Tuesday, May 6, 2014

கோவா- கப்பலில் ஒரு இனிய பயணம்- வீடியோக்களுடன்

கோவாவின் தலைநகரம் - பனாஜி சிட்டி. இங்குள்ள துறைமுகத்தில் இருந்து தினம் மாலை வேளையில் கப்பலில் ஒரு இனிய பயணம் நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 5000 முதல் 10000 வரை மக்கள் பயணிக்கிறார்கள்.



டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே செல்லவே மிக பெரிய கியூ... வெளியிலேயே நின்ற படி சில ஏஜென்ட்கள் டிக்கெட் விற்கிறார்கள். அதே விலையில் தான் விற்பதால் அங்கேயே வாங்கினோம்...

மாலை 5 மணி முதல் எட்டு மணி வரை இந்த பயணம் தொடர்கிறது... ஒவ்வொரு கப்பலிலும் 500 பேராவது பயணிப்பர்.

திருப்பதி போல கியூவில் நின்று பொறுமையாய் மக்கள் கப்பலில் ஏறுகிறார்கள். டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ. 200



கப்பல் இரண்டு தளத்தை கொண்டது. அமரும் வரை - கடலின் ஓர இருக்கை - மாடி இருக்கை என்றெல்லாம்    அடித்து பிடித்து அமர்ந்தாலும் கப்பல் செல்ல துவங்கியதும் பாதி பேருக்கு மேல் இருக்கையில் இருப்பதில்லை.. எழுந்து நடப்பதும்,  நின்றபடி கடலை வேடிக்கை பார்பதுமாய் இருக்கிறார்கள்.

கப்பல் நிரம்பும் வரை கிளம்பாமல் காத்திருக்கிறார்கள். மிக விரைவாகவே நிரம்பி விடுகிறது..

கப்பல் கிளம்ப துவங்கும்  போதே - கப்பலுக்குள் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மைக் பிடித்தபடி ஒருவர் வந்து பேசத்துவங்கி விடுகிறார். அதன் பின் ஒரு மணி நேர பயணம்.. பின் கப்பல் திரும்பும் வரை அந்த மேடையில் தொடர்ந்து பாட்டு, டான்ஸ் தான்....



முதலில் குழந்தைகளை மட்டும் அழைத்து பாடல்கள் இசைத்து ஆட வைக்கிறார்கள். பின் கணவன்- மனைவி ஆகியோரின் டான்ஸ் - அப்புறம் ஆண்கள் மட்டும் - பின் பெண்கள் மட்டும் - கடைசியாக யார் வேண்டுமானாலும் வந்து ஆடலாம் என அறிவிக்கிறார்கள்.

குழந்தைகள் ஆடும்போது - பெற்றோர் ஆர்வமாக தங்கள் குழந்தைகளை மேடை மீது ஏற்றி விட, அதில் பாதி பேர் மட்டுமே ஆட, நிறைய குழந்தைகள் ஆடாமல் விழித்த படி நின்று கொண்டிருந்தனர் ...



எல்லா நேரமும் டான்ஸ் மட்டும் தான் ஆடுவார்கள் என அறியாமல் கணவன்- மனைவி மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த போது அய்யாசாமி மற்றும் அவர் மனைவி மேடையேறி விட்டனர்.




டான்ஸ் என்று அறிவித்ததும் திருமதி. அய்யாசாமி திரு திரு என விழிக்க, அய்யாசாமி நைசாக இறங்கி போயிடலாம் என அழைத்து வந்து விட்டார் ( அய்யாசாமி எதோ ஒரு விதமாய் ஆடுவார் என்றாலும், தனியே எப்படி ஆடுவது?)




வெய்யில் காலம் என்றால் - 5 மணிக்கு துறைமுகத்தை அடைவது நல்லது.. கியூவில் நின்று அடுத்த அரை மணியில் கப்பலில் ஏறினால் ஆறு மணிக்கு கப்பல் கிளம்பும்.. ஒரு மணி நேரம் சென்று விட்டு வருவதற்குள் - கடலில் சூரிய அஸ்தமனம் கண்டு ரசிக்கலாம். மேலும் திரும்ப  வரும்போது அழகிய பனாஜி நகரம் வண்ண மயமான விளக்குகளால் ஜொலிப்பது அட்டகாசமான காட்சி. அழகான ஹோட்டல்கள், மிதக்கும் கப்பல்கள் (கேசினோ) போன்றவையும் பயணத்தில் நம்மை கவரும் மற்ற விஷயங்கள்..



கப்பலிலேயே ஸ்நாக்ஸ் மற்றும் ட்ரிங்க்ஸ் ( ஆம் .. பீர், ஹாட் உட்பட ) விற்கிறார்கள். அந்த விற்பனையும் அமோகமாய் நடக்கிறது.

நிலா அது  வானத்து மேலே 

கோவா செல்லும்போது அவசியம் பனாஜி நகரை ஒரு முறை சுற்றி வரவும், இந்த கப்பல் பயணத்தையும் தவற விடாதீர்கள்.

கோவா - சில குறிப்புகள் 

கோவாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல; போர்சுகீசியர்கள்; எனவே பாண்டிச்சேரியின் சில தன்மைகள் இங்கு உண்டு. ஆனால் பாண்டிச்சேரியை விட பல மடங்கு அழகும் சுவாரஸ்யமும் கோவாவிற்கு உண்டு

பனாஜி சிட்டியில் ஒரு வீடு 


தலை நகரில் கூட நமது சென்னை அல்லது மற்ற சிட்டி அளவெல்லாம் டிராபிக் இல்லை; மிக நிதானமாக கழிகிறது பொழுதுகள்.

கோவாவில் என்னை பெரிதும் கவர்ந்த அம்சம் - அதன் வெரைட்டி தான். கோவா நகரத்தின் ஸ்டைலை கொண்டுள்ளது; இன்னொரு பக்கம் அக்மார்க் கிராமம் போல உள்ளது. பல்வேறு பீச்கள் மற்றும் Backwaters இருப்பதால் கேரளாவில் இருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. பாதைகள் ஹில் ஸ்டேஷன் போல !  இப்படி ஒரே இடத்தில அத்தனை இடங்களின் குணங்களையும் காட்டுவது செம சுவாரஸ்யம் !



 கோவாவில் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கூட யூனிபார்ம் அணிகிறார்கள். கேட்டால் - டூரிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு வித்யாசம் தெரியாது ; அதனால் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 வரை வருடாந்திர கோவா பெஸ்டிவல் நடக்கும். கோவாவில் மிக அதிக கூட்டம் கூடும் நேரம் இதுவே . அறை வாடகை எல்லாம் கன்னா பின்னாவென்று பிய்த்து கொண்டு போகும். இந்த 2 வாரம்  பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அரசு அலுவலகம் கூட அநேகமாய் இயங்காது என்கிறார்கள். அலுவலகம் திறந்திருந்தாலும் ஓரிருவர் மட்டும் இருப்பராம் ; வேலை எதுவும் நடக்காதாம்

பனாஜியில் நிதானமாய் நாங்கள் அடிக்கடி சுற்றி வந்தோம். அழகான குட்டி நகரம். பகலில் ஒரு வித  முகமும் இரவில் இன்னொரு அழகும் காட்டுகிறது பனாஜி சிட்டி.



ஜூன் 18 என்ற பெயரில் பனாஜியில் ஒரு தெரு ( வெள்ளையனே வெளியேறு போல - போர்சுகீசியர்களை வெளியேற சொன்ன நாள் ஜூன் 18, 1946 என்பதால் இந்த பெயர்)

கோவாவில்  இனிப்புகள் அதிகம் பிரபலம் இல்லை; முந்திரி மற்றும் இதர நட்ஸ் (Nuts) தான் இங்கு அவசியம் வாங்க சொல்லி பரிந்துரைக்கிறார்கள். அந்த கடைகள் சிலவும், ஜூன் 18 உள்ளிட்ட பனாஜியின் சில முக்கிய தெருக்களையும் இந்த வீடியோவில் காணலாம்.




இஞ்சினியரிங் போன்றவை இங்குள்ளோருக்கு உகப்பான படிப்பு அல்ல. போலவே மருத்துவமும் கூட அநேகமாய் யாரும் படிப்பதில்லை. அவர்கள் பீ. காம் போன்ற ஆர்ட்ஸ்  படிப்பையே அதிகம் படிக்கிறார்கள். மேலும் ஹோட்டல் சம்பந்தமான கோர்ஸ் என்றால் நிறைய பேர் படிப்பதாக சொன்னார்கள் (படித்து விட்டு கோவாவில் ஹோட்டலில் வேலை பார்க்கலாம் அல்லவா?)

படிக்கா விட்டாலும் பிரச்சனையே இல்லை; படிக்காதோர் அதிகம் நாடும் தொழில் கார் ஓட்டுவது தான்; நான் கூட அதிகம் படிக்கலை என சிரித்த படி சொன்னார் எங்கள் கார் டிரைவர் !

(கோவா குறிப்புகள் தொடரும்.)

9 comments:

  1. Sir,
    ஜூன் 16 என்ற பெயரில் பனாஜியில் ஒரு தெரு ( வெள்ளையனே வெளியேறு போல - போர்சுகீசியர்களை வெளியேற சொன்ன நாள் ஜூன் 16, 1946 என்பதால் இந்த பெயர்)

    But board showing 18TH JUNE ROAD

    ReplyDelete
    Replies
    1. It is June 18; corrected now in the article. Thanks Venkat

      Delete
  2. பயணக்குறிப்புக்களும் படங்களும் அருமை! தெருப்பெயரை குறிப்பிடுகையில் ஓரிடத்தில் 18 என்றும் மற்றொரு இடத்தில் 16 என்றும் சொல்லியிருக்கிறீர்கள். படம் ஜீன் 18 ஐ காட்டுகிறது. சரி செய்யவும்! நன்றி!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. கோவாவில் உள்ள சுற்றுபுற சூழல் ஆர்வம் வியக்க வைக்கும். பீச்சில் குப்பை கூளங்கள் இருக்காது... யாரும் அசுத்தப்படுத்த மாட்டார்கள்..

    ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தால் துபாயிலும் வெளிநாடுகளிலும் வேலை தேடலாம் என்ற சௌகரியம் .

    ReplyDelete

    ReplyDelete
  5. கோவா பயணக் குறிப்புகள் ஸ்வாரசியம்...

    ReplyDelete
  6. சுவாரசியமாகக் கூறி இருக்கிறீர்கள் :-)

    " கோவாவில் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கூட யூனிபார்ம் அணிகிறார்கள். கேட்டால் - டூரிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு வித்யாசம் தெரியாது ; அதனால் இந்த ஏற்பாடு என்கிறார்கள்."

    அடடே! பாவம்

    கோவா செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.. பார்ப்போம்

    ReplyDelete
  7. கோவா இரண்டு நாளில் எத்தனை இடங்கள் பார்க்களாம்? குறைந்த வாடகை எந்த ஓட்டல் உள்ளது?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...