Tuesday, October 18, 2011

நாகூர், வேளாங்கண்ணி : பயண கட்டுரை

திடீரென தான் முடிவானது இந்தபயணம். எங்கள் ஊரான நீடாமங்கலம் சென்று விட்டு அப்படியே நாகூர், வேளாங்கண்ணி பக்கமெல்லாம் ஒரு ரவுண்டு அடிக்க திட்டம்.

நாகூர் ஒரு பதிவாக, வேளாங்கண்ணி தனியாக , பின் நீடாமங்கலம் பற்றியும் சில தகவல்களுடன் இன்னோர் பதிவு என இந்த பயண கட்டுரை வர உள்ளது. முதலில் நாகூரை பார்ப்போமா?

*******

நாகப்பட்டினத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாகூர். நாகப்பட்டினம் மாவட்ட தலைநகரம் என்பதை அறிவீர்கள். இங்கிருந்து நாகூருக்கு தொடர்ந்து பேருந்துகள் உண்டு.

நாகூர் ஒரு சிறிய ஊர். இங்கு பெரும்பாலும் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். ஊரின் பொருளாதாரம் தர்க்காவிற்கு வரும் டூரிஸ்டுகளை வைத்தே உள்ளது. நாகூர் தர்கா ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது.


இங்கு இறைவனாக வணங்கப்படும் நாகூர் ஆண்டவர் குவாலியரில் இருந்த சூஃபி ஞானி முகமது கவுது என்பவரிடம் 10 ஆண்டுகள் ஞானமார்க்கத்தில் பயிற்சி பெற்றார். அப்போது நாகூர் ஆண்டவரின் சக குருகுல மாணவராக இருந்தவர் அக்பரின் அவையில் புகழ்பெற்ற இசைக் கலைஞராக இருந்த தான்சேன்.
பல ஊர்களிலும் இருந்த நாகூர் ஆண்டவர், தனது கடைசி 28 வருடங்களை  நாகூரில் கழித்ததாக சொல்கிறார்கள். இவர் முதன் முதலில் நாகூர் வந்தது வியாழக்கிழமை என்பதால் வியாழக்கிழமைகளில் ஏராளமான பேர் வந்து வணங்குகின்றனர்.

தர்கா உள்ளே செல்வது ஒரு வித்தியாச அனுபவம். ஆங்காங்கு இஸ்லாமிய புரோகிதர்கள் போல் உள்ளவர்கள் உட்கார்ந்து, யாருக்காகவாவது மந்திரம் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் சாம்பிராணி போட்டு கொண்டிருக்க அங்கு நல்ல சாம்ப்ராணி வாசனை வீசுகிறது. சுற்றி அந்த குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர். இப்படி ஏராளம் பேர் அந்த இடத்தில அமர்ந்து மந்திரம் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
முக்கிய பிரார்த்தனை செய்யும் இடத்தினுள் ஆண்கள் மட்டுமே செல்லலாம். பெண்களுக்கு அனுமதி இல்லை. இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் உள்ளே செல்லலாமா என தயங்கி நிற்க, உள்ளே போங்க என சொல்லி அனுப்பி வைத்தார்கள். உள்ளே போனதும் " வாங்க வாங்க" என கை குடுத்து வரவேற்கிறார்கள் ! அந்த சிறு இடத்தில ஆங்காங்கு சிலர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு சுற்று சுற்றி விட்டு வெளியே வந்து விட்டேன்.

எல்லா கோயில்களிலும் உள்ளது போல், பணம் பறிக்கிற வழிகள் இங்குள்ள புரோகிதர்களும் செய்கிறார்கள். அவற்றில் சிக்காமல் இருப்பது நல்லது.

நாகூரில் ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் "கந்தூரி திருவிழா" நடக்கிறது. இது அநேகமாய் மே மாதத்தில் நடக்கும். இந்த நேரத்தில் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வணங்குகின்றனர்.


தர்க்காவிற்கு வெளியே நிறைய பறவைகள் உள்ள கூண்டு உள்ளது. இது எதற்கு என்று விசாரித்த போது, சிலர் பறவைகள் வாங்கி தங்கள் தலையில் வைத்து பறக்க விடுவார்களாம். இதன் மூலம் அவர்கள் கஷ்டம் குறையும் என்பது நம்பிக்கை.

தர்க்கா இருக்கும் அதே இடத்தினுள் நிறைய கடைகள் உள்ளன. அவை பெரும்பாலும் பெண்கள் ஸ்டிக்கர் போட்டு, செயின் கம்மல் போன்ற சமாச்சாரங்கள் தான் விற்கின்றனர்.

நாகூரில் பஷீர் சுவீட்ஸ் என்கிற கடையில் இனிப்புகள் வாங்கினோம். இங்கு இனிப்புகள் மட்டுமே கிடைக்கிறது. காரம் எதுவும் கிடையாது. எனக்கு இதுவே சற்று வித்யாசமாக இருந்தது. பருத்தி அல்வா மற்றும் பால் கோவா வாங்கினோம். பால் கோவா அடடா ! சான்சே இல்லை ! அந்த சுவை இன்னும் நாக்கிலேயே இருக்கு ! நீங்கள் நாகூர் சென்றால் அவசியம் இந்த கடைக்கு செல்லுங்கள்.. அப்படியே இந்த கடையை அறிமுகப்படுத்திய எனக்கும் மறக்காமல் பால் கோவா வாங்கி விடுங்கள் :))

கீழே உள்ள வீடியோ யூ டியூபில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த கட்டுரையில் உள்ள பல விஷயங்களை இந்த வீடியோவில் காணலாம். முழுதும் பார்க்க முடியாவிடில் முதல் இரு நிமிடங்களாவது பாருங்கள்:


தர்க்காவிற்கு அருகே, பத்து நிமிட நடையில் நாகூர் ரயில் நிலையம் உள்ளது. இது தான் கடைசி நிறுத்தம் என்பதால் எளிதாக ஏறி உட்கார்ந்து விடலாம். அதன் பின் நாகப்பட்டினம் போன்ற இடங்களில் வேளாங்கன்னியில் இருந்து வரும் பலர் ஏறுகின்றனர். அப்போது உட்கார இடம் கிடைக்காது. எனவே நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் செல்வீர்கள் என்றால் நாகூர் கடைசியாக சென்றால், ரயிலில் திரும்ப வர எளிதாக இருக்கும்.

"திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும்" என்று ஹிந்துக்கள் நம்புகிற மாதிரி " நாகூர் சென்று வந்தால் பாசிட்டிவான ஒரு பெரும் மாற்றம் நடக்கும் என்பது இஸ்லாமியர்களில் பலரின் நம்பிக்கை !

                                                                               (பயணம் தொடரும்)

10 comments:

  1. பயணம் அருமை..நாகூர் போகவேண்டும் ...

    ReplyDelete
  2. பால்கோவா வாங்கிட்டு வந்தா போச்சு....
    கண்டிப்பா போகணும்...அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறோம்...

    ReplyDelete
  3. அருமையான பயணக் கட்டுரை... நாகூர் பற்றிய தகவல்கள் நன்று.

    தான்சேன் அவர்களுடைய குரு முகம்மது கவுது அல்ல.. அவர் பெயர் முகம்மது கவுஸ்..

    தான்சேன் பற்றிய ஒரு பகிர்வு என்னுடைய மத்தியபிரதேசம் அழைக்கிறது தொடரில் எழுதி இருந்தேன்.

    http://venkatnagaraj.blogspot.com/2011/08/blog-post_19.html

    வேளாங்கண்ணி பற்றிய தகவல்கள் அறிய காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  4. சுற்றுப் பயணம் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    இஸ்லாமிய வணக்கஸ்தலம் என்று நம்பப்படும் நாகூர் தர்ஹா, உண்மையில் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கெதிரானது என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். எனினும் அதுதான் உண்மை. இஸ்லாமில் மனித வழிபாடு என்பது அனுமதிக்கப்படாதது. ஆனால், நாகூர் தர்ஹா என்பது ஒரு இஸ்லாமியப் பெரியவரை, அவரின் அடக்கஸ்தலத்தை வருபவர்களை வணங்கவைப்பதன் மூலம் இஸ்லாமிற்கு எதிராகச் செயல்படுகீறது.

    இந்த உண்மைகளை அறிந்திருந்தாலும், அங்கு கிடைக்கும் வருமானத்திற்காக ஆசைப்பட்டு அல்லது மூடநம்பிக்கைகளைவிட்டு வெளியே வர மறுத்து, இதைத் தடுக்காதிருக்கின்றனர்.

    இச்செய்திகள் உங்களின் தகவலுக்காக மட்டுமே. நீங்கள் ஒரு சுற்றுலாவாகச் சென்றதில் தவறொன்றுமில்லை. :-))))))

    பயணம் குறித்த உங்களின் மேலதிகப் பதிவுகளுக்காக வெயிட்டிங்!! :-))))

    ReplyDelete
  5. நாகூர் ஆண்டவர்,தர்கா பற்றிய குறிப்புகள் அருமை.
    நல்லதொரு பயண கட்டுரை.

    ReplyDelete
  6. நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் அவ்வப்போது சுற்றுலா சென்று வருவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
    நான் அறிந்த வரையில் சுஃபி பிரிவு,mainstream- இசுலாமியருக்கு அவ்வளவு விருப்பமானதல்ல‍‍...மேலே ஹுசைனம்மா அவர்கள் கூறியுள்ளதை போல. ஆனால்,நாகூர் ஆண்டவர் இந்த பிரிவை சார்ந்தவர் என்பதை உங்கள் பதிவை படித்தே அறிந்தேன். இந்து/புத்த/கிறிஸ்துவ மதம் போல் குரு வழிபாட்டினை இசுலாம் சகோதரர்கள் விரும்புவதில்லை. சூஃபி வழிபாட்டில்,ஆடல்‍..பாடல் எல்லாம் உண்டாமே..நாகூரிலும் இது நிகழ்கிறதா?
    நாகூர்..வேளாங்கண்ணீ.. சிதம்பரம் மூன்றும் எனக்கு மிகவும் பிடித்தவை..பள்ளியில்,மதநல்லிணக்க சுற்றுலா அழைத்து செல்வார்கள்.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  8. கோவை நேரம்: நன்றி அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள்..வித்தியாச அனுபவத்திற்காக
    **
    நன்றி ஜெட்லி. பயண கட்டுரை என்றதும் உள்ளே வந்துள்ளீர்கள் போலும்
    **
    சரியான தகவல் தந்தமைக்கு நன்றி வெங்கட்
    **
    ஹுசைனம்மா: தாங்கள் சொன்ன புதிய தகவல் ஆச்சரியமாய் உள்ளது. நன்றி
    **

    ReplyDelete
  9. நன்றி ராம்வி
    **
    டாக்டர் வடிவுக்கரசி: மகிழ்ச்சி நன்றி
    //சூஃபி வழிபாட்டில்,ஆடல்‍..பாடல் எல்லாம் உண்டாமே..நாகூரிலும் இது நிகழ்கிறதா?//

    இது பற்றி எனக்கு தெரியவில்லை
    **
    ராமலட்சுமி: நன்றி

    ReplyDelete
  10. நாகூர் பற்றிய பல தகவல்களை சேகரித்து தந்துள்ளீர்கள். நன்று.

    நாகூர் சமய நல்லிணக்கத்துக்கு ஓர் அடையாளம். எனக்கு சிறு வயதில் நாகூரில் மொட்டைப் போட்டிருக்கிறார்கள். பிறகு நானாக அங்குப் போனதில்லை. எங்கள் பகுதியில் இந்துக்கள் கூட நாகூரான் என்று பெயர் வைத்துக் கொள்வார்கள். கடற்கரையோரம் சில்லடி தர்கா என்று ஒன்று இருக்கிறது.(நானும் கேள்விப்பட்டதோடு சரி, அங்கு சென்றுப் பார்த்தது கிடையாது.) அதைப் பற்றி தாங்கள் குறிப்பிடவில்லை. சுனாமியின் போது அங்கு சென்றாவர்கள் தான் அதிகளவில் இறந்துப் போனார்கள்.
    இங்கு அதிகளவில் இந்துக்களும் வாழ்கிறார்கள். முன்பெல்லாம் அதிகளவில் மதக் கலவரம் இங்கு ஏற்படும் என்று கூறுவார்கள். இப்பொழு அப்படி நடப்பதில்லை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...