இந்த படத்தில் உள்ள பெண் தான் இந்த பதிவின் நாயகி. என் மேல் ஏறி என்ன அமர்க்களம் செய்கிறாள் என்பதை இந்த வீடியோவில் பார்த்து விடுங்கள்.
இவளது பிற கூத்துகளை பற்றி சொல்லும் முன் இன்னும் சிலரை அறிமுகம் செய்து விடலாம்.
எங்கள் பக்கத்து வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கிறார்கள். அதில் வினய் என்கிற வினு பற்றிய அறிமுகம் ...
பக்கத்துக்கு வீட்டு நாய்களில் எங்கள் வீட்டின் உள்ளே உரிமையாக வந்து விளையாடுவது வினய் மட்டும் தான். பிறந்தது முதல் எங்கள் வீட்டில் அனைவருக்கும் செல்லம். ஆனால் பின் அவனை வேறு வீட்டில் எடுத்து சென்று வளர்த்தனர். அப்போது எங்களுக்கு (குறிப்பாய் என் பெண்ணுக்கு) செம ஏமாற்றம். மறுபடி அவனை இங்கேயே கூட்டி வந்து விட, அவன் அமர்க்களம் இப்போது தொடர்கிறது.
எங்கள் வீட்டில் யாரை கண்டாலும் இரண்டு காலையும் தூக்கி நின்றபடி கொஞ்சுவான். நாங்களும் நின்று பேசவேண்டும். வீட்டுக்கு வந்தாலே சாப்பிட ஏதாவது தருவோம் என ரொம்பவும் எதிர்பார்ப்பான். உணவு ஏதும் தராவிடில், இவன் கெஞ்சுவதை பார்க்க வேண்டுமே ! தரையில் படுத்து, கிட்டத்தட்ட காலில் விழுகிற மாதிரி பாவனை செய்வான். சற்று நேரத்தில் ஒண்ணும் கிடைக்கா விடில் ஓடி போய் விடுவான் (நாங்கள் உணவு தரக்கூடாது என்பது ஓனர்களின் கண்டிப்பு..)
நாங்களும் ஏதாவது வளர்ப்பு பிராணி வளர்க்கலாம் என லவ் பேர்ட்ஸ் இந்த கோடையில் வளர்க்க ஆரம்பித்தோம். நான்கு புறாக்கள். ஒவ்வொன்றுக்கும் பியூட்டி, கியூட்டி என்றெல்லாம் பெயர் வைத்து வளர்த்தாள் எங்கள் பெண். ஆண் புறாக்கள் இரண்டையும் கொஞ்ச நாளிலேயே பெண் புறாக்கள் கடித்து, கடித்து கொன்று விட்டன.
நான்கு புறாக்கள் இரண்டாக ஆன கால கட்டத்தில் தான் நண்பர் ஒருவர் மூலம் வந்து சேர்ந்தது கிளி.
வந்த ஒரு சில நாட்களிலேயே எங்கள் அனைவரையும் அழகாலும், குரலாலும் தன் வசமாக்கி விட்டது. சிறு குழந்தை வீட்டில் இருந்தால் இருக்கும் சந்தோஷம் இப்போது வீட்டில்..
காலை வெளிச்சம் வரும் வரை சத்தமின்றி இருக்கும். வெளிச்சம் வந்தும் நாங்கள் எழா விடில், "கீச் கீச்" சென்று கத்த ஆரம்பித்து விடும், போலவே எழுந்தும் நாங்கள் எங்கள் வேலையை பார்த்து கொண்டிருந்தால், அதனை பார்க்க வில்லை என கத்தும். அருகில் நாம் போய் இருந்தால் பேசாது இருக்கும். நகர்ந்தால் மறுபடி"கீ கீ".
பிஸ்கட், அரிசி, சப்பாத்தி, தானியம், அப்பளம், கேரட் ஆகியவை நன்கு சாப்பிடும். ஒரு சில நாள் சரியாக சாப்பிடா விட்டால் நமக்கு வருத்தமாகி விடும். பின் மறு நாள் முதல் வழக்கம் போல் சாப்பிடும்.
பிஸ்கட், அப்பளம் போன்றவை சாப்பிடும் அழகு அடடா! ஒரு காலில் நின்று கொண்டு மறு காலை, கை போல் உபயோகித்து, காலால் பிடித்தவாறே சாப்பிடும். இதனை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.
மேலே உள்ள படம் அப்படி ஒரு முறை பிஸ்கட் சாப்பிடும் போது எடுத்தது தான். பிஸ்கட் தந்தால் காலை நீட்டி வாங்கி கொள்ளும். பசி இருந்தால் உடனே சாப்பிடும். இல்லா விடில் வாங்கி விட்டு உடனே தொப்பென்று கீழே போட்டு விடும். சப்பாத்தி மட்டும் எப்போது தந்தாலும் உடனே முழுதும் சாப்பிட்டு விடும்.
அதன் கூண்டு எப்போதும் திறந்தே இருக்கும். தனக்கு வேண்டிய போது வெளியே வந்து தன் கூண்டின் மீதோ அருகிலுள்ள லவ் பேர்ட்ஸ் கூண்டின் மீதோ உட்கார்ந்து கொள்ளும். நாம் நினைக்கும் போதோ, விரும்பும் போதோ வராது. தனக்காக தோன்றினால் தான் வரும்.
தமிழ் படத்தில் " பச்சை மஞ்சள் சிகப்பு தமிழன் நான்" என ஒரு பாட்டு வரும். நாங்கள் அனைவரும் இப்போது அதிகம் பாடுவது இந்த வரியைத்தான். காரணம் கிளி இந்த மூன்று நிறங்களால் தான் ஆனது. உடல் பச்சை; வால் அருகில் மஞ்சள் நிறம், மூக்கு சிகப்பு நிறம்.
கிளிக்கு காது என்கிற ஒன்று இருக்கிற மாதிரி தெரிய வில்லை. ஒரு வேளை இறகுகள் மறைத்துள்ளதோ என்னவோ !
எங்கள் வீட்டிற்கு வெளியில் சற்றே பெரிய தொட்டிச்செடி உள்ளது. அதில் ஏற்றி விட்டால் மேலும் கீழும் போய் வந்து செம குஷி ஆகி விடும். மேலே உள்ள படத்தில் அந்த செடியில் உட்கார்ந்து கொண்டு எப்படி பார்க்கிறது பாருங்கள். அதில் ஏறி விட்டால் அப்புறம் நம்மிடம் வராது
செடியில் கிளி நடப்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
கிளி நம் கைக்கு வருவது ரொம்ப கஷ்டம். நம்ம ஹவுஸ் பாஸ் தான் இதற்கான பெரும்பாலான வேலைகள் செய்வதால் அவரிடம் மட்டும் கையில் ஏறி கொள்ளும். பின் அவர் நம்மிடம் தந்தால் வாங்கி கொள்ளலாம். கைக்கு வந்த உடன் பிரேஸ்லெட், மோதிரம் அல்லது வளையல் இப்படி ஏதாவது ஒன்றை கடிக்க ஆரம்பித்து விடும். பல் வளர்கிற சிறு குழந்தை ஏதாவது கடிக்க துடிப்பது போல் கிளி கடிக்க துடிக்கும்.
காலை நேரம் கூண்டுக்குள்ளேயே மிக வேகமாக வாக்கிங் செல்லும். குறைந்த தூரமே ஆயினும் வேக வேகமாக நடப்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். காலை மட்டும் தான் இப்படி நடக்கும் .
அது குளிப்பது பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில நேரம் கூண்டுக்குள்ளும் சில நேரம் தண்ணீர் கூண்டின் வெளியே இருந்தால் வெளியே வந்தோ குளிக்கும். வாரம் இரு முறை குளிக்கிறது. வெள்ளிகிழமை குளித்தால் "பொம்பளை கிளி இல்ல. அதான் வெள்ளி கிழமை குளிக்குது" என கிண்டல் செய்வோம். பெரும்பாலும் நாங்கள் அனைவரும் இருக்கும் போது ஞாயிறு அன்று ஒரு முறை குளிக்கும். அப்படி எடுத்த ஒரு வீடியோ இதோ
நாட்டி என்பது இதன் பெயர். ஆனால் நட்டு, பச்சை, செல்லம், பாப்பா, அழகு, குட்டி, வாக்கிங் ராணி என்று இன்னும் என்னென்ன பெயர்களோ கூடி கொண்டே போகிறது.
நாட்டி எவ்வளவு நாள் எங்களுடன் இருப்பாளோ தெரியாது! அவள் இருக்கும் இந்த காலம் இனிமையாக உள்ளது. வளர்ப்பு பிராணி வளர்ப்பது நிச்சயம் நல்ல stress relief என உணர முடிகிறது.
எங்கள் வாழ்வை இனிமையாக்கும் தேவதையே ...நீடூழி வாழ்க !!
உங்கள் செல்ல பறவைகள் பற்றிய பதிவு நல்லா இருந்தது .
ReplyDeleteஉண்மையில் இவற்றை வளர்பதால் STRESS RELIEF .மற்றும் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .நாங்களும் இப்ப ஒரு HAMSTER அணில் மாதிரி இருக்குமே அது வளக்கறோம் .
கிளிகள் சுமார் பத்து வருஷமாவது நம்மோட இருக்கும் .THANKS FOR SHARING THE PICTURES AND VIDEO.
//எப்போதும் எனக்காகவோ, பிற பதிவர் நண்பர்களுக்காகவோ எழுதுபவன் பெண் & மனைவிக்காக ஒரு பதிவு எழுதி உள்ளேன். அவர்களும் முதல் முறை எனது பதிவு ஒன்றை முழுவதும் வாசிப்பது இதுவாக தான் இருக்கும்//
ReplyDeleteபுது பூரிக்கட்டையை கிஃப்டா அனுப்பவா மோகன்? ;))
நாய் வளத்தாஹ ..
ReplyDeleteபுறா வளத்தாஹ ..
இப்ப கிளி வளக்குறா ஹ .
------------------------
//பின் கடந்த வாரத்தில் ஒரு நாள் வெள்ளை புறா எங்களை ஏமாற்றி விட்டு பறந்து விட்டது.//
வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது.. கையில் வராமலே..
--------------------------------
//சப்பாத்தி மட்டும் எப்போது தந்தாலும் உடனே முழுதும் சாப்பிட்டு விடும். //
வட இந்தியப் பாரம்பரியமோ ?
//கிளிக்கு காது என்கிற ஒன்று இருக்கிற மாதிரி தெரிய வில்லை. ஒரு வேளை இறகுகள் மறைத்துள்ளதோ என்னவோ !//
The Ears
A parrot's ears are small, oval openings, behind or above the eyes, and passing in an oblique direction forward. These apertures are usually covered by feathers, being placed beyond the border of cere or wrinkled skin, which in some species of parrots encompasses the eye.
from http://www.budgie-parakeets.com/parrotdescription.html
----------------
//"பொம்பளை கிளி இல்ல. அதான் வெள்ளி கிழமை குளிக்குது" என கிண்டல் செய்வோம். பெரும்பாலும் நாங்கள் அனைவரும் இருக்கும் போது ஞாயிறு அன்று ஒரு முறை குளிக்கும். அப்படி எடுத்த ஒரு வீடியோ இதோ //
good to watch & read this post..
மிக அருமையான பதிவு. ரசித்துப் பார்த்தேன். நான் ஒரு நாய் நேசன். வினய்'யை ரொம்பப் பிடித்திருக்கிறது. கிளி எப்போதோ அப்பா காலத்தில் வளர்த்தது. குளிக்கிறது என்கிறீர்கள்....Face wash தான் பண்ணுது...!ஆனால் வளர்த்து விட்டுப் பிரியும் போது மனம் ரொம்பக் கஷ்டப் படும்.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteபூனையிடமிருந்து கிளியை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நேற்று என் தங்கை வீட்டு கிளியை பூனை கொன்று விட்டது. ஒரே சோகம்.
நன்றி.
கிளி பேசுதா?!
ReplyDeleteஉங்க பதிவின் நாயகி மிகவும் அழகாக இருக்கிறாள்..
ReplyDeleteபடங்கள் வீடியோ எல்லாம் அருமை, பகிர்வுக்கு நன்றி.
பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சுவாரசியமான அழகான பதிவு.
ReplyDeleteகிளி கூண்டை விட்டு எப்படி பறக்காமல் இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
வாழ்வை இனிமையாக்கும் தேவதையே ...நீடூழி வாழ்க !!//
ReplyDeleteவாழ்த்துக்கள் செல்லத்துக்கு....
//செடியில் கிளி நடப்பதை இந்த வீடியோவில் பாருங்கள் //
ReplyDeleteசெடியா? பெரிய காடு மாதிரி தெரியுற விதத்தில் எடுத்துள்ளீர்கள் சார்!
*************************
//சிறு குழந்தை வீட்டில் இருந்தால் இருக்கும் சந்தோஷம் இப்போது வீட்டில்.. //
ஆமாம் சார், காட்சிகளையும் படங்களையும் பார்த்த எங்களுக்கே அப்படி ஓர் உணர்வு வருகிறது.
*******************************
//சப்பாத்தி மட்டும் எப்போது தந்தாலும் உடனே முழுதும் சாப்பிட்டு விடும்.//
உங்கள் வீட்டில் சப்பாத்தி சுவையாக இருக்குமென்று புரிகிறது.
************************************
//அதன் கூண்டு எப்போதும் திறந்தே இருக்கும்//
சுதந்திரப் பறவை!
****************************
//நாட்டி எவ்வளவு நாள் எங்களுடன் இருப்பாளோ தெரியாது! //
நீண்ட காலம் நாட்டி உங்களுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
*********************************
//ம்ம் என்னென்ன கமெண்ட் அவர்களிடமிருந்து வர போகுதோ !!//
நல்ல கமெண்ட்தான் வந்திருக்குமென்று நினைக்கிறேன்.
**************************
எனக்கு ஒரு சந்தேகம். ஒரு முறை வெட்டப்பட்ட கிளியின் இறக்கை வளருமா? அடிக்கடி வெட்ட வேண்டுமா?
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், கிளி எனக்கு மிகவும் பிடித்தப் பறவை. அதன் வண்ணமும் அழகும் காரணமாக இருக்கலாம். சிறு வயதில் காகம் மட்டுமே தினந்தோறும் பார்த்த எனக்கு எப்பொழுதாவது பார்க்கும் கிளியின் மீது ஈர்ப்பு வந்திருக்கலாம். மேலும், காகம் எங்களுக்கு வில்லன். ஏனெனில், பள்ளி நாட்களில் காலை மாலை வேலைகளிலும், விடுமுறை நாட்களில் முழு நாட்களும் கடலைப் பயிரிடப்பட்டிருக்கும் எங்கள் வீட்டு வயல்களில் காக்கை விரட்டுவதுதான் வேலை. அக்கா, மற்றும் தம்பி எல்லோரும் ஒரு இடமாக சேர்ந்து விளையாடிக்கொண்டு விரட்ட முடியாது. வயல்களில் மூலைக்கு ஒருவராக தனியாக உட்கார்ந்துக் கொண்டு காக்காய் விரட்ட வேண்டும். அப்படியும் காக்கை எங்களை ஏமாற்றி விட்டு கடலையை தின்றுவிடும். அப்புறம் வீட்டில் கவனிக்கப்படுவது தனிக்கதை!
ReplyDeleteமிக நல்ல பதிவை எழுதி எல்லோரும் மகிழ்ச்சியடைய காரணமாக இருந்த உங்கள் குடும்பத்தினர்க்கு நன்றி.
படங்களும் விவரங்களும் அருமை. மனிதர்களை வளர்ப்பதற்கே பொறுமை அதிகம் வேண்டும். பிராணிகள்.. பறவைகள்..
ReplyDelete(ஆ! ரத்னவேல்..
ரகுவின் பூரிக்கட்டை கமென்ட் புரியவில்லையே?)
கோதுமைத் தீனி பிராணிகள் பறவைகள் உடல் நலத்துக்கு ஆகாது என்பார்களே?
கிளிப்பேச்சுக் கேட்கக் காத்திருப்பதாக எல்லோரும் சொன்னாலும் சொன்னோம். நிஜம்மாகவே கேட்க வைத்து விட்டீர்கள் வீடியோ பகிர்வுகள் மூலமாக:)! வினுவும் அழகு. நல்ல பதிவு. நாட்டி பற்றிய அப்டேட்ஸ் இனி வானவில்லில் தவறாமல் பகிர்ந்திடலாமே நீங்கள்!
ReplyDelete//ஸ்ரீராம். said...
ReplyDeleteகுளிக்கிறது என்கிறீர்கள்....Face wash தான் பண்ணுது...!//
மெட்ராஸ் தண்ணி கஷ்டத்துக்கு அதுதான் குளியல்போல மக்களுக்கு!! ;-))))
(சென்னையில் தண்ணீர் இப்போ(தைக்கு) தாராளம்னாலும், சென்னைன்னா தண்ணி (குடிநீர்/வெள்ளம்) கஷ்டம்தான் ஞாபகம் வருது) ;-)))))
கிளி பேசுதா இல்லியா? வீட்டுக்கு வந்ததும் உங்களோட நல்லாப் பழகிடுச்சா? கடிச்சு வைக்கலியா?
ஜோடி வேண்டாமா? தனிக்கட்டையா இருந்துடுமா?
கூண்டை விட்டு வெளியே நிற்கும்போது, வெளியே பறந்துபோயிடாதா? பூனை தொந்தரவு இல்லையா பக்கத்தில்?
கூண்டில், பேப்பர் விரித்து வச்சுருக்கீங்க, அதைக் கொத்துவதில்லியா -கிளியும், லவ் பேர்ட்ஸும்? எங்க வீட்டில இருந்த லவ் பேர்ட்ஸ்கள் பேப்பரைக் கொத்திக் குதறிப் போட்டுவிடும்.
கிளிக்கு ஆப்பிள் பிடிக்காதாமா?
sir, very good efforts to write abt a real life event with photos and video... i think u must be getting two more regular readers for ur blog. i mentioned abt ur madam and daughter.
ReplyDeleteone more flavour to blogging.
ஏஞ்சலின் : நன்றி.
ReplyDelete//HAMSTER அணில் மாதிரி இருக்குமே அது வளக்கறோம் .//
அட!!
கிளிகள் சுமார் பத்து வருஷமாவது நம்மோட இருக்கும் என நீங்கள் சொன்னது ரொம்ப சந்தோஷமாக உள்ளது
**
ரகு: ஹவுஸ் பாசும் படித்து விட்டு ஓகே சொல்லி விட்டார். எனவே பூரி கட்டைக்கு அவசியம் இல்லை
**
மாதவன்: நீண்ட கமெண்டுகளுக்கு நன்றி. குறிப்பாக கிளியின் காது பற்றி நெட்டில் தேடி சொன்னது மகிழ்ச்சி. நிறைய தெரிந்து கொள்கிறோம்
ஸ்ரீராம்: நீங்கள் நாய் விரும்பியா? ரைட்டு அதான் வினய் பிடிக்கிறது
ReplyDelete//குளிக்கிறது என்கிறீர்கள்....Face wash தான் பண்ணுது...!//
வாயால் எடுத்து தான் குளிக்கணும், நம்மை போல் கையை உபயோகிக்க முடியாது. நான் வீடியோ கொஞ்சம் தான் போட்டுள்ளேன். அதன் பின் தன் ஒவ்வொரு இறகாக துடைக்கும். கழுவும்
**
ரத்னவேல் ஐயா: எங்கள் பயமும் பூனை குறித்து தான். வீட்டுக்கருகே ஏதும் பூனை இல்லை. இருந்தாலும் சற்று எச்சரிக்கையோடு தான் இருக்க வேண்டும் நன்றி
**
கோபி: கிளி இப்போதைக்கு கீ கீ மட்டும் தான் பேசுது. நாங்கள் பேச கற்று தர முயல்கிறோம். இது வரை பெரிய பலன் இல்லை. போக போக பேசக்கூடும் பார்க்கலாம்.
ராம்வி மேடம். ஆம் நாட்டி செம அழகு தான். ஏதோ எங்கள் குழந்தையை பாராட்டிய மாதிரி மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
ReplyDelete**
பின்னோக்கி: நீண்ட நாளுக்கு பின் வருகை: நன்றி மகிழ்ச்சி
**
ராஜா ராஜேஸ்வரி : தங்கள் வாக்கு பலிக்கட்டும் நன்றி மகிழ்ச்சி
மிக விரிவான கருத்துக்கு நன்றி அமைதி அப்பா. குறிப்பாக தங்கள் உடன் பிறந்தாரோடு காகம் ஓட்டிய கதை மிக ரசித்தேன்.
ReplyDeleteபுறா மற்றும் கிளி வீட்டை விட்டு பறக்க நினைக்கிறது. பறந்தால் விடுதலை என நினைக்கிறது. ஆனால் வீட்டை விட்டு பறந்தால் அடுத்த சில நிமிடங்களில் அதனை காகம் அல்லது வேறு பறவை தின்று விடுகிறது. வளர்த்து விட்டு நம் கண் முன்னே இப்படி ஒரு வெள்ளை பறவை இறந்த போது ரொம்ப வருத்தம் ஆகி விட்டது. எனவே நாம் அவற்றை பறக்காமல் பாது காக்க வேண்டி உள்ளது
அப்பாதுரை : நன்றி
ReplyDelete//கோதுமைத் தீனி பிராணிகள் பறவைகள் உடல் நலத்துக்கு ஆகாது என்பார்களே?//
அப்படி ஒன்றும் தெரிய வில்லை. நன்கு சாப்பிடுகிறது. நன்றாக தான் உள்ளது
**
ராம லட்சுமி: நன்றி மேடம்
//நாட்டி பற்றிய அப்டேட்ஸ் இனி வானவில்லில் தவறாமல் பகிர்ந்திடலாமே //
அட! நான் நினைத்ததை சொல்லி உள்ளீர்கள். இயலும் போது பகிர்கிறேன்
**
வடிவுக்கரசி மேடம் : நன்றி ஆம் இருவரும் மிக ரசித்து மறுபடி, மறுபடி வாசித்தார்கள். பின்னூட்டங்களையும் தான்
ஹுசைனம்மா டீச்சரம்மா மாதிரி எவ்ளோ கேள்விகள் !!
ReplyDelete* கீ கீ மட்டும் தான் பேசுது. எங்களிடம் ஓரளவு பழகிடுச்சு. இன்னும் முழுசா பயம் போகலை. ஓரளவு எங்களை தெரிந்து கொண்டுள்ளது
* கிளிக்கு ஜோடி பத்தி இன்னும் யோசிக்கலை, பார்க்கலாம்
* கிளி ஆபிள் சாப்பிடுதே !!
* பேப்பரை நல்லா கடிக்கும். அதற்கு அது ஒரு விளையாட்டு
* பூனை தொந்தரவு இதுவரை இல்லை. ஆனா பயமா தான் இருக்கு
தங்கள் விரிவான கேள்விகள் பதிவில் தங்கள் interest-ஐ காட்டுகிறது நன்றி