Sunday, December 14, 2014

கோவா.. சூதாடும் இடத்தில் (Casino) ஓர் நாளிரவு..அனுபவம்

திவுலகில் தொடர்ச்சியாய் இயங்க துவங்கிய பின் இவ்வளவு பெரிய இடைவேளை எடுத்ததில்லை.

எங்கள்  ACS இன்ஸ்டிடியூட் நடத்திய தேர்தலில் போட்டியிட்டதால் - எந்த சோசியல் மீடியாவிலும் விசிபிளிட்டி அதிகப்படுத்த எழுதக்கூடாது என்ற தேர்தல் விதிமுறையின் படி - 3 மாதம்  முழுவதுமாய் ஒதுங்கியிருந்தேன்.

தேர்தல் முடிந்தது. ரிசல்ட் கிறிஸ்துமஸ் அருகாமையில் வெளியாகும்.

கோவா குறித்த இப்பதிவு நீண்ட நாளாக Draft -ல் இருந்தது. ..இப்போது உங்கள் பார்வைக்கு ....
***********

கேசினோ... ஆம் சூதாடும் இடமே தான்.... அந்த வார்த்தையை கேட்டதுமே நிறைய மனிதர்கள் புகைபிடித்து கொண்டோ, குடித்த படியே  சீட்டாடும் ஒரு பிம்பம் நமது நினைவுக்கு வரும்.. என்ன செய்வது சினிமாக்களில் அப்படிதான்  நமக்கு காண்பித்திருக்கிறார்கள்...

நிஜத்தில் கேசினோ எப்படி இருக்கிறது?

பார்க்கும் முன் கோவாவின் கேசிநோக்கள் பற்றி சில தகவல்களை சொல்லி விடுவோம்

இரண்டு வகையான கேசினோக்கள் கோவாவில் உண்டு.. ஒன்று வழக்கமான (தரையில் இருக்கும்) கேசினோ ; மற்றொன்று மிதக்கும் கேசினோ - கடலில் அமைக்கப்பட்ட கப்பல் அதுனுள் இருக்கும் கேசினோ இந்த வகையை சேரும்.

கோவா கடல் சூழ்ந்த இடம் என்பதால் -  இங்கு மிதக்கும் கேசினோக்கள் அதிகம் உள்ளன.

நாங்கள் சென்ற "கேசினோ ப்ரைட் " மிக புகழ் பெற்றது. நுழைவு கட்டணம் 1000 ரூபாய் ; இதற்கு 500 ரூபாய்க்கு விளையாடும் கூப்பன் தந்து விடுகிறார்கள். மேலும் பபே உணவு அன் லிமிட்டட் ஆக சாப்பிடவும், கேசினோ விளையாடும் இடத்தில் ஆல்கஹாலும்  கூட இலவசம்.. எனவே கொடுத்த ஆயிரம் ரூபாய் முதலில் அதிகம் போல தோன்றினாலும், அதிகம் ஆடி பணம் இழக்க வில்லை எனில் - கொடுத்த காசுக்கு வொர்த் தான்...

உள்ளே நுழைந்து டிக்கெட் எடுக்கும்போதே மகளின் வயதை கேட்டு விட்டு 21 வயது வரை சூதாட்டம் ஆட அனுமதி இல்லை என்று அவளுக்கு மட்டும் 300 ரூபாய் டிக்கெட் தந்தனர். காமிரா அனுமதி இல்லை என அதனையும் வாங்கி வைத்து விட்டனர் (போன்கள் எடுத்து செல்லலாம் எனினும்  அதிலும் தப்பி தவறி கூட புகைப்படம் எடுக்க கூடாது )

மிதக்கும் கப்பலுக்கு ஒரு படகு மூலம் அழைத்து செல்கிறார்கள். தரை தளத்தில் தான் விளையாட்டுகள்.. சிறுவர், சிறுமிகள் அங்கு அனுமதி இல்லை என்பதால் இரண்டாம் தளம் (உணவகம்) நேரடியே சென்றோம்..(மகள் உடன் இருந்ததால்) 



20க்கும் மேற்பட்ட வெஜ் மற்றும் நான் வெஜ் உணவுகள்....  மீன், சிக்கன், மட்டன் என அனைத்தும் இருந்தாலும் அதிகம் சுவையாய் இல்லை; குறிப்பாக மீன் ரொம்ப சுமாராக கொஞ்சம் சாப்பிட்டு விட்டு - வைத்து விடும் விதத்தில் இருந்தது.

ஆனால் மிக அசத்தியது இனிப்பு வகைகள் .. பல்வேறு வித இனிப்புகள் வரிசை கட்டி அணி வகுக்க, ஹவுஸ் பாஸ் அவற்றை மட்டுமே ரவுண்டு கட்டி அடித்து இனிப்புகளுடன் மட்டுமே இரவு உணவை முடித்து கொண்டார்.

மனைவியையும் மகளையும் உணவு உண்ண சொல்லி விட்டு  - கேமிங் நடக்கும் தரை தளத்துக்கு வந்தேன்...பெண்ணை தனியே விட்டு விட்டு வர மனமின்றி ஹவுஸ் பாசும் கேமிங் இடத்திற்கு வரவில்லை; ஆயினும் சாப்பிடும் இடமான இரண்டாம் தளத்திலிருந்து கீழே கேமிங் நடக்கும்   இடத்தை வேடிக்கை பார்க்க இயலும் ; அப்படி தான் அவர்களும் பார்த்தார்கள் )

மிக பெரிய ஹால்... அங்கு 20க்கும் மேற்பட்ட கப்பலின் பணியாளர்கள் இருந்து - விருந்தினர் சூதாட்டம் ஆட உதவிக்கொண்டிருந்தனர். .. ரூலேட் மற்றும் கேசினோ வார்  ஆகிய இரண்டு ஆட்டங்கள் மிக அதிக அளவில் ஆடப்பட்டன.

எனக்கு தரப்பட்ட 500 ரூபாய் மற்றும் மனைவிக்கு தந்த அதே அளவு கூப்பன் இரண்டுக்கும் சேர்த்து விளையாட திட்டம்...

முதலில் விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும். அங்கு ஆடுவோர் எல்லாம் பழம் தின்று கோட்டை போட்டவர்கள் போலும். அசால்ட்டாக விளையாடுகிறார்கள்.. அநேகமாய் உள்ளூர் வாசிகளாய்  இருக்க வேண்டும்...

அங்கு விளையாடும் பணியாளர்களின் உடல் மொழி வேடிக்கையாகவும், ரசிக்கும் வண்ணமும் இருந்தது. அனைவருக்கும் ஒரே மாதிரி வெள்ளை உடை.. சில விஷயங்கள் ஒரே மாதிரி தான் செய்கின்றனர். குறிப்பாக கேம் ஆட நீங்கள் காயின் (பணத்துக்கு ஈடு ) தந்தால் - அதை கையில் வாங்குவதில்லை; போர்டின் மீது வைக்க சொல்கிறார்கள். அந்த போர்டிலிருந்து அந்த பணத்தை அவர்கள் வேகமாக எடுக்கும் லாவகமே அழகு !



விளையாட்டில் - ஒரு கட்டத்திற்கு  குறைந்த பட்ச கேம்பிள் தொகை ரூ. 100; அதிக பட்சம் ரூ 2000. நீங்கள் பல கட்டங்களிலும் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டலாம்

மிதக்கும் கப்பல் பயணமும் கேசினோவும் மிக அருகருகே உள்ளது; இரண்டையும் ஒரே நாளின் மாலையில் கண்டு விடலாம்.

நமக்கு தரும் கூப்பன் வைத்து ஒரே முறை விளையாடலாம். அதாவது 500 ரூபாய் கூப்பனை அப்படியே வைத்து தான் விளையாட முடியும் ; நூறு நூறாக அல்ல.

கேமிங் என்றால் என்ன என அறிய மட்டும் அந்த பணத்தை வைத்து விளையாடினேன். அவர்கள் தந்த முதல் 500 ரூபாயை தோற்று விட்டால் - அடுத்து ஆட - மீண்டும் பணம்  கட்டி தான் ஆக வேண்டும். நல்ல வேலையாக துவக்க ஆட்டம் தோற்காமல் இருந்ததால் - பணம் சற்று அதிகம் கிடைத்தது. பின் அதனை வைத்து 100, 200 ரூபாயாக வைத்து பல்வேறு ஆட்டங்கள் ஆடிப்பார்த்தேன்.. கம்பல்சரி ஆக வாங்கிய பணம் காலி ஆனதும் மீண்டும் ஆடும் எண்ணத்தை ஒத்திப்போட்டு விட்டு - மற்ற நபர்களையும் அவர்கள் ஆடும் விதத்தையும்  மெளனமாக கவனிக்க துவங்கினேன்

சில பேர் ரூபாய் நோட்டுகளை கட்டாக கொண்டு வந்து வைத்து கொண்டு ஆடுகிறார்கள். காயின்கள் தீர்ந்தால் சிப்பந்திகளை விட்டு பணம் அனுப்பி காயின்கள் பெற்று கொள்கிறார்கள்.

பேப்பர் வைத்து ஏதேனும் குறிப்புகள் குறித்து கொண்டு - பிளான் பண்ணி ஆடும் ஆட்களும் இருக்கிறார்கள்.

ஆங்காங்கு சில பெண்களும் கூட மிக ஆர்வமாய் விளையாடுவதை காண முடிந்தது.

நம்மை போல் புதியவர்கள் தான் எல்லா போர்டுகளுக்கும் சென்று வேடிக்கை பார்க்கிறோம் ; வழக்கமாய் வருவோர் - தங்களுக்கு பிடித்த விளையாட்டிலேயே செட்டில் ஆகி விடுகிறார்கள்.

யூ டியூபில் கிடைக்கும் இந்த வீடியோவில் நாங்கள் சென்ற கேசிநோவை காணலாம்... கடைசியில் இளம் பெண்கள் ஆடுகிற மாதிரி காட்டுவது எல்லாம் சும்மா புருடா .. ஏதாவது நியூ நியர் பார்டிக்கு மட்டும் அது நடந்திருக்கலாம் ... அதனை நம்பி ஏமாறாதீர்கள் :)




கோவா செல்லும் போது நிச்சயம் கேசிநோவிற்கும் ஒரு விசிட் அடியுங்கள் .. ஒரு வித்தியாச உலகத்தை காண தவறாதீர்கள் !
*********
மாக்கீஸ் சாட்டர்டே மார்க்கெட் & இண்டோ மார்கெட் .

சனிக்கிழமை அன்று கோவாவில் தங்கினீர்கள் என்றால் அவசியம் செல்ல வேண்டியவை இந்த 2 மார்க்கெட்டுகளும்...

இரண்டுமே பாகா என்கிற ஏரியாவில் இருக்கின்றன. துணிகள், பெண்களுக்கான பேக் மற்றும் இன்ன பிற அக்ஸசரீஸ், கலை பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கும்.

விலை சர்வ சாதாரணமாக  5  மடங்கு சொல்கிறார்கள். 850 ரூபாய் சொன்ன ஒரு பொருள் விற்பவராகவே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 200 ரூபாய்க்கு எங்களிடம் தந்தார். இத்தனைக்கும் நாங்கள் ஒரு முறை கூட விலை சொல்ல வில்லை. அவர் 200 ரூபாய் சொன்ன பின் தான் அட.. வாங்கலாமே என தோன்றி, .வாங்கினோம்.

வாங்கி கொண்டு நகர்ந்ததும் மீண்டும் நினைத்து பார்த்தேன். அந்த பொருள் பிடித்திருந்து விலை கேட்டால், நாம் எவ்வளவு கேட்போம்.. 500 ரூபாய் கேட்டிருக்கலாம்... 850 சொல்லும் ஒரு பொருளை எப்படி 200 ரூபாய்க்கு கேட்பது என்று.. தலை சுற்றி விட்டது !

துணிகள் அவ்வளவு நன்றாய் இராது வாங்க வேண்டாம் என நண்பர்  கூறியிருந்தார்.அது உண்மை தான். துணிகள் பக்கம் அதிகம் நாங்கள் செல்ல வில்லை. உண்மையிலேயே கலை பொருட்கள் தான் மிக அட்ராக்டிவ் விலைக்கு கிடைக்கிறது.

மார்கெட் உள்ளே  நுழையும் போதே பீர் விற்கிறார்கள். நிறையவே உணவகங்கள்..  மாக்கீஸ் என்ற பெயரில் இருக்கும் உணவு கடையில் நல்ல கூட்டம்; நாங்கள் ஓரிரு வகை மட்டும் வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்; நன்றாக இருந்தது.

சனிக்கிழமை மட்டுமே இந்த இரு மார்கட்களும் இயங்குகின்றன. மாலை 6 மணிக்கு துவங்கும் மார்கெட் இரவு 11 அல்லது 12 மணி வரை நீடிக்கிறது ; இதை தவிரவும் புதன் கிழமை மார்க்கெட் என குறிப்பிட்ட ஒரு பீச் அருகே பகல் முழுதும் நடக்கும் மிக மார்கெட் ஒன்று மிக பிரபலம் என்று கூறினர்.

ஷாப்பிங் பிரியர்கள் .. சனிக்கிழமை இரவு கோவாவில் இருந்தால்...  டோன்ட் மிஸ்  தி பிளேஸ்  !

11 comments:

  1. தேர்தல் என்றாலே
    விசிபிலிட்டிதானே
    பப்ளிசிட்டிதானே

    தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    விரிவான விளக்கம் அருமையாக சொல்லியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மீண்டும் பதிவுலகை கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. i will definitely visit this time..thanks for the tips

    ReplyDelete
  6. மீண்டும் பதிவுலகுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்...

    ReplyDelete
  7. Welcome back sir ! Casino blog supoer, but how much you have won ?!

    ReplyDelete
  8. கரந்தை ஜெயக்குமார் சார்
    ரூபன்
    முரளிதரன்
    ராமலட்சுமி மேடம்
    பொன் சந்தர்
    செங்கதிரோன்

    நண்பர்களே : தங்கள் அன்பிற்கு நன்றி

    சுரேஷ் : மொத்தம் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விளையாடினேன். கொஞ்சம் ஜெயித்தேன். மீண்டும் விளையாடி அதனை காலி செய்த பின் - கிளம்பி விட்டேன்... :)

    ReplyDelete
  9. Happy to meet you again.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...