ஒலிம்பிக்ஸ் நடக்கும் இந்நேரம் - எங்கள் ஊர் மாரத்தான் வீரர் பற்றிய நினைவுகள் ..
அவர் பெயர் - சப்போர்ட் ! நிஜப்பெயர் சுப்பிரமணியன் என்று நினைவு.. (தவறாகக் கூட இருக்கலாம்).
அதென்ன சப்போர்ட்? அவர் ஓடும்போது ஊர் முழுக்க அவருக்கு தான் சப்போர்ட் செய்யும் ! அவருக்காகவே கூச்சலிடும்!
சாதாரண தோற்றம்.. ஆறடிக்கு சற்று குறைவான உயரம். மிக அமைதியாக தான் இருப்பார். ஒரு கூட்டத்தில் வைத்து பார்த்தால் சராசரி மனிதர் போல தான் தெரியும்..
ஆனால் மைதானத்தில் அவரது வீச்சு.. அதனை சற்று விளக்குகிறேன்
சப்போர்ட் ஒரு பக்கா விளையாட்டு வீரர் - பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வார். பரிசுகள் வெல்வார். ஆனால் ரொம்ப ஸ்பெஷல் - மாரத்தான் ஓட்டம் தான்..
சப்போர்ட் என்று நினைத்தாலே உடனே நினைவுக்கு வருவது அவர் ஓடும் மாரத்தான் ஓட்டம்.. மற்றும் அப்போது கூடி நின்று பார்க்கும் மக்களின் ரீ ஆக்ஷன்
மாரத்தான் ஓட்டத்தில் - எங்கள் ஊர் மைதானத்தை 10 அல்லது 11 ரவுண்ட் ஓடி வரவேண்டும். துவக்கத்தில் சப்போர்ட் கடைசி ஆட்களில் ஒருவராக தான் இருப்பார். மக்கள் எந்த டென்ஷனும் ஆகாமல் "இது தெரிந்த கதை தானே" என்று பேசாமல் இருப்பார்கள். கடைசி சில ரவுண்ட் இருக்கும்போது சப்போர்டின் - சப்போர்ட்டகளுக்கே டென்சன் வந்து விடும். அப்போது தான் சப்போர்ட் வார்ம் அப் ஆகி சற்று வேகமெடுக்க உத்தேசிக்கிறார் என தெரியும்
கடைசி ரவுண்ட் ! அது தான் கிளைமாக்ஸ் .. மக்கள் அனைவரும் "சப்போர்ட்டு ! சப்போர்ட்டு !" என்று கத்த துவங்கி விடுவர்.. எங்கிருந்து தான் சேர்த்து வைத்திருப்போரோ அவ்வளவு எனர்ஜியை ! வெறி பிடித்த மாதிரி ஒரு ஓட்டம்
"சப்போர்ட்டு ! சப்போர்ட்டு !" குரல்கள் அரங்கை அதிரவைக்க, கடைசியிலிருந்து ஒவ்வொரு வீரராய் தாண்டி மக்கள் கைதட்டல், விசில்கள் இடையே - எப்போதும் மாரத்தானில் முதல் ஆளாய் தான் வருவார் சப்போர்ட் !
தமிழ் சினிமாவில் பார்க்க தகுந்த அட்டகாசமான காட்சியாய் இருக்கும். மக்கள் ஒவ்வொருவருக்கும் எதோ தானே வென்ற மாதிரி ஒரு மகிழ்ச்சி முகத்தில் தெரியும்..
100 மீட்டர் ஓட்டம், லாங் ஜம்ப், ஹை ஜம்ப் இவற்றிலும் அவர் கலந்து கொள்வார். பரிசுகள் வெல்வார். ஆனால் அவற்றில் எப்போதும் முதல் பரிசு வெல்வார் என சொல்ல இயலாது. அவற்றில் அவருக்கு மக்கள் ஆதரவும் மரத்தானில் இருக்கும் அளவு இருக்காது
மாரத்தானில் மட்டும்.. அந்த அரங்கில் பிற ஓட்ட காரர்களின் குடும்பத்தினர் எவரேனும் இருந்தால் அவர்களை தவிர, மீதம் அத்தனை பேரின் ஒட்டு மொத்த ஆதரவும் சப்போர்டுக்கு தான் !
சப்போர்ட் என்ன ஆனார்? என்ன வேலைக்கு சென்றார் ? எந்த தகவலும் இல்லை. முறையான பயிற்சியும் ஊக்குவிப்பும் இருந்திருந்தால் சப்போர்ட் இன்னும் உயரங்களை அடைந்திருப்பார் ..
நிஜமான Raw talent - தலை நகரங்களுக்கு வெளியே - இத்தகைய கிராமங்களில் தான் இருக்கிறது .
சப்போர்ட்.. எனது இளமை கால ஹீரோக்களில் மறக்க முடியாத ஒருவர் !
அருமையான மலரும் நினைவுகள் ஜி. செம...👏👏👏👏
ReplyDelete