உங்கள் மனதை ஏதோ ஒரு விஷயம் சில நாளாக அழுத்தி கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை எப்படி சரி செய்வது என குழம்பி கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் பெற்றோர் அல்லது அலுவலகத்தில் நீங்கள் மிக மதிக்கும் நபருடன் பேச, உங்கள் மனதில் உள்ள குழப்பத்திற்கான ஒரு நல்ல தீர்வை பேச்சோடு பேச்சாக அவர்கள் மிக சாதாரணமாய் சொல்லுவதை கவனித்துள்ளீர்களா? எனக்கு இது பல முறை நிகழ்ந்துள்ளது.இத்தனைக்கும் அவர்களிடம் நமது பிரச்னையை நாம் வெளிப்படையாக சொல்லியிருக்க கூட மாட்டோம். அவர்களும் நமது பிரச்சனைக்கு நேரடியான தீர்வாக இல்லாமால் நமக்கு ஒரு ஒளி உள்ளுக்குள் சடாரென எரியும் வண்ணம் சொல்லுவார்கள். அது தான் பெரியவர்கள்!!
குறிப்பாய் ஒவ்வொரு தாய் தந்தையும் தன் குழந்தைகள் பற்றி பெரிதும் அறிந்து வைத்திருப்பார்கள். பெற்றோருக்கு தெரியாது என நினைத்தால் கூட, அந்த விஷயத்தின் ஒரு சிறு பகுதியாவது அவர்களுக்கு தெரிந்தே இருக்கும். இதனால் தான் நாம் எப்போது குழப்பத்தில் உள்ளோம், ஏன் தடுமாறுகிறோம் என்பது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு அத்துப்படி. மேலும் முந்தைய காலத்தில் இதே போன்றதோர் விஷயத்தில் குழம்பி, தவித்து பின் எப்படி மீண்டோம் என்பதை நாம் மறந்திருப்போம். அவர்கள் சரியாய் நமக்கு நினைவு படுத்தி, அதே போல் இந்த விஷயத்தையும் தாண்டுவோம் என்ற நம்பிக்கை தருவார்கள்.
உங்கள் பையனுக்கு ஒரு பிரச்சனை. பள்ளியில் பக்கத்தில் அமரும் மாணவன் பேச மாட்டேன் என்கிறான். "அவன் ரெண்டு நாளாய் பேசலை. எனக்கு என்னவோ போலிருக்கு. பள்ளிக்கு போக பிடிக்கலை" என்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? முதலில் உங்களுக்கு இது சாதாரண விஷயம் என்பது தெரியும். நிச்சயம் அவர்கள் இருவரும் விரைவில் பேசி விடுவார்கள் என்பதும் தெரியும். இதையே அவனிடம் சொல்கிறீர்கள். ஓரிரு நாட்களில் பையன் " அப்பா நீங்க சொன்னது சரி தான். சண்டை சரி ஆகிடுச்சு" என்கிறான் சிரித்த படி.. சிறுவர்களுக்கு பக்கத்தில் அமரும் நண்பன் பேசாதது பெரிய பிரச்சனை. நாம் அதையெல்லாம் பல ஆண்டுகள் முன் கடந்து வந்துள்ளோம்.. இன்று நமக்கோ வேலையிலோ வேறு ஏதாவதோ பிரச்சனை.. இதை நம்மை விட பெரியவர்களிடம் பேசினால், நிச்சயம் அவர்கள் இதனை எப்படி எதிர் கொண்டோம் என சொல்வார்கள்.
எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை சொன்னார்: " நாம் எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்கிறோம்!!" இதனை எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார்? ஒவ்வொருவரும் அந்தந்த வயதில் சில பிரச்சனைகளை எதிர் கொண்டு கடந்து வருகிறோம். மாணவனாய் இருக்கையில் படிப்பதே பிரச்சனை. பின் வேலை தேடுவது. பருவ வயது குழப்பங்கள். திருமணம் நடக்க ஆகும் தாமதம், குழந்தை பிறக்க கொஞ்ச நாள் ஆனாலும் வரும் ஏக்கம், குழந்தை பிறந்த பின் அதற்கு சிறு உடல் நலமின்மை எனினும் நாம் படும் சங்கடம்.. இந்த உணர்வுகள் எல்லாம் ஒவ்வொரு மனிதரும் கடந்து தானே வருகிறோம்? இதை தான் சுஜாதா எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை தான் வாழ்கிறோம் என்கிறார்.
நம்மை போல ஏற்கனவே இதே போன்ற அனுபவம் கடந்து வந்த பெரியவர்களிடம் மனம் விட்டு பேசும் போது நிச்சயம் " இதுவும் கடந்து போகும்" என்ற நம்பிக்கையை தங்கள் வாழ்க்கை உதாரணங்கள் மூலம் நமக்கு சொல்லி தருவார்கள்.
நிச்சயம் எல்லா விஷயங்களையும் எல்லா பெரியவர்களிடமும் பேசி விட முடியாது. பேசுபவர் தைரியம் தர கூடியவராய் இருக்க வேண்டும். நம்மை மேலும் பயமுறுத்துபவராய் இருக்க கூடாது. நாம் பேசுவதை ரகசியம் காப்பவராய் இருக்க வேண்டும். இதெல்லாம் உள்ள நபர் என நமக்கு எப்படி தெரியும்? அனுபவம் மற்றும் உள்ளுணர்வில் தான் சாமி! இத்தகைய சில பெரியவர்கள் அனுபவத்தில் நான் கண்டுள்ளேன். உங்களுக்கும் நிச்சயம் அருகில் அத்தகையவர்கள் இருப்பர்.
இன்னொரு முக்கிய விஷயம்: பெரியவர்களிடம் ஒரு விஷயம் பற்றி பேசுவதால் முழுக்க முழுக்க அவர்கள் சொன்ன படி தான் நடக்க வேண்டுமென்பதில்லை. அவர்களிடம் நமக்கு தேவை அந்த குறிப்பிட்ட பிரச்னையை கையாள தேவையான தைரியம் தான். அதற்கு மேல் அவர்கள் சொன்னதில் ஓரிரு விஷயங்கள் நமக்கு பயன் படும் என்றால் எடுத்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. You are the best judge of yourself. சொல்பவர் எத்தனை விஷயங்கள் சொன்னாலும் அதை நமக்கு தகுந்த மாதிரி Customize செய்து கொள்வது நாமாக தான் இருக்க முடியும்.
உங்களில் எத்தனை பேர் இதனை நம்புகிறீர்கள் என அறியேன். ஆனால் பெரியோரிடம் ஆசிர்வாதம் வாங்குவது மிக மிக நன்மை பயக்கும் என உறுதியாய் நம்புகிறேன். அவர்கள் காலில் விழுந்து வணங்கி பெறும் ஆசி தான் உண்மையில் சிறந்தது. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நம்மை வாழ்த்தும்/ பிரார்த்திக்கும் நல்ல உள்ளங்களின் ஆசி நிச்சயம் நமக்கு நல்லது செய்யும்.
இது என்ன சாதாரண விஷயம், இன்றைக்கும் என் பெற்றோரிடம் பிறந்த நாள் அன்று ஆசி வாங்க தான் செய்கிறேன் என்று யாரேனும் நினைத்தால், மீண்டும் சொல்கிறேன். இது பிறந்த நாள் அன்றோ / பெற்றோர் மட்டுமோ குறித்ததல்ல. உறவினர்/ அருகில் உள்ளோர் என எவ்வளவு பெரியோரிடம் ஆசி வாங்குகிறோமோ அவ்வளவும் நல்லதற்கே.
ஒரு குட்டி கதை: ஒரு மகான் அரசவைக்கு வருகிறார். அவரிடம் அரசர் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார். மந்திரிக்கு அரசர் இப்படி காலில் விழுவது பிடிக்க வில்லை. " நீங்கள் போய் காலில் விழுவதா? " என கேட்கிறார். அரசர் அவரிடம் ஒரு ஆட்டு தலை, புலி தலை, ஒரு மனித தலை மூன்றும் கொண்டு வர சொல்கிறார். மந்திரிக்கு எதற்கு என்று புரியா விடினும் அரசர் சொல்லிய படி செய்கிறார். அவருக்கு ஆட்டு தலை எளிதாக கிடைக்கிறது. புலி தலை சற்று சிரமமாகவும், மனித தலை கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டும் அடைகிறார். மூன்றுடன் அரசரிடம் வர, அரசர் இப்போது இந்த மூன்றையும் யாருக்காவது விற்று விடு என்கிறார். ஆட்டு தலையை உடனே விற்று விட முடிகிறது. புலி தலை வாங்க ஆள் இல்லை. சற்று அலைந்து அதனையும் ஒருவரிடம் குடுத்து விடுகிறார். ஆனால் மனித தலையை வாங்கவோ, சும்மா கூட வைத்து கொள்ளவோ யாரும் முன் வரவில்லை. இப்போது அரசர் சொல்கிறார்: இது தான் நம் தலையின் நிலை. இப்படி யாரும் வாங்க விரும்பாத தலை எதற்கு இறுமாப்பு கொள்ள வேண்டும்? இத்தகைய தலையை நம்மை விட பெரியவர்கள் காலடியில் வைத்து வணங்குவதில் என்ன தவறு என்று கேட்கிறார்.
பெரியவர்களிடம் ஆசி பெறுவதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதையை பல நேரங்கள் அவர்களுக்கு காண்பிப்பதில்லை. இது அதனை காண்பிக்க ஒரு சந்தர்ப்பம். மேலும் நம்மை நன்றாக இருக்க வேண்டும் என அவர்கள் மனதார வாழ்த்துவது நிச்சயம் பலிக்கும் என நம்புகிறேன்.
குறிப்பாய் அடுத்த தலைமுறைக்கும் இந்த பழக்கத்தை நாம் சொல்லி தர வேண்டும். துவக்கத்தில் நமது வற்புறுத்தலால் நம்மோடு சேர்ந்து அவர்கள் செய்தாலும் கூட பின் இதன் பலன்களை அவர்களும் உணர்வார்கள்.
குறிப்பாய் அடுத்த தலைமுறைக்கும் இந்த பழக்கத்தை நாம் சொல்லி தர வேண்டும். துவக்கத்தில் நமது வற்புறுத்தலால் நம்மோடு சேர்ந்து அவர்கள் செய்தாலும் கூட பின் இதன் பலன்களை அவர்களும் உணர்வார்கள்.
ரோல் மாடல்
ஒரு குறிப்பிட்ட துறையில் நீங்கள் சாதிக்க நினைத்தால் செய்ய வேண்டிய மற்றொரு நல்ல விஷயம்: அந்த துறையில் புகழ் பெற்ற ஒருவரை உங்கள் ஆதர்சம் ( Idol) ஆக குறித்து கொள்வது. ஆதர்சம் நீங்கள் வேலை செய்யும் அல்லது செய்த நிறுவனத்தில் உள்ள ஒரு அதிகாரி ஆக இருக்கலாம். உங்கள் தந்தை அல்லது அண்ணனாக இருக்கலாம். நீங்கள் பார்க்காத ஒரு நபராக கூட இருக்கலாம்.
ஆதர்சம் என்பது அவரை போலவே காப்பி அடிப்பது என்பதற்கல்ல. அவர் ஒரு சாதாரண மனிதர்; அவரால் சாதிக்க முடியும் என்றால் என்னாலும் முடியும் என உறுதி கொள்ளவும், சாதிக்க அவர் பின்பற்றிய சில வழிகளை நீங்களும் பின் பற்றவும் மட்டும் தான். மற்றபடி அவர் வழியில் போனாலும் உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) கிடைக்கவே செய்யும்.
என்னுடைய ஆதர்சம் யார் என்று சொன்னால் நீங்கள் சிரிக்க கூடும். "அவர் இங்கே? இவர் இங்கே?" என. இருந்தாலும் சொல்கிறேன். என் ஆதர்சம் எழுத்தாளர் சுஜாதா. இதற்கு காரணம் மிக எளிமையானது. சுஜாதா அறுபது வயது வரை தன் தொழிலை விடாமல் செய்து வந்தார். கூடவே இயலும் போது எழுதினார் (அதுவே எவ்வளவு!!) அதே போல நானும் என் வேலை பாதிக்கா வண்ணம் இயலும் போது எழுத எண்ணுகிறேன். அவர் பின் பற்றிய விஷயங்களில் தொடர் வாசிப்பு, விடாமல் எழுதுவது .. இவற்றை நானும் உபயோகிக்கிறேன். "Aim for Moon; You will get stars" என்பார்கள். . சுஜாதா அடைந்ததில் ஒரு சதவீதமேனும் வாழ்வில் எட்ட வேண்டும் என நினைக்கிறேன். அப்படி எட்டினாலே நாமும் ஒரு சிறு பிரபலம் ஆகி விடுவோம் தானே!!
யாருமே பயணிக்காத வழியில் கால் தடம் பதித்து புது வழியை உருவாக்குவோர் வெகு சிலரே. ஏற்கனவே ஒருவர் சென்று வெற்றி கரமாய் செய்ததை பின்பற்றி நாமும் முன்னேறுவது சுலபம். அறிவியலில் கூட இப்படி முதலில் ஒருவர் செய்த கண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றியவர் முதல்வரை விட அதிக பிரபலம் ஆனது நடந்து தான் உள்ளது!!
இப்படி ரோல் மாடல் என்பது நாமும் அவரை போல் முன்னேற உத்வேகமும் முன்னேற தேவையான மனோ நிலையையும் கொடுக்கும்
****பொதுவாக நாம் யாரோடு இருக்கிறோமோ அவர்கள் குணத்தை நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைகிறோம். இதனால் தான் நம்மை விட அறிவாளிகளுடன் அதிகம் இருப்பது நல்லது.ஆங்கிலத்தில் Always be with smart people என்பார்கள். பெரியோர் நட்பும் அத்தகையதே. அவர்களுடன் அதிகம் பழகுவதும் பிரச்சனையின் போது அவர்களுடன் மனம் விட்டு பேசுவதும் நமக்கு நிச்சயம் நல்லது செய்யும். கூடவே பெரியவர்கள் ஆசியும் சேர்ந்து விட்டால் நம் முன்னேற்றம் நிச்சயம் நடந்தே தீரும்.
மிக அருமையான கட்டுரை அண்ணா!
ReplyDeleteஎல்லாரிடமும் காலில் விழுந்து ஆசி வாங்கியதில்லை.
நீங்கள் கூறியது போல் மிகச் சிலரே அவ்வகையில் உண்டென்று நினைக்கிறேன்.
குட்டிக் கதை நன்று :)
அற்புதமான கட்டுரை...
ReplyDelete..பொதுவாக நாம் யாரோடு இருக்கிறோமோ அவர்கள் குணத்தை நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைகிறோம். ..
உண்மை...
கதை அருமை... அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கட்டுரை...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..
ReplyDelete\\ கூடவே இயலும் போது எழுதினார் (அதுவே எவ்வளவு!!)\\
அவரின் எளிமையான, சுவாரஸ்யமான மொழி நடையே அவரைத் தாண்டி வரமுடியாமல் செய்கிறது.
நல்ல கட்டுரை. தொடருங்கள்.
ReplyDeleteமனம் விட்டுப் பேசுவதால் கிடைக்கின்ற நன்மைகளையும், பெரியோர் ஆசியின் அவசியத்தையும் அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDelete//அவர் பின் பற்றிய விஷயங்களில் தொடர் வாசிப்பு, விடாமல் எழுதுவது .. இவற்றை நானும் உபயோகிக்கிறேன். "Aim for Moon; You will get stars" என்பார்கள். . சுஜாதா அடைந்ததில் ஒரு சதவீதமேனும் வாழ்வில் எட்ட வேண்டும் என நினைக்கிறேன். //
நூறு சதவிகிதம் (Aim for Moon) எட்ட என் வாழ்த்துக்கள்!
நன்றி பாலாஜி சரவணா
ReplyDelete**
நன்றி சங்கவி
**
நன்றி வித்யா; ஆம் சுஜாதா மீது உள்ள பிரமிப்பு மட்டும் குறைய வில்லை.
**
நன்றி வெங்கட் நாகராஜ்
**
நன்றி ராம லட்சுமி
//பொதுவாக நாம் யாரோடு இருக்கிறோமோ அவர்கள் குணத்தை நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைகிறோம். இதனால் தான் நம்மை விட அறிவாளிகளுடன் அதிகம் இருப்பது நல்லது//
ReplyDeleteGreat Words. Thanks
//பொதுவாக நாம் யாரோடு இருக்கிறோமோ அவர்கள் குணத்தை நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் அடைகிறோம். இதனால் தான் நம்மை விட அறிவாளிகளுடன் அதிகம் இருப்பது நல்லது//
ReplyDeleteஎவ்வளவு உண்மையான/யதார்த்தமான வார்த்தைகள். சுருக்கமாக சொன்னால் பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல். அப்படிதானே?
மிகமிக அருமையான கட்டுரை..படித்து முடித்தவுடன் அதன் ethical value ஐ
ReplyDeleteஎன்னால் உணர முடிந்தது!!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
ReplyDeletehttp://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. கதை மிக அருமை...
ReplyDeleteNice story.
ReplyDeleteand there is nothing wrong about your role model. And what u said is true (ur life will be fulfilled, if u achieve atleast 1% of what he did).
மிக அருமை.தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
ReplyDelete