Wednesday, May 11, 2011

வானம் -விமர்சனம்

தாய் மூகாம்பிகை, தேவரின் திருவருள் போன்ற படங்கள் பார்த்துள்ளீர்களா? இத்தகைய படங்களின் காட்சிகள் பின்வருமாறு இருக்கும்:


முதல் காட்சி: முத்துராமன்- கே.ஆர். விஜயா தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கு மருமகளே காரணம் என்கிறார் மாமியார் ! மன வேதனை உடன் கே.ஆர் விஜயா சாமி படம் முன்பு அழுகிறார் .

இரண்டாம் காட்சி: ஸ்ரீ காந்த் ஒரு ஏமாற்று பேர்வழி. நம்ப வைத்து கழுத்தறுப்பது இவர் வேலை. கன்னத்தில் மச்ச்சதுடன் ஒரே மாடுலேஷனில் பேசி யாரையோ ஏமாற்றுவார் இவர் ! (எல்லா படத்திலும் இவருக்கு இந்த கேரக்டர் தான்)

மூன்றாம் காட்சி: ஏ. வி. எம் ராஜனுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம். கடன் தொல்லையால் நொந்து போயிருக்கிறார் இவர். இப்படியாக சிவகுமார் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனை வைத்து இன்னும் இரு கிளை கதைகள் மாறி மாறி காண்பிப்பார்கள். கடைசி காட்சியில் பழனி மலையிலோ, தாய் மூகாம்பிகை சந்நிதியிலோ இவர்கள் அனைவரும் ஒன்று கூடுவர். அது தான் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை.

இந்த ரக கதையொன்று நீண்ட நாள் கழித்து தெலுகு ரீ மேக்காக வந்துள்ளது. அது தான் வானம். கடைசி காட்சியில் கோயிலுக்கு பதில் இங்கு ஆஸ்பத்திரி.

மேற்சொன்ன தெய்வ கதைகள் டைட்டில் ஓடும் போதே ஒரு பாட்டு போடுவார்கள். பின் டைட்டில் முடிந்து வசனம் ஆரம்பிக்கும் முன்பே சீர்காழி கோவிந்தராஜனோ, கே.பி. சுந்தராம்பாளோ ஒரு பாட்டு பாடுவார்கள். வானத்திலும் இதே போல் டைட்டிலில் ஒன்று, படம் துவங்கும் முன் ஒன்று என டபிள் பாட்டு போடுகிறார்கள்.

சரி வானத்திற்கு வருவோம். ஐந்து குட்டி கதைகள். இவை அனைத்திலும் வரும் மனிதர்களும் வாழ்க்கையில் அநியாயத்துக்கு கஷ்டப்படுகிறார்கள். இவை மிக விரிவாக சொல்லப்படும் போது அயர்ச்சியாக உள்ளது. "ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான்! இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே " என பெருமூச்சு எழுகிறது. ஹீரோ சிம்பு "என்ன வாழ்க்கை இது !" என எப்போதும் அலுத்து கொள்கிறார். மற்ற கேரக்டர்களுக்கும் இதே நிலைமை தான். நல்ல வேளையாக சிம்புவின் நண்பராக சந்தானம் வருகிறார். இவர் மட்டும் இல்லா விடில் நாம் படம் முழுதும் சிரிப்பை நினைத்து கூட பார்க்க முடியாது.

ஐந்து கிளை கதைகளில் நம் மனதை சற்றேனும் பாதிப்பது சரண்யா குடும்பக்கதை தான். கிட்னியை விற்று பிழைக்கும் ஏழைகள் பற்றியும், அதில் உள்ள நெட்வொர்க் பற்றியும் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. ஒரு லட்சத்திற்கு கிட்னி விற்கப்படுகிறது. நடுவில் உள்ள ப்ரோக்கர்கள் ஒவ்வொருவரும் கமிஷன் அடிக்க, கடைசியில் 37 ,000 ரூபாய் கிட்னி தானம் தந்தவர்கள் கையில் கிடைப்பதை பார்க்க மனது வலிக்கிறது.

சிம்பு ஒரு ஆர்டிபீசியல் காதலியை நியூ இயர் பார்ட்டிக்கு அழைத்து செல்ல நாற்பதாயிரம் பணம் சேர்க்க அலைகிறார். என்னே லட்சியம்! அனுஷ்கா பலான தொழிலை வெறுத்து ஓடுகிறார். இனியாவது திருந்தி வாழவா என்றால், அதற்கு இல்லை; முழு பணமும் கமிஷன் இன்றி தனக்கே வரும்படி தனி வியாபாரம் செய்வேன் என்கிறார். பிரகாஷ் ராஜ் ட்ராக் சற்று பரவாயில்லை எனினும் மிகை படுத்தல் நிறையவே உள்ளது.

கிளைமாக்சில் பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் முழுதாக உள்ள ஹீரோ, " என்ன வாழ்க்கைடா இது " என்று தெளிவாக சொல்லி விட்டு செத்து போகிறார்.

நல்ல விஷயங்களே இல்லையா என்றால், உள்ளது பார்ப்போம்.

ஹீரோ-ஹீரோயின் என்கிற வழக்கமான பார்முலா இல்லாமல் வித்யாசமான கதைக்களன் சற்று மாறுதலாகத்தான் உள்ளது. (மெலோ டிராமாவை குறைத்திருக்கலாம்). சந்தானம் ஆங்காங்கு நன்கு சிரிக்க வைக்கிறார். விரல் வித்தை செய்யாத சிம்பு சற்று ஆறுதல். அனுஷ்கா அழகு ! பிரகாஷ் ராஜ் கொடுத்த பாத்திரத்தில் சரியே செய்துள்ளார் . "தெய்வம் வாழ்வது எங்கே" பாடல் வரிகளும், பாடலும் சிந்திக்க வைக்கிறது. முதலில் சொன்ன மாதிரி சரண்யா ட்ராக் சற்று மனதை பாதிக்கிறது.

ஆயினும் ஆனந்த விகடன் 44 மார்க் தருமளவு நிச்சயம் இந்த படம் இல்லை. திரைக்கதையில் தமிழுக்கென்று மாறுதல் செய்கிறோம் என சொதப்பி விட்டார்களோ என்னவோ? தமிழ், தெலுகு ரெண்டு படமும் பார்த்த நண்பர்கள் தான் சொல்லணும்.

சிலர் நன்றாக உள்ளதாக சொன்ன படம் நமக்கு ஏன் பிடிக்கலை என யோசிக்கிறேன். சில நேரங்களில் படங்களை நாம் எந்த மன நிலையில் பார்க்கிறோம், நமது அந்த நேரத்து மன அழுத்தம் இவற்றை பொறுத்தும் நமக்கு  பிடிப்பது மாறுபடலாம்தான். ஆனால் ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். வானத்தில் அது நடக்க வில்லை என்பதே கசப்பான உண்மை.

**
விமர்சனம் வல்லமை இணைய இதழில் பிரசுரமானது. நன்றி அண்ணா கண்ணன் !!

11 comments:

  1. ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும்.


    ...... தத்துவம் # 10875 super!

    ReplyDelete
  2. Anonymous6:44:00 AM

    //ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். //
    மிகச் சரி, ஒத்துக் கொள்கிறேன், பட் எந்த ஒரு படத்தையும் எந்த முன் முடிவுக்களுமின்றியல்லவா நாம் பார்க்க முற்பட வேண்டும்?! ( மனநிலை என்பது வேறு, முன் முடிவுகள் என்பது வேறு )

    //ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான்! இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே //

    இது ( இதை ) கூட ஒரு முன் முடிவு என்று நான் நினைக்கிறேன்.
    சந்தானம் இருப்பதால் பாஸ் ( எ ) பாஸ்கரன் மாதிரியோ, சிம்பு நடிப்பதால் விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரியோ இருக்கும் என நினைத்து ( முன் முடிவுகள் ) போனால் கண்டிப்பாக ஏமாற்றம் தான்,
    ஜாலிக்காகத்தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள் என்று முடிவு செய்து விட்டால் விமர்சனம் படித்து விட்டோ ( அ ) நண்பர்களிடம் அது ஜாலியான படமா என்றோ கேட்டு விட்டு செல்வது தானே நம் ஏமாற்றத்தை குறைக்க உதவும்?!
    இது என் புரிதல் அண்ணா.

    ReplyDelete
  3. //ஒரு நல்ல படம் நமது மன நிலையை மாற்றி, நம் கவலைகளை தற்காலிகமாக மறக்க வைத்து, அந்த பாத்திரங்களுடன் ஒன்ற வைக்க வேண்டும். //

    well said

    ReplyDelete
  4. //தாய் மூகாம்பிகை, தேவரின் திருவருள் போன்ற படங்கள் பார்த்துள்ளீர்களா?//

    பள்ளிப் பருவத்தில் கீற்றுக் கொட்டகையில் பார்த்தப் படத்தை சொல்லி பள்ளி நாட்களுக்கு அழித்து சென்று விட்டீர்கள்.

    விமர்சனம் நன்று.

    ReplyDelete
  5. விமரிசனம் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  6. // "ஏம்பா.. சினிமா பார்ப்பதே சற்று ஜாலியாக இருக்கத்தான்! இவ்வளவு கஷ்டங்கள் சீரியலில் கூட இல்லையே " என பெருமூச்சு எழுகிறது. //

    நல்லா இருக்கே..
    சீரியல் பாக்குற கூட்டத்த இழுக்கத்தான் .. வேணும்னுதான் இப்படி..
    பாருங்க மகளிர் அணி.. சீரியல விட்டுட்டு தியேட்டருக்கு படை எதுக்கப் போறாங்க..

    ReplyDelete
  7. அனுஷ்கா ந‌டித்திருந்தும்...ய‌ங் சூப்ப‌ர் ஸ்டார் ந‌டித்த‌த‌ற்காக‌வே இந்த‌ ப‌ட‌ம் பார்க்க‌வில்லை/மாட்டேன்

    ReplyDelete
  8. ஸ்வீட் என்ற பெயரில் கமெண்ட் போட்டவரே, நீங்கள் என்னை திட்டி எழுதினாலும் பரவாயில்லை, கமெண்ட் போட்ட மற்ற நண்பரை அநாகரீகமாக எழுதியதால் நீக்குகிறேன். கமேன்ட்டை நீக்கினால் எனக்கு பயம் என நினைப்பேன் என்று எழுதியிருந்தீர்கள். பரவாயில்லை அப்படியே நினைத்து கொள்ளுங்கள். அநாகரிகமான வார்த்தைகளை எழுதுவதை தவிர்ப்பது நலம்.

    ReplyDelete
  9. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் என்னை திட்டி எழுதிய பல கமெண்டுகளும் இங்கு பிரசுரம் ஆகி உள்ளது. ஆனால் ஆபாசமான முறையிலும், பிறர் மனம் புண்படும் வகையிலும் எழுதுவது தவறு.

    ப்ரோபைல் இல்லாது அத்தகைய கமெண்டுகள் வந்தாலும், சைபர் கிரைமில் பணி புரியும் நண்பர் மூலம் அந்த ஐ.டி கண்டுபிடித்து அவர்கள் மீது போலிஸ் நடவடிக்கை ( கிரிமினல் சட்டப்படி ) எடுக்க முடியும். இதை நான் மட்டுமல்ல பதிவு எழுதும் யாரும் செய்யலாம். எனவே அத்தகைய மோசமான கமெண்டுகளை இங்கு மட்டுமல்ல பிற பதிவுகளிலும் தவிருங்கள்.

    பெயர் தெரியாத ஐ.டி யில் ஒளிந்து கொண்டு இத்தகைய ஆபாச கமெண்டுகள் போடுவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். முடிந்தால் பிறரை சந்தோஷ படுத்துங்கள். கஷ்டபடுத்தாதீர்கள்.

    ReplyDelete
  10. பதிவு வெளி வந்த நாளன்று நண்பர்கள் எழுதிய பிற கமெண்டுகள் ப்ளாகர் ஒரு நாள் மக்கர் பண்ணிய போது காணாமல் போய் விட்டது. பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...