மாவீரன் கிட்டு: தலைப்பை கேட்டதும் என்ன தோன்றும்? இலங்கை தமிழர் போராளி கிட்டு அவர்கள் பற்றிய கதையோ என்று தானே.. அது தான் இல்லை ! இருப்பினும் இன்னும் ஒரு சமூக பிரச்சனையை தான் தொட்டுள்ளனர் !
கதை
மேல் சாதி- கீழ் சாதி என பாகுபாடு பார்க்கும் கிராமம் ஒன்று.. கீழ் சாதி மக்கள் என்று கூறி குறிப்பிட்ட சமூகத்தினர் சடலத்தை தங்கள் தெரு வழியே எடுத்து செல்ல கூடாது என்று கூறுகின்றனர்.. உயர் நீதி மன்றமே தீர்ப்பு தந்தும் அதை மதிக்க தயாராய் இல்லை சடலம் மட்டும் செல்லலாம் மற்றவர்கள் அல்ல என தூக்க கூட அனுமதிக்க வில்லை .. படத்தின் இறுதியில் ஒரு மரணம் நிகழ்கிறது.. இம்முறை அம்மக்கள் அனைவரும் செல்கின்றனர்.. எப்படி என்பது தான் திரைக் கதை !
நடிப்பு
ஏறக்குறைய 2 ஹீரோ கதை.. விஷ்ணு மற்றும் பார்த்திபன்.. இருவருமே தங்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர்.
கருப்பு சட்டை, வேஷ்டி என படம் முழுதும் ஒரே காஸ்டியூமில் வந்தாலும் ஆழமான பாத்திரத்தில் அசத்துகிறார் பார்த்திபன்.
விஷ்ணுக்கு சவாலான பாத்திரம்.. இறுதியில் இப்படி தான் நடக்க போகிறது என தெரிவதால், அவர் பாத்திரம் பெற வேண்டிய இரக்கம் கிட்டாமல் போகிறது
ஸ்ரீ திவ்யா - முழுக்க காதலுக்கு முக்கிய துவம் தரும் கதை அல்ல. இருந்தும் தனது வாய்ப்பை சரியே பயன்படுத்தியுள்ளார்.
எரிச்சல் வர வைக்கும் வில்லன் பாத்திரம் தொடர்ந்து வருகிறது.. ஹரி உத்தமனிற்கு ! ஸ்டிரியோ டைப் ஆகாமல் பார்த்து கொள்ளுதல் நலம் (தொடரியிலும் இப்படி ஒரு மோசமான பாத்திரம் தான் அவருக்கு !)
இயக்கம்
சமூக அக்கறையுள்ள படம் எடுக்க நினைத்தமைக்கு வந்தனம். கதையில் சிறு காட்சி கூட தேவையில்லை என இல்லாமல் செல்கிறது படம்.
பாம்பு கடித்த பெண்ணை மாணவர்கள் தூக்கி சென்று காப்பாற்றும் காட்சி அருமை; சாதாரண தந்தை பாத்திரம்: மகளை கொன்று விட்டு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சி .. தமிழகத்தில் நடந்த சம்பவம் தான்.. அதிர்கிறது மனது
ஏனோ இரண்டாம் பாதி - முதல் பாதியின் விறுவிறுப்பையும், ரசிப்பையும் தர தவறி விடுகிறது.
கதையின் முக்கிய விஷயம்.. தெருவினுள் சடலம் மற்றும் அதனை தூக்கி செல்ல விடாமை.. உயர் நீதி மன்ற தீர்ப்பில் சடலம் மட்டும் செல்லலாம் என உள்ளது என காரணம் காட்டி - மறுபடி தீர்ப்பு வாங்கி வாருங்கள் என்கிறார்கள். முதல் முறை சரி.. அவசரமாய் அடக்கம் செய்ய வேண்டும்.. பின் நடந்ததை சொல்லி மீண்டும் ஒரு ஆர்டர் வாங்க முடியாதா என்ன?
2 மணி நேர படம் .. 3 மணி நேரம் ஓடுவது போல் இருக்கிறது .. !
இமான் இசையில் சில பாடல்கள் இனிமை; பின்னணி இசை பொருத்தமாய் செய்துள்ளார்.
இயற்கை கொஞ்சம் சில லொகேஷன்கள் .. (அனைத்தும் தமிழகத்தில் தான் என நினைக்கிறேன் )
சூரியை ஏன் இவ்வளவு சின்ன பாத்திரத்தில் நடிக்க வைத்தனர் என தெரிய வில்லை; அவரும் அறிமுக படுத்திய இயக்குனர் என்பதால் நடித்து கொடுத்துள்ளார். மற்ற படி சினிமாவில் வராத பல முகங்கள் இயல்பாய் வந்து போகின்றனர்..
நிறைவாக
சமூக அக்கறையுள்ள படம் தான்; ஆனால் இன்று மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது fun & entertainment என்பதால், படம் ஓட/ ஹிட் ஆக சாத்திய கூறுகள் மிக குறைவு !
தியேட்டர் கார்னர்
ரொம்ப நாள் கழித்து சத்யம் தியேட்டருக்கு சென்றோம் (வேளச்சேரி அருகே வீடு என்பதால் பீனிக்ஸ் அல்லது PVR செல்வதே வழக்கம் )
சவுண்ட் சிஸ்டம், ஏசி எல்லாம் அருமை என்றாலும், சீட் இடைவெளி குறைவு - காருக்கு பார்க்கிங் 60 ரூபாயா? PVR மாலே பரவாயில்லை போலிருக்கு !
மற்றபடி மால் தவிர்த்த தியேட்டர்களில் சென்னையில் இதை விட சிறந்த தியேட்டர் இருக்கவே முடியாது !
No comments:
Post a Comment