Thursday, December 26, 2019

அஞ்சலி: சோலையப்பன் சார்

ரணங்கள் அநேகமாய் என்னை அழ வைத்ததில்லை.

" எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று துவங்கும் ஜெயந்தனின் கவிதை வரி உள்ளுக்குள் மிக ஆழ பதிந்து போன ஒன்று.

மரணம் ... மனிதர்களுக்கு அவர்களது துன்பங்களில் இருந்து ஒரு விடுதலை. இறந்தோர்க்கு துன்பமில்லை என்பர். இவையெல்லாம் உள்ளுக்குள் ஊறிய விஷயங்கள்

மேற்சொன்ன அநேக விஷயங்கள் -பொய்த்து போனது சோலையப்பன் சார் மரணத்தில்.

79 வயது பெரியவர். மிக நன்றாக வாழ்ந்து விட்டார். ஆயினும் அவர் மரணம் என்னை தனிமையில் அழ வைத்து விட்டது.

அவர் ஒரு தலைவர். நிஜமான லீடர். தமது மக்கள் மீது மாறாத அன்பும் மிகுந்த அக்கறையும்  கொண்டவர்.



சேலம் நகரில் முதன்முதலில் கம்பெனி செகரட்டரி சாப்டர் துவங்க காரணமாக இருந்த சிலருள் அவரும் ஒருவர்.

சேலம் சாப்டர் துவங்கியது முதல் இன்று வரை அதன் ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு பெருமளவில் இருக்கும்.

இத்தகைய சிறு ஊரில் தொடர்ந்து சாப்டர் நடத்துவது மிகப்பெரும் சவால். சேலம் சாப்டருக்கு 10 ஆண்டுக்கும் மேல் சேர்மனாக இருந்தார். அவரிடம் ட்ரைனிங் எடுத்த ஏராள மாணவர்கள் இன்று வெவ்வேறு ஊர்களில் கம்பெனி செகரட்டரி ஆக  உள்ளனர்

2014 ஆம் ஆண்டு நான் சென்னை மேற்கு ஸ்டடி சர்க்கிளில் கன்வீனர் ஆக இருந்த போது சாரை பேச அழைத்திருந்தோம். நாங்கள் பேச்சாளர்கள் குறித்த தகவல்களை PPT யில் பல்வேறு புகைப்படங்களுடன் கலர்புல் ஆக காட்டுவது வழக்கம். இதனை வெகுவாக ரசித்தார் சார். அடுத்த முறை வேறொரு நிகழ்வுக்கு சேலம் சென்ற போது பேச்சாளர் தகவல்கள் PPT மூலம் புகைப்படங்களுடன் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் சார்.இந்த வயதிலும் நல்ல விஷயங்களை புதிது புதிதாக கற்று கொள்ளும் அவரது ஆர்வம் வியக்க வைத்தது   



சேலம் சென்ற போது அவரது இல்லத்தில் தங்கியிருக்கிறேன். காலை நேரம்- வெளியில் (ஹோட்டலில்) சாப்பிடுவோம். அந்த நேரம் சில கம்பெனி செகரட்டரிகளை வர சொல்லிவிடுவார். சாப்பிடும் நேரத்திலேயே நான்கைந்து நண்பர்களுடன் பேசிவிடும்படியும் செய்வது அவரது வழக்கம்

இம்முறை தென் இந்திய கம்பெனி செக்ரட்டரி அமைப்பிற்கு நான் தலைவர் ஆனபோது வாழ்த்து சொல்ல தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டவர் -சேலத்தில் நிச்சயம் இவ்வருடம் பெரிய கான்பரன்ஸ் ஒன்று நடத்த வேண்டும் என்றார். தனக்காக எப்போதும் எதுவும் கேட்டவர் அல்ல. மாறாக சேலம் சாப்டருக்காகத்தான் எப்போதும் பேசுவார்

அவர் கேட்டு கொண்டதிற்கிணங்க, தமிழக  கம்பெனி செகரெட்டரிகள் கான்பரன்ஸ் சென்ற மாதம் சேலத்தில் நடந்தது.

ரயிலில் சென்று அதிகாலை 5 மணிக்கு இறங்கியபோது  சேலத்தின் தற்போதைய சார்மன் பூபாலனுடன் எங்களை வரவேற்க .பூங்கொத்துடன் வந்து விட்டார். "சார் இவ்வளவு காலையில் நீங்க வரணுமா?" என்றால் புன்னகை மட்டுமே பதில்

அந்த புன்னகை தான் எப்போதும் அவரது அடையாளம். அந்த கான்பரன்ஸில் தான் அவரை கடைசியாக பார்த்தது.

சென்ற மாதம் கான்பரன்ஸில் கேள்வி கேட்கிறார் சார்..


டிசம்பர் 23 அதிகாலை மதுரையிலிருந்து சேலம் வந்த அவர் - சற்று அசந்து தூங்கி விட்டார். சேலத்தில் அவர்  இறங்கும் முன் ரயில் நகர  துவங்கி விட்டது. மெதுவாக ரயில் நகரும்போது அவர் இறங்க முயல, தவறி விழுந்து இறந்து விட்டார்.

எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றியவர் அவர். அவருக்கு இத்தகைய மரணமா என மனம் ஆறாமல் தவிக்கிறது

தனது இறப்பிலும் அவர் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறார்

பேருந்தோ, ரயிலோ - ஒரு போதும் -அவசரமாக ஓடி சென்று  ஏறவோ, இறங்கவோ செய்யாதீர்கள். அடுத்த ஸ்டேஷன் வரும். அடுத்த ரயில்/ பஸ் வரும். இன்னொரு வாழ்க்கை வராது....

நூறாண்டு வாழ்வார் என்று நினைத்திருந்தேன்.. அவர் மரணம்  சேலம் கம்பெனி செகரட்டரி குழுமத்திற்கு மிகப்பெரும் இழப்பு !

*************
சோலையப்பன் சார் குறித்து அவருடன் பழகிய இன்னும் சிலரின் நினைவேந்தல் :

திரு பூபாலன், சார்மன் கம்பெனி செகரட்டரி சாப்ட்டர், சேலம்


திரு. சோலையப்பன் அவர்கள் சில நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரி ஆக பணியாற்றி விட்டு பின் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தார். அவர் பிராக்டிஸ் துவங்கிய காலத்தில் நிறுவனம் துவங்கவும், அது தொடர்பான விஷயங்களுக்கும் CA முடித்த ஆடிட்டர்களை அணுகுவதே வழக்கமாக இருந்தது. இருப்பினும் சேலத்தில் அவர் ஒரு முன்னோடியாக தனது ப்ராக்டிஸை துவக்கினார்.

 சோலையப்பன் அவர்கள் எந்த வேலையை துவங்கினாலும் அதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். மிக எளிமையான மனிதர்.. அவர் செய்யும் எந்த செயலிலும் ஒரு human touch இருப்பதை நிச்சயம் உணர முடியும்.

20 ஆண்டுகளாக சேலம் கம்பெனி செகரட்டரி சாப்ட்ருக்காக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியது. சேலம் சாப்டர் துவங்கியது தொடங்கி - அதன் பல்வேறு நிலைகளிலும் அவர் - சார்மன் ஆக இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி, தொடர்ந்து இயங்கினார்

அவரது மறைவு - சேலம் வாழ் கம்பெனி செகரட்டரிகளுக்கு ஒரு மிக சிறந்த வழிகாட்டியை இழந்த - பெரும் வலியை தருகிறது. சேலம் சாப்டரோ தனது மாபெரும் தூண்களில் ஒன்றை இழந்து நிற்கிறது
***********

திருமதி. பூர்ணிமா, கம்பெனி செகரட்டரி, சேலம்

சோலையப்பன் சாரை கடந்த 10 வருடங்களாக அறிவேன். எளிமையும், அடக்கமும் ஒன்று சேர்ந்தவர். எந்த வயதினராக இருந்தாலும் - இளைஞர்கள் என்றாலும் கூட எளிதில் அவர்களுடன் பழகுவார்.  கம்பெனி செகரட்டரி கோர்ஸ் படிக்க எத்தனையோ மாணவர்களுக்கு (நான் உட்பட) அவர் உந்துதல் ஆக இருந்தார். சேலம் சாப்டர் துவங்க காரணமாக இருந்தது மட்டுமல்ல, சேலத்தில் இருந்து எத்தனையோ பேர் கம்பெனி செகரட்டரி ஆனதிலும் அவர் பங்களிப்பு இருந்தது.

தொடர்ந்து இயங்க வயது ஒரு தடையில்லை என்பதை தனது செயல்களின் மூலம் நிரூபித்தவர் சோலையப்பன் சார்

திருமதி சரண்யா, கம்பெனி செகரட்டரி, சேலம்  


சோலையப்பன் சாரிடம் 15 மாதங்கள் பயிற்சி (Training) எடுத்த மாணவி நான். அவர் ஒரு வழிகாட்டி (Mentor) மட்டுமல்ல, சிறந்த குருவாகவும், எப்போதும் நமது நலனை மட்டுமே விரும்புபவராகவும் இருந்தார்

Nothing is so strong as Gentleness, and nothing is so gentle as real strength.


மேற்சொன்ன வரிக்கு சோலையப்பன் சாரை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது

தென் இந்தியாவில் இருக்கும் மிக சீனியர் கம்பெனி செகரெட்டரிகளில் ஒருவர் அவர். குறைந்தது 15 கம்பெனி செகரட்டரிகளாவது அவர் மூலம் வாழ்க்கையை துவங்கியிருப்பர். மென்மையாக பழகுதல், ஆழ்ந்த அறிவு, நல்ல நினைவாற்றல், எப்போதும் மிகுந்த உற்சாகம், சிறந்த விருந்தோம்பல்.. இவை அனைத்தும் ஒரு சேர பெற்றவராக அவர் இருந்தார்

துளசி ராமன், ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரி,  சேலம்


கம்பெனி செக்ரட்டரி சர்க்கிளில் - சேலம் என்று சொன்னால், அடுத்து வரும் வாரத்தை- சோலையப்பன் சார், செகரட்டரி என்பதாக இருக்கும்.

எனது குருவுடன் கடந்த 10 வருடம் பழகியதில் - தொழிலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், பொது வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன் 

6 / 7 செப்டம்பர் 2013-ல் ஏற்காட்டில் - தென் இந்திய ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரிகள் கான்பரன்ஸ் நடந்தது. சோலையப்பன் சார் தான் அப்போது சேலம் சாப்டர் தலைவர்.

தனது மேனேஜிங் கமிட்டி மெம்பர்களோடு பல்வேறு வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.

துரதிஷ்ட வசமாக நிகழ்வுக்கு ஓர் வாரம் முன் அவருக்கு ஹிரண்யா ஆப்பரேஷன் நடக்கிற சூழல். மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறிய போதும் எந்த வேலையும் தொய்வின்றி நடக்கும்படி  பார்த்து கொண்டார். நிகழ்ச்சிக்கு 2 நாள் முன்பே ஏற்காடு வந்த அவர் அணைத்து வேலைகளையும் முன் நின்று கவனித்தார். பல முறை மாடிப்படியில் அவர் ஏறி இறங்கியதை காண எங்களுக்கு தான் கஷ்டமாக இருந்தது

இரவு முழுதும் தூங்காத அவர் மறு நாள் காலை தன் புன்னகை குறையாமல் வந்து நின்றார். அது தான் சோலையப்பன் சார் !

அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எத்தனையோ கற்று கொள்ள முடிந்தது. கம்பெனி சட்டத்தில் தொடர்ந்து விவாதித்து-  அறிந்து கொள்ள என்னை தூண்டிய வண்ணம் இருப்பார்

தொழிலில் சின்னசின்ன விஷயத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு, சிக்கனமான வாழ்க்கை முறை, அலுவலகம், சாப்டர் என அனைத்து  நபர்களிடமும் அவர் காண்பித்த அன்பு, எந்த விழாவிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாங்கு, உதவி தேவைப்படுவோருக்கு தயங்காமல் சென்று உதவும் மனது என அவரது நற்குணங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்

அவர் எப்போதும் ஒரு மிக சிறந்த ஆல் ரவுண்டர் ஆக இருந்தார். அவரிடம் எனது துவக்க கால பயிற்சியை கற்றதில் மிகுந்த  பெருமிதம் கொள்கிறேன்..

9 comments:

  1. A nice senior person , his demise is a shocker to us.

    ReplyDelete
  2. Definitely a huge loss to CS fraternity..I can understand his positive & deep impact on so many Young & upcoming CS.That will be his legacy forever.

    ReplyDelete
  3. நான் எப்போதும் சார் முகத்தில் சிரிப்பு மட்டுமே பார்த்தேன்.

    ReplyDelete
  4. I was fortunate enough to have associated with such a wonderful personality. He was very simple yet stylish. He used to get along with any age group. His signature smile is his identity. Just can't imagine and digest his tragic end. But we her sure that he would have attained Moksha as he was a true human. Great Loss.

    ReplyDelete
  5. If god gives me an option to rewind surely i would have used the life line to revert the unbelievable tragedy and set right back to position.

    ReplyDelete
  6. A True Karma Yogi..i was fortunate to meet Sir last month. Never ceased to amaze me with his tireless effort and enthusiasm. Rest in peace

    ReplyDelete
  7. Im sharing this blog on my fb page

    ReplyDelete
  8. I also know him personally. Great Soul. Sudden loss always gives a big pain. RIP Sir. NAS

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...