Friday, June 3, 2016

பொது நல வழக்கு : ஒரு பார்வை

பொது நல வழக்கு என்றால் என்ன?

பொதுவாக எந்த வழக்கையும் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் தாக்கல் செய்ய முடியும் . இதனை சட்டத்தில் Locus standi என்று கூறுவார்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வழக்கு பதிவு செய்தால் இதனை பதிவு செய்ய என்ன Locus standi இருக்கிறது என்று கேள்வி எழும்.



ஆனால் பொது நல வழக்கு என வரும்போது -பாதிக்கப்பட்டவர் - தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் வழக்கு தாக்கல் செய்யலாம். சில நேரங்களில் - நீங்கள் எந்த விதத்திலும் பாதிக்கபடா விட்டாலும் வழக்கு பதியலாம்

தனி நபர்கள் அல்லது கன்ஸ்யூமர் அமைப்புகள் - சில தொண்டு நிறுவனங்கள் (NGO ) இத்தகைய வழக்குகள் பதிவு செய்கின்றனர்

இந்திய சுதந்திரத்துக்கு பின் - எமர்ஜென்சி காலம் வரை பொது நல வழக்குகள் அதிகம் தாக்கல் செய்யப்படவில்லை; எமேர்ஜன்சி காலத்திற்கு பின் நீதிபதி கிருஷ்ணய்யர் மற்றும் நீதிபதி பகவதி முதன்முதலில் பொது நல வழக்கு ஒன்றை ஏற்று தீர்ப்பு தந்தனர். அதன் பின் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனும் போது தந்தி மற்றும் கடிதங்களை ஏற்று நீதிமன்றம் பொது நல வழக்கை நடத்தியுள்ளது

என்னென்ன காரணங்களுக்காக பொது நல வழக்கு பதிவு செய்யப்படுகிறது ?

பொது மக்களை பாதிக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் இத்தகைய வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம்.

உதாரணமாய் பொது இடத்தில் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால் பொது நல வழக்கு பதிவு செய்யலாம். போலவே நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும்போது பல நேரங்களில் வழக்கு பதிவு செய்து - அந்த நீர் நிலைகளை காக்க நீதி மன்றங்கள் ஆணை பிறப்பித்துள்ளன

சில இடங்களில் மனிதர்களை கொத்தடிமை போல வேலை வாங்குவார்கள் அந்த நேரங்களில் அதனை காணும் யார் வேண்டுமானாலும் பொது நல வழக்கு தொடரலாம் திருவள்ளூர் அருகே செங்கல் சூளைகளில் பலர் கொத்தடிமையாக வேலை செய்தனர் என்று வழக்கு தொடரப்பட்டு அவர்கள் காப்பற்றப்பட்டதை செய்தி தாள்களில் படித்திருக்கலாம்

சுற்று சூழல் சார்ந்து பல நேரங்களில் இவ்வழக்கு தொடரப்படுகிறது. குறிப்பாக சாயப்பட்டறை கழிவுகள் வெளியேறுவதும் அதனால் நீர் மாசுபடுவதும் தடுக்க பல நேரங்களில் நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்துள்ளன.

குழந்தை தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி புரிவது தெரிந்தாலும் இத்தகைய வழக்கு தொடர முடியும்

தங்கள் தனிப்பட்ட பயனுக்காக - சிலர் வழக்கு தொடர்ந்து, அதனை " பொது நல வழக்கு " என நிறுவ முயன்றால் நீதிமன்றங்கள் வழக்கை தள்ளுபடி செய்வதுடன் - அபராதமும் விதிக்கும் வாய்ப்புண்டு !

சொல்ல போனால் - சிலர் இத்தகைய வழக்குகளில் கிடைக்கும் உடனடி புகழை விரும்பி தேவையற்ற பொது நல வழக்குகள் பல பதிவு செய்தனர். சுப்ரீம் கோர்ட் அப்போதைய  தலைமை நீதிபதி கப்பாடியா இத்தகைய போக்கை கண்டித்ததுடன் - இப்படி தேவையற்ற வழக்கு தொடர்ந்தால்  அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங் அவர்களும் இப்படி தேவையற்ற வழக்குகள் தொடர்வது பற்றி வருந்தி, இவற்றை தடுக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்றார் !!

எந்தெந்த விஷயங்களில் பொது நல வழக்கு தொடரலாம்? எதற்காக  பொது நல வழக்கு தொடர முடியாது? 


1. அடிமை தொழிலாளிகளாக (Bonded labour) நடத்தப்படும் போது
2. கவனிப்பாரற்ற குழந்தைகள் சம்பந்தமாக 
3. தின கூலிகளாக வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படாத போது 
4. சிறையில் கொடுமை படுத்தப்படுவதாக வரப்படும் புகார்கள் குறித்து 
5. பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை 
6. தாழ்த்தப்பட்டோர் மீது - சக கிராமத்தார் செய்யும் கொடுமைகள் 
7. சுற்று சூழல் பாதிக்கப்படும் வழக்குகள் 

கீழ்கண்ட விஷயங்களில் பொது நல வழக்கை ஏற்க வேண்டாம் என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது 

1. வீட்டு ஓனர் - குடியிருப்போர்  இடையே உள்ள வழக்குகள் 
2. பென்ஷன்-கிராஜூவிட்டி சம்பந்தமான வழக்குகள் 
3. மருத்துவ, இஞ்சினியரிங் அல்லது பிற கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாக 
4. நீதி மன்றத்தில் வழக்கு தாமதம் ஆகிறது என பதிவு செய்யப்படும் வழக்குகள் 

பொது நல வழக்கு யார் பதிவு செய்யலாம்? யாருக்கு எதிராக பதியலாம் ?

பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் சார்பாக பிறர் பதிவு செய்யலாம். 

வழக்கு அநேகமாய் மாநில, மத்திய அரசாங்கத்தை எதிர்த்து தான் பதிவு செய்யப்படும். சில நேரங்களில் அரசாங்க அனுமதியுடன் தனியாரை வழக்கில் சேர்க்கலாம் 

உதாரணமாக ஒரு நிறுவனம் கழிவுகளை ஆற்றில் கலந்து அதனால் ஆறு மாசுபடுகிறது எனில், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காத அரசாங்கள் மேல் வழக்கு போட்டுவிட்டு - அந்த நிறுவன இயக்குனர்களை வழக்கில் சேர்க்கலாம்.. 

பொது நல வழக்கு எங்கு தாக்கல் செய்யபடுகிறது? பிற நடைமுறை விஷயங்கள்? 

பொது நல வழக்கு பெரும்பாலும் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ரிட் பெட்டிஷன் எப்படி தாக்கல் செய்யபடுகிறதோ அதே நடைமுறை தான் இத்தகைய வழக்கிற்கும். 


2 G ஊழல் சம்பந்தமான வழக்கு, ரிசர்வேஷன் சம்பந்தமான மிக முக்கிய தீர்ப்பு, சில பெரிய நிறுவனங்கள் கழிவு நீரை ஆற்றில் கலந்தபோது எடுத்த நடவடிக்கைகள் போன்றவை - இந்தியாவில் நடந்த  மிக முக்கியமான பொது நல வழக்குகளாகும்.

 நிறைவாக 

பொது நல வழக்கு - சாதாரண மனிதர்கள் உரிமை பாதிக்கப்படுகையில் பயன்படும் மிக அற்புத விஷயம்.. அதே நேரம் தேவையற்ற வழக்கு பதிவானால் நீதிபதியின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம் !

8 comments:

  1. விரிவான விளக்கம்! சிறந்த பயனளிக்கும் பதிவு! நன்றி!

    ReplyDelete
  2. நிறைய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். இவ்ளோ இருக்கா பொதுநல வழக்கில். :)

    ReplyDelete
  3. எவ்வளவு செலவு ஆகும் வழக்கு தொடர

    ReplyDelete
  4. எவ்வளவு செலவு ஆகும் வழக்கு தொடர

    ReplyDelete
  5. மத்தியத் துணை ராணுவத்தினர்,ஓய்வுக்குப்பின் படைவீரர்களுக்கான சலுகைகளை வேண்டி, பொதுநலவழக்குத் தொடர இயலுமா?

    ReplyDelete
  6. ஐயா இப்போது திரு.தினகரன் தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார் என தெரியவந்ததால்...இவர்கள் இதே போல் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது என்றும். ...இன்னும் பல குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி படுகிறோம் அதனை வைத்து ஆட்சி கலைக்க பொது நல வழக்கு பதிவு செய்ய முடியுமா.......

    ReplyDelete
  7. எனக்கு மெயில் மூலம் அனுப்புங்கள் ஐயா நன்றி

    ReplyDelete
  8. penkal ella kovilkalilum poojai seiya anumathi kettu valakku thodaralama

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...