Tuesday, June 21, 2011

வானவில்: பதிவர் பதில்களும், ரிசர்வ் வங்கியும்

பார்த்த படம்: பயணம்

பயணம் இப்போது தான் பார்க்க முடிந்தது. இப்படம் பற்றி  இருவிதமான விமர்சனங்கள் வந்தன. சிலர் பாராட்டியும், சிலர் பிடிக்கவில்லை என்றும் எழுதினர். எனக்கு வித்யாசமான கதை களன் கொண்ட படம் என்ற அளவில் பிடிக்கவே செய்தது. சில நம்ப முடியாத விஷயங்களும், ஒரு சில எரிச்சல்களும் இருக்கிறது தான். ஆனால் அவை படத்தை ரசிப்பதை நிச்சயம் தடுக்க வில்லை. நாகார்ஜுனா பற்றி சொல்லியே ஆக வேண்டும். மனுஷனுக்கு ஐம்பது வயசு இருக்கும். பார்த்தால் தெரிகிறதா? உடலை மிக மிக அற்புதமாக வைத்துள்ளார். Fantastic. மெச்சூர்ட் நடிப்பு இவருடையது. இவர் போடும் திட்டங்கள் மூளைக்கு வேலையாக, செம சுறுசுறுவென்று உள்ளன. துணை நடிகர் & இயக்குனர் பாத்திரங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸ்சில் நிச்சயம் அனைவரும் தப்பிப்பார்கள் என அறிந்தாலும்  எப்படி அது நடக்கபோகிறது என சுவாரஸ்யமாக பார்க்கிறோம். நிச்சயம் இந்த வருடம் வந்த படங்களில் இது ஒரு நல்ல படம்.

வித்யாசமான சந்திப்பு

சமீபத்தில் தஞ்சைக்கு ரயிலில் சென்ற போது எங்களுக்கு நேர் எதிரே இருந்த மூன்று பெர்த்களில் இருந்த மூவரும் வித்யாசமான கலவை. ஒருவர் மிலிட்டரிகாரர். தமிழரான இவர் விடுமுறைக்கு தமிழகம் வருகிறார். அடுத்தவர் ஏர்போர்ஸ்சில் பணி புரிபவர். "தஞ்சையில் என்னங்க ஏர்போர்ஸ்?" என்றதற்கு ஏர்போர்ஸ் நிலையம் புதிதாக தஞ்சைக்கு வர உள்ளதாகவும், அதில் சேர செல்வதாகவும் சொன்னார். மூன்றாமவர் நேவியில் பணியாற்றுகிறார். நாகப்பட்டினம் செல்வதாக சொன்னார் (அங்கே தான் கடல் இருக்கே !!) இதில் கடைசி இருவரும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். மூவரும் அந்த இரயிலில் தான் சந்தித்து கொண்டனர். நாட்டுக்காக உழைக்கும் மூவர் இப்படி அடுத்தடுத்து அமர்ந்திருப்பத்தை பார்க்க வித்யாசமாக இருந்தது. மிலிட்டரிகார தமிழரிடம் கொஞ்சம் பேசி கொண்டிருந்தேன். வருடத்திற்கு இரு முறை ஒரு மாத விடுப்பு கிடைக்கும், அதில் பாதி நாட்கள் ரயிலில் பயணிப்பதிலேயே போய் விடும் என்றார். தான் செய்கிற வேலை எத்தகையது என்பதை சொல்ல கூடாது; அது ரகசியம் என்று சொல்லிவிட்டார். எனது மகளிடம் மூவரையும் அறிமுகப்படுத்தி விட்டு " இவர்கள் தங்கள் கடமையை செய்வதால் தான் நாம் தினமும் நிம்மதியாக உறங்க முடிகிறது" என்றேன். அவர்கள் சிரித்தார்கள்.

ரசித்த கவிதை


மகளே வருகிறேன்:

அன்றாடம் போய் திரும்பும்
அலுவலக வேலையில்லை
காலையிலே டாட்டா சொல்லி
கன்னத்திலே முத்தமிட்டு
மாலையிலே பாடம் சொல்ல
மகளே நான் கூட இல்லை

உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு
நள்ளிரவு விழித்திருப்பேன்
கனவு போல் மனதினிலே
கண் சிமிட்டி நீ சிரிப்பாய்
நீ சிரிக்கும் நொடியில் எந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்

குளிரெடுக்கும் சிகரத்திலும்
கொட்டுகிற பனியிலும்
குஞ்சணைத்த கதகதப்பு
என்னுயிரை சூடேற்றும்
எத்தனை நாள்? தெரியாது.
எப்போது? தெரியாது.
பெற்றவளே உன்னை என்று
பார்ப்பேனோ ? தெரியாது.

விட்டு ஓடி வருகிற
வேலையல்ல; கடமை இது
முடித்து விட்டு திரும்பும் வரை
முத்தங்களை வைத்திரு நீ

-விகடனில் வாசித்தது. எழுதியது பாஸ்கர் சக்தி என நினைவு.

வித்யாசமான சந்திப்பு என மேலே எழுதிய மனிதர்களை, அவர்கள் வாழ்வை இந்த கவிதையுடன் சேர்த்து வாசிக்க முடிகிறது தானே?

QUOTE HANGER

If you meet your enemy don’t punish him. Do him a good turn, kill him with your kindness.

சென்னை ஸ்பெஷல் : ரிசர்வ் வங்கி நடத்திய மீட்டிங்


நமக்கு தெரிந்து ரிசர்வ் வங்கி என்னென்ன செய்யும்? பணம் பிரிண்ட் அடித்து வெளியிடும். அப்பப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இன்னும் சில கம்பனிகளில் அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் பணி புரிந்தால், வெளி நாடுகளுக்கு பணம் அனுப்ப, அங்கிருந்து பணம் பெற அனுமதிக்கு அவர்களை நாடுவோம் என்ற அளவில் தெரியும். இந்த கடைசி பாயிண்ட்டை ஒட்டி ரிசர்வ் வங்கி சென்னை பிரான்ச் சமீபத்தில் இரண்டு நாள் எக்சிபிஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவர்களின் சட்ட திட்டங்கள், விதிகள் பற்றிய விளக்கமும், அது பற்றிய சந்தேகமும் விளக்கப்பட்டன. சேத்துபட்டில் பெரியதொரு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் இரண்டு நாளும் ஆயிரக்கணக்கில் கூட்டம். மதிய சாப்பாடு, தேநீர், குடிநீர் என அனைவருக்கும் ரிசர்வ் வங்கி அருமையாக ஏற்பாடு செய்திருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது மாணவர்களின் பங்கெடுப்பு தான். ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மேலும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அங்கேயே ஒரு குவிஸ் நடத்தப்பட்டு பரிசுகள் தரப்பட்டன. கல்லூரி மாணவர்கள், வேலையில் இருப்போர் அனைவரும் பங்கேற்றாலும் இந்த பரிசுகளை பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே பெற்றனர். நிறுவனங்களில் பணி புரிவோருக்கு தங்கள் நிறுவனம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

ஒரு கேள்வி இரு பதில் 

கேள்வி: தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியே கல்வி கட்டணம் அறிவித்துள்ளதே இது ஏன்? இந்த முறை சரியா?

பதிவர் ஆர். கே. சதீஷ்குமார் (நல்ல நேரம்) 


இதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...கிராமப்புறத்தில் இருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிர்வாக செலவுகள் குறைவு.நகர்புறத்தில் இருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிர்வாக செலவுகள் மிக அதிகம்.இதை அனுசரித்தும்,பள்ளி நிர்வாகம் சில வசதிகளை மாணவர்களுக்கு அதிகப்படியாக தரலாம்...அல்லது நல்ல தேர்ச்சி விகிதம் கொடுத்து அந்த பகுதியில் பிரபலமான பள்ளியாக இருக்கலாம்.மாணவர்களின் கல்வி தரம் உயர இன்னும் பல சலுகைகளை அந்த பள்ளி கொடுப்பதால் கல்வி கட்டணத்தில் சில வித்தியாசங்களை அரசு நிர்ணயிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்..நம்முடைய கவலையெல்லாம் அரசு விதித்த கல்வி கட்டணத்தை இந்த பள்ளிகள் சரிவர பின்பற்றுவதில்லையே என்றுதான்...இத்தனைக்கும் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்ததை விட,ரவிராஜன் கமிட்டி 40 சதவீதம் கட்டணத்தை அதிகப்படுத்தி மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு சலுகைகளையே செய்திருக்கிறது...ஆனாலும் இவர்கள் பள்ளி அறிவிப்புபலகையில் கூட அதை வெளியிடுவதில்லை..பெரும்பாலான பள்ளிகள் எப்போதும் போலவே கட்டணம் வசூல் செய்கின்றன...அரசின் கட்டண நிர்ணயம் பெற்றோருக்கு பாதியளவு பொருளாதார சுமையை குறைக்கும்படியே உள்ளது..இதை உறுதியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி.

பதிவர் புதுகை அப்துல்லா 


முதலில் கல்வியில் தனியார் என்ற முறையையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் அடிப்படைக் கல்வி என்பது ஒருவரின் பிறப்புரிமை. அதை அளிக்க வேண்டியது அரசின் கடமை. மக்களிடையே உயர்வு,தாழ்வு நிலைகளை உருவாக்கும் பல வாரியப் பாடத் திட்டமே கூடாது எனும்போது பள்ளிகளுக்கு இடையே கட்டண வேறுபாடு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்? ஒவ்வோரு பள்ளிக்கும் ஒவ்வோரு கட்டணம் என்பதை பள்ளிகளில் அளிக்கும் வசதிக்குத் தக்கவாறு அதாவது சிலபள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்,இ லேனிங் போன்றவற்றின் மூலம் பாடம் நடத்துவதால் ஏற்படும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் முகமாக பள்ளிகளிடையே தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இதுவும் சரியான ஒருமுறை இல்லை.

மாநகராட்சிகள், நகராட்சிகள்,பேரூராட்சிகள்,பஞ்சாயத்துகள் என்ற அளவில் பள்ளிகள் இருக்கும் பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு இவற்றிற்குத் தனித்தனி கட்டணம் அறிமுகம் செய்வது மட்டுமே நியாயம். ஒரு மாநராட்சியில் உள்ள அனைத்து பள்ளிக்கும் ஒரே அளவிலான கட்டணம் நிர்ணயம் செய்யும்போது குறைவான வசதியைத் தரும் பள்ளி நல்ல வசதியைச் செய்துதர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும். அப்படி செய்யாவிடின் அந்தப் பள்ளி பெற்றோர்களால் புறக்கணிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் வித்யாசம் இன்றி அனைத்து வசதிகளும் இருப்பதற்காகவாவது பொது கட்டணம் அறிமுகம் செய்யப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இன்றும் எந்த பாடதிட்டம்? அரசா?தனியாரா? கட்டணம்? என்றெல்லாம் பேசிகொண்டு இருப்பது நம் அனைவருக்கும் வெட்கக்கேடு. பள்ளிக்கல்வி அளவில் தனியார்களை முற்றிலும் ஒழித்து அரசே நடத்த வேண்டும் என்ற கொள்கையை மனதில் வைத்து அதை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்பதே என் விருப்பம்.

18 comments:

  1. பயணம் எனக்கும் பிடித்திருந்தது, சிற்சில குறைகளிருந்தாலும்.

    //If you meet your enemy don’t punish him. Do him a good turn, kill him with your kindness.//

    ரொம்ப கஷ்டம். ‘வேட்டைக்காரன்’ வில்லன் மாதிரி சொன்னா...’பயம்!’. நாம எதுவும் செய்யவேண்டாம். ஆனா செஞ்சிடுவானோன்னு ஒரு பயம் எதிரிக்கு இருக்கணும் #பணியிட அனுபவம் ;)

    கல்வி கட்டணம் குறித்த அப்துல்லாவின் பதில் அருமை.

    ReplyDelete
  2. சந்திப்பு வித்தியாசம்தான். கவிதை பகிர்வும் அருமை.

    இன்றைய சூழலுக்கு அவசியமான கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. Anonymous9:38:00 AM

    சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இன்றும் எந்த பாடதிட்டம்? அரசா?தனியாரா? கட்டணம்? என்றெல்லாம் பேசிகொண்டு இருப்பது நம் அனைவருக்கும் வெட்கக்கேடு. //
    அப்துல்லாவின் இந்த வரிகள் அருமை

    ReplyDelete
  4. வானவில் ஜொலிக்கிறது...
    quote hanger அருமை.. ;-))

    ReplyDelete
  5. //துணை நடிகர் & இயக்குனர் பாத்திரங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன//
    உண்மை. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிக்கும்படியான கதையை ஒத்த காமெடி.

    //"தஞ்சையில் என்னங்க ஏர்போர்ஸ்?" //

    என்னங்க உங்களுக்கு தெரியாதா? தஞ்சையில் ஏர் போர்ஸ் இருக்குங்க. அவர்களுக்கென்றே ஒரு ஏர் போர்ஸ் ஸ்டேஷனே இருக்கிறதே. தவறென்றால் திருத்துங்கள்.

    //வருடத்திற்கு இரு முறை ஒரு மாத விடுப்பு கிடைக்கும், அதில் பாதி நாட்கள் ரயிலில் பயணிப்பதிலேயே போய் விடும் என்றார்//

    இம். இவர்களுக்கெல்லாம் சிறப்பு (விமான) சலுகைகள் கொடுத்தால் என்ன அரசு கஜானா தேய்ந்தா போய்விடும்?

    ReplyDelete
  6. சந்திப்பும் உங்கள் மகளிடம் நாட்டை காக்கும் வீரர்களை அறிமுகப்படுத்தியதும் அருமை...

    ReplyDelete
  7. //எனது மகளிடம் மூவரையும் அறிமுகப்படுத்தி விட்டு " இவர்கள் தங்கள் கடமையை செய்வதால் தான் நாம் தினமும் நிம்மதியாக உறங்க முடிகிறது" என்றேன். அவர்கள் சிரித்தார்கள். //

    Very true..

    ReplyDelete
  8. அப்துல்லாவின் கருத்தே சரி.

    மேலும், பள்ளிகளில், பள்ளியின் சுற்றுப்புறத்தில் இத்தனை கிமீ தூரத்தில் இருக்கும் மாணாக்கர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற விதிமுறையும் வேண்டும்.

    சின்னச் சின்ன கிராமங்களில் இருக்கும் பள்ளிகளிலும் நகரப் பள்ளியின் அதே தரமும், கட்டணமும் இருந்தால், ஏன் மக்கள் செய்யும் விவசாயம் போன்ற அடிப்படை தொழில்களை விட்டுவிட்டு நகரத்திற்குக் குடிபெயர்கிறார்கள்?

    பயணம்: (அந்தப் பயணம் இல்லை!!) ஒரே ரயில் பயணத்தில், கப்பல், விமானம், காலாட்படைகளைச் சந்தித்துவிட்டீர்கள்!!

    ReplyDelete
  9. ரகு: நன்றி எதிரிகள் பற்றிய எண்ணம்..இப்போது இருப்பது போல் எப்போதும் இருக்காது. மாறும். உங்கள் வயதில் நானும் terror-ஆக தான் இருந்தேன் :))
    **
    நன்றி ராமலட்சுமி
    **
    அட ! சதீஷ். .அப்துலா எழுதியதை நீங்கள் பாராட்டியது மிக மகிழ்ச்சி தருகிறது
    **
    RVS : நன்றி ; மகிழ்ச்சி

    ReplyDelete
  10. ஆதி மனிதன்: தஞ்சையில் ஏற்கனவே Air Force உள்ளதா? தஞ்சை பற்றி என்னை விட நிறைய விஷயம் தெரிந்து வைத்துள்ளீர்கள்

    //இவர்களுக்கெல்லாம் சிறப்பு (விமான) சலுகைகள் கொடுத்தால் என்ன அரசு கஜானா தேய்ந்தா போய்விடும்?//

    இவர்கள் வந்து போவதே கிட்டத்தட்ட இவர்கள் பணம் தான் என்றும் மறைமுகமாய் இவர்கள் சம்பளத்தில் பிடித்து விடுவதாகவும் அந்த நண்பர் சொன்னார்.இது உண்மையா என் தெரியலை. நம் அரசாங்கம் எங்கே விமான வசதி தருவது :((

    **
    நன்றி சங்கவி. மகிழ்ச்சி
    **
    வாங்க மாதவன். நன்றி
    **
    ஹுசைனம்மா
    //பயணம்: (அந்தப் பயணம் இல்லை!!) ஒரே ரயில் பயணத்தில், கப்பல், விமானம், காலாட்படைகளைச் சந்தித்துவிட்டீர்கள்!!//

    ஆம் அது தான் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது !!

    ReplyDelete
  11. நீங்கள் பிறந்து வளர்ந்தது நீடா. நான் பிறந்து வளர்ந்தது தஞ்சையில். நீடாவிற்க்கும் தஞ்சைக்கும் 30 கி.மீ. இடைவெளி. அதனால் சில விஷயங்கள் உங்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம்.

    ReplyDelete
  12. Nallathoru kalaivayana pathivu.nice

    ReplyDelete
  13. Nallathoru kalaivayana pathivu.nice

    ReplyDelete
  14. Lovely Rainbow.. As Usual.. :)

    ReplyDelete
  15. பயணம் நான் இன்னமும் பார்க்கவில்லை. ஆசை இருக்கிறது. சந்திப்பும் அதன் விவரமும் அருமை.

    ReplyDelete
  16. வானவில் அருமை.

    //இன்றும் எந்த பாடதிட்டம்? அரசா?தனியாரா? கட்டணம்? என்றெல்லாம் பேசிகொண்டு இருப்பது நம் அனைவருக்கும் வெட்கக்கேடு. பள்ளிக்கல்வி அளவில் தனியார்களை முற்றிலும் ஒழித்து அரசே நடத்த வேண்டும் என்ற கொள்கையை மனதில் வைத்து அதை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்பதே என் விருப்பம்.//

    வரவேற்க வேண்டிய கருத்து. நன்றி.

    ReplyDelete
  17. Mohan,
    FYI - I have updated my email-id.

    --Aathi.

    ReplyDelete
  18. நன்றி ஆதி மனிதன். நான் சொன்னதை மதித்து தங்கள் ஈ மெயில் தங்கள் -ல் சேர்த்தமைக்கும்
    **
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தர்மா
    **
    வாங்க மணிகண்டன். நன்றி
    **
    ஸ்ரீ ராம்; அவசியம் பயணம் பாருங்கள் நல்ல படம்
    **
    அமைதி அப்பா: நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...