Tuesday, March 29, 2011

வைரமுத்துவின் "1000 பாடல்கள்" விமர்சனம்

28.3.2011 தேதியிட்ட உயிரோசை இதழில் பிரசுரமான நூல் விமர்சனம்...
****
விஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள "ஆயிரம் பாடல்கள்" தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். 1200 பக்கங்களில் மிக கனமான ஒரு தொகுப்பு!

நிழல்கள் துவங்கி எந்திரன் வரை என அட்டையில் சொல்லப்பட்டாலும், அதையும் தாண்டி இன்னும் வெளி வராத களவாடிய பொழுதுகள் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட திரை இசை பாடல்கள் இந்த தொகுப்பில் உள்ளன.

கலைஞர் முன்னுரையில் பழைய கவிஞர்களில் சிலரை பற்றி நிறையவே சொல்லி விட்டு, பின் வைரமுத்துவை புகழ்கிறார். இதனையடுத்து வைரமுத்து தன் முன்னுரையில் இளைய ராஜாவுடன் வந்த பிரிவிற்கு தன் அறியாமையே காரணம் என்கிறார் " அதிகப்படியான சுய மரியாதையும் ஒரு வித அறியாமையே !!" தொகுப்பின் இறுதியில் பொருளடக்கம் (படங்கள்/ பாடல்கள் வாரியாக) அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு படத்தின் இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் பெயரும் பாடல்களுடன் சேர்த்து பதிவு செய்தது நம்மை மலரும் நினைவுகளுக்கு இட்டு செல்கிறது.

முதல் பக்கத்திலும் பின் பாடல்கள் இடையேயும் வைரமுத்து வாங்கிய ஐந்து தேசிய விருதுகளும் குறிப்பிடபட்டுள்ளது. தமிழன் என்கிற முறையில் நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம். எனினும் முதலாவது விருது " அந்த நிலாவை தான் நான் கையிலே பிடிச்சேன்" பாடலுக்கு என்பது ஆச்சரியப்படுத்துகிறது. அந்த பாடல் இடம் பெற்ற முதல் மரியாதையிலேயே " பூங்காத்து திரும்புமா?" உள்ளிட்ட பல அர்த்தமுள்ள பாடல்கள் இருந்தன. அதே வருடம் வந்த சிந்து பைரவியில் வைரமுத்து எழுதிய எத்தனை பாடல்கள் அற்புதமானவை! இவற்றை விடுத்து, விடலை காதல் கிலுகிலுப்பை சொன்ன "அந்த நிலாவை தான்" பாடல் முதல் விருதை பெற்று தந்துள்ளது ! இரண்டாவது மற்றும் மூன்றாம் விருதுகள் "சின்ன சின்ன ஆசை" (ரோஜா) மற்றும் போறாளே பொன்னுதாயி (கருத்தம்மா) ஆகியவற்றிற்காக கிடைத்துள்ளது. நான்காவது விருது சங்கமம் படத்தில் வரும் " முதல் முறை கிள்ளி பார்த்தேன்" பாடலுக்கு !! ம்ம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! ஐந்தாவது முறை " தெய்வம் தந்த பூவே" (கன்னத்தில் முத்தமிட்டால்") என்ற அற்புதமான பாட்டிற்காக !!

ஒவ்வொரு பாடலிலும் அந்த பாடல் பற்றியோ, அது எழுதும் போது நிகழ்ந்த சம்பவமோ மிக சுருக்கமாய் சொல்லப்பட்டுள்ளது.

இவர் எழுதிய முதல் பாடல் "இது ஒரு பொன் மாலை பொழுது" என நாம் அறிந்தாலும், இவர் எழுதி வெளி வந்த முதல் பாடல் ரஜினி நடித்த காளியில் "பத்ரகாளி" என்கிற தகவல் ஆச்சரியம் தருகிறது. நாத்திக வாதியான வைரமுத்து எழுதி வெளியான முதல் பாடல் கடவுள் பற்றி !!

மணிரத்னத்துடன் இவருக்கு உள்ள நெருக்கமும், புரிதலும் பல சம்பவங்களில் தெரிய வருகிறது. ஒரு முறை சாதாரணமாய் பேசி கொண்டிருக்கும் போது " காதலுக்கு நிறமுண்டா?" என்று மணிரத்னம் கேட்க அதிலிருந்து பிறந்த பாடல் தான் "பச்சை நிறமே..பச்சை நிறமே" என்கிறார். பம்பாய் படத்தில் "பூவுக்கென்ன பூட்டு" பாடல் எழுதிய சம்பவமும் சுவாரஸ்யம். வேறு படத்திற்கு பாடல் எழுத அவர் வழக்கமாய் செல்லும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் இருக்கும் போது மணி ரத்னம் அங்கேயே வந்து அவரை பிடித்து எழுதிய பாடலை நிறுத்தி விட்டு நடுவில் எழுதி வாங்கி போனதாக சொல்கிறார்.
மிக குறைந்த நேரத்தில் (எட்டே நிமிடங்கள்) எழுதப்பட்ட பாடல் பாஷா படத்தில் எழுதப்பட்ட " ரா ரா ராமையா" !என்கிறார். அடேங்கப்பா. ..அந்த பாடல் இன்றைக்கும் பலராலும் எளிமையான தத்துவங்களுக்காக நினைவு கூறப்படுகிறது. அந்த பாடலை எட்டு நிமிடத்தில் எழுதினர் என்பது ஆச்சரியம் தருகிறது.

மனைவி ஊருக்கு போய் விட்டால், அவள் புடவையை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தால் தான் தூக்கம் வருகிறது என்று சொன்னாராம் ஒரு நண்பர். அதனை வைத்தே " சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" பாடல் எழுதினாராம் !

திருடா திருடா படத்தில் இடம் பெற்ற " ராசாத்தி என் உசுரு என்னுதில்ல" பாடல் கேட்டு விட்டு " இந்த பாடல் எனக்கல்லவா எழுதபட்டிருக்க வேண்டும்" என செல்ல சண்டை போட்டாராம் பாரதி ராஜா !

வைரமுத்துவின் கவிதை தொகுப்பிலிருந்த பல பாடல்கள் சினிமாவில் எடுத்து கையாள பட்டுள்ளது. குறிப்பாக " யாக்கை திரி" "மூங்கில் காடுகளே" போன்றவை கவிதையாக இருந்து பின் பாடலானவை.

1980-ல் நிழல்களில் துவங்கி 1987-ல் காதல் பரிசு வரை இளையராஜா இசையில் எழுதி உள்ளார். இளையராஜா வை பிரிந்து, ரகுமான் 1992-ல் வரும் வரை இவர் நிலை சற்று சிரமமாகவே இருந்திருப்பதை உணர முடிகிறது. அவரே முன்னுரையில் இந்த காலத்தை பற்றி " என் பாடல்கள் இந்த காலத்தில் சரியான நபர் இன்றி தவித்தது" என்கிறார் (ம்ம் அந்த காலத்தில் அவரை ஆதரித்தவர் சந்திரபோஸ். அன்புள்ள அப்பா வெளிவந்த போது, வைரமுத்து " தமிழின் சிறந்த இசை அமைப்பாளர் என்றால் அது சந்திரபோஸ் தான்" என்கிற ரீதியில் பேசியதை அவர் மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை).

தான் இயக்கிய அனைத்து படங்களிலும் தன்னை பயன்படுத்திய ஒரே இயக்குனர் என "சரண்" பற்றி கூறுகிறார். வைரமுத்து கொடைக்கானலிலும், ரகுமான் லண்டனிலும் இருந்தவாறு தொலை பேசியிலேயே எழுதபட்ட பாடல் "பாபா கிச்சு கிச்சு தான்" என நினைவு கூறுகிறார்.

இலங்கை தமிழர் படுகொலை பற்றி "விடை கொடு எங்கள் நாடே" மற்றும் "வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே" என கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இரு பாடல்கள் எழுதியது பற்றி நெகிழ்வாய் பகிர்கிறார்.

பாடல் வரிகளில் எளிமை தான் நம்மை மிகவும் கவர்கிறது. பம்பாய் படத்தில் "கண்ணாளனே" பாடலில் "உன்னை பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்".. எப்போது கேட்டாலும் நான் வியக்கும் வரி இது. உருதுவை வீட்டில் பேசும் அந்த முஸ்லீம் பெண் காதலை எப்படி சொல்கிறாள்.. இந்த வரியில்..!! கதையின் ஆணி வேரையே இந்த வரியில் தொட்டு விடுகிறார் வைரமுத்து.

பாடல்களில் மிக பெரிய பாடலாக " சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" இருக்க, பல பாடல்கள் மிக சிறிய பாடல்களாக புத்தகத்தில் பார்க்கும் போது தெரிகிறது. உதாரணமாய் மிக புகழ் பெற்ற "மேகமே மேகமே " பாடல் (பாலைவனச்சோலை) பத்து வரிகளும், 36 வார்த்தைகளும் மட்டுமே கொண்டுள்ளது. இது போல பல பாடல்களும் பத்து வரி பாடல்களாக உள்ளன. இசை உடன் கேட்கும் போது நமக்கு அது பெரிய பாடலாக தெரிகிறது போலும்.

மேலும் தொலை காட்சி சீரியல்களுக்கு இவர் எழுதிய பாடல்களும், தனி தொகுப்பிற்கு இவர் எழுதிய பாடல்களும் கூட இந்த தொகுப்பில் உள்ளது.

நிற்க. முக்கியமான சமாச்சாரத்திற்கு வருவோம். புத்தக விலை என்ன தெரியுமா? 600 ரூபாய் ! நீங்கள் தீவிர சினிமா பாடல்கள் ரசிகனாகவோ அல்லது வைரமுத்து பிரியராகவோ இருந்தாலொழிய இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது சற்று சிரமமே. இந்த இரண்டு கேட்டகரியில் நீங்கள் வராவிடினும், இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாம்.... உங்கள் நண்பர்கள் யாரும் அதை வாங்கியிருந்தால்..

நான் அப்படி தான் வாசித்தேன். !!

19 comments:

  1. அழகாக தொகுத்திருக்கீங்க.

    படிக்கனும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. முக்கியமான சமாச்சாரத்திற்கு வருவோம். புத்தக விலை என்ன தெரியுமா? 600 ரூபாய் ! நீங்கள் தீவிர சினிமா பாடல்கள் ரசிகனாகவோ அல்லது வைரமுத்து பிரியராகவோ இருந்தாலொழிய இவ்வளவு விலை கொடுத்து வாங்குவது சற்று சிரமமே. இந்த இரண்டு கேட்டகரியில் நீங்கள் வராவிடினும், இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாம்.... உங்கள் நண்பர்கள் யாரும் அதை வாங்கியிருந்தால்..

    ......புத்தக விமர்சனம் நல்லா இருக்குது.... அந்த புத்தகத்தை "எப்படி" வாங்கி படிக்க வேண்டும் என்ற குறிப்பும் நல்லா இருக்குது. :-)))

    ReplyDelete
  3. நானும் உங்க ப்ரண்டுதான்! :)))

    ReplyDelete
  4. ஐ ஆம் சாரி.. எனக்கு கவிதையில் ஆர்வமில்லை..

    ReplyDelete
  5. //"உன்னை பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்".. //
    பாடல்களே அப்படித்தான். கேட்கும்போது நாம் பெரும்பாலும் இசையைதான் ரசிக்கிறோம். பாடலை படித்து/பாடி பார்த்தால் மட்டுமே வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.

    நான் வைரமுத்துவை குறைவாக கூறவில்லை. இதே போல் கண்ணதாசனின் 1000 பாடல்கள் பற்றிய தொகுப்பு வந்திருந்தால் அதை விமர்சிக்க உங்களுக்கு 1000 பக்கங்கள் தேவைபட்டிருக்கும். எனக்கு தெரிந்து கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் வரிக்குள்ளும் ஒரு அர்த்தம் ஒழிந்து/பிணைந்து கொண்டிருக்கும்.

    ReplyDelete
  6. புத்தகச் சாறு நன்றாக இருந்தது மோகன். உங்க நண்பரோட அட்ரெஸ் வேணும். ப்ளீஸ். ;-)))

    ReplyDelete
  7. @Madhavan Srinivasagopalan said...
    //ஐ ஆம் சாரி.. எனக்கு கவிதையில் ஆர்வமில்லை..//


    ஹூஹூம் ...மாதவன் நீங்க எனக்காக ஒரு கவிதை எழுதியே ஆக வேண்டும்.

    ReplyDelete
  8. சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  9. காசு சம்பாதிக்க தெரிஞ்ச கவிஞர். தன் பாடல்கள் எல்லோரையும் சென்றடையணும்னு உண்மையான அக்கறை இருந்தா நூறு ரூபாய்க்கு வெளியிட்டிருக்கலாம். "தன் பாடல்களை படிச்சு ரசிகர்களுக்கு ஒண்ணும் ஆக போறதில்ல. அதனால் யாரும் வாங்கி படிக்க வேண்டாம் "னு நினைச்சு தான் பெரிய விலை வைச்சிட்டார் போலும்.

    ReplyDelete
  10. விமர்சனம் அமர்க்களம்...

    ReplyDelete
  11. அவரது கவிதை தொகுப்பில் இருந்து இசைக்கப்பட்ட பாடலில் அமர்க்களம் படத்தில் வந்த "மேகங்கள் என்னைத் தொட்டு ..." பாடலும் ஒன்று. அருமையான பகிர்வு..

    ReplyDelete
  12. சினிமாவில் வரும் முன்பே 'சின்னச் சின்ன ஆசை'யும் 'கண்ணுக்கு மை அழகு' பாடலையும் பொதிகை டிவியில் (அஃப்கோர்ஸ் வேறு மெட்டில்) கேட்டதாக நினைவு!

    ReplyDelete
  13. Oh! Tamil lovers!! Kindly do not attempt to compare Vairamuthu with Kannadasan.
    The two geniuses are unique in their own way.
    Both are boons to tamil literature and, therefore, to the community.

    ReplyDelete
  14. பல வகைகளில் வைரமுத்துவை எனக்கு பிடிக்கும்.

    குடும்பத்தினரை எதிர்த்து காதலித்து ஜெயித்தது.

    திரைப்படத்துறையில் இருந்த போதிலும் சுய ஒழுக்கத்தில் கவனமாக இருந்தது.

    திரைப்பட மற்றவர்களைப் போல் இல்லாமல் சம்பாரித்தவைகளை கவனமாக பாதுகாத்து அசையும் அசையா சொத்துக்களாக மாற்றியது.

    குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது.

    இதை விட இவரின் மூத்த மகன் திருமணத்தில் கலந்து கொண்ட விஜபிகளைப் பார்த்து அரசியல்வாதிகளே மிரண்டு போகும் அளவிற்கு எல்லாதரப்பிலும் தன் ஆளுமையை கவனமாக கையாண்டு வைத்திருந்த விதம்.

    பாராட்டக்கூடிய மனிதர்.

    ReplyDelete
  15. நன்றி வித்யா.
    **
    நன்றி சித்ரா
    **
    ஷங்கர்: :))
    **
    மாதவா: ரைட்டு
    **
    ஆதி மனிதன்: நோ கமெண்ட்ஸ்
    **
    நன்றி RVS தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் (நண்பர் தஞ்சையில் உள்ளாரே!! தஞ்சை சென்ற போது படித்தது )

    ReplyDelete
  16. நன்றி ராமலட்சுமி
    **
    நன்றி ஓசை
    **
    நாஞ்சில் மனோ நன்றி
    **
    நாக சுப்ரமணியம் நன்றி
    **
    மாதவி : நன்றி மேடம்
    **
    ராஜா: நன்றி
    **
    விரிவான அலசலுக்கு நன்றி ஜோதிஜி

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம் சார்.

    //இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாம்.... உங்கள் நண்பர்கள் யாரும் அதை வாங்கியிருந்தால்..//

    புத்தகத்தைப் படிக்க முயற்சி செய்கிறேன். எனக்கும் ஒரு நண்பர் கிடைக்காமலா போய்விடுவார்:-)))))?!

    ReplyDelete
  18. //திரைப்படத்துறையில் இருந்த போதிலும் சுய ஒழுக்கத்தில் கவனமாக இருந்தது//
    வைரமுத்து அவர்கள் குறித்து மிகச்சரியான விமரிசனம்.மற்றபடி அவர் ஆளுங்கட்சியோடு ஜால்ரா போடுவதெல்லாம் - என்ன நிர்பந்தmo? யாருக்குத் தெரியும்- இன்று வரை அவர் சுய ஒழுக்கம் குறித்து யாரும் தவறாக சொல்லிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது!! இந்த புத்தகம் பொறுத்த அளவில் அது ஒரு "பெரிய சினிமா பாட்டு புக்"- அவ்வளவே!!!
    இங்கும் வருக!!

    sagamanithan.blogspot.com

    ReplyDelete
  19. இயக்குனர் சரண், மனோஜ் நடித்த அவரது அல்லி அர்ஜுனா படத்தில் அறிவுமதியின் ஊனை ஊனை உருக்குறானே என்ற பாடலை பயன்படுத்தியிருக்கிறர். இதை வைரமுத்துவும், இயக்குனர் சரணும் தொடர்ந்து புறக்கணித்து - மறைத்தும் வருகிறார்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...