Tuesday, April 26, 2011

சத்ய சாய்பாபா - ஒரு பார்வை

எழுதியவர்  தேவகுமார்



ன் அம்மா வீட்டவர்கள் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள். அவர்களின் தாக்கம் எனக்கு எப்போதும் உண்டு. அப்போது நான் சட்டம் முதல் ஆண்டு, 18 வயது. என் வகுப்பு தோழன், சத்யா சாய் பாபா கைகடிகாரம் ஒன்றை காற்றில் இருந்து வரவழைத்ததை சொன்னபோது, "ஏன் அவர் சுவர் கடிகாரத்தை வரவழைக்கவில்லை" என கேட்டேன். அவன் என் கன்னத்தில் பளார் என அறை விட்டான். ஒரு 18 வயது இளைஞனை சத்ய சாய் பாபா எப்படி இப்படி ஆட்கொண்டார், அவனுக்கு எப்படி கேள்வி கேட்காத நம்பிக்கை வந்தது? நான்கு வருடம் கழித்து அவனே என்னிடம் வந்து கன்னத்தில் அறைந்ததிற்கு மன்னிப்பு கேட்டான். "பாபாவை நான் இப்போ follow பண்றதில்ல, ஏமாந்துட்டேன்" என அவனே சொன்னான். என்ன ஆயிற்று?

டெல்லியில் உள்ள எனது தோழர் ஒருவர் சொன்ன கதை ஆச்சரியம் ஆனது. அவரின் காதல் தோல்வி சத்ய சாய் பாபாவை வைத்து நிகழ்ந்தது. என் நண்பரும் அவரது முன்னால் காதலியும் அவரவர் பெற்றோரிடம் தங்கள் காதலை சொல்ல, பெற்றோர்களும் ஒப்பு கொள்ள, ஒரே சந்தோசம். பெண் வீட்டார் சொன்ன ஒரு கண்டிஷன் என் நண்பருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அந்த கண்டிஷன், சத்ய சாய் பாபா இந்த திருமணதிற்கு ஒப்பு கொள்ள வேண்டும். பாபா ஏன் மறுப்பு சொல்ல போகிறார், அது ஒரு formality - ஆக தான் இருக்கும் என நினைத்து, புட்டபர்த்திக்கு பெண் வீட்டாரோடு போனார், என் நண்பர். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது, அவர்கள் கையில் ஒரு கடிதத்தோடு கூட்டத்தில் நிற்க வேண்டும், அந்த கடிதத்தில் திருமணத்தை பற்றி எழுதி இருக்கும். பாபா, அந்த கடிதத்தை கையில் வாங்கினால் அவருக்கு சம்மதம், இல்லை என்றால், அவருக்கு சம்மதம் இல்லை. இவர்களும் ஏழு நாட்கள் வரிசையில் நிற்க, பாபா கடைசிவரை கடிதத்தை வாங்க வில்லை. என் நண்பரின் திருமணமும் அந்த பெண்ணோடு நிகழவில்லை. of course, அதைவிட ஒரு அருமையான தோழியோடு அவருக்கு திருமணம் ஆகியது என்பது, வேறு விஷயம். எப்படி அந்த பெண் குடும்பத்தால் இப்படி கண்மூடி தனமாக பாபாவை நம்ப முடிந்தது, அவர்களை ஆட்படுத்தியது எது?

எப்படி, ஏன், எவ்வாறு என எல்லா கேள்விகளையும் கடந்து நின்றவர், சத்ய சாய் பாபா - அவரை நம்பியவர்களுக்கு. சிலருக்கு - எப்படி, ஏன், எவ்வாறு என எல்லா கேள்விகளாலும் துளைக்கப்பட்ட , பற்பல சிக்கல்களில் மாட்டிய , அவைகளுக்கான எந்த விதமான பதிலையும் தராத ஒரு "வித்தைகாரராகவே" அவர் காலமாகி இருக்கிறார். பலருக்கு - அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்கிற குழப்பம்தான்.

என்னை பொறுத்தவரை, அவர் செய்த சமூக சேவை அளவிட முடியாதது. இதய அறுவை சிகிச்சையை இலவசமாக மிக சிறந்த வசதிகளோடு எத்தனை பேரால் கொடுக்கமுடியும்? இத்தனை கல்வி கூடங்களை, இந்த சந்தை சமூகத்தில் எத்தனை பேரால், இலவசமாக நல்ல தரத்தோடு நடத்த முடியும்? இத்தனை அந்நிய செலாவணியை எத்தனை பேரால் சமூக சேவைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரமுடியும்? அரசாங்க திடங்களுக்காக எத்தனை சமய மடங்கள் பொருளுதவி செய்து இருக்கின்றன? இப்படி யாரும் செய்ததில்லை என்பதல்ல, செய்தவர்கள் குறைவு.

ஒன்றல்ல இரண்டல்ல, நூறல்ல - 750 கிராமத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தவர் சாய் பாபா (அந்த திட்டம் பெரிய தோல்வி என்று சொல்பவர்களும் உண்டு). அந்த கிராமங்களில், பெண் பிள்ளைகள் பிறந்தால் சந்தோஷ படுவார்களாம் - தண்ணீர் குடம் தூக்க இன்னொரு தலையும், இடுப்பும் கிடைத்ததே என ! அவர்கள் தண்ணீருக்காக மைல் கணக்கில் நடக்க வேண்டும். 45 ஆண்டு கால பிரச்சனையை ஒரு தனி மனிதரால் தீர்க்க முடிந்தது என்றால், அது அதிசயம் தான். ஒரு வேளை, இந்த பெரிய அதிசயத்தை நிகழ்த்தத்தான் அவர் மோதிரம் வரவழைப்பது, செயின் வரவழைப்பது என சின்ன சின்ன அதிசயங்களை செய்தாரோ? தெரியவில்லை.

இப்போது பாபா 40,000 கோடி சொத்தை விட்டு செல்கிறார், மிகப்பெரிய ஊழலும், வஞ்சகமும் அதை சுற்றி நிகழும். அது, பாபாவை சுற்றியிருந்த மர்மங்களை விட மோசமானதாக இருக்கும் என்பது எவ்வளவு நிச்சயமோ, அதே அளவிற்கு நிச்சயம் - பாபாவை சுற்றியிருந்த மர்மங்களை காலம் மறக்கடிக்கும்; அவர் செய்த காரியங்கள் நல்ல காரியங்கள் என்றால் அவை காலம் கடந்து நிற்கும் - என்பதும்தான்.

பாபாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

8 comments:

  1. சென்ற முறை அன்னா ஹசாரே; இந்த முறை சாய் பாபா. தேவா.. நீங்க பெரிய மனுஷங்க பத்தி தான் எழுதுவீங்களா? :))

    ReplyDelete
  2. Anonymous8:09:00 AM

    தண்ணீர் கொடுத்ததை விட வாழும் கடவுள் எனக் கூறியவர் ஒன்றையும் சாதிக்கவில்லை. தண்ணீருக்காக ஒரு ஓப் போடலாம் ! ஆனால் கடவுள் இறந்துவிட்டார் என ஓலம் போடம் முடியாது.

    ReplyDelete
  3. ஆஹா கமென்ட் எழுதிய பிறகு தான் பார்த்தேன் "சத்ய சாய்பாபா - ஒரு பார்வை எழுதியவர் தேவகுமார்", மோகன் குமார் அல்ல என்று. எப்படியோ, என் கமெண்ட்டை மாற்ற விரும்பவில்லை.

    அருமை. அருமை. இதை விட அருமையாக ஒருவரின் மறைவிற்கு பிறகு அவரது நிறை குறைகளை எடுத்து கூற முடியாது. திராவிடர் கழக தலைவர் திரு. கி. வீரமணி சாய்பாபா அவர்களின் மறைவிற்கு அறிக்கை ஏதும் விடுவாரா? அப்படி ஏதும் அறிக்கை விட்டால் அது எப்படி இருக்கும் என நான் நினைத்து பார்த்தேன் இரு நாட்களுக்கு முன். இதை அப்படியே அவர் செராக்ஸ் எடுத்து கொள்ளலாம்.

    தங்களுடைய நாத்திகவாத எண்ணங்களும், அதே சமயம் சமூகத்திற்கு நன்மை என்றால் அதற்காக ஆத்திகத்தையும் ஏற்க தயார் என்பதாக உள்ளது. கிட்டத்தட்ட எனக்கும் உங்கள் மனநிலைதான்.

    ReplyDelete
  4. Hi deva,

    Wonderful observation, and well written. Sad part is that the followers are talking about who will manage the money and nobody is talking about the establishments he has created. Hope all the good deeds (charity work) done by him does not end with him.

    Rgds
    Banuprakash

    ReplyDelete
  5. //இந்த பெரிய அதிசயத்தை நிகழ்த்தத்தான் அவர் மோதிரம் வரவழைப்பது, செயின் வரவழைப்பது என சின்ன சின்ன அதிசயங்களை செய்தாரோ?//

    தொண்டுகள் செய்வதற்கு இதெல்லாம் தேவையேயில்லையே? எத்தனையோ பேர் (பேர்கூட சொல்லாமல்) எத்தனையோ நற்காரியங்கள் செய்துதான் இருக்கிறார்கள்.

    எதுவானாலும், இனியும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் எல்லாம் (சர்ச்சைகளின்றி) தொடர்ந்து செயல்படுமானால் நல்லதே.

    ReplyDelete
  6. நல்ல பதிவு. தேவகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சியில் ஒரு தொழில் அதிபர் குடும்பம், தனது மகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பல நாள் காத்திருந்தும், சத்ய சாய் பாபாவின் ஆசி(அனுமதி) கிடைக்கவில்லை. அதனால், அந்தச் சிறுமி அறுவை சிகிச்சை செய்யாமலேயே இறந்து போக, அந்தக் குடும்பமே(உறவினருடன்) சேர்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அந்த நிகழ்வைப் பத்திரிகை வாயிலாக அறிந்து மிகவும் அதிர்ந்து போனேன். மேலும் அவர்களின் சொத்துக்களை சத்யா சாய் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தனர் என்பது வேறு விஷயம்.

    ReplyDelete
  7. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. இந்த விசயத்தில் சரி அல்லது தவறு என்று ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அதைத்தான் உங்களின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாபா டிரஸ்ட் - இன் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  8. Anonymous8:03:00 PM

    Puttaparthy Sai Baba was a fraud. Actually all the frauds do few goodthings to show the world that they are good people.Many contorvercies about him.Many years ago he was challenged by an Emglishman.This fraud man scared face the challenge and denied.Hindus will beleive any Kuppan and Subban as God.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...