Tuesday, November 2, 2010

தீபாவளி நினைவுகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!! 

இப்பதிவின் தலைப்பை தீபாவளி நினைவுகள் என்பதை விட வெடி கடை நினைவுகள் என சொல்லி விடலாம். எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் அப்பா மருந்து கடை வைத்திருந்தார். தீபாவளி சமயம் மட்டும் வெடி கடை வைப்போம். இதில் அண்ணன்கள் இருவர் தான் எல்லா வேலைகளும் (சிவகாசி உள்ளிட்ட பல இடங்களில்  இருந்து வெடி வாங்குவது, கடையில் அமர்ந்து வியாபாரம் பார்ப்பது) செய்வார்கள். அண்ணன்கள் கல்லூரி படித்த போது, தீபாவளி நேரம் விடுப்பில் ஒரு வாரம் வந்து அனைத்து வேலைகள் செய்வார்கள். அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற போது நான் கல்லூரியில் இருந்தேன். இப்போது வெடி கடையை பார்ப்பது என் வேலை ஆனது. 

வெடி கடை வேலை நிறைய மெனக்கெட வேண்டி இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாய் செய்வோம். 

வெடி வியாபாரம் கிட்டத்தட்ட 40 % லாபம் உள்ள தொழில். நீங்கள் வெடி வாங்கும் போது எந்த தயக்கமும் இன்றி bargain செய்யலாம். நிச்சயம் விலை குறைத்து தருவார்கள். 

பாக்ஸில் போட்டிருக்கும் விலை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக இருக்கும். இதனை பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.  ஒரு முறை கடையில் எங்களுக்கு உதவ வந்திருந்த என் நண்பன் மோகன் (அவன் பெயரும் மோகன் தான்) தந்தைக்கு எல்லா வெடியும் பாக்ஸ் ரேட்டிற்கு போட்டு ஒருவர் அனுப்பி விட, தீபாவளி அன்று வீட்டுக்கு வந்து (செல்ல) சண்டை போட்டான் நண்பன் மோகன்.

தஞ்சை அருகே அய்யம்பேட்டையில் கிடைக்கும் லட்சுமி வெடி மிக அற்புதமாய் இருக்கும். சத்தமும் அதிகம். விலையும் சிவகாசி விட குறைவு. இதனை பல வருடங்கள் நேரே சென்று வாங்கி வருவேன். பஸ்ஸில் வெடி மூட்டையுடன் பயணிப்பது ஒரு திரில் அனுபவம்.  

எங்கள் ஊரில் தீபாவளி சமயம் மைக் மூலம் ஒவ்வொரு கடைக்கும் விளம்பரம் செய்வார்கள். துணி கடை, சுவீட் கடை, வெடி கடை இப்படி அனைத்திற்கும் ஒரே இடத்திலிருந்து மைக் மூலம் விளம்பரம் செய்ய படும். எங்கள் கடையை வெடி கடை அல்ல வெடி கடல் என விளம்பரம் செய்வோம். சில நேரம் அந்த மைக்கில் எங்கள் கடைக்காக நானும் பேசியது உண்டு!!

(This photo is taken from Net -  not our shop!!)

ஒரு குறிப்பிட்ட வெடி தரையில் ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டு பின் வானத்தில் போய் டபிள் ஷாட் போல் வெடிக்கும். இதற்கு மாமியார் மருமகள் வெடி என பெயர் வைத்திருந்தோம். இதனை மைக் மூலம் விளம்பரம் செய்ய, ரொம்ப பேமஸ் ஆகி விட்டது. எல்லோரும் இதே வெடி கேட்க, பின் குறிப்பிட்ட அளவு பணத்திற்கு வெடி வாங்கினால் மட்டுமே மாமியார் மருமகள் வெடி கிடைக்கும் என புது ரூல் போட்டு சமாளிக்க வேண்டியதாயிற்று.  

தீபாவளிக்கு முதல் நாள் தவிர மற்ற நாட்கள் கடையில் அதிக கூட்டம் இருக்காது. அப்போது எங்களில் ஓரிருவர் கீழே இறங்கி வெடி வாங்குவது போல் வாங்குவோம். மக்கள் சைக்காலஜி "கூட்டம் உள்ள கடைக்கு போக வேண்டும்" என்பதே. அப்படி ஆட்கள் வந்து விட்டால் கீழே நின்றவரே மேலே போய்,  வியாபாரம் செய்வார்!! 

மொத்த வியாபாரத்தில் 90 சதவீதம் தீபாவளிக்கு முதல் நாள் தான் நடக்கும். எங்கள் ஊரை சுற்றி உள்ள கிராமத்து மனிதர்கள் அன்று வந்து வாங்குவர். அன்று மழை பெய்தாலும் கூட, மழை இல்லாத நேரத்தில் சரியாக கூட்டம் அம்மி விடும். இந்த நேரத்தில் திருடவே ஒரு கூட்டமிருக்கும். சிலர் வெடி வாங்கி விட்டு பணம் தராமல் டிமிக்கி கொடுப்பர். இதனை மட்டுமே கடையிலிருந்து ஒருவர் பார்த்து கொண்டிருக்க வேண்டும். எங்கள் கடையில் அண்ணன்கள் தவிர, என் நண்பர்கள் நந்து, மது, மோகன் ஆகியோர் வருடா வருடம் வியாபாரம் செய்ய வருவார்கள். அனைவருக்குமே வெடி எடுத்து தந்து, விலை போடுவது மிக பிடித்தமான விஷயமாக இருக்கும்.

நாங்கள் மிக அதிகமாக வெடி வாங்காமல், அந்த வருடமே காலி ஆகி விடும் அளவு தான் வாங்குவோம். இதனால் இரவு ஒன்பது மணி அளவில் கடையில் ரெண்டு மூன்று நாளாக உழைத்த நண்பர்களுக்காக, உள்ள வெடிகளில் கொஞ்சம் எடுத்து பேக் செய்ய ஆரம்பித்து விடுவேன். கத்தி கத்தி அனைவருக்கும் தொண்டை கட்டியிருக்கும். குரலே மாறி போயிருக்கும். ஆனாலும் ஏதோ பெரிய சாதனை செய்த மாதிரி ஒரு திருப்தி முகத்தில் இருக்கும் (அனைத்து வெடிகளும் விற்று விட்டதே!!)

தீபாவளி அன்று எங்கள் வீட்டில் நண்பர்கள் கூடி விடுவார்கள். வியாபாரம் செய்த போது சந்தித்த வித்யாசமான கஸ்டமர்கள், அனுபவங்கள் பற்றி பேசி சிரித்தபடி கழியும் பொழுது....அப்போது டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை.. அண்ணன்கள் மட்டும் அருகில் உள்ள தஞ்சாவுருக்கு புதிதாய் ரிலீஸ் ஆன படம் பார்க்க செல்வார்கள். எங்கள் ஊர் தியேட்டரில்  கடந்த  தீபாவளி அல்லது பொங்கலுக்கு வந்த படம் இப்போது தான் வந்திருக்கும். அதனை பார்க்க எனது நண்பர்கள் திட்டமிடுவோம்..

அது ஓர் காலம்.. !!!!

28 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள் மக்கா....

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான நினைவுகள். வியாபாரத் தந்திரங்கள் பலே பலே:))!

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான அனுபவப் பகிர்வு..! தங்கள் தீபாவளி நினைவுகள் இதுபோன்று மென்மேலும் மலரட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள் மோகன் சார்.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு...! தீபாவளி வாழ்த்துகள்...!

    ReplyDelete
  5. வெடி பதிவு அருமை. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  6. தீபாவளி வாழ்த்துக்கள் மணிஜி; தஞ்சாவூர் என்றதும் முதல் ஆளாய் வந்தீர்கள் பாருங்கள்; இதான் ஊர் பாசம் என்பது.
    **
    நன்றி ராம லக்ஷ்மி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    தமிழ் அமுதன் நன்றி தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    ராகவன் சார் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    பிரவீன் : நன்றி தீபாவளி வாழ்த்துக்கள்
    **

    ReplyDelete
  7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ....பதிவு வாசிக்கும் போது உற்சாகமாக இருந்துச்சு!!!

    ReplyDelete
  8. தீபாவளி வாழ்த்துகள்!! வெடி வாங்கியாச்சா?

    ReplyDelete
  9. விலை குறைவாக நான் சிவகாசிக்கே போய் வாங்கி வந்து விட்டேன்!

    ReplyDelete
  10. Anonymous6:30:00 AM

    சுவாரசியமான பழைய நினைவுகள்...
    உங்களுக்கும் உங்கள் வீட்டில் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  11. அப்போது எங்களில் ஓரிருவர் கீழே இறங்கி வெடி வாங்குவது போல் வாங்குவோம். மக்கள் சைக்காலஜி "கூட்டம் உள்ள கடைக்கு போக வேண்டும்" என்பதே.

    அருமையான யுக்தி..

    முதல் நாள் கூட்டம் அப்புமே, அதான் சிறப்பு. இங்கே சென்னையில் அந்த மாதிரி ரோடு கடை, முதல் நாள் கூட்டம் இல்லாமால் ரொம்பவே ஏமாந்தேன்.

    ஊரு ஊரு தான்.

    தீபாவளி வாழ்த்துக்கள் மோகன் ஜி

    ReplyDelete
  12. தீபாவளி வாழ்த்துகள் ஜி :))

    ReplyDelete
  13. தீபாவளி வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  14. இனிய தீபாவளி நினைவுகள். எனக்கும் வெடி விற்ற அனுபவங்கள் உண்டு, நண்பரின் கடையில்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அதிலும் குறிப்பாக குக்கிராமங்களில் இருந்து வந்து தீபாவளி கொள்முதல் (purchase) செய்வார்களே, அப்போது அவர்களுடன் வரும் குழந்தைகளும், பெண்மணிகளும் தங்களுக்கு பட்டாசு மற்றும் புது துணிமணிகள் கிடைத்ததும் அவர்களின் முகத்தில் தெரியும் ஆனந்தம் இருக்கே... அது நமக்கு கோடி ருபாய் லாட்டரியில் விழுந்தாலும் கிடைக்காது.

    அதே போல் சில நூறு ரூபாய்களை மட்டும் வைத்துக்கொண்டு அதை திரும்பத் திரும்ப எண்ணிக்க கொண்டிருக்கும் வீட்டின் ஆண்கள் முகத்தையும் பார்க்க வேண்டுமே. அது ஒரு தனி அனுபவம்.

    ஆமாம். அம்சவல்லி தியேட்டரில் போய் படம் பார்த்த அனுபவம் உண்டா?

    ReplyDelete
  16. கனாக்காலம் :)

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. //அப்போது டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லை.//

    நாம் நினைத்தால், இப்போதும் அவைகள் இல்லாமல் செய்யலாம், டி.வி யை அணைத்துவிட்டு

    //எங்கள் ஊர் தியேட்டரில் கடந்த தீபாவளி அல்லது பொங்கலுக்கு வந்த படம் இப்போது தான் வந்திருக்கும்.//

    Same Blood.

    ReplyDelete
  18. ம்ம்ம் அது ஓர் காலம்.. !!!..

    இனி அதெல்லாம் ஒரு கனாக்காலம், இல்லையா மோகன் ஜீ, எனக்கும் தீபாவளி பற்றிய ரசனையான நினைவுகள் உண்டு, நம்ம கடைபக்கம் வாங்க. :-)

    ReplyDelete
  19. சித்ரா: அப்படியா? நன்றி தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    டாக்டர் சார் : நன்றி வெடி வாங்கியாச்சு; தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    நன்றி பாலாஜி சரவணா; தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    ஆம் கணேஷ்; உண்மை தான்; சென்னையில் நாம் பெற்றவை ஒரு புறம் இருந்தாலும் இழந்தவையும் உண்டு
    **

    ReplyDelete
  20. ஷங்கர் (ஹீரோ) நன்றிஜி : தீபாவளி வாழ்த்துக்கள் ஜி
    **
    நன்றி உலகநாதன். தங்களுக்கும் குடுமபத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    வெங்கட்: அப்படியா? சுவாரசியமான அனுபவமாய் இருந்திருக்குமே; நன்றி தங்களுக்கும் குடுமபத்தார்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
    **
    ஆதி மனிதன்: அம்சவல்லி தியேட்டர் பற்றி சொல்லி பழைய நினைவுகளை கிளறிடீங்க. நன்றி
    **

    ReplyDelete
  21. மாதவி: சரியா சொன்னீங்க நன்றி Happy Diwali!
    **
    வாங்க மாதவன்; நன்றி !இப்போதெல்லாம் குழந்தையுடன் வெடி வெடிப்பதிலும் நண்பர்கள் வீடுகளுக்கு sweets தருவதிலும் பெரும்பாலான நேரம் கழியும்

    ReplyDelete
  22. நன்றி முரளி; தங்கள் பதிவுகளை வாசித்து கொண்டு தான் இருக்கிறேன். பின்னோட்டம் இடலை அவ்ளோ தான்

    ReplyDelete
  23. நல்ல ஒலிப் பதிவு!

    ReplyDelete
  24. என்ன சார்,பள்ளிக் காலத்து தீபாவளியை கண்முன் கொண்டுவந்து நிறுத்திட்டீங்க. நான்தான் கொஞ்சம் லேட்.

    உங்களுக்கும் குடும்பத்திற்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நன்றி ஜனா சார் , அமைதி அப்பா & கலா நேசன்

    ReplyDelete
  27. உங்களது தீபாவளி நினைவுகள் பதிவு மிகவும் அருமை. இந்த பதிவு என்னுடைய பழைய நினைவை அசைபோட வைத்தது. கல்வி நிமித்தமாக அயல் நாடு வந்தபிறகு அந்த நினைவுகளே என்னை ஆற்றுபடுதுகின்றன.

    மேலும் உங்களது உளவியல் பாங்கான பதிவுகள் மிகவும் பயனுள்ள பதிவு. உங்களது சொந்த ஊர் நீடாமங்கலம் என்று அறிந்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. (காரணம் எனது சொந்த ஊர் அம்மாபேட்டை.

    ReplyDelete
  28. பாலாஜி தங்கள் பின்னூட்டம் கண்டு மிக மகிழ்ச்சி. அம்மாபேட்டை உங்கள் ஊரா? அட!! உங்கள் மெயில் முகவரி தெரியாததால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் எனது இந்த பின்னூட்டம் பார்க்க நேர்ந்தால் எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் (snehamohankumar@yahoo.co.in)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...