் முழுமைக்கும் நடத்தி விழாவில் பரிசுகள் வழங்கவும், இதற்கான பணம் பலரிடமும் வசூல் செய்வோம் என்றும் முடிவு செய்தோம்.

தமிழகம் முழுதும் பல நண்பர்கள் சிறிது சிறிதாக வசூல் செய்தனர். சென்னை-ல் அமுதன், பிரேம், பாலா, நித்தி, பிரபு உள்ளிட்டோரும், திருச்சி-ல் ராஜ், சதீஷ், ஸ்ரீதர் போன்றோரும், தஞ்சை-ல் சுரேஷ், ஷீலா ஆகிய நண்பர்களும் பணம் வசூலித்தனர்.

இதே நேரத்தில் அவனது தம்பி அன்பு மூலம் லக்ஷ்மணன் கவிதைகளை திரட்டினோம். சிறு சிறு காகிதங்கள், பஸ் டிக்கெட்கள் இவற்றில் எழுதப்பட்ட கவிதைகள் ........இவற்றை தனி காகிதத்தில் பிரதி எடுத்து கவிதை ரசிக்கக்கூடிய ஒரு பத்து பேரிடம் தந்தோம். அவர்கள் தங்களுக்கு பிடித்த கவிதை தலைப்புகளை குறித்து தந்தனர். இப்படி பலரால் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் உடன் சென்னை கிறித்துவ கல்லூரி தமிழ் பேராசிரியர் - பாரதி புத்திரன் என்ற பாலு சாமி அவர்களை நான் சந்தித்தேன். இவர் விகடன் பத்திரிக்கையில் லக்ஷ்மணன் உடன் நிருபராக பணியாற்றிய செந்தில் மூலம் எங்களுக்கு அறிமுகம் ஆனவர். இளம் கவிஞர்களை ஊக்குவிப்பவர். கல்லூரியில் வனம் என்ற தலைப்பில் வார வாரம் வெள்ளி அன்று கவி அரங்கம் நடத்துவார். இதில் லக்ஷ்மணனும் நானும் கலந்து கொண்டுள்ளோம். பாரதி புத்திரன் மீது லக்ஷ்மணன் மிக மரியாதை வைத்திருந்தான்.

ஏறக்குறைய மூன்று வாரம் தினமும் நான்கு மணி நேரம் இந்த கவிதைகளை வாசிப்பது.. அது பற்றி பேசுவது.. விவாதிப்பது..லேசாக சில வரிகளை மாற்றி எழுதுவது.. என பாரதி புத்திரன் மிகவும் இதற்காக உழைத்தார். தினம் மாலை நான் அவர் வீடு சென்று விடுவேன். பின் வேறு எந்த சிந்தனையும் இன்றி இது பற்றி மட்டும் நெடு நேரம் விவாதிப்போம். இறந்த ஒரு கவிஞர் எழுத்தை மாற்றி எழுதுவது பற்றி எனக்கு தயக்கம் இருந்தது. ஆனாலும் லக்ஷ்மணன் பாரதி புத்திரன் மீது வைத்திருந்த மரியாதையை நினைத்து கொள்வேன். லக்ஷ்மணன் இருந்திருந்தால் கூட மகிழ்ச்சி தான் அடைவான் என்று சமாதானம் செய்து கொள்வேன்.

தினமும் இரவு பாரதி பத்திரன் வீட்டில் எனக்கும் சேர்த்து சமைக்க சொல்வார். பல நாட்கள் விருந்தாளி என்பதால் Non veg தயார் செய்வார்கள். எனக்கு மிகுந்த கூச்சமாகவும் தயக்கமாகவும் இருக்கும். இவர் இந்த உதவி செய்வதே பெரிது.. இதில் இந்த உபசரிப்பு வேறா என எண்ணுவேன். ஆனால் பாரதி புத்திரனோ தினம் இரவு பத்தரை மணிக்கு தனது மிதி வண்டியில்  தாம்பரம் ரயில் நிலையம்  வரை என்னை கொண்டு சென்று விடுவார். நெகிழ்ந்த மனதுடன் தினம் ரூம் திரும்புவேன் (அப்போது திருமணம் ஆக வில்லை).

தினமும் இரவு தாமதமாக வீடு திரும்பும் லக்ஷ்மணன், அதனால் வரும் குற்ற உணர்வு குறித்து ஒரு கவிதை எழுதியிருந்தான் . இந்த கவிதைக்கும், புத்தகத்திற்கும் வீடு திரும்பல் என்ற தலைப்பு வைக்க பட்டது.

பாரதி புத்திரன் தவிர இந்த புத்தகத்திற்கு பலரும் பல வகையில் உதவினர். நண்பன் பிரேம் தனது பிரஸ்ஸில்  புத்தகம் பிரிண்ட் செய்தான்.

எழுத்தாளர் சுஜாதா மற்றும் கவிஞர் கல்யாண்ஜி ஆகியோரின் அணிந்துரை புத்தகத்திற்கு கிடைத்தது. ஓவியர் ஆதிமுலம் அட்டை படம் வரைந்து தர, ஓவியர் விஸ்வம் லக்ஷ்மணன் முகத்தை ஓவியம் ஆக வரைந்து தந்தார். எத்தகைய பெயர்கள் இவை நான்கும்!!!! இவர்கள் மட்டும் இன்றி புத்தக வெளீயிடு தொடர்பாக நாங்கள் தொடர்பு கொண்ட இலக்கிய வாதிகள் பலரும் மிக எளிமையாக பழகினர். இவர்கள் யாரும் தங்கள் பங்களிப்பிற்கு எந்த சன்மானமும் பெற வில்லை. நாங்கள் கேட்ட போதும் இந்த நல்ல விஷயத்திற்கு வாங்க விரும்ப வில்லை என்றே அனைவரும் கூறினர்.

தமிழகம் முழுமைக்குமாக நடத்தப்பட்ட கவிதை போட்டியில் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து தந்தவர் அப்போது பாரதி ராஜாவிடம் உதவி இயக்கனராக இருந்த கவிஞர் கவிதா பாரதி.

விழா, லக்ஷ்மணன் இறந்து ஆறு மாதம் கழித்து 1997 ஜூலையில்  ஒரு ஞாயிறு காலை சென்னை உயர் நீதி மன்றம் அருகே நடந்தது. அந்த ஹால் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த லக்ஷ்மணன் நண்பர்களால் நிரம்பி வழிந்தது.

எங்கள் அனைவராலும் அக்கா என அழைக்கப்படும் திருமகள் நிகழ்ச்சியை தொகுத்து பேசினார். நண்பர்கள் லக்ஷ்மணன் பற்றிய பல்வேறு செய்திகளை நினைவு கூர்ந்து பேசினர். எழுத்தாளர் பிரபஞ்சன் கவிதை புத்தகத்தை வெளியிட வழக்கறிஞர் அருள்மொழி பெற்றுக்கொண்டார். இவர்கள் தவிர லக்ஷ்மணன் சீனியர் வக்கீல் செந்தில் நாதன், பாரதி புத்திரன், ஓவியர் விஸ்வம் உள்ளிட்ட பலர் நெகிழ்வுடன் பேசினர்.

விழா முடியும் முன்பே புத்தகம் ஏராளமான பிரதிகள் விற்றது. பின் சுஜாதா குங்குமம் பத்திரிக்கையில் லக்ஷ்மணன் பற்றியும் விழா குறித்தும் எழுதினார். விகடனும் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதையை இரண்டு முழு பக்கங்களுக்கு பிரசுரம் செய்தது. லக்ஷ்மணன் கவிதைகளை இன்னமும் சிலர் நினைவு வைத்து மேற்கோள் காட்டுகின்றனர்.

எழுத்தில் ஈடுபாடு உள்ள எவரும் தன் எழுத்தில் வாழ்வில் ஒரு புத்தகமேனும் வெளியிட வேண்டும் என எண்ணுகிறேன். மரணத்திற்கு பின்னும் வாழ இது ஒரு எளிய வழி.

எங்கள் நண்பர்கள் வாழ்க்கையில் செய்த உருப்படியான செயல்களில் இந்த புத்தக வெளியிடு மிக முக்கியமான ஒன்று. லக்ஷ்மணன் பிறந்த நாள் ஜூன் 17. இதை முன்னிட்டு சென்னை அடையார்-ல் உள்ள செயின்ட் லூயிஸ் விழி இழந்த மாணவர் பள்ளியில் வருடா வருடம் ஒரு பேச்சு போட்டியும் ஒரு பாட்டு போட்டியும் நடத்தி வருகிறோம்.

இதோ ஜூன் மாதம் வந்து விட்டது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக போட்டிக்கான ஏற்பாடுகள் செயின்ட் லூயிஸ் விழி இழந்த மாணவர் பள்ளியில் துவங்குகின்றன. இறந்த பின்னும் வாழ்கிறான் லக்ஷ்மணன்....
பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு

மலர்கள் அழகானவை தான்

எப்படி ரசிக்க முடியும்

இறுதி ஊர்வலத்தின் பாதையில்
 
- இலட்சுமணன்




18 comments:

  1. நண்பருக்காக நல்லதொரு முயற்சி. உங்களைப் போல நண்பர்கள் கிடைக்கவே எல்லோரும் விரும்புவர். திரு லட்சுமணன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  2. நெகிழ்ச்சி.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி.. இன்னும் பல ஆண்டுகளுக்கு நண்பர் நக்ஷ்மணனின் பெயரில் இந்த பணி தொடரட்டும்..

    ReplyDelete
  4. முன்னர் வாசித்ததில்லை. உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பினால் அவரது ஆத்மா சாந்தியடைந்திருக்கும்.

    உங்கள் வலைப்பூவின் பெயர்க்காரணமும் விளங்கியது இப்போது.

    நெகிழ்ச்சி. வேறென்ன சொல்ல.

    வாழ்த்துகிறேன் வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக நடைபெற.

    ReplyDelete
  5. மீள் பதிவிற்கு நன்றி மோகன்.

    இப்பதான் இதை வாசிக்கிறேன்.

    இவரின் kavithaigal sila pagirnthirukkalaam.

    "veedu thirumbal"

    great!

    (translation problems..pls bare)

    ReplyDelete
  6. லக்ஷ்மணனை எண்ணி வியக்கிறேன், உன்னைப் போன்ற நண்பர்களைப் பெற என்ன தவம் செய்தானோ என்று!

    ReplyDelete
  7. நன்றி வெங்கட். கேபிள் நன்றி
    ராமசாமி கண்ணன்: நன்றி
    மாதவன், பெயர் சொல்ல மிக்க நன்றி
    ராம லக்ஷ்மி நன்றி
    ராஜா ராம்: லக்ஷ்மன் கவிதைகளை தனி ப்ளாகாக போட எண்ணம்; இந்த ஜூன் 17-க்குள் போட எண்ணினேன். வேலை பளு; முடியலை; நிச்சயம் செய்வேன்.. கவிதை தற்போது சேர்த்துள்ளேன்

    ReplyDelete
  8. கவிதைகள் அருமை. புது ப்ளாக்கினை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. திரு.லட்சுமணன் அவர்களின் மறைவு குடும்பத்திற்கோ, நண்பர்களுக்கோ மட்டுமல்ல, தமிழுக்கும் இழப்பாகும்.

    ReplyDelete
  10. ரொம்ப நெகிழ்வாவும், சொல்ல முடியாத வலியாவும் இருக்கு மோகன் பதிவு வாசிச்சதும்.

    ReplyDelete
  11. I have no more words except THANKS

    ReplyDelete
  12. நெகிழ்வாக உணர்ந்தேன்

    ReplyDelete
  13. நெகிழ்வாக உணர்ந்தேன்

    ReplyDelete
  14. நெகிழ்வாக உணர்ந்தேன்

    ReplyDelete
  15. வாழ்த்துகிறேன் வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக நடைபெற அவரின் ஆன்மா சந்தியடையட்டும்...

    //மலர்கள் அழகானவை தான்
    எப்படி ரசிக்க முடியும்
    இறுதி ஊர்வலத்தின் பாதையில்//

    கவிதை மன உணர்விலிருந்து

    ReplyDelete
  16. நல்ல நண்பர்கள்!! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  17. நெகிழ்ச்சி...இதைத் த‌விர‌ வேறென்ன‌ வார்த்தை சொல்ல‌...

    க‌டைசி 'ம‌ல‌ர்க‌ள்' க‌விதை மிக‌ அருமை...ல‌க்ஷ்ம‌ண‌ன் வாழ்கிறார் வாழ்வார் க‌விதைக‌ளின் மூல‌ம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...