Saturday, April 30, 2011

கோ .. எக்ஸ்பிரஸ் அவிநியூ - விமர்சனம்

இயக்குனர் கே. வி. ஆனந்த் என்னை எப்போதும் கவர்கிறார். முதல் படமான "கனா கண்டேன்" பார்த்து அசந்து போனேன். கந்து வட்டி பிரச்சனையை மனதில் அறைகிற மாதிரி எடுத்திருந்தார். இந்த படத்தில் பிரிதிவிராஜ் கேரக்டர் அட்டகாசம். தனது அலுவலகத்தில், பேசியவாறே ஜன்னல் பக்கம் போய் கை குழந்தையை தூக்கி எறிவதாக மிரட்டுவார் .. பார்க்கும் போது அதிர வைக்கும் காட்சி அது. வில்லன்கள் என்றால், பார்க்க கொடுமையாக இருப்பார்கள் என்பதில் விலகி ஹீரோவை விட அழகாய் வில்லன் பிரிதிவிராஜை காண்பித்தார்.

அயனிலும் மேக்கிங்கில் மிரட்டினார். எனக்கு பிடித்த மற்றொரு ஜாலியான படம் இது.   (அயன் படம் ஊட்டியில் இரவு காட்சி குளிரில் நடுங்கிய படி குடும்பத்துடன் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். நல்ல வேளை அப்போது பதிவெழுத ஆரம்பிக்கலை. இல்லாட்டி அதை பத்தி எழுதி உங்களை கொன்னுருபபேன்)

சரி கோவிற்கு வருவோம். இந்த வருடத்தில் வந்த படங்களில் நிச்சயம் இதுவும் ஒரு நல்ல entertaining படம். படத்தில் பிடித்ததும், பிடிக்காததும் இதோ:

பிடித்தது:


1. தமிழ் சினிமாவில் உள்ள காதல், பழி வாங்கல், மதுரை போன்ற சமாசாரம் இல்லாமல் வித்யாசமான கதை களனுக்கு முதல் பாராட்டு. கதை தேர்வில் கே.வி. ஆனந்த் மூன்றாம் முறையாய் இந்த படத்திலும் அசத்தியுள்ளார்.

2. ஷங்கர் டைப் "Larger than Life" ஹீரோ உள்ள கதை. ஜீவா இந்த பாத்திரத்திற்கு அருமையாக பொருந்துகிறார். நடிக்கிற மாதிரியே தெரிய வில்லை! Very natural ! கே.வி.ஆனந்தின் அனைத்து ஹீரோக்களும் மிக மிக புத்திசாலியாய் இருப்பார்கள். இங்கும் அதுவே தொடர்கிறது.

3. பத்திரிக்கையையும், ரிப்போர்டர் & கேமராமேன் இவர்களை சுற்றி கதை செல்வது சுவாரஸ்யமாக உள்ளது. எடிட்டர், அசோசியட் எடிட்டர் என நாம் அதிகம் பார்க்காத கேரக்டர்கள். ஆன்மிகம் எழுதும் நிருபர், தலைமை போட்டோ எடிட்டர் ஆங்காங்கு பேசுவது செம காமெடியாக உள்ளது. (நிற்க. இப்படிப்பட்ட பத்திரிக்கை ஆபிஸ் பார்க்கவே முடியாது என யுவகிருஷ்ணா எழுதியதை ரசித்தேன். ஆனால் அந்த விமர்சனம் முழுக்கவே ஒரு நிருபரின் பார்வையில் இருந்தது. சாதாரண மனிதனான எனக்கு அந்த ஆபிஸ் பிடிக்கவே செய்தது)

4 . அட்டகாசமான பாடல்கள். ஒரு சில பாடல் தவிர்த்து அதை படமாக்கிய விதமும் லொகேஷனும் ரசிக்கும் படியே இருந்தது.(பாடல்களில் ஹீரோயினை மட்டும் பார்க்காதீர்கள்)

5 . அஜ்மல் பாத்திரம் மிக சுவாரஸ்யம். படம் செல்ல செல்ல இந்த கேரக்டர் மாறி கொண்டே போவது அழகு. இத்தகைய powerful கேரக்டர் இருக்கும் போது அதையும், தானே செய்ய வேண்டும் என தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் கூத்தடிப்பார்கள். நல்ல வேளை இங்கு அப்படி நடக்க வில்லை. 

6. விறுவிறுப்பான திரைக்கதை. ஒரு சில நேரம் தவிர்த்து பெரும்பாலும் படம் செம ஸ்பீடாய் போகிறது. குறிப்பாய் கடைசி ஒரு மணி நேரம், ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் தான். ஆனாலும் விறுவிறுப்பு குறைய வில்லை.

7. பியா தமிழ் சினிமாவின் வழக்கமான லூசு ஹீரோயின் என்றாலும் ரசிக்கும் படி bubbly ஆக உள்ளார்.

இனி பிடிக்காதவை: 

1 . மிக பெரிய ஏமாற்றம் ஹீரோயின் கார்த்திகா. படம் வெளியாகும் முன் போட்டோவில் பார்த்த போதே ஈர்க்க வில்லை. (சிம்பு இந்த படத்தில் நடிக்காததற்கு முக்கிய காரணம் இவரை மாற்ற சொன்னதே என கேள்வி). அபிநயஸ்ரீ என்ற ஒரு நடிகை. பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு மறைந்து மறைந்து கிளி மூலம் தகவல் அனுப்புவாரே. அவரை போலவே கார்த்திகாவும் இருப்பதாக எனக்கு எண்ணம். நீங்களே பாருங்கள்


ஒரே மாதிரி இருக்காங்களோ இல்லையோ, ரெண்டு பேரும் ஹீரோயினாக ஜொலிக்க சான்ஸ் இல்லை.

நிற்க. இந்த கார்த்திகா என்கிற பெயரில் மட்டும் எத்தனை நடிகைகள் தெரியுமா? 

i) பூவிழி வாசலிலே படத்தில் நடித்த (அழகிய பெரிய கண்ணுள்ள) ஹீரோயின் பெயர் கார்த்திகா
ii) தூத்துக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திகா(கருவாப்பையா..கருவாப்பையா பாட்டு நியாபகம் இருக்கா?)
iii) திண்டுக்கல் சாரதி பட ஹீரோயின் கார்த்திகா

கடைசி ரெண்டு பேரும் இன்னும் கூட நடித்து கொண்டிருக்கும் போது இப்போது இன்னொரு கார்த்திகா. (போட்டோ எடுத்து பதிவில் போட, தேடும் போது தான் இந்த குழப்பம் தெரிந்தது)

2. அயனில் ஹீரோயினின் அண்ணன் இறந்த அடுத்த காட்சியில் ஹீரோ & ஹீரோயின் " நெஞ்சே நெஞ்சே " என டூயட் பாடுவார்கள். அப்போதே இதனைஅனைவரும் திட்டினர். மீண்டும் இந்த படத்தில் ஜீவா- கார்த்திகா,  பெஸ்ட் பிரன்ட் பியா இறந்து, அடுத்த நிமிஷம் டூயட் பாடுகிறார்கள். ஆனந்த் சார் ஒரு முறை தப்பு செய்தால் சரி.. மறுபடி மறுபடி தப்பு செய்யலாமா?

3. பியாவை ஒரு பத்து வயது சின்ன பையன் ஜொள்ளு விடுற மாதிரி காட்டுவது. ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை. மீண்டும் மீண்டும் அப்படி காண்பிக்கிறார்கள் . அதிலும் பியாவை அரைகுறையாய் பார்க்க அவன் அலைவதாய் காண்பிப்பதை தவிர்த்திருக்கலாம். சின்ன பசங்க மனதை அந்த காட்சி நிச்சயம் கெடுக்கும்.

4. இந்த கதைக்கு கிளைமாக்ஸ் உணர்வு பூர்வமாய் இருந்திருக்க வேண்டும். கிளைமாக்ஸ் சண்டையை தவிர்த்திருக்கலாம்.
**
மொத்தத்தில் குறைகள் குறைவாய், நிறைகள் நிறைய உள்ள படம். முடிந்தால் பாருங்கள்
**
எக்ஸ்பிரஸ் அவிநியூ 

முதல் முறை இங்கு செல்கிறோம். எஸ்கேப் என்ற பெயரில் எட்டு தியேட்டர் மூன்றாம் மாடியில் உள்ளது. நல்ல சவுண்ட் சிஸ்டம். முதல் நாள் முதலே ரூபாய் 120 டிக்கெட் விலை சத்யம் மற்றும் அதன் குழுமமான இந்த எஸ்கேப்பிலும் மட்டுமே!  காலை (சிறப்பு) காட்சி சென்றதால் பிஸ்சா போன்ற சமாசாரம் இடைவேளையில் சாப்பிட வேண்டியாதாயிற்று. அவை சற்று காஸ்ட்லி தான். வெளி உணவு எதுவும் ( ஸ்நாக்ஸ் உட்பட) உள்ளே அனுமதி இல்லை (பின்னே அவங்க எப்படி சம்பாதிக்கிறதாம்?)  பார்கிங் சார்ஜ் ஒவ்வொரு மணிக்கும் என கணக்கிட்டு எக்கச்சக்கம் வாங்குகிறார்கள். இதில் சனி, ஞாயிறு என்பதால் இன்னும் அதிக சார்ஜ் !

எக்ஸ்பிரஸ் அவிநியூவில், சாப்பாட்டு கடைகளை தவிர்த்து, துணி, பேக் மற்றும் செருப்பு கடைகள் தான் உள்ளன. விலை செம செம அதிகம் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிக் பஜார் தரை தளத்தில் உள்ளது. இங்கு மட்டும்விலை ஓரளவு கம்மி.

சிட்டி செண்டர் மற்றும் எக்ஸ்பிரஸ் அவிநியூ இரண்டுமே ஒரே மாதிரி தான். சுத்தி பார்த்து ரசிக்கலாமே ஒழிய பொருட்கள் வாங்க லாயக்கில்லை.

ஒரு முறை எஸ்கேப்பில் சினிமாவிற்கு சென்று விட்டு அப்படியே எக்ஸ்பிரஸ் அவிநியூவும் சுத்தி பார்த்து விட்டு வரலாம்...ஒரு வித்தியாச அனுபவத்திற்காக.

9 comments:

  1. உண்மை தான். "கனா கண்டேன்" படம் பார்த்து நானும் வியந்தேன். "அயனும்" அப்படியே. நிச்சயம் கே.வி.ஆனந்த மசாலா படங்களையும், மாறுப்பட்டு தருகிறார். கதை தேர்வு சிறப்பாக செய்கிறார். சிம்புவை விட ஜீவா சிறப்பாக செய்திருக்கலாம். ஜீவாவிடம் காணப்படுகிற சாதாரண தோற்றம் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. நன்றி தமிழ் உதயம் தங்கள் கருத்துக்கு.

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.

    //இந்த கார்த்திகா என்கிற பெயரில் மட்டும் எத்தனை நடிகைகள் தெரியுமா?//

    இருந்துட்டுப் போகட்டுமே. இனி இவர், கோ கார்த்திகா என்று அழைக்கப்படுவார். எப்படி எனது தீர்ப்பு:-)))?!

    //சிட்டி செண்டர் மற்றும் எக்ஸ்பிரஸ் அவிநியூ இரண்டுமே ஒரே மாதிரி தான். சுத்தி பார்த்து ரசிக்கலாமே ஒழிய பொருட்கள் வாங்க லாயக்கில்லை//

    சரி, ஒருதரம் போய் சுத்திப் பார்த்துட்டு வந்தாப் போச்சு!

    ReplyDelete
  4. மிக யதார்த்தமான எழுத்து. "சித்திரமும் கைப்பழக்கம்.." என்பது போல் என்னவோ மேஜிக் செய்து இப்போவெல்லாம் (அப்போ முன்னாடி இல்லையான்னு கேட்டு என்ன தர்ம சங்கடப்படுத்தாதீங்க ஹி ஹி :) ரொம்ப சிம்பிளாக அழகாக எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  5. நன்றி அமைதி அப்பா. நல்ல தீர்ப்பு தந்தமைக்கு. :))
    **
    நடராஜ்: மிக்க நன்றி. பின்னூட்டங்கள் அதிகம் இல்லை என்பது சற்று வருத்தம் தரும்போது உங்களை மாதிரி மிக ஊக்குவிக்கும் ஒரு சிலரால் தான் தொடர்ந்து எழுத முடிகிறது.

    எனக்கு சிம்பிளாக மட்டும் தான் எழுத தெரியும். இது ப்ளஸ்ஸா மைனஸா தெரிய வில்லை. நீங்கள் சொன்னது போல் எழுத எழுத கொஞ்சம் நன்றாக வருகிறது போலும்.

    நன்றியும் மகிழ்ச்சியும்

    ReplyDelete
  6. கார்த்திகாவைப் பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று நினைத்தேன். நிச்சயம் பழைய ராதா இல்லை. அபிநயஸ்ரீ பற்றி படித்ததும் 'ஆமாமோ' என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  7. ஸ்ருத்திகா மாதிரி இருக்கிறாரோ கார்த்திகா என்று நான் நினைத்தேன்!

    ReplyDelete
  8. இப்போது தஞ்சைக்கு வந்திருப்பதால் என்ன படம் தியேட்டரில் போய்ப்பார்க்கலாம் என்று விசாரித்தபோது அனைவரும் சொன்ன பதில் 'கோ' தான். உங்கள் விமர்சனமும் உடன் சென்று பார்க்கத் தூண்டுகிறது. நல்லதொரு விமர்சனத்திற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  9. ஸ்ரீராம்: நன்றி உங்களுக்கும் அப்படி தோணுச்சா? ரைட்டு
    **
    மாதவி: அட ஆமாங்க நீங்க சொன்ன பிறகு அந்த சாயலும் தெரியுது
    **
    மனோ மேடம். தஞ்சை வந்துள்ளீர்களா? மகிழ்ச்சி. ராணி பேரடைஸ் தியேட்டர் அங்கு மிக நன்றாக உள்ளதாக அறிகிறேன். ஆனால் என்ன படம் நடக்குதுன்னு தெரியலை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...