முன்னுரையில் திலகவதி வண்ணநிலவன் எழுத்துகள் பற்றி அழகாக சொல்லி செல்கிறார். பின் திடீரென தமிழ் இலக்கிய சூழலில் நிலவும் அரசியலுக்குள் நுழைந்து எக்கச்சக்கமாய் சொல்கிறார். (ஏனோ?)
நான் இதுவரை வாசித்த மிக சிறந்த சிறுகதைகளில் வண்ணநிலவனின் "உள்ளும் புறமும்" ஒன்று. இந்தியா டுடேயில் வெளி வந்த இந்த சிறுகதை வாசித்து 15 வருடங்கள் ஆகியும் அது ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் உள்ளது. இத்தொகுப்பில் இடம் பெறாத இந்த கதை பற்றி தனி பதிவே எழுதலாம்.
இந்த நூலில் என்னை மிக கவர்ந்தது முதல் மற்றும் கடைசி கதைகள். முதல் கதையான "மயான காண்டம்" செல்லையா என்ற வெட்டியான் பற்றியது. ஊரில் சாவு விழுந்தால் தான் இவன் வீட்டில் அடுப்பு எரியும். ஒரு வாரமாக சாவு விழாமல் இவன் குடும்பம் படும் வேதனை, மனைவியுடனான சண்டை இவற்றை சொல்லி செல்கிறார். இப்படி ஆகி விட்டால் வெட்டியான் ஊருக்கு வெளியே உள்ள கோயிலில் நின்று சங்கை எடுத்து ஊதினால், ஊர் மக்கள் வெட்டியான் குடும்பம் பட்டினியாக உள்ளதை அறிந்து தானம் செய்வார்களாம். அவ்வாறு சங்கூதும் செல்லையா கடைசியில் அந்த கோயில் உண்டியலை எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு நடப்பதாக கதையை முடிக்கிறார்.
தொகுப்பின் கடைசி கதை "கெட்டாலும் மேன்மக்கள்". ஒரு சோடா கம்பனியில் வேலை பார்க்கிறான் சுப்பையா. அந்த நிறுவன முதலாளி இறந்து விட அவர் மனைவி சந்திரா இரு குழந்தைகளுடன் (ஒன்று மனநிலை சரியில்லாதது) தனியே நிற்கிறாள். மற்றொரு சோடா கம்பனி காரர் அதிக சம்பளம் தருகிறேன் என்ற போதும் விசுவாசத்திற்காக இவர்களுக்கு உழைக்கிறான் சுப்பையா. அவன் அம்மா "வயசு பெண்; ஊர் தப்பா பேசும்; அங்கே வேலைக்கு போகாதே" எனும் போதும் அவன் ஒப்பு கொள்ள வில்லை. கதையின் முடிவில் தான் சந்திராவும் சுப்பையாவும் மிக கொஞ்சமாக பேசுகிறார்கள். "சுப்பையா உனக்கு வேலை அதிகமாகிடுச்சு. மத்த ஆளுங்க வேலையை விட்டு நின்னுட்டாங்க. நீ ஒரே ஆள் எல்லா வேலையும் செய்ய வேண்டியிருக்கு. அடுத்த மாசத்திலிருந்து சம்பளம் அதிகம் தாரேன்" என அந்த பெண் சொல்ல, " ஏம்மா நீ இருக்க நிலைமையில உன்கிட்டே அதிகம் சம்பளம் வாங்குனா நான் மனுஷனா என்ன? " என்ற ரீதியில் பேசி விட்டு செல்கிறான் சுப்பையா. இதனை வாசித்தால் மனம் கலங்காமல் இருக்க முடியாது. மனித நேயம் மிளிரும் எழுத்து.
பாம்பும் பிடாரனும் என்கிற கதை மிக அபூர்வமான எழுத்து நடை கொண்டது. பாம்பு பிடிக்கும் அனுபவத்தை இதை விட அருமையாக சொல்லிவிட முடியாது.
"தீவிரவாதிகள் செய்த திருக்கூத்து" என்றொரு கதை. இதில் வரும் கதை சொல்லி ஒரு நாள் பேப்பரில் "காந்திமதி நாதன் என்பவரை தீவிர வாதிகள் கடத்தி விட்டனர்" என வாசிக்கிறார். இது தன்னுடன் பள்ளியில் படித்த நண்பனாக தான் இருக்க வேண்டும் என தானாகவே நினைத்து கொள்கிறார். இதனால் நான்கைந்து நாள் தினம் பேப்பர் வாங்குகிறார். மனைவி இருக்கிற செலவில் இது வேறா என திட்டினாலும் கேட்கவில்லை. வாசலில் உட்கார்ந்து எதிர் வீட்டுக்காரன் பார்க்கிற மாதிரி பேப்பர் வாசிக்கிறார். "என் நண்பன் பெரிய ஆபிசராக்கும் அதனால் தான் அவனை கடத்தினார்கள்" என தன் குழந்தைகளிடம் பெருமை பேசுகிறார். மிக நுணுக்கமாய் உள் மன உணர்வுகளை சொல்லும் கதை இது.
புத்தக ஆக்கத்தில் சில குறைகள் உள்ளன. மழை மற்றும் பயில்வான் என இரு கதைகளும் பக்கங்கள் மாற்றி அச்சிட்டு விட்டார்கள். ஓரிரு பக்கம் மழை வாசித்ததும் சம்பந்தமே இன்றி அடுத்த சில பக்கங்கள் உள்ளது. பின் அடுத்த கதை படிக்கும் போது தான் இந்த தவறை உணர முடிகிறது. இவ்வளவு அலட்சியமாகவா அச்சிடுவார்கள் !! மேலும் முதல் பக்கத்தில் பத்து கதைகளின் பெயர்களும் பக்க எண்ணும் தந்திருக்கலாம்.
வண்ண நிலவன் கதைகளில் வருகிற மனிதர்கள் வெட்டியானாக, மளிகை கடையில் வேலை செய்பவராக, பாம்பாட்டியாக ..இப்படி மிக சாதாரண மனிதர்களாய் தான் உள்ளனர். கதை எழுதுவோரில் பலரும் தங்கள் நேரடி அனுபவங்களை எழுதுவர். இதனால் அவர்களும் கதையில் இருப்பர். ஆனால் வண்ண நிலவன் கதைகளில் அவர் இல்லை, அவர் பார்த்த எளிய மனிதர்கள் தான் கதை மாந்தர்கள். திருநெல்வேலி மொழி இவரது எழுத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக அனைத்து கதைகளிலும் மனைவி திருநெல்வேலி தமிழில் கணவனை திட்டுவது....ஆனந்தமாக உள்ளது.
வண்ண நிலவன் என்கிற அற்புத மனிதரின் எழுத்தாளுமை அறிய அவசியம் வாசிக்கலாம்.
ஜூன் 25 தேதியிட்ட திண்ணை இதழில் வெளியான விமர்சனம்
ஆதர்ஷித்துக் கொண்டே இருக்கும் கலைஞனுக்கு காலமும் புகழும் நிழலுக்கும் பின் தொடரும் நாய்க்குட்டிக்கும் உள்ள தூரத்தில் என்பதற்கு வண்ணநிலவன் உதிரசாட்சி
ReplyDeleteமிளிர்ந்தபடி உயரும் நீர்பறவையாய் வாசிப்பிற்கேற்ற எழுத்துயர பார்த்திருக்கிறோம் உங்களையும் மோகன் குமார் :)
இன்றைய தேதியில் ஆக சிறந்த படைப்பாளி யார் என்று கேட்டால் வண்ணநிலவன் என்று திண்ணமாக கூறலாம்.எளிய மக்கள் தான் அவர் கதை மாந்தர்.அவர்களின் சொல்லொணா துன்பங்களையும் அதே சமயத்தில் அவர்தம் பெரும் குணம்களையும் உறுத்தாத நடையில் எழுதி நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடுவார்.
ReplyDelete// ஆதர்ஷித்துக் கொண்டே இருக்கும் கலைஞனுக்கு காலமும் புகழும் நிழலுக்கும் பின் தொடரும் நாய்க்குட்டிக்கும் உள்ள தூரத்தில் என்பதற்கு வண்ணநிலவன் உதிரசாட்சி
ReplyDelete//
அண்ணே, தமிழில் பின்னூட்டம் இட்டால் என் போன்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமே!
@ புதுகை அப்துல்லா
ReplyDeleteஹா ஹா ஹா
புத்தகத்தின் பிளஸ் மைனஸ்-யை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteவாய்ப்புக் கிடைத்தால் படிக்கிறேன்.
\\ஓரிரு பக்கம் மழை வாசித்ததும் சம்பந்தமே இன்றி அடுத்த சில பக்கங்கள் உள்ளது. பின் அடுத்த கதை படிக்கும் போது தான் இந்த தவறை உணர முடிகிறது\\
ReplyDeleteசிலபேர் இதைப் பின்னவீனத்துவம்னும் சொல்வாங்க:-))
\\அனைத்து கதைகளிலும் மனைவி திருநெல்வேலி தமிழில் கணவனை திட்டுவது....ஆனந்தமாக உள்ளது. \\
இந்த மாதிரி சேம் சைடு கோல் அடிச்சா எப்படி?:-)))
@ நேசன், \\ஆதர்ஷித்துக் கொண்டே இருக்கும் கலைஞனுக்கு காலமும் புகழும் நிழலுக்கும் பின் தொடரும் நாய்க்குட்டிக்கும் உள்ள தூரத்தில் என்பதற்கு வண்ணநிலவன் உதிரசாட்சி\\
ReplyDeleteசூப்பர்
\\மிளிர்ந்தபடி உயரும் நீர்பறவையாய் வாசிப்பிற்கேற்ற எழுத்துயர பார்த்திருக்கிறோம் உங்களையும் மோகன் குமார் :)\\
வழிமொழிகிறேன்
விளக்கமான நல்ல பகிர்வு மோகன்குமார்.
ReplyDeleteசிலசமயங்களில் குறிப்பிட்ட சில பிரதிகளில் இப்படிப் பக்கங்கள் மாறிப்போவதுண்டு. எனினும் பெரிய கவனக் குறைவே.
நல்ல பகிர்வு. இது மாதிரி விமர்சனங்களால் இந்த புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றையும் வாங்கவும் முடிவதில்லை. வைத்து பாதுகாக்கவும் முடியவில்லை. நூலகம் செல்லவும் நேரமில்லை. இது ஒரு குறை. நேசமித்திரன் வார்த்தைகளில் ஜாலம் காட்டுகிறார்.
ReplyDelete//புதுகை.அப்துல்லா said...
ReplyDeleteஅண்ணே, தமிழில் பின்னூட்டம் இட்டால் என் போன்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமே!//
இந்த ‘என்’னில் நானும் ;))
மோகன்குமார்,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
ReplyDeleteஎனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர் வண்ணநிலவன். அதிலும் எஸ்தர் கதை, முடிவைவிட அந்தச் சூழ்நிலைகளைக் கொண்டுவருகிறது.
ReplyDelete