Sunday, August 7, 2011

நண்பர்கள்: நின்றுபோன நீருற்றுகள்

எழுதியவர்: தேவகுமார் 

நண்பர்கள் தினத்தில் என் நண்பர்களை பற்றி நினைத்து கொண்டு இருக்கும் போது, திடீர் என்று இறந்து போன நண்பர்களை பற்றின ஞாபகம் வந்தது. வழியில் தவறவிட்ட அந்த நண்பர்களை பற்றின குறிப்பு தான் இந்த பதிவு.

ஜெயசீலன்: என்னோடு ஆறாவதில் இருந்து எட்டாவது வரை படித்தவன். பக்கத்துக்கு ஊர்காரன். நானும், அவனும் சேர்ந்துதான் பள்ளிக்கு சைக்கிளில் போவோம் (நான் குரங்கு பெடல் அவன் முக்கோணம்!). நாங்கள் ஏழாவது போன போது, அவனின் அத்தை மகளும் சேர்ந்து கொள்ள, எங்கள் சைக்கிள் பயணம் இனிமையாய் ஆனது (நானும் முக்கோணத்திற்கு மாறியிருந்தேன்). அவன் ஏழாவது படிக்கும் போதுதான் கதை எழுத ஆரம்பித்தான் (நாங்கள் இரும்புக்கை மாயாவியின் பிடியில் இருந்தே வெளிவராத சமயம் அது!). அவன் கதையில் வந்த இளைஞர்கள் புல்லெட் வைத்து இருந்தார்கள்; பாலியஸ்டர் சட்டை அணிந்து இருந்தார்கள்; கள்ள சாராய பானைகளை உடைத்தார்கள்; சீட்டாடும் இடத்தில கலகம் செய்தார்கள். அப்போதே கதை சோறு போடாது என எப்படி அவனுக்கு தெரியும் என தெரியவில்லை, என்னவாக ஆகபோகிறாய் என கேட்டால், கதாசிரியர் என சொல்லாமல், கண்டக்டர் என சொல்வான். எட்டாவது முழுஆண்டு விடுமுறையில் அவன் திடீர் என்று இறந்து போனான். என்ன காரணம் என யாருக்கும் தெரியாத நிலையில், எப்போதும் காரணம் தெரியாத இறப்புக்கு சொல்லும் காரணத்தையே சீலனின் மரணத்திற்கும் சொன்னார்கள் - அது, மூலையில் ரத்த நரம்பு வெடித்துவிட்டது. இருந்திருந்தால் ஒரு கதாசிரியர் ஆகவோ, அவனுக்கு பிடித்த பேருந்து நடத்துனர் வேலைக்கோ போயிருப்பான். எந்த கதையிலாவது புல்லெட் ஓடும்போது, அல்லது சிவப்பான பேருந்து நடத்துனரை பார்க்கும்போது நான் ஜெயசீலனை நினைத்து கொள்கிறேன்.


(தேவாவின் புகைப்படம் அவசரத்துக்கு கிடைக்க வில்லை. 23 வருடமாய் தொடரும் நட்பு, நண்பர்கள் தினத்துக்கு பொருத்தமாய் இருக்கும் என இந்த புகைப்படம் பகிர்கிறேன்.அனைவருமே வக்கீல்கள்!-மோகன் குமார்)

விஜய சந்திர பிரகாஷ்: நான் அவனின் பேருக்கே பெரிய விசிறி. பேருக்கு பொருத்தமாய் கம்பீரமாய் இருப்பான் VCP. இவன் என் சட்ட கல்லூரி தோழன். சென்னை பசங்களை தவிர என் வகுப்பில் சரளமாய் ஆங்கிலம் பேச தெரிந்தவன் இவன் மட்டும் தான் (ஊட்டி கான்வென்ட் படிப்பு).

எதை பற்றியும் ஒரு கருத்து வைத்து இருப்பான். IPKF - ஐ கடுமையாக விமர்சிக்கும் அதே வேலையில் ஜனநாயக தேர்தல் மட்டுமே இலங்கைக்கான தீர்வு என 1991 - யில்லேயே சொன்னவன். தினமும் ஒரு ஆங்கில செய்திதாளும், வாரம் ஒரு ஆங்கில வார பத்திரிகையும் படிக்கவேண்டும் என எங்களுக்கு அறிவுரை சொன்னவன் (இன்று வரை அதை நான் பின்பற்றுகிறேன்) . "Single woman are not my kind" என James Bond மாதிரி பேசி எங்களை அசர அடித்தவன். நன்றாக படித்தவன் அவன். மூன்றாம் ஆண்டு இறுதியில் அவன் இறந்து விட்டதாக எங்களுக்கு கொஞ்ச நாள் கழித்து தகவல் வந்தது. முதலில் அவன் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டதாக நாங்கள் நினைத்தோம். அது தற்கொலை என ஊட்டி போய்வந்த ஒரு நண்பன் சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. இன்று வரை அதை நான் நம்பவில்லை, VCP ஒரு தைரியசாலி.

செந்தில் குமார்: இவன் என் வகுப்பு தோழன் எனினும் இவன் என் அப்பாவிற்குதான் கூட்டாளி. எங்கள் பக்கத்து வயல்காரன். என் அப்பாவிடம் அவ்வளவு விளக்கமாய் விவசாயத்தை பற்றி பேசுவான் (இந்த பட்டம் நீங்க கடலை போடுங்க, நெல்லு வேண்டாம்; பசுங்கன்னுக்கு கொம்பு சுட்டுடிங்க). இவன் ஏறக்குறைய எங்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்த எல்லா பள்ளியிலும் படித்தான். தம்மம்பட்டி, முருங்கபட்டி (எங்கள் ஊர்), புத்தனாம்பட்டி, திருச்சி, மீண்டும் எங்கள் ஊர், இப்படி பல பள்ளி சுற்றி வந்தான் செந்தில். எங்கள் பள்ளியில் இவனுக்குதான் நிறைய பட்டப்பேர். வயதுக்கு மீறிய வளர்ச்சி என்பதால் 'குண்டன்' என ஆரம்பித்து எத்தனையோ பேர்கள்.

ஏழாவது வகுப்பில் பூங்கோதை டீச்சர் தெர்மாஸ் குடுவை பற்றி பாடம் எடுக்கும் போது, யார் வீட்டில் தெர்மாஸ் குடுவை இருக்கிறது என கேட்க, நாங்கள் திருதிரு என விழித்தோம் (நாங்கள் தெர்மாஸ் குடுவையை கண்ணில் கூட கண்டதில்லை!) செந்தில் மட்டும் எழுந்து எங்கள் வீட்டில் ஏழு தெர்மாஸ் குடுவை இருக்கிறது என சொல்ல, டீச்சர் அசந்து போய் தீர விசாரித்ததில், அவன் சொன்னது தெர்மாஸ் குடுவை இல்லை, சுரக்காய் குடுவை என தெரிய வர, அன்றில் இருந்து அவன் 'தெர்மாஸ் குடுவை' எனவும் அழைக்கப்பட்டான். அவனது பட்ட பேர்களை இலகுவாய் ஏற்று கொண்டவன். அவனும் பட்ட பேர் வைப்பதில் கில்லாடி. கருப்பாய் இருப்பவனுக்கு 'கரிபால்டி' என பேர் வைத்து எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய பட்டப்பேரை உருவாக்கி கொடுத்தவன் அவன். செந்தில் பள்ளியில் நன்றாக படித்தவன் இல்லை. பத்தாவது பன்னிரெண்டாவது இரண்டிலுமே தவறி பின் தேறியவன். ஆனால் அவன் BA (Economics) (National College, Trichy) படித்த போது Statistics (வேப்பம்காய்!) பாடத்தில் 83 மதிப்பெண் வாங்கி ஆச்சர்ய படுத்தினான். எப்படிடா? என கேட்டபோது, "ஒண்ணுமில்ல, புதுசா சேர்ந்து இருக்கிற (லேடி) Lecturer எனக்கு Statistics concepts எல்லாம் நல்லா வருது, நல்லா படிச்சா நிறைய மார்க் வாங்கலாமின்னு சொன்னங்க, அதான் Try பண்ணினேன்" என அவன் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு வேளை அந்த Lecturer மாதிரி எல்லோரும் அவன் மீது நம்பிக்கை வைத்து கொஞ்சம் பாராட்டி இருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு இருக்க மாட்டானோ எனத் தோன்றுகிறது. "உங்க பையன் ஊருக்கு வரும்போது எங்க வீட்டுக்கு வரதே இல்ல" என செந்தில் அப்பா கோபித்து கொள்வதாய் என் அப்பா சொல்வார். நான் அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் வீட்டில் 'தெர்மாஸ் குடுவை' இல்லாததாக கூட இருக்கலாம்.

****
உங்கள் நண்பர்களில் யாரையேனும் நீங்கள் தவறவிட்டு இருந்தால், அவர்கள் வீட்டுக்கு ஒரு நடை (என் போல் இல்லாமல்) போய்விட்டு வாருங்கள். அவர்களின் பெற்றோர்களுக்கு இதமாய் இருக்கும்.

உங்களுக்கும், என் நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர்: தேவகுமார் 

13 comments:

  1. ரசித்து படித்தேன் தேவா. ஒவ்வொருவரும் சிறு வயது முதல் சில நண்பர்களை மரணத்திடம் இழந்து கொண்டே வருகிறோம். அவரவருக்கும் அத்தகைய நண்பர்களை நினைவு படுத்தும் இந்த பதிவு.

    ReplyDelete
  2. இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நெகிழ்வான பகிர்வு.

    /ஒரு நடை/

    அவசியம் செய்ய வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  4. அன்புள்ள தேவா, உருக்கமான எழுத்துக்கள். உங்கள் நாபகச்சக்திக்கு ஒரு salute . இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். பானுபிரகாஷ்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    கண் கலங்குகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  7. தலைப்பு - அருமை; ஆனா அருமைன்னு சொல்ல முடியல. சப்ஜெக்ட் அப்படி. உண்மையா, நண்பர்கள்னு சொன்னதும், மறைந்தவர்கள்தான்-நண்பர்கள் இல்லையென்றாலும்- முதலில் ஞாபகம் வருகிறார்கள்.

    எங்கள் கல்லூரியில், சீனியர் - கடைசி வருஷ மாணவர் - பெயர்கூட மறக்கவில்லை - பாரத் - ஒரு மினி தாதா போல வலம் வந்தவர். தற்கொலை செய்துகொண்டார். நம்பவே முடியவில்லை!! நான் முதல் வருடம் படிக்கும்போது நடந்த ’முதல்’ தற்கொலை என்பதால் மறக்கவில்லை.

    ஆமா, உங்க நண்பர்களைக் கேட்டா, உங்க நண்பரின் நண்பர்களைச் சொல்லிருக்கீங்க? :-)))))

    அப்பப்போ, ”மண்டபத்துல எழுதிக் கொடுத்தத” வாங்கிப் போடுறீங்க!! இதுவும் நல்லாத்தானிருக்கு. ;-)))))))
    எனக்கும் இப்படி ஒரு ஃப்ரெண்ட் இருந்தா....

    ReplyDelete
  8. //உங்கள் நண்பர்களில் யாரையேனும் நீங்கள் தவறவிட்டு இருந்தால், அவர்கள் வீட்டுக்கு ஒரு நடை (என் போல் இல்லாமல்) போய்விட்டு வாருங்கள். அவர்களின் பெற்றோர்களுக்கு இதமாய் இருக்கும்/

    நிச்சயமா போகணும்.

    ReplyDelete
  9. மோகன் குமார், உங்கள் நண்பர் எழுதிய “நின்று போன நீருற்றுகள்” மனதைத் தொட்டது.

    கடைசியில் சொன்னது நிஜம்.... செய்ய வேண்டிய ஒன்று.

    நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நண்பர்கள் தினத்தில்
    மறைந்த நண்பர்களுக்கு ஒரு நினைவாஞ்சலி பதிவு. அருமை.
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் தேவா மற்றும் என் சார்பாக நன்றி

    ReplyDelete
  12. the author(mr. deva)has the art of getting connected so well with the readers. probably, the issue has also enhanced the connectivity. all of us have a dead friend... and even i have not met their parents.
    advice taken.
    thanks for sharing.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...