Sunday, January 16, 2011

டிவி: பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை

நான் பங்கு பெற்ற நீயா நானா இன்று (16/01/2011) இரவு ஒன்பது மணிக்கு விஜய் டிவியில் ஒளி பரப்பாகிறது. முடிந்தால் பாருங்கள் 
***
டிவி சேனல்களுக்கு பொங்கல் தான் மிக கஷ்டமான (challenging ) நேரம் என நினைக்கிறேன். பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாளைக்கு, ஒவ்வொரு நாளும் குறைந்தது 12 மணி நேரம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யணுமே! இதில் ஜெயா டிவி போகி அன்றே சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சு நாலு நாள் கொண்டாடுவாங்க!!  இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் எப்படி இருந்தது என ஒரு பார்வை. 

சன் டிவி 

* பொங்கல் வைக்கும் நேரத்தில் "சுப்ரமணியபுரம்" படத்தை மூன்றாவது முறையா போட்டு கொண்டிருந்தார்கள். நல்ல படம் தான்! ஆனால் வன்முறை, ரத்தம் என நல்ல நேரத்தில் பார்க்க யாரும் விரும்புவார்களா என்று கொஞ்சம் யோசித்திருக்கலாம் !

* கடந்த சில வருடங்களாகவே பண்டிகை எது என்றாலும் வடிவேலுவின் பேட்டி ஒன்று சன்னில் தவறாமல் வந்து விடும். இந்த பொங்கலும்  விதி விலக்கல்ல. அவரும் வழக்கம் போல பேசி,  பாடுவார். மாத்தி யோசிங்கப்பூ! 

* பொங்கல் மாலை "அயன்" போட்டார்கள். கிட்ட தட்ட ரெண்டு வருஷமாச்சு படம் வந்து! இப்போ தான் " புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் " என சன் டிவியில் வெளியிடுகிறார்கள். சரி பார்த்து நாளாச்சே என உட்கார்ந்தால், விளம்பரம், செய்திகள் என கொன்னுட்டாங்க. ஒரு உதாரணம்: ஆறு மணிக்கு போட்ட படத்தில் ஹீரோயின் தமன்னா வந்த போது மணி 7 .45 !!  (படத்தில் தமன்னா படம் ஆரம்பிச்சு இருபது  நிமிடத்தில் வந்துடுவார். இங்கு அதற்கு இவ்வளவு நேரமானது!!) 

மாட்டு பொங்கல் அன்று காலை " அருணாசலம்" படம் !  எத்தனாவது முறையாய் போடுகிறார்கள் என்று கணக்கே இல்லை. ஆயினும் நிறைய மக்கள் பார்த்தது பக்கத்துக்கு வீடுகளில் இருந்து வந்த சத்தத்தில் தெரிந்தது. 

"பட்டிக்காடா பட்டணமா" என்று சில பல ஆண்டுகளாகவே ஒரு இசை நிகழ்ச்சி பொங்கலன்று நடத்தி வருகிறார்கள். முன்பெல்லாம் கங்கை அமரன் நடத்துவார். இப்போது அவரை காணும். செட் முதற் கொண்டு மற்ற விஷயங்கள் (ரெண்டு அணி, நின்று கொண்டே பாடவும், ஆடவும்  செய்வார்கள்) மாறவே இல்லை. 

* மாட்டு பொங்கலன்று போட்ட புது படம் "சுறா" !!  வேணாம் விடுங்க.. விஜய் ரசிகர்கள் இப்போ ரெண்டு நாளாதான் ("காவலன்")  கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க விட்டுடுவோம் . என்ன இருந்தாலும் விஜய்க்கு பொங்கல்( ஒரு சில படங்கள் தவிர்த்து) ராசியாய் தான் உள்ளது போலும்!!

விஜய் டிவி

* ஒரு அதிசயம் கவனித்தீர்களா! இந்த வருடம் பொங்கலில் மிக புது படமாய் போட்டது  விஜய் டிவி தான்.  வெளி வந்து சில மாதங்கள் ஆன " சிக்கு புக்கு" மற்றும் அய்யனார் !! (என்ன ஒன்று இரண்டுமே தோல்வி படங்கள் ) பார்க்காத படங்கள் என்பதால் இவற்றை சற்று பார்த்தோம். சிக்கு புக்கு விளம்பர இடைவேளையின் போது வேறெங்காவது சென்று விட்டு பின் நெடு நேரம் சென்று திரும்ப வந்தாலும் கதை எங்கும் நகரலை. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு பக்கம் ஆர்யா- ஸ்ரேயா பஸ்- பைக்- ஜீப் என மாறி மாறி செல்ல, மறுபக்கம் பழைய ஆர்யா காதல் கதை ஒரே மாதிரி தான் போனது. முடிவில் ரெண்டு கதைக்கும் சேர்த்து வைத்த ஒரு சிறு லிங்க் மிஸ் பண்ணாமல்  பார்த்தோம் . (மறு படி போட்டால் பார்க்க முடியாது சாமி!!)

* பொங்கல் சிறப்பு நீயா நானாவில் " சினிமாவில் அழகு அன்றும் இன்றும்" என ஜல்லி அடித்தனர். இயக்குனர் சரண், அமுதன் போன்றோரும் நடிகர்கள் பானுசந்தர், சிபி, குயிலி, ரேகா போன்றோரும் வந்திருந்தனர். பானுசந்தர் ரொம்ப (மத்தவங்களை பேச விடாம) பேசினார். இதில் நிறைய கருத்துகள் பெண்களுக்கு எதிரானவை! கோபி நாத் அவரை எக்கச்சக்கமா  பேச விட்டுட்டு அப்புறமா, "இந்த கருத்துகளை ஏத்துக்க முடியாது" என்றார். நிகழ்ச்சி முடியும் முன் பாதியில் அமுதன்,   பானுசந்தர் போன்றோர் காணாமல் போய் விட்டதால் சேர்கள் காலியாய் இருக்கும் நிலை நீயா நானாவில் வந்தது ! நம்மையும் கொட்டாவி விட வைத்தது!


ஜெயா டிவி 

* ஹரியுடன் நான் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி என போட்டுட்டு பாடிய பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். இதில் சில பாடல்களுக்கு பின்னாலே ஆடியவர்கள் சிலம்பு சுற்றி காட்டினர். அது மட்டும் பொங்கல் அன்று நமது பாரம்பரிய கலைகளை நினைவு படுத்தும் வண்ணம் இருந்தது.  

* சிறப்பு படம் சூர்யா, ஜோதிகா நடித்த "மாயாவி" ..ஏனுங்க ஜோ நடிக்கிறதை நிறுத்தியே பல வருஷம் ஆகுதே.. இது எப்ப வந்த படம்ங்க?? 

* "கமல் ஹாஸ்யம்" என்ற தலைப்பில் பொங்கல் அன்று காலை முழுதும் கமல் & கிரேசி மோகன் ஜெயா டிவியில் பேசி கொண்டிருந்தனர். சோ, மௌலி போன்றோரை கூட்டி உட்கார வைத்து சில கேள்விகள், ஜோக்குகள் என ஓட்டினர்.  கமல் ஒவ்வொருவரிடமும் " பிளட் லைன் அப்படின்னு சொல்லுவாங்க. அது மாதிரி இங்க் லைன்னா அது எனக்கு உங்களை மாதிரி ஆட்கள் கிட்டேயிருந்து தான் வந்தது " என அலுக்காமல் சொல்லி கொண்டிருந்தார். (அவர் தான் எல்லாரிடமும் அதே வரி சொன்னார் என்றால் சேனலாவது எடிட் செஞ்சிருக்க கூடாதா??)

கலைஞர் டிவி 

* இந்த பொங்கலில் பல டிவி-க்கள் போட்ட படங்களில் உருப்படியான படம் கலைஞரில் வந்த மதராச பட்டினம் தான். இது வரை பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து பழைய சென்னையை ரசித்திருப்பார்கள்! 

மேலும் கோரி பாளையம் என்ற ரத்தம் தோய்ந்த படமும் ஆதவன் என்ற (நயன் தாராவை பார்த்து) நாம்  தெறித்து ஓடும் படமும் கலைஞரில் போட்டார்கள். இந்த படங்கள் வந்த போது அந்த சேனல் இருந்த பக்கமே போகலை.. 

* பொங்கல் அன்று காலையிலேயே திரு. க. அன்பழகன் தலைமையில் "கலைஞரின் பெருமைக்கு காரணம் "அதுவா இதுவா எதுவா" என மூன்று தலைப்புகளில் சுப. வீர பாண்டியன், கி. வீரமணி போன்ற "நடு நிலையாளர்கள்" ஒன்பது பேர் பேசினார்கள். நல்ல வேளை கடைசியில் தீர்ப்பு சொல்லும் நேரம் தான் பாத்தேன். முதல் வரிசையில் கலைஞர் மிக மகிழ்ச்சியோடு!! (சினிமா காரர்கள் பாராட்டு நிகழ்ச்சி பார்த்து போர் அடிச்சிடுச்சி போல.. அதான் பட்டி மன்றம் !) பேராசிரியர் " பேசிய ஒன்பது பேரும் நவ ரத்தினங்கள்.. அவர்கள் சொன்ன அத்தனையும் கலைஞரின் பெருமைக்கு காரணம்" என்ற அரிய தீர்ப்பு தந்து முடித்து வைத்தார். 


மொத்தத்தில் ..நீங்கள் வெளி நாடு & வெளியூர் என இருந்து இந்த நிகழ்ச்சிகளை பார்க்கா விடில், வருந்த வேண்டிய அவசியமே இல்லை. அப்படி "பார்க்கலையே" என வருந்தும் அளவு இந்த நிகழ்ச்சிகள் இல்லை. அது தான் உண்மை. 

எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் அருகிலுள்ள "மூன்றாம் தலைப்பு" என்ற மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு மாட்டு வண்டிகளில் கூட்டமாக சென்று பொங்கல் கொண்டாடிய நாட்கள் மனதின் ஓரத்தில்...வலிக்கிறது. 

20 comments:

  1. நல்ல விமர்சனம். நான் அவ்வளவாக நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை

    ReplyDelete
  2. //இந்த நிகழ்ச்சிகளை பார்க்கா விடில், வருந்த வேண்டிய அவசியமே இல்லை. அப்படி "பார்க்கலையே" என வருந்தும் அளவு இந்த நிகழ்ச்சிகள் இல்லை. அது தான் உண்மை.//

    அப்படிதான் இருக்குமென தெரிந்துதான் அதன் பக்கமே போகவில்லை:))!

    //எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் அருகிலுள்ள "மூன்றாம் தலைப்பு" என்ற மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு மாட்டு வண்டிகளில் கூட்டமாக சென்று பொங்கல் கொண்டாடிய நாட்கள் மனதின் ஓரத்தில்...வலிக்கிறது.//

    எல்லோரும் சிறுவயது பண்டிகை நினைவுகளுடன், இப்போதைய அவசர வாழ்வில் இதுவே முடியுமென்கிற சமாதானங்களுடன்...

    நன்றாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:)!

    ReplyDelete
  3. // பொங்கல் அன்று காலையிலேயே திரு. க. அன்பழகன் தலைமையில் "கலைஞரின் பெருமைக்கு காரணம் "அதுவா இதுவா எதுவா" என மூன்று தலைப்புகளில் சுப. வீர பாண்டியன், கி. வீரமணி போன்ற "நடு நிலையாளர்கள்" ஒன்பது பேர் பேசினார்கள். நல்ல வேளை கடைசியில் தீர்ப்பு சொல்லும் நேரம் தான் பாத்தேன். //

    நான் உங்களைவிட அதிர்ஷ்டமானவன்..
    ஹி.. ஹி.. முடிவையும் நான் பார்க்கவில்லை...

    ReplyDelete
  4. // நான் பங்கு பெற்ற நீயா நானா இன்று (16/01/2011) இரவு ஒன்பது மணிக்கு விஜய் டிவியில் ஒளி பரப்பாகிறது. முடிந்தால் பாருங்கள் //

    பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..
    நீங்கள் சொன்னீர்கள் "முழுமையான கேட்டவனும் இல்லை, முழுமையான நல்லவனுமில்லை "

    ஆமாம், நோபடி ஈஸ் பெர்பெக்ட்
    --(16th jan 2011, 21:20 Hrs IST)

    ReplyDelete
  5. //நான் பங்கு பெற்ற நீயா நானா இன்று (16/01/2011) இரவு ஒன்பது மணிக்கு விஜய் டிவியில் ஒளி பரப்பாகிறது. முடிந்தால் பாருங்கள்//
    கண்டிப்பாக பார்க்கிறோம்.

    ReplyDelete
  6. நல்ல வேலை. எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு இல்லாததால் தப்பித்தோம்!

    ReplyDelete
  7. எல்லா சேனலிலிம் மொக்கை. வசந்த் டிவியில் நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடி ஒளிபரப்பு நன்றாக இருந்தது. இன்று காலை 10.30 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.

    ReplyDelete
  8. தெரியாத்தனமா கமல் & க்ரேஸி நிகழ்ச்சியை (கொஞ்சம்) பார்த்துட்டு போதுண்டா சாமின்னு ஒடிட்டேன்.

    மொக்கை நிகழ்ச்சிகளாப் போடுவது நல்லதுதான். அப்பதான் மக்கள் தொல்லைக்காட்சிகளை ஒதுக்கிட்டு குடும்பம் சுற்றம் நட்புகளுடன் விழாக்களை கொண்டாடுவாங்க.

    ReplyDelete
  9. வக்கீல் சார், ஆச்சர்யமா இருக்கு. இம்புட்டு பிஸியாவா இருக்கீங்க? இப்படி சேனல் வாரியா, நாள் வாரியா எல்லா நிகழ்ச்சிகளின் விமர்சனங்களையும் எழுதுற அளவுக்கு... வெளியே எங்கயுமே போலியா? உங்க ஹவுஸ்பாஸ் ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப நல்லவங்க போல, எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்க விட்டிருக்காங்களே!! :-))))))))

    (joke only; no offence pls)

    ReplyDelete
  10. எங்க வீட்டில் இது போன்ற பண்டிகை நாட்களில் டி.வி.யை ஆன் செய்வதேயில்லை. நெய் சொட்டச் சொட்டப் பொங்கலை ரசித்தோம். :)

    ReplyDelete
  11. மிக சிரமப்பட்டு விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். இவ்வளவு நிகழ்ச்சியைப் பார்த்த பிறகும் இப்படி தெளிவா எழுத முடியுதுன்னா, அதற்கு உங்களுடைய சகிப்புத்தன்மைதான் காரணம்! பாராட்டுக்கள், நல்ல பகிர்வு.

    ReplyDelete
  12. கொஞ்ச நேரம் ஜெகத்ரட்சகன் பேசிய பேச்சை பார்த்தேன். இங்கே எங்கே பார்க்க விடுறாங்க. எப்டிங்க? இப்படி பார்த்து தொகுக்க முடிந்தது?

    காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையில் மஞ்சுவிரட்டும், ஊரில் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியும் நீங்க சொல்லும் போது என் மனதில் வந்து போகுது.

    ReplyDelete
  13. நன்றி வெங்கட்
    **
    ராம லட்சுமி :; ம்ம் குடுத்து வச்சவங்க. மற்ற உருப்படியான வேலை பாத்துருக்கீங்க
    **
    நன்றி மாதவன் ; நீயா நானா பார்த்தமைக்கும் நன்றி
    **
    அன்பிற்கு நன்றி ஜனா சார்
    **

    ReplyDelete
  14. பந்து.. ஹா ஹா நன்றி
    **
    வித்யா: ஜல்லி கட்டு பற்றி என் கருத்து அது அவசியம் இல்லை என்பதே. முடிந்தால் பின்னர் இது பற்றி எழுதுகிறேன்
    **
    துளசி கோபால்; ஆமாம் மேடம். ஆனா பிரசவ வைராக்கியம் மாதிரி இவற்றை திட்டியவாறே மறுபடி பார்ப்போம்.. ம்ம்
    **
    ஹுசைனம்மா..வீட்டு வேலை செய்தாவரே தான் பாதி நிகழ்ச்சி பார்த்தது :))

    ReplyDelete
  15. விக்னேஸ்வரி. நன்றி டில்லியில் இருந்தாலும் பொங்கல் சாப்பீட்டிங்கலே.. அங்கே நிக்குறீங்க
    **
    அமைதி அப்பா: நன்றி. பொங்கலன்று அன்புடன் தொலை பேசியமைக்கும்
    **
    நன்றி ஜோதிஜி

    ReplyDelete
  16. ’நீயா நானா’வில் பலமுறை உங்களுக்கு சான்ஸ் வழங்கப் பட்டது. நன்றாகப் பேசினீர்கள். ஒருமுறை கோபிநாத் அப்ளாஸும் கிடைத்தது! தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிட வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  17. திரு மோகன் குமார் சார் பங்கேற்ற 'நீயா நானா' பார்க்காதவர்கள் இங்கே http://www.tamilvix.com/vijay-tv-neeya-naana-16-01-2011/
    பார்க்கலாம்.

    ReplyDelete
  18. நிகழ்ச்சி முழுவதும் பார்த்து விட்டேன். நன்றாக சென்றது.

    நானும், இனி புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். இது வரை கதைகளை கற்பனை என்ற அளவில் மட்டுமே பார்த்து வந்தேன். அதற்கு காரணம் எனது கல்லூரி நாட்களில் நண்பர்கள் வழியாக 'கிரைம்' நாவல்கள் படிக்க நேர்ந்ததுதான். அதில் வரும் விதவித மான கொலைகள் என்னுள் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. அதனால் கதைப் படிப்பதைத் தவிர்த்து விட்டேன். வாழ்க்கையைப் பற்றிய கதைகள் எனக்கு அப்பொழுது கிடைத்திருந்தால், நானும் தொடர்ந்து படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

    இந்த நிகழ்ச்சி என்னுள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பது உண்மையே! அதற்கு உங்களுக்கும் விஜய் டிவி-க்கும் நன்றி சார்.

    ReplyDelete
  19. @ அமைதி அப்பா,
    ரொம்ப சந்தோஷம்:)! முன்னரே என் சிறுகதை பதிவொன்றில் ‘கதைகள் எனக்குப் பிடிப்பதில்லை அவை கற்பனை என்பதால்’ என சொல்லிச் சென்றிருந்தீர்கள். வாழ்க்கையுடன் பின்னியவை அவை எனும் புரிதலுடன் இப்போது கதைகளைப் படிக்க முடிவெடுத்திருப்பது நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் உங்களுக்கும் இந்தப் பதிவுக்கும்:)!

    ReplyDelete
  20. ராமலக்ஷ்மி said...

    @ அமைதி அப்பா,
    ரொம்ப சந்தோஷம்:)! முன்னரே என் சிறுகதை பதிவொன்றில் ‘கதைகள் எனக்குப் பிடிப்பதில்லை அவை கற்பனை என்பதால்’ என சொல்லிச் சென்றிருந்தீர்கள். வாழ்க்கையுடன் பின்னியவை அவை எனும் புரிதலுடன் இப்போது கதைகளைப் படிக்க முடிவெடுத்திருப்பது நல்ல ஆரம்பம். வாழ்த்துக்கள் உங்களுக்கும் இந்தப் பதிவுக்கும்:)!//

    வணக்கம் மேடம், எப்பொழுதோ நான் எழுதியதை நினைவு வைத்திருந்து, இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி.


    உங்களைப் போன்றவர்கள் கவனிப்பதால், பின்னூட்டம் எழுதுபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போல:-)))))!

    இப்பொழுது எனக்கு ஒன்று மட்டும் நினைவுக்கு வருகிறது, "எப்பொழுதும் உண்மையைப் பேசினால், அதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை"
    என்று எனது நண்பர் சொன்னதுதான்.


    நான், உங்கள் கதைப்படித்த பொழுதே கதைகள் வாழ்வின் யதார்த்தம் கலந்த கற்பனைதான் என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு உங்களுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...