Tuesday, July 29, 2014

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

ன்றாக நினைவிருக்கிறது. முதன் முதலில் தனுஷின் நடிப்பில் ஆச்சரியப்பட்டு போனது " காதல் கொண்டேனில்" தான்... படம் பார்த்து விட்டு " இது மாதிரி ஒரு படமோ, நடிப்போ தனுஷுக்கு இன்னொரு முறை கிடைக்கவே கிடைக்காது " என சொல்லிக்கொண்டிருந்தேன்... பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன - என எனது அந்த எண்ணத்தை அவ்வப்போது பொய்யாக்கி கொண்டிருந்தார் தனுஷ்.



இதுவரை வெளிவந்த எல்லா தனுஷ் படங்களை விட வேலை இல்லா பட்டதாரி  மிக வேறுபட்டது. காரணம் இத்தகைய மாஸ் படம் தனுஷ் இதுவரை செய்ய வில்லை. அட்டகாசம் !

கதை 

சிவில் இஞ்சினியரிங் முடித்து விட்டு,  கட்டிட  துறைக்கு மட்டுமே வேலைக்கு செல்வேன் என இருக்கிறார் தனுஷ். அம்மாவின் புண்ணியத்தில் ஒரு வேலை கிடைக்க, அதில் வரும் சோதனைகளை எப்படி சமாளித்தார் என்பதை வெண் திரையில் காண்க !

ஹீரோ 

இப்படத்திற்கு ஒரு ஹீரோ அல்ல .. 3 ஹீரோ !

முதல் ஹீரோ.....கதை எழுதி இயக்கிய வேல்ராஜ்... படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இவரது கதை மற்றும் திரைக்கதை தான்... இயக்குனராக முதல் படம் என்பதால்  ஜெயிக்கிற வெறியுடன் உழைத்திருப்பது தெரிகிறது. இவரின் சுவாரஸ்ய Plot இல்லா விடில் படம் வென்றிருக்க வாய்ப்பில்லை ! வெல் டன்  வேல் ராஜ் !

அடுத்து .. தனுஷ்.. ! ரஜினியின் ஸ்டைல் மற்றும் தாக்கம் ஆங்காங்கு தெரிகிறது. மனுஷன் அசத்தி இருக்கிறார் அசத்தி ! படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் அநேகமாய் இவர் இருந்தாலும் - சற்றும் அலுக்காதது இவரது பெர்பார்மன்ஸ் கெத்தாக இருப்பதால் தான். பாட்டு, பைட்டு, எமோஷனல் சீன் , காமெடி என எல்லா காட்சிகளும் பெர்பெக்ட் கலவையில் அமைய - தனுஷின் நடிப்பு ஜொலிக்கிறது !



இறுதியாய்...  மூன்றாவது ஹீரோ  அனிருத் ! ஒரு படத்தில் அத்தனை பாட்டுகளும் ரசிக்கும்படி அமைவது எத்தனை முறை சாத்தியமாகிறது ! படத்துடன் சேர்த்து தான் பாடல்களை முதலில் முழுவதுமாய் கேட்டேன்.  ... மிக மிக ரசிக்கும் படி இருந்தது. கதையுடன் ஒன்றி வரும் பாடல்களும் அதை எடுத்த விதமும் கூட ஒரு காரணம்.

காமெடி - ஹீரோயின் இன்ன பிற 

ரொம்ப நாள் கழித்து காமெடி ரோலில்.. விவேக் ... தனது வழக்கமான மொக்கை இன்றி ஓரளவு கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

அமலா பால் ... அழகு... ! வழக்கமான தமிழ் ஹீரோயின் தான்,  ஸ்கோப்.. குறைவாய் இருந்தாலும் நிறைவு...

சமுத்திரக்கனி - ஒரு பக்கம் ஹீரோ மாதிரி ரோல் செய்பவரை எப்படி அப்பாவாக்கினர் என தெரிய வில்லை. எப்போதும் இப்படி திட்டும் அப்பாக்கள் இருப்பார்களா ? (எனது அப்பா அவசியம் திட்ட வேண்டிய நேரத்தில் கூட திட்டியதேயில்லை.. மகன் வருந்துவானே என்று !)

இடைவேளைக்கு பின் தனுஷ் வேலைக்கு போய் விடுகிறாரே.. அப்புறம் ஏன்  வேலை இல்லா பட்டதாரி (வி. ஐ. பி) என பெயர் வைத்தார்கள் என நம்முள் ஒரு கேள்வி தோன்ற - அத்தகைய வி. ஐ. பி களே பிற்பகுதியில்  தனுஷுக்கு  உதவுவதாக காட்டி - அத்தகைய வி. ஐ. பி களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளுகிறார்கள் ( இருந்தாலும் தனுஷின் யூ டியூப் பேச்சை கேட்டு வேன் ,பஸ்ஸில் எல்லாம் ஆட்கள் வந்து இறங்குவது த்ரீ மச் -ங்க !)

தனுஷ் மற்றும் அவரது தம்பிக்கிடையேயான உறவு செம சுவாரஸ்யமாய் வடிவமைத்துள்ளனர்... அண்ணன் - தம்பி ஒப்பீடு - தம்பியை விரட்டி கொண்டே இருக்கும் அண்ணன் என புன்னகையுடன் ரசிக்க வைக்கும் பகுதி அது

போலவே அந்த லூனா ஒரு பாத்திரமாகவே ரசிக்க வைக்கிறது.



புது முக வில்லனை பற்றி நாம் கமண்ட் அடிக்கும் முன்பே - தனுஷை விட்டு அமுல் பேபி என்றும் " ஒண்ணை எல்லாம் வில்லனாவே ஏத்துக்க முடியலை " என்றும் கிண்டலடித்து விடுகிறார்கள்..

குறைகள் 

படத்தின் ஒரே குறை ஆங்காங்கு தெரியும் லாஜிக் மீறல்கள் !

இஞ்சினியரிங் முடித்து ஒரு வருடமே ஆன அமலா பால் மாதம் 2 லட்சம் சம்பாதிக்கிறாராம் ! இப்படி மாசம் 2 லட்சம் சம்பாதிப்பவர் - வேலை இல்லாத தனுஷை காதலிக்கிறாராம் !

இன்னொரு காட்சியில் கால் சென்டரில் மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் தனுஷ் வேலைக்கு போவதாக சொல்கிறார்கள். எந்த கால் சென்டரில் துவக்க சம்பளம் 50 ஆயிரம் தருகிறார்கள் ?

எவ்வளவோ வில்லத்தனம் செய்யும் வில்லனை தனுஷ் தொடர்ந்து பொறுப்பதும், அவரை மன்னிப்பு மட்டும் கேட்க சொல்வதும் - ஏனோ இடறுகிறது

இப்படி சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும்

சுவாரஸ்யமாக கதை சொன்ன விதத்திலும், தனுஷின் அட்டகாசமான நடிப்பிலும் இந்த பட்டதாரி முதல் வகுப்பில் பாஸ் ஆகிறார் !

வேலை இல்லா பட்டதாரி... இவ்வருடம் வெளி வந்தவற்றில் பெஸ்ட் கமர்ஷியல் என்டர்டெயினர்  ... டோன்ட் மிஸ் இட் !

8 comments:

  1. படத்தின் வில்லன் பெயர் அஷ்வின் மற்றும் தொழில், ரியல் எஸ்டேட்! தனுஷ்'ன் சகலை (சௌந்தர்யாவின் கணவர்) பெயரும் தொழிலும் அதுவே. இதில் ஏதாவது உள்குத்து உள்ளதோ?

    ReplyDelete
  2. மற்றபடி படம் அவ்வளவு பிரமாதம் இல்லை, ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். சிகரட் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். பிறகு படம் முழுவதும் ஊதி தள்ளுகிறார், ஒரு சீனில் தாடி, அடுத்த சீனில் தாடி இல்லை, மறுபடியும் தாடி என்று தொடர்பில்லாத காட்சிகள்....

    ReplyDelete
  3. //படத்தின் வில்லன் பெயர் அஷ்வின் மற்றும் தொழில், ரியல் எஸ்டேட்! தனுஷ்'ன் சகலை (சௌந்தர்யாவின் கணவர்) பெயரும் தொழிலும் அதுவே. இதில் ஏதாவது உள்குத்து உள்ளதோ?//

    அடேங்கப்பா !

    //சிகரட் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். பிறகு படம் முழுவதும் ஊதி தள்ளுகிறார்//

    குறைகளில் நானும் இதனை சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் நம் நண்பர்கள் / உறவினரில் சிலர் சிகரெட் குடிக்க மாட்டேன் என வீரா வேசமாய் சொல்வதும் பின் விட முடியாமல் தொடர்வதும் நினைவுக்கு வர, அப்படித்தான் அந்த பாத்திரத்துக்கும் நேர்கிறது என விட்டு விட்டேன் !

    ReplyDelete
  4. சிறந்த கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete
  5. Polished mokkai film

    ReplyDelete
  6. The villan actor is not dhanush relation. He looks taller and smarter then the villan. If you wanna see him watch the marriage video in you tube or vijay tv

    ReplyDelete
  7. அருமையான விமர்சனம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நாடு முழுக்க பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது வேலையில்லா பட்டதாரி. ஆனால் வேறொரு இடத்தில் இதே படம் உறவுகளுக்கு நடுவில் குண்டு வைத்திருப்பதாக கூறுகிறது கோடம்பாக்கத்தின் குறுகுறு டைம்ஸ்! படத்தில் சாதாரணமாக ஹீரோ பஞ்ச் அடிப்பது போல ஒரு டயலாக் வந்தால் கூட இது அந்த ஹீரோவை குறிக்குமோ, இந்த ஹீரோவை குறிக்குமோ என்று பூதக்கண்ணாடி போட்டு புரளி கிளப்பி வருகிறது உலகம். இந்த பொல்லாத உலகத்திற்கு இன்னும் கொஞ்சம் தீனியை போட்டு ஏணியை கவிழ்த்திருக்கிறார் தனுஷ்.

    வேறொன்றுமில்லை, படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருக்கும் இளைஞருக்கு ‘அஸ்வின்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பிரச்சனையே! இது இயக்குனரின் மிஸ்டேக்கா, மறைமுக இயக்குனராக கருதப்படும் தனுஷின் மிஸ்டேக்கா? தெரியவில்லை. ஆனாலும் பொங்கி வெடிக்கிறது பேமிலி சுச்சுவேஷன். தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை கணவர்தான் இந்த அஸ்வின். கடந்த சில மாதங்களாகவே ரஜினியின் மூத்த மருமகனான தனுஷூக்கும் இளைய மருமகனான அஸ்வினுக்கும் ஒத்துப் போவதில்லையாம். வீட்டுக்குள் மட்டுமே நிகழ்ந்து வந்த அந்த பனிப்போரைதான் படத்திற்குள்ளும் கொண்டு வந்துவிட்டார் தனுஷ் என்று பொங்குகிறாராம் இளைய மகள்.

    வேலையில்லா பட்டதாரி பார்த்த நாளிலிருந்தே தன் அக்காவிடம் இந்த விஷயத்தை சொல்லி நீதி கேட்டு வருகிறாராம் சௌந்தர்யா. ஆனால் படம் பெருத்த வெற்றி பெற்றதற்கு பிறகு யார் என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது? இருந்தாலும், பிரச்சனை ரஜினியின் காதுக்கும் சென்றிருப்பதாக காதை கடிக்கிறது தகவல்!

    ஓட்டுக்குள்ள இருக்கிற வரைக்கும் முட்டை! உடைஞ்சா ஆம்லெட்டோ, ஆஃப் பாயிலோ… அது சமையல்காரன் சவுரியமாச்சே!

    --http://www.newtamilcinema.com/dhanush-in-trouble/

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...