Monday, February 6, 2017

வானவில் : துருவங்கள் 16- ராகவா லாரன்ஸ் - முதல்வர் சசிகலா

பார்த்த படம் : துருவங்கள் பதினாறு 

பாட்டு இல்லை; க்ரைம் கதை.. ஆனால் சண்டை இல்லை; ஹீரோயினும் இல்லை (கதையின் மையம் 2 இளம் பெண்களை ஒட்டியது; ஆனால் அவர்கள் வரும் நேரம் 15 நிமிடம் கூட இருக்காது !)

ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றோர் எழுதும் க்ரைம் நாவல் போல ஒரு படம்.

கதை எதை நோக்கி நகர்கிறது.. என்ன நடக்கிறது என்பதெல்லாம் புரிய.. எந்த காட்சியையும் தவற விடாமல் உற்று நோக்க வேண்டியிருக்கிறது..

ஒரு கொலை.. அதனை பார்த்த வெவ்வேறு நபர்கள் .....அவர்கள் கோணத்தில் சொல்ல ..உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.. கடைசி 10 நிமிடத்தில் தான் முழு கதையும் நமக்கு புரிபடுகிறது.

கொலை செய்தவன் நல்லவன். கொலை செய்யப்பட்டவன் கெட்டவன்.. இந்த ஒரு வரியிலிருந்து தான் கதை பின்னப்பட்டிருக்க வேண்டும்..

நிச்சயம் வித்தியாச முயற்சி தான். ஆனால் மலையாளத்தில் இதை விட அற்புதமான த்ரில்லர்கள் வருகிறது. மும்பை போலீஸ் போன்ற படங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு சஸ்பென்ஸ் கொண்டது ! (படம் முழுதும் கொலையை துப்பறியும் போலீஸ்க்கு ....இறுதியில் அந்த கொலை செய்ததே தான் தான் என தெரிந்தால் அப்படி இருக்கும்.. ! அதற்கு மிக சரியான காரணமும் சொல்லியிருப்பர் மும்பை போலீசில் !)

துருவங்கள் 16 - படம் வெளியான போது நிறைய பாசிடிவ் விமர்சனங்களை கண்டது; இப்போது டோரேண்டில் நல்ல காப்பி வந்த பின் சிலர் பார்த்து விட்டு சுமார் தான் என முகநூலில் எழுதி வருகின்றனர்.

படம் சரியான வெற்றி  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; சின்ன பட்ஜெட்டில் எடுத்து - நிறைந்த லாபம் அடைந்து விட்டனர்...

22 வயது இயக்குனரின் அடுத்த படம் நிச்சயம் எதிர்பார்க்க வைத்து விட்டது !

அழகு கார்னர் 

Image result for anandhi actress

ராகவா லாரன்ஸ் 

ராகவா லாரன்ஸ் மீது எனக்கு இதற்கு முன் நல்ல அபிப்ராயம் இருந்தது; நிறைய ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார்; முடிந்த வரை பிறருக்கு உதவுகிறார்.. இன்ன பிற..

சென்ற ஆண்டு விகடன் மூலம் 100 இளைஞருக்கு 1லட்சம் வீதம் தந்து ஒரு கோடி ரூபாய் அளவிற்கு தமிழக மக்களுக்கு உதவ போவதாக செய்திகள், படங்கள் அனைத்தும் வந்தன.

இப்போது 100 இளைஞர்களில் - வா. மணிகண்டன் உள்ளிட்ட சிலர் பணம் தங்களை வந்தடைய வில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இது நிச்சயம் அதிர்ச்சி தரும் விஷயம்.

நிஜமாகவே பணம் தாராவிடில் எதற்கு அப்படி விளம்பரம் செய்ய வேண்டும்? பல அரசியல் செய்திகளுக்கு பாலோ அப் அப்டேட் போடும் விகடன் - இதற்கு ஏன் எந்த கருத்தும் - பின் தெரிவிக்க வில்லை ?

இப்படி சிலர் பணம் வரவில்லை என்று சொன்ன பிறகாவது ராகவா லாரன்ஸிடம் அது பற்றி கேட்டு கருத்து வெளியிட வேண்டாமா? கள்ள மௌனம் சாதிப்பதால் விகடன் மதிப்பும் சரிகிறது !

ராகவன் லாரன்ஸை பொறுத்த வரை அரசியல் மீது அவருக்கு ஒரு கண் என தெளிவாக தெரிகிறது; வரட்டும்.. ஆனால் நமது டிபிக்கல் அரசியல் வாதி போல் வெறும் அறிவிப்பு மட்டும் விட்டு - நிஜமாக உதவாத மனிதர் இவர் எனில்.. அப்புறம் இவருக்கும் மற்ற அரசியல் வாதிக்கும் என்ன வித்தியாசம்?

ராகவா லாரன்ஸ்- விகடன் இருவரும் வாய் மூடி இருப்பதில் அர்த்தமே இல்லை.. அவர்கள் பேச வேண்டிய தருணம் இது !

முதல்வர் சசிகலா 

ஓ. பன்னீர் செல்வம் ராஜினாமா செய்து சசிகலா முதல்வர் ஆவதை - சோசியல் மீடியாவில் உள்ள பெரும்பாலானோர் விரும்பவில்லை; தங்கள் ஏமாற்றத்தை - வருத்தத்தை காட்டி வருகின்றனர்.

மக்களால் நேரடியே தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் - இதுவரை அரசியலில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர், மக்களுக்கு எந்த பணியும் செய்யாதவர் - நேரடியே ஒரு மாநில முதல்வர் ஆவதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை; இது நிச்சயம் புரிந்து கொள்ளப்பட கூடிய ஒரு உணர்வு தான்.

அ திமுக எம் எல் ஏக்களை, மந்திரிகளை பொறுத்தவரை - "மீதமிருக்கும் நான்காண்டு காலத்தை சரியே பயன்படுத்திக்கொள்ளவேண்டும் " என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். முதல்வராய் யார் இருந்தால் என்ன... !! தனது கல்லா நிரப்புவதில் பிரச்சனை இருக்க கூடாது அவ்வளவே !

விரைவில் மக்களை கவரும் வண்ணம் சில குபீர் நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் !

தமிழகத்தில் இருக்கும் தலைவர்களில் இப்போதைக்கு நம்பிக்கை தரும் விதத்தில் இருப்பது ஸ்டாலின் மட்டுமே ! (அவர் 100 % தூய்மையானவர் என்று கூற வில்லை; ஆனால் இருக்கிற ஆப்ஷன்களில் - ஆந்திராவில் ஒரு சந்திரபாபு நாய்டு போல ஒரு ஆக்டிவ் முதல்வராய் இருக்க வாய்ப்புகள் அதிகம் !)

QUOTE CORNER



டிவி கார்னர் : விகடன் விருதுகள் 

முதன் முறையாக விகடன் சினிமா விருதுகளை நிகழ்ச்சியாக கொண்டாடினர்.

நான் ரசித்த விஷயம்.. ஒவ்வொரு கேட்டகரியிலும் கடந்த 5 ஆண்டுகளில் யார் யார் விருது வாங்கினர் என்பதை காண்பித்ததை தான்.. ! விகடன் விருதுகள் 75 % ஒத்து கொள்ளும் விதத்தில் இருக்கும். மீதம் 25 % ..இவருக்கு ஏன் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது !

சென்ற வருட சிறந்த ஹீரோ .. ரஜினியாம் !

உண்மையில் ரஜினி, SPB போன்றோரை விடுத்து - அடுத்தடுத்த ஜெனெரேஷன் பக்கம் செல்வது நல்லது.. இல்லையா?

பைரவா - நில்லாயோ 

ரேடியோவில் அடிக்கடி "நில்லாயோ" பாடல் ஒளி பரப்புகிறார்கள்.. சில முறை கேட்ட பின் - மெட்டும், பீட்டும் ரசிக்க வைத்து விட்டது.

திரையில் பாடலை சரியான முறையில் படமாக்க வில்லை - இருப்பினும் கேட்க நிச்சயம் இனிமையான பாடல் தான் .. நில்லாயோ !


*****

அண்மை பதிவுகள் :

போகன் சினிமா விமர்சனம்

2016 சிறந்த பத்து பாடல்கள் 

1 comment:

  1. சசிகலா எப்படி பார்த்தாலும் முதல்வராய் மனம் ஒப்பவில்லை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...