Thursday, March 31, 2011

கிரிக்கெட் கேரக்டர்கள்: ராஜு & பட்டப்பா

தொடர்ந்து கிரிக்கெட் மேட்ச்களே எழுதி வந்ததால், சற்று மாறாக இம்முறை எங்களுடன் விளையாடிய இரு சுவாரஸ்ய கேரக்டர்கள்:

ராஜு 

ராஜு எங்கள் ஊர் கிரிக்கெட் டீமில் மிக முக்கிய பவுலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். எங்கள் கிரவண்டுக்கு அருகிலேயே இருக்கும் காவேரி தியேட்டரில் இடைவேளையின் போது முறுக்கு, கடலை மிட்டாய் விற்பான்.

ராஜு பத்து பன்னிரண்டு அடிகள் தான் ஓடி வந்து வீசுவான். ஆனால் பந்து மிக வேகமாக சரியாக விக்கெட் நோக்கி வரும். எந்த பந்தை தவற விட்டாலும் நிச்சயம் க்ளீன் பவுல்ட் தான்.

எங்கள் கிரவுண்டின் ஆப் மற்றும் லெக் சைட் இரண்டிலுமே நாங்கள் அடித்து ஆடுவதில் சிரமம் இருந்தது. வலப்பக்கம் ஒரு குளம் இருக்கும். இடப்பக்கமோ அரசு ஆஸ்பத்திரி. வலப்பக்கம் அடித்தாலாவது குளத்திலிருந்து போய் எடுத்து வந்து விடலாம். இடப்பக்கம் எனில் ஆஸ்பத்திரி ஆயிற்றே!  முடிந்த வரை இடப்பக்கம் ஷாட் அடிக்காமல் தான் ஆடுவோம். நான்கு மற்றும் ஆறு ரன்கள் நேரே ( ஸ்டிரைட் ஷாட்) அடித்தால் தான் உண்டு. இதனால் எங்கள் ஊரில் பலரும் லெக் சைடில் சற்றே வீக் தான். இதை அறிந்த ராஜு மிக சரியாக பந்தை காலுக்கு அருகே இறக்குவான். பந்து காலில் படாமல் காலை நகர்த்தினால் ஸ்டம்ப் எகிறும்.

ஒரு முறை ராஜு போட்ட பந்து என் காலை நன்கு பதம் பார்த்து விட்டது. நாங்கள் ஆடுவது கார்க் பந்து. கல் போல இருக்கும். கால் நன்கு வீங்கி விட்டது. தஞ்சை சென்று டாக்டரிடம் காட்ட,  ஆபரேஷன் செய்யணும் என்று கூறி விட்டார் ! எங்கள் ஊரில் உள்ள பழனி செல்வம் என்ற அருமையான டாக்டர் மிக சாதாரணமாக வீக்கத்தை முழுவதும் கீறி எடுத்து, கட்டு போட்டு சரி செய்து என் வேதனையை முடித்தார். " ஆபரேஷன்...ஆயிரக்கணக்கில் செலவு" என பயந்த எங்களுக்கு, பத்து ரூபாயில், ஐந்து நிமிடத்தில் வைத்தியம் முடிந்து விட்டது ! இன்னமும் அந்த பெரிய தழும்பு ராஜுவையும், பழனி செல்வம் டாக்டரையும் நினைவு படுத்தும் விதமாய் என்னுடன் உள்ளது.

எங்கள் ஊரில் சரியான மைதானம் இல்லாததால் அம்மாபேட்டை அல்லது மன்னார்குடி சென்று தான் மேட்ச் ஆடுவோம். மேட்ச் விளையாட பேருந்து அல்லது ரயில் என எதில் சென்றாலும், செல்லும் பதினோரு பேரில் நான்கைந்து பேர் தான் டிக்கெட் எடுப்பார்கள். மற்றவர்கள் ஓசி தான் !! பஸ் என்றாலாவது சற்று மதித்து,   நான்கைந்து பேர் டிக்கெட் வாங்குவர். ரயில் எனில் சுத்த மோசம். என்னை போன்ற ஒரு சில பயந்தாங்கொள்ளி தான் டிக்கெட் எடுப்பார்கள். பெரும்பாலான நண்பர்கள் எடுக்க மாட்டார்கள். ரயில் என்பது அரசு நமக்காக விட்ட இலவச வாகனம் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது.

ஒரு முறை ரயிலில் டிக்கெட் செக்கர் வந்து விட்டார். வழக்கமாய் நாம் செல்லும் ரயில்களில் உள்ளது போல் ஒரு கம்பார்ட்மென்ட்டிலிருந்து அடுத்ததற்கு நேரே உள் வழியே செல்ல முடியாது. டிக்கெட் எடுக்காத ராஜு அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு, ஓடும் ரயிலின் வெளிப்புறம் வழியாக கம்பியை பிடித்தவாறே ஊர்ந்து , ஊர்ந்து சென்றான். இது பெரிய ஹீரோயிச வேலை போல் நாங்கள் ஆச்சரியமாக பார்த்தோம்.

மிக ஏழ்மையில் பிறந்த, முறுக்கு விற்ற, ரயிலில் டிக்கெட் எடுக்காத ராஜு இப்போது ?? போலிசாக உள்ளான் !!

பட்டப்பா

பட்டப்பா ஒரு சுவாரஸ்யமான மனிதர். எங்களை விட மிக சீனியர். எங்கள் அண்ணன் செட். ஒல்லியாக உயரமாக இருப்பார். வெள்ளை நிறம். பார்ப்பதற்கு கோபக்காரர் போல் தெரியும். பவுலிங் போடும் போது முகத்தை மிகவும் மாற்றி கொண்டு, பல்லை கடித்தவாறு பயமுறுத்துவது போல் வந்து வீசுவார். பார்க்கும் எங்களுக்கு குச்சி எகிறும் அல்லது பாட்ஸ்மென் செத்தான் என்று தோன்றும். ஆனால் சீனியர் டீமில் உள்ள எல்லாரும் அவரை மிக சாதாரணமாக ஆடுவார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

பட்டப்பா மிலிடரியில் வேலை பார்த்தார். பின் அதிலிருந்து சொல்லாமலே வந்து விட்டார். இப்படி பாதியில் வர கூடாது என்றும், அவ்வாறு வந்ததால், அவரை கைது கூட செய்யலாம் என்றும் பேசி கொள்வார்கள். இது பற்றி கவலை படாமல் பட்டப்பா கிரிக்கெட் ஆடி வந்தார். அப்போதெல்லாம் சொல்லுவார். " மெட்ராஸ், டில்லி மாதிரி பெரிய ஊர்ல உள்ளவங்க நல்லா பேட்டிங் பண்ணுவானுங்க. ஆனா நம்ம மாதிரி இன்டீரியர் ஊர்லதான் நல்ல பவுலர்கள் கிடைப்பாங்க ! " யோசித்து பார்த்தால் இது சரி என்றே தோன்றுகிறது.

மிலிடரியிலிருந்து வந்த பின் பட்டப்பா எந்த வேலைக்கும் போகாமல் ஊரில் சும்மாவே சுற்றி வந்தார். " சும்மா இருப்பது" ஒரு மனிதனை எப்படியெல்லாம் அழிக்கும் என கண் முன்னே பார்த்தோம். குடி பழக்கம் வந்தது. மிக டீசன்ட் ஆக அறியப்பட்ட மனிதர், தெருக்களில் சும்மாவே சுற்றி வருவதோடு, யாரிடமாவது அனாவசியமாய் சண்டை வளர்த்தார். அனைவரும் அவரை தவிர்க்க ஆரம்பித்தனர். அவருக்கு மன நிலை சரியில்லை என்றும், யார் யாரிடம் என்னென்ன பிரச்சனை செய்தார் என்றும் பல விதமாய் கதைகள்..

எங்கள் மருந்து கடையில் நான் இருக்கும் போது பட்டப்பா ரோடில் சென்றால், மேலே ஏறி வந்து என்னிடம் பேசி விட கூடாதே என்று பயமாய் இருக்கும். சில நேரம் நான் இருக்கும் போது கடைக்கு வந்து சம்பந்தமில்லாமல் பேசி, சத்தமாய் சிரித்து செல்வார். சிறிது சிறிதாக ஒரு மனிதன் வீழ்வதை நாங்கள் பார்த்து கொண்டிருந்தோம்.

கல்லூரியில் படித்த போது, விடுமுறையில் ஊருக்கு சென்றேன். என் நண்பன் மது என்னை பார்த்ததும் முதலில் சொன்னான் " டேய் பட்டப்பா இறந்திட்டாருடா !!"

மனது மிக வலித்தது. செய்தியை உள் வாங்க ரொம்ப நேரம் ஆனது. குடியாலும், மன நிலை பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவருக்கு முப்பத்தைந்து வயது இருந்திருக்கலாம் ! அவரை பார்க்கும் போதெல்லாம் பயந்த நாங்கள், அவர் மரணத்திற்காக ஏன் மிகவும் வருந்தினோம் ? விடை தெரிய வில்லை !!

                                                                                                      (கிரிக்கெட் சீரீஸ் முற்றும்...)

11 comments:

  1. பட்டப்பா இறந்திட்டாரா??
    நான் காலூரிக்கு போகும் போது ராஜா கடை வாசலில் சிகரெட்டுக்கு வந்து நிற்பார்! பெரும்பாலும் காலையிலேயே போதையில் இருப்பது போலத் தான் தோன்றும்..
    உங்களுக்கு ஹெட்மாஸ்டர் கண்ணனை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ;-)))

    ReplyDelete
  2. //எங்கள் ஊரில் உள்ள பழனி செல்வம் என்ற அருமையான டாக்டர் மிக சாதாரணமாக வீக்கத்தை முழுவதும் கீறி எடுத்து, //

    இதுவும் ஒரு வகை அறுவை சிகிச்சை (ஆபரேஷன்) தானே ?

    //டிக்கெட் எடுக்காத ராஜு அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு, ஓடும் ரயிலின் வெளிப்புறம் வழியாக கம்பியை பிடித்தவாறே ஊர்ந்து , ஊர்ந்து சென்றான். //

    பூண்டி காலேஜில படிச்சப்ப.. நண்பர்கள் இப்படி ரயிலில் செல்வதை பார்த்திருக்கிறேன். அவர்களுகேற்றவாறே 'செல்வம்' எனும் இளவயது 'பயணச் சீட்டு பரிசோதகர்' அதேபோல சென்று பல ஓசி டிக்கெட்டுகளை பிடித்து அபராதம் விதித்து ரயில்வேத் துறைக்கு வருமானம் செய்திருக்கிறார்.

    // (கிரிக்கெட் சீரீஸ் முற்றும்...) //
    செல்லாது.. செல்லாது..
    ஃபைனலே இன்னும் வரலை(ரெண்டு நாலு இருக்கே) .. அதுக்குள்ள முற்றுமா ?
    கற்பனையும் கலந்து எழுதினா... கிரிக்கெட் ஒரு முடிவு பெறாத தொடர்தானே ?

    ReplyDelete
  3. ரெண்டு நாலு இருக்கே = ரெண்டு நாளு இருக்கே

    (போற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் கூகிள் ட்ரான்ஸ்லிடறேடிற்கே )

    ReplyDelete
  4. பாவமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  5. நன்றாக விவரித்துள்ளீர்கள் இருவரைப் பற்றியும்.

    // " சும்மா இருப்பது" ஒரு மனிதனை எப்படியெல்லாம் அழிக்கும்//

    பாடமாகவும் சித்ரா சொன்னது போல் பாவமாகவும்.

    ReplyDelete
  6. பட்டப்பா – கேரக்டர் மனதைப் படுத்தியது!!!! கிரிக்கெட் சீரிஸ் அதற்குள்ளாகவே முடிந்ததா!! :(

    ReplyDelete
  7. ஒரே மாதிரியான மனிதர்கள்தான் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள் போல மோகன். இருவரையுமே பார்த்தது போலான ஒரு நெருக்கம். அருமையாய் மனசில் ஒட்டும்படி எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. irappu anaivaraium paathikkum sampavam..thanks for sharing.

    ReplyDelete
  9. ஆம் RVS பட்டப்பா இறந்து விட்டார். நீங்கள் சொல்லும் ராஜா என்னுடன் படித்த நண்பன் தான்
    **
    மாதவா:
    //இதுவும் ஒரு வகை அறுவை சிகிச்சை (ஆபரேஷன்) தானே ?//
    ஆம். நன்றி
    **
    சித்ரா: நன்றி
    **
    மனோ : நன்றி
    **

    ReplyDelete
  10. ராம லட்சுமி: நன்றி
    **
    நன்றி வெங்கட். உலக கோப்பை முடிகிற நேரம் முடித்து விடனும் தானே?
    **
    பா.ராஜாராம் said...

    //ஒரே மாதிரியான மனிதர்கள்தான் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள் //

    அருமையாய் சொன்னீர்கள் ராஜா ராம் நன்றி
    **
    நன்றி மதுரை சரவணன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...